Ramadan 2021- Day 11

Advertisement

fathima.ar

Well-Known Member
வாலிபரான ஈஸா அவர்கள்,மக்களை நேர்வழிபடுத்த எவ்வளவோ முயன்றார்கள். அவர்களைக் கண்டாலே மக்களுக்கு கடும்கோபம் ஏற்பட்டது. தகப்பனில்லாது பிறந்த நீரா எமக்கு புத்தி சொல்ல வந்தீர்? காலம் காலமாக நமது மூதாதையர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நிந்திக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சொன்னதோடு, அவர்களை தீர்த்துக் கட்டவும் முயன்றார்கள்.

பனீ இஸ்ரவேலர்களிடம் தான் நபி என்பதை அறிவித்ததோடு,அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வருகையைப் பற்றிக் குறிப்பட்டதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்

மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான்,உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துகிறேன். எனக்குப் பின்னர், ‘அஹ்மத்‘என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான், (உங்களுக்கு) நன்மாராயம் கூறுகிறேன்’ என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த சமயத்தில், (அவரை விசுவாசிக்காது) ‘இது தெளிவான சூனியம்!’ என்று அவர்கள் கூறினர்.’
-அல்-குர்ஆன் 61:6


ஒரு சமயம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலுள்ள நைல் நதியோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். நதி கரையோரத்தில் சில சலவைத் தொழிலாளிகள், அழுக்கு துணிகளை மூட்டை மூட்டையாகக் குவித்து வைத்துக் கொண்டு துவைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கொண்டு உங்கள் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று உபதேசம் செய்தார்கள். இவர்களின் உபதேசத்தைக் கேட்டு சலவைத் தொழிலாளிகள் சிந்திக்கத் தொடங்கி, அவர்கள் மீது விசுவாசம் கொண்டார்கள்.

துணிக்கு சாயம் ஏற்றும் தொழில் செய்பவரிடம் சென்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழில் கற்க, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டு, ஒவ்வொரு பானையிலும் சாயத்திற்கு ஏற்றவாறு துணிகளை போட்டு சாயம் ஏற்றச் சொன்னார்கள். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனைத்து துணிகளையும் ஒரே பானையில் போட்டு சாயத்தில் ஏற்றினார்கள். சாயக்காரர் வந்து, மிகவும் கோபப்பட்டு, துணிக்காரர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று அங்கலாய்த்தார். அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லி ஒவ்வொரு துணியாக எடுங்கள். நீங்கள் நினைத்த சாயம் அந்தந்த துணிகளில் இருக்க காண்பீர்கள் என்று சொன்னார்கள். அதன்படி அவன் செய்ய, அவ்வாறே வந்தது. இதைக் கண்டு அவன் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஈமான் கொண்டான்.


மன்னன் ஐரதூஸ் இறந்த சேதி ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், யூசுப் நஜ்ஜார் அவர்களையும் அழைத்துக் கொண்டு பைத்துல் முகத்தஸ் திரும்பினார்கள். வழியில் அவர்கள நாசரேத் என்ற ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தார்கள்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 30ஆகியது. ஒலிவ இலைகளைச சேகரித்து வருவதற்காக அவாக்ள் தங்கள் தாயுடன் ஒரு மலைமீது ஏறினர். சில இலைகளைப் பறித்துத் தாயிடம் ஒப்படைத்து விட்டு,அந்த மலையின் ஓரிடத்தில் அமர்ந்து இறை தியானத்தில் ஈடுபட்டார்கள். அச்சமயத்தில் அவர்களின் முன் ஒரு பேரொளி தோன்றியது. திடுக்கிட்ட அவர்கள் அதனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவ்விடத்தில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இது இன்ஜீல் வேதமாகும். அல்லாஹ் பனீ இஸ்ரவேலர்களுக்கு நேர்வழிக்காட்டக் கூடிய தூதராக உங்களை நியமித்துள்ளான். அவர்களை விக்கிரக ஆராதனையை விட்டு விலக்கி, அல்லாஹ்வை மட்டும் வணங்கிவர வைப்பீர்களாக!’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் மொழியான சுர்யானீ (அரேமிய பாஷை)பாசையில் வேதம் இறக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்த உபதேசங்களெல்லாம் அவர்களது நெஞ்சத்தில் ஆழப் பதிந்து விட்டன. இந்த இன்ஜீல் வேதம் இறக்கபட்டது ரமலான் மாதம் 18அன்று.

அதன்பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தாயிடம் தான் நபியாக அனுப்பப்பட்ட விசயத்தையும்,அதனால் தங்களுக்கு சேவை புரிவதில் அதிகமாக ஈடுபட முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னார்கள்.
அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னுடைய இந்த நிலையைப் பற்றி அல்லாஹ் நீ பிறக்கும் முன்பே எனக்கு அறிவித்து விட்டான். அதனால் நீ எதற்கும் கவலைப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வா என்று சொன்னார்கள்.

