Advertisement

அத்தியாயம் எண்பத்திரண்டு :

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத் தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே!

 

அஸ்வின் வீடு என்றாலும் அங்கு ரூபாவும் ஐஸ்வர்யாவும் இருந்ததினால் ரஞ்சனிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்க.. ரஞ்சனி வரவும்..

அங்கே தான் விதார்தையும் சஞ்சயையும் பார்த்தாள்.. விதார்திடம் பேசிக் கொண்டிருந்த போது தான் சஞ்ஜய் வரவும்… “லூசு மாக்கான் மாதிரி இருப்பான், இவன் இப்போ எவ்வளவு ஹேண்ட்சம் ஆகிட்டான்” என்று சஞ்ஜயைப் பார்த்தவள், பேசுவதா வேண்டாமா என்ற எண்ணத்தில் இருக்க, அந்த எண்ணம் சிறிதும் இல்லாதவனாக, “விது போகலாம்” என்று அவன் காரில் ஏற..

“பாருடா, இவனுங்க பெரிய டாக்டர்சாம்! போங்கடா!” என்று மனதிற்குள் நினைத்தவளாக ரஞ்சனியும் நடந்து விட்டாள்..

உண்மையில் சஞ்ஜய் மனிதர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவன்.. எப்போதும் புன்னகை முகமாய் தான் இருப்பான்.  ஐஸ்வர்யா அவன் வாழ்வில் வராததற்கு காரணம் ரஞ்சனி என்பது தான் அவனின் எண்ணம்.. உண்மையில் அவன் இதுவரை ஐஸ்வர்யாவிடம் சொன்னதே கிடையாது.. முன்பும் அவளுக்கு தெரியவே தெரியாது.. இப்போது விதார்த் மூலமாகத் தெரியும்.. உடனே அவள் ரிசைன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.

திரும்பவும் போகிறாள் என்ற உளைச்சல், ஹாஸ்பிடலிற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.. அதை மெயின்டெயின் செய்வதே பெரிய வேலையாக இருக்க.. இதில் புதிதாக எங்கு சென்றாலும் பணம் கிடைக்கவில்லை.. வேறு வழியில்லாமல் அதை விலைக்கு விட்டது..

அவனின் அம்மாவையும் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை! அவரின் இத்தனை வருட உழைப்பை அதை இப்போது தொலைக்கப் போகிறான்..

மனதளவில் மிகவும் சோர்ந்து இருந்தான்.. புன்னகை முகமும் எங்கோ தொலைந்து விட்டது.. அதனை யாருக்கும் தெரிய விடாமல் இருப்பது இன்னும் கடினமாய் இருந்தது.          

ஈஸ்வரின் அருகில் வரவுமே அவளைப் பார்த்தவன் வர்ஷினியிடம், “நீ ரஞ்சியோட போ.. நான் குழந்தைங்களைக் கூட்டிட்டுப் போறேன்” என,

“வேண்டாம் விஸ்வா! அவங்க தாத்தா, குழந்தைங்க இல்லைன்னா நல்லா இருக்காது.. அவங்களை இங்கேயே விடு.. இப்போ பத்து வருவாங்க நான் மேனேஜ் பண்ணிக்கறேன்!” என, 

“இவளையும் பார்த்துக்கோ, அண்ட் இவளை இங்கே சாப்பிட விடாதே.. அடுத்த வாரம் நாங்க திருப்பதி போகணும்.. இவளைக் காலையிலயே ஃபுல்லா சாப்பிட வெச்சு தான் கூட்டிட்டு வந்தேன்.. யாராவது கூப்பிட்டா மறந்து போயிடப் போறா” என,

“இவன் என்னடா என்னை சின்னப் பாப்பா மாதிரியே ட்ரீட் பண்றான்” என்று தான் வர்ஷினிக்கு தோன்றியது..

“ஏன் ஏதாவது வேண்டுதலா திருப்பதிக்கு” என ரஞ்சனி கேட்க.,

“ஆம்” என்று தலையாட்டிக் கிளம்பிவிட்டான்..    

என்ன முயன்றும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.. கடந்து வந்த பாதைகள்! அதன் தாக்கங்கள்! எப்படியோ சரியாகிவிட்டது! ஆனால் என்ன வெல்லாம் நடந்து விட்டது.. இந்த இறந்து போன மனிதனின் பங்கு அதில் இருக்கிறதா என்று தெரியாது.. ஆனாலும் அவனால் அங்கே இருக்க முடியவில்லை..

