Ramadan 2021- Day 16 prophet Muhammad his childhood

Advertisement

fathima.ar

Well-Known Member
நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப் மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர் அனாதையான பின், தன் பேரர் மீது அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன் தந்தையை இழந்த சோகம் ஒரு புறம் வருத்திக்கொண்டிருக்க, தற்போது தாயையும் இழந்து அந்த சோகம் இரட்டிப்பாகி விட்டது. தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை தனிமையில் விட்டுவிடாமல் எல்லா நிலையிலும் தன்னுடன் வைத்து தனது பிள்ளைகள் அனைவரையும்விட அவருக்கு முன்னுரிமை அளித்து வந்தார்.

புனித கஅபாவின் நிழலில் அப்துல் முத்தலிபுக்கென ஓர் விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள். சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றிவிட முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப் பார்த்துவிட்டால் “எனது அருமைப் பேரரை விட்டுவிடுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கென ஒரு தனித் தன்மை இருக்கிறது” என்று கூறி, தன்னுடன் விரிப்பில் அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார். அவரது செயல்களையும் அசைவுகளையும் கண்டு களிப்படைவார்.

நபி (ஸல்) அவர்களின் 8 வயது ஆனபோது பாட்டனார் அப்துல் முத்தலிபும் மக்காவில் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை, அவரது மகன் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென விரும்பினார்.

சகோதரன் மகனைப் பராமரிக்கும் பொறுப்பை அபூதாலிப் மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றினார். தனது பிள்ளைகளில் ஒருவராக அவரை ஆக்கிக் கொண்டார். அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும் கண்ணியமும் அளித்து வந்தார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பாதுகாத்து அரவணைத்தார். நபி (ஸல்) அவர்களுக்காகவே பிறரின் நட்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்.

நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ’ஷாம்’ தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார்.
இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு “இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பியுள்ளான்” என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் “இது எப்படி உமக்குத் தெரியும்?” என வினவினர். அவர் “நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் - கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு ‘ஹர்புல் ஃபிஜார்’என்று சொல்லப்படும். அதன் காரணமாவது: கினானாவைச் சேர்ந்த ‘பர்ராழ்’என்பவன் கைஸ் அய்லானைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டான். இந்தச் செய்தி உக்காள் சந்தையில் பரவியது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் சண்டையிட்டனர். குறைஷ் மற்றும் பனூ கினானாவுக்கு ‘ஹர்ப் இப்னு உமய்யா’ தலைமை தாங்கினார். போரின் ஆரம்பத்தில் கைஸ் தரப்பினருக்கு வெற்றி கிட்டியது. ஆனால், நடுப் பகலுக்குப்பின் நிலைமை கைஸுக்கு எதிராகத் திரும்பியது. இந்நிலையில் சில குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பினர். எந்தத் தரப்பில் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதோ அந்த அதிக எண்ணிக்கைக்கு மட்டும் நஷ்டஈடு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து சமாதானமாயினர். இந்தப் போர் புனித மாதத்தில் ஏற்பட்டு அதன் கண்ணியத்தைக் குலைத்து விட்டதால் அதற்கு ‘பாவப்போர்’ எனப் பெயரிட்டனர். நபி (ஸல்) அவர்கள் இதில் கலந்துகொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பெடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள்.

சிறப்புமிகு ஒப்பந்தம்

மேற்கூறப்பட்ட போருக்குப்பின் சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வயது முதிர்ந்தவராகவும் மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்.

இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில் இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் “இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்” என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர்.

வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!” எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.

இதுபற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: கதீஜா பின்த் குவைலித் சிறப்பும் வளமும் மிக்க வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். தனது வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார். நபி (ஸல்) அவர்களின் வாய்மை, நம்பகத்தன்மை போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்ட போது அவர்களை வரவழைத்து “எனது அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
 

fathima.ar

Well-Known Member
25 வயசுல வியாபாரம் செய்றாங்க இளமை காலத்திலேயே அவுங்களுக்கு தொழில் முறையில்
அஸ் - ஸாதிக்--- உண்மையாணவர்
அல்-அமின்-- நம்பிக்கைக்குரியவர்


என்ற பெயர் பெற்றிருந்தார் இப்படி ஒரு உண்மையாளரை பிடிக்காம போகுமா???
யாருக்கு பிடிச்சது நாளை பார்ப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top