Advertisement

அத்தியாயம் எண்பத்தி ஒன்பது :

கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..  

 

மனதளவில் முன்பை விட இப்போது இன்னும் நெருக்கம் தான். ஆனால் தயக்கங்கள் அப்படியே தான் இருக்க.. வேறு நெருக்கங்களுக்கு ஈஸ்வர் முயலவில்லை.. வர்ஷினிக்குமே அப்படி தான்.. அந்த ஒரு நிலைகள் தங்களை கொண்டு போக விடாமல் இருக்க இருவருமே பழகியிருந்தனர்.  

ஜெகனும் அஸ்வினும் ஐ பீ எல் டீமோடு சுற்றிக் கொண்டிருந்தனர்.. விடுமுறையில் அவ்வப் போது ரூபாவும் குழந்தைகளும் கூட..

எல்லாம் ஈஸ்வரால் என்பதை க்ஷணமும் ரூபா மறந்திருக்கவில்லை.. அப்போது ராஞ்சியில் இருக்க.. சரணும் பிரணவியும் அம்மாவோடு அமர்ந்திருக்க.. ஜெகனும் அஸ்வினும் கூட..

இன்னும் ரூபாவும் அஸ்வினும் பேசிக் கொண்டாலும் அப்படி ஒன்றும் சகஜ மனபானமையில் இல்லை.. ஒரு ஒதுக்கம் அவர்களிடம் தானாகவே இருந்தது..

ஆனால் ஜகனோடு திரும்ப அஸ்வின் நன்கு ஒட்டிக் கொண்டான்.. குழந்தைகளும் மாமாவிடம் அப்படியே..  

இரவில் ஈஸ்வர் வீட்டினில் சுவரில் சாய்ந்தவாறு கால் நீட்டி அமர்ந்திருந்தான்.. அதுவும் தரையில்.. அப்போது தான் வந்திருந்தான்.. ஈஸ்வர் வந்திருந்ததால் தன்னுடைய வேலைகளை ஏறக்கட்டி இருந்தாள் வர்ஷினி.. ஆம் முடிந்தவரை ஈஸ்வர் இருக்கும் சமயம் வேலை செய்வதை குறைத்துக் கொண்டிருந்தாள். அவனோடு இருக்கும் பொழுதுகளை விரும்ப ஆரம்பித்து இருந்தாள். வாக்குவாதங்களும் சண்டைகளும் வெகுவாக குறைந்து இருந்தது.      

இப்போது சமையல் அறையுள் அவனுக்காக காஃபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.. இரவு உணவே உட்கொள்ளும் நேரம், ஆனாலும் காஃபி என அவன் கேட்டிருக்க.. இருவருக்கும் எடுத்து வந்து அவளும் தரையிலேயே அமர்ந்து கொண்டாள்.

ஈஸ்வருக்கு கொடுத்து அவளும் எடுத்து ஒரு மிடறு குடித்த உடன்.. அவளின் கையினில் இருந்த கப்பை மாற்றிக் கொண்டவன்.. “நான் இன்னும் குடிக்கலை” என்று வேறு சொல்ல.. வர்ஷினிக்கு புன்னகை மலர்ந்தது.. 

ஆம்! வர்ஷினி எப்போதும் குடிக்கும் போது கப்பை மாற்றிக் கொள்வான்.. அனால் ஈஸ்வர் அருந்தியதை வர்ஷினி குடிக்க மாட்டாள்.. அவளின் பழக்கம் அது..

“அப்படி நான் குடிச்சதை குடிச்சா அதுல என்ன வருது?” என்றவளிடம்.. “ஒரு கிக்” எனச் சொல்ல.. சிரிப்பு தான் வந்தது அவளுக்கு..

ஆனால் அவனின் முகத்தினில் அப்படி ஒரு களைப்பை பார்க்க.. “ரொம்ப வேலையா?” என,

“கொஞ்சம் அதிகம்” என அவன் சொல்ல.. “ஆம், அதிகம்!” என்று அவளுக்கு புரிந்தது.. இல்லையென்றால் ஐ பி எல் மேட்ச் கூட போடாமல் இருப்பானா என

எழுந்து டி வீ ஆன் செய்து அவனது அருகே அமர்ந்து கொண்டாள்..  அங்கே ஜகன் ரூபா குழந்தைகள் அஸ்வின் என்று அவர்கள் இருக்குமிடம் ஃபோகஸ் ஆக…

உடனே போன் எடுத்து அஸ்வினிற்கு அழைத்த வர்ஷினி. “ஹேய், உங்களை எல்லாம் நான் பார்த்துட்டு இருக்கேன்” எனக் கத்த..

