Advertisement

அத்தியாயம் எழுபத்தி ஒன்னு :

மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்                                                                           கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்

ஒரு பத்து நிமிடத்தில் தேறிக் கொண்டவன்.. எந்த வழி செல்கிறாள் என்று பார்க்க.. ஏதோ ஒரு சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்தாள்..

“எங்கே போற?” என்று ஈஸ்வர் கேட்கவும்..

“யாருக்குத் தெரியும்? எங்கே போறதுன்னு தெரியாம தானே உங்களோட வர்றேன்” என்றவளின் குரலில் ஒரு விரக்தி இருக்க,

“ஏன் இப்படி எல்லாம் பேசற? நீ சொன்ன மாதிரி ரொம்ப நாள் கழிச்சு உன்னை பார்த்ததினால எமோஷனல் ஆகிட்டேன்.. இனிமே ஆக மாட்டேன்” என்றவன்..

“இப்படியெல்லாம் பேசாதே! நீ உன்னோட வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு வாழணும்.. என்னோட இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி.. பலதும் தான் யோசிக்கறேன்.. ஆனா உன்னை பார்த்தா தடுமாறிடறேன்” என உண்மையைப் பேசவும்..  

“நீயா தடுமாறுகிறாய்.. இல்லாமல் போனது தானே வேதனை, தடுமாற்றம் என்னுள் தானே! பதினைந்து நாட்கள் எனக்கு ஒரு உலகத்தைக் காட்டி பின் அதன் சுவடுகள் சிறிதும் இன்றி தவிக்க விட்டவன் தானே நீ! நீ உன்னை நிலை படுத்திக் கொள்ள என்னை நிலையற்றவள் ஆக்கி விட்டாய்! அதுதானே என்னை இன்னும் தடம் மாற செய்தது! மாத்திரைகளின் துணையை என்னை அதிகமாக தேடவைத்தது! உன்னை பார்த்த நாளிலிருந்து நான் சிதிலமடைந்து போனேன்! என்னை நானே வெறுக்கும் சில கணங்களை, தேடல்களை என்னுள் கொடுத்து விட்டாய்! மீள்வதற்குள் மூச்சடைத்துப் போய் விட்டேன்! உன்னை தள்ளி நின்று காணாமல் நான் மீண்டு விட்டேன்! கண்டும் நான் மீள வேண்டும்! மீண்டே ஆக வேண்டும்” என்று நினைத்துப் பார்த்தவளுக்கு மனதினில் ஒரு உறுதி பிறக்க.. ஒரு நிமிடம் கண்களை இறுக்க மூடி திறந்து ஈஸ்வரைப் பார்த்தாள்..    

அந்தப் பார்வை அவனுக்கு புரியவில்லை “என்ன வர்ஷ்?” என,

“ஒன்றுமில்லை” என்பது போல தலையாட்டி தெரியப் படுத்தவும்..

மேலும் துருவாமல்.. “நீ வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நமக்கு நிறைய வேலை இருக்கு..” என.

“என்ன வேலை?” என்றாள் புரியாமல்..

“முதல்ல என்னோட நியூ ப்ராஜக்ட் லான்ச்  ஒன்னு.. அப்புறம் ஐ ஹேவ் எ வெரி பிக் ப்ரபோசல்.. அது பத்தி உன்கிட்ட பேசணும்.. ஏன்னா நீயில்லாம அதை என்னால பண்ண முடியாது.. அப்புறம் நம்மோட வீடு ஒன்னு, அதுக்கு கிரஹபிரவேஷம் பண்ணனும்.. அதுக்கு நம்மோட கன்வினியன்ட் டே பார்க்கணும்” என  ஈஸ்வர் அடுக்கவும்.. 

“நாம டைவர்ஸ் பண்ணிக் போறோம்” என்றாள்..

“நீ பண்ணிக்கப் போற, நான் இல்லை” என..

