SVS - 10

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
10


உள்ளத்தினில் பொங்கி பிரவாகமெடுத்த உணர்வுகளை முகத்தினில் காட்டாது வெறுமை சூழ்ந்த முகமாய் தன் முன் நின்றவனையே பார்த்திருந்தாள் ஷிகா.

இதயத்தினுள் கத்தியை விட்டு சுழற்றியது போல் வலித்தது. தாங்கிக்கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்ட எத்தனித்தது. அணையிட்டு தடுத்து விட்டாள்.

அவன் ஏமாற்றியிருந்தால் ஒருவேளை கண்ணீர் வந்திருக்குமோ என்னவோ... இங்கு தான் அவன் அவளை ஏமாற்றவேயில்லையே... இங்கு காத்திருந்து ஏமாந்தது என்னவோ பெண்ணவள் தான் எனும் போது கண்ணீர் விட்டு என்ன பயன்.

தான் காத்திருந்த ஏமாந்து போன கதையை எண்ணி அவள் இதழ்கள் விரக்தியில் வளைந்தது. ‘எனக்கும் இப்போ காதலிக்கனும் போல இருக்கு...’ விக்ரமின் வார்த்தைகள் காதில் ஒலித்து அவளை பார்த்து ஏளனமாய் சிரித்தது.

இன்று அவனிடத்தில் பெருமையுடன் கூறிய தன் காதல் கதைக்கு அர்த்தமேயில்லாது போனதை எண்ணி கசந்த புன்னகையை படரவிட்டவள் மௌனமாய் அவனை பார்த்தாள். அவனிடத்தில் பேச வேண்டும் போல் உள்ளம் பரபரத்தாலும் என்ன பேசுவது தான் ஏமாந்த போன வேதனைக்கு அவனை பலிகடாய் ஆக்குவதா என்ற எண்ணம் மனதை வியாபிக்க நெஞ்சத்தினை பதம் பார்த்த வலியினை தாங்க முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.

ஆர்யன் என்னவென்று பிரித்தறிய முடியாத ஒரு மனநிலையில் அவளையே பார்த்திருந்தான். அன்று சிறு பெண் போன்று இருந்தவள் தற்போது சராசரி உயரத்தில் அவளின் சிவந்த மேனிக்கு எடுப்பாய் பொருந்திய இளம் சிகப்பு நிற புடவையில் தேவதை போன்று நிற்பதை பார்த்து தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்பதை வரையறுக்க இயலாதவனாய் ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு அவள் காதலை உரைக்கும் போது ஏதோ விளையாட்டிற்காய் கூறுகிறாள் என்று தான் அன்று அவன் அவளை திட்டிவிட்டு வந்தது. அதுவும் அப்போது தன் காதல் தோற்றுப்போன சோகத்தில் உழன்று கொண்டிருந்தவன் அவளின் பேச்சினை கேட்டு கோபமும் கொண்டதன் விளைவு தான் அவளை அறைவதற்கும் கையோங்கியது.

அதன் பின் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவன் அவளை பார்க்கவில்லை. அவள் படிப்பதற்காய் வெளியூர் செல்ல அவன் மேற்படிப்பிற்காய் வெளிநாடு சென்று விட்டான். இப்போது தான் சொந்தமாய் நிறுவனம் நடத்தி வருகிறான். அதில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பினும் பாலாவின் வேண்டுகோளிற்கு இணங்க தினமும் தன் மருமகனை காண வந்துவிடுவான்.

அவனுக்கு இருக்கும் வேலைகளில் தினமும் ஹர்ஷுவை காண அவனால் வர முடியாது தான்.. இருந்தும் தானும் இல்லாமல் அவனும் வராவிட்டால் குழந்தை மனதுடைந்து போய்விடுவான் என்பதால் பாலா ஊட்டிக்கு செல்லும் முன் அவனுக்கு அழைத்து தினமும் ஒருமுறையாவது ஹர்ஷுவை வீட்டில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாள்.

