Advertisement

அத்தியாயம் இரண்டு :

இன்று சனி நாளை ஞாயிறு அலுவலகம் இல்லை.., ஒஹ் பொழுதை நெட்டித் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தான் துரை கண்ணன்..

திருவல்லிகேணியில் ஒரு மேன்ஷனில் வாசம்.. இந்த இரண்டு வருடங்களாக.. ஆம், படிப்பு முடிந்தவுடனேயே இங்கு வந்து விட்டான்..  ரிசல்ட் வரும்வரைக் கூட காத்திருக்கவில்லை.. எதுவோ தன்னைத் துரத்துவது போல வந்து விட்டான்..

திரும்ப இரண்டு மூன்று முறை விவாகரத்திற்காக சேலம் சென்று வந்தான்.. அவ்வளவே.. அதன் பின் ஒரு முறை கூட ஊர்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை..

ஒரு இருபத்தி இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.. அவன் வரைக்கும் அது யதேஷ்டம் தான்.. ஆனாலும் அடைக்க வேண்டிய கடன்கள் இருகின்றதே.. அதனால் வேறு சில பார்ட் டைம் வேலைகளும் பார்க்க.. அதன் மூலமும் அவனின் சம்பளத்தை விட ஒரு கணிசமான வருமானம்..  நடுவினில் ஒரு வருடம் வெளிநாடும் சென்று வந்திருந்தான். எல்லாம் கணிசமாக ஒரு தொகை சேர்ந்து இருந்தது. 

ஆனால் வீட்டிற்கு அனுப்ப முடிவதில்லை.. எப்போதும் அம்மாவிடம் நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொல்லி வளர்ந்த மகன்.. 

“ஒரு பைசா நீ அவன் கிட்ட இருந்து வாங்கினாலும், நீ வீட்டை விட்டு அவனோடவே போயிடு” என்று அப்பா சொல்லியிருந்ததால் அம்மா வாங்கவில்லை..  வேறு நேரமாய் இருந்தால் இவனோடே வந்திருப்பார்.. இப்போது இருவருக்கும் மனஸ்தாபம்… இவனிடம் பேசுவதுமில்லை..  இவனும் பேசுவதில்லை.. எல்லோரையும் விட அம்மாவின் மீது அவனுக்கு இன்னும் அதிகமாய் கோபம்.. 

கண்ணனுக்கு ஊருக்குப் போக ஒரு தயக்கம்.. பயம்.. யாரையும் எதிர்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.. வீட்டினரை இல்லை.. ஊராரை.. இதற்கு அக்கம் பக்கம் வீடு கூட கிடையாது. எல்லாம் தொலைவில் தான். ஆனால் எப்போதாவது பார்க்கும் அந்த மனிதர்கள் அவன் மூன்று முறை ஊருக்கு சென்ற போதும் முறைத்து பார்த்தது போல தான் அவனுக்கு எண்ணம்..

உண்மையில் அப்படி எல்லாம் ஏதுமில்லை.. இவனுக்காய் தப்பு செய்து விட்ட ஒரு குற்றணர்ச்சி.. அதன் கொண்டே இப்படி ஒரு எண்ணம்.  

சுந்தரி அவளின் பேரே அவனுக்கு பிடித்தமில்லை.. இப்போதும் நினைப்பான் அது என்ன சுந்தரி முந்திரி என..  அவளின் அப்பா அவரை இன்னும் அவனுக்குப் பிடித்தமில்லை.. எப்போதும் அழுக்கு சட்டையுடன் திரியும் மனிதர்.. அவர் அருகில் வந்தாலே வியர்வை நாற்றம் அவனுக்கு குமட்டும்.. அதுவும் கண்ணனைப் பார்த்ததும் பரவசமாய் அவர் சிரிக்கும் ஒரு சிரிப்பு அப்படி ஒரு எரிச்சல் தரும்..

திடீரென்று அவனின் அப்பா.. “நீ அவரின் மகளை திருமணம் செய்து கொள்ள வேணும்” என்று சொன்னதும் பெரிய அதிர்ச்சி.. அதனையும் விட கல்லூரி இறுதி தேர்வு இன்னும் ஒரு மாதத்தில்..

இப்போது திருமணமா.. அதுவும் பன்னிரெண்டாவது எழுதியிருக்கும் பெண்ணுடன்.. ஐயோ நண்பர்கள் எல்லாம் கிண்டல் செய்வார்களே என்று தான் தோன்றியது..

