Thuli Maiyal Konden-14

Advertisement


NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்..இன்றைய ud யாரும் இப்படியிருக்கும்னு நினைச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.அப்படி நினைச்சவங்க தாராளமா சொல்லலாம்..நம்ம பிரண்ட் ஒருத்தவங்க ஹனிமூன் எங்கன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி கமெண்ட்ல கேட்ருந்தாங்க...எங்க போகலாம்னு நீங்களே சொல்லுங்களேன்..பேர் மறந்துடுச்சு..சாரி...கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்குமே நன்றி பிரண்ட்ஸ்..உங்கள் கருத்துக்களை இந்த அத்தியாயத்திற்கு பெரிதும் எதிர்பார்க்கிறேன்.


அரவிந்தின் கோபம் அதிகமாகியதில் விருட்டென்று எழுந்தவன்,தான் அமர்ந்திருந்த சேரை தூக்கி வீசினான்.அவனின் உடல் வலுவால் லேசாக அவன் தூக்கி வீசியதற்கே,டிரெசிங் டேபிள் கண்ணாடி சில் சில்லாக உடைய,அதிர்ந்து போய் பார்த்தவளை,எரிச்சலுடன் பார்த்துவிட்டு,பால்கனிக்கு போய்விட்டான்.



இவ்வளவு கோபம் அவனுக்கு வருமென்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.



‘தப்பான கேள்வியை ரொம்ப தப்பா கேட்டுட்டுட்டோமோ’பயந்தாலும் கட்டிலைவிட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.



பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நகர்ந்தவன்,மீண்டும் அறைக்குள் நுழைந்து,கண்ணாடி சில்லுகளை மிதித்துவிடாமல்,பார்த்து நடந்தவன்,கட்டிலில் அவளுக்கருகே அமர்ந்தான்.



அரவிந்தின் மேல் இப்போது தான் அவளுக்கு அதிகமான பயமே உண்டாக,அதை அரவிந்த் அறிந்தாலும் பொருட்படுத்தவில்லை.



அவள் சாய்வாக உட்கார்ந்திருக்க,”கொஞ்சம் தள்ளிப்போ”கோபமாக சொல்லவும் உடனே எழுந்துவிட்டாள்.



சாய்வாக வைக்கப்பட்டிருந்த தலையணையை தூக்கி தூர வீசியவன்,அதன் பின்னே இருந்த கபோர்டை திறந்தான்.



அவளுக்கு அதிசயமாய் போயிற்று..அந்த கட்டிலின் அமைப்பை சோபா@ பெட் என்றும் சொல்லலாம். கபோர்ட்@ பெட் என்றும் சொல்லலாம்..



முதல் கபோர்டை திறக்க,அதில் அவன் தேடியது இல்லை.அடுத்ததாக தான் படுக்கும் இடத்தில் உள்ள கபோர்டை திறக்க அதிலும் இல்லை..திடீரென்று ஞாபகம் வந்தவனாய்,கட்டிலிலிருந்து இறங்கியவன்,கீழே கட்டிலுக்கு அடியில் மூன்று கபோர்டுகளை திறந்து பார்த்தவன்,நான்காவதாக திறந்து பார்த்ததில் அவன் தேடியது கிடைத்தது.



அதோ ஒரு சிகரெட் பாக்கெட்!!



அதை கையில் எடுத்தவன் முகத்தில் அப்படியொரு பிரகாசம்!! மனைவியை பார்த்துக்கொண்டே,லைட்டரையும் எடுத்துக்கொண்டு,மீண்டும் பால்கனிக்கே செல்ல,தொப்பென்று பெட்டில் அமர்ந்துவிட்டாள்.





‘இந்த பழக்கம் வேறையா?’-அமர்ந்த இடத்திலிருந்து அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அப்படி பார்ப்பது இதுவே முதல்முறை!!



சிகரெட்டை பற்ற வைத்தவன்,’இவளுக்காக போய் நான் சிகரெட் பிடிக்கறதா? எனக்கு டென்ஷன் கொடுக்கற அளவுக்கு இவ வொர்த் இல்ல’சிகரெட்டை காலில் போட்டு அணைத்துவிட்டு,உள்ளே வந்தவன் அவளை பார்த்து முறைத்துவிட்டு சென்றுவிட்டான்.



ஏன் அப்படி சொன்ன?-கேட்டு சண்டையிட்டிருக்கலாம்.இல்லை நீ பேசியது தவறென்று புரிய வைத்திருக்கலாம்.ஒன்றும் செய்யாமல் போனவன்,இரவுக்கு தான் வீடு திரும்பினான்.



