Advertisement

அத்தியாயம் எண்பத்தி ஏழு :

சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்……

அவளின் கண்களை துடைத்து விட்ட ஈஸ்வர்..  வாயினில் உணவை துருத்திக் கொண்டே.. “நீதான் எப்பவும் டைவர்ஸ் அது இதுன்னு பேசற?” என்று சொல்ல

“வேற என்ன பண்ண? எப்படி உங்களை டென்ஷன் பண்ண? உங்களை டார்ச்சர் பண்ண என்கிட்டே அந்த ஒரு வார்த்தை மட்டும் தான் இருக்கு!”

“அம்மாடி” என்று முறைத்தவன், “என்ன பயமுறுத்தவா? அப்போ நிஜம்மாவே டைவர்ஸ் இல்லையா?” என அவன் பேச..

“தெரியலை.. பாதி நிஜம்! பாதி உன்னை டென்ஷன் பண்ண!”  என்றாள்.

“நான் டென்ஷன் ஆனா தானே நீ சொல்லுவ, இனிமே ஆக மாட்டேன், எப்படி சொல்லுவன்னு நான் பார்க்கிறேன்” என பேசியபடி அவன் ஊட்ட ஊட்ட வாயினில் வாங்கியவள்.. “இன்னும் கொஞ்சம் குருமா தொட்டு வை” என வேறு சொல்ல..

“நீ சப்பாத்திக்கு குருமா தொட்டுக்கறியா இல்லை குருமாக்கு சப்பாத்தி தொட்டுக்கறியா” என்ற அதி முக்கியமான சந்தேகம் வேறு கேட்க..

ம்கூம் பதில் இல்லை, அவளின் வேலையில் மட்டுமே கவனம்..

அவளையே தான் பார்த்து இருந்தான் ஊட்டி முடித்த பின்பும்..

“ப்ச்” என்று சலித்தபடி திரும்பியவள், “இப்படிப் பார்த்தா நான் எப்படி வேலை செய்ய முடியும்? வேற எங்கயாவது பாருங்க?” என,

“நீ தான் என்னை பார்க்க மாட்ட, நானாவது உன்னை பார்க்கிறேன்” என கெத்தாக சொல்ல.. 

“நீயும் உன் புத்திசாலித்தனமும்! நான் பார்க்கறனா இல்லையான்னு கூட உன்னால கண்டுபிடிக்க முடியலை! நீயெல்லாம்…?” என திட்ட,

திட்டை எல்லாம் ஒதுக்கி “அப்போ பார்ப்பியா? எப்போ இருந்து? எப்போ எல்லாம்?” என ஈஸ்வர் கேட்க,

“ம்ம்ம்ம்ம்ம்.. உன்னை பார்த்த நாள்ல இருந்து, கடுப்படிக்காதீங்க, முதல்ல கிளம்புங்க!” என,

“இல்லை, நான் உன்னைப் பார்க்கலை!” என்றவன்.. கை அலம்பி, அப்படியே அங்கேயே ஒரு தலையணை போட்டு கீழே படுத்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான்..

அவனையறியாமல் உறங்கியும் விட.. காலையில் எழுந்த போது வர்ஷினியும் அங்கேயே தான் உறங்கியிருந்தாள் அவன் மீது படமால் சற்று தள்ளி.. பார்த்தவுடனே சற்றும் யோசிக்கவேயில்லை.. நெருங்கி அணைத்துக் கொண்டான் இறுக்கமாக..  

திடீரென்று அப்படி ஒரு செய்கை.. நல்ல உறக்கத்தில் இருந்தாலும் உடனே விழிப்பை கொடுக்க.. என்ன இது என்பது போல விலக முற்பட.. விடுவேனா என்று இன்னும் ஈஸ்வர் இறுக்க.. “இப்படி இறுக்கமா பிடிச்சா என் தூக்கம் டிஸ்டர்ப் ஆகுது” என்றாள்.

உடனே உறக்கத்தை தொடர்வதற்கு ஏதுவாக அணைப்பை வாகாகப் பிடிக்க.. அப்படியே கைக்குள் அடங்கிக் கொண்டாள்.

