Thendralai Thoothuvittu - Ep 1

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
எனது கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவிடுகிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தென்றலைத் தூதுவிட்டு!

அத்தியாயம் 1

தீபத் திருநாள் தீபாவளி.

அதிகாலையிலே எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தாள் சத்யா.

“சத்யாக்கா... தீபாவளி வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து கூறினாள் சிறுமி அனு- சத்யாவின் வீடிருக்கும் தெருவில் வசிக்கும் பெண்.

பதிலுக்கு வாழ்த்து தெரிவித்த சத்யா “என்ன அனு இன்னும் குளித்து புதுத் துணி போடவில்லை?” என்று கேட்டாள்.

சிறுமி பதில் கூறும் முன் வீட்டிலிருந்து வெளிப்பட்ட அவளது பாட்டி “யாருகிட்ட பேசிட்டிருக்கே..?” என்று கேட்டவாறே வந்தார். சத்யாவைக் கண்டதும் “நல்ல நாளும் அதுவுமா இந்த விடியா மூஞ்சிகிட்ட உனக்கென்ன பேச்சு வேண்டிக் கிடக்கு... அவளைப் போல நீயும் கெட்டு அலையப் போறியா?” என்று அனுவைத் திட்டினார்.

வேதனையுடன் பார்த்த சத்யா “பாட்டி ப்ளீஸ்... அவளை ஒன்னும் சொல்லாதீங்க¸ அவள் சின்னப்பெண்” என்றாள்.

“யாருக்கு யாருடி பாட்டி?” என்று எகிறியவர்¸ “இவள் என் பேத்தி... இவளை நான் என்னவும் சொல்வேன்... அதைப்பற்றி உனக்கென்ன?” என்று சொல்லிவிட்டு “காலையிலே இவளுக்கு பேச்சு வாங்கிக் கொடுத்ததில் உனக்கு சந்தோஷம்தானே...? கிளம்பு” என்று அவளிடம் சொல்லிவிட்டு சிறுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

‘ச்சே... ஏன் இப்படி நடந்துக்குறாங்க? அப்படி நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று எண்ணியபோது கோவில் மணி ஒலிக்கக் கேட்டதும் நடையை எட்டிப்போட்டாள்.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. நெரிசலிலும் இறைவனை தரிசித்தவள் கோவிலை வலம் வந்து ஓர் இடத்தில் அமர்ந்தாள்.

கண்மூடியிருந்தவள் ‘அம்மாவிற்கு சரியாக வேண்டும்... மனதில் நிம்மதி வேண்டும் இறைவா! எனக்கும் அம்மாவிற்கும் உன்னைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? நீதான் எங்களுக்குத் துணையிருக்க வேண்டும்... நான் சென்று கொண்டிருக்கும் இந்த வேலையாவது நிலைத்திருக்க நீதான் அருள் புரிய வேண்டும்’ என்று மானசீகமாக இறைவனிடம் கேட்டுக் கொண்டாள்.

இறைவனை தரிசித்து விட்டதால் இனி கிளம்ப வேண்டியதுதான் என்று எழுந்தவளுக்கருகில் வந்தனர் இரு பெண்கள்....

“இவளையெல்லாம் யார் இந்த மாதிரி புனிதமான இடத்துக்கு வரச் சொன்னது?” என்று முகத்தை வெட்டினாள் பக்கத்துத் தெருவில் வசிக்கும் வேதவல்லி. அவளுக்குத் துணையாக “ஆமாம்” போட்டாள் உடனிருந்தவள்.

கேட்டுக் கொண்டிருந்த சத்யா ‘இப்படியே போனால் என்னை ஒரு இடத்திற்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடக்கிவிடுவார்கள்?’ என்றெண்ணி... நேராக வேதவல்லியிடம் சென்று “நான் கோவிலுக்கு வந்ததனால் என்ன புனிதம் கெட்டுவிட்டது?” என்று முகத்திற்கு முன் கேட்டுவிடவும் மற்றவள் திகைத்துவிட்டாள்.

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு “கண்ட கண்டவனோடு லாட்ஜூக்குப் போய் வர்றவளுக்கு கோவில் ஒரு கேடா?” என்றாள்.

“நான் லாட்ஜூக்குப் போனதை நீங்க பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.

“நான் ஏன்டியம்மா அந்த கண்றாவியெல்லாம் பார்க்கப் போறேன்... அதான் உன்னைக் கட்டிக்க இருந்தவன் அதைப் பார்த்துட்டு வந்து கல்யாணத்தை நிறுத்தினானே... அது போதாதா?” என்று ஏளனமாகக் கேட்டாள் அவள்.

இவ்வளவு நேரமும் அவர்களது வாயை மூடவைத்துவிட வேண்டுமென்று எண்ணி பேசிக் கொண்டிருந்தவளால் இப்போது ஒன்றும் பேசமுடியவில்லை.

‘இந்த வேதவல்லி கேட்பதுபோல அவன்... அந்த முகிலன் திருமணத்தை நிறுத்தியது நிஜம். அதன் காரணமாக அவன் சொன்னதும் இதுதானே...!’