சரசு தான் காத்திருந்தவர்,”சாப்பிட்டு போங்க தம்பி..பாப்பா சாப்டுடுச்சு”கூடுதல் தகவலாக சொல்லவும்,அமைதியாய் கையை கழுவிவிட்டு வந்து அமர்ந்தான்.



அவள் கேட்டது இன்னும் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க,மிகவும் சோர்வாக உணர்ந்தான்.



‘இன்னைக்கு எப்படியும் தூக்கம் வரப்போறதில்ல’புரிந்து போனதில் உணவை முடித்துக்கொண்டவன்,மேலிருந்த தனதறைக்கு சென்று கையோடு மது பாட்டிலையும் எடுத்துக்கொண்டு மயூ இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.



இன்னும் கண்ணாடி துகள்கள் சுத்தம் செய்யப்படாமல் அப்படியே தான் இருந்தது.



கணவன் வந்ததை உணர்ந்தவள்,கட்டிலை விட்டு எழுந்து நிற்க,சைகையால்’உட்கார்’என்றவன்,பாட்டிலை பெட்டிலையே வைத்துவிட்டு தண்ணீர் எடுக்க போனான்.



‘இது வேறையா?’நொந்துகொண்டவள்,



‘இப்படி ஒருத்தன்கிட்ட என்னை தள்ளிவிட்டுட்டீங்களே.இன்னைக்கு தப்பா எது நடந்தாலும்,உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்’பெற்றோருடன் மனதிற்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டிருக்க,ஒரு கிளாஸ், ஸ்பூனோடு வந்தவன்,தண்ணீரை முழு கிளாசில் நிரப்பி,அதில் அளவாய் இரண்டு ஸ்பூன் ஊற்றி கலக்கினான்..மனைவியை பார்த்துக்கொண்டே!!



அவளின் முகபாவங்கள் அவனை கடுப்பேற்ற’இன்னும் கொஞ்சம் ஊத்தி,போதையேத்திக்கலாமா’என்று கூட யோசித்தான்.



இறுதியில்’இவளுக்காக நான் குடிகாரனா ஆகறதா? நெவெர்’மனதிற்குள்ளையே தலையை சிலுப்பிக்கொண்டு, ஒரே மடக்கில் குடித்துவிட்டான்.



தூக்க மாத்திரைக்கு பதிலாய் இவன் உபயோகிப்பது இதை தான்.அளவுக்கு மீறினால் தான் நஞ்சு!! எப்போதும் குடித்தவுடன் சொக்கிப்போய் படுத்துவிடுபவன்,இன்றும் அதேபோல் படுக்க தூக்கம் வரவில்லை.



மனதில் அவள் சொன்னது இப்போது அதிகமாய் வளம் வர ஆரம்பித்தது.



சில மணித்துளிகளுக்கு பிறகு மயூ அவனருகில் படுக்க,கண்ணை திறவாமலையே,”நான் இந்திரனா,ராவணனான்னு கேட்க உனக்கு யோக்கியதை இருக்கா? மிசஸ் மயூரவல்லி”கேட்க,அவளிடம் பதிலில்லை.



அதில் கோபம் தான் பெருகியது!!



“என்ன பதிலையே காணோம்”கேட்டபடியே அவள் பக்கம் திரும்பியவன்,



”சொல்லு!! என்னை அப்படி கேட்கிற அளவுக்கு நீ மட்டும் என்ன ஒழுங்கா? நீயும் தான் இன்னொருத்தனை காதலிச்ச!! அவனோட ஊரை சுத்தியிருக்க! என்னை கல்யாணம் பண்ணியிருக்க!!அப்போ நீ மட்டும் என்ன...”சொல்லாமல் நிறுத்த,அவனை பார்த்து சிரித்தாள்.



ஆனால் அது விரக்தி சிரிப்பு!! ஆயுள் முழுக்க இந்த கேள்வி தொடருமோ?



