Thuli Maiyal Konden-9

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
பால்நிலா வானில் உலா வரும் நேரம்...



தலைகுனிந்து அமர்ந்திருந்த அனுவிற்கு,தலையை நிமிர்த்தி பார்க்கும் எண்ணம் சுத்தமாக இல்லை.காரணம் மாறன் எல்லாம் இல்லை.அவனது உறவினர் கூட்டத்தில் உள்ள பெண்கள் தாம்.



இன்றைய இரவுக்கு அனுவை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்,அவளது மனதையும் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.



‘ஐயோ,என்னை விட்டுடுங்களேன்.நான் ரூம்-க்கே போயிடறேன்’உள்ளுக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள்.



உறவுக்கார பெண்களின் பேச்சு எல்லைகளை மீறிப் போய்க் கொண்டிருந்தது.காது கொடுத்து கேட்க முடியவில்லை.முகத்தையும்,காதையும் பொத்திக்கொண்டால் தான் என்ன? போன்ற யோசனைகளை எல்லாம் மனதில் பிறக்க,நெளிந்துகொண்டே அமர்ந்திருந்தாள்.



அதிலும் சேலையை கட்டிவிடுகிறேன் என்று அவர்கள் செய்த அட்டகாசத்தில் அழுகையே வந்து விடும் போலிருந்தது.



மொத்தத்தில் தியரியை விட பிராக்டிக்கலை எளிதாய் கையாண்டுவிடலாம் என்ற முடிவுக்கே கொண்டுவந்து விட்டார்கள்.



மாறனின் அம்மா அனுவை இங்கே கொண்டு வந்துவிட்டவர் தான்..அப்படியே அனுவின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.தருண் இங்கேயே அனுவை ஒட்டிக்கொண்டே திரிந்ததால், அரவிந்தின் வீட்டிற்கு செல்ல அவன் பிரியப்படவில்லை.அவனை யாரும் அழைக்கவில்லை என்பது வேறு விஷயம்.தூங்குவதற்காக,அவனை வீட்டுக்கு கொண்டு போய்விட்டுவிட்டு,தன் உறவினர் பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு,அனுவின் வீட்டிற்கே தூங்க சென்றுவிட்டார்.



சரியாய் நாற்பது நிமிடம் வகுப்பெடுத்தவர்கள்,அவர்களது அனுபவத்தையும் வேறு பகிர்ந்துகொள்ள,இதற்கு மேல் முடியாதென்று எழுந்துவிட்டாள்.



“பார்றா அவசரத்த!”அதற்கும் கிண்டலடித்தவர்கள்,பெர்பியூம் அடித்துவிட்டு,தலையில் பெரிய மல்லிகை சரத்தையே வைத்துவிட,’எப்படியும் பூ ஒரு கிலோ இருக்குமா ?’அனுவின் மனம் கணக்கிட்டது.தலையில் பாரம் ஏறிக்கொண்டதால்,உறவுப்பெண்களின் பேச்சே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.



ஒருவழியாய் மாறனின் அறையில் அனுவைக் கொண்டு போய் விட்டவர்கள்,காதில் ஏதோ ரகசியமாய் சொல்லிவிட்டு வேறு செல்ல,அவளால் தலைநிமிர்ந்து கணவனை பார்க்கவே முடியவில்லை.



கிட்டத்தட்ட மாறனும் அதே நிலையில் தான் இருந்தான்.பெண்களே இப்படி வகுப்பெடுக்கும் போது,ஆண்கள் என்ன சளைத்தவர்களா..?



‘எப்படியெல்லாம் நடந்துக்கிட்டா பொண்டாட்டிக்கு பிடிக்கும்’என்று பலவிதமாய் டெமோ எல்லாம் காட்டி அவனை உசுப்பேற்றிவிட்டிருந்தார்கள்.