“நீங்க பார்த்தா என்ன? பார்க்கலைன்னா என்ன? உங்க பக்கத்துல யாராவது அழகான பொண்ணுங்க இருக்காங்கலா? இல்லை.. அட்லீஸ்ட் ஃபோன் பண்ணியாவது யாருக்காவது சொல்லுங்க என்னை பார்க்கச் சொல்லி” என பாவனையாகச் சொல்ல..  

“அடேய்” என திட்டி ஒரு வார்த்தை சொல்ல..

“என்ன? என்ன? இங்க லைன் சரியா கிடைக்கலை” என அஸ்வின் பதில் சொல்ல..

ஸ்பீக்கரில் போட்டு இருந்ததால் எல்லாம் கேட்டு ஈஸ்வர் வாய் விட்டு சிரித்தான்.. அந்த சிரிப்பை கேட்ட அஸ்வின் “ஸ்பீக்கர் போட்டு இருக்கீங்களா.. உங்களை…” என்று பல்லைக் கடிக்க,

“ஹே, ரொம்ப பண்ணாத சரண் கிட்ட கொடு” என்றாள் சிரிப்போடு வர்ஷினி.  

வாங்கிய சரண் வர்ஷினி பேசும் முன்னே “சித்தி” எனப் பேச ஆரம்பிக்க.. “நானு” என்று பிரணவி பிடிங்க..

“நோ சண்டை” எனக் கத்த கத்த அங்கே ஒரு பெரிய சண்டை நடந்தது.

“விடுங்கடா” என்று அந்த கைப்பேசியை வாங்கிய ரூபா. “வர்ஷி” என,

“ஹாய் அக்கா, எப்படி இருக்கீங்க” என,

“உங்களை விட்டுட்டு ஊர் சுத்திட்டி இருக்கேன், உங்களால”  

“அக்கா” என்று அலறியவள்.. “இதுக்கு தான் நான் உங்களோட பேசறதே இல்லை.. இப்படி எல்லாம் பேசக் கூடாது” என அதட்ட, 

“இங்க நீங்க தானே இருக்கணும்” என,

“அது, அது” என்றவள், ஸ்பீக்கர் வாய் மூடி, “ஜகன் அவரை என்ன சொல்லணும்” என்று ஈஸ்வரிடம் ரகசியம் பேச.. தலையில் செல்லமாக தட்டிக் கொண்டவன் “மாமா” என,

“ஆங்” என்றவள், திரும்ப ஸ்பீக்கரில் இருந்து கையை எடுத்து, “அது ஜகன் மாமாக்காக இவர் வாங்கினது, இப்படி எல்லாம் பேசக் கூடாது” என,

அந்த நொடியில் நெகிழ்ந்து விட்டால் ரூபா.. “தற்கொலைக்கு முயன்றவனை காப்பாற்றி, செய்த அனைத்திலும் இருந்து விடுவித்து, அவனுக்கு பிடித்ததை தூக்கி கையில் கொடுத்து இருக்கிறான் ஈஸ்வர்.

“அவரோட அப்பா இருந்தாக் கூட இப்படி அவரை பார்த்து இருக்க மாட்டாங்க” என.. குரலிலேயே நெகிழ்ச்சியை உணர்ந்தார்கள்.. ஈஸ்வர் பேசியவன்.. “ஹே ரூபஸ், என்ன இது? என்ஜாய் தி மொமன்ட்!” என்றான் உளமார.

“நீங்க வரலை, நீங்க அங்க உட்கார்ந்து இருக்கீங்க?” என்று குறை பட.. 

“நான் இங்கே தான் சந்தோஷமா இருக்கேன்.. பாரு, என் பொண்டாட்டி எனக்கு கால் அமுத்தி விட்டுட்டு இருக்கா!” என சிரிக்க..

“பொய் சொல்லாத நீ அமுத்தி விட்டுட்டு இருப்ப” என ரூபா சொல்ல..  

