Advertisement

அத்தியாயம் அறுபத்தி ஏழு :

 

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!

 

முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.. வேகமாக நகர்ந்து அவனின் கன்னத்தில் தட்டி தண்ணீரை தெளிக்க.. அசைவு தெரிந்தது அவனிடம்.. அப்போதுதான் சரியாக மூச்சே அவளால் விட முடிந்தது.

கண்விழித்தவனுக்கு தலை விண்ணென்று வலியில் தெறித்தது. முகமும் வலியில் சுருங்கியது.. அவனையே விழி எடுக்காமல் பார்த்திருந்த வர்ஷினியை பார்த்தான், முகத்தில் ஒரு பயம், அதனுடன் அந்த நீல நிறக் கண்களில் அதையும் விட..

“ஒன்னுமில்லை ஐ அம் ஆல் ரைட்” என்றவன் எழ.. அவளும் எழுந்தாள்.

வெளியே வந்தவன் படுக்கையில் அமரப் போக.. “அங்கே” என்று அவசரமாக நாற்காலியை காட்டினாள், கூடவே “பாத்ரூம்ல கீழ உட்கார்ந்து இருந்தோம்” என,

அந்த வலியிலும் அவனின் முகம் மென்மையைக் காட்டி “அங்கே தான் படுக்கை மாதிரி இவ்வளவு நேரமா உருண்டு புரண்டோம்”  

“இல்லை, உட்கார்ந்து தான் இருந்தோம்” என்றாள் பதிலுக்கு,

அவளின் பதிலில் தானாக தலையில் அடித்துக் கொண்டவன் வலியில் முகம் சுருக்கினான்.

“ரொம்ப டார்ச்சர் பண்றேனா.. எதுவும் சொல்லக் கூடாதுன்னு தான் இருந்தேன்” என்று வர்ஷினி சொல்லவும்..  

“நீ என்னை பண்ணலை, நான் தான் உன்னை பண்ணியிருக்கேன். ஆனா நீ சொல்லலை, காமிச்சும் கொடுக்கலை. எனக்குத் தெரியலை, ரியல்லி வெரி சாரி” என ஈஸ்வர் வேதனையோடு சொல்ல..

“நான் சொல்றது சரியா.. இல்லை நான் ரொம்ப எதிர் பார்க்கிறேனா, எனக்கு மன நோயா.. மன அழுத்தமா” என வகை வகையாகக் கேட்க..

“இல்லை, அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. ரொம்ப கோபம் வந்தா என்னை செத்துப் போகக்கூட சொல்லு, ஆனா இந்த வார்த்தை எல்லாம் பேசாதே. என்னால நிஜமாவே முடியலை” என்றவனின் குரல் மட்டுமல்ல கண்கள் கூட கலங்கியது..

தலையை பிடித்துக் கொண்டே அப்படியே அமர்ந்து விட்டான்..

அவனின் தவிப்பைப் பார்த்து “பேசலை” என்று உடனே வர்ஷினி சொல்ல..

முதல் முறையாக “நாம் நினைக்கும் அளவிற்கு இவள் பக்குவப் படவில்லையோ, நாம் சரியாக கணிக்கவில்லையோ?” என்று ஈஸ்வருக்கு தோன்றியது.

என்ன தான் மனிதர்கள் பக்குவமாக இருந்தாலும் எல்லா விஷயங்களையும் வாழ்க்கையில் அப்படியே அதன் போக்கில் எடுத்துக் கொள்வர் என்று சொல்ல முடியாது அல்லவா..

இன்னும் அவனே வாழ்க்கையின் தாத்பர்யங்களை அறிந்து கொள்ளவில்லை, பின் வர்ஷினியைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள முடியும்.

அவன் தலையைப் பிடித்து அமர.. வேறு அறைக்கு சென்று உடை மாற்றி வந்தாள்.

“நான் உன்கிட்ட பலமுறை சொல்லியிருக்கேன், ரொம்ப யோசிக்காதேன்னு” என்றவனுக்கு.. இன்னும் வர்ஷினியின் வார்த்தை கொடுத்த தாக்கம் மிக அதிகமாக இருக்க.. அப்படியே அந்த இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான்.