அனுவின் அழகு வேறு அவனை தடுமாற செய்ய,’அவசரப்பட்டுடாத வெற்றி!! இன்னைக்கு சொதப்பினா,வாழ்க்கை முழுக்க அது தொடரும்.be ஸ்டெடி’மூன்று..நான்கென்ற முறையில் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்ட பிறகே,தலையை நிமிர்ந்தே பார்த்தான்.



அதுவரை அவனிடமிருந்து சத்தம் இல்லாததால்,அப்போது தான் நிமிர்ந்து பார்த்தவள்,மீண்டும் தரையை பார்க்க,”பேசலாமா அனும்மா”தயங்கியே கேட்க,



“ம்ம்”சம்மதம் கிடைத்த பின்னரே ஆரம்பித்தான்.



“முகத்தில எத்தனை கோட் மேக்அப் போட்டிருக்க”-அதுதான் இப்போதைய தலையாய பிரச்சனை என்பது போல்,கவலையாய் கேட்க,நிமிர்ந்து பார்த்தவள் முறைத்தாள்.



பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்வி!!



‘தப்பா ஸ்டார்ட் பண்ணிட்டோமோ’உடனே சுதாரித்தவன்,



“இல்ல அனுமா,என் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லிவிட்டாங்க..உன்னோட க்ரீம் எல்லாம் எனக்கு ஒத்துக்காது..”ஒன்றுக்கொன்று தொடர்பின்றி சொல்ல,



“என் க்ரீம் உங்களுக்கு எதுக்கு ஒத்துக்கணும்?”அப்பாவியாய் அவளும் கேட்டு வைத்தாள்.



“அது அனுமா....”இழுத்தவன்,எப்படி சொல்வதென்று புரியாமல் தயங்கவுமே,அவளுக்கு பல்ப் எறிய,யோசிக்காமல் அவன் வலது கை ஆள்காட்டி விரலை எடுத்து,தன் கன்னத்தை தொட செய்து,”பாருங்க.கைல எதுவுமே ஓட்டலை தானே..அப்போ நீங்க சேஃப் தான்”சொல்லிவிட்டு மென்னகை புரிய,



அதுவரை ‘ஒருவரையொருவர் புரிந்துகொளல்’ என்னும் அத்தியாயம் தான் முதலில் என்றிருந்தவன்,அதை மறந்துவிட்டு,அவளின் கன்னத்தின் மென்மையிலையே லயித்துப் போயிருந்தான்.



அவனுக்கு அனுவே பொக்கிஷம் தான்.அதிலும் தானாக தேடிவந்த பொக்கிஷம்.சிந்தையில் அந்த சந்தோஷத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்ற பேராசை எழ,அந்த ஆசைக்கு நெய்விட்டது அனுவின் வெட்கம்.



அவனது அசையாத தாபப்பார்வை அவளுக்குள்ளும் உணர்வலைகளை உருவாக்க,”அனு,ப்ரோசீட் பண்ணவா?”-வேண்டாமென்று சொல்லிவிடாதே என்று தொனியில் கேட்டவனுக்கு,வெட்கத்தையே பதிலாக கொடுத்து,அவனின் மொத்தமும் தான் மட்டுமே என்றாகிப் போனாள்.



இருவரும் இயல்பானதொரு இல்லறத்தில் நுழைய,அதற்கு அவர்களை தயார்ப்படுத்தியது உறவினர் கூட்டமே..வாழ்க உங்கள் சேவை..!! –கிண்டலத்துக்கொண்டது மாறன் தான்.நானில்லைங்கோ!!!!!!!!!!!!!!



இந்திய திருமணங்களில் பலரின் வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பிக்கிறது என்றாலும் அந்த பலரில் அரவிந்த்-மயூரா இல்லை என்பதே நிதர்சனம்.



காவலாளி கேட்டை திறந்தவுடன் தெரிந்த வீட்டின் முகப்பே,மயூவின் குடும்பத்தை அதிர்ச்சியில் மூழ்கடித்துவிட்டது என்பதே உண்மை.



