SVS - 11

shamla

Writers Team
Tamil Novel Writer
11


அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்த ஷிகாவிற்கு தான் எப்படி விபத்தின்றி வீடு வந்து சேர்ந்தோம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது.

கையில் குழந்தையுடன் அவனை பார்த்த கணம் உலகமே ஒருநொடி தன் இயக்கத்தை நிறுத்தியது போல் அல்லவா அவள் உணர்ந்தாள். அந்நினைவு இப்போதும் அவள் நெஞ்சத்தை சுருக்கென பதம் பார்த்து முள்ளாய் தைத்தது. உள்ளத்தின் வலி கன்னத்தில் கண்ணீரின் சாயலாய் வெளிப்பட்டது. ஆனால் அழபிடிக்கவில்லை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டாள்.


“நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாய் என நான் இங்கு
காத்திருக்கிறேன் மனதாலே உனக்கு மாலை
மாற்றிக்கொண்டே கனவாலே உனக்கு
மனைவியாகிக் கொண்டே நான் இங்கு
காத்திருக்கிறேன் காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே நான் இங்கு
காத்திருக்கிறேன் இங்கு காத்திருக்கிறேன்”திறந்திருந்த ஜன்னல் வழி கசிந்த பாடல் அவள் நிலையை அப்பட்டமாய் எடுத்துக்காட்டியது. தனக்காகவே பாடியிருப்பார்கள் போலும் கழிவிரக்கத்துடன் நினைத்துக்கொண்டாள். உள்ளம் வெதும்பியது. துக்கத்தில் தொண்டை அடைக்க இதயத்தினுள் கூர் கத்தியை விட்டு குடைந்தது போல் வலியெடுக்க கரம் கொண்டு நெஞ்சை அழுத்தினாள்.

கண்ணீர் கரையுடன் முகம் முழுவதும் சோகத்தை அப்பிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த மகளை கண்டு பதறிப்போன சிவகாமி அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதும் என்னவோ என்று உள்ளம் மறுக மகளின் அறைக்கதவை தட்டினார்.

“ஷிகா... ஷிகா கதவ தொறம்மா....”

அன்னையின் குரலில் நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கியவள் குளியறைக்குள் சென்று முகத்தை அழும்பி தாமதிக்காமல் கதவை திறந்தாள்.

“என்னம்மா....” குரல் பிசிறடித்தது. அழுகையில் கரைந்த நெஞ்சத்தின் கரகரப்பு குரலில் பிரதிபலித்தது.

“என்னாச்சு ஷிகா... ஏன்மா ஒருமாதிரி இருக்க உடம்புகிடம்பு சரியில்லையா... காபி போட்டு தரட்டுமா...”

‘உடம்பு நல்லாத்தான்மா இருக்கு... மனசு தான் உடஞ்சுபோச்சு...’ அன்னையின் கேள்விக்கு மனதினுள் பதில் கூறிக்கொண்டாள்.

“லேசா தலைவலி மாதிரி இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும்...”

“சரிம்மா தலைவலி மாத்திரை ஒன்னு போட்டு தூங்கு...” என்றவர் மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தவண்ணம் அகன்றுவிட்டார்.

பெற்று வளர்த்த தாய்க்கு தெரியாத மகளை பற்றி. மகளின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டார். அது தலைவலி பிரச்சினை அல்ல தலைபோகும் பிரச்சினை என்று. அதை தான் தாய் அறியாத சூல் உண்டோ என்பார்களோ. இருந்தும் அதை அவளிடத்தில் கேட்டு சங்கடப்படுத்தாமல் வந்துவிட்டார். சொல்ல வேண்டும் என்றால் அவளே தன்னிடத்தில் சொல்லுவாள் என்ற நம்பிக்கையில்.

அவளே மறக்க நினைக்கும் ஒன்றை எப்படி தன் தாயிடத்தில் கூறுவாள்.
ஹர்ஷித்தை தமக்கை வீட்டில் விட்ட ஆர்யன் நொடியும் தாமதிக்காமல் வீட்டிக்கு வந்து அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டவன் பிரித்தறிய முடியா மனநிலையில் இருந்தான்.