திமிருவாள், விலகுவாள், என நினைக்க எதுவுமே இல்லை.. சரி உறங்கிவிட்டாளா எனப் பார்க்க, அதுவும் இல்லை.

“பியுட்டி நீ தூங்கலையா?” 

“அது யாரு பியுட்டி புதுசா?” என,

“வார்த்தை தான் புதுசு, ஆள் பழசு” என்றான்.

தன்னைத் தவிர வேறு யாரையும் சொல்ல மாட்டான் எனத் தெரிந்தாலும் “அது யாரு அந்த பழைய ஆள்” என்றாள் வேண்டுமென்றே.

“நீ நம்பினாலும் நம்பாட்டாலும், எத்தனை பேரை சைட் அடிச்சு இருந்தாலும்.. என் கை தொட்ட, தொட ஆசைப்பட்ட, ஆசைப்படற பொண்ணு, நீ தான்! நீ மட்டும் தான்!” என,

“என்ன காலையிலயே டைலாக் பலமா இருக்கு” 

“தெரியலை, உன்னை கட்டிப் பிடிச்சவுடனே அருவி மாதிரி கொட்டுது” என்றான் விரிந்த புன்னகையுடன். அவள் முகம் பார்க்க இஷ்டப்பட.. வர்ஷினி முகமும் காட்டவில்லை, பதிலும் பேசவில்லை!  அவன் நெஞ்சினில் அப்படியே இருந்தாள்.  

“ஏன்? என்ன ஆச்சு இப்போ?” 

“ஒன்னுமில்லையே” என பதில் வரவும்..

“பொய் சொல்லாத, உன்னை எதோ டிஸ்டர்ப் பண்ணுது! இல்லை என் கைக்குள்ள நீ இப்படி இருக்க மாட்டா. இந்நேரம் ஒரு சண்டையை ஸ்டார்ட் பண்ணியிருப்ப” என்றான். 

அதுவரை ஈஸ்வரில் முகம் புதைத்து இருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, “வாங்கின கடி மறந்துடுச்சு போல” என,

“நீ எவ்வவளவு கடிச்சாலும் நான் தாங்குவேன், விஷயத்தை சொல்லு!” 

மீண்டும் அவனுள் முகம் புதைத்துக் கொள்ள, “என்ன பண்ணின வர்ஷ்” என்றான் சிறு அதட்டலோடு.

“அது.. தப்பு பண்ணிட்டனோன்னு ஒரு ஃபீல். அது இந்த சஞ்சய்.. அதுதான் அந்த லூசு டாக்டரோட அண்ணன்..” என வார்த்தையை எடுக்க..

ஈஸ்வர் சிரித்து விட்டான்.. “உன்னை ஒரு லூசு போட்டு அவன் வாழ்க்கை முழுசும் லூசுன்னு பட்டம் வாங்கப் போறான்!” என,

“ப்ச், சொல்ல வர்றதை மறந்துடுவேன்!” என பதிலுக்கு வர்ஷினி அதட்டவும்.. 

“சரி சொல்லு” என,

“அவங்க அண்ணா ஐஸ்வர்யாவைக் கல்யாணம் பண்ண இந்த லூசு அவங்க கிட்ட கேட்டிருப்பான் போல.. அதனால அவங்க ரிசைன் பண்றாங்க.. நேத்து பேசிட்டு இருக்கும் போது இந்த சஞ்சய் நான் ஒன்னும் பண்ணலை விதார்த் சொன்னது எனக்கு தெரியாது சொன்னாங்களா.. நீங்க சொல்லாம அவங்களை ஏன் சொல்ல விடறீங்க, நீங்க தானே சொல்லணும்னு சொல்லிட்டேன் .. அப்புறம் லவ் ஐஸ்வர்யா கிட்ட சொல்லணும், கல்யாணத்துக்கு அவங்க அண்ணா கிட்ட சொல்லணும்னு சொல்லிட்டு வந்தேன்.. தப்பு தானே!” என,

எதுவுமே பதில் சொல்லாமல் ஈஸ்வர் அமைதியாக இருந்தான்.