“திரும்பவுமா?” என வர்ஷினி எரிச்சலை முகத்தில் மறையாது காட்டி அவனைப் பார்க்க,

“பொண்ணுங்களுக்கு தானே தாலி மெட்டி எல்லாம், எனக்கொன்னும் இல்லை தானே. சோ! என்னோட லைஃப்ல எந்த சேஞ்சும் இல்லை. அதை சொன்னேன்” என வாய்க்கு வந்ததை உளறினான்..

“வாயை மூடுடா, அவளை டென்ஷன் பண்ணாதே.. திரும்ப நீ டென்ஷன் ஆகாதே” என மனதிற்குள்ளும் சொல்லிக் கொண்டான்.  

“தாலி” என்ற வார்த்தைக் கேட்டதும் தான்.. “அச்சோ” என்று கழுத்தை தடவினாள்.. கழுதைச் சுற்றி ஸ்கார்ப் இருந்ததினால் ஈஸ்வருக்குத் தெரியவில்லை..

“அச்சோ” என்று மெலிதாக கூறினாலும் அவனின் காதில் விழ,

“என்ன?” என்றவனிடம்.. “ஒன்றுமில்லை” என்பது போல மீண்டும் ஒரு தலையசைப்பு.. பின்னே ஷப்பா, ஊருக்கு வருவதற்காக திரும்ப எடுத்து அணிந்திருந்தாள்..

ஆம்! வர்ஷினி அங்கே இருந்தவரை அணியவில்லை.. அங்கே அதை பெரிதாய் எடுப்பவர் யாரும் அவளின் அருகில் இல்லை.. அதனின் மகத்துவங்கள் உணர்ந்து அவளும் வளரவில்லை.. பின்னும் உணரவில்லை. 

“என்ன வர்ஷி?” என்றான் தணிவாக, என்னவோ என நினைத்து.

“நிஜம்மா ஒன்னுமில்லை” என்றவள்.. “அது என்ன பெரிய ப்ரபோசல்” என,

“சொல்றேன், சொல்றேன், நீ ஏதாவது பண்ணனும்னு ப்ளான் வெச்சிருக்கியா?” என,

“இல்லை, இதுவரை ப்ளான் ஒண்ணுமில்லை. ஒரே ஒரு ஜாப் வொர்க் மட்டும் தான் பண்ணினேன். அது மூலமா கொஞ்சம் யோசனை இருக்கு”  

“என்ன ஜாப் வொர்க்?”

“ஒரு அனிமேஷன் ஃபிலிம் வொர்க் பண்ணினேன்”

“ஃபில்மா? வொர்க் பண்ணினியா? என்ன பிலிம்? அங்கே தமிழ் எப்படி?”  

“அறிவே!” என்றபடி ஒரு பார்வை பார்த்தவள், “அது ஒரு ஹாலிவுட் மூவி, அவதார் மாதிரி! ஸ்டுடியோ கூட ஹாலிவுட் ல தான் இருந்தது” என,

“பெரிய ப்ராஜக்டா?”   

“ம்ம்” என சொல்லி, டைரக்டர் பேர் சொல்லி, படம் பேர் சொல்ல,

“ஆ” எனப் பார்த்தவன், “நிஜம்மாவா சொல்ற?” என,

“ஆம்” என்பது போல தலையசைத்தவள், “ஏன் இப்படி கேட்கறீங்க?” என்றாள்.

“ஹே திஸ் இஸ் எ வெரி பிக் ப்ராஜக்ட், அதுல நீ என்ன பண்ணின?”  

“எப்படியும் படம் வர இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் ஆகும். வந்த பிறகு அதுல காட்டுறேன்!”  

