SVS - 08

shamla

Writers Team
Tamil Novel Writer
08

அன்று நேரத்துடனே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாள் ஷிகா. அவள் கடமை நேரம் முடிவடைந்திருக்க வெளியேறியவள் அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த விக்ரமை பார்த்து சிநேகமாய் சிரித்து வெளியேற எத்தனிக்க அவளை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... எனக்காக பைவ் மினிட்ஸ் ஒதுக்க முடியுமா...” வேண்டுதலாய் கேட்டான்.

அதை கேட்டு என்ன சொல்வதென தெரியாமல் சில கணங்கள் விழித்தவள் அவன் கண்களில் தெரிந்த கெஞ்சுதல் பார்வையில் அரைமனதாய் சம்மதித்தாள்.

இருவரும் மருத்துவமனை கான்டீனிற்கு வந்திருந்தனர். விக்ரம் இருவருக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்திருக்க அதை மறுக்க முடியாமல் மௌனமாய் பருக ஆரம்பித்தாள்.

அவள் காபி அருந்துவதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தானும் அருந்தியவன் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தொண்டையை செருமிக் கொண்டான்.

அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பேசணும்னு சொன்னீங்க...” என இழுக்க, அதில் சற்று ஆசுவாசபட்டவன் அவளை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.

“அதுவந்து... பவி உன்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்... நீ இன்னும் எதுவும் சொல்லலையே அதான்...” அதற்கு மேல் என்னை கல்யாணம் செய்ய சம்மதமா என வெளிப்படையாய் கேட்க முடியாமல் தயங்கி நிறுத்தினான்.

அவனது பேச்சில் என்ன சொல்வதென தெரியாமல் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கும் பாவனையில் தன் மனதை நிதானப்படுத்தியவள் “ஐயம் சாரி விக்ரம்.” அவன் முகத்தை நேராய் பார்த்தாள்.

இன்னும் எத்தனை நாளைக்கு தவிர்ப்பது. முதலில் ஒரு நல்ல தோழன் தன் வார்த்தையில் வருந்துவதா என அதை சொல்லாமல் தள்ளிப்போட்டவள் இப்போது அது தொடர்கதையாகி விடுமோ என பயந்து வாய் திறந்து விட்டாள்.

இன்னொருவனை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு வேறு ஒரு ஆடவனின் பார்வை தன் மேல் ஆர்வமாய் படிவதை கூட சாதாரணமாய் எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அது தன்னவனுக்கு இழைக்கும் துரோகமாகவே அவளுக்கு தோன்றியது. அவன் மனதில் என்ன இருந்தாலும் தன் மனதில் அவன் இருக்கும் பட்சத்தில் தான் காதலில் கற்புடன் இருக்க வேண்டும் என்றே அவள் நினைத்தாள்.

அதனால் இன்றே இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி அவனை மௌனமாய் ஏறிட்டாள். இவளின் மன்னிப்பென்ற வார்த்தையில் தன் கேள்விக்கான விடை தெரிந்து விட்டதில் விழுந்து போன முகத்துடன் அவளை பார்த்திருந்தான் விக்ரம்.

“ஏழு வருசமா ஒருத்தரை காதலிச்சிட்டு இருக்கேன்... அவருக்கு என்னை பிடிக்குமான்னு கூட தெரியலை.. ஆனா என்னால அவரை மறக்க முடியல... என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா என்னை தேடி வருவார் என்ற நம்பிக்கைல தான் நான் வாழ்ந்திட்டே இருக்கேன்... ப்ளீஸ் விக்ரம் இனிமே இந்த நோக்கத்தில் என்கிட்ட பேசுறதா இருந்தா ப்ளீஸ்... என்கிட்ட பேசாதீங்க...”

அதை கேட்டு ஏழு வருடமாகவா என ஆச்சரியப்பட்டு போன விக்ரம் அவளை பார்த்து ஆறுதலாய் சிரித்தான். முதலில் அவன் தோழனாகத்தான் இருந்தான். பெரிதாய் பேசிக்கொள்வதில்லை என்றாலுமே அவன் நல்ல நண்பன் தான். இடையில் தான் அவளின் மென்மையான நடவடிக்கை தன் குடும்பத்துடன் ஒத்துப்போகும் அதுவும் இருவரும் ஒரே பீல்ட் அதனால் இலகுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவளை திருமணம் செய்ய விரும்பினான்.

