Advertisement

அத்தியாயம் அறுபத்தி ஒன்பது :

 

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. என்காதல் தேவதையின் கண்கள்.. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்.. கண்ணோரம் மின்னும் அவள் காதல்.. 

சிறிது நேரம் அதை வெறித்து இருந்தவன்.. பின்பு சற்றும் தயங்காமல் வர்ஷினிக்கு அழைத்தான்.. அவனுக்கு சற்றும் ஞாபகமில்லை அங்கே இரவு என்பது..

வெகு நேரத்திற்கு பின் எடுத்தவள், “ம்ம் சொல்லுங்க” என்றாள் தூக்க கலக்கத்தில்,

“எதுக்கு இப்போ அவசரமா இந்த நோட்டிஸ்” என,

“அவசரமா? யாரு சொன்னா?” என்று தெளிந்தவள்.. “நான் இங்கே யு எஸ் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன்”

“அப்படியே சொல்லிட்டே இருக்க வேண்டியது தானே, எதுக்கு அனுப்பின?”

“நீங்க எனக்கு டைவர்ஸ் குடுக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க”

“எஸ், ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்! அதுக்கு முன்ன உங்க அப்பாவுக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் உன்னை நான் பார்த்துக்கறேன், விடமாட்டேன்னு!”   

“இப்ப மட்டும் பார்த்துக்காமயா இருக்கீங்க, எல்லாம் நீங்க தான் பார்க்கறீங்க”  

ஆம் எல்லாம் பார்ப்பது ஈஸ்வர் மட்டுமே.. அவளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டதும் அவனே.. பின்னே யு எஸ் படிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்ததும் அவனே.. யு எஸ் ஸில் தங்கும் இடத்தில இருந்து பார்த்தது எல்லாம் அவனே.. முக்கியமாய் அஸ்வினை அவளின் வேலைகளை பார்க்க அனுமதித்ததும் அவனே!

அஸ்வின் அவளுடன் வந்த பிறகு அவளின் அண்ணன்கள் கோபத்தில் விலகிக் கொள்ள.. அஸ்வினை விலக்கு என சொல்ல.. வர்ஷினி விலக்கவில்லை.   

ஆனால் இந்த மூன்றரை வருடங்களாய் நேரில் பார்க்கவில்லை.. அவசியமான போது ஃபோனில் உரையாடுவான்..    

வர்ஷினி சகஜமாகப் பேசும் போது அவனால் தாளவே முடியாது உடைந்து போவான், அதனைக் கொண்டே தவிர்த்து விடுவான்.. அவளைப் பார்க்கும் ஆவல் ஜ்வாலையாய் அவனுள் தகிக்கும்.

சகஜமாக பேசுபவள் பார்க்க மட்டும் அனுமதிப்பது இல்லை..

“உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா? கல்யாணம் பண்ணப் போறாயா? சொல்லு! டைவர்ஸ் கொடுக்கறேன்” என,

அதுவரை தூக்க கலக்கத்தில் இலகுவாக பேசிக் கொண்டு இருந்தவள், பொங்கி விட்டாள்.. “என்ன? என்ன பேசறீங்க? கேம் ப்ளே பண்ணறீங்களா?” என,

“என்ன? என்ன கேம் ப்ளே பண்றேன்?” என,

“பின்ன உங்க மனைவியா இருக்கும் போது அடுத்தவங்களை கல்யாணம் பண்ண யோசிக்க முடியுமா? இல்லை அடுத்தவன் மனைவியை கல்யாணம் பண்ண நினைக்கறவனை நான் சூஸ் பண்ண முடியுமா?” என்றாள்.

ஈஸ்வர் அமைதியாகிவிட..

“உங்களை மாதிரி அடுத்தவன் மனைவியா நீ ஆனாலும் உன்னை நான் விட மாட்டேன் சொன்னிங்க இல்லையா, அந்த மாதிரி யாரும் எனக்கு வேண்டாம் புரிஞ்சதா!” என்றாள் அடிக்குரலில்.

ஈஸ்வர் இன்னுமே அமைதியாகிவிட்டான்.

“நான் வைக்கிறேன்” என வர்ஷினி சொல்ல.. 