பணத்தின் பின் இந்த ஐந்து வருடங்களாக பைத்தியக்காரன் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறான்.. ஒரு வேலை ஃபைனான்ஸ் மீண்டு இராவிட்டால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 

சொந்த வாழ்க்கையில் பல தோல்விகளையும் சறுக்கல்களையும் பார்த்து விட்டாலும்.. தொழில் வாழக்கையில் எங்கும் தோல்வியோ சறுக்கலோ இல்லை, சிக்கல்கள் மட்டுமே அதை சரி செய்து விட்டான்! ஒரு வேளை இருந்திருந்தால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

எல்லோரின் ஏளனப் பார்வை.. அவனால் மீண்டே இருக்க முடியாது!       

“என்ன வேண்டுதல்?” என்று ரஞ்சனி வர்ஷினியிடம் கேட்க..

“யாருக்குத் தெரியும் அண்ணி! அவர் எதுவுமே சொல்லலை!” என்று ரஞ்சனியிடம் வாய் வார்த்தையாக சொன்னவள்.. “ஆனா நான் சொல்லலைன்னு அப்படிப் பேசறார்” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டவள்,  கூடவே “என்ன நீ எல்லாவற்றையும் சரி செய் என்று அவனிடம் கேட்டுக் கொண்டு நிற்கிறாய். உன்னால் முடியாதா? முடியாதென்றால் அவனிடம் போய் நில்! முயற்சி செய்யாமல் போய் நிற்பது சரி கிடையாது.. உன்னால் எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை கொடு! அதற்கு பின்னும் அவன் ரூல்ஸ் பேசினான் என்றால் பார்த்துக் கொள்!” என்ற புதிய முடிவெடுத்தாள்.

ரஞ்சனியுடன் உள் சென்றாலும், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் மலருடன் அமர்ந்து கொண்டாள். மீண்டும் சரண் எழுந்து ஓடப் பார்க்க.. இந்த முறை சரண் என்ற அவளின் அதட்டல் வேலை செய்ய.. சரண் அமர அவனிடம் தன் மொபைல் கொடுத்து அமர்த்திக் கொள்ளவும், சரியாக அந்த நேரம் ஜகனின் அக்கா சித்ரா வரவும்.. குழந்தைகள் அவளிடம் தாவின..

அதற்கு மேல் குழந்தைகளின் வேலை அவளதாகிப் போக..     

அஸ்வின் ரஞ்சனியைப் பார்த்தவன் தான், திரும்ப அவள் இருக்குமிடம் வராமல் பார்த்துக் கொண்டான். தன்னால் அவள் மனதில் எதுவும் அது கோபமாகினும் வருவதை அவன் விரும்பவில்லை.. இன்றைக்கு வரை தினமும் அவன் நினைத்து வருத்தப் படாத நாள் இல்லை! “என்ன கர்வம் எனக்கு? பெரிய இவன் மாதிரி சென்று மிரட்டி என் வாழ்க்கையில் இருந்த அவள் வருவதற்கானா வாய்ப்பை நானே தொலைத்து விட்டேன்” என்பதாக..

ஆம்! மிரட்டாமல் இருந்திருந்தால் ஏதாவது வாய்ப்பு இருந்திருக்க கூடுமோ என்ற எண்ணம் இன்று வரையிலும் எப்போது பொங்கும் என்று தெரியாமல் அவனுள் பொங்கிவிடும்!

இனி எதுவும் மாற்ற முடியாது! ஆனாலும் மனதை அடக்குபவர் யார்! ஆனாலும் பழையதை தான் நினைப்பான்.. இப்போது ரஞ்சனி பத்துவின் மனைவி என்பதை க்ஷணமும் மறந்ததில்லை! இனியும் மறக்க மாட்டான்! 

ரஞ்சனி சென்று ரூபாவிடமும் ரூபாவின் அம்மாவிடமும் விசாரித்தவள்.. ஐஸ்வர்யாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். வெகு சில வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறாள்..

அமைதியாகத் தான் இருந்தனர் இருவருமே! பேச முயற்சிக்கவில்லை! எப்படி அப்பாவிற்கு இப்படி ஆனது என்றும் கேட்கவில்லை! சொல்லவும் இல்லை! நீ எப்படி இருக்கிறாய் என்றும் கேட்டுக் கொள்ளவில்லை! ஏழு வருட இணைபிரியா நட்பு! அதன் பிறகு ஐந்து வருட பிரிவு!

வேலைகள் அதன் பாட்டில் நடக்க.. மாலை மூன்று மணிக்கு எடுப்பது என்று முடிவாக.. மதிய உணவு சம்மந்த வீட்டுக்காரர்களினது.. அவர்களது தான், ஆனாலும் வர்ஷினி உண்ணவில்லை..

