Ramadan 2021-Day 25 , plans of quraish to stop Prophet Muhammad preaching Islam .

Advertisement

fathima.ar

Well-Known Member
நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர். மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர். நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: சில குறைஷித் தலைவர்கள் அபூதாலிபிடம் சென்று “அபூதாலிபே! நிச்சயமாக உமது சகோதரர் மகன் எங்களது கடவுளர்களை ஏசி, எங்களது மார்க்கத்தையும் குறை கூறுகிறார். எங்களில் உள்ள அறிஞர்களை மூடர்களாக்கி எங்களது மூதாதையர்களை வழிகெட்டவர்களாக்கி விட்டார். நீரும் அவருக்கு எதிரான எங்களது மார்க்கத்தில் இருப்பதால் இவ்வாறான செயல்களிலிருந்து அவரை நீரே தடுத்துவிடும். அல்லது எங்களிடம் ஒப்படைத்துவிடும். அவரை என்ன செய்வதென நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம்” என்றனர். அபூதாலிப் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்புக் குறித்து அபூதாலிப் நபி (ஸல்) அவர்களிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் தங்களது அழைப்புப் பணியைச் செய்தார்கள். இதைக் கண்ட குறைஷியர்கள் கோபமுற்று மறுமுறை அபூதாலிபை சந்திக்க நாடினர். இம்முறை மிக வன்மையாகக் கண்டித்துப் பேச வேண்டுமென முடிவு செய்தனர்.

அபூதாலிபை மிரட்டுதல்

குறைஷித் தலைவர்கள் அபூதாலிபை சந்தித்து “அபூதாலிபே! நீர் வயது முதிர்ந்தவர். எங்களது மதிப்பைப் பெற்றவர். நாங்கள் உமது சகோதரர் மகனைத் தடுத்து நிறுத்தக் கூறியும் நீர் அவரைத் தடுக்கவில்லை. அவர் எங்களது மூதாதையர்களைத் திட்டுவதையும் எங்களது அறிஞர்களை மூடர்களாக்குவதையும் எங்களது கடவுளர்களைக் குறை கூறுவதையும் கண்டு நாங்கள் பொறுமை காக்க முடியாது. நீரே அவரை சரிசெய்துவிடும். இல்லையெனில் நமது இரு கூட்டத்தால் ஒரு கூட்டம் அழியும் வரை உம்முடனும் அவருடனும் நாங்கள் போர் செய்வோம்” என்றனர்.

இந்த எச்சரிக்கையும் அச்சுறுத்தலும் அபூதாலிபுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து நடந்ததைக் கூறி “எனது சகோதரர் மகனே! உமது கூட்டத்தார் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறிச் சென்றார்கள். எனவே, நீ என்மீது கருணை காட்டு! பலவீனமான என்னை தாங்கவியலா துன்பத்தில் ஆழ்த்திவிடாதே” என்றார். அபூதாலிப் மனம் தளர்ந்து தன்னைக் கைவிட்டு விட்டார் என்று கருதிய நபி (ஸல்) அவர்கள் “என் பெரியதந்தையே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது ஏகத்துவ அழைப்புப் பணியை விடுவதற்காக அவர்கள் சூரியனை எனது வலக்கரத்திலும், சந்திரனை எனது இடக்கரத்தில் வைத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும்வரை அல்லது நான் அழியும்வரை இதை விடமாட்டேன்” என்று கூறிவிட்டு கண் கலங்கியவர்களாக அங்கிருந்து வெளியேறினார்கள். அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து “என் சகோதரர் மகனே! நீ விரும்பியதைச் செய்துகொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த நிலையிலும் எவரிடமும் உம்மை ஒப்படைக்க மாட்டேன்” என்று கூறினார்..


நபி (ஸல்) தங்களது ஏகத்துவ அழைப்பை நிறுத்தாமல் தொடர்வதைக் கண்ட குறைஷியர்கள், அபூதாலிப் முஹம்மதை கைவிட மறுத்து நம்மைப் பிரியவும் விரோதித்துக் கொள்ளவும் துணிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டனர். அவர்கள் வலீதின் மகன் அமாராவை அழைத்துக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர். “அபூதாலிபே! இவ்வாலிபர் குறைஷியரில் சிறப்பாக வளர்க்கப்பட்ட அழகிய வாலிபர். அவரது சகல உரிமைகளும் உமக்குரியது. இவரை உமது மகனாக வைத்துக் கொண்டு, உமது மார்க்கத்திற்கும் உமது மூதாதையர்களின் மார்க்கத்திற்கும் முரண்பட்டு, உமது கூட்டத்தாரிடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் அறிஞர்களை மூடர்களாக்கிய உமது சகோதரர் மகனை எங்களிடம் ஒப்படைத்துவிடும். ஒருவருக்கு ஒருவர் என சரியாகி விடும். நாங்கள் அவரைக் கொன்று விடுகிறோம்” என்றனர். அவர்களிடம் அபூதாலிப் மிகுந்த கோபத்துடன் “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பேரம் மிக மோசமானது. உங்கள் பிள்ளையை என்னிடம் ஒப்படைப்பீர்கள். அதை நான் ஊட்டி வளர்க்க வேண்டும்! எனது மகனை உங்களிடம் நான் ஒப்படைப்பேன். நீங்கள் அவரைக் கொலை செய்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார். அதற்கு முத்இம் இப்னு அதீ (அப்து மனாஃபின் கொள்ளுப்பேரர்) “அபூதாலிபே! உமது கூட்டத்தினர் உமக்கு நீதமான தீர்வைக் கூறி நெருக்கடியிலிருந்து உம்மை விடுவிக்க முயன்றனர். ஆனால் நீர் அதில் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லையே!” என்றார். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நீதம் காட்டவில்லை. (முத்இமே) நீ என்னைக் கைவிட்டு விட்டு எனக்கு எதிராக இக்கூட்டத்தினரைத் தூண்டிவிடுகிறாய்; அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறாய். நீ விரும்பியதைச் செய்துகொள்” என்று கோபமாகக் கூறினார்.

அபூதாலிபின் மூலமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்கிவிட வேண்டுமென்ற தங்களது திட்டத்தில் தோல்வியுற்ற குறைஷியர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதாலிப் தானாக விலகிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டனர்.

நபியவர்கள் மீது அத்துமீறல்

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு அழைப்புப் பணியைத் தொடங்கும் வரை குறைஷியர்கள் அவர்களை தங்களில் மதிக்கத்தக்க நபராகவே கருதி வந்தனர். அழைப்புப் பணியைத் தொடங்கியதும் அவர்கள் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது அத்துமீறாதிருந்தனர். தற்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்த அவர்களால் நபி (ஸல்) அவர்களின் செயல்பாடுகளை நீண்ட நாள் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குறைஷித் தலைவர்களில் ஒருவனான அபூ லஹப் அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபி (ஸல்) அவர்களிடம் கடும் பகைமையைக் காட்டி வந்தான் என்பதை ஹாஷிம் கிளையாரின் சபையிலும் ஸஃபா மலை நிகழ்ச்சியிலும் நாம் அறிந்திருக்கிறோம்.

நபித்துவத்துக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தங்களின் மகள்கள் ருகையா, உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபாவுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கியதும் அபூ லஹப் தனது மகன்களை நிர்ப்பந்தித்து விவாகரத்துச் செய்ய வைத்துவிட்டான்.


நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான்.

ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான்.

அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.

அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.

“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”

பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்
).

அபூலஹபும் அவரது மனைவியும் தொடர்ந்து நபியவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் பொழுது இந்த வசனங்கள் இறங்கியது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top