“இது பெரிய விஷயம் வர்ஷி.. நீ இவ்வளவு ஈசியா சொல்ற.. திஸ் இஸ் எ வெரி பிக் சக்சஸ்.. உன்னோட ஏஜ்க்கும் எக்ஸ்பிரியன்ஸ்க்கும்.. ஏன் இதை  சொல்லலை?” என,

“நானே சொல்வேனா, நான் அதை பண்றேன் இதை பண்றேன்னு, எனக்கு அது தெரியும் இது தெரியும்ன்னு, என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு கூட எதுவும் தெரியாது.. ஆனா கொஞ்சமாவது உங்களுக்கு தான் தெரியும். அட்லீஸ்ட் என்னோட ஸ்டடீஸ் பத்தி நீங்க தான் கேட்டீங்க”  

“என்ன சொல்வது?” என்று தெரியவில்லை, விழித்தான் ஈஸ்வர்.

சிறு சிறு வெற்றிகளைக் கூட பெரிய விதமாய் கொண்டாடிக் கொள்ளும் இந்த உலகில், மிகப் பெரிய வெற்றி. அதனை யாரிடமும் பகிரக் கூட இல்லை. “இன்று உன் மனைவி அவள், நீ அவளை வைத்து விட்ட நிலை என்ன” என்று தன் மீதே வருத்தமாய் கோபமாய் இயலாமையாய் உணர்ந்தவன்,

“உனக்கு என்ன என்ன தெரியும்?” என,

“இனிமே அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க” என்று முடித்து விட்டாள்.

மேலும் அவளை டென்ஷன் படுத்த விரும்பாமல், “எனிவே கங்க்ராட்ஸ். இது ரொம்ப பெரிய விஷயம். லெட்ஸ் செலிப்ரேட் சம் அதர் டைம்” என்றான் ஆழ்ந்த குரலில்.

சாலையில் பதித்திருந்த பார்வையை விலக்கி ஒரு இனம் விலங்கா பார்வை ஈஸ்வரை பார்த்தவள், வேறு எதையும் பேசாமல் மீண்டும் சாலையை நோக்கி பார்வை பதித்தாள்.  

“ஓரமா நிறுத்து வர்ஷி.. நான் டிரைவ் பண்றேன்!”     

இறங்கி மாறி அமர்ந்தவன்.. “இந்த அஞ்சு வருஷம் நம்ம வாழ்க்கையில இல்லாம போயிருந்தா, நாம சந்தோஷமா இருந்திருப்போம். ஐ மீன் நான் முரளி கல்யாணத்துல உன்னை நல்லபடியா பார்த்து, என் மேல உனக்கிருந்த இன்ட்ரஸ்ட் அப்படியே இருந்திருந்தா”

“ஆனா கிடைக்குமான்னு ஒரு வருஷம் ஏங்கி, நீ கிடைச்ச பிறகு மறுபடியும் தொலைச்சிட்டேன்.. கண்டிப்பா நான் மட்டும் தான் காரணம்.. அப்போ இருந்த என்னோட மைன்ட் செட்ல எதையுமே என்னால கவனிக்க முடியலை. பணம் பணம்ன்னு அது பின்னால ஓடிட்டேன். அதனால் உன்னோட விருப்பு வெறுப்பு எதுவும் தெரியலை. சாரின்ற வார்த்தை எல்லாம் இதை சரி செய்யாது தெரியும். ஆனாலும் ஸ்டில் சாரி!” என்றான் உணர்ந்து.  

“நான் இப்படியே உங்களோட வர்றதா, இல்லை எங்கயாவது தொலைஞ்சு போறதான்றது நீங்க பழைய விஷயத்தை பேசாம இருக்கிறதுல தான் இருக்கு. இப்போ என்ன பண்ணட்டும்?” என்றாள். அவனைப் பார்க்கக் கூட இல்லை, மீண்டும் சாலையை வெறித்து இருந்தாள்.

வாயை கப்பென்று மூடிக் கொண்டான்.. பின்னே வர்ஷினியைப் பார்க்கும் போது, அவளிடம் எப்படி பேச வேண்டும், நடக்க வேண்டும் என்று பிரிந்த நாளாக பல யோசனைகளை தன்னுள் ஓட்டிக் கொண்டு இருந்தவன், திரும்பவும் தடுமாற்றமும் முட்டாள் தனமுமாக இருப்பதாக அவனுக்கேத் தோன்றியது.