அவள் கேட்டதற்காகவே தன் வேலைகளை கிடப்பில் போட்டு மருமகனின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றான். தன்னால் காயப்பட்டு போனவளுக்கு அவளின் வார்த்தைகளை கேட்டு நடப்பதன் மூலமாவது பிராயசித்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொடுத்த உந்துதல் அது.

அப்படி வரப்போய் தான் தன் மனதின் ஆழத்தில் இருந்தவளை பல வருடத்தின் பின் நேரில் காண்கிறான். இதற்காகவே பாலாவிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல் தோன்றியது.

அன்றைய மழைநாளில் தான் அவன் பாலாவை கடைசியா பார்த்தது. அதன்பின் அவளை பார்க்கும் திராணியற்று வெளிநாடு சென்றவன் திரும்பி வரும்போது அவள் முற்றிலும் மாறிபோய் வேறு ஒருத்தியாக இருந்தாள்.

அவனுமே அப்படியொரு நிலையில் தான் இருந்தான். நிறைவேறாது என்று தெரிந்தும் வீணே காதல் கொண்டு காத்திருப்பதற்கு அவனது பக்குவப்பட்ட மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனாலும் அவனால் அவ்வளவு சுலபத்தில் அவளை மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

முதல் முதலாய் அவனுள் காதலை தோற்றுவித்தவள்... அவள் நினைவு என்றும் அவனுள் வாடாது இருக்கும். இப்போதும் அவனுள் அவளுடனான காதல் நினைவுகள் உயிர்ப்புடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு நினைவுகள் தான் வாழ்கின்றனவே தவிர காதலின் ஆதிக்கம் காலத்தின் நீண்ட நெடிய ஆறு வருடங்களின் தாக்கத்தில் குறைந்து மறைந்து போயிருந்தது.

தன் மனதை முதலில் தீண்டிய பெண்ணவளின் காதலை காலத்தின் கட்டாயத்தில் மறந்தவன் தனக்காய் காத்திருந்த பெண்ணவளை மனதினுள் நிறுத்திக்கொண்டான். இடையிடையே அவள் நினைவுகள் எழும் போதெல்லாம் அன்றைய அவளின் தோற்றத்தை கண்முன் நிறுத்திக்கொள்வான்.

இடைப்பட்ட இத்தனை வருடங்களில் அவளின் அன்றைய தோற்றத்தை மட்டும் தன் மனதில் நிறுத்திக்கொண்டு அவள் நினைவில் இருந்தவன் இன்று அவளை நேரில் பார்த்தும் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்தவியலாது அவளையே விழியகற்றாது பார்த்தான்.

பெண்ணவளோ முகம் கசங்கி வேதனையில் வாடிப்போய் தலைகுனிந்து நிற்க அவள் தோற்றம் அவன் மனதை அறுப்பதாய்...

அவளருகில் சென்று ஆறுதல் கூற விழைந்த உள்ளத்தை பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டவன் தனக்கு உரிமையான பொருளை பார்வையிடும் உரிமையாளனைப்போல் அவளை பார்வையால் மொய்த்தான்.

தன்னை துளைப்பது போல் இருந்த ஏதோவொன்றில் விழியை உயர்த்திய ஷிகா ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன் மனதில் காதலனாய் இருந்தவன் தன்னை உரிமையாய் பார்ப்பதை கண்டு கண்கள் மின்ன அவனை ஆர்வமாய் பார்த்தாள்.

இதற்காகத்தானே அவள் இத்தனை நாளாய் தவமிருந்தது. அந்த தவத்தின் பலன் ஏழு வருடங்கள் கழித்து அவளுக்கு கிடைத்து விட்டது. அவளுக்கு இதுவே போதும். அவனின் பார்வை ஒன்றே ஆயுளுக்கும் போதுமாய் இருந்தது. அவனின் ஒற்றை பார்வையில் பெண்ணவள் உயிர்த்தெழுந்தாள்.

