Uyirin ularal - episode 15

Advertisement

B.subhashini

New Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 15

ரிஷி திட்டியதில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்கியபடியே நின்றாள் அபி.
அவன் இருக்கும் கோபத்தில் இப்பொழுது அழுதால் அடி நிச்சயம் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

"முட்டாள் அறிவு இருக்கும் எவரும் இந்த காரியத்தை செய்ய மாட்டாள்.
பயமாக இருக்கிறது பயமாக இருக்கிறது என்று அழுதாயே , எதுக்கு பயமாக இருக்கிறது என்று கேட்டு பின்பும் வாய் திறந்தாயா ?

எனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஒரு பொறுக்கி. அவன் பெண்களின் கண்ணை பார்த்து பேசுகிற ரகம் இல்லை, கழுத்துக்குக் கீழே மட்டுமே பார்த்து பேசுகிறான் என்று சொல்லக் கூட உன்னால் முடியாதா? அந்த அளவுக்கா நான் உனக்கு அந்நியமாகிப் போனேன்.
நீ ஒரு ஆண் , நான் உன்னிடம் எப்படி சொல்ல என்று என்னிடம் கதை விடாதே.
மறந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன், வீட்டில் அம்மா பாட்டி என்று அத்தனை பேர் இருந்தும், நீ பெரிய பெண் ஆனதை என்னிடம் தான் சொன்னாய். அதே ரிஷி தான் இன்னும் இருக்கிறான். அவன் பொறுக்கி ஆகிவிடவில்லை, நீ இப்படி எதையும் சொல்லாமல் மறைத்து வைக்க.

என்னிடம் சொல்லாமல் போனாலும் உன் தோழியிடமாவது சொல்லி இருக்கலாம்.

இது மறைக்கும் விஷயமா? அவன் சரியில்லை என்று தெரிந்த பின்பும் யாருக்காக எதற்காக இந்த கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டாய். வாழ்க்கை உனக்கு விளையாட்டாய் போனது." என்று கோபத்தில் அவன் பேசப் பேச அபி ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சுடன் அப்படியே கீழே சரிந்து உட்கார்ந்தாள். தன் விரலில் ஜெய் போட்ட மோதிரத்தை கழற்றி எறிந்தாள்.

அவனின் செய்கை பார்த்து ரிஷி அதிர்ச்சியாகி அவள் அருகில் வந்தான்.

"அம்மு என்ன செய்கிறாய்"என்று கேட்டான்.

"அந்த பொறுக்கி போட்ட மோதிரத்தை கழற்றி எறிந்தேன் "என்றாள்.

"அவன் மோதிரம் போடும் வரை அமைதியாக இருந்துவிட்டு இன்னும் திருமணத்திற்கு ஐந்து நாட்களே இருக்கும் போது இப்போது எங்கிருந்து வந்தது உனக்கு இந்த தைரியம்?"
என்று கேட்டான் ரிஷி.

"எல்லாம் நீ இருக்கிறாய் என்கிற தைரியம்தான் என்றாள் "அபி சிரித்துக்கொண்டு.

சற்றேன்று அவளை மார்போடு அணைத்துக் கொண்டவனுக்கு நிச்சயம் செய்த மோதிரத்தை கழற்றி போட்டுவிட்டு சிரிக்கும் அபியை பார்த்து எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை.

"இப்போதுதான் நான் இருப்பது உனக்கு தெரிந்ததா? மாப்பிள்ளை பார்க்கும்போதோ இல்லை நீ சம்மதம் சொல்லும் முன்போ நான் இருப்பது உனக்கு தெரியவில்லையா ? என்று கேட்டான் ரிஷி.

"ஏன் தெரியாமல் ?, நீதான் நேரங்கெட்ட நேரத்தில் ஆந்திரா சென்றுவிட்டாய். வந்தார்கள், பிடித்திருக்கிறது என்றார்கள், பூ வைத்தார்கள், நானும் ஏதாவது கழுதையோ குதிரையோ கட்டித்தான் ஆக வேண்டும் என்று நினைத்து தலையாட்டினேன். எல்லாவற்றுக்கும் காரணம் நீதான் பேசாமல் பிரியாவை திருமணம் முடித்துக்கொண்டு உன் வாழ்க்கையை நீ அமைத்துக் கொண்டிருந்தால் நான் ஏன் இப்படி அவசர அவசரமாக கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருப்பேன். இதில் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் உன் வாழ்க்கையை கெடுக்கிறது நான்தான் என்று சொல்கிறார்கள்" என்றாள் அபி.