“இப்போ நான் என்ன பண்ணனும்?” என்றான்.

“எனக்கு டைவர்ஸ் வேணும், அவ்வளவு தான்! அதுக்கு என்ன பண்ணனும்னு நீங்க முடிவு பண்ணிக்கங்க” என்று விட்டாள்.

“சரி வெச்சிடு!” என்றவன் வைத்து விட..

வைத்து விட்ட வர்ஷினியால் பின்பு உறங்க முடியவில்லை.. இதுவரை படிப்பு முன் நின்றது.. இன்னும் ஒரு மாதம் மட்டுமே விசா.. இந்தியா கிளம்ப வேண்டும்.. இனி என்ன செய்வது என எதிர்காலம் அச்சுறுத்தியது.

யோசிக்கும் போதே அஸ்வினிடம் இருந்து அலைபேசி… எடுத்தவளிடம்.. “விஸ்வா அந்த பேப்பர்ஸ் சைன் பண்ணிட்டேன் சொன்னார்.. வந்து வாங்கிட்டு போக சொன்னார்” என,

“இது நைட் டைம் இப்போ எதுக்கு என்னை கூப்பிடறீங்க.. திஸ் இஸ் நாட் குட்” என கோபமாகப் பேச,

“இப்போவே உங்க கிட்ட இதை சொல்லச் சொல்லி விஸ்வா தான் சொன்னார், நான் கூட நைட்ன்னு சொன்னேன்.. முழிச்சிட்டு தான் இருப்பா கூப்பிடுன்னு அவர் தான் சொன்னார்” என்றான் சுருதி இறங்கிய குரலில்.

“ஓகே, சொல்லிட்டேன் சொல்லிடுங்க! ஆனா இப்போ சொல்லாதீங்க… இந்த மாதிரி நைட் அவங்க தூங்கும் போது கூப்பிட்டு சொல்லுங்க” என,

“ப்ச், மேம்” என சலித்தவன்.. “அவர் தூங்குவார் நினைக்கறீங்களா? நீங்க இதை ரிகன்சிடர் பண்ணுங்க.. விஸ்வா மேல அவ்வளவு கோபத்துல வெறுப்புல இருந்தவன் நான். அதனால அவ்வளவு தப்பும் செஞ்சிருக்கேன்.. நானே சொல்றேன் டைவர்ஸ் வேண்டாம். இது அவருக்காக இல்லை.. உங்களுக்காக” என,

“ஆமாம்! நீங்க எப்போ இருந்து ஈஸ்வர் ஃபேன் க்ளப் ஆரம்பிச்சீங்க” என்றாள் அலட்சியமாக.

“அவர் உங்க ஹஸ்பன்ட் ஆனதுல இருந்து” என்றான் சின்சியராக.  

அது ஒருவகையில் அவளுக்கு எரிச்சலை கொடுக்க “தூங்கறவளை எழுப்பி என்ன கதை பேசறீங்க? வைங்க ஃபோனை அன்ட் ஒரு விஷயம் தெரிஞ்சிக்கங்க, உங்களை என்கிட்டே வேலை செய்ய விட்டுருக்கிறது உங்களுக்காகவோ எனக்காகவோ இல்லை, அவரை மீறி நீங்க எந்த விஷயமும் எப்பவும் வெளில சொல்லக் கூடாதுன்னு. அதனால இந்த நீங்க ஒருத்தர் மட்டுமே இருக்குற அந்த ஃபேன் க்ளப் கலைச்சிடுங்க!” என்று வைத்து விட்டாள்.

கேட்ட அஸ்வினிற்கு சிரிப்பு வந்தது, எப்படிப்பட்ட சூழல், எப்படி பேசுகிறாள். சென்ற வாரம் நெருங்கிய உறவில் நடந்த ஒரு திருமணதிற்கு அஸ்வினும் சென்றிருந்தான்.. அங்கே மாபிள்ளையை விட ஈஸ்வர் மேல் எல்லோருக்கும் இருந்த கவனமே அதிகம்.. ஆம்! நின்று விட்டான் தொழில் உலகில்! அது ஒரு தனி வி வி ஐ பி அந்தஸ்தை அவனுக்கு பெற்று தந்திருந்ததை கண்கூடாகப் பார்த்தான்.  