அவள் காதல் நெஞ்சம் காதலில் மலர்ந்து மணம் வீசியது. அவன் பார்வையின் வீரியத்தினை தாங்கவியலாதவளாய் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். அவன் பார்வை துளைத்த கன்னங்கள் வெட்கத்தில் கூசிச் சிவந்தது செந்தாமரையாய்...

ஆனால் மறுநொடியே நிதர்சனம் முகத்தில் அறைய கூனிக்குறுகிப் போய் அவனை பார்த்தவளின் பார்வை அவளையும் மீறி அவன் தோளில் வாகாய் சாய்ந்திருந்த சின்னவனின் மேல் படிந்தது.

‘தான் என்ன காரியம் செய்துவிட்டோம்...’ தன் காதலுக்காய் ஒரு சிறு மொட்டின் வாழ்க்கையும் அவனை பெற்ற தாயின் வாழ்க்கையும் பாழாவதா... என்ன கேவலமான எண்ணம்.. தன் காதல் அத்தனை கீழ்த்தரமானதா... காதல் தன் இணையை வாழ வைத்துத்தான் பார்க்கும்... இணையின் சந்தோஷத்தை பிடுங்கிக்கொள்ளும் காதல் காதலே அல்லவே... தன் ஒருத்தியின் சுயநலத்தால் ஒரு அழகிய குடும்பம் சிதைவதா வேண்டாம்.... வேண்டாம்... அப்படியொரு காதலே எனக்கு வேண்டாம்... மனதை கல்லாக்கிக் கொண்டாள்.

மனது மட்டுமல்ல அதனுள் இருந்த காதலும் கல்லாகவே மாறிவிட்டது. உண்மை அறியாமல் தன்னவனின் நலனிற்காய் அவனின் காதல் வாழ்க்கைக்காய் வேண்டி தன் காதலை துறந்தாள் அந்த காதலி.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் கல்லாய் இறுகிப்போன பெண்ணவளின் காதல் நெஞ்சத்தை கரைத்து அதனுள் இருக்கும் காதலை கசிந்திட செய்வானா அவளவன்...


*****
 

shamla

Writers Team
Tamil Novel Writer
புயல் வேகத்தில் வந்த ஆடி கார் க்ரீச் என்ற சத்தத்துடன் போர்டிகோவில் குலுங்கிக்கொண்டு நிற்க அதிலிருந்து இறங்கிய ரோஹன் வேக நடையிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டான்.

அறைக்குள் நுழைந்தவனுக்கு மனதின் புழுக்கம் அதிகரிப்பது போல் இருக்க தலையை பிடித்துக்கொண்டவன் அறையில் குறுக்கும் நெடுக்கமாய் நடக்க ஆரம்பித்தான். நடந்ததில் கால்கள் இரண்டும் வலிக்க ஆரம்பித்ததே தவிர மனதின் வெம்மையை வெறுமையை குறைக்க முடியவில்லை.

அன்றைய நாள் நினைவில் எழ கைக்கு அகப்பட்ட அனைத்தையும் போட்டு உடைத்தான். ஆத்திரம் குறையவில்லை. கோபத்தில் நரம்பு புடைக்க நிமிர்ந்தவன் ஆளுயர கண்ணாடியில் மின்னி மறைந்த பெண்ணவளின் பிம்பத்தினை கண்கொண்டு பார்க்க பிடிக்காமல் கையில் சிக்கிய பூஞ்சாடியை கொண்டு சுக்குநூறாய் உடைத்தெறிந்தான். சில்லு சில்லாய் சிதறிப்போனது ஆளுயரக்கண்ணாடி.

அப்படியும் அடங்க மறுத்த ஆத்திரம் அவனை செயலிழக்கச் செய்ய தலை பிடித்துக்கொண்டு கத்தியவன் குளிரூட்டியில் இருந்த டின் பியர் எடுத்து தொண்டையில் சரித்தான். மது போதையிலாவது மாதுவின் நினைவு குறைகின்றதா என பரிசோதித்தான்.

ம்ஹூம்... மதுவின் போதையில் மாதுவின் நினைவு அதிகமாய் மேலுழும்பி அவனை வாட்டி வதைத்ததே ஒழிய குறையவில்லை.

