Advertisement

அத்தியாயம் அறுபத்து எட்டு :

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது!

அடுத்த நாள் காலை வரை வர்ஷினியின் உறக்கம் தொடர.. ஈஸ்வர் முதல் நாள் இரவே சற்று தேறிக் கொண்டு தெளிவாகி விட்டான். உணவே அதன் பிறகு தான் அவனுக்கு இறங்கியது. அவளையும் சிரமப்பட்டு எழுப்பி சிறிது உணவை உள்ளே தள்ள வைத்து தான் தூங்க விட்டான். அப்போதும் உன்னை விடேன் என்பது போல கைவளைவிலேயே அவளை வைத்திருந்தான் இரவு முழுவதுமே.. உறங்கியும் உறங்காமலும் அந்த இரவு நீண்டது. 

ஒரு மாதிரி மயக்கத்தில் இருந்தாலும் அது வர்ஷினிக்கு புரிந்தது. விலக நினைத்தாலும் முடியவில்லை.. காலையில் எழுந்த போது இருவருமே தெளிவாக இருக்க.. வர்ஷினியின் கன்னம் இன்னும் சற்று வீக்கத்தை காட்டியது, அவனின் கை தடங்களும் முன் தினம் போல அச்சாக தெரியவில்லா விட்டாலும், தெரிவிக்க தான் செய்தது.

“சாரி” என்றான்.. வர்ஷினி பதில் எதுவும் பேசவில்லை.. அப்போது மட்டுமல்ல அதன் பிறகு வந்த நாட்களிலும்… ஒரு ஆழ்ந்த மௌனம்.. ஈஸ்வருக்கு அவளிடம் பேசவே பயமாக இருந்தது.. தான் பேசப் போய் அந்த கோபத்தில் தினமும் என சொன்னது போல அந்த மாத்திரையை அவள் எடுக்க ஆரம்பித்து விட்டாள்.   

இந்த நினைவாலேயே ஈஸ்வருக்கு எந்த வேலையும் ஓடவில்லை, எதுவும் செய்ய முடியவில்லை.. இரவு பகல் வர்ஷினியின் எண்ணம் மட்டுமே மனதினில்..

ஃபைனான்ஸ் வேலைகள் எல்லாம் அப்படியே நின்றன.. பத்து லட்சம் என்று எழுத வேண்டிய செக்கை ஒரு கோடி என எழுதி கொடுத்து விட..

பேங்க் மேனேஜர் அழைத்து “என்ன மிஸ்டர் விஸ்வேஸ்வரன், இதை நான் பாஸ் பண்ணவா, அமௌன்ட் ரொம்ப அதிகமா இருக்கு” என்றதும் தான் ஓடியவன், “சாரி, தப்பா எழுதிட்டேன்” என மன்னிப்பு கேட்டு, அவரிடம் இருந்து அதை திரும்ப வாங்கி பின்பு சரியாக எழுதிக் கொடுத்தான்.

பின் அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டான்.       

ஒரு மூன்று நாட்கள் பொறுத்தவன், “வர்ஷ், இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கிறதா உத்தேசம்?” என,

“எப்படி” என்பது போல ஒரு பார்வை பார்த்தாளே தவிர வாய் வார்த்தையாகப் பேசவில்லை.

அவளின் நீல நிறக் கண்களையே பார்த்தபடி “இப்படி பேசாம” என,

கேள்வியாக பார்த்த அவளின் பார்வையில் ஒரு தீவிரம் தோன்றியது.. “எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை, என்ன பண்ணலாம்?” என்றாள் குரலிலும் தீவிரத்தை தாங்கி.  

“வர்ஷ், கணவன் மனைவின்னா சண்டை வர்றது சகஜம்!” என்றான் பொறுமையாக.

“எத்தனை முறை இதை சொல்வீங்க, ரொம்ப இர்ரிடேட் ஆகறேன். எனக்கு இந்த கான்செப்ட் ஒத்து வராது, என்ன பண்ணலாம்?” என்றாள்.. குரலில் ஒரு மூன்றாம் மனிதரிடம் பேசும் பாவனையே.

ஈஸ்வருக்கு பேசவும் பயமாக இருந்தது, திரும்பவும் மாத்திரை அது இது என்று கிளம்பிவிட்டாள், “வர்ஷ்” என்றான் இயலாமையில்.. ஆம், சொல்லிவிட்டாலும், அன்றைக்கு பிறகு அவள் அதை தொட்ட மாதிரி தெரியவில்லை. திரும்பவும் தன்னால் ஆரம்பித்து விடக் கூடாது என்ற நினைவு அவனை எதையும் பேச விடாமல் தடுத்தது.