அதில் நட்புடனான புரிதல் இருந்ததே தவிர காதல் இல்லை. இப்போது அவனுக்கு புரிந்தது. அவளின் காதலும் புரிந்தது, அவளின் காத்திருப்பும் புரிந்தது.

தன் மனதை சடுதியில் மாற்றி நட்புடன் புன்னகைத்தவன் “நான் தான் மன்னிப்பு கேட்கணும் ஷிகா.. உன்னோட காதலை பத்தி தெரியாம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டேன்.. சாரி.. அண்ட் விஷ் யு ஆல் தி பெஸ்ட்... உன்னோட காதல் நிறைவேற என்னோட வாழ்த்துக்கள்...” என வாழ்த்தியவன் “எனக்கான ஐஞ்சு நிமிஷம் முடிஞ்சிடிச்சு...” சன்ன புன்னகை பூக்க,

அதை கேட்டு சிரித்தவள் “என்மேல கோபம் இல்லையே...” இழுக்க,

“சத்தியமா இல்லை... ஏழு வருஷம் காத்திருக்க உன் காதல் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடிச்சு... இப்போ எனக்கும் கூட ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணனும் போல தோணுது... அந்த பொண்ணு எங்க இருக்கோ...” என பெருமூச்சு விட்டான்.

சற்று நேரத்தின் முன் தோழியானவளிடத்தில் திருமணம் பற்றி பேச தயங்கி இழுத்தடித்தவன் இப்போது அவளின் காதலை பற்றி அறிந்து சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தான். அதில் நிறைந்து போனது பெண்ணவளின் மனது. தோழன் தன் காதலை புரிந்து கொண்டான் என்ற நிம்மதியில்.

அதேநேரம் உள்ளுக்குள் வலிக்கவும் செய்தது. இதுபோல் இன்னும் எத்தனை பேரை தான் சந்திக்க வேண்டுமோ என்ற எண்ணம் சிறு வலியையும் உண்டாக்கியது. அத்தனை பேரிடத்தில் விளக்க முடியாதே. அதே போல் எல்லோரும் ஒன்று போல் இருக்கமாட்டார்களே. நண்பனாய் இருக்க போய் தன் மனதை புரிந்து ஒதுங்கிக் கொண்டான். இதுவே இவனிடத்தில் வேறு யாராவது இருந்தால் இத்துடன் விடுவார்களா என்ற எண்ணம் தந்த தாக்கம் அவளின் காதல் நெஞ்சை பலமாய் தாக்கியது.

கழிவிரக்கத்தில் கண்களில் கண்ணீர் துளி பூக்க இருக்கும் இடம் கருதி அதை யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள். ஆனால் மனமோ விடாமல் அரற்றிக்கொண்டிருந்தது. ஒரு முறையாவது என்னை வந்து பாரேன் என தன்னவளிடத்தில் மானசீகமாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

பெண்ணவளின் மனதின் கதறல் அவள் மனதில் சுமந்திருப்பவனின் நெஞ்சத்தை தாக்கியதோ என்னவோ இல்லை விதியின் செயலோ அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு வெகு விரைவில் வர காத்திருந்தது.


*****


அந்த தனியார் பள்ளி வெகு பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று அசோசியேஷன் ப்ரோக்ராம் நடைபெறவிருந்தது. அதற்கான தயார் நிலையில் பள்ளி வெகு அழகாய் காட்சியளிக்க மாணவர்கள் அத்தனை பேரும் கலகலப்பாய் சுற்றி திரிந்தனர்.

ஆடிடோரியத்தில் விழாவிற்கான ஏற்பாடு அத்தனையும் முடிந்த நிலையில் இருக்க இறுதியாய் ஒருமுறை அதை ப்ரின்சியின் கட்டளைக்கிணங்க மேற்பார்வை இட்ட ஷாஷி அனைத்தும் சரியாய் இருக்கவே மாணவர்களை உள்ளே வந்து அமரச்செய்யும் படி ப்ரிபெக்ட் மாணவர்களிடம் உரைத்தவள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வாஷ்ரூம் நோக்கி சென்று முகத்தை சீர்படுத்திக் கொண்டாள்.