அவளை பார்த்ததில் மகிழ்வதா இல்லை கண்ணீருடன் தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றதை நினைத்து வருந்துவதா என குழம்பிப் போனான்.

இருந்தும் முழுதாய் ஏழு வருடங்கள் கழித்து அவளை பார்த்ததில் அவன் நெஞ்சம் களிப்பில் விம்மியது. தன் காதல் தான் கைகூடாமல் போய்விட்டது அட்லீஸ்ட் அவளின் காதலாவது கைகூட வேண்டும் என எண்ணிக்கொண்டான். முக்கியமாய் தான் அவள் கைபிடிக்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டான்.

தன்னை காதலித்தவளின் காதல் நிறைவேற வேண்டும் என உளமார எண்ணினான் ஷிகாவின் காதலன்.

அவன் மனதின் எண்ணம் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க பளீர் புன்னகையுடன் படுக்கையில் சாய்ந்தவன் அவள் நினைவுகளை சுகமாய் அசைபோட்டான்.

‘ஷிகாயா... என் பெயர்... பெயரை சொல்லியே கூப்பிடுங்க...’ பதின்வயதில் இருந்தவளின் ஆர்ப்பாட்டமான குரல் அவன் செவியினில் ஒலிக்க கண் மூடி ரசித்தவன் ‘இனிமே பேரை சொல்லி கூப்பிட வேண்டியது தான்..’ மனதோடு பேசி அவளின் நினைவுகளூடே உறக்கத்தை தழுவினான்.

தூங்க வேண்டும் எனக்கூறி விளக்கை அணைத்தும் கண்களில் தூக்கம் எட்டாமல் அவன் நினைவு கொடுத்த வலியை தாங்க முடியாமல் படுக்கையில் புரண்டவளுக்கு எத்தனை முயன்றும் கண்கள் கரிப்பதை தடுக்கமுடியவில்லை.

அதற்கு மேல் முடியாமல் எழுந்தமர்ந்தவள் தலையை கைகளால் தாங்கிக்கொண்டாள். இப்போது உண்மையிலே தலைவலி மண்டையை பிளந்தது. மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டவள் தலையை கையால் தாங்கிக்கொண்டே அலுமாரியை திறந்து அதனுள் இருந்த கவரை வெளியில் எடுத்தாள்.

ஆர்யனின் நினைவில் அவள் எழுதிய கவிதைகளும் அவனை தினமும் பார்ப்பதற்காய் அவனை மனக்கண்ணில் கொண்டு வரைந்த ஓவியங்களும் அவளை பார்த்து கேலியாய் சிரித்தது.

அதை பிரித்து அதில் இருந்த ஓவியங்களை வெளியில் எடுத்தவள் வழக்கம்போல் ஒவ்வொன்றாய் பார்வையிட்டாள்.

அவன் இருப்பது போன்ற ஓவியம், அவனும் அவளும் இருப்பது போன்றது, அவர்களுக்கு திருமணம் ஆவது போன்று, தாய்மை பூரிப்புடன் அவள் கர்ப்பம் தரிப்பது போன்று, பிறந்த குழந்தையை அவன் கைகளில் ஏந்திய போல், அவர்களின் மகவு வளரும் பருவங்கள், இறுதியில் அவர்களின் முதுமை தோற்றம் என தாங்கள் இப்படியெல்லாம் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் அவள் வரைந்த ஓவியங்கள் அவை.

இதற்கு மேலும் இதை வைத்திருப்பது நியாயமன்று என வாதிட்ட மூளை அதை கிழித்தெறிய கட்டளை இட்டது. காதல் வாதையில் வாடிய நெஞ்சம் நிஜத்தில் உறவாட முடியாதவனை நிழலிலாவது பார்த்து வாழ ஆசை கொண்டு அதை பொக்கிஷமாய் பாதுகாக்க முயன்றது.

காதல் நெஞ்சமோ மூளையின் சொற்படி நடவாது மனதின் சொல் கேட்டு மீண்டும் அதை பத்திரப்படுத்தியது. ஆனால் மறு நிமிடமே அதை கசக்கி தூர வீசினாள். ‘அவன்’ நினைவில் அதை காக்க முயன்றவள் ‘சின்னவனின்’ நினைவில் தான் செய்ய துணிந்த காரியத்தை எண்ணி நொந்துபோய் தரையில் மடிந்து அமர்ந்து கதறியழுதாள்.