அதனை மறுக்காமல் “சரி. சரி, இந்த ரகசியத்தை நீ மட்டும் வெச்சிக்கோ, யாருக்கும் சொல்லிடாத.. அழுது வடியாத.. உன் முகத்தை தான் உன் குழந்தைங்களும் வீட்டுக்காரனும் பார்ப்பாங்க.. உன் முகத்துல என்ன இருக்கோ அது தான் அவங்களுக்கு.. உன் சந்தோசம் தான் அவங்க முகத்துல வரும்” என,

ஈஸ்வர் சொல்வதை உணர்ந்து பார்க்க.. ஜகனும் சரணும் ப்ரணவியும் அவளின் முகத்தை தான் பார்த்து இருந்தனர்.. முகம் அடுத்த நிமிடம் புன்னகைக்கு மாற.. “உன் ரகசியத்தை நானும் சொல்லலை, என் ரகசியத்தை நீயும் சொல்லாத” என ரூபா சிரிக்க.. அந்த சிரிப்பு அவளை பார்த்திருந்த மூவர் முகத்திலும் தொற்றியது.

அதற்குள் கிரௌண்டில் யாரோ சிக்சர் அடிக்க “ஹோ” வென்ற சத்தம்.. “ஃபோன் வை” என்று ஈஸ்வர் ஃபோனை வைத்து விட..

“நான் கால் அமுத்தறதை ஊர் முழுசும் சொல்லணுமா? என்று வர்ஷினி முறைக்க.. முறைத்தாலும் அவளின் கைகள் அழுத்துவதை நிறுத்தவில்லை. “சொன்னாலும் யாரும் நம்ப மாட்டேங்றாங்க, நான் உனக்கு அழுத்தறேன்னு சொல்றாங்க” என போலியாக அலுத்துக் கொள்ள.  

இருவர் முகத்திலுமே மீண்டும் சிரிப்பு!

ஆம்! தரையில் அமர்ந்திருந்தவன்.. வலியில் கால்களை அவ்வப்போது பிடிப்பதை பார்த்து இருந்தவள், தானாக அவனின் கால்களை இதமாய் அழுத்தி விட ஆரம்பித்து இருந்தாள்.

ஈஸ்வர் அவள் அழுத்த ஆரம்பிக்கும் போதே கைகளை விலக்கி விட முயன்ற போது, அவளின் முறைப்பை பார்த்து “கால் மட்டுமென்ன கை கூட அழுத்தி விடு” என்று நீட்டியிருந்தான்..   

“ம்ம், சரி! யாரும் நம்பலை தானே! இப்போ நீங்க அழுத்துங்க” என வர்ஷினி சொல்ல.

சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தவன் அப்படியே வர்ஷினியை இழுத்து தன் மேலேயே அமர்த்திக் கொண்டு.. அப்படியே அவளின் தோள் கை என அழுத்தி விட.. வர்ஷினியை அவனின் தொடுகை அழுத்தம் என்னவோ செய்தது. இன்னும் வேண்டும் வேண்டும் என்ற ஒரு உணர்வு ஒரு அவஸ்தை!

அவ்வளவு தான் “வேண்டாம், வேண்டாம்” என்று அவன் மேல் இருந்து இறங்கி எழுந்து நின்று கொண்டாள்.

“என்னவோ சொன்ன?” என்று சலித்த ஈஸ்வருமே உணர்வுகளின் பிடியில் இருந்த வெளியில் வர சற்று நேரம் பிடித்தது.. “அக்காவும் தம்பியும் இப்படி ஊர் சுத்தப் போயிட்டா.. இவங்க தங்கச்சிக்கு எப்போ கல்யாணம் நடக்க?” என ஈஸ்வர் முணுமுணுக்க..

“இப்போ என்ன மேலே தானே உட்காரணும், ஓகே!” என வர்ஷினி ஈஸ்வர் மேல் திரும்ப அமர்ந்து கொள்ள..

இதமாய் அணைத்துப் பிடித்துக் கொண்டவன்.. “மிஸ் யு வர்ஷ், ரொம்பவுமே!” என..

“நானுமே” என்ற வார்த்தை தொண்டை வரை வந்ததை, அப்படியே விழுங்கிக் கொண்டாள்.. சொன்னால் அவனிற்கு மிகுந்த குற்ற உணர்ச்சியாகப் போய்விடும் என்று அறிந்தவளாக…

இருவராலுமே யாரிடமும் ஐஸ்வர்யாவின் திருமணத்தை பற்றி அவர்களாகப் பேச முடியவில்லை.. சில கணமான நிமிடங்கள்.. அமைதியாக அமர்ந்திருந்தனர்.