வர்ஷினி அவனையே பார்த்து அமர்ந்திருக்க.. அவன் விழிகளின் ஓரம் ஈரம் கசிவது தெரிந்தது… சென்று துடைக்க வேண்டும் போல தோன்ற, அதே நேரம் போகாதே என்று மனது சாட, அவளும் சோர்ந்து அமர்ந்து கொண்டாள்.

திரும்பவும் அவளுள் யோசனைகள் “நான் செய்வது சரியா? தவறா?” என யோசிக்க யோசிக்க மனதில் பாரம் ஏற, தாள முடியாதவளாக.. எழுந்து சென்று மாத்திரை எடுத்து.. தண்ணீர் தேடிச் சென்று, அதை வாயினில் போட்டு நிமிர்ந்தால், அவளைப் பார்த்தபடி ஈஸ்வர் நின்றிருந்தான்.

“என்ன சாப்பிடற?”  

“அது, அது” என்று அவள் தயங்க..

“தூக்க மாத்திரையா? எனக்கும் ஒன்னு கொடு!” என்று ஈஸ்வர் கை நீட்ட…

“இல்லை, உங்களுக்கு வேண்டாம்!” என்றாள் வர்ஷினி.

“கொடுன்னு சொல்றேன்ல, கொடு!” என்று அவளின் கையினில் இருந்த பாட்டிலை பிடிங்கிக் கொள்ள, வர்ஷினி எதிர் பார்க்கவில்லை.

“என்ன பண்ணறீங்க, குடுங்க!” என வர்ஷினி பதட்டமாக கேட்க,

“வர்ஷி, எனக்கு பயங்கரமா வலிக்குது, தலையும் வலிக்குது, மனசும் வலிக்குது, எனக்குத் தூங்கணும்!” என்றவன்,

ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, ஒன்றும் செய்ய இயலாதவளாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே உடல் அவனின் கட்டுப் பாட்டில் இல்லாதது போன்ற ஒரு உணர்வு.. கூடவே உடலில் ஒரு பரவசம்.. சிரிக்க வேண்டும் போன்ற ஒரு உணர்வு.. அழ வேண்டும் போலவும் ஒரு உணர்வு.. உடல் தள்ளாட போய் படுத்துக் கொண்டான்.

“என்ன மாத்திரை இது? ரொம்ப ஹெவி டோஸ் தூக்க மாத்திரையா? ஏன் இதையெல்லாம் எடுக்கற?” என்று சொல்லும் போது கூட வேறு சந்தேகம் அவனுக்கு இல்லை.. தள்ளுவது போலத் தோன்ற.. படுக்கையில் போய் விழுந்தான்..

சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.. ஈஸ்வருக்கு அது புதிது என்பதால் ஒரு மாதிரி மப்பில் படுத்ததும் உறங்கிவிட..

வர்ஷினிக்கு அவ்வளவு எளிதில் உறக்கம் அணுகவில்லை.. உடல் அதற்கும் மயங்கவில்லை.. உள்ளமும் கொதித்து கொண்டு தான் இருந்தது.. “எதற்கு நீ அவனிடம் உன்னைப் பற்றி பேசினாய்” என்று அவளுக்கு அவளே கேள்வி கேட்டுக் கொண்டவள்.. “இவனுக்கு வேறு தெரிந்து விட்டால்?” என்று மாத்திரையைப் பற்றியும் நினைத்தவள்..

ஈஸ்வரின் முகத்தை சிறிது நேரம் பார்த்து இருந்தாள்.. “பேசியிருக்க வேண்டாமோ? உன்னைப் பற்றி என்ன நினைத்து இருப்பான்? எதையெல்லாம் பேசியிருக்கிறாய் நீ” என்று மனதில் ஒரு கழிவிறக்கம் கூட.

“என்ன நினைத்தால் எனக்கு என்ன? எவனாய் இருந்தால் என்ன?” என்ற ஒரு இறுமாப்பு அந்த நொடியில் தோன்ற.. மனதில் ஒரு அமைதி.. கண்களை மூடினாள்.

முதல் நாள் மாலை ஏழு மணி போல உறங்கி, அடுத்த நாள் காலை பத்து மணிக்கு தான் ஈஸ்வருக்கு விழிப்பு வந்தது.. எழுந்தவனால் அமரவே முடியவில்லை ஒரு மாதிரி தள்ள.. மீண்டும் படுத்துக் கொண்டான்.