சிலவற்றை மறந்து விட்டேன் என்று வாயால் கூறலாமே தவிர மனதால் கூறுவது கடினம் தான். ஏனென்றால் சிலவற்றை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.

இப்போது அவள் நிலையும் அது தான். அவனை மறந்து விட்டதாக மனதை கல்லாகிக் கொண்டவள் இப்போது அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் உள்ளம் கதற தவித்து துடித்துப் போனாள்.

மறுநாள் காலையில் வீங்கி சிவந்த முகத்துடன் மருத்துவமனை செல்ல தயாராகி வந்த ஷிகா ஒன்றும் பேசாது சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.

காலையுணவை பரிமாறிக்கொண்டிருந்த சிவகாமி அவளின் வீங்கிய முகத்தையும் சிவந்திருந்த கண்களையும் ஓர் நொடி கூர்ந்தவர் அதை வெளிக்காட்டாமல் “தலைவலி இன்னும் கொறயலையா ஷிகா...” வாய் கேள்வி எழுப்பினாலும் கைகள் கணவனுக்கும் மகனுக்கும் பரிமாறிக்கொண்டிருந்தது.
 
shamla

Writers Team
Tamil Novel Writer
மகளின் வரவில் நிமிர்ந்து பார்த்த சிதம்பரம் அவளின் வீங்கிய முகத்தை பார்த்து அதிர்ந்து போய் சாப்பிட்டில் இருந்து கையை எடுத்தவர் மனைவியின் கூற்றில் மகளுக்கு தலைவலி என்றறிந்து கவலையுடன் அவளை பார்த்தார்.

“தலைவலியா... மாத்திரை போட்டியாம்மா...”

தந்தையின் கேள்வியில் வெறும் தட்டை அளந்துகொண்டிருந்தவள் அவரை நிமிர்ந்து நோக்கினாள்.

“ஆ... ஆ.. ஆமாப்பா போட்டேன்... இப்போ கொஞ்சம் பரவாயில்ல...” மென்று முழுங்கினாள்.

தமக்கையின் செய்கையை விசித்திரமாய் பார்த்த சுரேன் அவளின் மேல் ஒரு கண் வைத்தவாறே தட்டில் இருந்த உணவை வாயில் திணித்தவன் விரைவாக உண்டு விட்டு கல்லூரி செல்வதற்காய் ஆயத்தமாகியவன் கல்லூரி செல்லும் முன் தமக்கையின் அறையினுள் நுழைந்தான்.

ராத்திரி படித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீர் தீர்ந்து போயிருக்க தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு செல்ல வெளியில் வந்தவன் தமக்கையின் அறையை கடக்கும்போது உள்ளிருந்து எதுவோ சத்தம் கேட்க, இந்நேரத்தில் செல்வது சரியில்லை என்று விட்டவன் அவள் உணவு உண்ண அமர்ந்ததை பார்த்து அவளின் அறைக்குள் சென்று நோட்டம் விட்டான்.

மூளையில் கசங்கிக் கிடந்த பேப்பர்களை பார்த்தவன் கல்லூரி செல்லும் அவசரத்தில் அதை தன் பையினுள் திணித்துக்கொண்டு அவசரமாய் அங்கிருந்து அகன்று விட்டான்.

அன்னை தட்டில் உணவு பரிமாற மறுக்க முடியாமல் வாயில் திணித்து நீரை விழுங்கியவள் மருத்துவமனைக்கு புறப்பட எத்தனிக்க விரைவாக சென்ற மகளை தடுத்து நிறுத்தினார் சிவகாமி.

“ஷிகா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா...”

கைக்கடிகாரத்தை பார்த்தவள் தாயை கேள்வியாய் நோக்கினாள்.

“நேரமாச்சும்மா ஈவ்னிங் வந்ததும் பேசிக்கலாமே...”