சஞ்சய்க்கு பேங்கில் லோன் சாங்க்ஷன் ஆகியிருந்தது.. அந்த பணத்தை ஈஸ்வர் பைனான்சிற்கு திரும்பக் கொடுக்க வந்திருந்தான்.. வர்ஷினி தான் அவனின் ஹாஸ்பிடலுக்கு பேங்கிள் சியுரிடி கொடுத்து இருந்தாள்.. எல்லாம் ஈஸ்வர் மூலமே.. ஆனால் சஞ்சய்க்கு எதுவும் தெரியாத மாதிரி பார்த்துக் கொண்டனர்..

ஈஸ்வர் அலுவலகத்தில் இருக்கும் போது வர்ஷினி வர.. “ஹேய், என்ன திடீர்ன்னு வர்றேன்னு சொல்லவேயில்லை” என்று ஈஸ்வர் ஆர்வமாக வரவேற்க..

“காலையில் பத்து மணிக்கு தான் ஆஃபிஸ் வந்தீங்க, இப்போ பன்னண்டு மணி தான்.. இது என்ன இப்படி ஒரு ஃபீல்” என இடுப்பில் கை வைத்து பாவனையாகக் கேட்க..

அவளை மேலிருந்து கீழ் ரசித்துப் பார்த்தவன் “கொல்றடி” என்றான் கண்களைப் பார்த்து..

தன்னை முழுதாக கவர் செய்யும் ஒரு சுரிதாரில் இருந்தாள்.. ஆம்! க்ளோஸ் நெக் வைத்து, ஃபுல் ஹேன்ட் வைத்து.. காலிலும் கட் ஷூ மாடலில் ஒரு சாண்டல்.. கை விரல்களும், முகமுமே மட்டுமே தெரிய..

தன்னையே குனிந்து பார்த்துக் கொண்டவள்.. “என்ன தெரியுதுன்னு இப்படி ஒரு எக்ஸ்ப்ரஷன்!” என வியந்து கேட்க..

“டிரஸ் குள்ள இருக்குற நீ” என ரசனையாக சொல்லி கண்ணடித்து சிரித்தான்.

“தோடா” என்று இன்னும் முறைக்க..

“சும்மா சொன்னேன், உன் கண்ணு வர்ஷ்! உன் கண்! அது பார்த்த நாள்ல இருந்து என்னை கொல்லுது!”

“ம்ம்ம், நல்லா பார்த்துக்கங்க” என அருகில் வந்து கண்ணை விரித்துக் காட்ட..

அவள் எதிர்பாராமல் பட்டென்று அவளின் இதழில் இதழ் பதித்து விலகினான்.

என்ன நடந்தது என்று உணர்ந்து அவள் இன்னும் முறைக்க.. “அது வீட்ல இந்த மாதிரி பண்ண முடியாது.. அப்புறம் என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது.. இங்கே நானே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது, இல்லையா!” என,

“அம்மாடி, எவ்வளவு அறிவு நீங்க.. பொறந்ததுல இருந்தே இவ்வளவு அறிவா?” என போலியாக வியக்க,

“ம்கூம், இந்த அறிவெல்லாம் உன் கூட சேர்ந்த பிறகு தான்!” என ஈஸ்வர் கெத்தாக சொன்னான்.

முகத்தை கொஞ்சலாக சுருக்கிய வர்ஷினி “அப்படியா, எனக்கு இந்த அறிவு பிடிக்கலை.. அதாவது நீ குடுத்த முத்தம் பிடிக்கலை!” என,

“அப்போ திருப்பி என்கிட்டயே குடுத்துடு!”  

“நீதானே குடுத்த, நீயே எடுத்துக்கோ!” என்றாள் அவளும்.  

“நீ குடு, நீ எடு!” என்ற சண்டையில் ஈஸ்வர், அவளை மிக மிக நெருங்கி.. இடையில் கை கொடுத்து அணைத்துப் பிடித்திருந்தான்.    

அப்போது பார்த்து கதவு தட்டும் ஓசை கேட்க.. வர்ஷினியின் கவனம் திரும்ப, மீண்டும் மின்னலென இதழில் இதழ் பதித்து விலகினான்.. “நானே எடுத்துக்கிட்டேன்” என சொல்லியபடி..