ஆம்! அவன் ஆங்கில வழிக் கல்வி.. அவள் தமிழ் வழிக் கல்வி, அதனுடன் கவர்மென்ட் பள்ளி மாணவி கூட.. சில முறை அவள் சைக்கிளில் பள்ளி செல்லும்போது பார்த்திருக்கிறான், அப்படி ஒன்றும் திரும்பிப் பார்க்க வைக்கும் தோற்றம் அல்ல.. ஒரு முறை கூடப் பார்க்க முடியாது என்பது அவனின் எண்ணம். நிறமும் மாநிறத்திற்கும் சற்று குறைவு.. பூசின உடல் வாகு.. ஆங்காங்கே பருக்கள் இருந்த முகம்.. சுத்தமாக அவனுக்குப் பிடிக்கவில்லை..

தலையில் எண்ணையை ஏகத்துக்கும் அப்பி, இரட்டை சடை போட்டு.. நெற்றியில் நீளமாய் விபூதி பூசி.. ம்கூம் அவனுக்கு பிடிக்கவில்லை.. அதுவும் கல்லூரி வாழ்க்கையில் நுழைந்த பிறகு அழகான பெண்கள், ஸ்டைலான பெண்கள் என்று பலரையும் பார்த்து கற்பனையில் தனக்கு வரும் பெண்ணை ஏகத்திற்கும் கற்பனை செய்து வைத்திருந்தவனுக்கு இப்படி ஒருத்தியை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை..   

அப்படியிருந்தவன் ஏன் ஒரு உறவை வைத்துக் கொண்டான் என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.. இப்போது அதன் காரணம் நினைத்தால் பெரிய முட்டாள் தனமாய் தோன்றியது. அதற்காக அவன் வருந்தியிராத நாள் இல்லை..  ஆனால் குழந்தை உண்டாகிவிடும் என்று சத்தியமாய் நினைத்திருக்கவில்லை.. அதன் காரணம் கொண்டு கேட்ட பேச்சுக்கள் தான் அவனுள் சுந்தரி வேண்டாம் என்ற எதிர்மறை எண்ணத்தை உருவாக்கியது. 

கண்ணனையும் விட அவனின் அம்மாவிற்கு இன்னும் பிடிக்கவில்லை.. “வேண்டாம்னு சொல்லுடா கண்ணா” என அவனின் மூலம் எதிர்ப்பை பலமாக காட்டினார்.. அவனின் அப்பா சந்திரன், அம்மா விமலா சொல்வதை கேட்டுக் கொள்ள மாட்டார்.. அதனால் மகன் மூலமாக ஒரு கடும் எதிர்ப்பு..

ஆனாலும் யார் பேச்சையும் காதில் கொள்ளாமல் திருமணத்தை உத்தமசோலபுரத்தில் இருந்த கரபுரனாதர் கோவிலில்.. எளிமையாக.. ஆனால் ஊரைக் கூட்டி முடித்து விட்டார்.

திருமணமாகி அந்த நாள் மணமகள் வீட்டிற்கு சென்று வந்தவன்.. திரும்ப அவர்களின் வீடு செல்லவில்லை.. வீடும் பிடிக்கவில்லை.. சுற்றியிருந்த புண்ணாக்கு வாசனையும், மாட்டுச் சாண வாசனையும் பிடிக்கவில்லை..  

ஒரு ஐந்து நாள் மட்டுமே கண்ணன் வீட்டில் இருந்தாள் சுந்தரி.. அந்த ஒரு அனுபவம் வாழ்நாளில் அவளுக்கு மறக்க முடியாத அனுபவம்.. இப்படியும் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்து கொண்ட அனுபவம்.. அங்கே தொடங்கியது தான் அந்த வீட்டின் மீதும்.. வீட்டினர் மீதும் வெறுப்பு.. 

பின் விமலா மகனிற்கு பரீட்சை இருக்கிறது முடிந்து அழைத்துக் கொள்கிறோம் என அவளின் அப்பா வீட்டிற்கு அனுப்பி விட்டார்.. 

அவர் சொன்ன காரணம் ஒத்துக் கொள்ளும் படியாக இருந்ததினால் சந்திரன், தன் நண்பன் ஏழுமலையிடம் சொல்ல அவரும் அழைத்துக் கொண்டார்..

அதன் பிறகு சுந்தரி அந்த வீடு வந்த போது ஒரு பெரும் பிரளயம்.. “நீ கூட்டிட்டுப் போ ஏழுமலை, நான் பையனோட வந்து கூப்பிடுக்கறேன்” என்று சந்திரன் சொன்ன வார்த்தையை அவரால் நிறைவேற்ற முடியவில்லை..  எல்லாம் அவசரமாய் ஆரம்பித்து அவசரமாய் முடிந்து விட்டது.