“நீங்க ராவணனோ,இந்திரனோ இல்லை.நீங்க ராமன் தான்.ஒத்துக்கறேன்”



“என்ன திடீர்னு!!”அவள் கண்ணை உற்றுப்பார்த்து சந்தேகமாக கேட்க,பார்வையை தளர்த்திக் கொள்ளாமலையே,



“ம்ம்ம்ம்..ராமன் தான் ஊரார் பேச்சை கேட்டு,சீதையை தீக்குளிக்க சொல்வான். இதுல இன்னொரு விஷயம் என்னன்னா,சீதை ராவணனால கடத்தப்பட்டது அவளோட அழகால மட்டுமில்ல..ராமனும் அதுக்கொரு காரணம் தான்.எல்லாருக்கும் அது தெரிஞ்சாலும் ராமன் நல்லவன்!!”இடைவெளிவிட்டவள்,



“ராவணனும் சரி,இந்திரனும் சரி..மனைவி நடத்தையை சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்னதில்ல...இப்போ சொல்லுங்க நீங்க ராமன் தானே!!”என்றாள்.



அவள் பேசியதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.ஆனால் என்னவென்று புரியவில்லை..மூளை மழுங்கியதா? இல்லை வெகு நேரமாய் மனைவியின் கண்ணை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மயக்கமா? இல்லை உள்ளே போன ஆல்கஹாலா? எதுவோவொன்று அவனை பிரித்தறியவும் விடவில்லை.. அவளிடம் கேட்கவும் விடவில்லை.



அவளின் கண்களை வெகு அருகில் பார்த்தவன்,நேற்று போல் அவளிடம் பயமில்லை என்று உணர்ந்துகொண்டான்.



“நேத்து உன் உணர்வுகளை மதிக்கணும்னு நினைச்சேன்.ஆனால் இன்னைக்கு என் பீலிங்க்சையும் நான் மதிக்கணும்னு நினைக்கறேன்.நீ என்ன நினைக்கிற”கேட்டபோது அவன் இதழ்,அவள் இதழை உரசியும்,உரசாமல் நெருங்கிவிட்டது.



கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.அவன் விலகுவது போல் இல்லை..நெருங்கவும் இல்லை என்பதை உணர்ந்தவள்,’ஒண்ணு,ரெண்டு,மூணு’என்று எண்ணியவள்,கண்ணை திறக்காமலையே..இதழ்களுக்கு இடையே இருந்த இடைவெளியை ஒன்றுமில்லாமல் செய்ய,அவள் கணவனோ இருவருக்குமிடையே இடைவெளியே இல்லாமல் ஆக்கினான்.



இறுக மூடியிருந்த அவள் விழிகள்,மெல்ல மெல்ல அதன் இயல்பு நிலை திரும்பி,மயக்கத்திற்கு செல்லும் வரை இதழ்களை பிரிய விடாமல்,அவளை மீட்டினான்.



முழுதாய் அவள் அவன் வசம் வரும் வரை,அவன் விடவில்லை..அவன் அவள் வசப்பட்டபோது,அவன் அவள் வசமாகியிருந்தான்.



இரவு மிகவும் நீண்டதாகவும்,விடிந்த பின் மிகவும் குறுகிய இரவு என்ற உணர்வையும் கொடுக்க,மெல்ல கண்விழித்தான் அரவிந்த்.
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
மனைவி அருகிலில்லை என்று புரிய,படுத்தவாக்கில்,எங்கேயிருக்கிறாள் என்று பார்க்க,உடைந்துகிடந்த கண்ணாடி துகள்களையே அவள் உற்றுப்பார்ப்பது தெரிந்து,எழுந்தவன் அவள் இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.



“என்ன பார்க்கற”



அவனின் கைகள் கொடுத்த கூச்சத்தில்,கைகளை விலக்க முயன்றாள்.முடியவில்லை.



“ஒருமாதிரி இருக்கு.விடுங்களேன்”



“விடமாட்டேன்.இனி எப்பவும் விடமாட்டேன்”சொன்னவனின் குரலில் அத்தனை குதூகலம்.பெண்ணை பற்றி அறிந்துகொண்ட சந்தோஷம்!!



“இதை கிளீன் பண்ணணும்.நேத்துலயிருந்து இப்படியே இருக்கு.கால்ல குத்திடும்”அவளாகவே பேச,நேற்றைய நெருக்கம்,அவளது மௌனத்தையும் கலைத்துவிட்டது என்று உணர்ந்துகொண்டவன்,சிதறிக்கிடந்த கண்ணாடி துகள்களில் இருவரின் முகம் பார்க்க,



“இதுக்கு முன்னாடியிருந்ததை விட,இப்போ ரொம்ப அழகாயிருக்க!!”உண்மையை சொன்னாலும் அதை ஏற்க அவளுக்கு மனமில்லை.



