PRIYA MOHAN's Epilogue on நான் இனி நீ...!

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
HI GUYS!!!
EPILOGUE படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க!! I'm Waiting...!!


Epilogue
நிசப்தமான மாலை வேளை, சுற்றிலும் ஆள் அரவமற்ற அந்த வெட்டவெளியில் வானுயர நிமிர்ந்து நிற்கிறது கற்கால கோட்டை சுவர். பத்தாள் உயரத்தையும் விட பன்மடங்கு பிரமாண்டமாய், வர்ண பூச்சுகள் இல்லாத பெரும்பாறை கற்களால் உருவாக்கப்பட்ட அந்த சுவரின் மத்தியில் செங்குத்தாய் இமைகள் போல திறந்துக்கொள்ளும் கதவுகள்! அருகே சென்றாலே தன்னால் திறந்து வழிவிடும்படி நவீன மயமாய்!

கோட்டையின் முகப்பிலேயே தங்கநிற வளைவில்(ஆர்ச்சில்) நூறடி தொலைவில் நின்றாலும் பளிச்சென கண்ணை பறிக்கும்படி பொறிக்கப்பட்டிருந்தது, “தீ-பாரடைஸ்”. உண்மையிலேயே அது ‘சொர்க்கம்’ தான், அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தான் தீபன் சக்கரவர்த்தி!

D-வில்லேஜ் பாணியில் பல முக்கிய நகரங்களில் தனது கிளைகளை பரப்பியிருந்தான் தீபன். ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் முக்கியம்சங்களை தேடி தேடி பிடித்து, பழமை மாறாது அவன் வழங்கியதன் பலன், D-வில்லேஜ் இப்போது தென்னிந்தியாவை தாண்டி புகழ் பெற்று வடமாநிலத்திலும் வெற்றிகரமாய் தொடங்கப்பட்டுவிட்டது.

வடமாநிலத்தவர்களை கவரும் வகையில் கிராம பாணியில் இல்லாது மன்னராட்சி காலகட்டத்தை நினைவுகூறும்படி செய்தாலென்ன என்ற யோசனை தோன்ற, உடனே அதை செயல்படுத்த தொடங்கிருந்தான் தீபன். சுமார் ஒரு வருட அயராத உழைப்பு! இப்போது கண் முன்னே உருவம் பெற்று நிற்கையில் அவனுக்குள்ளே பெருமிதம்!

தீபன் சக்கரவர்த்தி அரசியல் பின்னணியை விட்டு முற்றிலும் வெளிவந்து கைத்தேர்ந்த தொழிலதிபராய் உருபெற்றிருந்தான்! தந்தையின் பெயரை தாண்டி அவனுக்கென்ற தனி அடையாளம்!

இதற்கும் “D-வில்லேஜ்” என தீபன் பெயரிட, இதை வீடியோ காலில் பார்த்த உஷா இதன் பிரம்மிப்பில் சொக்கி, “இது வில்லேஜ் இல்லடா, சொர்க்கம்!” என வியந்து சொல்ல, அதையே பிடித்துக்கொண்டான் தீபன்.

‘அட, இதுக்கூட நல்லா இருக்கே?!’ என்ற எண்ணம் வந்ததுமே, ‘D-வில்லேஜ், D-பாரடைஸாய்’ மாறிவிட்டது.

நாளைய திறப்பு விழாக்கான ஏற்ப்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. விழாவுக்கு வரவிருக்கும் முக்கிய பிரமுகர்களை மலர் தூவி வரவேற்க ஆஜானுபாகுவான யானைகளும், அவர்களை உள்ளே அழைத்து செல்ல, தங்க நிறத்தில் குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களும் தயார் நிலையில் இருந்தன.

கோட்டை சுவர் தாண்டி சென்றால், உள்ளுக்குள்ளே குடிசை முதல் ஒட்டுக்கட்டடம் வரை பலவித அமைப்பிலான வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் சிறு தோட்டம்! அதன் அருகிலேயே பொதுகிணறு, நான்கு வீட்டிற்கு ஒன்று என்ற அமைப்பில் இருந்தது. இன்னும் சற்று உள்ளே சென்றால், படித்துரையோடு ஆறு போன்ற அமைப்பில் ஸ்விம்மிங் பூல்!