சில்லு சில்லாய் உடைந்து சிதறிய கண்ணாடி சில்லுகள் அவனின் காலினை பதம் பார்த்து ரத்தம் சொட்டு சொட்டாய் வடிய அதை வெறுமையாய் பார்த்தவனுக்கு இதே போல் அன்றொரு நாள் தான் அவள் முன்பு போய் நின்றதும் அதை பார்த்து தன்னவள் பதறியதும் நினைவில் எழுந்தது.


@@@@ பொன் மாலைப்பொழுது.


அன்று நண்பர்கள் அனைவரும் இரண்டு டீமாய் பிரிந்து மேட்ச் ஆடிக்கொண்டு இருந்தனர். இறுதி ஒரு ஓவர். பதினெட்டு ரன் எடுக்க வேண்டும். ரோஹன் பாட்டிங் எடுத்திருக்க அவனது அணியினர் கத்தி கூச்சலிட்டு ஆர்பரிக்க வெற்றி பெறவேண்டும் எனும் நோக்கத்தில் தீவிரமாய் விளையாடிக்கொண்டு கொண்டிருந்தான்.

நண்பர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு விளையாடுவதில் தீவிரமாய் இருந்த ரோஹனின் அலைபேசிக்கு அப்போது பார்த்து அழைப்பு விடுத்தாள் ஷாஷி.

ஒருவாரத்தின் முன்பு உடம்பு சரியில்லை எனக்கூறியிருந்தான். அதைக்கேட்டு பதறிப்போனவள் தினமும் அவனுக்கு அழைத்து பேசிவிடுவாள். ஆனால் இந்த மூன்று நாளாய் பரீட்சை நடைபெற்றதில் படிப்பதில் நேரம் செலவழிந்து விட அவனுக்கு அழைக்க முடியாமல் போய்விட்டது.

அதனால் பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தவுடனே அவனுக்கு அழைத்திருந்தாள். அவனோ ஒருவாரமாய் வீட்டில் இருந்ததில் சலிப்பு ஏற்பட நண்பர்கள் விளையாட அழைக்கவும் அவர்களுடன் இணைந்து கொண்டவன் செல்போனை கவனிக்கவில்லை.

ரோஹனின் நண்பர்களோ விளையாட்டின் தீவிரத்தில் அவனின் செல்போனிற்கு வந்த அழைப்பை துண்டித்து விட்டுக்கொண்டிருக்க மறுபக்கத்தில் இருந்த ஷாஷியோ விடாமல் அழைத்துக்கொண்டு இருந்தாள்.

பல முறை அழைத்து ஓய்ந்து போனவள் பிஸியாக இருக்கிறானோ என்னவோ என எண்ணி அவனிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள். உடல்நலம் எப்படி இருக்கின்றது எனக் கேட்டு. செல்போனை வைத்திருந்த அவன் நண்பர்கள் ஒருகட்டத்திற்கு மேல் தாங்கமுடியாமல் செல்போனை அணைத்து விட்டனர்.

இறுதியில் மூன்று பால்களை தட்டிவிட்டவன் மீது மூன்று பாலும் சிக்ஸ் அடிக்க அதில் அவனின் அணி வெற்றிபெற ஆர்ப்பரித்துக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிக்களிப்பில் சுற்றித்திரிந்தவன் அதன் பின்பே செல்போனை வாங்கிப் பார்வையிட்டான்.

ஏகப்பட்ட மிஸ்டுகால் குறுஞ்செய்தி வந்து குவிந்து இருந்தது. அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவன் எதற்கு அழைத்தாலோ என பயந்துபோய் அவளின் எண்ணிற்கு அழைக்க மறுபக்கம் அழைப்பு எடுபடவில்லை.

அது குறித்து நண்பர்களிடம் பேச அவர்கள் ஒரு பெண்ணுக்காய் எங்கள் மீது கோபம் கொள்கிறாயா என ஏறுக்குமாறாய் பேச வாய்த்தகராறு முற்றி அடிதடியாய் மாறிவிட்டது.