“பத்து வெளில இருக்காங்கன்னு நினைக்கறேன், நீ அவரோட போய் சாப்பிட்டிட்டு வர்றியா வர்ஷ்! எடுத்துட்டு போயிட்டு அவங்க வந்த பிறகு தான் திரும்ப இங்கே இருந்து கிளம்ப முடியும்!” என,

“பசிக்கலை அண்ணி” என்றவளை விடாது வெளியே அழைத்து வந்தவள்.. “இவ இங்க வந்ததுல இருந்து தண்ணி கூடக் குடிக்கலை.. ஏதாவது சாப்பிட வெச்சு கூட்டிட்டு வாங்க!”  

“வா வர்ஷ்” என அவன் எழ.. “பசியில்லை அண்ணா” என்றாள் திரும்பவும்.  

“பசிச்சா தான் சாப்பிடணும்னு ஏதாவது இருக்கா, வா!” என அருகில் இருந்த ஹோட்டல் அழைத்துச் சென்று அவளை சாப்பிட வைத்து வந்தான். ஆனால் இருவருக்குள்ளும் வேறு பேச்சுக்கள் இல்லை. ஒரு சகஜ பாவமும் இல்லை!

பத்துவிற்கு எப்போதும் போல வெகுவாக ஒரு தயக்கம்.. வர்ஷினிக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை எதுவும் பேசத் தோன்றவில்லை ..

அவளை இறக்கி விட்டவன்.. “நான் கிளம்பறேன்” என,

“நீங்க இருக்க மாட்டீங்களாண்ணா?”  

“இல்லை வர்ஷி, ரஞ்சி வரலைன்னா திட்டுவான்னு தான் வந்தேன்.. எனக்கு இங்க அவ்வளவா வர இஷ்டமில்லை.. ஏதாவதுன்னா கூப்பிடு உடனே வந்துடறேன்.. ஈஸ்வர் தான் உனக்கு செய்யணும்னு இல்லை! நாங்க எப்பவும் உன்னோட தான்.. முரளியும் சரி, நானும் சரி, தள்ளித் தள்ளி நிற்காதே! இன்னும் நீ வீட்டுக்கு வரவேயில்லை! அம்மா ரொம்ப அதை நினைச்சு குழப்பிக்கறாங்க.. ப்ளீஸ் அவங்களுக்காகவாவது வா!” என்றான். 

பின்பு “இந்த அஸ்வினை நீ நடுவுல இழுத்து வந்த கோபம்! நான் பேசாமப் போயிட்டேன், சாரி!” என்றான் உணர்ந்து.

“ம்ம் சரி” என்பது போலத் தலையை மட்டும் ஆட்டினாள் பேச வரவில்லை! என்னவென்று சொல்ல முடியாத ஒரு துக்கம்! ஒரு அழுத்தம்! அப்பாவின் ஞாபகம் வந்து, அது உடனே அதிகமாகவும் ஆகிவிட்டது.

பின்பு பிரகாசத்தை எடுத்துப் போனதும் வெளியே வந்தவள் உள்ளே செல்லவில்லை மலரிடம் சொல்லி… தாஸ் இருக்கவும் வீடு வந்து விட்டாள். ஈஸ்வர் காலையில் துக்க வீட்டிற்கு வந்தவன் திரும்ப அங்கே வரவெல்லாம் இல்லை.

குளித்தவள், பின்பு தான் செய்து கொண்டிருக்கும் கார்டூன் வேலையை எடுத்து அமர்ந்து கொண்டாள். நேரம் போனதே தெரியவில்லை..

இருட்டானது தெரியவில்லை! தான் அமர்ந்திருக்கும் ரூமில் லைட் போடாதது கூட தெரியவில்லை.. வேலையில் ஆழ்ந்து விட்டாள்.

ஈஸ்வரும் வரவில்லை! அவளை கைபேசியிலும் அழைக்கவும் இல்லை! அவள் இவ்வளவு விரைவாக வீட்டிற்கு வந்திருப்பாள் என்று நினைக்கவில்லை.

ஏழு மணி போல தான் ஈஸ்வர் அழைக்க.. அவளின் மொபைல் சுவிச் ஆஃப், சார்ஜ் இல்லாமல் அது ஆஃப் ஆகி இருந்தது..

உடனே செக்யுரிடிக்கு அழைத்தான்.. “மேடம், வீட்ல தான் இருக்காங்க சர்” என, சரி, சார்ஜ் போட்டு இருக்க மாட்டாள் எனப் புரிந்து வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.    