மத்தியில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாய் எழுந்து நின்ற கட்டிடத்தின் வனப்பே சொன்னது, ‘இது ராஜா மந்திர்’ என்று! அதன் முகப்பிலேயே பெரும்படகு போன்ற அமைப்பிலான வரவேற்ப்பு மேடை! அலுவலர்கள் நின்று தங்கள் பணியை செய்ய எதுவாய் கணினிமயத்தோடு அமைந்திருந்தது. விஐபி-கள் வந்தால் தங்க வைக்கவென அந்த ராஜா மந்திரின் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
முகலாயர்கள் கால கட்டிட கலையை பெரும்பாலும் ஒத்திருந்தது D-பாரடைஸ்!


நாளைய விழாக்கான வேலைகள் ஜரூராய் நடக்க, விழா நாயகன் அங்கே இல்லாமல் இருப்பானா என்ன?
‘ராஜா தர்பார்’ போல அமைக்கப்பட்டிருந்த மீட்டிங் ஹாலில் நடுநாயகமான ‘அரி’முகம் வைத்த கதிரையில் நிஜ சக்கரவர்த்தியாகவே அமர்ந்திருந்தான் தீபன் சக்கரவர்த்தி.


எப்போதும் எதற்கும் பதட்டப்படாது, ‘நான் இப்படிதான்! இப்போ என்ன?’ என்று இலகுவாய் கையாளும் அவனுக்கு இன்று இயல்பு மாறி பெரும் கலக்கம்! அவன் பற்கள் பதட்டத்தில் கை விரல்களை கடித்துக்கொண்டிருக்க, ‘அடுத்து என்ன செய்வது?’ என்று எப்போதும் தோன்றாத கேள்வி அவனுள்.

அவனுக்கு ஒரு நிமிடம் கூட கொடுக்காத எதிர்தரப்பு, “இப்போ சொல்ல முடியுமா? முடியாதா?” என கேட்டுவிட்டது.

அலைபேசியின் ஒளித்திரையில் காணும் அந்த எதிர்த்தரப்பின் முகம் தீபனை திணற வைக்க, “ஓகே டேட், ஐயம் கோன்ன கட் தி கால்!” என்று சொன்னவளின் குரலில் கோவமோ, ஆத்திரமோ, பிடிவாதமோ ஒன்றுமில்லை. சொல்லிவிட்டு வீடியோ காலை துண்டித்திருந்தாள் தீரா! ‘தீ’பனும் ‘ரா’காவும் சரிவிகிதத்தில் கலந்த அவர்களின் செல்ல மகவு!

தீரா காலை கட் செய்ததுமே, “போச்சு... போச்சு.. போச்சு...” என வாய்விட்டு அலட்றினான் தீபன்.

அடுத்து அவன் பலமுறை தொடர்புக்கொள்ள முயன்றும் பலனில்லை. அழைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. தீபனும் கொஞ்சமும் அசராது மீண்டும் முயன்றுக்கொண்டே இருந்தான்.

பல வருடங்கள் சென்று இவனை புதியாய் பார்க்கும் யாராயினும் ‘இவனுக்கு இத்தனை பொறுமை உண்டா?’ என அதிசயத்தில் மூர்சையாயிருப்பர். அத்தனை பொறுமைசாலியாய் அவனை பண்படுத்தியிருந்தாள் தீரா.

பல தொடர் முயற்சிகளின் பலனாய் வீடியோ கால் அழைப்பு ஏற்கப்பட்டு விட, தீபனை நேர்கொண்டு பாராது முகத்தை திருப்பிக்கொண்டாள் தீரா.

“பேபிம்மாக்கு கோவமா...!?” தீபன் தாஜா செய்து பேச்சை தொடங்க, அதெல்லாம் அவன் மகளிடம் எடுப்படுமா?

“சொல்ல முடியுமா? முடியாதா?” இறுதியாய் அவள் கேட்டிருந்த அதே கேள்விலேயே பிடியாய் வந்து நின்றாள் தீரா. இப்போதும் அவள் முகத்திலோ குரலிலோ கோவம் இல்லை! ஆனாலும் அவள் வார்த்தைகள் அவள் கோவத்தை பறைசாற்ற, தள்ளி நின்று பார்க்கும் தந்தைக்கு, தன் மகவை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

“என்னடா பேபி சொல்லணும்!?” தெரிந்தே கேட்டான் தீபன்.

“ப்ச்!! லாஸ்ட் சண்டே நைட், நான் உங்க ரூம்க்கு டோர் நாக் பண்ணாம வந்துட்டேன்னு மாம் எப்படி கத்துனாங்க!! யூ க்நொவ் தட் ரைட்?” என்று விரல் நீட்டி கேட்ட தீரா, “பட் டுடே ஷி டிட் த சேம் டு மி! என் ரூம்க்குள்ள வரப்போ டோர் நாக் பண்ணாம அப்படியே வராங்க! நான் செஞ்சா அது மிஸ்டேக், அதே அவங்க செஞ்சா மிஸ்டேக் இல்லையா?” என்றாள் தீரா.