எப்போதும் இது போல் சிறு சண்டைகள் வருவதும் மறுநாள் அதை பற்றிய எண்ணமேயின்றி ஒரு தட்டில் சாப்பிடுவதும் என்பது அவர்களுள் சகஜம் என்பதால் அதை பெரிதுபடுத்தாமல் ரோஹன் தன்னவளை காணச்செல்ல ஏற்கனவே நண்பன் தங்கள் மீது கோபம் கொள்ளவும் இதற்கு காரணமானவள் மீது பெருங்கோபத்தில் இருந்தவர்கள் அவன் அவளை காண புறப்படவும் கோபம் தலைக்கேற என்னசெய்கிறோம் என யோசியாமல் கையில் இருந்த சோடா பாட்டிலை விசுக்க அது ஆழமாய் அவனின் கையை பதம் பார்த்து விட்டது.

அதில் பதறிப்போனவர்கள் அவனை தாங்க முற்பட அவர்களை ஒற்றை கையசைவில் விலக்கியவன் தன்னவளை தேடிச்செனறான்.

அவனுக்கு அழைத்து ஓய்ந்துபோய் சோர்வுடன் தோட்டத்து மர இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷாஷி. வீட்டினர் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க அவளுக்கு துணையாய் அவளின் பாட்டி வீட்டில் இருந்தார். தள்ளாடும் வயது. சோர்வில் அவருக்கான அறையில் துயிலில் இருந்தார்.

இங்கு அவளுக்கு அவர் துணை என்பதை காட்டிலும் அவருக்கு தான் அவள் துணை. அடிக்கடி பாட்டியின் அறையை நோட்டம்விட்டுக் கொண்டாள். ஏதாவது வேண்டுமா எனும் அக்கறையான விசாரிப்புடன்.

மெல்லிய போர்வையாய் இருள் சூழ்ந்த வானம். புள்ளினங்கள் சரணடையும் நேரம். கூட்டமாய் அவை பறந்து சென்ற காட்சி அழகுற அவளுள். ரசித்துப்பார்த்தாள். உள்ளுக்குள் சிறு கவலை இருப்பினும் ஓய்வாக இருந்தால் அவனே அழைப்பான் சப்பைக்கட்டுடன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

வானத்தை ரசித்தவளின் செவியில் அவள் எண்ணத்தின் நாயகனின் ஹார்ன் சத்தம். இனிமையாய் தீண்டிட முகம் பிரகாசிக்க வெளி வாயிலுக்கு ஓடினாள். அவளின் வீட்டிலிருந்து சற்று தள்ளி நின்றிருந்தான்.

மூச்சு வாங்க ஓடி வந்தவள் அவன் நிற்பதை பார்த்து மகிழ்வுடன் அவனை ஆராய்ந்தாள். எப்படி இருக்கிறான் என. தூரத்தில் நின்றதில் அவன் கை காயம் அவள் கண்களுக்கு புலப்படவில்லை. அந்த நேரத்தில் சாலையோரம் யாரும் கண்ணுக்கு அகப்படாததில் சிறு படபடப்புடன் அவனருகில் சென்றவள் அவனை இமைக்காது பார்த்தாள்.

“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா...” தவிப்புடன் வந்து விழுந்தது வார்த்தைகள்.

அவளை பார்த்தவாறே சிரிப்புடன் தலையசைத்தான். அவன் சிரிப்பில் தானும் மலர்ந்தவள் அப்போது தான் அவன் கையில் சொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தினை கண்டவளாய் பதறிப்போனவள் “அச்சோ ரத்தம்... எப்பிடி அடிபட்டது... என்னாச்சு... டாக்டர்கிட்ட போகலையா... ஏன் சும்மா நிற்கிறீங்க... முதல்ல டாக்டர்கிட்ட போய் மருந்து போட்டு வாங்க... எனக்கு பயமாயிருக்கு...” கன்னத்தில் கண்ணீர் சொரிந்தது.