வர்ஷினியின் முகத்தினில் ஏமாற்றம் அப்பட்டமாய்த் தெரிய.. அதை உணர்ந்தவன் “சாரி, சாரி, பக்கத்துல வரக் கூடாதுன்னு நினைச்சாலும்.. இவ்வளவு அழகா நீ என் பக்கத்துல வரும் போது என்னால முடியலை” என்று குறை பட்டுக் கொண்டே “சாரி” என்றான் மீண்டும்..

“போடா” என்றவளிடம் ஒரு சலிப்பு..

அவளின் கைகளை சமாதானமாக அழுத்திப் பிடித்தவன்.. “எஸ், கமின்” என,

அங்கே வந்த அட்டண்டர் “சார், உங்களை பார்க்க வந்திருக்காங்க” என்றான்.

“யார்?” என அவன் கேட்கும் போதே, “அதுதான் அந்த லூசோட அண்ணன்” என்று வர்ஷினி சொல்ல,

“ஓஹ் அதுக்கு தான் இங்க வந்தியா?”  

“பின்ன, தாஸ் அண்ணா காரோட்டி ரொம்ப நாள் அச்சு. அவர் டிரைவிங் மறந்துட்டா என்ன பண்றதுன்னா வந்தேன்!” என சலிக்க.

“கம் வர்ஷ், சிட், சிட்” என அவனின் இருக்கையில் அவளை அமர வைத்து அவன் அருகினில் நிற்க.. உள்ளே வந்த சஞ்சயின் கண்களில் அதுதான் பட்டது..  

வர்ஷினி அமர, அதன் பக்கத்தில் ஈஸ்வர் நின்றிருந்த விதம்.. அன்பு காதல் இதெல்லாம் விட.. அதையும் மீறிய ஒன்றாகத் தான் தோன்றியது..

வணக்கம் சொல்லவும்.. “உட்காருங்க டாக்டர்” என்று ஈஸ்வர் இருக்கையைக் காட்ட.. அதில் அமர்ந்தவன்..

“நான் பார்த்த போட்டோஸ்ல.. இல்லை எங்க வீட்ல இருந்த பழைய போட்டோஸ்ல எல்லாம்.. இப்படி ஜோடியா போட்டோ எடுக்கும் போது, எப்பவும் ஆண் உட்கார்ந்து இருக்க பெண் பக்கத்துல நின்னுட்டு இருப்பாங்க.. ஏன் அப்படின்னு எனக்கு தோணும்”

“அது மாதிரி இல்லாம, இங்க மாறி நின்னு.. இப்படி கேப்டிவேடிவ்வா பார்க்கும் போது, ரொம்ப நல்லா இருக்கு” என,

“தேங்க்ஸ் டாக்டர்” என்றான் ஈஸ்வர் உள்ளார்ந்து.. வர்ஷினி அமைதியாகி விட்டாள்..

பின்பு பக்கவாட்டில் இருந்த சேரில் ஈஸ்வர் அமர.. சஞ்சய் காசோலையை நீட்டியவன்.. “பேங்க்ல இருந்து இன்னும் முழுசா பணம் வரலை… இன்னும் ரெண்டு பேமென்ட்டா குடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க” என்றவன் அதனை நீட்ட..

வாங்கிக் கொண்டான்..

“ஒரிஜினல் டாக்குமென்ட்ஸ்” என ஈஸ்வர் ஆரம்பிக்கும் போதே,

“அது எல்லாம் கொடுத்துட்டு வாங்கிக்கறேன்” என சஞ்சய் சொல்ல,

மென்னகை புரிந்தவன், “டாக்டர் ஒரிஜினல் டாக்குமென்ட்ஸ் கொடுக்காம யாரு உங்களுக்கு லோன் கொடுப்பா?” என வினவ..

சில நொடி புரியாமல் பார்த்தவன்.. பின்பு புரிந்து.. “குடுத்துட்டீங்களா?” என,

“எஸ், பேங்க்ல இவ குடுத்துட்டா” என,

“தேங்க்ஸ் மேம், தேங்க் யு வெரி மச்” என அவன் சொல்ல,

உண்மையில் அதெல்லாம் வர்ஷினிக்கு எதுவுமே தெரியாது.. ஆனாலும் எதுவும் சொல்லாது “இட்ஸ் ஓகே டாக்டர், என்னால தானே ஸ்டார்ட் ஆச்சு.. ஐ அம் ரியல்லி சாரி அபௌட் வாட் யு ஹேவ் அண்டர்கான்” என்றாள் உண்மையாக..