“நான் வெளில போகணும்”



“போகலாம்.ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்..கொஞ்ச நேரம் கழிச்சு!!”என்றவன்,அவன் இஷ்டத்திற்கு அவளை ஆட்டுவிக்க முயன்றான்.



தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவே அவளுக்கு நேரம் பிடிக்க, தன்னிடமிருந்து விலக நீண்ட நேரமாக போராடுவதை உணர்ந்துகொண்டவன் மனைவியை விட்டு தள்ளி நின்றான்.



“நேத்து நான் உன்னை கட்டாயப்படுத்தலைன்னு உறுதியா நம்பறேன்.இல்லை அது என் பிரம்மையா?”



“பிரம்மை இல்ல”



“அப்போ ஏன்?”பாதியிலையே நிறுத்த,



“சூரியன் எட்டி பார்த்துட்டு இருக்கார்.அதான்”சொல்லிவிட்டு,நிற்காமல் வெளியே போய்விட்டாள்.



‘ரொம்ப படுத்தறாங்க’முணுமுணுத்துவிட்டும் செல்ல,அரவிந்திற்கும் கேட்டது தான்.



கோபம் மறைந்து புன்னகை எட்டிப் பார்க்க,”வல்லி”சத்தமாய் மீண்டும் அழைத்தான்.



நேற்று காலையில் அரைமயக்கத்தில் ‘வல்லி’என்ற கணவனின் அழைப்பை கேட்டபோது,தலையில் ஏறாதது,நேற்றிரவு முழு மயக்கத்தில் இருந்தபோது,கணவன் பிதற்றியபோது தெளிவாக மனதில் பதிந்து போனது...!!! மயக்கங்கள் வேறு வேறு அல்லவா!!



சரசு வேறு அருகிலிருப்பதால்,வேறு வழியில்லாமல் மீண்டும் உள்ளே வர,”இதை கிளீன் பண்ணணும்.எனக்கு ஹெல்ப் பண்ணு.ப்ளீஸ்”என்றான்.



அவளின் தயக்கத்தின் அர்த்தம் புரிந்தாலும்,”இப்போ உன் பீலிங்க்சை நான் மதிக்கறேன்..ஸோ தைரியமா வா!! நம்ம ரூம்ல யாரையும் நுழைய விடமாட்டேன்..கிளீன் பண்றது கூட,எக்சர்சைஸ் மாதிரி நினைச்சிட்டு நானே பண்ணிக்குவேன்..இப்போ இதுக்கு நீயும் தான் ஹெல்ப் பண்ணணும்”எனவும்,அவனுக்கு உதவினாள்.



இன்னும் அந்த கண்ணாடி துகள்கள் இருவரையும் குத்தாதது அதிசயம் தான்...எங்கு சிதறிக்கிடக்கிறதோ என்று பார்த்து பார்த்து நடப்பதுவே பெயரய டாஸ்க்காக இருந்தது..இப்போது எடுக்கும் போதும் அப்படியே!!



முழுதாய் சுத்தம் செய்த பிறகு,”அப்போ புது டிரேசிங் டேபிள் வாங்கினாலும்,நீங்க தனியாளா உள்ள தூக்கிட்டு வந்துடுவீங்களா”நக்கலாகத்தான் கேட்டாள்.



“அது முடியாது தான்.ஆனால் உன்னை தூக்க முடியும்”சொன்னவன்,அவளை தூக்கிக்கொண்டு,



“சூரியனை உள்ள வரவிடாம பண்ணிடலாம்”என்றவன் அறையை இருளாக்க...



‘நேத்து சம்மதிச்சது தப்பா போச்சு’-அன்றைய நாளில் திரும்ப திரும்ப மனைவியை எண்ண வைத்தான் கணவன்.



நேற்றைய சண்டைகள் எல்லாம் காணாமல் போய்விட,அதைப்பற்றி பேச இருவருமே விரும்பவில்லை என்பதால்,இன்றைய இணக்கத்தை மட்டும் பெரிதாய் எடுத்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.



அன்றைய மாலையில்,”ஷாப்பிங் போலாம் வா”அரவிந்த் அழைக்கவும்,சோர்வாக இருந்தாலும்,அவனோடு கிளம்பிவிட்டாள்.



கணவனோடு சண்டையிட்டுக்கொண்டிருக்க அவளுக்கு மனமில்லை.நேற்றைய பொழுதெல்லாம் அதைத்தான் யோசித்தாள்..