அன்னை எதை பேசப்போகிறாரோ எனும் பயத்தில் தப்பிக்க முயல அவரோ அவளை அழுத்தமாய் பார்த்து வைத்தார். பதட்டத்தில் முகத்தில் வியர்வை துளிகள் அரும்ப கைகளை பிசைந்தவாறு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சிதம்பரம் பேங்க் மேனேஜர்... ஆதலால் சாப்பிட்டு முடித்த கையோடு மகளிடம் நலம் விசாரித்தவர் பேங்க் கிளம்பி சென்றுவிட்டார்.

கணவருக்கு விடைகொடுத்து மகனையும் கல்லூரி அனுப்பி வைத்தவர் பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு மகளின் அருகில் அமர்ந்து அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவாறே பேச ஆரம்பித்தார்.

முதலில் அவரின் பேச்சை புரியாமல் கேட்டவள் பின்பு சாராம்சம் புரிந்து நெஞ்சம் அதிர திடுக்கிட்டு போய் அன்னையை வெறித்துப்பார்த்தாள்.

இவளைப்போன்றே இவளின் தோழி ஷாஷியும் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தவள் நேற்றைய அவனின் நினைவை அசைபோட்டு அவன் கண்களில் கண்ட வெறுப்பினை இப்போதும் நேரில் காண்பவள் போன்று கண்மூடி ஜீரணித்துக் கொண்டவளுக்கு அதற்கு மேல் எதையும் செய்ய முடியவில்லை.

ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள் விட்டத்தை வெறித்துப்பார்த்தாள். விழிகள் கலங்கி சிவந்தது. மனதின் பாரத்தை தாங்கமுடியாமல் விரல் நகங்கள் ஒன்றை ஒன்று பந்தாடின. உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர இதழ்களை அழுந்த கடித்தாள். பற்களுக்கு இரையான இதழ்களில் ரத்தம் கசிந்தது.

மகள் இன்னும் கிளம்பி வராததில் அவளின் அறைக்குள் நுழைந்த கண்மணி மகள் அமர்ந்திருந்த தோற்றத்தை கண்டு துணுக்குற்றார்.

“ஷாஷி என்னடா....” தலையை வருடி பாசமாய் கேட்ட அன்னையின் குரலில் தன்னை கடிந்து கொண்டவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

கண்களில் கவலை படிய தன்னையே பார்த்திருந்த தாயை கண்டு தன் சோகத்தை மறைத்துக் கொண்டவள் இதழ் பிரித்து சிரித்தாள்.

அதில் ஜீவனில்லாததை கண்டுகொண்டவர் பதறிப்போய் ஆதுரத்துடன் அவள் தலை வருடி உச்சி முகர்ந்தார். அவளுக்கு இருப்பத்து நான்கு வயதாகிய போதும் அவளின் தாய்க்கு அவள் இப்போதும் சிறு குழந்தை தான்.

அதற்குமேல் தாமதிக்க முடியாமல், அசைய மறுத்த கால்களை இழுத்து பிடித்து வைத்தவள் உணவுண்ண அழைத்த அன்னையை சமாதானப்படுத்தி ஒருவழியாய் பள்ளிக்கு புறப்பட்டாள். அங்கு தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.

நகரின் மையத்தில் பணக்கார்கள் வசிக்கும் குடியிருப்பில் வெள்ளை பளிங்கு மாளிகை போன்றிருந்த வீட்டில் இரண்டு பக்கமும் நீண்டு விரிந்திருந்த படிகட்டில் பழுப்பு நிற பேன்ட் வெள்ளை நிற முழுக்கை சட்டை அதற்கு பொருத்தமான பழுப்பு நிற கோர்டில் அட்டகாசமாய் தலை கோதி படிகளில் இறங்கினான் ரோஹன் கிருஷ்ணா.

ஆறடியில் வயதுக்குரிய வளர்ச்சியுடன் கம்பீரமாய் இளம் புன்னகை முகத்துடன் மாடிப்படிகளில் இறங்கி வந்த பேரனை, ஹாலின் நடுநாயகமாய் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து பாசத்துடன் பார்த்தார் பூங்கோதை நாச்சியார்.

வெளிப்பார்வைக்கு கடுமையுடன் அதிகார தோரணையில் பணக்கார மிடுக்குடன் வலம் வருபவர் அவரின் பேரனின் முன்பு சாதாரண பாட்டியாய் மாறிப்போய்விடுவார்.