காலை வந்ததில் இருந்து ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்ததில் முகத்தில் அப்பிய வியர்வை துளிகளை தண்ணீர் கொண்டு ஒற்றியெடுத்தவள் வலியெடுத்த கால்களை நகர்த்த முடியாமல் ஓய்வாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கண்மூடிக் கொண்டாள்.

கால்வலி தாங்கொண்ணாமல் இருக்க பல்லை கடித்துக் கொண்டவளுக்கு நினைவு பின்னோக்கி ஓடியது.

அன்றும் அப்படித்தான் அவளது கல்லூரியில் விழா ஒன்று ஏற்பாடு செய்திருக்க சோர்ந்திருக்க மனமற்று தோழிகளுடன் சேர்ந்து தானும் களத்தில் குதித்து வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்தவள் இடையில் எதற்கோ படிகளில் இறங்கும் போது எதிர்பாரா விதத்தில் கால் சுழுக்கிக் கொண்டது.

வலி உயிர்போக காலை பிடித்துக்கொண்டு நின்றவளை பார்த்த அவள் வகுப்பு மாணவர்கள் அவளை ஒருவேலையும் செய்ய விடாமல் இருக்கை ஒன்றில் அமர்த்திவிட்டு தாங்களே வேலைகளை செய்து முடித்து விட்டனர். சற்று நேரம் ஓய்வாய் அமர்ந்திருந்ததில் கால் வலி சற்று மட்டுபட்டது போல் இருக்க கல்லூரி முடிந்து பேருந்தில் செல்ல முயன்றவள் மழை வருவது போல இருக்கவும் நடந்தே வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து மெல்ல நடையை எட்டிப்போட்டாள்.

பாதிதூரம் செல்லும் வரையிலும் கூட ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. அதற்கு மேல் தான் கால்வலி உயிர்போகுமளவிற்கு வலியெடுக்க வெறிச்சோடிப் போன சாலையில் தன்னந்தனியாய் நின்றுகொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் சிலீரென்றது.

மனக்கண்ணில் பள்ளியின் இறுதி நாள் நினைவில் யாருமில்லா தெருவில் சில ரௌடிகளுக்கு மத்தியில் தான் மாட்டிக்கொண்டு முழித்தது நினைவில் எழுந்தது தொண்டையை உளறச்செய்ய சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டே வலியெடுத்த காலை கடினப்பட்டு இழுத்து வைத்துக்கொண்டு ஒரு அடி வைக்கும் போதே அவளை உரசினார்போன்று வந்து நின்றது ஒரு கார்.

அதில் நெஞ்சம் பதற முகம் வெளுக்க மீண்டும் தான் இக்கட்டில் மாற்றிக்கொண்டோமோ என பயந்து பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தவளின் முன் தோன்றினான் அவளின் ரோஹன்.
 
shamla

Writers Team
Tamil Novel Writer
எதிர்பாராமல் அவனை பார்த்தாலும் தனக்கு துன்பம் வரும் போதெல்லாம் தன் உடன் இருக்கும் அவனின் காதல் அவளை பெண்ணாய் மனம் சிலிர்க்கச் செய்ய நடுவீதி என்று கூட பாராமல் அவன் மார்பில் தஞ்சமடைந்து கொண்டாள்.

ஒரு நொடிபொழுதில் அவள் மனதில் தோன்றி மறைந்த எண்ணங்கள் அவளை பெரும் பயங்கொள்ள செய்திருந்தது. அவளின் செயலில் ஒரு கணம் திகைத்துப்போய் நின்றவன் பின் அவளின் பயம் உணர்ந்து முதுகை வருடிக் கொடுத்தான்.

அதற்குள் லேசான தூறலாய் தூவிக்கொண்டிருந்த மழை அதன் வேகத்தை அதிகரிக்க அவள் மழையில் நனைந்து செல்வதை விரும்பாதவனாய் அவளை காரில் ஏறிக் கொள்ளும்படி கூற அதை கேட்டு முதலில் தயங்கி பின் ஒத்துக் கொண்டவள் காலை ஒரு எட்டு வைக்க சுரீர் என்று தாக்கிய வலியில் பல்லைக் கடித்துக் கொண்டவளின் கண்களில் இருந்து வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் துளி நிறைந்தது.