சண்டையிட்டு பிறந்த வீட்டுக்கும் போக முடியாது..தனித்தும் வாழவும் முடியாதெனும் போது,பழையதை நினைத்து,இந்த வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளக் கூடாதென்று தான் முன்பே எடுத்த முடிவை நேற்றே செயல்படுத்தியும் விட்டாள்...இல்லையென்றால் நேற்றைய பேச்சு பெரும் சண்டையில் தான் முடிந்திருக்கும்.சேதாரம் இருவருக்கும் அதிகமாய் இருந்திருக்கும்.



மயூவின் முடிவு அத்தனையும் தலைகீழாக மாற்றிவிட,ஷாப்பிங் மாலில்,ஐஸ்க்ரீம் கடையருகே ஒரு குழந்தை தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து,குழந்தையை பார்த்து சிரித்தாள்.



அந்தக் குழந்தையும் சிரித்துக்கொண்டே அவளருகே வந்து,”நீங்க தான்,எங்க புது சித்தியா?”கேட்க,அரவிந்தை பார்த்து சிரித்துவிட்டு,



“அப்போ உங்களுக்கு பழைய சித்தி வேற இருக்காங்களா”கபடமில்லாமல் கேட்க,அரவிந்த் முறைத்தான்.



“அறிவில்ல உனக்கு?”திட்டவும் செய்ய,புரியாமல் விழித்தாள்.



“நீ கேட்ட கேள்விக்கு அர்த்தம் வேற!! எனக்கு ஏற்கனவே...”சொல்லாமல் நிறுத்த,அவனை விடுத்து,



“பாப்பா..நீங்க என்னை எதுக்கு சித்தின்னு கூப்பிடறீங்க?”கொஞ்சலாய் கேட்க,அதற்கு பதிலாய்



“அர்விப்பா”என்று அரவிந்தை தூக்க சொல்ல,மயூவிற்கு புரிந்துவிட்டது.ஆனாலும் புரியாதவள் போல் நடிக்க ஆரம்பித்தாள்.



அவனின் அண்ணனை பற்றி பேசவே விரும்பவேயில்லை.இருவருக்கும் முன்பகை ஏதுமில்லை என்பதால்,அமைதியாய் வேடிக்கை பார்த்தாள்.



“யார்கூடடா வந்தீங்க?”



“ம்மா,ரேஷ்மி சித்தி கூடத்தான்”சொல்லவும் தான் எதிரே பார்த்தான்.



அண்ணன் மனைவியும்,அவளது தங்கை ரேஷ்மியையும் தங்களையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.அதுவரை மயூவின் முகத்தை தவிர அவன் தான் எதையுமே பார்க்கவேயில்லையே!!



அவர்களும் தங்களையே பார்த்திருக்க,”ஐஸ்க்ரீம் சாப்பிடறீங்களா?”



“லிட்டில் லிட்டில்”கொஞ்சம் என்று கையை சுருக்கி வேறு காட்ட,அதன் அழகில் மயங்கி கன்னத்தில் முத்தம் வைத்தவன்,மனைவியிடம் எதையும் பகிராது,குழந்தைக்கு கவனமாய் ஐஸ்க்ரீம் ஊட்டிவிட்டான்.



ஐஸ்க்ரீம் காலியாகும் போது வந்த ரேஷ்மி குழந்தையை தூக்கிக்கொண்டு,”ஆடு பகை,குட்டி உறவாம்”முறைப்பாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.



அரவிந்த் கண்டுகொள்ளவில்லை.



“போகலாமா”மனைவியிடம் கேட்க,



“குழந்தை பேர் என்ன?”தயங்கியே கேட்டாள்..



மற்றவற்றை கேட்க விரும்பவில்லை.குழந்தையின் அழகும்,மழலைப்பேச்சும் அவளை கவர்ந்திழுத்துவிட்டது.ஏற்கனவே வேதாவுடன் பழைய வீட்டிற்கு சென்றபோது இவர்கள் இருவரையும்,பார்த்திருக்கிறாள் தானே.அப்போது அடையாளம் தெரியவில்லை..இப்போது தெரிந்தது.ஆனால் தூரத்தில் நிற்பதால் ரேஷ்மிக்கும்,அவள் அக்காவிற்க்கும் வித்தியாசம் தெரியவில்லை.அரவிந்த் சொன்னால் தான் தெரியும்.



அவனுக்கு சொல்லும் எண்ணமேயில்லாதது போல,“அஸ்வதி”என்றதோடு முடித்துக்கொண்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top