தன் வலியினை காட்டிலும் தன்னவளின் கண்ணீர் பெரிதாய் பட “அதெல்லாம் ஒன்னுயில்ல பேபி... நீ இப்போ எதுக்கு அழுற... மருந்து போடணும் அவளோ தானே... நீ கிட் எடுத்திட்டு வா நானே போட்டுக்கிறேன்... இப்போ கண்ணை துடைச்சிக்கோ...” குழந்தைக்கு எடுத்துரைப்பது போல் கூற அதன் பின்பே கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

இருந்தும் அவன் மருந்து கட்டும் போது அவன் கையை தன் கையுடன் சேர்த்து இறுக்கமாய் பிணைத்துக் கொண்டாள். முடிந்தால் அவன் வலியை தன் வலியாய் தாங்கியிருப்பாள். மருந்து கட்டியதும் போடுவதற்கு மாத்திரை கொடுத்து அவன் கையை தடவிக் கொடுத்தவள் ஜாக்கிரதையாய் வீட்டுக்கு போக வேண்டும் போனதும் போன் செய்ய வேண்டும் வீணாய் வெளியில் அலைய வேண்டாம் என பல கட்டளையுடன் அவனை வழியனுப்பி வைத்தாள்.

அதை நினைத்துப் பார்த்தவனுக்கு கண்கள் கரித்தது. எத்தனை அக்கறை கொண்டிருந்தாள் இருந்தும் எப்படி அவளால் முடிந்தது... அதை நினைத்துப் பார்த்தவனுக்கு அவளின் அக்கறை வேம்பாய் கசந்தது. காலின் வலி கூட பெரிதாய் தெரியவில்லை பெண்ணவள் கொடுத்த வலியின் முன்...

வலியும் வேதனையும் ஒருங்கிணைய முகம் இரண்டையும் பிரதிபலிக்கும் வண்ணம் கசங்கியது.


*****
 

shamla

Writers Team
Tamil Novel Writer
“யாருடி அவன்... பார்த்தா நல்லவனாட்டம் இருக்கான்...” கேள்விக்கணையால் பாலாவை துளைத்துக்கொண்டு இருந்தாள் ஆர்த்தி.

அவளின் கேள்விகளுக்கு பதிலளித்து ஓய்ந்து போன பாலா “இன்னும் எத்தனை தடவ இதே கேள்விய டிசைன் டிசைனா கேப்ப...” கடுப்புடன் முறைத்துக்கொண்டு கேட்க, அசடு வழிந்தவள் “இல்லடி....” என முடிக்கும் முன்னமே,

“இல்லடி அவன் ரொம்ப நல்லவனா இருக்கானே அதான் கேட்டேன்... இத தானே சொல்லப்போற ஆயிரத்து ஒன்னாவது தடவ சொல்லிட்ட இதுக்கு மேலயும் கேட்ட கடிச்சு கொதறிடுவேன்...” வள்ளென்று விழுந்தவள் தள்ளாடிக்கொண்டே தனக்கு ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்து கொண்டாள்.

‘என்னாச்சு இவளுக்கு...’ செல்லும் அவளையே குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ஆர்த்தி.

கட்டிலில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டவள் வலிக்கு மாத்திரை போட்டுக்கொண்டாள். கால் வலி குறைவது போல் தான் இருந்தது. மனதின் வலி தான் விடாமல் அரற்றிக் கொண்டிருந்தது. உடலின் வலியை கூட தாங்கிடலாம் மனதின் வலியை எளிதில் தாங்கிட முடியாது.

எதை தேடுகிறோம் என்று புரியாமலே அவள் மனது எதையோ தேடிக்கொண்டு இருக்கின்றது. அது எதுவென்று தான் அவளுக்கு புரியவில்லை.