அவனுக்கே புரிந்தது, எல்லோரும் பார்க்கும் ஈஸ்வர் வேறு இவளிடம் இருப்பவன் வேறு என..  “அதுதான் அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என அவனுக்கு அவனே மனதினில் பேசிக் கொண்டான்.

பிறகு ஒரு ஆழ்ந்த அமைதி.. அந்த அமைதி ஈஸ்வரை பாதிக்க எப்பொழுதும் போல இளையராஜாவின் இசையை நாடி ஸ்டிரியோ ப்ளேயரை உயிர்ப்பித்தான். மிகவும் மெலிதாக அது,

தாலாட்டுதே வானம்.. தள்ளாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்.. இது கார்கால சங்கீதம்..

என ஒலிக்க..

வர்ஷினி அதை இன்னும் சத்தமாக வைத்து கண்மூடிக் கொள்ளவும்.. கார் வேகமெடுத்தது…   

ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம், மனதிற்கு இதம் தரும் பாடல்களாய் ஒலிக்க, கண்மூடி அதனை கேட்டு இருந்தாள். வர்ஷினியோடான அந்த பயணத்தை ஈஸ்வரும் ரசிக்க ஆரம்பித்தான்.  இருவர் மனமுமே சமன்பட்டது.

ஒரு அகலமான வீதியினுள் நுழைய.. காரின் வேகம் வெகுவாக குறையவும் கண்திறந்தாள். “எங்கே போறோம்?” என்றவளிடம் “வீட்டுக்கு” என்றவன்.. “நான் வீடு மாறிட்டேன்” என..

“எப்போ?”  

“அப்போவே, நீ போன கொஞ்சம் நாள்ளயே.. நீ காலேஜ் முடிச்சதும் வீட்டுக்கு வருவேன்னு.. ஆனா நீ திரும்ப படிக்கப் போயிட்ட”   

“அப்போ நீங்க உங்க வீட்டு ஆளுங்களோட இல்லையா?”

“இல்லை” எனத் தலையசைத்தான்.

“இன்னுமா அவங்க மேல கோபமா இருக்கீங்க?”  

“இல்லை” என்பது போல மீண்டும் தலையசைக்கவும்,

“அப்புறம் ஏன் போகலை?” என்றாள் விடாமல்.  

“உன்னை தனியா விட்டுட்டு, நான் அவங்களோட போய் இருக்க முடியுமா என்ன?” என்றவன், “நானும் தனியா தான் இருக்கேன்” என்றான்.

“தோடா.. இந்த சீன் நல்லாவே இல்லை.. எனக்கு பீலிங்க்சும் வரலை, ஒரு மண்ணும் வரலை” என்று மனதிற்குள் கடுப்பானவள்.. 

“இவனே போக வைப்பானாம், அப்புறம் இவனே டைலாக் அடிப்பானாம், என்னவோ போ வர்ஷி, உன் ராசியோ? அவன் ராசியோ?” என்று மனதிற்குள் கௌண்டர் கொடுத்தவள்,

“கடவுளே என்னை காப்பாத்திடு, இவன் என்கிட்டே தப்பா நடக்கறதை கூட பொறுத்துக்க முடியும். ஆனா இவன் நல்லவனா மாறி பேசறதை என்னால தாங்க முடியாது! அய்யகோ!!!!!!!!!!!!” என மனதினில் வசனம் பேசியவள்,

வெளியில் “அத்தை எப்படி விட்டாங்க?” என்றாள் சின்சியர் சிகாமணியாக.

அதற்கு ஈஸ்வர் கர்மசிரத்தையாக “பேசிட்டே தான் இருப்பாங்க.. ஆனாலும் நான் போகலை” எனும்போதே வீடு வந்திருக்க..

இவனின் காரைப் பார்த்ததும் வாட்ச் மேன் திறக்க.. வாட்ச் மேன் அருகிலேயே தாஸ் இருந்தான்.. அவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவள்,

“தாஸண்ணா..” என்று கார் உள்ளே செல்ல செல்ல வர்ஷினி கூப்பிட.. தாஸின் அருகில் ஈஸ்வர் காரை நிறுத்தவும் அவசரமாக இறங்கினாள்..