"அம்மு படித்த பெண் போல் பேசு. யாரோ என்னவோ சொன்னார்கள் என்பதற்காக உன் வாழ்க்கையை பலி கொடுப்பாயா?

நீ ஒரு பொறுக்கியை திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்வேன் என்று எப்படி நினைத்தாய்

என்னிடம் உன் மனதில் உள்ளதை நீ சொல்லி இருக்க வேண்டுமா இல்லையா?
என்றான் ரிஷி கோபத்தில்.

"சும்மா சும்மா என்னையே குறை கூறாதே. உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் நான் உனக்கு போன் போட்டேன், ஆனால் உனக்கு என்னிடம் பேச நேரம் எங்கே இருந்தது? மீட்டிங்கில் இருக்கிறேன் என்று என்னை தவிர்த்தாய், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் அதுபோல நான் அந்த மாப்பிளையை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டேனோ என்று எண்ணி, சரி விதி போல வாழ்க்கை என்று நினைத்து நான் அமைதியாக இருந்தேன் ஆனால் அந்தப் பொறுக்கியை நினைக்கும் போது எனக்கு அருவருப்பாக இருந்தது, ஒரு கரண்ட் கம்பத்துக்கு புடவை கட்டி விட்டாலும் நாள் முழுக்க இருந்து பார்ப்பான் போல." என்று பல்லைக் கடித்தாள் அபி.

என்னை இவ்வளவு திட்டிறியே நீ ஏன் அத்தை போன் போட்ட உடன் வரவில்லை, என்னைவிட உனக்கு வேலை முக்கியமாக போய் விட்டதா ?" என்று கேட்டாள் அபி,

" அப்படி இல்லை அம்மு, வர முடியாத சூழ்நிலை ஆனால் இங்கு இப்படி ஒரு மாப்பிள்ளைக்கு நீ சம்மதம் சொல்லி இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை, சரி நடந்ததை நினைத்து பயனில்லை . இனி நடக்கப் போவதை பார்ப்போம்.

பெரிய அண்ணியின் உறவுக்காரப் பையன் இந்த ஜெய் பிரகாஷ் என்று சொன்னார்கள் அதனால் வெறும் வாய்ப் பேச்சால் கல்யாணத்தை மறுக்க முடியாது, அவன் கேரக்டர் சரி இல்லை என்று நிரூபிக்க ஏதாவது ஆதாரத்தை நான் தேடியாக வேண்டும், அதுவரை எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இரு. முதலில் அந்த மோதிரத்தை தேடலாம் வா" என்று அவளின் கரத்தை பிடித்து எழுப்பி விட்டான்.

" அதை எதற்கு இப்பொழுது தேடவேண்டும் போய் தொலையட்டும் "என்றாள் அபி.

"மூன்று ஸ்கேனர் நம் வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறது அவர்கள் கண்ணில் எதுவும் தப்பாது அதனால் நமக்கு ஆதாரம் கிடைக்கும்வரை அந்த மோதிரம் உன் கையில் இருக்கட்டும்" என்று கையிலிருந்த போனில் டார்ச்சை ஆன் செய்தான் ரிஷி இருவரும் அந்த மோதிரத்தை தேடினார்கள்.

அது ஒரு மூலையில் கிடந்தது அதை எடுத்து ரிஷி அதை போட்டுக் கொள்ளுமாறு அவளிடம் நீட்டினான்.

அந்த மோதிரத்தை ஒரு வெறுப்போடு பார்த்தால் அபி,

"அதை குப்பையில்போடு சின்னத்தான்,
எங்கேயோ கழன்று விழுந்துவிட்டது என்று சொல்லிக் கொள்கிறேன் "என்றால் அபி.

அவளின் வெறுப்பை பார்த்து ரிஷி எதுவும் சொல்லாமல் தன் கையால் அந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான்.
அபி யோசனையுடன் அவனை நிமிர்ந்து பார்க்கும் முன்பு

" வா அம்மு நாளைக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது "என்று கூறி நில்லாமல் முன்னே நடந்தான் ரிஷி அபியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அன்று இரவு ரிஷி தூங்காமல் யோசித்துக் கொண்டே இருந்தான். தனது அலட்சியத்தால் தான் எவ்வளவு பெரிய தவறை செய்ய இருந்தோம் என்று நினைக்கும் போது ரிஷியால் தூங்க முடியவில்லை. எனது கோபத்தால் என் அம்முவின் வாழ்க்கையை அழிக்க பார்த்தேனே என்று நினைத்து வருந்தினான். நாளை செய்ய வேண்டிய வேலையை மனதில் உறுதி செய்து கொண்டு கண்ணயர்ந்தான்.