உடனே வீட்டிற்கும் கிளம்பி விட்டான்..

அவன் வரவுமே வர்ஷினியின்  தாத்தா பத்துவுடன் வரவுமே சரியாக இருந்தது.. “வாங்க, வாங்க” என்று அவரை உள் அழைத்துப் போனான்..

வீடு இருட்டாக இருக்கவும், “வர்ஷினி” என்று அழைத்துக் கொண்டே லைட் போட…

“உள்ளேயா இருக்கா?” என பத்து கேட்க.. 

“எஸ், உள்ளே தான் இருக்கணும்!” என்று பெட் ரூமில் பார்த்தவன், பின்பு அவளின் வொர்க் ரூமை போய் பார்க்க, அங்கே தான் வேலை செய்து கொண்டிருந்தாள். 

இங்கே ஹாலில் இருந்து பார்த்தால், அந்த ரூம் கதவு திறந்தவுடன் அவள் அங்கே இருந்து வேலை செய்வது தெரிந்தது..

“என்ன இன்னுமா இவளுக்கு பொறுப்பு வரலை? வீட்ல ஒரு விளக்கு கூட போடாம, யார் உள்ள வர்றான்னு தெரியாம” என்று தாத்தா கேட்க..

எஸ்! பெண்மக்களின் வேலை அதிகமாய் மதிக்கப்படுவது இல்லை.. ஆண்களைப் போல அவர்கள் வேலையில் மூழ்கி விடும் போது நிறைய இடத்தில் இப்படிப் பட்ட பேச்சுக்கள் தான்! அதே ஆண்கள் என்றால் கருத்தாய் வேலை செய்கிறார்கள் என்ற பாராட்டு!    

“அச்சோ தாத்தா, அமைதியா இருங்க.. ஏதாவது பேசிடாதீங்க, அப்புறம் அவளுக்குக் கோபம் வந்துடும்.. இன்னும் அவ நம்ம வீட்டுக்கே வரலை” என எடுத்துக் கொடுக்க…

“என்னவோ போங்க! இப்படித் தான் அவளைப் பார்க்க விடாம செய்துட்டீங்க, இல்லை அவளை யு எஸ் போகவே விட்டிருக்க மாட்டேன். புருஷனோட ஒழுங்கா குடும்பம் நடத்துன்னு சொல்லியிருப்பேன்.. அவளை பார்க்கவே இந்த ஈஸ்வர் விடலை” என்று அவனையும் சேர்த்து கடிந்து கொண்டார்.

ஈஸ்வர் வர்ஷினியிடம் “உன் தாத்தாவும் பத்துவும் வந்திருக்காங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வர,

“ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசிட்டு இருங்க.. இப்போ எழுந்தா  நான் பண்ணினது எல்லாம் வேஸ்ட்டா போயிடும்” என்று திரும்ப வேலையில் கவனமாகி விட்டாள். அவன் முகம் பார்த்துக் கூட பதில் சொல்லவில்லை, கம்ப்யுட்டரில் பார்வையை பதித்தே தான் சொன்னாள்.

அவளின் தீவிரம் பார்த்தே, எதோ முக்கியமான கட்டத்தில் இருக்கிறாள் எனப் புரிந்தவன்.. வெளியே வந்தான்.

“ரொம்ப முக்கியமா எதோ பண்ணிட்டு இருக்கா தாத்தா. அஞ்சு நிமிஷம் வந்துடவா” என உள்ளே சென்றவன், அவனே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, “என்ன சாப்பிடறீங்க தாத்தா, காஃபி ஆர் டீ” என,

“என்னது எழுந்து கூட இவளால வரமுடியலையா? அப்படி என்ன முக்கியமான வேலை?” என்று கடுப்பில் இருந்த அந்த பெரியவர் ஈஸ்வரின் உபசரிப்பில் சற்று குளிர்ந்தார்.

“வீட்ல வேலைக்கு யாருமில்லையா” என..

“ஆறு மணிக்கு கிளம்பிடுவாங்க” என்றவன், “நான் கொஞ்சம் நல்லா தான் காஃபி போடுவேன், இருங்க வர்றேன்!” என்று உள்ளே சென்றான்.

பின்னே வர்ஷினியின் தாத்தா மட்டுமல்ல, அமைச்சர் கூட அல்லவா!