அந்த வகையறியா தேடலின் ஊடே மனது தான் இன்று சந்தித்தவனை பற்றியும் சிந்தித்துக் கொண்டது. அவளின் வக்கீல் மூளையோ எதுவோ ஒன்று சரியில்லை என்பது போல் குறுகுறுத்தது. இயல்பான மனிதநேயம் கொண்ட மனமோ அவனின் வெகுளித்தனத்தை ரசித்தது. அதை வெகுளி என்பதை விட அறியாமை என்பது சிறந்ததோ... அதையும் ஆராய்ச்சி செய்தது அவளின் மூளை.

இருந்தும் அவனிடத்தில் எதுவோ ஒன்று கவருவதாய்... அழகை பார்த்தால் அவனை காட்டிலும் அழகனை எல்லாம் பார்த்திருக்கிறாள்... கம்பீரம்... சிரிப்பு... ஆளுமை... தோரணை... இவை அனைத்தும் சராசரியை விட அதிகம் பெற்றவர்களை கூட கண்ணார கண்டிருக்கின்றாள்... இது எதுவும் இல்லை என்றால் ஒருவேளை அவனின் வெள்ளை மனதோ. அதுவாகத்தான் இருக்கும் என்று அவளுக்குமே தோன்றியது.

மற்றவர்களின் தவறை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயினது மனப்பக்குவம் கொண்டவனின் குணம் தான் அவளை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். இங்கு ஒருத்தருக்கும் மனமும் கிடையாது குணமும் கிடையாது. பணத்தின் மதிப்பில் அத்தனையும் கீழிறங்கிச் சென்று விட்டது.

அந்த பணத்தின் சுவடே அறியாது வளர்ந்தவனுக்கு தான் உறவின் அருமை தெரியும். அதை புரிந்து வைத்திருப்பவன் தான் ஷக்தி. பணத்தினை விட மனத்தினை மதிப்பவன். பாசத்திற்கு கட்டுப்பட்டவன். பாசக்காரன்.

ஊட்டிக்கு வந்த முதல் நாள் அவர்கள் சந்தித்த மேனேஜரின் உதவியுடன் அவரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் வொர்க்ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த ஷக்தி, கேப்டன், கணேஷ் மூவரும் இப்போது அவரின் உதவியுடனே அவரின் வீட்டின் அருகிலிருக்கும் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டனர்.

வாழ்க்கை என்னவோ முன்பை விட நன்றாகத்தான் சென்றது. முன்பு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு பெயரிட முடியாது. இந்த வாழ்கை சொர்க்கமாகத்தான் இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மூவரும் இரவுணவை முடித்துக்கொண்டு தரையில் பாயை விரித்துப் படுத்துக்கொள்ள தூங்க முயன்றும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் ஷக்தி.

அவன் நினைவுகள் எத்தனை முயன்றும் தடுக்க முடியாமல் இன்று சந்தித்த பெண்ணவளை சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது. அவளை நினைத்த மாத்திரத்திலே பனிச்சாரலாய் நெஞ்சம் குளிர்ந்தது.

அவள் நினைவுடனே இதழில் உறைந்த புன்னகையுடன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான். கண்கள் மூடிக் கொண்டாலும் மூளை இயங்கிக் கொண்டிருந்ததோ என்னவோ. மூளையின் இயக்கத்தில் கருமணிகள் எதை நோக்கியோ ஓட அதை தாங்கிட முடியாமல் கருமணிகள் மூடிய விழிகளுக்குள் அலைபாய்ந்தது.

அலைபாய்ந்த விழிகளினுள் ஒரு பெண்ணின் நிழலுருவம் மங்கலாய்... தெளிவற்ற காட்சிகள் தெளிவாய் கண் முன் ஓட அதை ஜீரணிக்க முடியாமல் உடலை முறுக்கியவன் எதையோ காப்பாற்ற துடிப்பவன் போல் கைகளை வலுவாய் இறுக்கினான்.

எங்கே கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் நெஞ்சத்தை கவ்வியது. காப்பாற்றுவேன் எனும் நம்பிக்கையுடன் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டவனின் இதழ்கள் முணுமுணுத்தது ஒரு பெண்ணின் நாமத்தை.