அந்த மழையில் கூட அவள் முகத்தில் வழிந்த கண்ணீர் துளியை கண்டு பதறிப்போனவன் அவளிடத்தில் காரணத்தை கேட்டறிந்து நொடியும் தாமதியாது அவளை தன் கரங்களில் ஏந்தி காரில் இருக்க வைத்தான்.

அவள்தான் மனம் கவர்ந்தவனின் அருகாமையில் நிலைதடுமாறி போய்விட்டாள். அவனுக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை போலும். சேய்க்கு ஒன்றென்றால் துடிக்கும் தாயின் நிலையில் தான் அவன் இருந்தான்.

உடனே அங்கிருந்த சிறிய கிளினிக் ஒன்றிற்கு அவளை அழைத்து சென்றவன் மருத்துவரிடம் கூறி அவளின் வலியை போக்கிய பின்னர் தான் ஆசுவாசப்பட்டான். மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரையை வாங்கி அவளை முழுங்கச் செய்தவன் தன் காரிலே அவளின் வீட்டில் அருகில் இறக்கி விட்டான்.

வீட்டிற்குள் அவளை அழைத்து வர எத்தனித்தவனின் செயலில் பதறிப்போய் அவனை தடுத்தாலும் தன் மேல் அவன் கொண்ட அக்கறையை அன்று முழுவதும் எண்ணி எண்ணி பூரித்துப் போனாள்.

அந்த நினைவுகளின் ஊடே கடந்த காலத்தில் திளைத்திருந்தவள் அதன் பின் நடந்த சம்பவங்களை எண்ணி மனம் வலிக்க அதற்கு மேல் தாள முடியாமல் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஓய்ந்து போனவளாய் அமர்ந்து கொண்டாள்.

‘ஏன் என்னை விட்டிட்டு போனீங்க... நான் பண்ணது தப்பு தான்... ஆனா என்னோட நிலையை நீங்க புரிஞ்சிக்கவே மாட்டீங்களா... உங்க காதல் அவ்ளோ தானா...’ எத்தனை வளர்ந்திருந்தாலும் காதல் என்று வரும் போது படித்த மேதை கூட கோழையாகி போகும்போது இவள் மட்டும் எம்மாத்திரம். இப்போது அவள் பத்தாம் வகுப்பு ஷாஷியாகவே மாறியிருந்தாள். தான் ஒரு பள்ளியின் ஆசிரியை என்பதை மறந்தே போனாள். காதல் கொடுத்த பெரும் வலியை அந்த பேதை பெண்ணால் தாங்க முடியவில்லை.

எத்தனை நேரம் அழுதாலோ அருகில் கேட்ட சக ஆசிரியர்களின் குரலோசையில் தன் கண்ணீரை துடைத்து முகத்தை அழுந்த கழுவிக் கொண்டவள் கைகுட்டையால் ஈரத்தினை ஒற்றியெடுத்து முடியை சரி செய்து கொண்டாள்.

வழக்கமாய் அணியும் பருத்தி புடவையை தவிர்த்து மெல்லிய வேலைப்பாடுடன் கூடிய சேலை அணிந்திருந்தாள். ஒப்பனையில்லா முகம் அழுததில் சிவந்து போன கன்னங்கள் காதல் தோல்வியில் துவண்டுபோன மெல்லிய உடல் என சற்று ஒடுங்கி பார்ப்பதற்கு அழகு குறைந்தவள் போல் ஏனோதானோவெனத் தான் இருந்தாள்.

இந்நேரத்திற்கு விழா துவங்கி இருக்கும் என்பதால் முகத்தை சீர் செய்து கொண்டு விழா நடக்கும் இடம் நோக்கி சென்றவள் பின் வழியால் இருந்த கதவின் வழியால் உள்ளே நுழைந்து முகத்தில் கடமைக்கு சிரிப்பினை ஒட்டிக்கொண்டு மேடையை பார்த்திருந்தாள்.

அவளின் கண்கள் தான் அங்கு பார்த்திருந்ததே தவிர அவள் கருத்து தன் கடந்த காலத்திலே சிக்குண்டிருந்தது. அதிலிருந்து அவ்வளவு சுலபத்தில் அவளால் மீள முடியவில்லை.