திருமணம் என்ற ஒன்று தெரியும் முன் சிரித்தது தான்.. அதன் பிறகு சிரித்தது கூடக் கிடையாது.. சிரிப்பே வரவில்லை அவனிற்கு..

மனதின் உறுத்தல் மட்டும் போகவில்லை கண்ணனுக்கு.. எப்போதும் ஒரு நிம்மதியின்மை மனதினில்.. பிடிக்காவிட்டாலும் வாழ்ந்திருக்க வேண்டுமோ.. இப்படி ஒரு குழந்தையும் கொடுத்து விவாகரத்தும் செய்து.. அவளின் அப்பா இறப்பதற்கும் காரணமாகி.. தனியாக அம்போ என்று விட்டு விட்டு வந்தது.. அவனின் மனதை அவனே கொன்று விட்ட ஒரு செயல்.

விவகாரத்திற்கு கடைசி முறை கவுன்சிலிங் சென்ற போது சுந்தரியை பார்த்தான்.. மேடிட்ட வயிறுடன் அவளும் அவளின் பாட்டியையும் அங்கு பார்த்த பிறகு.. தானாகவே கவுன்சிலிங் கொடுத்தவரிடம்.. “என்னோட ஊருக்கு வந்துட்டாங்கன்னா விவாகரத்து வேண்டாம்.. வந்துடச் சொல்லுங்க” என்று சொன்னான்.  

சுந்தரியிடம் நேரில் சொல்லும் தைரியம் இல்லை, அவள் பார்த்த பார்வைக்கு சக்தி இருந்தால் நிச்சயம் எரிந்தே இருப்பான், அப்படி ஒரு பார்வை.  

“இல்லை, முடியவே முடியாது! இனி இவனுடன் வாழும் பேச்சே கிடையாது!” என ஆணித்தரமாய் சுந்தரி சொல்ல..

அவர்களும் எவ்வளவோ சமாதனம் பேச.. ஒன்றும் நடக்கவில்லை.. கொடுத்து விட்டனர்..   வேண்டாம் போல தோன்ற விவாகரத்து கேட்டான்.. ஆனால் கிடைக்கும் முன் தான் செய்வது தவறு என மனது சொல்லியது.. சரி செய்து கொள்ளும் பக்குவம் இல்லை.. உண்மையில் அவளைப் பிடிக்கவுமில்லை.  

தன் மீது தான் தவறு என புரிந்தவன், கடைசியாக ஒரு முயற்சி செய்வோம் என நினைத்து அவளிடம் கோர்ட்டில் பேசப் போகும் போதே.. “என் வாழ்க்கையில வந்த சீமைக்கருவேல மரம் நீ.. நீ போய்டு” என ஆவேசமாக அடிக்குரலில் சீர.. எப்போதும் மற்றவர் முன் காட்சிப் பொருள் ஆக விரும்பாதவன்… அத்தனை நாசூக்கு பார்ப்பவனும் கூட.. மெளனமாக திரும்பி விட்டான்.  

திரும்பினவனுக்கு ஓரிரண்டு மாதங்களில் ஆன்சைட் என வெளிநாடு செல்லும் வாய்ப்பு வர..  பிறகு இரண்டு மாதம் முன்பு தான் திரும்ப சென்னை வந்தான்..       

தனியாய் இருக்கும் நேரம் எல்லாம் மனது இதனை அசைபோடும்.. திருமணம் செய்து வைத்தது தந்தையின் தவறாக இருக்கலாம்.. ஆனால் உறவு வைத்துக் கொள்வதில் யாருடைய கட்டாயமும் இல்லையே.. அவனின் தவறே.. உண்மையில் அதுவே பல சிக்கல்களுக்கு வித்திட்டு விட்டது. இனி யாரை சொல்வதிலும் பிரயோஜனம் இல்லை எனப் புரிந்தவன் தான்.   

அப்போது கைப்பேசி அழைக்க.. எடுத்துப் பார்த்தான்.. தங்கை சாரதா..

அம்மாவும் அப்பாவும் தான் பேசுவதில்லை.. மற்ற வீட்டில் இருக்கும் எல்லோரும் பேசுவர் கைப்பேசியில்..  சித்தப்பா சித்தி கூடப் பேசுவர்.

“சொல்லு சாரு” என..

“என்ன சொல்ல? சும்மா தான் கூப்பிட்டேன் அண்ணா!” என்றாள்.. தங்கை அங்குள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி எஸ் சீ கணிதம் முதல் ஆண்டு பயில்கிறாள்.. காரணம் இல்லாமல் அழைக்க மாட்டாள் எனத் தெரியும்.. இந்தத் திருமணத்தின் பின் அதிகம் யாரோடும் ஒட்டுதல் இல்லை.. எல்லோரிடம் இருந்தும் சற்று விலகி விட்டான். ஒரு சகஜ மனப்பான்மை இல்லை.    