மறுநாள் ரிஷி நேராக தன் கம்பெனிக்கு துப்பறியும் பணியை செய்து கொடுக்கும் டிடெக்டிவ் ஏஜென்சி பார்க்க சென்றான். ஜெயபிரகாஷின் போட்டோவை காட்டியவன்
இவனை பற்றிய விவரம் எனக்கு இரண்டு நாட்களுக்குள் தேவை என்று கூறினான்.

இரண்டு நாட்களுக்குள் அத்தனை தகவல்களையும் சேகரிப்பது கடினம். ஆனாலும் எங்களால் இயன்ற அளவு முயற்சிக்கிறோம் என்றார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்.

ரிஷி கொடுத்திருந்த ஜெயப்பிரகாஷ் பற்றிய தகவலை பார்த்தவர் இந்த ஏரியாவில் வசிக்கும் ஒருவர் இங்கே வேலை பார்க்கிறார். நீங்கள் கேட்கும் தகவல் அவர் முலமாக உடனே கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றவர்

கார்த்திக்கை உடனே வரச்சொல்லுங்கள் என்றார் போனில் வரவேற்பாளரிடம்.

சற்று நேரத்தில் கதவை தட்டியபடி உள்ளே ஒரு இளைஞன் வந்தான்.

"எஸ் பாஸ் நான் கேட்ட அட்வான்ஸ் பணம் ஐயாயிரத்தை நீங்கள் இவ்வளவு சீக்கிரம் தருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று சிரித்தான்

" ஐயாயிரம் என்ன உன் ஒருமாத சம்பளத்தையும் அட்வான்ஸாக உனக்குத் தர நான் தயாராக உள்ளேன் ஆனால் நான் தரப் போகும் வேலையை இரண்டு நாட்களுக்குள் சரியாக முடித்திருந்திருக்க வேண்டும் சம்மதமா?" என்று கேட்டார்.

"என்ன ஒன் மந்த் செலரியை அட்வான்ஸாக தருவீர்களா? அப்படி என்றால் அது என்ன வேலையாக இருந்தாலும் உடனே செய்து முடிப்பேன்" என்றான் கார்த்திக்.

அவனிடம் ஜெயப்பிரகாஷின் அத்தனை தகவல்களும் போட்டோவும் கொடுக்கப்பட்டது.

அதை வாங்கிப் பார்த்த கார்த்திக் "பாஸ் இப்படி வாயை கொடுத்து மாட்டிக் கொண்டீர்களே" என்றான் சந்தோசத்தில்.
"இரண்டு நாள் எல்லாம் தேவையில்லை இவனை பற்றி சொல்வதற்கு இரண்டு நிமிடம் கொடுத்தாலே போதும் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் எங்கள் ஏரியா ரோமியோ இவன். அந்த ஏரியா பெண்கள் அனைவரும் பின்னே தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவன் கண்டு கொள்ளவே மாட்டான் ஆனால் அவன் நடிக்கிறானோ என்று எப்பொழுதும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது" என்றான் கார்த்திக்.

ஏதோ தகவல் கிடைத்து விட்டது என்று நினைத்து சந்தோஷப் பட்ட ரிஷி , கார்த்திக் தனக்குத் தெரிந்த தகவல்களை மட்டுமே சொன்னவுடன் சோர்ந்து போனான். ஆனாலும் முயற்சியை கைவிடக்கூடாது என்று எண்ணி

"இதோ பாருங்கள் கார்த்திக் உங்களுக்கு தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியதால் தான் நான் இங்கே வந்து உங்களின் உதவியை நாடி உள்ளேன். உங்களுக்கு ஒரு மாதம் என்ன? மூன்று மாத சம்பளத்தை நான் அட்வான்ஸாக தருகிறேன், எனக்கு வேண்டியதெல்லாம் அந்த ஜெய்பிரகாஷ் பற்றிய உண்மையான தகவல் போதியஆதாரத்துடன். நீங்கள் இதை எனக்கு 2 நாட்களுக்கு உள்ளாக தந்தாக வேண்டும் ஏனென்றால் இன்னும் 4 நாட்களில் எங்கள் வீட்டு பெண்ணுக்கும் இந்த ஜெய்பிரகாஷ்கும் திருமணம்." என்றான் ரிஷி.

"ஓகே சார் கண்டிப்பா" என்றான் கார்த்திக்.