ஈஸ்வர் காஃபி போடும்போதே வந்துவிட்டவள், “வாங்க தாத்தா” என்று உபசரிக்க,

அதுவரை இருந்த கோபம் எல்லாம் மறைந்து அவளைப் பார்த்ததும் ஸ்தம்பித்தவர், “ஏன் இப்படி இளைச்சு போயிட்ட வர்ஷினி, உடம்புக்கு ஏதாவதா? செக் பண்ணுனியா?” என,

“இல்லையில்லை, ஒண்ணுமில்லை, நல்லா இருக்கேன்! அது ரொம்ப குண்டா இருந்தேன்னு கொஞ்சம் இளைச்சேன்” என,

“என்னவோ போ, இந்த காலத்து பசங்க நல்லா இருக்குற உடம்பை கெடுத்துக்கறது” என்றவர்.. “நல்லா சாப்பிட்டு முதல்ல உடம்பை தேத்து” என,

ஈஸ்வர் காஃபியுடன் வர.. அவனின் கைகளில் இருந்து அந்த ட்ரேயை வேகமாக வாங்கியவள்.. அவளே கொண்டு வந்து கொடுக்க..

என்னவோ அதுவரைக்கும் இவளுக்குத் தெரியுது என்று மனதில் நினைத்துக் கொண்டார்..

எல்லாவற்றையும் வேடிக்கை தான் பார்த்திருந்தான் பத்து.. “எப்படி இவளை கவனித்துக் கொள்கிறான் ஈஸ்வர்” என்று ஆச்சர்யமாய் இருந்தது.. “ஈஸ்வர் எனும் கர்வி எங்கே போனான்.. ஆனாலும் இப்படி பார்த்துக் கொள்பவனை ஏன் விட்டுப் போனாள்? என்ன அப்படி?” இப்படி யோசனைகள் ஓட அமர்ந்திருந்தான்.

“இவன் ஏன்டா இப்படி பேய் அடிச்சவன் மாதிரி உட்கார்ந்து இருக்கான்” என்று ஈஸ்வர் பார்த்து இருந்தான்..

இருவருக்கும் காபி கொடுத்தவள் “நமக்கு எங்கே” என்று ஈஸ்வரிடம் சைகை செய்ய.. எப்போதும் போல மறந்து விட்டவன் உள்ளே திரும்பப் போக.. “இருங்க, நான் போறேன்!” என்று சென்று இருவருக்கும் காஃபி கலந்து எடுத்து வந்தாள், அதுவரையிலும் எதை எதையோ பேசிக் கொண்டு இருந்தனர் தாத்தாவும் ஈஸ்வரும்…

அவள் வந்து அமரவுமே, “எப்படி இருக்க வர்ஷினி?” என,

“நல்லா இருக்கேன் தாத்தா! நீங்க எப்படி இருக்கீங்க?”  

“என் பையனை அனுப்பிவெச்சிட்டு நல்லா கல்லு குண்டு மாதிரி இருக்கேன்” என,

காலையில் இருந்து அப்பாவின் ஞாபகத்தில் இருந்தவளுக்கு மனதிற்கு ஒரு மாதிரி இருக்க, “இப்போ சொல்லி என்ன பண்ண? அவரை நீங்க முன்னமே கண்ட்ரோல் பண்ணியிருக்கணும்” என வர்ஷினி சொல்ல,

“என்ன பண்ணியும் அடக்க முடியலை! என்ன செய்ய? பிடிவாதம்! என் வாழ்க்கை என் இஷ்டம்ன்ற பிடிவாதம்!” என்றவர்.. “இப்போ உங்க அப்பாவுக்கு கொஞ்சமும் தப்பாம நீ.. எதுக்கு டைவர்ஸ் கேட்டிருக்க இப்போ? என்ன பண்ண போற அதுக்கு அப்புறம்?” என,

“நான் என்ன பண்ணினா உங்களுக்கு என்ன தாத்தா? கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரமாட்டேன்! உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது! உங்க பேரன்களோட அடையாளத்தை நான் பறிக்க மாட்டேன்.. உங்க பேரை எல்லாம் எங்கயும் யூஸ் பண்ண மாட்டேன்.. உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்!” என,

“வர்ஷினி” என ஈஸ்வரும் பத்துவும் ஒருங்கே அதட்ட..

இருவரையுமே முறைத்தாள்..

“எதுக்கு இப்படி எப்பவும் எல்லோரையும் கம்ப்ளைன்ட் சொல்ற, இல்லை எடுத்தெரிஞ்சு பேசற” என்று ஈஸ்வர் அதட்ட..

“இவர் என் அப்பாவோட அப்பா தானே! இல்லைன்னு அவர் ஒரு வார்த்தை சொல்லட்டும், நான் பேசலை.. நீங்க இதுல வரவேண்டாம்!” என்றாள் காட்டமாக..