“எப்படி இருக்கீங்க தாஸண்ணா, என்னால உங்கட்ட போன்ல பேசவே முடியலை” என..

“ஊருக்குப் போயிட்டேன் பாப்பா, நான் இங்க இல்லவே இல்லை”

திரும்பி ஈஸ்வரை பார்க்கவும் “நான் தான் அனுப்பி வெச்சேன்.. நீ திரும்ப வரும் போது கூப்பிட்டுக்கறேன்னு” என்றான்.

“நேத்து தான் சொன்னாங்க, உடனே கிளம்பி வந்துட்டேன்” என்றான் தாஸ்.

“சாப்பிட்டீங்களா” என அவனுடன் பேசிக் கொண்டே நடக்க..

“நீங்க எப்படி இருக்கீங்க பாப்பா” என்று அவன் பதில் சொல்லிக் கொண்டே நடப்பது புரிய… காரை பார்க் செய்து ஈஸ்வர் வர்ஷினியின் உடமைகளை எடுக்கவும், அதைக் கவனிக்காமல் தாஸ் பேசிக் கொண்டே இருக்க..

“தாஸண்ணா” என வர்ஷினி கண் காட்டவும் விரைந்தவன், அதை தூக்கிக் கொண்டே ஈஸ்வரிடம், “பாப்பா ஏன் இளைச்சு போச்சு? பாப்பா கண்ணு ஏன் வேற மாதிரி இருக்கு?” என,

“ரொம்ப நல்லவன்டா இவன். அவகிட்ட கேட்காம என் கிட்ட கேட்கறான். இவனை என்ன பண்ண?” என நினைத்தாலும்,  

“கண்ணுக்கு லென்ஸ் போட்டிருக்கா தாஸ்” என்றான்.

“நல்லா இல்லை, நீங்க சொல்ல மாட்டீங்களா?” என தாஸ் ஈஸ்வரிடம் அலுக்கவும்..  

“வர்ஷினி” என உரக்க அழைத்தான் உடனே.. “என்ன?” என்பது போல வர்ஷினி திரும்பிப் பார்க்க, “உன் கண்ணுக்கு லென்ஸ் நல்லா இல்லையாம். தாஸ் என்னை சொல்லச் சொல்லி சொல்றான்” என்றவனின் குரலில் குறும்பு அப்பட்டமாய் தெரிய,  

தாஸ் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க,

வர்ஷினி “என்னடா இவன்” என்பது போலப் பார்த்தவள், “இவனுக்காக தானே லென்ஸ், நான் அதை எடுக்கணுமா?” என யோசிக்கும் போதே.. 

“எடுத்துடு அதை” என மீண்டும் உரக்கச் சொல்லி, “சொல்லிட்டேன்” என  தாஸிடம்  சொல்லி… மீண்டும் வர்ஷினியை பார்த்தவன் முகத்தில் ஒரு மலர்ந்த புன்னகை, “உலகம் என்னை ரொம்ப நம்புது” என்பது போல.. அவனை அவனே கிண்டல் செய்து கொள்ளும் ஒரு தன்மை.

புரிந்த வர்ஷினியின் முகத்தில் தானாக ஒரு புன்னகை மலர்ந்தது.. எந்த பதிலும் சொல்லாமல் பார்த்திருந்தாள்.

“என்ன கலாட்டா இது?” எனப் புரியாமல் தாஸ் பார்த்திருக்க.. ஈஸ்வர் நடக்கவும் அவனின் கையினில் இருந்த லக்கேஜ் வாங்கி.. “நீங்க போங்க, நான் எடுத்துட்டு வர்றேன்” என அனுப்பினான்..

வர்ஷினி அருகில் வந்தவன் “என்ன லென்ஸ் எடுத்துடலாமா?” எனக் கேட்டு புன்னகைக்க.