எப்போதும் போல யார் யார் அவனை கவனிக்கிறார்கள் என்று அஸ்வின் பார்க்க அதில் இளம் பெண்கள் அதிகம்!

ஈஸ்வரை அஸ்வினிற்கு எப்போதுமே பிடிக்காது தான்.. ஈஸ்வர் எப்போதுமே மதிக்க மாட்டான் என்பது பிடிக்காமல் போக, பின்பு பண விஷயம் வந்து, பின்பு அப்பாவின் கடத்தல் அஸ்வினை இன்னும் ஏறுக்கு மாறாக செய்ய வைக்க.. பின்பு ரஞ்சனியை மிரட்ட.. எல்லாம் சிக்கலாக்கி கொண்டான்.

அதையும் விட ரஞ்சனி கைவிட்டு போய்விட்டாள். ஐந்து வருடமாக மனதிற்குள் வளர்த்த காதல்.. தன் நிலை மறந்து அதிகப் பிரசங்கித்தனமாக நடந்ததால் எல்லாம் போனது.

ஆனால் இனி ரஞ்சனியை பற்றி நினைப்பது என்ன? யோசிப்பது கூடத் தவறு.. அடுத்தவன் மனைவி அல்லவா..  

ஆனால் இந்த வர்ஷினி ஏன் ஈஸ்வரை வேண்டாம் என்று சொல்கிறாள்.. அதுவும் இப்போதைய ஈஸ்வரின் செயல்கள் பிரமிப்பு தான்.. ஐஸ்வர்யாவை அவன் திருமணம் செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தான் தோன்றியது. ஆனால் பின்னால் சுற்றி விட்டு விட்டு விட்டானே.. இந்த ஐஸ்வர்யா மட்டும் தன்னிடம் சொல்லியிருந்தால் எதாவது செய்து திருமணத்தை நடத்தியிருக்கலாம் என்று தான் தோன்றியது..

ஆம்! இந்த மூன்று வருடங்களில் ஈஸ்வரின் உயரம் மிக அதிகமாகிவிட்டது தான் உண்மை.. அதுவுமன்றி இந்த ஐஸ்வர்யா வேறு எதையாவது சொல்லி திருமணத்தை தட்டிக் கொண்டே இருக்கிறாள்.. வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் ஈஸ்வரோடு ஒப்பிட்டால் என்ன செய்வது.. இப்படித் தான் அஸ்வினின் எண்ணமாக இருந்தது.

இருவருமே காதல் சொல்லிக் கொண்டார்கள் என்று தெரியாதே!                 

ஈஸ்வரை முன்பே தெரியும், இப்போது வர்ஷினியையும் தெரியும்.. இருவருமே புத்திசாலிகள்.. பிடிவாதக்காரார்கள்.. அவர்களுக்கு யாருமே எதுவுமே சொல்ல முடியாது.

ஈஸ்வர் கையெழுத்து இட்டுவிட்டேன் வர்ஷினியிடம் சொலிவிடு என்று சொன்னதுமே.. “அச்சோ” என்றானது மனது வர்ஷினிக்காக..

“ஏன்? ஏன் இப்படி செய்கிறாள்? அவளுக்காக மட்டுமே இப்போது ஈஸ்வர் தான் முன் செய்த அத்தனையையும் ஒதுக்கி தன்னை மதிக்கின்றான். உறவினனாய் இருந்த போது மருந்துக்கும் மதிக்காதவன்..

தன்  அக்கா தங்கைக்காக கூட இவ்வளவு அஸ்வின் யோசித்தது கிடையாது..

ஈஸ்வரும் அஸ்வினும் சொல்லப் போனால் எதிரிகள்! ஆனால் ஈஸ்வர் வர்ஷினிக்காக அதை ஒதுக்கி விட்டான்.. அவர்களின் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்த அஸ்வினின் தவறை ஒதுக்கி விட்டான்.. இன்னும் கூட சில சமயம் அஸ்வினால் நம்ப முடியவில்லை.. அதுமட்டுமே வர்ஷினி மேல் ஈஸ்வருக்கு உள்ள காதலை பறைசாற்றியது. 