அவன் பிறந்து கைகளில் ஏந்திய நொடிப்பொழுதில் அவனை பாசத்துடன் பார்த்து வாஞ்சையாய் புன்னகைத்தவர் இன்று அவனுக்கு இருபத்தெட்டு வயதாகிய போதும் அதே மிதமிஞ்சிய பாசத்துடன் அவனை பார்த்திருந்தார்.

அதை பார்த்தவனின் கண்கள் பனித்தது. உள்ளத்தில் எரிமலை குழம்பாய் கோபம் வெறுப்பு கழிவிரக்கம் என அனைத்தும் அதிகபட்சத்தில் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த போதும் பாட்டியின் முன் அதை காட்டாமல் சிறு சிரிப்பை உதிர்த்தான். அதேநேரம் அவன் பார்வை வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களின் மேல் விழுந்தது.

பூங்கோதையின் வலது பக்கமிருந்து சோபாவில் அமர்ந்து ‘தி எகோனாமிக் டைம்ஸ்’ பிசினஸ் நியூஸ் படித்துக்கொண்டிருந்தார் அவரின் மகனும் ரோஹன் கிருஷ்ணாவின் தந்தையுமான கிருஷ்ணபிரகாஷ். ஐம்பதை தொட்ட வயதிலும் அத்தனை கம்பீரமாய் இருந்தார்.

அவரின் சரிபாதி மாலதிபிரகாஷ் மடிகனணியில் வந்து கொண்டிருந்த மெயில்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். mr&mrs பிரகாஷின் மூத்த மகன் ரஞ்சித் கிருஷ்ணா செல்போனில் வெகு தீவிரமாய் உரையாடிக்கொண்டு இருந்தான். அவர்களின் கடைசி மகளான நித்யஸ்ரீ ஐபேடில் முக்கிய குறிப்புகளை எடுத்தபடி அதில் தலை புதைத்திருந்தாள்.

பெற்ற மகனை காட்டிலும் உடன் பிறந்த சகோதரனை காட்டிலும் அவர்களுக்கு அவர்களின் வேலைகளே முக்கியமாய் பட தங்கள் கடமையை சரிவர செய்து கொண்டிருந்தனர். குடும்பத்தின் ஆணிவேரே அன்பு தான். இந்த பணக்கார வீட்டில் அது பஞ்சமாய் போய்விட்டது.

படிகளில் இறங்கியபடியே அவர்களை பார்த்த ரோஹனின் இதழ்கள் கசப்பாய் புன்னகை சிந்தியது. பேரனின் முகத்தையே பார்த்திருந்த பூங்கோதை நாச்சியார் அவன் மனதின் வாதையை உணர்ந்து ஆறுதலாய் அவனை பார்த்தார். அதை உணர்ந்தவனின் உள்ளம் நெகிழ்ந்தது.

அவன் குடும்பத்தில் இருக்கும் எவரும் காட்டாத பாசத்தை காட்டிய அவனின் பாட்டியினால் (அவனுக்கு மட்டும் செல்லா) மட்டுமே அவன் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறான். இல்லை என்றால் இந்நேரம் அவனை புதைத்த இடத்தில் பெரும் காடே உருவாகியிருக்கும்.

அந்தளவுக்கு பாசத்துக்காய் ஏங்கிப்போய் இருந்தான். அவனின் ஏக்கம் புரிந்தோ என்னவோ கடவுள் அவனுக்காக படைத்திருந்த பெண்ணவளை அவன் கண்ணில் காட்ட அவளை பார்த்த கணத்தில் இதயத்தில் காதல் மொட்டு அரும்ப அவளை பின்தொடர்ந்து அவளுடன் காதலால் இணைந்து அத்தனை சந்தோஷமாய் இருந்தான்.

அவனின் செல்லா கூட அவன் மீது அந்தளவு பாசம் நேசம் வைத்திருப்பாரா என்றால் தெரியாது என பதில் கூறுமளவுக்கு அவள் அத்தனை காதலை அவன் மீது வைத்திருந்தாள். அவள் காட்டிய காதலில் கரைந்து போய் உலகம் மறந்திருந்தான். அது அந்த கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்.