“நானே பேசணும்னு தான் இருந்தேன்.. நான் கொஞ்சம் நாள் ஹாஸ்டல் போகலாம்ன்னு இருக்கேன்” என,

“என்ன?” என்று அவளின் பதிலில் அதிர்ந்தவன்.. “என்ன உளர்ற?” என்றான் கோபமாக.

“எஸ், எனக்கு இங்க எதுவும் செட் ஆகலை.. நான் போறேன்” என,

“அதெல்லாம் விட முடியாது” என்றான் கறாராக.

“நான் உங்க கிட்ட பெர்மிஷன் கேட்கலை, இன்ஃபர்மேஷன் தான் சொல்றேன்”  

ஈஸ்வரின் பொறுமை பறக்க ஆரம்பிதது. “வர்ஷ், என்ன பேச்சு இது?” என அதட்டினான்.

சட்டென்று ஒரு ஆவேசம் மூல, “எனக்கு உன்னைப் பார்க்க பிடிக்கலை. ஐ ஹேட் யூ. கொஞ்சம் நாள்ல எனக்கு பைத்தியம் பிடிக்கும்னு நினைக்கிறேன். நாம சேர்ந்து இருக்கிறது இப்போ முக்கியமில்லை. ஃலைப்ஃப இனியும் எனக்கு காம்ப்ளிகேட் பண்ணிக்க விருப்பமில்லை. என்னை விட்டுடுங்க. நிறைய முயற்சி பண்ணிட்டேன் என்னோட இயல்பையும் மீறி, என்னால இனி முடியும்ன்னு தோணலை” என்றாள்.

ஆவேசமாக பேசினாலும் தெளிவாகப் பேசினாள். இதைப் பற்றிய சிந்தனைகள் நிறைய செய்திருப்பாள் என்று பேச்சிலேயே புரிந்தது.   

“உனக்கு என் மேல கோபம். ஓகே ஃபைன், நானும் சில பல தப்புகள் பண்ணிட்டேன். என்னை பார்க்கப் பிடிக்கலைன்னா உங்க அம்மா வீட்டுக்குப் போ.. ஒரு டூ த்ரீ டேஸ் இரு, மைன்ட் ரெஃப்ரஷ் பண்ணிக்கோ.. திரும்ப நான் வந்து கூட்டிட்டு வரேன்” என்றான் சமாதானமாக.

“எனக்கு எங்கேயும் போக வேண்டாம். யாரையும் பார்க்கப் பிடிக்கலை, ஹாஸ்டல் தான் போகணும்” என்றாள் பிடிவாதமாக.

“பிடிவாதம் பிடிக்காதே வர்ஷ்.. அம்மா வீட்டுக்கு போனாக் கூட ஓகே, ஆனா ஹாஸ்டல் எல்லாம் போனா தப்பா பேசுவாங்க”  

“இப்படி யாரும் எப்பவும் என்னைப் பத்தி பேசக் கூடாதுன்னு நினைச்சு தான் இங்கே வந்து நின்னிருக்கேன். இனி எனக்கு யாரை பத்தியும் கவலை இல்லை, எனக்கு என் நிம்மதி தான் முக்கியம். எனக்கு இப்போ இங்கே இருந்து விடுதலை வேணும்!” என்றாள் கறார் குரலில்.

“முடியாது! குடுக்க முடியாது! நீ ஹாஸ்டல் போக விடமாட்டேன்” என்று ஈஸ்வரும் தீர்க்கமாகச் சொல்ல..

ஒரு ஆக்ரோஷ பார்வை அவனைப் பார்த்தவள் வேறு பேசவில்லை, திரும்ப நடக்கப் போக.. “வர்ஷ்” என்று அவளின் கை பிடிக்க முயன்றான்.

“தொடாதே” என்று சீறியவள்.. அவனை முறைத்து நின்றாள். “வர்ஷி பேபி, கோபப்படாதே புரிஞ்சிக்கோ!” என,

“நீ முதல்ல என்னை புரிஞ்சிக்கோ, நான் இனி யாரையும் புரிஞ்சிக்கறதா இல்லை” என ஆவேசமாகக் கத்தியவள், ரூமில் சென்று புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள், உணவு உண்ணவும் வரவில்லை..