அவர்கள் இருவருமே யாரிடமும் இந்த விவாகரத்தைப் பற்றி சொல்லியிருப்பார்களா என யோசிக்க.. மாட்டார்கள் என தோன்ற..

ரூபாவை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டான்!  அது நொடிகளில் தீயாக பரவ ஆரம்பித்தது.

திரும்ப ஈஸ்வரை பார்க்கச் சென்றவன்.. அலுவலகம் உள்ளே செல்லாமல் வெளியில் நின்று “நான் வெளியே நிற்கிறேன் கொடுத்து விடுங்கள்” என,

இரண்டு நிமிடத்தில் ஒரு ஆள் வந்து “சார், உங்களை உள்ளே வர சொல்றார்” என,

“உள்ளேயா? என்னையா? நல்லாத் தெரியுமா?” என்று குழம்பினான்.

ஆம்! இதுவரை உள்ளே அழைத்ததில்லை..

“உங்களைத் தான் நல்லாத் தெரியும்”  

உள்ளே சென்றவனுக்குள் ஒரு சிறு பதட்டம், இந்த அலுவலகத்தின் மேல் ஆட்களை வைத்து கலாட்டா செய்தானே, கல் எல்லாம் வைத்து கண்ணாடியை உடைத்தானே.. இப்போது தான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டு விட்டானே! அதனால் இனி வர்ஷினியிடம் வேலை செய்வதையும் விடுத்து என்னை அடிக்க கூப்பிடுகிறானோ என்று ஒரு பதட்டம்..

“எத்தனையோ பார்த்துட்ட, இதையும் பார்த்துடு!” என்று சமாதானம் செய்து உள்ளே செல்ல..

அங்கே அவனைப் பார்த்த ஈஸ்வரின் முகத்தில் அவ்வளவு கோபம்.. “போச்சு, என்னவோ இவன் என்னை செய்யப் போகிறான்” என நினைத்து நிற்க..

“உள்ள வாடா” என்றான்.

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் செல்ல.. “கதவை லாக் பண்ணிட்டு வா” என அஸ்வினிற்கு வேர்க்கவே ஆரம்பித்தது.

“எதுக்கு” என,

“சொன்னதை செய்” என கர்ஜிக்க..

சொன்னபடி செய்து உள்ளே சென்றான் பயத்தை சிறிதும் காட்டிக் கொள்ளாமல்..

“அவ டைவர்ஸ் நோட்டிஸ் இப்போ தான் வருது, நான் சைன் பண்றேன். அதுக்குள்ள எப்படி மொத்த குடும்பத்துக்கும் தெரிஞ்சது, நீ தான் சொல்லியிருப்ப!” என எழுந்து கொண்டே கேட்க..

“இதுதானா!” என்று ஆசுவாசப் பட்டவன் “நான் தான் சொன்னேன்” என்று ஒத்துக் கொண்டு, “ஆனா ரூபா கிட்ட மட்டும் தான் சொன்னேன்” என,

“அவ கிட்ட சொன்னா போதாதா.. இப்படி தான் நீ வேலை செய்யறவங்களோட பெர்சனல் எல்லாம் வெளில சொல்லுவியா?” என் கேட்டபடி நெருங்க..

“பெர்சனல் எல்லாம் பேசலை” என்று அவசரமாகச் சொன்னவன்.. “இப்போ கூட நீங்க சைன் பண்ணியிருக்கலைன்னா இதை கூட சொல்லியிருக்க மாட்டேன்! அவ சின்ன பொண்ணு, அவ கேட்டா குடுக்க மாட்டேன் சொல்ல வேண்டியது தானே! உங்களை யாரு சைன் பண்ண சொன்னா?” என்று சண்டையிடுபவன் போல பேச..

“லூசாடா நீ?” என்பது போல ஒரு பார்வை ஈஸ்வர் பார்க்க..

“இவன் ஏன்டா நம்மை இப்படிப் பார்க்கிறான்?” என யோசித்த போதும் அஸ்வின் அமைதியாக நிற்க..