பிரபாகரனும்,மகேந்திரனும் கிராமத்தில் இருந்த அவர்களின் வீட்டை ஒருமுறை பார்த்திருக்கிறார்கள் தான்.ஆனால் அதைவிட மூன்றுமடங்கு பெரிதாய் இருந்த இந்த வீடு இரவிலும் பிரகாசமாய் ஒளிர்ந்தது.



பெரிய பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய அந்த இடத்தில்,அமெரிக்க பாணியில் கட்டப்பட்ட அந்த வீட்டை வெளியிலிருந்து பார்க்கும் போதே,உள்ளே சென்று ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கும்.இந்த கண்கவர் வீட்டை வடிவமைத்தவனும் அரவிந்த் தான்.



இது தான் அவன் கட்டிய முதல் வீடும் கூட! அப்படியொரு நேர்த்தியில் வீட்டை கட்டுவான் என்று அவனது வீட்டினரே நம்பியிருக்கவில்லை என்பது தான் நிஜம்.



பார்க்க பார்க்க தெவிட்டாத,கலைநயத்துடன்,நவீன பாணியில் இருக்கும் அந்த வீட்டை கட்ட,தங்களிடம் நிறைய பணமிருந்ததது அவனுக்கு சாதகமான விஷயம்.அதைவிட இந்த வீட்டை இவனுக்கென்று,முதலிலையே இவனது தந்தை எழுதிவைத்துவிட்டது அதைவிட சாதகமான விஷயம்..



வீட்டின் செல்வசெழிப்பு,அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்கு பதில்,அகலக்கால் வைத்துவிட்டோமோ என்ற எண்ணத்தையே தோற்றுவிக்க,ஒருவித இறுக்கத்துடன் தான் காரிலிருந்து இறங்கினார்கள்.



வீடு பூட்டியிருந்தது.திருமணத்தை முன்னிட்டு வீட்டு வேலைக்காரர்களுக்கு ஒருவாரம் விடுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.



அரவிந்த் இன்னும் வீடுவரவில்லை என்று உணர்ந்த வேதா,அவனுக்கு போனில் அழைக்க,”இன்னும் பத்து நிமிஷத்தில வந்திடறேன்-ம்மா..ஹோட்டல்ல இருந்தேன்”எனவும்,



“டின்னெர் ஓர்டர் கொடுக்க போயிருக்கான்.வந்துடுவான்”என்றார்.



அரவிந்த் சொன்னது போல பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.அவன் பின்னே பைக்கில் டெலிவரி செய்யும் பையன் உணவைக்கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போக,அவனது வீட்டிலையே தங்கி வேலை பார்க்கும்,சரசுவும் பையனின் பைக்கில் வருவதற்கும் சரியாக இருந்தது.



எல்லாவற்றையுமே யோசித்து செய்வான்.ஏனோதானோ என்றிருப்பவன் இல்லை.பொறுப்பானவன்.



மகேனிடம் மதியம் பேசாமல் வந்ததற்கு சரிக்கட்டும் விதமாய்,புன்னகை விதமாய் வரவேற்றான்.மனைவியை பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.இது அவளது வீடு!! வரவேற்கவும் வேண்டுமா என்ன!!
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
சரசு உள்ளே சென்று ஆரத்தி கரைத்து ஆலம் சுற்றவும் அனைவரும் உள்ளே போனார்கள்.வீட்டின் வெளிப்புறத்தை விட உட்புறம் கண்ணைப் பறித்தது என்றே சொல்லலாம்.



இன்டிரியர் டிசைன் மிகவும் அருமையாக இருக்க,எந்தவொரு இடத்திலிருந்தும் கண்ணை எடுக்க முடியவில்லை.



மாடிக்கு செல்லும் வளைவு கூட,வித்தியாசமாய்,பின்பக்க வாசலை பார்த்தவாறு அழகாய் இருக்க,வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளுமே செல்வ செழிப்பை அப்பட்டமாய்க் காட்டியது.



பிரபாகரனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்த கவலை போய்,இத்தனை வசதியானவர்கள் எதற்காக எங்கள் வீட்டில் சம்பந்தம் பேச வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் துளிர்விட,அமைதியாகவே இருந்தார்.வசந்தியின் நிலையும் அப்படியே!!



வாழ்வில் படிப்படியாக முன்னேறியவர்கள்.யாரையும் ஏமாற்ற தெரியாதவர்கள்.அடுத்தவர்களின் உழைப்பில் வாழ்ந்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் அற்றவர்கள் என்பதினாலையே இந்த கலக்கம்.



மகேன் ஏற்கனவே இதெல்லாம் விசாரித்திருந்ததினால்,அவனுக்கு அவ்வளவாய் கவலை இல்லை.தற்போதைய கவலை எல்லாம் அனுவைப்பற்றி தான்.



நாளை காலையில் அனுவின் சந்தோஷ முகத்தைப் பார்த்தால் தான் அவனுக்கு திருப்தி.மயூவை பற்றி எதுவும் கவலைப்படுவதற்கு இருப்பது போல அவனுக்கு தோன்றவில்லை.



தங்கையை பற்றி நன்கறிவான்.அவளாய் வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்தால்,நிச்சயம் சந்தோஷமாய் வாழ்வாள்.இல்லையென்றால் தன்னைத்தானே கெடுத்துக்கொள்வாள். அவளின் டிசைன் அப்படி..அவள் வாழ்க்கை அவள் கையில்!!



அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு மட்டும் வந்திருந்ததால்,”நாங்க கிளம்பறோம் அத்தை.எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்தாச்சு.சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் நாளைக்கு விருந்து கொடுக்கறதா சொல்லியிருக்கோம்.மாப்பிள்ளையும் அங்க இருந்திருந்தா,ஒண்ணாவே முடிச்சிருக்கலாம்”அரவிந்திற்கு குட்டும் மறைமுகமாய் வைத்துவிட்டு,



“இன்னொரு நாள் விருந்து வைக்கிறேன்.உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கும்னு சொல்லுங்க”என்றான்.



அரவிந்த் தன் தப்பை சரி செய்யும் விதமாய்,”ஒருவாரம் போகட்டும்.வர்றோம்”எனவும்,அப்போதே கிளம்புகிறோம் என்றவர்களை உண்ண வைத்துவிட்டு,கிளம்பும் வரை உடனிருந்து எல்லாம் பார்த்துக் கொண்டார்கள் தாயும்,மகனும்.



தன் வீட்டினர் சென்றுவிட்டவுடன்,அதுவரை அமைதியாக இருந்தவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.கட்டுப்படுத்திக் கொண்டாள்.



இதுநாள் வரை தனித்து இருந்ததேயில்லை..யாராவது உடனிருப்பார்கள்.காயத்ரியாவது அவளுடன் இருப்பாள்.இன்று அப்படியில்லை.நேற்று அறிமுகமான இருவருடன் தனித்து விட்டிருக்கிறார்கள் என்றெண்ணும் போதே வீம்பும் பிறந்தது.



‘என்னால தனியா இருக்க முடியும்.தனியா வாழவும் முடியும்’முடிவெடுத்துக் கொண்டவள் திரும்ப,வேதா அவளையே யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தவர்,



கீழிருந்த ஒரு அறையை சுட்டிக்காட்டி,”நான் இருக்க சமயங்கள்ல அரவிந்த் இங்க தான் இருப்பான்.நான் ஊருக்கு போயிட்டா மேல இருக்க ரூம்ல தங்கிப்பான்..நான் தனியா இருக்கேன் இல்லையா? அதுக்குதான் இந்த ஏற்பாடு.ரொம்ப கேர் எடுத்துப்பான்..உன்னையும் தான்!!”இறுதியில் அழுத்தி சொன்னவர்,



“அந்த ரூம் தான்.போ.போய் ரெஸ்ட் எடு! நாளைக்கு உன் துணியெல்லாம் எடுத்து வைச்சுக்கலாம்”அனுப்பிவிட்டு தூங்கபோய்விட்டார்.