அழைத்து அழைத்துப் பார்க்க.. “வேண்டாம், போ, போ” என அவள் கத்த, வெளியில் கேட்டால் என்ன செய்வது என்று தடுமாறி அப்போதைக்கு அதை விட்டவன்.. அவனும் உண்ணப் பிடிக்காமல் ஹாலில் அமர்ந்து கொண்டான்..

அமர்ந்து இருந்தவன் தன்னை அறியாமல் கண் அசந்து விட.. சிறிது நேரம் கழித்து விழித்த போது.. வீட்டின் முன் கதவு திறந்திருக்க.. “நான் தானே கதவை தாளிட்டேன், எப்படித் திறந்தது” என்று பதட்டமாக ஈஸ்வர் எழ.. வர்ஷினியையும் காணவில்லை, லம்பாகினியையும் காணவில்லை..

தெரிந்த நொடி கை கால் எல்லாம் ஓய்ந்து விட்டது.. நிற்கவே முடியவில்லை.. மனது பட பட வென்று அடித்துக் கொள்ள.. எங்கே என்று தேடுவான்.. யாரிடம் சொல்வான்.. கண்களில் நீர் வந்தது.. சர்வமும் ஒடுங்கி நின்றான்..    

———————————————————————————–

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ…!

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..!
சொல் பொன்மானே…!

அந்த ஏகாந்தத்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.. நீல வானை வெறித்துப் படுத்திருந்தான் விஸ்வேஸ்வரன்.. இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் ஒரு மூன்று நான்கு வருடங்களுக்கு முன் ஈஸ்வர் கேட்டிருப்பானா என்றால் இல்லை.. இல்லவே இல்லை!

ஆனால் இப்போது பாடல்கள் அவனின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிப் போயின.. இளையராஜாவின் இசை அவனின் மனதிற்கு அருமருந்து ஆனது உண்மை..

வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்.. ஒரு பெண்ணின் மேல் கொண்டது காதலா காமமா எனத் தெரியாமல், காமத்தை கடந்து காதல் என உணர்ந்த நேரம், அதை புரிய வைக்க முடியவில்லை.. புரிகிறது என சொல்லி ,ஆனாலும் நீ தேவையில்லை என சொல்லி ஒருத்தி பிடிவாதம் பிடிக்க..

அந்த பிடிவாதத்தின் அளவு அவளையே அழிப்பதாய் இருக்க.. “சொல் என்ன வேண்டும்?” என்றவனிடம், “உன்னிடம் இருந்து விடுதலை” என, “கொடுத்தேன் போ” என வந்தே விட்டான். ஆயிட்று மூன்றரை வருடங்கள் ஆகிற்று..

இன்னம் அதன் தாக்கம் இருந்தது. அவள்  வீட்டை விட்டு சென்ற தினமும், அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும் அவனை முற்றிலுமாய் ஒடுக்கி இருக்க.. அவளின் நலன் மட்டுமே முக்கியமாய் தெரிய.. “நீ நல்லா இருக்கணும், அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்” என்று அவனே சொல்லிவிட்டான்.  

ஒவ்வொரு நொடியும் அவளைக் காண கண்கள் ஏங்கியது.. அவள் சொல்லாமல் கொள்ளாமல் சென்ற தினத்தில் ஆரம்பித்த இந்த தவிப்பு கொஞ்சமும் குறையவில்லை.. எப்போதும் பதட்டத்திலேயே இருந்தான்.. ஒரு அலைபேசி எடுத்து பேசக் கூட முடியவில்லை.. என்ன செய்தியோ என்ற பயம்.. அந்த பயத்தையும் விட பெரிய விஷயம் அந்த பயத்தை யாருக்கும் தெரிய விடாமல் பார்த்துக் கொள்வது….

நீல வானும், நீல கடலும், சிறிது மனதிற்கு அமைதியைக் கொடுப்பதால் எப்பொழுது எல்லாம் முடிகிறதோ அப்பொழுது எல்லாம் இங்கு வருவதை வாடிக்கையாய் வைத்திருந்தான்..

ஆம்! கடலின் நடுவில் ஒரு விசைப் படகில் அந்த படகின் விசையை அணைத்து, தண்ணீரில் அது மிதக்க.. அதில் அவனும் மிதந்து கொண்டிருந்தான்..