இரண்டு நாட்கள் ரிஷி வரப்போகும் தகவலுக்காக காத்திருந்தான். ஆனால் வீட்டில் மற்றவர்கள் வெகு வேகமாக கல்யாண வேலையை பார்த்தனர். கல்யாண பெண்ணோ எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

" அத்தை அபிக்கு முகூர்த்தப் புடவை எடுக்க மாப்பிள்ளை வீட்டார்கள் செல்கிறார்களாம், அபியை அவர்களுடன் அனுப்ப முடியுமா என்று கேட்டார்கள்" இன்று வந்து நின்றாள் அம்பிகா.

"அதற்கு என்ன தாராளமாக அழைத்துச் செல்ல சொல். கூடவே ரிஷியின் போகச்சொல். என்றார் கற்பகம்மாள்.

"ரிஷி எதற்காக அவர்களுடன் செல்ல வேண்டும் ? ஏற்கனவே மோதிரம் போடும் அன்று அவர்கள் அடித்த கூத்து காணாதா? என் உறவுக்காரர்கள் முன்னிலையில் என்னை கேவலப்படுத்தாமல் இருங்கள்" என்றாள் அம்பிகா கோபத்தில்.

"மருமகளே தவறாக பேசாதே, கல்யாணத்திற்கு முன்பு அபியை மாப்பிள்ளை வீட்டார் உடன் தனியாக அனுப்ப முடியாது, ரிஷியும் அவளுடன் செல்லட்டும் இல்லை என்றால் அபி போக வேண்டாம் "என்றார் கற்பகம்மாள்.

அம்பிகா முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அபி "நான் போக மாட்டேன்" என்று மறுத்துவிட்டாள்.

"புடவை பற்றி எனக்கு என்னம்மா தெரியும்? அதுவுமில்லாமல் அவர்களுடன் அபியை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை."என்று தீர்மானமாக முடித்தான் ரிஷி.
**********

இரண்டு நாளின் முடிவில் " அம்மு அம்மு " என்று அபியை வீடு முழுவதும் தேடி திரிந்தான் ரிஷி. கல்யாணம் முடியும் வரை அனைவரும் இங்கேதான் தங்குவோம் என்று அறிவித்திருந்த இரண்டு அண்ணன்களின் குடும்பம் மற்றும் பானு அனைவரும் கல்யாண பர்சஸிங் என்று ஜவுளி கடைக்கு படையெடுத்தது சென்றிருந்தார்கள். யாரும் இன்னும் வீடு திரும்பவில்லை.

" அம்மு எங்கே " என்று தாயிடம் கேட்டவன் அவர் ரூமில் இருப்பாள் என்று கூற அங்கே போனான், சமையல் அறைக்கு போனான், மொட்டை மாடிக்கு போனான், தோட்டத்திற்கு போனான் ஆனால் எங்கும் அவள் இல்லாமல் போகவே நீச்சல் குளத்திற்கு போனான்.

யாரோ வரும் அரவம் கேட்டு தன் மேல் உடையை அவசரமாக எடுத்து போட்டாள் அபி.

" அம்மு.... அம்மு " என்று ரிஷி அழைத்த வேகத்தில் அபி அதிர்ந்து போனாள்.

" என்ன சின்னத்தான், என்ன ஆயிட்டு ஏன் இவ்வளவு அவசரம் ? நான் எங்கே போய் விட போகிறேன் " என்று அபி பேசிக்கொண்டே இருக்கும் போதே அசுர வேகத்தில் அவளை நெருங்கியவன் அதே வேகத்தில் அவளை அணைத்து அவள் முகம் எங்கும் முத்தமிட்டான்.

காற்று புகாத படிக்கு அவளை இறுக அணைத்து நின்றவின் இதய துடிப்பு அபிக்கு கேட்டது.

" சின்னத்தான் என்ன ஆச்சு, என்ன ?" என்று அவனின் கேசத்தை தடவியபடி கேட்டாள் அபி.

எதற்கும் அவனிடம் பதில் இல்லை. மீண்டும் மீண்டும் முத்தமிட்டான் பிறகு இறுக்கி அணைத்தான்.

" சின்னத்தான் போதும் விடு, யாராவது பார்த்துவிட போகிறார்கள், வா இங்கிருந்து போகலாம் " என்று அவனின் பிடியில் இருந்து விடுபட்டாள் அபி.

அவள் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க அவளின் கரத்தை பிடித்து நிறுத்தினான் ரிஷி.