“தப்பா?” என அவனின் முகம் பார்த்து கேட்கவும்,

“ஏன் தப்புன்னு நினைக்கற?” என..

“ஒரு வேளை ஐஸ்வர்யாக்கு பிடிக்கலைன்னா” 

“ஏன் பிடிக்காமப் போகும்?” 

“உங்களை மாதிரி ஒருத்தரை லைஃப்ல எக்ஸ்பெக்ட் பண்ணினா, கண்டிப்பா பிடிக்காது!” 

“நான் என்ன அவ்வளவு நல்லவனா?” என்றான் கூர்மையாக.

“பிடிக்கறதுக்கும் எதிர்பார்ப்புக்கும் நல்லவன்ற டெர்மினாலஜி ஒத்து வராது! இது வேற…” என,

இப்போது இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. “ஐஸ்வர்யா முட்டாளில்லை வர்ஷ்.. கண்டிப்பா யோசிப்பா!” என,

“இதுல எங்க புத்திசாலித்தனம் வந்தது.. இது வேற!” என்றாள் திரும்பவும்..  

“என்ன வேற, எனக்குப் புரியலை?” 

“வேற தான்.. உங்களை மாதிரி எதிர்பார்த்தா கண்டிப்பா யாரையும் பிடிக்காது.. நீங்க வேற தான்!” 

என்னவோ மனது லேசாக.. “நல்ல மாதிரியா? கெட்ட மாதிரியா?” என சீண்டினான். 

“சொல்லத் தெரியலை எனக்கு, உங்க கிட்ட எவ்வளவு கம்ப்ளையின்ட்ஸ் இருந்தாலும் வேற யாரையும் என்னோட லைஃப்ல நினைச்சு பார்க்கக் கூடப் பிடிக்காது.. அந்த மாதிரி அவங்க மைன்ட்ல ஃபிக்ஸ் பண்ணியிருந்தா?” என,

அது கொடுத்த பயம், இருவரிடமுமே பேச்சுக்கள் நின்று விட்டது!

ஈஸ்வரின் அணைப்பில்.. அவனின் உடலில் ஒரு தளர்ச்சி! தப்பு செய்தவனிடம் காணப்படும் ஒரு தொய்வு!  

அதை வர்ஷினி உணரவும்.. இதுவரை ஈஸ்வர் தான் அணைத்திருந்தான், இப்போது பதிலுக்கு வர்ஷினியும் இறுக்கமாக “உன்னை விட மாட்டேன்” என்பது போல அணைத்துக் கொண்டாள் தானாகவே.. எதைப் பற்றியும் யோசனைகள் இல்லாது!  

“நான் பண்ணின தப்பை வெளில சொல்லாம ரெண்டு பேருமே என்னை காப்பாத்தி விட்டுட்டீங்க.. வெளில தெரிஞ்சிருந்தா எங்க வீட்ல இருக்குறவங்க பார்வையை கூட என்னால தாங்கியிருக்க முடியாது.. எங்கேயாவது காரை கொண்டு போய் ஆக்சிடன்ட் செஞ்சு.. தானா செத்துப் போற மாதிரி போயிருப்பேன், தற்கொலையை கூட என்னால தைரியமா செஞ்சிருக்க முடியாது” என்றவனின் குரலில் உணரப் படாத வலி! 

இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் “போற மாதிரி இருந்தா என்னையும் கூட்டிட்டுப் போயிடு, நீ இல்லாம கண்டிப்பா என்னால இருக்க முடியாது!” என,

இன்னும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.. முகம் காணாத, முகம் காட்டாத ஒரு அணைப்பு!

வர்ஷினியின் வார்த்தைகளைக் கேட்டதும், ஈஸ்வரின் மனது இத்தனை வருடம் தவித்த தவிப்பில் இருந்து விடுபட்டு.. பறந்தது! சிறகில்லாமல்.. உடலும் மனதும்!       

“என்னவோ என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லிட்டே இருக்க?” என ஈஸ்வர் வர்ஷினியை சீண்ட.. 