“ரொம்பவும் இர்ரிடேட் பண்ற நீ! சொன்ன பேச்சை கேட்க மாட்டியா?” என ஈஸ்வரும் கோபமாகப் பேச,

“அப்படி இவங்க கிட்ட சும்மா சிரிச்சு பேச வேண்டிய அவசியம் கிடையாது.. இவங்க வெளி ஆளுங்க கிடையாது.. என்னை நானா இருக்க விடுங்க”

“அப்படி உனக்கு சண்டை போடணும்னா அவங்க வீட்டுக்குப் போய் போடு! சும்மா நம்ம வீட்டுக்கு வர்றவங்க கிட்ட சண்டை போடாதே!” என அவனும் விடாமல் பேச,

தாத்தா தான் இடை புகுந்தார்.. “ஈஸ்வர், கோபம் வேண்டாம், என் கிட்ட தானே பேசறா, விடு!” என,

ஆனாலும் முறைத்து அமர்ந்தான்.. நீ முறைத்தாலும் எனக்கொன்றுமில்லை என்ற பார்வையை அவனிடம் வீசி திரும்பினாள்.

“வர்ஷி, நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை” என்றான் பத்துவும்.

“அதுதான் நானும் சொல்றேன், நான் இன்னும் சின்னப் பொண்ணு இல்லை, அப்படி நட, இப்படி நட, இப்படி பேசுன்னு சொல்றதுக்கு, எனக்குத் தெரியும்”  

“சும்மா கோபப் படாத வர்ஷி” என்றான்.

“நான் சொன்னதெல்லாம், தாத்தா என்கிட்டே  சொன்னது, அதை தான் நான் திரும்ப சொன்னேன்” என்று தாத்தாவை முறைத்துப் பார்த்தவள்.. “சொல்லுங்க நீங்க சொல்லாததையா சொன்னேன்” என,

“நான் சொன்னது சொல்லாதது இருக்கட்டும்! நீ ஏன் இப்போ டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பின?” என்றார் அவரும் விடாமல்.

“இத்தனை வருஷமா என்ன கேட்டீங்க என்னை பத்தி? இப்போ வந்து இதை மட்டும் கேட்க வேண்டிய அவசியம்? அக்கறை எல்லா விஷயத்திலையும் இருக்கணும் தாத்தா, சும்மா உங்களுக்கு தோணினப்போ வந்து கேட்கக் கூடாது. அங்கயே ஏதாவது ஒரு ஆக்சிடண்டல நான் செத்திருந்தா கூட, இவரைத் தவிர யாருக்கும் தெரிஞ்சிருக்காது!” என

“ஏய், நீ வாயை மூடவே மாட்டியா” என்று ஈஸ்வர் கத்தியே விட்டான்.

“மாட்டேன்” என்று அவனிற்கும் அசராமல் பதில் கொடுத்து, “சும்மா இப்போ வந்து எல்லோரும் பேசாதீங்க, எங்க அப்பா இருந்தார் என்னைப் பார்த்துக்கிட்டார் அவ்வளவு தான்! திரும்ப நான் இவரை கல்யாணம் செஞ்சு இங்கே வந்துட்டேன்! அதுவும் எங்கப்பா தான் செஞ்சிக் கொடுத்தார்!”

“அதுக்கப்புறம் நீங்க என்ன பண்ணுனீங்க? என்ன பார்த்துக்கிட்டீங்க. என் வாழ்க்கையில சிக்கலை எல்லாம் நீங்களும் உங்க பேரனும் தான் உருவாக்கினீங்க! உங்க பேரனுங்க யாராவது இப்படித் தனியா இருந்தா விட்டிருப்பீங்களா? இல்லை கூடப் பிறந்த தங்கைன்னா பத்துண்ணா விட்டிருப்பாங்களா?”

“இதையெல்லாம் நினைக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். எனக்கு நாள் ஆகும் புரிஞ்சதா! சும்மா என்னை வந்து கேள்வி கேட்கற வேலை, அதை செய், இதை செய், ஏன் இப்படி செஞ்சன்னு கேட்கற வேலை எல்லாம் இருக்கக் கூடாது தெரிஞ்சதா?” என

தாத்தா அசந்து தான் அமர்ந்திருந்தார், என்ன மிரட்டல் இது என்பது போல! பத்து கூனிக் குறுகி விட்டான், மனதில்!

ஈஸ்வர் தலையிடவேயில்லை.. இட்டால் இன்னும் பேசுவாள் எனப் புரிந்து! 