“மேம் ப்ளீஸ், சொன்னது என் தம்பி! ரியாக்ட் பண்ணினது உங்க வீட்டுக்காரர்! ஆனா நீங்க எத்தனை முறை என்கிட்ட சாரி கேட்டுடீங்க. ப்ளீஸ் கேட்காதீங்க, வேண்டாம்” என்றான் உண்மையாக.

புன்னகைத்தவள் “நான் வேற, இவர் வேற, இல்லை டாக்டர்! நான் கேட்டது இவருக்காகத் தான்!” என்றாள் குரலில் ஒரு கம்பீரத்தோடு.

“தோடா, என்னமா பேசறா இவ!” என பிரமித்து பார்த்து இருந்தான் ஈஸ்வர். அஸ்வினிடம் ஒரு முறை ஈஸ்வர் சொன்ன அதே வார்த்தைகள்.

“இவள் மேல் உள்ள பழைய காதலை தூக்கிப் போட்டு புதிதாய் காதலிப்போமா.. தினமும் இவளை எனக்கு நிறைய நிறைய பிடிக்கிறது.. புதிதாய் பிடிக்கிறது.. நான் இவளிடம் வைத்திருப்பது ஒரே காதலா இல்லை வேறு வேறா.. தினமும் என்னுள் புதிதாய் தோன்றிக் கொண்டே இருக்கின்றதே, இது என்ன மாயம்” மனதினுள் ஈஸ்வர் சொற்பொழிவே ஆற்றிக் கொண்டிருந்தான்.  

சஞ்சயுமே “தேங்க்ஸ் மேம், தேங்க்ஸ் மச்” என்றான் மீண்டும்.

“ஆனாலும் இப்படி எதைப் பதியும் யோசிக்காம நீங்க ஹாஸ்பிடல் விலை பேசினது தப்பு டாக்டர்!” என வர்ஷினி சொல்ல..

சற்று தயங்கினாலும் சொல்ல ஆரம்பித்தான். “அது விதார்த் பத்து வயசா இருக்கும் போது எங்க அப்பா ஒரு ஆக்சிடண்ட்ல தவறிட்டார்.. அவன் எங்கப்பாக்கு ரொம்ப க்ளோஸ், அவரை ரொம்பவும் மிஸ் பண்ணினான்! அது தெரியாம இருக்க அம்மாவும் நானும் அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுப்போம்! பார்த்து, பார்த்து கவனிப்போம்.. அப்புறம் என்னோட அவன் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டான்!”

“அதனால் சில சமயம் அவனுக்கு யார் கிட்ட எப்படி பேசணும் தெரியாது. நான்னு வரும் போது எதையுமே கேர் பண்ண மாட்டான்.. அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்.. அதனால தான் என்னால திரும்ப இங்க கண்டின்யு பண்ண முடியலை.. என்கிட்டே வேற ஆப்ஷன் கிடையாது!” என்றான்.

ஈஸ்வர் எதிலும் தலையிடவில்லை பார்வையாளன் மட்டுமே..

“இட்ஸ் ஓகே டாக்டர், இப்ப தான் சரியாகிடுச்சே.. எங்க பெஸ்ட் விஷஸ் உங்களுக்கு.. எதுன்னாலும் எங்களை எப்போன்னாலும் அப்ரோச் பண்ணுங்க. வி ஆர் ரெடி ஹெல்ப் யு” என்றாள்..

“தேங்க் யு மேம்” என்றபடி அவன் எழ. “நானும் சாரி சொல்லலை, நீங்களும் தேங்க்ஸ் சொல்லாதீங்க” என்று பேச்சை சிரிப்புடன் முடித்தாள்.

இத்தனை நாளாக மனதில் இருந்த ஒரு சந்தேகம், “நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்றான் தயங்கி தயங்கி.

“கேளுங்க டாக்டர்” என வர்ஷினி சொல்ல,

அது மிகவும் அதிகப்ரசிங்கித்தனமாக அவனுக்கே தோன்ற “இல்லை, வேண்டாம்” என்று கிளம்ப..