அபி எதுவும் புரியாமல் அவனின் முகத்தை படிக்க முயன்றாள், அதில் எதுவும் தெரியவில்லை, சோர்வு மட்டும் கொட்டிக்கிடந்தது.

" சாப்பிட்டாயா சின்னத்தான் " என்று கேட்டாள் அபி அவனை நெருங்கி வந்து அவன் கன்னத்தை தடவியபடி.

" இல்லை " என்று தலையை ஆட்டினான் ரிஷி.

" வா சாப்பிடலாம் " என்றாள் அபி.

" வேண்டாம்,. எனக்கு பசிக்கவில்லை, நான் உன்னிடம் பேசவேண்டும் " என்றான்

" ம் பேசலாம் வா, இங்கிருந்து வெளியே போய் விடலாம் " என்றாள்.

மறுபடியும் அவளை இழுத்து அணைத்தான் ரிஷி. அவன் அணைத்த வேகத்தில் அபியின் எலும்பு நொறுங்கிவிடும் போல இருந்தது.

அவன் அணைப்பில் இருந்த அபிக்கு அவனின் செயல் விசித்திரமாக பட்டது, அதே நேரத்தில் ஏதோ ஒரு பயம் உள்ளே பரவியது.

" சின்னத்தான் இன்னும் இரண்டு நாளில் எனக்கு கல்யாணம், இப்போது என்னை உன்னுடன் இந்த மாதிரி யாரும் பார்த்தால் என்ன ஆகும்,ப்ரியா ஊரில் இல்லை என்ற தைரியம் உனக்கு. நீ சின்ன பிள்ளையா ? வா போகலாம் " என்றாள்.

" யாரு பார்த்தால் எனக்கென்ன, ஆமாம் உனக்கு இன்னும் அந்த பொறுக்கிக்கு உன்னை கட்டிவைப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறதா ?" என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

" நிச்சயம் இல்லை, ஆனால் என் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும், நீ நடத்துவாய் " என்றாள் அபி சிரித்துக்கொண்டே.

" ஏன்டி இப்படி சிரித்துக்கொண்டே இருக்க ? உனக்கு நிச்சயம் செய்தவனுடன் கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னும் கொஞ்சமாவது கவலை படு. தேவையில்லாமல் கவலைப்படுவ, இப்போ என்ன வந்தது உனக்கு" என்றான் அவனும் சிரித்தபடி.

" அந்த ஜெய் பிரகாஸுடன் கல்யாணம் இல்லை என்பதே பெரிய சந்தோசம் இல்லையா ? பிறகு எதற்கு கவலைப்படனும்"என்றாள் அபி.

" சரி, நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் உண்மையை மட்டும் சொல், உனக்கு இத்தனை வருடத்தில் யாரு மேலும் லவ் வரவே இல்லையா ?" என்றான் அவள் கண்ணை பார்த்து.

" போ உனக்கு வேற வேலையே இல்லை. எப்போ பாரு இதே கேள்வி, நானே ஆண்களை பார்த்தால் ஐம்பது அடி தள்ளி நிற்பேன், வீட்டில் உள்ளவர்களுடன் வாங்கி கட்டக்கூடாது என்று " என்று சொன்னவள் அவளுக்கும், அவனுக்கும் தற்போது இருக்கும் இடைவெளியை பார்த்தாள்.

அவனுக்கும் அவள் நினைப்பது புரிந்தது, அவளை மேலும் தன்னுடன் இறுக்கினான் சிரித்துக்கொண்டே.

"ஸோ இன்னைக்கு எனக்கு பூஜை இருக்கு, அதற்குத்தான் சார் இந்த வேலை பார்க்கிறீங்க இல்லையா?" என்றாள் அபி.

" ஏன் இப்படி பயந்து சாகுற அம்மு" என்றான் ரிஷி.

" என் கஷ்டம் எனக்கு, வா போகலாம் " என்றாள் மறுபடியும்.

"சரி போகலாம் ஆனால் நீ மொட்டை மாடிக்கு வரணும், உன்னுடன் எனக்கு கொஞ்சம் அவசரமாக பேச வேண்டும் " என்றான்.

" இப்படி பேசினால் வர மாட்டேன், ஒழுங்கா பத்தடி தள்ளி நின்று பேசுவேன் என்று சொல்லு வருவேன் " என்றாள் விரலை ஆட்டி.

விரலை பிடித்தவன் " முதலில் வா அப்புறம் கண்டிஷன் போடு " என்று அவளை விடுவித்துவிட்டு அவளுடைய உடைமையை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான்.
*********
Excellent
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top