கேட்டுக்கொண்டிருந்தவனோ, ‘அன்னைக்கு நாங்க இருந்த நிலை அப்படி! நீ சடன்னா உள்ளே வரவும் ராகா கத்திட்டா!’ என்று முணுமுணுத்துக்கொண்டு, “அதுக்கு என்னடா செய்யலாம் இப்போ?” என்றான் தணிவாய்.

“அட்வைஸ் பண்ணுங்க, இனி இப்படி ரிப்பீட் பண்ணக்கூடாதுன்னு!!” என்று தீரா சொல்ல, “யாருக்கு?” என்றான் திகிலாய்.

“ப்ச்!! தி கிரேட் அனுராகாக்கு தான்!!” கைகளை ஆட்டி தீரா சொன்ன தினுசில் தீபனுக்கு சிரிப்பு வர, எங்கிருந்தோ, “ஏய்ய்ய்...” என்ற ராகாவின் குரல் கேட்டது அவனுக்கு.

“சொல்லுங்க டேடி!!!” தீரா இப்போது கத்த, கேமரா அங்கும் இங்கும் ஆடியது. அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் சாடிக்கொள்வது வேறு அவனுக்கு கேட்க, அவன் முகம் புன்னகையில் விரிந்தது. ஒரு வழியாய் கேமராவின் ஆட்டம் நின்று நேராக, அதில் தெரிந்தாள் அவனின் ‘ராகா’!

“என்னடி சண்ட அங்க?” என்ற தீபனை முறைத்த ராகா, “அவ கேட்டா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள்.

அவள் புடவையை பிடித்து இழுத்துக்கொண்டே தீரா, “நோ...நோ...” என கத்துவது கேட்க, “சின்ன பொண்ணுடி!!” என்றான் தீபன். அவன் புன்னகை மட்டும் குறையவே இல்லை.

“இவளா? ஐஞ்சு வயசு பொண்ணு மாறியா பிகேவ் பண்றா? பேசுறதெல்லாம் பாரு....!!” வேண்டுமென்றே தீராவை சீண்டவென ராகா சொல்ல, “ஹாஹா...!! உன் பொண்ணாச்சே!” என்றவன் ராகாவின் முறைப்பில் உரக்க சிரிக்க, “டேடி திஸ் ஸ் நாட் அட் ஆல் ஃபேர்!” என்ற தீராவின் குரல் கேட்க, இவன் பதில் சொல்லும் முன்னே “சரிதான் போடி!!” என்றிருந்தாள் ராகா.

“ஹும்!! நான் பாட்டி கிட்ட சொல்றேன்!!” என்று அங்கிருந்து குடுகுடுவென ஓடியிருந்தாள் தீரா. உஷாவோ சக்ரவர்த்தியோ அனுராகாவின் பேச்சுக்கு ஆட்சேபணையோ, அவளை ஒரு சொல்லோ கூட சொல்லவே மாட்டார்கள் என்பது ஐந்து வயது சிட்டுக்கு நன்கு தெரியுமென்பதால், அவள் அழைத்து தன் அன்னையை பற்றி குறை படித்தது அவளது அன்னை தாராவிடம்!! தாராவும் லோகேஷும் வேர்ல்ட் டூருக்கு சென்றிருந்தனர்.

“உன்னை பார்த்து ஒன் வீக் ஆச்சு தீப்ஸ்!” ராகா முகம் சுருக்க, “இன்னைக்கு நைட் ராஜஸ்தான் வரப்போற!? அதுக்குள்ள என்ன பேபி!? கிளம்பிட்டியா? பிளைட் மிஸ் பண்ணிடாதீங்க!!” என்றான் தீபன்.

“நீ இவ்வளோ பொறுப்பா பேசுனா நல்லாவே இல்ல...!!” என்ற ராகா, “ஆபிஸ்ல ஒரு சின்ன வொர்க் இருக்கு! வீடியோ கான்பரென்ஸ்! ஜஸ்ட் ஹால்ப் ஆர் தான் ஆகும்! முடிச்சுட்டு கிளம்புடுவேன்!!” என்ற ராகாவுக்கு முன்பிருந்த கோவம், வேகம், ஆத்திரம் எல்லாம் எங்கே போனதென்றே தெரியாது. அவளது அக்மார்க் ‘எக்ஸ்சென்ட்ரிக் பீகேவியர்’ இத்தனை வருடங்களில் ஓடியே விட்டது.
வயதின் முதிர்வு, மனைவி என்ற பதவி, மருமகள் என்ற பொறுப்பு இதத்தனையும் தாண்டி, ‘தாய்மை’ என்ற செழுமை அவளை இன்னமும் மெருகேற்றி பேரழகாய் காட்ட, தீபன் அவளிடம் தினம் தினம் தொலைந்துக்கொண்டிருக்கிறான்.