என்ன சொல்வதென்று தெரியாததால் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினாள்.

அதைப் பார்த்ததும் மற்றவர்கள் இருவரும் “பார்த்தியா..? பதில் சொல்ல முடியாமல் எப்படிப் போகிறாள்?” என்று பேசி சிரித்துக் கொண்டனர்.

விரைவாகப் படிகளைக் கடந்தாள்.

‘பிரச்சினைக்கு தீர்வு கேட்டு உன்னிடம் வந்தேன்... உன்னைப் பார்க்கும் இடத்திலும் பிரச்சினை என்றால் நான் எங்கு போவது இறைவா?’
வேகமாக நடந்து சென்று அவள் வீட்டை அடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டிருந்தது. தீபாவளி என்பதால் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது.

முன்னாட்களில் தான் தீபாவளியைக் கொண்டாடிய நினைவுடனும் இப்போது தானிருக்கும் நிலையையும் எண்ணியவாறே வீட்டை அடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்றவள் அதிர்ந்து நின்றாள்.

“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்று கணவர் சங்கரனின் காலில் விழுந்தார் பார்வதி.

“நல்லாயிரும்மா...!” என்று தூக்கிவிட்டவரிடம் குங்குமச் சிமிழை நீட்ட அதிலிருந்து குங்குமத்தை எடுத்து மனைவியின் நெற்றியில் வைத்தவாறே “சஞ்ஜீவ் எங்கே? இன்னும் எழுந்து வரவில்லையா?” என்று கேட்டார்.

“அவன் காலையிலேயே எழும்பி ஜாகிங்கை முடிச்சிக்கிட்டு... இப்போதான் குளிக்க போனான்” என்று பதிலளித்துவிட்டு “ஏங்க... அவன்கிட்ட எதுவும் சொல்லணுமா?” என்று கேட்டார் பார்வதி.

“நான் அவன்கிட்ட என்ன கேட்பேன்னு உனக்குத் தெரியாதா பார்வதி?” என்று கேட்டார் அவர்.

“நம்ம கம்பெனியை பார்த்துக் கொள்வது பற்றித்தானே சொல்றீங்க..?” என்று மனைவி கேட்க¸ “ஆமாம்...” என்று தலையசைத்தார் அவர்.

“அவன்தான் அதைப் பற்றிப் பேசினாலே நழுவிவிடுகிறானே...”

“அதான்... என்ன பண்றதுன்னு எனக்குப் புரியலை. நமக்கு இருப்பது அவன் ஒருத்தன்தான். இப்போதெல்லாம் என்னால் முன்போல பொறுப்பாக பார்த்துக் கொள்ள முடிவதில்லை பார்வதி... பொறுப்பை அவன் எடுத்துக் கொண்டால் நான் கொஞ்ச நாட்களுக்கு ஓய்வெடுக்கலாம் இல்லையா?” என்றார் சங்கரன்.

“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்¸ அவன்தான் அவனுடைய தொழிலை விடமாட்டேன் என்கிறானே?” என்று வருந்தினார் பார்வதி.

“அதனால்தான் இன்றைக்கு அவனிடம் இதற்கு ஒரு முடிவு கேட்க வேண்டுமென்றிருக்கிறேன். அவன் நம்மோட இந்த சலவைத் தூள் மற்றும் சோப் தயாரிக்கும் தொழில் வேண்டாமென்றால்... அந்தத் தொழிலாளர்களின் கதி என்னாகும்? அவர்களது குடும்பம் பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டும் பார்வதி. இதையெல்லாம் அவனிடம் எடுத்துச் சொல்லி நல்ல முடிவாக எடுக்கச் சொல்ல வேண்டும்” என்றவர்... “அவன் வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்” என்று சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்றார்.

ஷவரில் நின்று வியர்வை போக குளித்துக் கொண்டிருந்தான் சஞ்ஜீவன் - வயது முப்பத்தியிரண்டு. சங்கரன் - பார்வதி தம்பதியரின் ஒரே தவப் புதல்வன். திருமணம் முடிந்து மனைவியை இழந்தும் ஆண்டு இரண்டு சென்றுவிட்டது.

வீட்டுப் பெரியவர்களுக்கு அவன் ஒரே பிள்ளை என்பதால் தங்கள் வம்சம் இத்தோடு முடிந்துவிடக்கூடாது என்ற எண்ணம். அதனால் அவனுக்கு மறுமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சி செய்ய அந்த முயற்சிகளையெல்லாம் வேண்டாம் என்று சொல்லி தடுத்துக் கொண்டிருப்பவன்.

ஷவரை விட்டு வெளியில் வந்தவன் ஈரத்தலையை துவட்டாமலே தன் அறைக் கண்ணாடியின் முன் சென்று நின்றான்.

அவன் முகத்தைக் காண்கையில் அவனுக்கே வெறுப்பாக இருந்தது.

கண்கள் கடினமாக மாறியது.

“என் வாழ்வை இல்லாமலாக்கிய உனக்கு ஒரு தண்டனை மட்டும் போதாது சத்யா....!!!” என்று வெறியுடன் கத்தினான்.
சத்யா மேல ஏன் காேபம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top