அந்த இரவில் சரியாக புலப்படாத வானின் நீலத்தை தேடிக் கொண்டிருந்தன அவனின் விழிகள்.. வானின் நீலத்தையா இல்லை அவளின் விழிகளின் நீலத்தையா அவன் மனம் மட்டுமே அறியும்..

அவள் நன்றாக இருந்தால் போதும் என்று விட்டு விட்டவனால்,  நன்றாக இருக்கிறாளா இல்லையா என்ற தவிப்பை கடந்து வர முடியவில்லை..  

இங்கே இரவாய் இருக்க.. அங்கே பகலாகிப் போன ஒரு ஊரில் கம்ப்யுடர் முன் அமர்ந்து தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் வர்ஷினி..

அவள் இருந்த இடம் ஹாலிவுட்.. எனப் படும் மாய உலகம்.. அங்கே இருந்த ஒரு ஸ்டுடியோவில் ஒரு அனிமேஷன் திரைப் படத்திற்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் சேர்த்துக் கொண்டிருந்தாள்.

ஆம்! ஈஸ்வருடன் இருந்த போது அவளுடைய படிப்பு மாஸ் மீடியாவில் ஒன்றரை வருடமாய் இருக்க.. அதனை அதன் பின் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி முடித்தாள்.. பின்பு அதன் மேலும் படிக்க அமெரிக்கா வந்து இரண்டு வருட படிப்பை முடித்து.. அதில் மிக சிறப்பாக செய்ததினால்..

ஹாலிவுட்டில் இருக்கும் சிறந்த அனிமேட்டர் ஒருவர் ஒரு சிறு வேலையைக் கொடுத்திருக்க அதை தான் அப்போது செய்து கொண்டிருந்தாள்.  அதனை தவிர வேறு எதிலும் கவனம் இல்லை சிந்தனையும் இல்லை.. இப்போது மட்டுமல்ல.. ஈஸ்வரை பிரிந்து ஹாஸ்டல் வந்த சில நாட்களிலிலேயே எல்லாவற்றிலும் இருந்து மனம் தேறிக் கொண்டாள்..

சொல்லப் போனால் வீடு வந்த உணர்வு.. ஹாஸ்டலிலேயே வளர்ந்து விட்டவளுக்கு திரும்பவும் ஹாஸ்டல் சூழல் பழகிப் போனது..

யாரையும் அவளிடம் பேச அனுமதிக்கவில்லை.. பார்வையே அன்னியமாய் போக யாராலும் அவளை நெருங்க முடியவில்லை.. அவளின் வீட்டினரும் சரி, ஈஸ்வரின் வீட்டினரும் சரி.. ஏதாவது அடாவடித்தனம் செய்து வீட்டிற்கு அழைத்து வரலாம் இல்லை கட்டாயப் படுத்தலாம், என்றால் அதற்கு ஈஸ்வர் அனுமதிக்க வில்லை..

ஆம்! அவளை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்த தொந்தரவு கொடுக்க ஈஸ்வர் அனுமதிக்க வில்லை..    விஷ்வேஷ்வரனுக்கு சங்கீத வர்ஷினியின் நலன் மட்டுமே முக்கியமாகிப் போக.. யாரும் அவளை நெருங்க அவனே அனுமதிக்கவில்லை.

அதுவும் அவளுடன் இருந்தவனைப் பார்த்து அனைவரும் பதற.. ஈஸ்வருக்கு எதற்கும் பதட்டமில்லை.. அதனால் தான் வர்ஷினியால் திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது, அவளின் வேலைகளைப் பார்க்க முடிந்தது.. படிக்க முடிந்தது.. சிறப்பாக செயல் பட முடிந்தது..

அவளும் ஈஸ்வருக்கு கொடுத்த வாக்கின் படி திரும்ப அந்த போதை வஸ்துவின் உதவியை எதற்கும் நாடவில்லை..

அவள் ஈஸ்வருக்கு கொடுத்த வாக்கு… அதுதான்… அந்த வாக்கு தான்… ஈஸ்வரை அவளை இன்னும் நெருங்க விடாமல் செய்கிறது.

“நீ இந்தப் பழக்கத்தை விட்டுடு, நீ எது சொன்னாலும் செய்யறேன்” என,

“அப்போ நீ என்னை விட்டுடு, நான் அதை விட்டுடறேன்”  என்றது தான் வர்ஷினியின் பதிலாகிப் போக..