“இப்போதைக்கு அவ கொஞ்சம் நல்லா பேசற ஆள் நீதான். இந்த விஷயத்துல தலையிட்டு அதை நீ ஸ்பாயில் பண்ணிக்காதே.. அதோட நல்லதோ கெட்டதோ வர்ஷினி விஷயம் எதுவுமே உன் வழியா வெளில வரக் கூடாது.. அவளுக்கு நல்லது செய்யறேன்னு சொல்லி அதிகப் பிரசிங்கிதனம் பண்ணாதே” என்றான் கூரிய பார்வையோடு.  

ஈஸ்வரின் பார்வையும் பேச்சும் உள்ளுக்குள் குளிரெடுக்க வைத்தாலும், அசராமல் அவனை எதிர்கொண்ட அஸ்வின்.. “மேம் என்கிட்டே இதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லலை, சொல்லியிருந்தா சொல்லியிருக்க மாட்டேன்” என.

“அவ வேற, நான் வேற கிடையாது. நாங்க சேர்ந்து இருக்கோம் இருக்கலை.. டைவர்ஸ் பண்ணிக்கறோம் பண்ணிக்கலை.. எது நடந்தாலும் அவ வேற நான் வேற கிடையாது.. அதனால இப்போ நான் சொல்றேன், எதுவும் சொல்லக் கூடாதுன்னா சொல்லக் கூடாது!” என,

“ம்ம்” என்று தலையாட்டுவதை தவிர அஸ்வினிற்கு வேறு வாய்ப்பு அல்ல..

“நான் கிளம்பவா” என.. “இதை வாங்கிட்டு போ” என அந்த டைவர்ஸ் பேப்பர்ஸ் நீட்ட.. அவன் கையினில் வாங்க வரும் போது.. “இந்த டைவர்ஸ் நான் கொடுக்கணும்னா ஒரு கண்டிஷன் இருக்கு, அதுக்கு ஒப்புகிட்டா தான் கொடுப்பேன்! உங்க மேடம் கிட்ட சொல்லிடு!” என,

“என்ன கண்டிஷன்?” என உடனே அஸ்வின் கேட்கவும்..

ஈஸ்வர் ஒரு பார்வை பார்க்க.. “சொல்லமாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே, எதுக்கு லுக்கு?” என முணுமுணுத்தவாறே அஸ்வின் வாங்கிக் கொண்டு வெளியேற.. அவன் வெளியே வரவும், பத்து வேகமாக உள்ளே வரவும் சரியாக இருக்க..

“இவன் எங்கே இங்கே?” என்று அஸ்வினை முறைத்துப் பார்க்க.. அஸ்வின் கவனித்தும் கவனியாதவன் போல வெளியேறி விட்டான்.

ஈஸ்வரின் அறைக்குள் வேகமாக பத்மநாபன் நுழைய.. “அதுக்குள்ள எப்படிடா உடனே வந்தான், என்ன இன்னைக்கேவா டைவர்ஸ் கிடைக்கப் போகுது” என தோன்ற,

“எதுக்கு இவ்வளவு வேகமா வந்தீங்க பத்து.. இட்ஸ் நாட் ஃசேப்”

“அவனை இங்க ஆஃபிஸ் வரைக்கும் விட ஆரம்பிச்சிட்டீங்க” என்றவன், அதனைப் பற்றி மேலே பேசாமல்  “வர்ஷி, டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்காலாமே, நிஜமா?” என,

“ஆம்” என்பது போலத் தலையசைக்க..

“நீங்க சைன் பண்ணிட்டீங்கலாமே” என,

அதற்கும் “ஆம்” என்பது போலத் தலையாட்டவும்.. பத்து இயலாமையில் முறைத்து நின்றான்.   

அங்கே வர்ஷினி.. எதிரில் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்திடம் அவளே பேசிக் கொண்டிருந்தாள்..

“விடமாட்டேன் அது இதுன்னு பேசினான்.. இன்னைக்கு தான் அனுப்பினேன்… இன்னைக்கே கையெழுத்து போட்டுடான்..” ஒரு கசந்த முறுவல் முகத்தில் தோன்ற.. கண்களும் தானாக கலங்கியது..