மலையிலிருந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் வழியில் ஒரு குஷ்டரோகி தென்பட்டான். அவனை ஈஸா நபியவர்கள் தடவி இறைவனிடம் நோயை குணமாக்கும்படி இறைஞ்சினார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவன் பரிபூரணமாக குணமடைந்தான். அவன் இச்செய்தியை பைத்துல்முகத்தஸ் சென்று மக்களிடம் சொன்னான். இச்செய்தி காட்டுத்தீ போல நகரெங்கும் பரவி விட்டது.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நகருக்குள் நுழைந்ததும், பிறவிக் குருடர்கள், ஊமையர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள் ஆகியோர் அவர்கள் முன்னால் கூடிநின்று தங்களையும் குணப்படுத்துமாறு வேண்டிநின்றனர். ஈஸா நபியவர்கள் அவர்கள் அனைவரையும் குணப்படுத்தினார்கள்.
இப்பெரும் கூட்டத்தினரிடையே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்தியம்பினார்கள். விக்கிரக வணக்கத்தை விட்டு விலகுமாறு வேண்டினார்கள். பனீ
இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது செய்துள்ள கிருபைகளையும்,உதவிகளையும் மறந்து விக்கிரகத் தொழுபர்களாக மாறிவிட்டதையும், மதகுருமார்கள் இறைப் பணியை மறந்து விட்டு பேராசை பிடித்து வீண் ஆடம்பரவாழ்வில் அலைக்கழிந்து கிடப்பதையும் கடுமையாக சாடினார்கள்.

இதனால் பனீ இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியினரும்,மதகுருமார்களும் அவர்களுக்கு பரமவிரோதிகளாக மாறினர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சனிக்கிழமை அன்று குளக்கரையில் அமர்ந்து கொண்டு,களிமண்ணால் பறவைகளைப் போன்று உருவங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இது அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. ஈஸா நபியின் இச்செயலை அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும்,நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
– அல்குர்ஆன் 3:49


அப்படியானால் எலும்பில்லாத ஒரு பறவையைச் செய்து அதனைப் பறக்கச் செய்யுங்கள் பார்ப்போம் என்று கிண்டலாகக் கூறினர். ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வவ்வாலைப் போன்று ஒரு பறவையைக் களிமண்ணில் செய்து,அதன்மீது ஊதினார்கள். உடனே,அது உயிர்ப்பெற்று பறக்க ஆரம்பித்தது.
இவ்வளவு மகத்தான அற்புதத்தை ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டியும்,அந்தப் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்ளாது,இது ஒரு கண்கட்டு வித்தை. கொஞ்சம் முயற்சி எடுத்தால் யாரும் இதைப் போல் செய்யலாம் என்றனர்.
அவர்கள் இப்படிச் சொன்னதும்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ என்னை நம்புங்கள். நான் அல்லாஹ்வின் தூதனே! இதனை நிரூபிப்பதற்காக அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு இது போன்ற இன்னும் பல அற்புதங்களை செய்து காட்டுவேன். பிறவிக் குருடர்களுக்கும்,பார்வை வரச் செய்வேன். குஷ்டரோகத்தையும் குணப்படுத்துவேன்’ என்று கூறினார்கள்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,இதனைப் பரிசோதிப்பதற்காக வேண்டி,அப்பகுதியிலிருந்த அத்தனைப் பிறவிக் குருடர்களையும்,குஷ்டரோகிகளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் முன் நிறுத்தினார்கள். அவர்கள் அனைவரையும் அதிசயிக்கத்தக்க விதத்தில் அனைவரும் குணமாயினர்.
இச்செய்தி வெளியில் தெரியவர ஆரம்பித்ததும் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களை நாடி வந்தனர். அவர்கள் அனைவரின் நோய்களையும் குணப்படுத்தினார்கள். இவ்வளவு செய்தும் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை நபி என்று நம்ப மறுத்தனர். மாறாக,இவர் பெரிய சூனியக்காரர் என்றே கூறி வந்தனர்
ஈஸா நபியவர்கள் அவர்களை நோக்கி ‘நான் எத்தகைய அற்புதத்தை செய்து காட்டினால் என்னை நபி என்று நம்புவீர்கள்????’ என்று கேட்டார்கள்
 

fathima.ar

Well-Known Member
இப்படி ஒரு ஆப்ஷன் பனீ இஸ்ரவேலர்கள் கிட்ட கொடுத்தா அடுத்து அவுங்க எதை செய்ய சொல்லி ஈஸா நபியோட நபித்துவத்தை சோதனை செய்வாங்க?

அந்த சோதனையோட முடிவு எப்படி இருக்கும்?
நாளை பார்ப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top