பெண்ணவளின் பாசம் நேசம் தனக்கு மட்டுமே எனும் கர்வத்தில் தலைகால் புரியாமல் சிறகடித்துப் பறந்தவனின் சிறகை நொடியில் பிய்த்து எறிந்திருந்தாள் அவன் காதலி. நான் வைத்தது பாசம் அல்ல வேஷம் என்பது போல். சந்தர்ப்பவசத்தால் நடந்த நிகழ்வில் அவர்களின் காதல் சுக்குநூறாய் உடைந்து சிதறிப்போனது. அத்தனையும் காற்றோடு காற்றாய் மாறி பறந்து விட்டது.
 
shamla

Writers Team
Tamil Novel Writer
இப்போது மீண்டும் அவன் பாசத்துக்கு ஏங்கும் மழலையாய் மாறிப்போனான். ஆனால் இம்முறை அதை யாரிடத்திலும் கட்டாமல் மறைப்பதிலும் வல்லவனாய் மாறிப் போயிருந்தான். ஒருமுறை பட்ட அடி ஆறாத வடுவாய் அவனுள் கனன்று கொண்டிருந்தது.

புன் சிரிப்புடன் பாட்டியின் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் அவரின் தோளில் தலைசாய்த்துக் கொண்டான். சிறுபிள்ளை போல். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அனைவரும் அவனின் செயலில் முகத்தை சுழித்தனர்.

“வாட்’ஸ் திஸ் ரோஹன்” முகச்சுழிப்புடன் கேட்டார் மாலதி.

அதில் தலையுயர்த்தி பார்த்தவன் “புரியலை...” உதடு பிதுக்கி தலை குலுக்கினான்.

அதில் மருமகளை கண்டிப்புடன் பார்த்த பூங்கோதை “மாலதி..” அழுத்தமாய் அழைக்க, அதில் அவரை புரியாது பார்த்தவள் தன் கணவனை கண்களால் பொசுக்கி “பிரகாஷ்...” என்றார் அழுத்தத்துடன்.

மனைவியின் குரலில் பேப்பரில் இருந்து தலையுயர்த்தியவர் “மாலு... கூல்...” என்றவாறே இளைய மகனை பார்த்தார்.

“ரோஹன் டிட்ன்ட் கோ டு ஆபீஸ்...”

அவரின் கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட பேரனை கண்களால் தடுத்தவர் “இன்னையிலிருந்து ரோஹன் ஸ்கூலோட பொறுப்பையும் சேர்த்து எடுக்கட்டும்...” கண்டிப்புடனான குரலில் கூறியவர் மறுத்து ஏதோ கூற முயன்ற மகன் மருமகளை ஒற்றை பார்வையிலே வாய் மூட வைத்தார்.

“ரோஹன்... டுடே யூ ஆர் கோய்ங் டு டேக் சார்ஜ் ஒப் ஸ்கூல்... ஐ ஹேவ் ஆல்ரெடி கம்ப்லிடேட் தி அரேன்ஜ்மேன்ட்ஸ்... சோ டுடே யு ஹேவ் டு கோ டு ஸ்கூல் அன்ட் தென் கோ டு தி ஆபீஸ்...” என் முடிவே இறுதியானது என்பது போன்றதொரு குரலில் கூறியவர் தன் அறை நோக்கி சென்றார்.

பாட்டியின் பேச்சில் தலை குலுக்கி சிறு சிரிப்பை உதிர்த்து உங்கள் பேச்சை மீற மாட்டேன் என்பது போல் அவரை பார்த்தவன் தன் காரை நோக்கி சென்றான்.

உள்ளுக்குள் அவளை காண்போமா எனும் ஏக்கம் கரையனாய் அரித்தாலும் அவளை காணவே கூடாது என வெறுப்புடன் எண்ணிகொண்டான்.

தாமதமாய் வந்ததில் அரக்கபறக்க பள்ளியினுள் அடியெடுத்து வைத்த ஷாஷி மயான அமைதியில் இருந்த பள்ளியை புரியாமல் பார்த்தவண்ணம் உள்ளே நுழைய இவள் வரவிற்காகவே காத்திருந்தது போல் எங்கிருந்தோ வேகமாய் ஓடி வந்த பியூன் “ஷாஷி மேம் உங்கள கரஸ் சீக்கிரமா வர சொன்னாங்க...” என்றவன் அதே வேகத்தில் நில்லாமல் ஓடிவிட்டான்.