“என்ன மாத்திரை இது? எக்ஸ்பையரி ஆகியிருக்குமோ.. இல்லை தப்பாக மாத்திரை கொடுத்து விட்டார்களா?” என்று யோசித்தவன் வர்ஷினியைத் தேட..

அவள் இன்னுமே உறக்கத்தில்.. கையை நீட்டி மொபைல் எடுத்தால் பார்த்தால், அத்தனை ஃபோன் கால்கள்… மலரிடம் இருந்து மிகவும் அதிகம்.. நேற்று இரவில் இருந்து அழைப்புக்கள்..

உடனே அம்மாவிற்கு அழைத்தான்..

எடுத்தவுடனே “என்ன விஸ்வா? என்ன ஆச்சு? ஏன் நேத்துல இருந்து ஃபோன் எடுக்கலை.. இப்போ உங்க வீட்டுக்குத் தான் கிளம்பிட்டே இருக்கேன்” என,

“சீக்கிரம் தூங்கிட்டோம் மா போன் சைலன்ட்ல போட்டு.. இப்போ தான் எழுந்தேன்” என,

“இவ்வளவு நேரமாவா தூங்கின?”  

“என்னவோ தூங்கிட்டேன் மா நீங்க வராதீங்க.. இப்போ நாங்க வெளில போறோம், வந்ததும் கூப்பிடறேன்”  

“எங்கேடா?” என்றவரிடம், “அம்மா வைங்க, நான் அப்புறம் பேசறேன்” என்று வைத்தவன். வேறு யாருக்கும் எல்லாம் திரும்ப அழைக்கவில்லை.

சாய்ந்து அமர்ந்தவாறு வர்ஷினியைப் பார்த்திருந்தான்.. பிறகு “மாத்திரை இவளுக்கும் இப்படித் தான் இருக்கிறதோ? ஒத்துக்கொள்ளவில்லையோ?” எனத் தோன்ற, வேகமாக “வர்ஷினி” என்று பதட்டத்துடன் அவளை தொட்டுப் பார்க்க.. மூச்செல்லாம் சீராய்த் தான் இருந்தது.

ஆனாலும் உலுக்கி எழுப்ப ஆரம்பித்தான் பயத்துடன்..

வேகமான உலுக்களுக்குள் பின் மெதுவாக கண்களை திறந்தாள்..

“வர்ஷ், உனக்கு என்ன பண்ணுது” என்றான் பதட்டமாக.

“என்ன பண்ணுது, ஒன்னுமில்லையே” என்றாள் படுத்தவாரே,

“எழுந்துருச்சு பாரு, என்னால ஒன்னுமே முடியலை, நிற்கவே முடியலை. டேப்லட் சரியில்லை போல” என பேசினான்.. வேகமாக பேச நினைத்தாலும், வார்த்தைகள் சற்று மெதுவாக தான் வந்தது.

“ஹாஸ்பிடல் போயிடலாம், எழுந்துரு” என,

“ப்ச்” என சலித்தவள், “அதெல்லாம் ஒன்னுமில்லை, ஒரு ஒரு நாள் இப்படி இருக்கும். அப்புறம் சரியாகிடும்” என்றாள்.

“இப்படி தான் இருக்குமா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.

“ஆமாம்!” என்பது போலத் தலையாட்டவும்,

“யாரோ தப்பா குடுத்திருக்காங்க, தூக்க மாத்திரை இப்படி இருக்காது. ஒரு வேளை டேட் எக்ஸ்பையரி ஆகிடுச்சோ” என்றான் சந்தேகமாக.

அது சொன்ன போதும் வர்ஷினியின் மேல் கடுகளவும் சந்தேகமில்லை..

வர்ஷினி ஒரு பிரதிபளிப்பும் இல்லாமல் பார்த்திருக்க.. அந்த நீல நிறக் கண்கள் அவனை வெறித்திருக்க..

அந்தக் கண்களில் என்ன கண்டானோ? “என்ன மாத்திரை இது?” என்றான்.