அதேநேரம் மேடையில் நடுநாயகமாய் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் எம்.டி அங்கு மெல்லிய கொடியாய் சோபையாய் சிரித்துக் கொண்டிருந்த ஷாஷியை பார்த்து நெஞ்சம் அதிர திடுக்கிட்டு போய் அமர்ந்திருந்தான்.

அவன் கண்களோ அவனையும் அறியாது தலை முதல் பாதம் வரை அவளை அளவிட்டது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என புரியாத ஒரு மனநிலையில் சமைந்து போய் அமர்ந்திருந்தான் அவன்.


*****

வளைந்து நெளிந்து சென்ற ஊட்டியின் வளைவுப் பாதையில் மெதுவாய் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள் பாலா.

ஜீன்ஸ் டாப்பில் இருந்தவள் குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். தலையில் மங்கிகெப்.. வீட்டில் ஏஸியின் செயற்கை குளிரில் சாதாரணமாய் இருப்பவள் ஊட்டியின் இயற்கையான குளிரினை தாக்குபிடிக்க முடியாமல் திண்டாடினாள்.

அதற்காக வீட்டினுள் முடங்கவும் அவளுக்கு விருப்பமில்லை. அதனாலே வெளியில் செல்ல விரும்பி ஆர்த்தியின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். இத்தனை நாள் அவளுடன் துணைக்கு வந்த நிம்மி இன்று வேலை விஷயமாய் வெளியே சென்றிருக்க தனியாகவே கிளம்பி விட்டாள். இன்றுடன் அவள் ஊட்டி வந்து ஒருவாரம் ஓடி இருந்தது.

இடையிடையே வீட்டிற்கு அழைத்து பேசுவாள். பேசும் நேரங்களில் அவளின் அதிக நேரத்தை பிடித்துக் கொள்வது அவளின் ஹர்ஷு கண்ணா தான். அவனுடன் பேசுவதற்காகவே அவள் வீட்டிற்கு அழைப்பாள். தினம் தினம் வித விதமாய் புகைப்படங்கள் எடுத்து அவனுக்கு அனுப்புவாள். மீராவிடம் கூறி தன் செல்ல மகனையும் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுப்பாள். ஆகா மொத்தம் இருவரும் தூரத்தில் இருந்தாலும் மனதளவில் நெருக்கமாய் தான் இருந்தனர்.

இவளுக்கு அறியும் வயது அவளின் குட்டி கண்ணனுக்கு அறியாத வயது. அதுமட்டுமே அவர்களுக்குள் வித்தியாசம். மற்றபடி அவளும் அவனுடன் பேசும் போது சிறு குழந்தையாகவே மாறிப் போய்விடுவாள்.

இப்போதும் ஹர்ஷுவின் நினைவில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவள் முன்னால் வந்து கொண்டிருந்தவனை கவனியாமல் மோதப்பார்த்து சடுதியில் பிரேக்கை அழுத்தி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயல வண்டி தடம்புரண்டதில் மலைப்பாதையில் மண்டிக்கிடக்கும் முற்கள் அவளின் காலை பதம் பார்த்தது.

அதில் வண்டியில் இருந்து தட்டுதடுமாறி இறங்கியவள் காலை தரையில் ஊன்ற முடியாமல் தடுமாறி விழப்பார்க்க அவள் விழும் முன் அவளை தன் கைகளில் தாங்கிப்பிடித்தான் அவன்.

அவள் யாரின் மேல் மோதப்பார்த்தாளோ அவன் தான் அவள் விழாமல் தன் கைகளில் தாங்கியிருந்தான்.

மெலிதாய் உடலை தீண்டிச் சென்ற குளிரின் தாக்கத்தில் பெண்ணவளின் உடல் நடுங்க அவளின் நடுக்கத்தை உணர்ந்து ஆணவனின் கரங்கள் அவனையும் மீறி அவளை இறுக்கமாய் தழுவிக்கொண்டது.

