UVVP 13

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அதிர்ச்சியில் கணேஷிற்கு பேச்சு வரவில்லை ....

"சார் லைன்ல இருக்கீங்களா?"

"ம்ம். இருக்கேன்.... நீங்க எங்க இருந்து பேசறீங்க, எப்படி உங்களை அவங்க காண்டாக்ட் பண்ணினாங்க?, ஏன்னா நானே இப்போ போலீஸ் ஹெட் குவார்ட்டர்ஸ் -ல தான் இருக்கேன் ", பேசிய கணேஷ் பதட்டமாய் இருந்தான்....

"சார்.. பொதுமக்கள் இங்க வரணும்-னு அவசியமில்லை. ம்ம்ம்ம்.", சிறிது யோசித்தவர் .., "சரி.. நீங்க ஹெட் குவார்ட்டர் பக்கமா இருக்கிறதால வாங்க... நாங்க காவலன் டீம், பக்கமாத்தான் இருக்கோம், அங்க இருக்கற ஆபீசரை கேளுங்க, எங்க ப்ளாக் வந்து செல்வம்-னு கேட்டு வாங்க.."

அடுத்த சில நிமிடத்தில் அவர் முன் கணேஷ் ஆஜர்..."ஸார் ...நான் கணேஷ், இப்போ பத்துஎங்க இருந்து மெசேஜ் பண்ணி இருக்காங்க?, எப்போ வந்தது?", இவன் டென்ஷன் அவரை தொற்றவில்லை.., ஒரு நாளைக்கு எவ்வளவு பார்க்கிறார்?

அமைதியாய், "சார் பதறாதீங்க.. இது SMS -ல்லாம் கிடையாது.. காவலன் -ன்னு ஒரு ஆப்..[செயலி]. இத உங்க மொபைல்-ல டவுன் லோட் பண்ணி, அதுக்கு தேவையான தகவல்களை குடுத்து இருந்தீங்கன்னா... எமெர்ஜென்சி நேரத்துல.. இதுல இருக்கிற ரெட் பட்டனை அமுக்கினா, அஞ்சாவது செகண்ட்-ல இங்க தகவல் வந்துடும்.. அப்படித்தான் எங்களுக்கு மெசேஜ் வந்தது...அவங்க இந்த ஆப் . ரிஜிஸ்டர் பண்ணும்போது உங்க நம்பரை கொடுத்து இருந்தாங்கன்னா, உங்களுக்கும் மெசேஜ் வந்திருக்கும் பாருங்க..."

அலைபேசியை பார்த்தான்.. தகவல் இருந்தது... ஆனால் அது மூளையில் உரைத்தால் தானே?, திரும்பவும் ஷானுவை அழைத்தான்..., அவனுக்கு அவள் குரல் கேட்டால்தான் நிம்மதி.. எத்தனை படித்திருந்தும், எத்தனை புத்திசாலியாய் இருந்தும், மனிதன் என்றும் உணர்வுகளின் அடிமைதான் என்பதை கணேஷ் நிரூபித்தான்.... பத்திரிக்கைகளில் எத்தனை பார்க்கிறான்? ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த பொண்ணை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்த கொடூரம், [அடுத்த நாட்களில் அதே நிலையத்தில் அதே இடத்தில் நின்று பார்த்த அனுபவம்] மேலும் விதிர்க்க வைத்தது.

ஷண்மதியின் நம்பர் மீண்டும் அணைத்துவைக்கப்பட்டு இருந்தது... "இப்போ எப்படி சார்.. ஆஃப் பண்ணிட்டாங்களே?" , கேட்கும் கணேஷின் குரல் நடுங்கியது...

"சார் கவனிங்க.. அவங்க SOS கொடுத்த உடனேயே அது எந்த ஏரியா, எங்கேயிருந்து சிக்னல் வருதுன்னு எங்களுக்கு தெரிஞ்சிடும்.. நாங்க ரோந்து போலீஸ்-க்கு தகவலை ஏற்கனவே அனுப்பிட்டோம், இந்நேரம் அவங்களை நெருங்கி இருப்பாங்க.... மொபைல் ஆஃப் பண்ணி இருந்தாலும், அந்த ஏரியாவை விட்டு அதிக தூரம் போய் இருக்க முடியாது"

கணேஷின் கண்ணுக்குள், இள மஞ்சள் புடவையில், அன்றலர்ந்த மலர் போல, இவன் காதலுக்கு "ம்ம்ம்...", என்று சம்மதம் சொன்ன ஷானுவே நின்றாள்... அவனை அறியாமலே கண்களில் நீர்... நிறைந்தது...