“எடுக்கணும்னு தோண வைங்க, எடுத்துடறேன்” என சொல்லி வர்ஷினியும் பதில் புன்னகை புரிந்தாள்.. ஈஸ்வரின் மலர்ந்த முகத்தை பார்த்தோ என்னவோ அந்த பதில் தானாக வந்தது.

“சோ, எனக்கு ஒரு சான்ஸ் இருக்கா?” என்றான் உடனே ஒரு பரவசத்துடன் கூடிய எதிர்பார்ப்பை முகத்தினில் தேக்கி,  

“அச்சோ” என உதடு கடிக்கவும்.. தாஸ் பார்க்கிறானா எனப் பார்த்து, “அதை ஏன் டிஸ்டர்ப் பண்ற” என்று நொடியில் கை விரலால் உதடை விடுவித்து.. அதனை மெலிதாக பிடிக்க,  

பட்டென்று கையினில் அடித்தாள் அனிச்சையாக.. “வாட்ச் மேன் பார்க்கறாங்க” என்றபடி.

“அட தாஸை பார்த்தேன், இவரை கவனிக்கலை” என நினைத்து திரும்பி அவரைப் பார்த்தான்..

ஆம்! இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. ஈஸ்வரை பார்த்து முகத்தை சுருக்கினாள்.. “தாஸ் மட்டும் தான் பார்த்தேன்!” என்று ஈஸ்வர் விளக்கம் வேறு கொடுத்தான்..

இதற்கு அங்கே ஒன்றும் நடக்கவில்லை, அவர்களைப் பொறுத்தவரை காதல் கணவன் மனைவியும் அல்ல.. செல்ல சீண்டல் சீண்டிக் கொள்பவர்களும் அல்ல.

“ஆனாலும் செமையா அடிக்கற நீ” என்று அவள் அடித்த இடத்தை தடவி விட்டுக் கொண்டே சொல்ல..

மிகவும் இயல்பான பேச்சுக்கள், எப்போதாவது அவர்கள் இப்படி பேசியிருப்பார்களா அவர்களே அறியார். அவளுடைய கவனம் யாரும் பார்த்தாரா என்பதில் தான் இருக்க, அவன் தன் இதழ்களை தொட்டதை மறந்து போனாள்..

பிறகு தான் ஈஸ்வர் செய்த செயல் புரிந்து, அவனை ஒரு பார்வை பார்க்க.. வர்ஷினி அவனை பார்த்த பார்வை சத்தியமாய் அவனுக்கு புரியவில்லை..

அவள் நினைத்தது “இவன் வேற ஒருத்தன்! வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! எப்படிப் போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! ன்ற மாதிரியே பண்றான்! இவன் கெட்டவன் தான் எனக்குத் தெரியும்! ஆனா இவ்வளவு கெட்டவன்னு தெரியாமப் போச்சே!” என்று தான் பார்த்திருந்தாள். இத்தனையும் மனதிற்குள் மட்டுமே!  

அதற்குள் யாரோ நடுத்தர வயது  பெண்மணி ஆலம் எடுத்து வர..

“யார்?” என்பது போல அவள் பார்க்கவும், “வீட்ல சமைக்க அம்மா ஏற்பாடு பண்ணியிருக்காங்க.. அவங்க தான் எடுக்க சொன்னாங்க” எனவும்..

பதில் பேசாமல் நின்றாள்.. ஈஸ்வர் தள்ளி நிற்க.. “நீங்களும் நில்லுங்க சார்” என,

ஈஸ்வர் பதில் பேசுமுன்னே.. “நில்லுங்க சார்” என்றான் தாஸும்..

பின் ஈஸ்வரும் நிற்க.. சுற்றிய அந்த பெண்மணி பின்பு அதனை வெளியே ஊற்றப் போக..

“அத்தை எல்லாம் சொல்ல மட்டும் ஏன் செஞ்சாங்க? ஏன் அவங்க வரலை?” எனக் கேட்டாள்.