அதை புரியாமல் பார்த்தவள் கரஸின் அறைநோக்கி சென்று நாசுக்காய் கதவை தட்டினாள்.

“எஸ்...” ஆண்மையின் இலக்கணத்துடன் உள்ளிருந்து வந்த குரலில் நெஞ்சம் அதிர உடல் வெளுக்க தலை குலுக்கி சமன் செய்தவள் நகர மறுத்து கால்களையும் அதிர்ந்து துடித்த நெஞ்சத்தையும் வெகுவாய் கட்டுப்படுத்தி உள்ளே நுழைய, அங்கு கண்ட காட்சியில் நெஞ்சம் பதற விக்கித்துப்போய் நின்றாள்.

பூமி பிளந்து தன்னை உள்ளிழுக்காத எனும் ஏக்கமும் அதிர்வும் ஒன்றாய் அவள் விழிகள் பிரதிபலித்தது.

இவளை போன்றே விழிகளில் அதிர்வும் அதனுள் சற்று சந்தோஷமும் அதை வெளிக்காட்டாமலிருக்க முயற்சித்தும் முடியாமல் பளிங்கு நிலவாய் முகம் பிரகாசிக்க முகங்கொள்ளா புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தாள் ஷாஷியின் தோழி மதுபாலா.

இன்னும் சில நாட்களில் திருமணம் களைகட்ட ஆரம்பித்துவிடும் என்பதால் அதற்கு முன்னர் ஊர் சுற்றிப்பார்க்க ஆசைகொண்ட மதுபாலா ஆர்த்தியை ஒருவழியாய் சமானதானப்படுத்தி வெளியே கிளம்பியிருந்தாள்.

அவள் காலை பதம் பார்த்து வந்ததில் இருந்து அவளை வெளியில் எங்கும் செல்லவிடாமல் அன்புத்தொல்லை செய்தவள் இன்று முழுதாய் குணமாகிய போதும் சிலபல கட்டளைளுடனும் ஆயிரம் பத்திரமுடனும் தன் ஸ்கூட்டியை கொடுத்து வெளியே செல்ல அனுமதித்திருந்தாள்.

ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்தவளுக்கு திடீரென ஷக்தியின் நினைவு வர முகம் குப்பென வியர்க்க அதிர்ந்து போய் வண்டியை ஓரங்கட்டினாள்.

காலை நேரத்து பனிபடர்ந்த ரோஜாவாய் அழகுற காட்சியளித்தது வியர்வை துளிகள் பரவிய செம்பாவையாளின் வெண்தாமரை முகம்.

இயற்கையிலே சிவந்த செவ்விதழ்கள் படபடப்பில் தவித்து துடிக்க அதை தாங்க மாட்டாமல் பற்களால் கீழுதட்டை சிறை செய்து கொண்டாள்.

குளிர்ந்த தென்றல் காற்று பாவையாள் மேனி வருடி நேற்று உணராத ஆடவனின் தொடுகையை இன்று உணர்த்த முற்பட்டது. அதில் பெண்ணவளின் மேனி கூசிச் சிலிர்த்து அடங்கியது.

நெஞ்சுக்குள் ரயிலோடும் ஓசை. நேற்று உணராத அவன் தொடுகை இன்று அவன் கரம்பட்ட பாதத்தில் உணர்ந்தவளின் கால்பாதம் குறுகுறுத்தது. அதில் தளிர்மேனியாளின் வதனம் நடுங்கியது.

தன் உள்ளத்து உணர்வுகளை பிரித்தறிய முடியாமல் திகைத்துப்போய் நடுவீதியில் தடுமாறி நின்றாள் மதுபாலா. பலரின் வழக்குகளை வாதாடி அதை தன் திறமையான பேச்சாலும் நேர்கொண்ட பார்வையாலும் எதிராளியை ஒன்றுமில்லாமல் உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடி அவர்களுக்கான நீதியை வழங்கியவள் இன்று தன் நெஞ்சத்தில் மலர்ந்தும் மலராமலும் ஊசலாடிக்கொண்டிருந்த காதலுக்கு நீதி வழங்க முடியாமல் தன் உணர்வு செல்லும் பாதை சரியானதா என கணக்கிட முடியாமல் தன் உள்ளத்தை மறைத்து அதை வெளிப்படுத்த முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க பனி மறைத்த வானை வெறித்துக்கொண்டு நின்றாள்.