அவளை யோசிக்கும்போதே, அவள் கூறிய "ஆல் இன் தி கேம்", அபத்தமாய் நினைவுக்கு வர, "இல்ல, அவளுக்கு ஒன்னும் ஆகாது", என்று திரும்ப திரும்ப ஜெபித்தான்.... கூடவே, அவள் சொன்ன "நான் ரிப்போர்ட்டர், எப்பவும், எங்கயும் தயாரா இருப்பேன்",ம் நினைவுக்கு வந்தது... தைரியமான பெண்தான்... ஆனாலும்.. சற்றே தெளிந்து, "சிக்னல் எந்த ஏரியாலேர்ந்து வந்தது?", காவலரைக் கேட்டான்..

"தாம்பரம் டு மதுரவாயல் பை-பாஸ் ரோட், திருநீர்மலை-க்கு முன்னால ன்னு சிக்னல் காமிச்சது..."

"தேங்க்ஸ் சார்", கிளம்பியிருந்தான்...

காரில் இருந்தாள் ஷானு, கைகள் இரண்டையும், வாயையும் கட்டி பின் சீட்டில் போட்டிருந்தான் C.K என்று அனைவராலும் அழைக்கப்படும் சந்திரகுமார்... "சே... எந்த பிரேம்-லயும் மாட்டாத மாதிரி, சிங்கப்பூர்-ல இருந்துகிட்டே பூபேஷை பார்ட்னர் ஆக்கி, அவங்க பெரியப்பாவோட பதவியை, அதிகாரத்தை வச்சு அழகா இந்த கடத்தல் தொழிலை பண்ணிக்கிட்டு இருந்தேன்... எப்போ அந்த கோவை கார் விபத்து நடந்ததோ, அப்போ ஆரம்பிச்சது.... எல்லாம் இந்த ஷண்மதி-யினால... கட்டுரை எழுதி, என்னோட கடத்தல் லாஜிக் மொத்தமும் வெளிய விட்டு, ஆள் மாறாட்டத்தை கண்டு பிடிச்சு....,", "ஷிட் ", கையை இருக்கையில் குத்திக் கொண்டே " கடைசியா ஒரே கண்டைனர் அனுப்பினேன்.. அதையும் தேடி யாரோ விசாரிச்சு மோப்பம் பிடிச்சு....எல்லாம் போச்சு... எல்லாம் இந்த ஒரு பொண்ணால.... வர்ற ஆத்திரத்துக்கு ... நீ மயக்கம் தெளிஞ்சு எந்திரி.... உன்னை வச்சு அந்த போலீசுக்கும், உன் லவ்வர் , அந்த கணேஷுக்கு தண்ணீ காமிக்கலை .. நான் C.K. இல்லை..", தனியாய் புலம்பிக் கொண்டிருந்தான்..., ஆள் அரவம் இல்லாத அந்த கிரஷர்கள் நிறைந்து இருக்கும் பகுதியில்....

அவன் புலம்புவது பாதி கேட்டாலும் எந்த விதமான அசைவும் இல்லாமல் கிடந்தாள் ஷானு... ஏர்போர்ட்-இல் இவள் புக் செய்த காருக்கு காத்திருக்க, அதே நிறுவன காரில் இவன் வர, கிஞ்சித்தும் சந்தேகப்படாமல், pin நம்பரை கூறி ஏறினாள்... அவனும் சரி பார்ப்பது போல் நடித்து, அவளிடம் திரும்பியது வரையே நினைவில் இருந்தது.. முகத்தில், மயக்க மருந்தினை அனாயாசமாக ஸ்பிரே செய்திருந்தான் சந்திரகுமார்.. நொடிகளில் சுதாரித்து, மூச்சு அடக்கி இருந்தாள் , இல்லையெனில், நினைவு திரும்ப இன்னமும் தாமதம் ஆகி இருக்கும்...

