இங்கு அறையில், அவள் செல்லவும் அவன் குளித்து முடித்து
சாதாரண டீஷிர்ட் அணிந்து வெளி வந்தான். அவளை கண்டதும் ஒரு புன்னகையுடன்,
"குட் மோர்னிங் சுமி, உனக்கும் பூஜை ஸ்லோகம் எல்லா தெரியுமா..." என்றான் அவளை பார்த்தவாறு.
அவனுக்கு கப்பில் காபி போட்டு கொண்டு " ம்.. அம்மா தினமும் காலை பூஜையில் சொல்லுவாங்க.... அது எனக்கும் பழக்கம் ஆகிவிட்டது, அம்மா சென்ற பின் இந்த பழக்கம் விட்டுவிட்டது. இன்று ஏனோ தெரியவில்லை அத்தை சொல்லும் போது அம்மா நினைவு வந்துவிட்டது.." என்றாள் குரல் கம்ம.
அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர " இனி நான் கீழேதான் படுக்க வேண்டும் சுமி" என்றான் கண்களில் குறும்புடன்
அவள் அவன் குறும்பை கவனியாது "ஐயோ என்ன, நான்..., ஏதாவது.. " அவளுக்கு எப்படி கேட்க என்று தெரியவில்லை பதட்டத்துடன் அவன் முகம் பார்த்தாள், அவன் கண்களில் தெரிந்த குறும்பில் அவன் ஏதோ விளையாடுகிறான் என்று தெரிந்து கொண்டாள் சுமி.
பின், இவளும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு "வேண்டாம் பாரதி நானே கீழ படுத்து கொள்கிறேன், தூக்கத்தில் தெரியாம என் கை உங்கள் மீது பட்டுவிட்டால் என் கைக்கு மாவு கட்டுதான் போட வேண்டும்..." என்றாள் முகத்தை பரிதாபமாக வைத்து,
முதலில் அவள் சொன்னதில் குழம்பியவன் பின் புரிந்து கொண்டு, "என் உடல் என்ன அவ்வளவு பாறை மாதிரியா இருக்கிறது" என்று அவளை முறைத்தான். அதில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
"நான் உன்னை பரிகாசம் செய்ய நினைத்தால் நீ என்னை பாறை என்று சொல்லிவிட்டாயே, ம்... நன்றாக பிழைத்து கொள்வாய்" என்றான் சிரிப்புடன்..
பின், அவளிடம் “சுமி, அம்மாவுக்கு நம் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்து விட்டது என்று நினைக்கிறேன், அம்மா ஆபரேஷன் செய்த பின் அறையை விட்டு வெளியே வருவது ரொம்ப அறிதாகி போய்விட்டது, உன்னை பார்த்த பின் தான் இன்று அறையை விட்டு வந்திருக்கிறார். அது மட்டும் அல்லாது ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் பூஜை செய்கிறார்.." என்றான் யோசனையோடு.
"நல்ல விஷயம் தானே அப்புறம் என்ன யோசனை"
"இல்ல ... அம்மா ஏதோ பெரிதாக நமக்கு செக் வைக்க நினைக்கிறார், ஆனால், என்ன என்று தான் தெரியவில்லை.." என்றான்.
அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது , அத்தையை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை நன்றாகத்தான் பேசுகிறார். இவன் கண்களுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் தெரிகிறது, அதை அவனிடமும் கேட்டு விட்டாள்.
அவன் புன்னைகையுடன் "அப்படி இல்லை சுமி.... அம்மா மனதில் நம் மீது இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை, அது வர வரைக்கும் நமக்கு கொஞ்சம் கஷ்டம் தான், அது தீரும் வரையில் அம்மாவும் சும்மா இருக்க மாட்டார்..." என்றார்.