“உங்களால என்னை பேத்தின்னு சொல்ல முடிஞ்சா சொல்லுங்க! இல்லை வேணாம் விட்டுடுங்க! ஒரு மாசம் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க, வந்தவுடனே என்னை கேள்வி கேட்கறீங்க”  என ஆவேசமாக பேசி அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட..

“ஐயோ, இது முடியவே முடியாதா?” என்ற எண்ணம் மட்டுமே அங்கிருந்தவர்களின் மனதில்..

“இன்னும் எத்தனை எத்தனை வைத்து இவள் மருகிக் கொண்டிருகிறாள் மனதில்” என்று ஈஸ்வரின் மனது தவித்தது.. கூடவே “என்ன தெரியவில்லை இவளுக்கு என்று நான் அம்மாவின் அருகில் இருந்து கற்று கொள்ள சொல்கிறேன்” என்ற எண்ணமும்..

அவளிடம் இருப்பது தெரியாத தன்மை அல்ல ஒதுக்கம் என்று புரிந்தது.

“சாரி தாத்தா, ரொம்ப கோபம் எப்பவுமே” என,

“அவ சொல்றதும் நியாயம் தானே” எனத் திரும்பி பத்துவை பார்க்க, அவன் தலை குனிந்து தான் அமர்ந்திருந்தான்.

அவன் அப்படி அமர்ந்திருப்பது ஈஸ்வருக்கு ஒரு மாதிரி இருக்க, “விடு சரியாகிடுவா, நீ இவ்வளவு ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை.. அவளை ஹேண்டில் பண்றது ரொம்பக் கஷ்டம்!” என்று பத்துவின் அருகில் அமர்ந்து ஆறுதலாக தோளை தட்டிக் கொடுத்தான் ஈஸ்வர்.

“இல்லை, நாங்க பண்ணினது தப்பு தான்.. நீங்களும் ரஞ்சனியும் பேசாம இருந்த போது கூட அவளுக்கு எதுவும் நீங்க வரவிட்டதில்லை.. நீங்க அவளோட எப்பவுமே இருக்கீங்கன்ற தைரியம் அவளுக்கு எப்பவுமே உண்டு.. அதனால தான் எங்களுக்குள்ள எதுவுமே சரியில்லாத போது கூட, என்னை நான் தான் பார்த்துக்கணும்ன்ற எண்ணம் அவளுக்கு வந்ததே கிடையாது.. நீங்க உங்க வீடு எல்லாமே அவளுக்கு ரொம்ப ஸ்ட்ராங் ஸ்ட்ரெந்த் கொடுக்குது!

“அந்த ஒரு ஃபீல் நாங்க அவளுக்குக் குடுக்கவே இல்லை” என்றான் கண்களும் கலங்க, குரலும் கலங்க!

“ப்ச், இவ்வளவு வருத்தம் வேண்டாம்!” என்றான் ஈஸ்வர் சமாதானமாக.  

“இல்லையில்லை, வருத்தப்படலை, வெட்கப்படறேன்!” என்றான் பத்து உணர்ந்து..

“விடுடா, உங்களை அவ பார்த்துக்குவா, அவளுக்கு அவ்வளவு கெப்பாசிட்டி இருக்கு” என்றார் தாத்தா நல்ல விதமாகவே, “வீட்டுக்குப் போகலாமா?” என,

“என்ன வீட்டுக்கா? அவ வெளில வர்ற வரை நான் வீட்டுக்கு எல்லாம் வரமாட்டேன், நீங்க போறதானா போங்க!” என

“என்ன இப்போ? ஒரு நாள் நாம இங்க இருக்கக் கூடாதா?” என இலகுவாகவே சொல்லி அவரும் இருக்க,

“உங்க கைதடி கால்தடி எல்லாம் வெளில இருக்கும், அவங்களை எல்லாம் அனுப்பிட்டு வாங்க!” என்று பத்து சொல்ல.. அவர் எழுந்து வெளியே சென்றார்.

“நாங்க இங்க இருக்கலாம் தானே” என்று பத்து ஈஸ்வரை பார்த்துக் கேட்க..

“பத்து, நீ எங்க வீட்டு மாப்பிள்ளைடா.. என்ன கேள்வி இது.. என்னை வெளில போன்னு சொல்ற அளவுக்கு உனக்கு உரிமை இருக்கு” எனச் சொல்லி பத்துவின் தோளில் கைபோட்டு ஈஸ்வர் புன்னகைக்க,  

பத்துவிற்கு தான் இன்னுமே குற்றவுணர்ச்சியாகப் போய்விட்டது! திருமணதிற்கு பின் அவனால் தானே எல்லாம் ஆரம்பித்தது!