அந்தி மயங்கும் நேரம் .. தூரத்தில் கிரஷர் இயங்கும் ஓசை தவிர எதுவும் இல்லை.... அப்படியே படுத்துக் கிடந்தாள்... அசைந்தால், அவள் உயிருக்கு உத்திரவாதமில்லை, கூடவே பகடையாய் பயன்படுத்தப்படுவாள் என்பதும் நிச்சயமாய் தெரிந்தது... ஷானுவின் உயிர் அவன் குறியாய் இருந்தால், இந்நேரம் காத்திருப்பானேன்?

இயற்க்கை உபாதையை நேர் செய்ய அவன் வெளியேற, சத்தமின்றி தன கைப்பையை திறந்து அலைபேசியில் இருந்த காவலன் செயலி-க்கு விரல்களை ஓட்டி... அதிலிருந்த சிகப்பு பொத்தானை அமுக்கினாள்... இன்டர்நெட் தொடர்புக்குகெல்லாம் நேரமில்லை... பேசவும் இயலாது.. அவள் வாழ்நாளை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஐந்து நொடிகள்.... எஸ்.... சிக்னல் சென்றிருக்கும்... காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு வரும்.. மாட்டிக்கொள்வாள்...

அலைபேசியை ஆப் செய்து கைப்பையில் போட்டு , மீண்டும் மயக்க நாடகம் துவக்கினாள் ..
அதிகபட்சமாக அரைமணி நேரம் கடத்த வேண்டும்.... உதவி வரும் வரை.. வரும் நிச்சயம் வரும்....

ரோந்துப் படையினருடன் மிகச் சரியாக சிக்னல் வந்த இடத்தில வந்து நின்றார் DCP, சிறியதாய் ஒரு வழி, லாரிகளுக்கானது... மலையை ஒட்டி இருந்தது.... மஃப்டியில் இருந்தவர் மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்.... மரங்களின் ஊடே ஒரு வாகனம் மறைவாய் இருந்தது தெரிய, சின்னதாய் விசிலில் சைகை தர, பத்து நிமிடத்தில் காரை சுற்றி வளைத்தனர், அதில் இருந்த C.K. சுதாரிக்கும் முன் அவன் முன் துப்பாக்கி பிடித்தபடி நின்றிருந்தார் DCP .. இத்தனை வேகமாய் எப்படி கண்டுபிடித்தனர் என்கிற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், தப்பிப்பது ஒன்றே குறிக்கோளாய் கதவைத் திறந்து ஓட ஆரம்பித்தான் சந்திரகுமார்.. " சி.கே. ஓடாத.. நில்லு...", எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை... "ஓடாத.. கண்டிப்பா ஷூட் பண்ணிடுவேன்".... மேலும் அவன் ஓட...

விஷ்க் .. விஷ்க்..., சி.கே. சடலமாய் சரிந்தான்....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
போகும் வழியில் கணேஷை அழைத்து விவரம் கூற, அவனும் இந்த இடத்தை நோக்கி பாதி தூரத்தில் வந்து கொண்டு இருந்ததால்...... வழியில் சந்தித்தது இரு பக்க வாகனங்களும்.... வாகனம் நின்ற மறு நொடி, ஷானு கணேஷை நோக்கி பறந்திருந்தாள்.. காதல் குறித்து யாருக்கும் தெரியக் கூடாது என்று சொன்ன அவள், நடு வீதியில், அவனை இறுக கட்டி கொண்டிருந்தாள்.. தாய் மடி சேர்ந்த கன்றாய் ஷானு....

இரண்டு நாட்கள் சென்றிருந்தது... பத்திரிக்கையாளர்கள் கூட்டம், மாயா, ஷிவா, பார்வையாளர் வரிசையில். கணேஷ், ஷண்மதி, DCP பதிலளிக்க ஏதுவாய், மத்தியில் அமர்ந்திருந்தனர்...

"சார் ஆரம்பிக்கலாமா?"

"யா.. ஓகே.."

"ஷண்மதி , நீங்க சொல்லுங்க.. நீங்க கடத்தப் படுவீங்கன்னு நினைச்சீங்களா?"

"இல்ல...இதுவரை அப்படி ஒரு தாட் வந்ததில்லை", கூறிய ஷானு .... கடத்தல் தாக்கத்தில் இருந்து மீண்டிருந்தாள்.

"என்ன யோசிச்சீங்க ?"