வர்ஷினி பார்வையை அப்போதும் மாற்றவில்லை, பதிலும் சொல்லவில்லை, அவளுடைய மௌனம் ஒரு பயத்தைக் கொடுக்க..

“என்ன மாத்திரை வர்ஷ்?” என்றான் அதட்டலாக..

அப்போதும் படுத்திருந்தவள் அசையவில்லை.. முகத்திலும் அவன் கேட்கிறான் பதில் சொல்ல வேண்டும் என்ற எந்த உணர்வும் இல்லை.. அப்படியே அவனை நேர் பார்வை பார்த்திருந்தாள். 

“உண்மையை சொல்லு!” என்று கோபம் ஏறக் கேட்டான்.  

“சொல்லலைன்னா என்ன பண்ணுவீங்க?” என்றபடி எழுந்து அமர..

ஆம்! என்ன செய்வான்? அவனுக்கே தெரியாதே! 

“நேத்தே எக்ஸ்ட்ரீம்மா என்னை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்ட? இன்னைக்கு என்ன வெச்சிருக்க? சம்திங் டெல்ஸ் மீ, ஏதோ சரியில்லை!” என,

“ஆமாம்! சரியில்லை! இப்போ அதுக்கென்ன?” என்று திரும்பவும் அலட்சியமாக பேசினாள். செய்த தவறு வெளிப்படும் போது, ஆம்! நான் அப்படித்தான் என்று வெளிப்படும் ஒரு செயல் இது.

“என்ன பதில் இது? ஒழுங்கா என்னன்னு சொல்லு? இல்லை…” என்று ஈஸ்வர் அவ்வளவு கோபமாய் கேட்க,

அதற்கான பிரதிபளிப்பு சிறிதும் அவளிடம் இல்லை… “சொல்ல மாட்டியா? ஓகே ஃபைன், நான் ப்ளட் டெஸ்ட் குடுக்கறேன்” என்றவன், தொலைபேசி எடுத்து, ஹோம் சர்விஸ் வைத்துள்ள ஒரு லேபிற்கு அழைத்து பேச ஆரம்பிக்க..

அப்போது தான் முகத்தில் ஒரு சலிப்பை காட்டியவள், “வை” என்பது போல ஒரு சைகை செய்தாள்.

“நீ சொல்லு, அப்போ தான் வைப்பேன்” என,

“என்னவோ பண்ணுங்க?” என்றபடி, சொல்ல முடியாது என்பது போல அவள் எழ.. இந்த மிரட்டல் அவளிடம் வேலைக்கு ஆகாது எனப் புரிந்து, அவசரமாக ஃபோனை வைத்து, “வெச்சிட்டேன் சொல்லு!” என்றான்.

“அதோட பேர்” என்று அதனுடைய பெயர் சொன்னவள், எழுந்து குளியலைறை போக..

என்ன வென்று புரியாமல், எப்போதும் வர்ஷினி செய்யும் வேலையை ஈஸ்வர் செய்தான்.. ஆம்! இணையத்தில் தேடத் தேட.. முகம் வெளுத்து.. இதயம் உச்ச பட்சமாய் துடிக்க..

வெளியே வந்தவள் அவனைப் பார்த்ததும், தெரிந்து கொண்டான் எனப் புரிந்து.. மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள்.. நிற்கவே முடியவில்லை அவளாலும்.. ஒரு போதை! அதன் தாக்கம் அது!

அவள் எடுப்பது சற்று ஹெவி டோஸ்! எப்படியும் ஒரு நாள் முழுக்கவாவது அதன் தாக்கம் இருக்கும்!

ஈஸ்வர் தன்னைப் பார்ப்பது தெரிந்தாலும், அவனைப் பாராமல் கண்களை மூடி கொண்டாள்..

அதிர்ச்சி, அதனுடன் இப்போதைய வர்ஷினியின் செய்கை, பார்க்கப் பார்க்க, கோபம், ஆத்திரம், பிரவாகமாக அவனுள் பொங்க.. படுத்திருந்த அவளை கையைப் பிடித்து எழுப்ப முயன்றான்.

“ஏய், என்ன பண்ணியிருக்க தெரியுமா? எப்படி உன்னால இது முடிஞ்சது! எழுந்திரு முதல்ல!” என்று இழுக்க.. அது அப்படி ஒரு வலியைக் கொடுக்க..