சில்லென்ற காற்று... குளிரின் இரைச்சல் ஓசை... வனாந்திர பட்சிகளின் செல்லமான சங்கீத மொழிகள்... காற்றில் அசைந்தாடிய மரங்களின் கிரீச் ஓசைகள்... அதற்கு மெருகூட்டுவது போல் அதனுடன் சேர்த்து ஒலித்த இருவரின் இதயத்துடிப்பு ஓசையும் என ரம்மியமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

இதுவரையிலும் எந்த பெண்ணினதும் சகவாசமின்றி உறவுமுறை சொல்லி பாசத்துடன் மட்டுமே பழகி வந்தவனுக்கு இந்த பெண்ணினது நெருக்கும் ஏனோ அவனது அடிநெஞ்சு வரை சென்று தித்திப்பாய் உணரச்செய்து இம்சித்தது. இதுவரை அவன் அறியாத உணர்வது.

அவளின் முகத்தையே இமைக்க மறந்து பார்த்தான். அதிர்ச்சியில் அகல விரிந்த கண்கள்... படபடப்பில் அடித்துக்கொண்ட கண்ணிமைகள்... குளிரின் தாக்கத்தில் சிவந்து போன கன்னங்கள்... ரத்த சிகப்பு இதழ்கள்... அவளின் ஆர்ப்பாட்டமில்லா அழகில் அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

ஆனால் மறுகணமே தன் நிலையுணர்ந்து அவளை தள்ளி நிறுத்தினான். அதற்குள் தன்னிலைக்கு மீண்டிருந்த பாலா தன்னை மறந்து நின்றிருந்த தன் நிலையை அறவே வெறுத்துவளாய் தன் மீதிருந்த கோபத்திலும் இவன் எதற்கு என்னை பிடித்தான் என்ற ஆக்ரோஷத்திலும் தன்னையும் மீறி அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

அதில் கன்னத்தில் கைவைத்து அவளை அதிர்ந்து நோக்கினான் ஷக்தி. அவனிடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் பதிலுக்கு அவளை மாறி அறைந்திருப்பார்கள். ஆனால் அவன் அதை செய்யவில்லை. இருவரிடத்திலும் சரிசமமாய் தவறு இருந்த போதிலும் அதை சுட்டிக்காட்டி அவளை சாடாமல் அமைதியாய் நின்றுகொண்டான். தவறு என்மீது மாத்திரமே எனும் ரீதியில்.
 
shamla

Writers Team
Tamil Novel Writer
உண்மையில் அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது. முழுத்தவறும் தன் மீது தான். அவளுக்கு உதவுவதற்காக பிடித்தால் சடுதியில் அவளை விட்டு விலகியிருக்க வேண்டும். அதையும் மீறி தன் நிலை தெரிந்தும் பெண்ணவளை ரசித்தது தவறு தானே. அதற்கான தண்டனையாகவே அவள் அறைந்ததை ஏற்றுக்கொண்டான்.

அவனை அறைந்ததும் தான் நடந்தது மண்டையில் உரைக்க இருந்தும் அவன் தன்னை ஆழ்ந்து பார்த்தது பிடிக்காமல் மன்னிப்பு கேட்க முயன்ற மனதை வெகுவாய் அடக்கிக்கொண்டவள் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்த முயல முற்கள் குத்திய பாதமோ வெகு நேரம் நிற்க முடியாமல் தள்ளாடியது.

அவளின் தள்ளாடலை கேள்வியாய் நோக்கியவன் அப்போது தான் அவளின் பாதத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த இரத்தத்தை பார்த்து பதறியவனாய் அவளை பிடித்து நிறுத்தினான்.

அதில் பாலா கோபம் பொங்க அவனை நிமிர்ந்து பார்க்க அதை கவனியாதவனாய் அவள் பாதத்தை தன் கைகளில் தாங்கிக் கொண்டவன் “முள்ளு குத்திரிச்சு போல...” என பதறியபடி “என் வீடு பக்கத்தில தான்... பெஸ்ட்எய்ட் பண்ணிக்கலாம் என்கூட வரிங்களா...” தயக்கத்துடன் தான் கேட்டான்.

முன்னே பின்னே பார்த்திராத பெண். தன்னுடன் எப்படி தனித்து வருவாள் என்ற எண்ணம் கொடுத்த தயக்கம் அது.

ஆனால் பாலா அவனுக்கு முற்றிலும் வேறுபட்ட மனநிலையில் இருந்தாள். தன் மீது தான் தவறு என்று அவளுக்கு தெளிவாய் புரிந்தது. ஹர்ஷுவின் நினைவில் தான் தான் வண்டியை தாறுமாறாய் ஓட்டி அவனை இடிக்கப்பார்த்து கடைசியில் அவளுக்கு அடிபட்டு விட்டது.