"தப்பிக்கணும்-னு தான்... வேறெந்த நினைப்பும் வரல.."

"போலீசுக்கு நெருங்கிய ஆளுங்கிறதுனாலதான், இவ்ளோ வேகமான நடவடிக்கையா?", துடுக்காய் கேள்வி வர..

"நட்புக்களே, நீங்க கேக்கறது சக ரிப்போர்ட்டர் கிட்ட", ஷானு சற்றே காட்டமாய் பதிலுரைக்க...

"உங்களை பிஸிக்கலா அப்யூஸ் பண்ணினாங்களா?",

"இல்ல...", என்றாள் ஷானு பல்லை கடித்தவாறே....

சட்டென கணேஷ் மைக்கை வாங்கி.., "தகாத உறவே தப்பில்ல-ன்னு தீர்ப்பு வந்த நாட்டுல இந்த கேள்வி தேவையே இல்லை... தவிர.. இது அநாகரீகம்.."

"ஸாரி சார்"

"சார் நீங்க சொல்லுங்க.. இவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க அதனாலதான் இத்தனை வேகமான ரெஸ்க்கியூ - வா?", DCP யை நோக்கி கேள்விகள் வரத் துவங்க...

"நிச்சயமா கிடையாது..இது காவலன்-ங்கிற செயலியோட வேகம்.. அதுதான் இவங்களை காப்பாத்திச்சு...நான் அந்த நேரத்துல ரோந்து போலிஸாரோட சி.கே. ய தேடி சுத்திகிட்டு இருந்தேன்.."

"ஸார் . இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை "..

"ரைட்.. உங்களுக்கு தெளிவா சொல்றேன்... காவலன் sos செயலி-ல நீங்க ரெட் பட்டன் பிரஸ் பண்ணி அஞ்சு செகண்ட்-ல , நீங்க இருக்கிற இடத்தோட மேப் எங்க கண்ட்ரோல் ரூமுக்கு வந்துடும்... அங்கேயிருந்து , அந்த ஏரியாவோட ரோந்து போலீசுக்கு உடனே தகவல் சொல்லி உங்க சிக்னல தொடர்வோம்... அதிக பட்சமா.. அரை மணி நேரத்துல உங்களுக்கு உதவி வரும்..."

"சார்.. காவலன் ஆப்-க்கு நம்ம நம்பர், அப்பறம் நமக்கு நெருங்கியவங்க நம்பர்-லாம் தரணுமாமே?, எங்க ப்ரைவஸி பாதிக்கப் படாதா?"

"நீங்க பேஸ் புக்-ல/ வாட்சாப்-ல போடற பதிவுகள், போட்டோக்கள்..... இதிலெல்லாம் போகாத உங்க ப்ரைவஸி இந்த ஆப்.. ல போட்டா போயிடுமா?"

"சார்.. இந்த டேட்டா -ல்லாம் ரகசியமானதா?"

"ஆமாம்.. சீக்ரெட்-டாத்தான் இருக்கும்"

"இப்படித்தான் சொன்னீங்க, ஆதார் நம்பர் பாதுகாப்பானது-ன்னு .. என்னாச்சு?"

இதுவரை அமைதியாய் இருந்தவர், இப்போது கோபமானார், "உங்க பாதுகாப்புக்கு நாங்க கொடுக்கிற உத்தரவாதம் இது.. உங்களுக்கு நம்பிக்கை இல்லங்கிறதுக்காக, உங்க வீட்டில திருடு போச்சு-ன்னா, போலீசுக்கு வராம இருப்பீங்களா ?"

"ஸார் "

"நீங்கல்லாம் படிச்சவங்க.. உங்க மொபைல் -ல எத்தனை தேவையில்லாத ஆப்ஸ்..?, இங்க எத்தனை பேர் காவலன் ஆப் வச்சிருக்கீங்க?"