“ம்ம், இனிமே நீ ஈஸ்வரோட எக்ஸ் ஃவைப்.. அவன் சொல்றான் நீ யாரையாவது கல்யாணம் பண்ண போறயா டைவர்ஸ் தர்றேன்னு”

“யார் என்னை கல்யாணம் பண்ணுவா.. ஏற்கனவே அம்மாவைப் பத்தி சொல்ல முடியாது.. அப்பா பெரிய ஹிஸ்டரி வெச்சிருக்கார்”

“அப்போ நீ வேற கல்யாணம் பண்ணுவியா” என அவளின் பிம்பம் அவளிடம் கேள்வி கேட்க..  

“நான் இன்னும் அதை பத்தி யோசிக்கவே இல்லை அவன் தான் சொல்றான்..” என

“இனிமே நான் ஒரு டைவர்சி” என தோன்றத் தோன்ற கண்களில் நீர் பொழிய ஆரம்பித்தது..

எதிரில் இருந்த அவளின் பிம்பம்.. “வர்ஷி எதுக்கு அழற..  நீதானே டைவர்ஸ் கேட்ட, இப்போ வேண்டாம் சொன்னாக் கூட அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்” என,

“ஆனா எனக்கு வேண்டாம் அவன், முதல்லயே வேற லவ் பண்ணினான்..” என்று நினைக்கும் போது தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“அழாதே அழாதே வர்ஷ்.. உன்னோட ஒரு எஸ், எல்லாம் சால்வ் பண்ணிடும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிடு, அவன் தப்பை மறந்துடு.. அவனுக்காக வேண்டாம் உனக்காக” என

“ஏன்? ஏன் மறக்கணும்? என்னோட எல்லாம் நான் சொன்னேன், அவன் என்னை எப்படி பார்ப்பான்னு கூடத் தெரியாது, தைரியமா என்னோட அம்மாவோட ரகசியத்தைக் கூட சொன்னேன், ஆனா அவன் சொல்லவேயில்லை.. எத்தனை தடவை லூசு மாதிரி உனக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும்னு சண்டை போட்டப்போ கூட கர்வமா சொல்லியிருக்கேன், ஆனா அவன்.. ஹீ சீடட் மீ…”

கிட்டட தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன் தெரிந்த விஷயம், ஆனால் முதல் முறை தெரிந்த போது எவ்வளவு வலித்ததோ அதே வலியை கொஞ்சமும் குறையாமல் உணர்ந்தாள்..

அதை ஞாபகத்தில் வராமல் வைத்திருக்க அவளால் முடிந்த அளவிற்கு மன்னிக்க முடியவில்லை..

விஷயத்தையும்.. ஈஸ்வரையும்…

எப்போது அது நினைவில் வந்தாலும், இயல்பு தொலைந்து, வாழ்க்கையில் ஒரு பிடிப்பற்ற நிலை உருவாகி, அவளும் தொலைந்து போக வேண்டும் என்ற உணர்வு அதிகமாக தாக்கியது.. 

ஞாபகம் வரும் போதெல்லாம் விட்டுவிடு விட்டுவிடு, இது ஒரு விஷயம் அல்ல என்று எத்தனையோ முறை சொல்லி ஆகிற்று.. ஆனால் முடிவதே இல்லை.. கடலின் நிறத்தைக் கொண்டு கண்கள் இருந்ததினால் கண்ணீர் பொழிவது நிற்க வில்லையோ..  

அந்த உணர்வில் இருந்து வெளியே வர அப்படியே தரையில் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை சொல்ல ஆரம்பித்தாள்.. ஆம் எப்போதோ ஈஸ்வர் கேட்க சொன்னது.. கேட்டு கேட்டு.. இப்போது வாய் மொழியாக சொல்ல ஆரம்பித்தாள்.

காக்க காக்க கனகவேல் காக்க.. நோக்க நோக்க நொடியில் நோக்க… தாக்க தாக்க தடையறத் தாக்க… பார்க்க பார்க்க பாவம் பொடிபட..   

 

Advertisement