இருந்தும் அவளுக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து விட்டாள். எந்தவொரு ஆணுக்கும் அத்தகைய செயல் பிடிக்காது. உதவி செய்யப்போய் கடைசியில் தனக்கு கிடைத்த மரியாதையில் வேறு யாராய் இருந்தாலும் பதிலுக்கு திட்டியோ அடித்தோ இருப்பார்கள்.

இவன் அமைதியாய் இருந்தது பெரும் ஆச்சரியம் என்றால் தன் பாதத்தில் ரத்தத்தை பார்த்து பதறிப்போய் தன் கால்களை அவன் கையில் தாங்கியது அதைவிட பெரும் ஆச்சரியமாய்பட்டது அவளுக்கு. எந்தவொரு ஆண் மகனும் செய்யத்துணியாத காரியம்.. அதுவும் யாரென்று தெரியாத பெண்ணிற்கு யாரும் இவனைப் போல் பதறமாட்டார்கள்.

இருந்தும் தன் பாதத்தை அவன் கைகளில் இருந்து விடுவிக்க முயன்றாள். அவன் கைகள் பற்றிய பாதம் ஏனோ பெண்களுக்கு இயல்பாய் தோன்றும் ஜாக்கிரதை உணர்வையும் அதே சமயம் கூச்சத்தையும் கொடுத்தது.

அவனோ அதை விடுவிக்கும் நினைவின்றி அவளுக்கு முதலுதவி செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்க அவளின் விடைக்காக பெண்ணவள் முகத்தையே தவிப்புடன் பார்த்திருந்தான்.

அவன் முகத்தில் அப்பிக்கிடந்த உண்மையான தவிப்பினை கண்டு உள்ளுக்குள் ஏதோ செய்தது அவளுக்கு. தன் மனம் போகும் போக்கினை கண்டு தன்னையே கடிந்து கொண்டவள் அவன் பிடியில் இருந்து காலை உருவிக்கொண்டு “அதெல்லாம் ஒன்னும் வேணாம் மிஸ்டர்...” நாசுக்காய் கூற,

அதைகேட்டு முகம் சுனங்கியவன் அவள் வலியை தாங்கிக் கொண்டு நிற்பதை பார்த்து என்ன நினைத்தானோ அவளை சடாரென கைகளில் ஏந்தி இருந்தான்.

ஒரு நொடி அவள் முகம் பார்த்து ரசித்தவனுக்கு அவள் வலியை தாங்கிக்கொண்டு நிற்பதை கண்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவளிடத்தில் வேறு யாராய் இருந்தாலும் உதவி செய்ய முனைந்திருப்பான் தான் ஆனால் இவளிடத்தில் அதையும் மீறி ஏதோ ஒன்று கூடுதலாய் இருந்தது. உள்ளுக்குள் பனித்துளியாய் எதுவோ சிதறும் உணர்வு.

அவளை கைகளில் ஏந்திய போது மனம் சில்லென காற்றில் மிதப்பது போல் இருந்தது. அந்த வானத்தையே வசப்படுத்தியது போல் இருந்தது. முதல் தடவையாய் அவளை காண்கிறோம் என்ற எண்ணமே அவன் நினைவில் இல்லை. காலம் காலமாய் பழகிய உணர்வு. இதுவரைக்கும் எந்த பெண்ணிடத்திலும் அவனுக்கு இதுபோல் தோன்றியதில்லை. எந்த பெண்ணையும் அவன் பார்த்தது கூட கிடையாது.

முதல் பெண்... முதல் தொடுகை... அதுவும் அடிநெஞ்சு வரை தித்தித்த உணர்வு... முதன்முதலாய் தோன்றிய உணர்வு... அனைத்தும் புதிதாகவும் பிடித்ததாகவும் இருந்தது. சற்று முன் அவளை பார்த்து ரசித்தற்கு தன்னையே கடிந்து கொண்டவன் இக்கணம் அவளை கைகளில் ஏந்திக் கொள்வதற்கு கொஞ்சம் யோசிக்கவில்லை.

அவனின் செய்கையில் பதறிப்போனவள் அவன் கைகளில் இருந்து திமிற முதலில் அதில் அவளை இறக்கிவிட எத்தனித்தவன் அவள் கால்களில் வழிந்த ரத்தம் கண்டு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.