"ஆம்பளைங்க, பொம்பளைங்க வயசானவங்க குழந்தைங்க... எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க நாங்க ரெடி.. ஆனா வீட்டுக்கு வீடு ஒரு போலீசை எங்களால நிறுத்த முடியாது.. யாருக்கெல்லாம் உதவி தேவையோ, எங்களை கூப்பிடுங்க ஓடி வர்றோம்-னு நாங்க ஒரு ஆப் கொடுத்திருக்கோம்... இதுவரைக்கும் பத்து லட்சத்துக்கும் குறைவாத்தான் இதை டவுன்லோடு பண்ணி இருக்காங்க.. தமிழ் நாட்டுல எட்டு கோடி மக்கள் தொகை, அட, பாதி பேருக்கு இந்த ஆன்ட்ராய்டு-ம் , ஐபோனும் தெரியாது-ன்னே வச்சிப்போம்... மிச்சம் ??, இத்தனைக்கும் இந்த செயலிக்கு நெட் அவசியமில்லை.... "

"ஈவ் டீசிங், ஹார்ட் அட்டாக், தெப்ட், செயின் ஸ்னாட்சிங் எங்க எப்போ பிரச்சனையை வரும்-னு யாருக்கு தெரியும்? ஏன் உங்க பாதுகாப்பு மேல உங்களுக்கே அக்கறை இல்ல? இனி போலீஸ் சரியில்லை, லஞ்சம் கேக்கறான்-னு சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க... நீங்க சரியா-ன்னு யோசிங்க...."

"கூப்பிடுங்க , கூட வர்றோம்... , நன்றி வணக்கம்"

"ஸார் ",

"சார்"

உடலால் துன்புறுத்தினார்களா ? என்று கேட்ட நிருபரிடம் மாயா வந்து..."பிரெஸ் கவுன்சில் என்கொயரி-க்கு இப்போவே ரெடி ஆகிடுங்க", மிகச் சாதாரணமாய் சொல்லி சென்றாள் .. அந்த நிருபருக்கு, அவர் எதிர்காலம் குறித்து .... இப்பொழுதே கலக்கம் எழுந்தது..

காண்டலா துறைமுகத்தில், அந்த குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கன்டைனர் பத்திரமாய் தரை இறக்கப் பட்டது... உள்ளே பனிரெண்டு பெண் குழந்தைகள், ஏழு சிறுவர்கள் அரை மயக்க நிலையில் இருந்தனர்... போதை மருந்தின் தாக்கம் இருந்தது அனைவரிடத்தும்...

"இந்த குழந்தைங்க போட்டோ ஒன்னு கூட வெளில வரக் கூடாது.. பர்ஸ்ட் எயிட் கொடுங்க... flight புக் பண்ணுங்க... நமக்கு கிடைச்ச லிஸ்ட் வச்சு அவங்கவங்க பேரன்ட்ஸ்-கு தகவல் கொடுங்க... ", சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற .... DCP, மொத்த கண்ட்ரோலயும், தனதாக்கி இருந்தார்....

பத்து நாட்களில், அத்தனை குழந்தைகளும் பத்திரமாய் அவரவர் பெற்றோருடன்.... கடைசியாய் ஒரே பெண் மீதமிருந்தாள் ..பதின் வயதில் , அவள் பெற்றோரை கண்டு பிடிக்க நாட்கள் பிடித்தது.. அவர்கள் ஊர் மாறி சென்று இருந்ததால் , இந்த தாமதம்... அன்று கணேஷும் மாயாயும் அந்த காப்பகத்தில் அப்பெண்ணுடன் இருந்தனர்... மெதுவாய் கதவு தட்டப்பட, "எஸ். வாங்க...." கணேஷ் மொழிய , கதவு திறக்கப்பட்டதும் ... நிசப்தம்....

"பாப்பா "... அந்த அன்னையின் குரலில் இருந்தது என்ன?
பரிதவிப்பா?

அழுகையா?

மகிழ்ச்சியா?

இனம் பிரிக்க இன்னொரு பிறவி வேண்டும்....

அனைவரின் கண்களிலும் நீர்....


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ? .. ..


- மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

காவலன் செயலி பதிவிறக்க :::: அலைபேசியில்

https://bit.ly/2t2Omcl
 

Mage

Well-Known Member
உண்மை . மரணத்தை விட கொடிய நரகம். தன் குழந்தை இருக்கா இல்லையா என்பது தெரியாமலே இருப்பது. நித்தம் மரண பயம். யாரவது எந்த தெய்வமவது வந்து கரை சேர்க்காதா எங்காவது பார்க்க மாட்டோம்மா என்று. இந்த மாதிரி ஆட்களுக்கு உடனடி மரணம் கூடாது. அனு அனுவிலும் மரணம் வேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top