“அச்சோ, என் மண்டை வெடிச்சிடும், கேளுங்க!”  

“இல்லை, வேண்டாம்” என்று வெகுவாகத் தயங்கினான்.

“அட, கேளுங்க டாக்டர்!” என்று ஈஸ்வர் ஊக்கினான், அவன் ஓரளவிற்கு விஷயத்தை கணித்திருந்தான்.

“இல்லை, இவ்வளவு அன்பா தான் இருக்கீங்க, அப்புறம் அந்த கடி எப்படி? வேற யாராவது பண்ணி, மேம் நான்னு சொல்லிக்கிட்டாங்களா?” என்று விட..

“ஹ, ஹ” என்று வாய் விட்டு சிரித்தான். அதற்கு நேர் மாறாக வர்ஷினியின் முகம் கோபத்தைக் காட்டியது.

“கோபம் வந்துடுச்சு போல, சாரி!” என்று சஞ்சய் வாய் விட்டு சொல்ல,

“அது நீங்க சொன்னதுக்கு இல்லை சஞ்சய்… நான் இருக்கும் போது என் வீட்டுக்காரரை யார் கடிக்க முடியும்? எப்படி நீங்க அப்படிக் கேட்கலாம்னு கோபம்!” என ஈஸ்வர் சொல்லவும்,

“அப்படித்தான்” என்ற பாவனையை வர்ஷினியின் முகம் காட்டியது.

எப்போதும் போல சஞ்சய் விழிக்க..

“அது ஒண்ணுமில்லை சஞ்சய், ரொம்ப லவ் பண்றவங்க கட்டிப் பிடிப்பாங்க, இவ ரொம்ப ரொம்ப லவ் பண்ணிறதால கடிச்சி வெச்சிட்டா” என பாவனையாகச் சொன்னான்.

ஈஸ்வர் சொன்ன விதத்தில் சஞ்சய்க்கு சிரிப்பு வந்து விட.. ஒரு அடக்கப்பட்ட சிரிப்பை கொடுத்தவன்..

“தேங்க்ஸ் மேம், தேங்க்யு சர்” என்று சென்று விட..

“அடேய் என் மானத்தை ஏன் இப்படி வாங்கற” என வர்ஷினி கோபமாகக் கேட்க..  

“நிஜம் தானே அது! நான் கண்டுபிடிச்சிட்டேன்” என ஈஸ்வர் சொல்ல,

வர்ஷி இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து அவன் மேல் பாய.. “சேர் சாஞ்சிடும்” என்று ஈஸ்வர் சொல்லச் சொல்ல.. சேர் சாய்ந்து மெதுவாக கீழே சரிய, அதன் மேல் ஈஸ்வர் சரிய, அவனோடு சேர்ந்து வர்ஷினியும் சரிந்தாள்.

அவளுக்கு அடிபடாமல் அணைத்துப் பிடித்துக் கொண்டான்..

கண்டிப்பாக எங்காவது அவனுக்கு அடி பட்டிருக்கும் எனப் புரிந்து வர்ஷினி பரிதாபமாகப் பார்த்து இருக்க..

அவளின் முகம் பார்த்து வருந்துகிறாள் எனப் புரிந்து “இல்லை, இல்லை, எனக்கு ஒண்ணுமில்லை” என்றான்.

தட்டு தடுமாறி எழுந்து, அவன் எழ கை கொடுக்க.. எழுந்து நின்றவன்.. இப்படி அப்படியும் உடலை திருப்பி சரி பார்த்து அவளுக்கும் காட்டி.. ஒன்றுமில்லை என்றாலும் முகம் சரியாகவில்லை..

“அட, ஒண்ணுமில்லை, நீ கடிச்சதுக்கு இதெல்லாம் எதுவுமே இல்லை!” என மீண்டும் கிண்டல் மொழி பேச..  

“உங்களை” என வர்ஷினி அடிக்க வர..

அவளை அணைத்துப் பிடித்தவன்.. “ம்ம், எவ்வளவு வேணா அடிச்சிக்கோ! இல்லை கடிச்சிக்கோ!” என நின்றான்.

வர்ஷினியின் நீல நிறக் கண்கள் அவனை காதலாகப் பார்த்து இருந்தது.     

காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்..
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில்..
சாலை அத்தனை அழகாய் மாறும்..     

 

Advertisement