நொடியில் “ஓகே, விட்டுடறேன்” என்றவன், “ஆனா திரும்ப நீ அது பக்கம் போன.. நீ என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு உன் கிட்ட வந்துடுவேன்.. அப்போவும் முடியலைன்னு தோணினா கொன்னுடுவேன். இந்தப் பழக்கத்தினால யார் முன்னயும் நீ கேவலப்படறதையோ இல்லை உன்னை யாரும் கீழ பார்க்குறதையோ என்னால எப்பவும் அனுமதிக்க முடியாது” என சொன்னவனின் குரலில் இருந்த தீவிரம் சொன்னதை செய்வேன் என முடிவுடன் இருந்தது.  

அந்த வார்த்தைகளின் தீவிரம் இருவருக்குள்ளும் இன்று வரை இருந்தது..

வர்ஷினி ஈஸ்வர் இல்லாத தன் வாழ்க்கையை யாரும் எந்த குறையும் சொல்ல முடியாதபடி செப்பனிட்டுக் கொண்டாள். அத்தனை பேரும் சுற்றி இருந்த போது மனம் உணர்ந்த தனிமையை, அதன் பிறகு அவள் உணரவில்லை என்பது தான் உண்மை..

அலைபேசி வைப்ரேஷனில் விடாமல் அடிக்க.. அதை பார்த்தவள், எடுக்கவா வேண்டாமா என யோசித்து, இந்தியாவில் எப்படியும் அப்போது நள்ளிரவு ஒரு மணி இருக்கும் என்பதை உணர்ந்து.. அதற்காக வேண்டி எடுத்தாள்.

“ஹல்லோ” என்றவள் “பேய் உலா வர்ற டைம்ல எதுக்கு எனக்கு கூப்பிடணும், அதோட பேச வேண்டியது தானே” என கேலிக் குரலில் கேட்க..  

“அதுக்கு தானே உங்களை கூப்பிட்டேன்” என்றவனிடம்..   

“ஹ, ஹ” என கலகலவென்று சிரித்தவள், “நான் ரத்தக் காட்டேரின்னு ஒருத்தர் எனக்கு காம்ப்ளிமென்ட் குடுத்தாங்க!” என்றாள் ஈஸ்வரின் நினைவில்.   

“நான் வழி மொழியட்டுமா” என்றவனிடம்..

மீண்டும் சிரித்தவள் “வேண்டாம், அது அவர் சொன்ன காம்ப்ளிமென்ட்டா மட்டும் இருக்கட்டும்” என்றவள்..

“எதுக்கு இந்த நேரத்துல கூப்பிட்டீங்க” என,

“இப்போ தானே உங்களுக்கு அங்கே பகல் அதுதான், எங்க பாஸ்சை நான் தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ண முடியாது இல்லையா” என,

“நம்பிட்டேன்” என்றவள், “சொல்லுங்க அஸ்வின், என்ன விஷயம்” என்று கேட்டவளின் குரலில் விளையாட்டுத்தனம் மறைந்து ஒரு கம்பீரம் வந்திருந்தது.  

அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைய, ஒரு தயக்கம் வந்து அஸ்வினிடம் ஒட்டிக் கொள்ள.. “இல்லை, ஒரு முறை ரிகன்சிடர் பண்ண முடியாதா?” என்றான்.

“எதை?” என்று அவள் கேட்கவில்லை, அவளுக்கேத் தெரியும், “வேண்டாம், வேண்டாம்” என்று ஜபம் போல சமயம் கிடைக்கும் போதெல்லாம் வர்ஷினியிடம் அஸ்வின் சொல்லிக் கொண்டு இருக்கிறானே!

“முடியாதுன்னு பல தடவை சொல்லிட்டேன், இதுதான் லாஸ்ட்டா நான் சொல்றது புரியுதா! சொன்னதை மட்டும் செய்ங்க.. ஒபே மை ஆர்டர்ஸ்!” என்றாள் ஸ்ட்ரிக்டாக.

“மேம் ப்ளீஸ், கொஞ்சம் நாள் தள்ளி போடுங்க, உங்க மைன்ட் செட் மாறலாம்” என,

“மாறலாம்ன்ற ஆப்ஷன் எனக்கு வேண்டாம். என் எண்ணத்துல மாற்றம் வர்றதை நான் விரும்பலை.. திரும்ப நீங்க இது விஷயமா என்கிட்டே பேசக் கூடாது அஸ்வின், புரிஞ்சதா?” என்றாள் கடுமையாக. அதற்கு மேல் சொல்ல முடியாது, அவளை எந்த வகையிலும் யாரும் தொந்தரவு செய்வதை ஈஸ்வர் விரும்ப மாட்டான் என்று தெரியும்.    