கடந்த இரண்டு நாட்கள் மிகவும் நீண்டுகொண்டு முடிவேயில்லாமல் செல்வது போல பிரம்மையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.



அறைக்குள் நுழைந்தால் கட்டிலில் அரவிந்த் அமர்ந்திருந்தான்.இங்கு வந்ததிலிருந்து தன்னை நேரடியாக பார்க்கவில்லை என்பது அவளுக்கும் தெரியும் தானே!!



‘இவனோடு...இல்ல இவங்களோட சுமூகமா போவோமா? இல்ல நம்ம விருப்பப்படி இருப்போமா?”யோசித்துக்கொண்டே விடை கிடைக்காமல் அங்கிருந்த சோபாவில் அமர,



“வெல்,கரெக்டான இடத்தில தான் செட்டில் ஆகியிருக்க”என்றான்.



ஒன்றும் புரியவில்லை அவளுக்கு!!



“இது என்னோட வீடு.இங்க நான் உனக்கு அலாட் பண்ணியிருக்க இடம் அந்த சோபா தான்.வேறெங்கேயும் உனக்கு தூங்க அனுமதியில்ல.புரிஞ்சுதா?”என்றான்.



அரவிந்த் வில்லன் போல அவளுக்கு காட்சியளித்தாலும்,”சரி”என்றாள்.



அந்த ரியாக்ஷன் அவனுக்கு பிடிக்கவில்லை.இன்னும் எதையோ எதிர்பார்த்தான்.

“ஈவன் நமக்குள்ள பெட் ஷேரிங்கும் கிடையாது”அவளின் முகபாவனைகளை அவதானித்துக்கொண்டே சொல்ல,



அவனின் பொறுமையை மேலும் சோதித்தவளாய்,பதில் சொல்லாமல்,தன் பேகிலிருந்து புத்தம்புது பெட்ஷீட்டை எடுத்து கீழே விரிக்கப் போக,அந்த நீள் சோபாவை சரி செய்து,”இதுல ரெண்டு ஆளே படுக்கலாம்.கீழ படுக்கணும்னு அவசியமில்ல”எனவும்,மறுக்காமல் மேலேயே படுத்துக்கொள்ள,படுக்கையில் சாய்ந்தவன் திரும்பி படுத்தான்.



இன்று எனக்கு எப்படிப்பட்ட இரவு!! ஒரு பெண்ணுடன் தனித்து நான்!! அதுவும் பிடிக்காத பெண்ணோடு ஒரே அறையில்!!!-விரக்தியாய் சிரித்துக்கொண்டாலும் ஆண் மனம் பெண்ணின் அனுமதியின்றி அவளை ரசிக்க செய்தது..



கூடவே..’இன்னொருத்தர் கூட அவ பக்கத்துல படுத்துக்கலாம்..இடமிருக்கு..ம்ம்ம்..அது நானாக இருந்தால்!!”கற்பனை தறிகெட்டுப் பறக்க,திரும்பி படுத்துக்கொண்டான்.



கல்யாணமாகியும் நான் பிரம்மச்சாரி தான்டா-சத்தமாகவே சொல்லிவிட்டான்.அவளுக்கும் கேட்டது தான்.கண் திறந்து அவனை பார்க்க,அவனும் பார்த்தான்.



இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டது...பெண்ணின் பேராயுதம் கண்கள் தான்!! வீழாமல் மீண்டது யார்?



அரவிந்த் மதியம் அவள் வினோதனுக்காய் அழுததை எண்ணியவன் ,அந்த கண்ணிலிருந்து மீண்டு,அகக்கண்ணை அடக்கி,புறக்கண்ணையும் இறுக்கி மூடிக்கொண்டான்.



சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top