“நான் தான் வேண்டாம் சொல்லிட்டேன்.. உன் மூட் எப்படி இருக்கோ? அதையும் விட அவங்க மூட் எப்படி இருக்கோ? டைவர்ஸ் பத்தி கேட்டதுல இருந்து இடிஞ்சு போயிருக்காங்க!”

சிறு அதிர்வு அவளுள் “எப்படி அதுக்குள்ள தெரியும்”

“உனக்கும் எனக்கும் நடுவுல ஒருத்தனை நாம சில நேரம் உள்ள நுழைக்கிறோமே! அவன்!” என..

வர்ஷினியின் முகம் கோபத்தைத் தத்தெடுத்தது.. அலைபேசியை உடனே அவள் எடுக்க..

“விடு வர்ஷ், நான் ஏற்கனவே அவனை நல்லா திட்டிட்டேன்”

“அஸ்வின் என்கிட்டே எல்லார்கிட்டயும் சொன்னதையும் சொல்லலை, நீங்க திட்டினதையும் சொல்லலை. இப்போ நான் எல்லோரையும் எப்படிப் பார்ப்பேன். ஆளாளுக்கு அட்வைஸ் செஞ்சு உயிரை எடுப்பாங்க”

“என்னைக்கின்னாலும் தெரிய வேண்டியது தானே?”

“எஸ், தெரிய வேண்டியது தான். ஆனாலும் அதை நான் தானே சொல்லணும். இவனை யாரு என்னைப் பத்தி சொல்ல சொன்னா?” என்று கோபம் குறையாமல் கேட்க..

“விடு, உன் மேல உள்ள அக்கறையில் தான் சொன்னான்” என, அப்போதும் விடாமல் அவனை அழைக்க முற்பட,

“வர்ஷ்” என அதட்டலிட்டவன், “கேட்காதேன்னு சொன்னா, கேட்கக்கூடாது.  அவன் வேற எந்த விஷயமும் வாயைத் திறந்து ஒரு வார்த்தைக் கூட யார் கிட்டயும் சொல்லலை.. அதை மனசுல வை” என ஸ்ட்ரிக்டாக பேச..

அதன் பிறகு தான் மொபைலை இறக்கினாள்.. ஆனாலும் முகத்தில் டென்ஷன் இருக்க..

“எனக்கு டென்ஷன் குடுக்கறது நீயா தான் இருக்கணும். உனக்கு டென்ஷன் குடுக்கறதும் நானா தான் இருக்கணும்.. எல்லாம் நான் பார்த்துக்குவேன். வேற எதுக்கும் டென்ஷன் ஆகாதே!” என்றான்.

அதற்குள் அந்த அம்மாள் வந்துவிட்டவர், “உள்ள போங்க சார்” என,

உள்ளே நுழைந்தவளின் முகம் தெளியவே இல்லை.. “முதல்ல உட்காரு” என்றவன்..

“மா, காஃபி கொண்டு வாங்க!” என்றவன்.. அங்கிருந்த சோஃபாவில் அவளை அமர்த்தி, “எத்தனை நாள் எல்லோரையும் அவாய்ட் பண்ணுவ.. என்னைக்கு இருந்தாலும் பார்த்து தான் ஆகணும்.. டைவர்ஸ் விஷயம் சொல்லித் தான் ஆகணும்.. எதுக்கு இப்படி எல்லோரையும் எதிர்கொள்ள தயங்கற நீ!” என்றான்.

அது அவளை உசுப்பி விட “எனக்கு என்ன தயக்கம்?” என்றாள்.

“அப்போ விடு, எதுன்னாலும் பார்த்துக்கலாம்!” என்றான்..

பிறகு சில நிமிட அமைதி.. அதற்குள் அந்த அம்மாள் காஃபியுடன் வர.. அதனை எடுத்துக் கொள்ளவும் “என்ன சமைக்க?” என்றார்..