“ஓகே மேம்” என்றவன், வேறு சில விஷயங்களைப் பேசி வைக்க..

வைத்தவுடன் அந்த பேச்சின் சாயல் சிறிதும் இன்றி வர்ஷினி வேலையில் முடங்கிவிட.. அஸ்வினுக்கு தான் தூக்கம் போனது.. ஆம்! ஈஸ்வரை தன் வாழ்க்கையில் சந்திபதற்க்கு முன்பு இருந்த வர்ஷினி திரும்பியிருந்தாள்.

சில மாதங்களாக இதை தள்ளிப் போட்டான், அதை கண்டு கொண்டவள் இப்போது செய் என கறாராக கூறிவிட என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.

ஆம்! அஸ்வின் தான் இப்போது இந்தியாவில் வர்ஷினியின் தொழில் சார்ந்த வேலைகள் எல்லாம் பார்த்துக் கொள்வது.. தன்னுடைய பிரதிநிதியாக வர்ஷினி அவனை தான் அடையாளம் காட்டி இருந்தாள். இதன் பொருட்டு பத்து வர்ஷினியிடம் பேசுவதே இல்லை. பத்துவின் பொருட்டு முரளியும் பேசுவது இல்லை.. இருவருக்கும் இடையில் நிற்பது ஈஸ்வர் ரே!

ஆம்! வாழ்க்கை தனக்கு கொடுத்த இரண்டாவது வாய்ப்பு வர்ஷினி என அஸ்வினிற்குத் தெரியும்.. முதல் வாய்ப்பான ஜகனை தொலைத்து..  எவ்வளவு பார்த்து விட்டான்.. வர்ஷினியிடம் இப்போது அப்படி ஒரு எஜமான பக்தி தான்.. அவள் காலால் இடும் வேலையை தலையால் செய்வான்.

இதனை எதைக் கொண்டும் அவன் நழுவ விடுவதாய் இல்லை. பணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம்.. இவ்வளவு சம்பளம், இவ்வளவு மரியாதை, அவனுக்கென தனி தொழில் எல்லாம் வர்ஷினியின் மூலம்.. இதனை இழக்க அவன் தயாரில்லை.  

“பேர் சொல்லி கூப்பிடுங்க” என்று வர்ஷினி சொன்ன போதும்..  “நான் உங்க கிட்ட வேலை பார்க்கிறேன், மேம் தான் சரி” என்று விட்டான்..

பின்னே பேரெல்லாம் சொல்லிக் கூப்பிட்டால் ஈஸ்வர் வேலையைத் தொடர விடுவானா என்ன?  முன்பு ஈஸ்வரை ஏதாவது செய்ய வேண்டும் ஆசை இருந்தாலும், தைரியம் வரவில்லை. இப்போது நிச்சயம் முடியாது!        

அஸ்வின் வர்ஷினி சொல்லும் வேலையை செய்கிறான் என்று தெரிந்த போது எல்லோரும் அதனைக் கொண்டு ஏகத்துக்கும் பொங்க.. பொங்காதா ஒரே ஜீவன் ஈஸ்வர் மட்டுமே..

என்னவாயினும் அந்த கர்வம் மட்டும் அவனிடம் அழிந்து விடவில்லை.. மனதின் ஒரு ஓரத்தில் அது சொல்லிக் கொண்டே இருந்தது.. “உன்னையே அவளுக்குப் பிடிக்கவில்லை, இனி யாரையும் அவளுக்குப் பிடிக்காது” என,

அந்த கர்வம் மட்டுமே.. அவனை நடமாட வைத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல..

ஆனாலும் ஏனென்று புரியாமல் மனதில் ஒரு பயம் எழுவதை தடுக்க முடியவில்லை… சில நாட்களாக அது அதிகமாக இருந்தது.

அலுவலகம் நுழைந்தவனை சிறிது நேரத்தில் ஒரு  ரெஜிஸ்தர் தபால் எதிர்கொள்ள.. தோன்றிய பயம் சரிதான் என்பது போல.. அவனை எதிர்கொண்டது வர்ஷினி அனுப்பியிருந்த விவாகரத்து வேண்டிய பத்திரம்.         

இதயத்திலே தீப்பிடிக்க கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணில் காண்பேனோ!

 

Advertisement