“நீ என்ன பண்றே?” என்றவளிடம்.

“நான் ஒன்னும் பண்ணலை.. இன்னைக்கு லீவ் சும்மா தான் இருக்கேன்!”

“சாப்பிட்டியா” என அவள் பேச.. இப்படியாக பத்து நிமிடம் பேசியவள்.. “அண்ணா, ஒரு தடவை ஊருக்கு வாயேன், உன்னைப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு” என,

“வந்தா உங்கப்பா வீட்டுக்குள்ள விட மாட்டார்” என்றான். இவன் போகவே இல்லை பின்னே விடுவாரா இல்லையா என அவன் என்ன கண்டான். என்ன தான் நியாவாதிகளாய் இருந்தாலும் மக்களை மன்னிக்கும் மனப்பான்மை உள்ள பெற்றோர் இங்கே அனேகம் பேர்.   

அதற்கு பதிலாக பெரிய மௌனம் சாரதாவிடம்.. பிறகு “இதுக்கு ஒன்னும் பண்ண முடியாதா? எவ்வளவு நாள் இப்படியே இருப்போம்” என்றவள்.. மெதுவாக “அண்ணா, இங்க வீட்ல ஒரே பிரச்சனை.. அப்பாக்கும் சித்தப்பாக்கும் வாக்குவாதம்” என..

“ஏன்? என்ன பிரச்சனை?”  

“வாணிக்காக்கு படிப்பு முடிஞ்சது இல்லையா.. வரன் பாக்குறாங்க.. உன் கல்யாணம், அப்புறம் விவாகரத்து பத்தி தெரிஞ்சு சரியா எதுவும் அமைய மாட்டேங்குது.. உன்னால தான்னு சித்தப்பா அப்பாக்கிட்ட சண்டை.. ரொம்ப சண்டைன்னா.. வீட்ல சமைக்க கூட இல்லை.. ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து இருக்காங்க.. பயமா இருக்கு” என,

சிறிது நேரம் அவனுக்கும் பேச வரவில்லை.. “வீடுன்னு இருந்தா சண்டை இருக்கத் தான் செய்யும் சாரு.. நீ போய் சமைக்க நில்லு, அம்மா வந்துடுவாங்க!”

“சித்தி அம்மாவைப் பேசிட்டாங்க.. அடுத்த வீட்டு பொண்ணை துரத்தி விட்டீங்க. இப்போ நம்ம பொண்ணுக்கு அது வருதுன்னு.. என் பொண்ணுக்கே இப்படின்னா இனி உங்க பொண்ணுக்குப் பாருங்கன்னு.. அம்மா ஒரே அழுகை..” என..

“இதெல்லாம் சும்மா.. யாரோடதும் யாருக்கும் வராது.. வந்தா எனக்கு தான் வரும்.. வீட்ல எதுக்கு இந்தப் பேச்செல்லாம் பேசறீங்க” என்றான் அதட்டலாக.

“நீ வராம வீடே நல்லா இல்லை.. வாண்ணா!” என..

“பார்க்கிறேன் சாரு” என்றவன் ஃபோனை வைத்து விட்டான்.. கூடவே போனால் என்ன என்றும் தோன்றியது.

இன்னும் அவனின் மனதினில் சுந்தரிக்கு செய்த தவறுகள் மட்டுமே முன் நின்றன.. அவனின் சிறு பாலகனைக் கொண்டு ஒரு தந்தையாய் அவனின் உணர்வுகள் அவனுள் ஓங்கவில்லை. ஆனால் ஒரு ஓரத்தில் சிறு பொறியாய் இருந்து கொண்டு தான் இருந்தது.

ஊருக்கு போகலாமா என்று யோசிக்கும் போது தான் என்ன குழந்தையாய் இருக்கும் என்ற ஆவல் அதிகம் எழுந்தது.  ஆம் அவனுடன் பேசும் சிலரும் சுந்தரியைப் பற்றி பேசியதே இல்லை. அவர்களுக்கு எல்லாம் அது முடிந்து போன உறவு..

என்ன தான் விவாகரத்து ஆகிவிட்டாலும் சுந்தரியை பிடிக்கவில்லை என்றாலும் மகன் அவனது இல்லை என்று ஆகிவிடுமா.. அவனுள் இருக்கும் நெறி அவனை மகன் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்க வைக்குமா.. அந்த ஊரே வேண்டாம் என அவனின் மண்ணை விட்டாலும் மகனை விட்டுவிடுவானா என்ன?  

 

Advertisement