அதற்குள் தீபனுக்கு அங்கே சில வேலைகள் வர, அதை கவனிக்க சென்றான். சிறிது நேரத்திலேயே அவன் தொலைபேசி அலற, திரையில் ‘தர்மா’ என பெயரை கண்டதுமே தீபனுக்கு ஆவேசம்!!

உடனே அழைப்பை ஏற்றவன், “என்னடா?” என்றான் பல்லிடுக்கில்.

“பத்து குதிரை இன்னைக்கு எவனிங் போல வந்து சேரும்ன்னு சொல்லிருக்காங்க! எல்லாமே இம்போர்ட்டட்! அதுக்கு இடம் அரேஜ் பண்ணனும்!” என்ற தர்மனின் குரலில், “டேய்......!! ஏன்டா இப்படி இருக்க நீ?” என அலுத்துக்கொண்டான் தீபன்.

பின்னே, ஸ்விட்சர்லேன்டில் புது மனைவியோடு ஹனிமூன் சென்றவன், போன வேலையை பார்க்காது இங்கே திறப்புவிழாக்கான வேலைகளை செய்துக்கொண்டிருந்தால் தீபனும் என்ன தான் செய்வான்!

அவன் சொல்ல சொல்ல கேட்காமல் போனிலேயே அத்தனை வேலைகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறான் தர்மன்.

“நீரஜா உன்னை கண்டுக்குறதே இல்லையா?” தீபனின் கேள்வியில், “நானே செம்ம கோவத்துல இருக்கேன் தீபன்! இவர்க்கூட வந்து போரிங்!!” என்ற நீரஜாவின் குரலில், “இதெல்லாம் அவமானம்டா தர்மா! உன்னை போரிங்ன்னு சொல்லுற அளவுக்கு வச்சுக்கலாமா நீ?” என்றவன், “இனியொரு முறை நீ கால் பண்ணுனா, உன்னோட டூரிஸ்ட் விசாவை இன்னும் ஒரு மாசத்துக்கு எக்ஸ்டென்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ!!” என மிரட்ட அது சரியாய் வேலை செய்தது.

“இங்க எனக்கு நாகா இருக்கான்! நீ உன் வேலையை மட்டும் பாரு அங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் தீபன்.

தீபனை அனுராகா விரும்பியபோது ‘அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான்!’ என ஒற்றைக்காலில் நின்ற நீரஜா, தர்மனின் மீது காதலில் விழுந்தது விந்தையிலும் விந்தையே!

அனுராகா கூட, “அவன் உனக்கு செட்டே ஆக மாட்டான் நீரு” என அவளை போலவே சொல்ல, தர்மன் தான் வேண்டும் என ஒரே பிடியாய் நின்றுவிட்டாள் நீரஜா. கடந்த மாதம் நடந்த அவர்கள் திருமணத்தில் கூட, “இப்போ புரியுதா? காதல் வந்துட்டா செட் ஆகாதுன்னு தோனுற எல்லாமே செட் ஆகிடும்ன்னு!” என்று ராகா சொல்லிக்காட்ட, அதை உணர்ந்தவள் என்பதால் வெட்கப்பூச்சோடு ஆமோதித்தாள் நீரஜா.

இரட்டையர்களில் ஒருவன் குடும்பஸ்த்தன் ஆகிவிட, இன்னொருவனுக்கு பெண்ப்பார்க்கும் படலம் நடந்துக்கொண்டே இருக்கிறது.

திறப்புவிழா ஏற்ப்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் மீண்டும் ஒலித்தது தீபனின் அலைபேசி.
‘அட!!’ என எடுத்து பார்த்தவன், அழைப்பு சக்கரவர்த்தியின் பி.ஏ விடம் இருந்து என தெரிந்ததும் சட்டென உயிர்ப்பித்தான்.


இவன் ‘ஹலோ’ என சொல்லும்முன்னே, “மிதுன் சார்க்கு நினைவு திரும்பிடுச்சு! ஹாஸ்பிட்டல் கொண்டு போய்க்கிட்டு இருக்கோம், நீங்க உடனே கிளம்பி வாங்க!!” தந்தி சொற்கள் போல வந்த வார்த்தைகள் இவனை சேர, வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு கிளர்ச்சி அவனுக்குள் பிரவாகமெடுத்தது.