“விடு, விடு, என்னை, வலிக்குது!” என்றவள், அவன் விடாது இருக்கவும், “கத்துவேன், எதையாவது போட்டு உடைப்பேன், விடு என்னை!” என,

“நீ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுமா? நீ ட்ரக் அடிக்டா?” என ஆத்திர மிகுதியில் ஈஸ்வர் கத்த,

“ஆமாம்! ட்ரக் எடுத்துக்கறேன் தான். ஆனா அடிக்ட் எல்லாம் கிடையாது! என்னோடவே தானே இருக்க.. உனக்குத் தெரிஞ்சதா நானா சொல்ற வரைக்கும்! ஆமாம், எடுத்துக்கறேன், எடுத்துக்குவேன்! எனக்கு எப்போ எப்போ தேவையோ அப்போ எல்லாம்!” என பதிலுக்கு வர்ஷினியும் கத்தினாள்.  

“எடுத்துப் பாரு, கொன்னுடறேன் உன்னை” என்றான் ஆத்திர மிகுதியில்.  

“கொன்னுக்கோ? என்ன வேணா பண்ணிக்கோ? நான் எடுத்துக்குவேன்!” என்றவள், “அன்ட் எப்போ இருந்து தெரியுமா நான் இதை எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட எய்டீன்த் பர்த்டேக்கு அப்புறம்” என ஆவேசமாகப் பேச..

“சும்மா நீ பண்ற தப்புக்கெல்லாம் என்னைச் சொல்லாதே.. என்ன பண்ணினேன் உன்னை நான்.. நீ ட்ரக் எடுக்குற அளவுக்கு, அதெல்லாம் ஒன்னுமேயில்லை! சும்மா கதை விடாத.. நான் உன்கிட்ட தப்பா நடந்ததை உங்கப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே! அதை விட்டு நீ ட்ரக்ஸ் எடுப்பியா? இனிமே எடுத்துப் பாரு? உன்னை நிஜமாவே கொன்னுடறேன்” என்று ஈஸ்வர் பேசியது யாருக்கும் பயத்தைக் கொடுக்கும்.  

ஆனாலும் அசட்டு பிடிவாதமாக, “அப்படித் தான் எடுப்பேன்” என விடாமல் பேச..

இன்னும் அவள் போதை மாத்திரை எடுத்தாள் என்பதையே ஜீரணிக்க முடியவில்லை. இதில் மேலும் மேலும் “எடுப்பேன்,உன்னால் என்ன செய்ய முடியும்” என்பது போலப் பேச..

கோபம் கட்டுப் படுத்த முடியாமல் அவளை ஓங்கி அறைந்தான்.

அடித்த அவனிற்கே கை வலித்தது. அடி வாங்கியும் அசையாமல் அவனை எதிர் கொண்டவள்.. “அடிச்சா, நிறுத்திடுவேனா.. முதல்ல எப்போவாவது தான் எடுப்பேன். ஆனா இப்போ சொல்றேன், டெய்லி எடுப்பேன், உன்னால என்ன செய்ய முடியும் செஞ்சிக்கோ, என்னால திரும்ப அடிக்க முடியாதுன்னு தானே நீ என்னை அடிக்கற, நான் என்ன செய்யறேன் பாரு!” கண்களில் நீர்வழியப் பேச..

ஒன்றும் செய்ய இயலாதவனாக, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக, சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.. கண்களும் தானாக மூடிக் கொள்ள.. அவன் விழி திறந்த போது வர்ஷினி திரும்பவும் உறக்கத்தில்.. கன்னத்தில் அவன் அடித்த கைத்தடங்கள் அச்சாக அப்படியே பதிந்து இருந்தது, ஐந்து விரல்களுமே.. அதுவே சொன்னது அவனின் அடியின் தாக்கத்தை..

கண்கள் கலங்க அவளையே பார்த்திருந்தான். நிஜமாக அவனால் அவளை சமாளிக்க முடியும் என்று தோன்றவேயில்லை!

நேற்று சொன்ன வார்த்தையை விடவும் இன்று அவளின் நிலை இன்னும் வலித்தது!

  திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ..

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது…

    

 

Advertisement