அவளின் தடுமாற்றம் உணர்ந்து பரிதாபப்ட்ட கடவுள் பெண்ணவளின் மனதின் உணர்வை அதன் நிலையை அவளுக்கு புரியவைக்க முயன்றார் மழலைகளின் சிரிப்பொலியின் மூலம்.

கவனம் சிதற மழலை மொழி தெறித்து விழுந்த திசையினை பார்த்தவள் மீண்டும் அதிர்ந்து போனாள். ஒரு நாளைக்குள் அவளும் எத்தனை அதிர்ச்சியினைத் தான் தாங்குவாள் எனும் நிலையில் தான் திகைத்துப்போய் நின்றாள்.

காரணம் அவள் வண்டியை ஓரங்கட்டிய இடம். ஷக்தியின் நினைவுகளின் ஓட்டத்தில் அவனின் வீட்டின் முன்னே தன் வண்டியை நிறுத்து கீழிறங்கி இருந்தாள். அது எப்படி சரியாய் அவன் வீட்டின் அருகில் வந்ததும் வண்டியை விட்டு இறங்கினோம் என்பது புரியாதவளாய் குழம்பியவளின் பார்வை அவளையும் மீறி திறந்திருந்த வாயிற்கதவின் வழியே உள்ளே பாய்ந்தது.

மழலைகள் மட்டுமன்றி தள்ளாடும் வயதினில் மழலைகளாய் மாறிப்போன வயது முதிர்ந்தவர்களும் அருகிலிருக்கும் வீடுகளில் வேலை செய்யும் வேலைக்கார பெண்களும் அந்த காலை நேரத்து புத்துணர்ச்சியுடன் தங்களை மறந்து சிரித்துக்கொண்டு இருந்தனர்.

கைகளை மேலே உயர்த்தி கீழே குனிந்து சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து அவள் இதழ்களும் சிரிப்பில் விரிந்தது.

சிரிப்பு யோகா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. சிறார்கள் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவருகிறார்கள். வயதானவர்களும் சிரிப்போடு துள்ளிக் குதித்துக்கொண்டே இந்த யோகாவைச் செய்துவருகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளாக மாறிப் போகிறார்கள். மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக இந்த யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை

மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிரிப்பு யோகா நல்ல மருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செய்துவந்தால், அதிலிருந்து குணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

நம் நுரையீரலில் 6.8 லிட்டர் அளவு அசுத்தக் காற்று உள்ளது. நாம் சிரிக்கும்போது 5 லிட்டருக்கும் மேல் அசுத்தக்காற்று வெளியேறி, அதே அளவுக்கு நல்ல காற்று உள்ளே செல்கிறது. இது உடலுக்கு உற்சாகத்தைத் தரும்.

அதை தன்னை சுற்றியுள்ளோருக்கு கற்றுக்கொடுத்திருந்தான் ஷக்தி. வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும். இன்றும் அதேபோல் அனைவரையும் ஒன்றுகூட்டி தானும் அவர்களுடன் இணைந்து செய்து கொண்டிருந்தான்.

அதை தான் பெண்ணவள் இமைசிமிட்டாது பார்த்திருந்தாள்.

ஒருத்தனால் எப்படி எல்லாருக்கும் உதவ முடிகிறது. அன்று யாரென தெரியாத தனக்கு உதவினான். இன்று பலருக்கு தன்னால் முடிந்த நல்லதை செய்கிறான். இவனை எந்த கணக்கில் சேர்ப்பது என்பது புரியாமல் பளீர் புன்னகை முகத்துடன் சிறு குழந்தையை கையில் வைத்திருந்தவனை அளவிட்டாள்.


“முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே...”சிதறும்...
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷம்லா டியர்
 
Last edited:

Keerthi elango

Well-Known Member
Nice ud sis...3 frnds ume ovoru mana nilaila irukanga....siripu yogava pathi alaga soliruntheenga...songs selection super... Keep rockinggg dr
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top