“என்ன சமைக்கச் சொல்ல?” என்பது போல ஈஸ்வர் வர்ஷினியைப் பார்க்க.. எதுவும் சொல்லும் மனநிலையில் அவள் இல்லாததால் “நீயே சொல்” என்பது போல கையைக் காட்டவும்.

“ஏதோ ஒன்னு நீங்களே செய்ங்க” என்று சொல்லி விட.. அவர் போகவும்..

ஈஸ்வரை பார்த்துக் கடுமையாக முறைத்து இருந்தாள் வர்ஷினி. “என்ன இப்போ? நீதான் என்ன சமைக்கன்னு ஒன்னும் சொல்லலியே!” என்றான்,

“நான் ஒன்னும் சொல்லலைன்னா, நீங்க சொல்லணும். அதை விட்டு ஏதோ ஒன்னு செய்ங்க சொன்னா. அவங்களுக்குப் பிடிச்சதையோ, இல்லை ஈஸியா இருக்கறதையோ சமைப்பாங்க.. அவங்களுக்கு பிடிச்சதை நான் சாப்பிடணுமா?” எனப் பேசி முறைக்க..  

இப்படி ஒரு கோணம் இந்த விஷயத்தில்  இருப்பதை எப்பொழுதும் யோசித்திராதவன் ஈஸ்வர்..

அவள் பேசின விஷயத்தில், பேசின பாவனையில், சிரிப்பு வந்து விட.. சத்தமாக சிரித்து விட்டான்..

அவன் சிரிப்பதை தாஸும் பார்க்க, அந்த சமைக்கும் அம்மாவும் பார்த்தார். ஈஸ்வர் இப்படி சிரித்து பார்ப்பது நன்றாய் இருந்த காலத்திலே அரிது.. அதுவும் சமீப வருடங்களாக இல்லவே இல்லை. 

மனம் விட்டு சிரித்து “சான்சே இல்லை.. இப்படி நான் யோசிச்சதே இல்லை” என்றான்.

“அப்போ இவ்வளவு நாளா அவங்களுக்குப் பிடிச்சதை தான் நீங்க சாப்பிட்டீங்களா” எனக் கேட்டு முகத்தை கோணலாக்க,

“ஹ, ஹ” என இன்னும் வாய் விட்டு சிரித்தவன்.. “நேத்து தான் சமைக்கறவங்க இந்த வீட்டுக்கே வந்தாங்க.. இன்னைக்கு தான் சமைக்கவே இருக்காங்க.. இனிமே உனக்கு என்ன பிடிக்குமோ சொல்லு, அதை நான் சாப்பிடறேன்” என்றான்.  

“நீங்களும் சான்சே இல்லை, செம டைலாக், அப்படியே என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி வரிசையா சொல்லிட்டே இருக்கீங்க” என்று கிண்டலாக சொல்ல,

இன்னும் சிரித்தவன்..   “நீ இம்ப்ரெஸ் ஆகிடுவியா என்ன?” என்றான் கேள்வியாக.  

“தெரிஞ்சும் விடாம முயற்சி பண்றீங்க” என்றாள் உதட்டு முறுவலுடன்.. அது கண்களில் பிரதிபலிக்கின்றதா.. என லென்ஸ் இட்ட கண்களிலும் ஈஸ்வர் தேடினான் சிரிப்போடே..   

“என்ன நடக்கிறதோ?” என்று மனது கேட்காமல் அப்போதுதான் மலர்.. நமஷிவாயத்துடன் வீட்டிற்கு வர.. அவர்களுக்கு ஈஸ்வர் சிரித்துக் கொண்டிருந்த காட்சி தான் தென்பட்டது..

நமஷிவாயதிற்கு மனதில் இருந்த இறுக்கம் குறைய.. மலருக்கு மகனின் சிரிப்பில் கண்கள் கலங்கியது.. அப்போதும் ஈஸ்வரிடம் அதிகம் பார்வையை செலுத்தாமல், தன் மகனை சிரிக்க வைக்கும் வர்ஷினியைத் தான் நிறைவோடு பார்த்திருந்தார்.     

கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா!     

 

Advertisement