“சாரி” என்றான் மனமுணர்ந்து!  

“நடக்கணும்னு இருந்தா எப்படியும் நடந்திருக்கும்.. நடக்கற எதுக்கும் யாரும் பொறுப்பில்லைன்னு நாம தத்துவம் பேசலாம்.. ஆனாலும் நிஜத்துல வர்ஷினி நடந்துக்குற விதத்துக்கு ஒரு வகையில நாம எல்லோருமே காரணம்! விடு சரியாகிடுவா! ஆகலைன்னாலும் ஆக்கிடலாம்!” என்றான் நம்பிக்கையாய்..

“நிஜமா” என்பது போலப் பத்து பார்க்க,

புன்னகைத்தவன்.. “இப்படி தான் அவ கிட்ட சவால் எல்லாம் விட்டுருக்கேன் நீ என்னை விட்டு போகமாட்டான்னு நீயே சொல்லுவன்னு”

பத்துவின் முகத்தில் புன்னகையின் கீற்று எட்டிப் பார்க்க “அதுக்கு என்ன பண்றீங்க” என்றான்.

“ஹ ஹ” என்று வாய்விட்டு சிரித்த ஈஸ்வர், “ஒன்னுமே பண்ணலை.. எல்லாம் ஒரு நம்பிக்கை தான். ஐ லவ் ஹெர் எ லாட்.. கண்டிப்பா அதுக்கு ஒரு பிரதிபலிப்பு இருக்கும்! டைவர்ஸ் எல்லாம் பண்ண மாட்டா.. ஜஸ்ட் ஒரு நோட்டிஸ் தான் அனுப்பியிருக்கா.. இன்னும் ஃபைல் எல்லாம் பண்ணலை.. சும்மா அவக்கிட்ட எல்லோரும் கேட்டுக் கேட்டு பண்ணி தான் ஆவேன்னு கிளம்பிடப் போறா.. சொல்லி வை உங்க தாத்தா கிட்ட.. அட்வைஸ் பண்றேன்னு என் வாழ்க்கையில விளையாடிடாதீங்க” என..

இப்போது பத்துவின் முகத்தில் புன்னகை நன்றாகவே மலர்ந்தது.. இன்னும் அவனின் தோளில் இருந்து ஈஸ்வரும் கையை எடுக்கவேயில்லை! பலவருட சந்தேகமாக பத்து “உங்களுக்கு எப்படி இவ்வளவு அவளைப் பிடிச்சது” என,

ஈஸ்வர் இன்னும் சத்தமாக வாய்விட்டு சிரிக்க.. அப்போது சரியாக.. ரஞ்சனி குழந்தையைத் தூக்கி கொண்டு ஈஸ்வர் வீட்டிற்கு வர.. “ஆ.. என்ன காட்சி இது” என்று பார்த்தது பார்த்த படி நின்றாள்.

ஆம் ஈஸ்வர் பத்துவின் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க.. பத்து அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தான். 

அதையும் விட.. ஈஸ்வரின் சிரிப்பு சத்தம் கேட்க “நான் அவ்வளவு டென்ஷனா கத்திட்டு வர்றேன் இவன் எதுக்கு இப்படி சிரிக்கறான்” என்று கோபத்தில் வர்ஷினியும் ரூம் விட்டு வெளியே வந்து பார்க்க..

அவளின் முகத்திலும் புன்னகை தானாகவே மலர்ந்தது! “தோடா, இவனுங்க ஏன் கொஞ்சறானுங்க” என்பது போலப் பார்த்து நின்றாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவன் “உன்னை கொஞ்ச முடியலை, சோ டைம் பீயிங் உன் அண்ணன்” என்பது போல குறும்பாய் ஒரு லுக் விட..

வர்ஷினிக்குத் தானாக சிரிப்பு வர.. அடக்க முயன்றாலும் முடியவில்லை.. ஒரு விரிந்த சிரிப்போடு ஈஸ்வரை பதிலுக்கு பார்த்தவள்.. “பேச்சுல, பார்வையில மட்டும் தான் நீ கொஞ்சுவ” என்ற கிண்டல் பாவனையைக் காட்ட..       

ஈஸ்வர் சிரித்துக் கொண்டே ஒரு வசீகரிக்கும் பார்வையோடு அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் கவரப் பட்டவளாய் வர்ஷினியும் பார்த்தே நின்றிருந்தாள்.

ஒரு காதல் என்பது.. உன் நெஞ்சில் உள்ளது.. உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி!           

  

  

 

Advertisement