வெகு அருகில் தான் அவர்கள் மூவரும் தங்கி இருக்கும் வீடு என்பதால் கைகளில் அவளை ஏந்திக்கொண்டே அந்த மலைப்பாதையில் வேகமாய் நடந்து வீட்டினை அடைந்திருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்து இருக்கையில் அவளை அமர வைத்து அவளின் பாதத்தை ஸ்டூலின் மேல் வைத்தவன் அங்கிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளின் கால் காயத்தை துடைத்து அதில் மருந்திட்டவன் அதில் சிறு கட்டு போட்டான்.

அத்தனையையும் உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா. முகம் தான் உணர்ச்சிகளற்று இருந்தது. அவள் உள்ளமோ உணர்ச்சிக்குவியலை தாங்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

அன்று அவன் தொட்டபோது தான் சுயநினைவில் இல்லை. ஆனாலும் நிலைக்கு திரும்பி அவன் செயல் ஏற்படுத்திய காயத்தை தன் வார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டாள். இப்போதும் அவன் அவள் மனதில் இருக்கிறான் தான். ஆனால் காதலனாய் இல்லை. இன்னொருத்தியின் காதலனாய்.

முதலில் தடுமாறிக்கொண்டு தான் இருந்தாள். அவனை மறக்கமுடியாது. காலப்போக்கில் அந்த மாற்றமும் அவளிடத்தில் வந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் மஹத். தன்னிடத்தில் காதலை கூறி தான் வேறு ஒருவனை காதலிப்பாய் கூறவும் நாகரீகமாய் விலகிக் கொண்ட அவனின் செய்கை பெண்ணிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த மாற்றத்தினை விதைத்தவன் மீது அவளுக்கு இப்போதும் நன்மதிப்பு உண்டு.

இன்று இவனின் தொடுகையை தான் ஏன் ஏற்றுக் கொண்டோம் என குழம்பிப் போனாள். இன்று சுயநினைவில் தானே இருக்கின்றோம்.. முதலில் அவன் தொட்டதற்கு அறைந்தவள் இப்போபொது அவன் தன் கைகளிலே ஏந்திக்கொண்டு வந்திருக்கின்றான் இதற்கு சும்மா இருப்பதா.. மனம் தன் மனதின் தடுமாற்றத்தை மறைக்க கோபம் எனும் முகமூடியை அணிந்துகொள்ள கோபத்துடன் அவனை பார்த்தாள்.

அவனோ அடிபட்ட சேயை அரவணைக்கும் தாயினைப் போல் அவள் காயம்பட்ட பாதத்தினை தன் கரத்தினால் மென்மையாய் வருடிக்கொண்டிருந்தான். அதில் எந்த விகல்பமும் இல்லை. ஒரு தாய் தன் சேயை வருடிக்கொடுக்கும் பாசமே அதில் வெளிப்பட்டது.

அவனின் தன்னலமில்லா பாசத்தின் முன் அவளின் கோபம் எனும் முகமூடி கழண்டு விழுந்தது. இருவருக்கும் இது முதல் சந்திப்பு என்றே தோன்றவில்லை. ஏதோ ஜென்ம பந்தமாய்....

“இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்


அதில் காதல் கொடுத்து மனதினுள் நீயும்
விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே


பரவசம் தருகிறாய்

நீ இறகாய் என்னை தொடுகின்றாய்
அழகாய் இம்சை செய்கின்றாய்
சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்


உன் விழிகள் என்னும் கடிகாரத்தில்
என் காதலினை பார்க்கின்றேன்
கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே


உன்னை பார்க்கும் போதெல்லாம் காலம்
இங்கு ஓடாதே முட்கள்
என்னை குத்தாதே பேரன்பே


அதில் காதல் கொடுத்து மனதினுள் நீயும்
விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே


பரவசம் தருகிறாய்.”


சிதறும்.
..
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷம்லா டியர்
 
Last edited:

Keerthi elango

Well-Known Member
Nice epi sis...shashi ku rogan...shika kum pair iruku...but mathu ku yar than pair?? Oru vela shakthi than antha hero vo...?? Intresting.... Keep rockinggg buddy...
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top