“சொல்லிட்டே தானே இருக்கேன், எங்கே போனேன்? அப்போ போகாம இருந்திருந்தா.. கண்டிப்பா இன்னும் இன்னும் மோசமா ஆகியிருப்பேன்!

என்னால உன்னோட துரோகத்தை தாங்க முடியலை.. நான் என்னைப் பத்தி எல்லாம் சொன்னேன்.. ஆனா நீ காதல் சொன்னதை சொல்லலை.. நான் என்னையே சுத்தி வர்ற கணவன் வேணும்னு உன்கிட்ட சொல்லியிருந்தும் நீ குடும்பத்தை தான் சுத்தி வந்த.. இன்னும் கூட சுத்துற.. அதுதான் போயிட்டேன்” என்றாள் என்னை எனக்குத் தெரியும், உன்னையும் தெரியும் என்ற குரலில்.

“எப்படியும் நீ போவ, இன்னும் இன்னும் சிக்கல் ஆக்க வேண்டாம்னு தான் நானும் உன்னை அனுப்பிட்டேன்” என்றான் தன்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்ற குரலில். 

“ஆனா இன்னும் நான் போறேன்னு, இந்த வார்த்தை ஏன் சொல்ல வைக்கற?”

“தெரியலை, எனக்குத் தெரியலை.. அப்படி உன்னை சொல்ல வைக்காம ஒரு வாழ்க்கை எப்படி வாழ்றதுன்னு? நீ தான் எனக்கு சொல்லிக்கொடேன்!” என்றான்.

அதுவரை ஈஸ்வரின் முகம் பார்க்காமல் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தே பேசக் கொண்டு இருந்தவள்.. நிமிர்ந்து அவனை பார்த்து “எனக்கும் தெரியலை” என்றாள் இயலாமை எட்டிப் பார்க்க.. 

வர்ஷினியின் முகம் காணவும் ஈஸ்வரின் மனநிலை அப்படியே மாற, “நேத்து நைட் என்கிட்டே அவ்வளவு சண்டை போட்டுட்டு இப்படி என்கிட்டே ஒட்டிக்கிட்ட” அவளின் உடலை உரச.. 

“தெரியலை.. என்னால இப்படி சண்டை போட்டுட்டே இருக்க முடியும்னு தோணலை.. எல்லோர் பத்தியும் குறை சொல்லிட்டே இருக்கேன், எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு.. பேசாம நீ என்ன பண்ணினாலும் உன்கூட சமாதானமாப் போயிட்டா என்னன்னு தோணுது?”

“நீ பேசாதேன்னு சொன்னா நான் எங்கே போவேன்? போக இடமில்லாம இல்லை! பேச ஆளில்லாம இல்லை! ஆனா யாரையும் பிடிக்கலை, எங்கேயும் போகவும் பிடிக்கலை” என நீல நிறக் கண்களில் கண்ணீரை தேக்கி அவள் கேட்ட விதம்..

உயிர் வரை தான் தீண்டியது..      

“இதுக்கு பேர் தான் பியுட்டி லவ்.. நீ என்னை லவ் பண்ற” என்றான்.  

“ஆனா நான் ஒத்துக்க மாட்டேன்” என முகத்தில் ஒரு பிடிவாதத்தைக் காட்டி சொல்ல..   

“ஒத்துக்காதே அதனால என்ன இப்போ.. நான் ஒன்னு சொல்லட்டுமா?” என,

முகம் உயர்த்தாமல் கண் மட்டும் உயர்த்திப் பார்க்க, அந்தக் கண்களில் தன்னை தொலைத்தவன். 

“ஐ லவ் யூ” என..

வர்ஷினியின் முகம் சீரியசாக இருந்த போதும் கண்கள் சிரித்தது..  

ஈஸ்வரின் முகம் அவளை நெருங்க.. வர்ஷினியின் கண்கள் தானாக மூடியது.. அந்த மூடிய இமைகளின் மேல் மிக மிக மென்மையாக இதழ் பதிக்க.. வர்ஷினியின் உடலின் சிலிர்ப்பு ஈஸ்வரால் உணர முடிந்தது…

நாணுமோ! நாணமே!

Advertisement