“கீர்த்தி... கீர்த்தி....” கண்ட காட்சியின் தீவிரமோ உடலை தொப்பலாய் நனைக்க உடல் தளர வலுவிழந்து போனவன் அதற்கு மேலும் போராட முடியாமல் “கீர்த்தி” எனும் பலமான கூவலுடன் எழுந்தமர்ந்தான்.

அப்போது தான் உறக்கத்திற்கு சென்று கொண்டிருந்த கேப்டன் ஷக்தியின் குரலில் பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தார்.

“என்னாச்சு ஷக்தி....” அவனை உலுக்க அதில் கேப்டனை ஒரு பார்வை பார்த்தவன் விறுவிறுவென்று எழுந்து சென்று தன் துணிமணிகளை பையில் அடைக்க ஆரம்பித்தான்.

“என்னடா பண்ற...”

“முடியல கேப்டன்... நான் கீர்த்திய பார்க்கணும்...” இயல்புக்கு மாறான உரத்த குரலில் கத்தினான்.

இவன் கத்தலில் தூக்கம் கலைந்த கணேஷ் கலக்கத்தை சுமந்திருந்த அவர்களின் முகத்தினை பார்த்து பதறிப்போய் “என்னாச்சு கேப்டன்...” சொக்கிக் கொண்டிருந்த தூக்கம் முற்றிலும் பறந்தோடி இருந்தது.

“கீர்த்தியை பார்க்கணுமாம்...” கேப்டனின் வார்த்தையில் ஷக்தியை அதிர்ந்து போய் பார்த்தான் கணேஷ்.

அவனின் பார்வையை உணர்ந்தாலும் தன் முடிவில் உறுதியாய் இருந்தவன் “நான் கீர்த்தியை பார்த்தே ஆகணும்...” ஒருவித கலவையான குரலில் வெளிவந்தது அவனது வார்த்தைகள்.

அவன் குரலில் இருந்த உணர்வை புரிந்து கொண்ட கேப்டனும் கணேஷும் “அவளோட விதி அது தான்னா நாம என்ன பண்ண முடியும்...” விரக்தியாய் கூறினர்.

அதில் கோபத்துடனும் கழிவிரக்கத்துடன் அவர்களை பார்த்தவன் “எப்பிடி உங்களால இப்பிடி சொல்ல முடியுது...” கண்கள் கலங்க கேட்டான்.

அவன் வார்த்தையில் அவர்கள் மனமும் கலங்கியது. ஆறுதலாய் அவன் கரத்தை பற்றிக் கொண்டனர்.

“நம்மால என்ன பண்ண முடியும் ஷக்தி..”

“பண்ணனும் கேப்டன்... பண்ணித்தான் ஆகணும்...” தீவிரத்துடன் வந்த குரலில் கலக்கமும் சூழ்ந்திருந்தது.

“அதுக்கு இப்போ நான் போய்தான் ஆகணும்...”

“அவசரப்படாதடா... ஷக்தி வேணான்டா...” கணேஷின் வார்த்தைகள் பதற்றத்துடன் வந்தது.

“நீ போனா... உன்னை கொன்னுடுவானுங்கடா....” கலங்கிய கண்களுடன் தொண்டையடைக்க கூறினார் கேப்டன்.

“நீயாவது இவனுக்கு புரிய வைடா...” கணேஷை துணைக்கு அழைத்தார்.

ஷக்தியை பார்த்த கணேஷின் பார்வையில் இருந்த இறைஞ்சுதலை கண்கொண்டு பார்க்க முடியாமல் தலை குனிந்தவன் கண்களை இறுக மூடி உள்ளத்தின் ஓலத்தை தடுக்க முயற்சித்தான்.

முயற்சி செய்ய மட்டுமே முடிந்த அவனால் முயற்சியை முழுமையாகக முடியவில்லை.

வாழ்க்கை இவர்கள் மூவருக்கும் எதை வைத்து காத்திருக்கிறதோ....


“உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம்
கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை
கண்டேன் கண்டேன் நான் தானடா
உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்...”



சிதறும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top