“மி...து...ன்...” அவன் உதடுகள் முணுமுணுக்க, ஐந்து வருட தவம் ஒரு முடிவுக்கு வந்ததை எண்ணி, அவன் கண்கள் கூட மெலிதாய் பனித்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் அவன் விமானநிலையத்தை அடைந்திருக்க, கனத்த மனதோடும் பெருத்த எதிர்ப்பார்ப்போடும் பயணமானான் சென்னையை நோக்கி!!

 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே நின்றிருந்தார் சக்கரவர்த்தியின் பி.ஏ. தீபன் வருவதை கண்டதும் அவனிடம் ஓடியவர், “எல்லாரும் ஏர்போர்ட் கிளம்பிட்டு இருந்தபோ திடீர்ன்னு மிதுன் சார் ரூம்ல சத்தம்! அவருக்கு வலிப்பு வந்துருக்கு! உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டோம்! எல்லாரும் இப்போ ரூம்ல இருக்காங்க!!” அவனுக்கு தேவைப்படும் தகவல்களை ரத்தின சுருக்கமாய் சொன்னவர், அவன் குடும்பம் இருந்த அறையை காட்ட, உள்ளே சென்றவனை ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் தீரா.

மகளை தூக்கிக்கொண்டவன், கண்ணீர் வடிய அமர்ந்திருக்கும் அன்னையை நெருங்கி, “ம்மா! டோன்ட் வொர்ரி! அவன் நார்மல் ஆகிடுவான்” என்றான் அவர் கரம் பற்றி.
“ம்ம்ம்..” என்றதை தாண்டி உஷாவிடம் மொழியில்லை. சக்கரவர்த்தி கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தார். அடுத்து அவன் கண்கள் அனுராகாவை தேட, அவளை காணாததால், புருவம் சுருக்கியவனை, “மாம் வெண்ட் டு மீட் த டாக்டர்” என்றாள் தீரா. தன் முகம் பார்த்தே தேவை உணரும் மகளை இறுக்கி அணைத்துக்கொண்டான் தீபன்.

அவன் மனம் ஒருநிலையிலேயே இல்லை. மிதுன் நினைவு திரும்பிய பின் எப்படி நடந்துக்கொள்வான்? இன்னமும் தன் மீது பகையுணர்வு இருக்குமா? துவேஷம் பாராட்டுவானா? நீ போடும் உயிர்பிச்சை வேண்டாமென தன்னை தானே தாக்கிக்கொள்வானா? அரசியல் மோகம் போயிருக்குமா? கத்தி ஆர்ப்பாட்டம் செய்வானா? இன்னும் பல பல எண்ணங்கள்! அனைத்தையும் தற்போதைக்கு நிறுத்த அங்கே வந்தாள் அனுராகா.

“தீப்ஸ்!!” அவள் அழைப்பில் தீபன் மட்டுமல்ல, சக்கரவர்த்தி உஷாக்கூட எழுந்து அவளருகே வந்து நிற்க, “ரொம்ப வருஷ கோமா! கான்ஷியஸ் வந்ததும் எப்படி பீகேவ் பண்ணுவாருன்னு கெஸ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க! புல் பாடி செக்-அப் நடந்துட்டு இருக்கு! இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்ன்னு சொல்றாங்க!!” என்றிட, யாரிடமும் பேச்சே இல்லை.

தீபனுக்கு மனதில் தோன்றிய அத்தனை கேள்வியும் அங்கிருந்த எல்லோர் மனதிலும் உதித்து, வாட்டுவதன் விளைவு, யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. சொன்ன நேரத்தை விட பத்து நிமிடம் தாமதப்பட, அறைக்குள் நுழைந்த டாக்டரை திடுக்கிடும் மனதுடன் எதிர்க்கொண்டனர்.

ராகா, “இஸ் எவ்ரிதிங் ஓகே டாக்டர்?” என்று கேட்டதும், அவர் ‘எஸ்’ என சொல்ல எடுத்துக்கொண்ட பத்து நொடிகளில், தீபனின் இதயம் துடித்த வேகத்தில் வெளியிலேயே குதித்திருக்கும்.

“புல் பாடி செக்-அப் முடிஞ்சுது! ஹீ இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்! ஐஞ்சு வருஷம் கோமால இருந்ததால, ரொட்டீன் லைஃப் லீட் பண்றதுல சில தடுமாற்றங்கள் இருக்கும்! மத்தபடி எந்த ப்ரோப்ளமும் இல்ல” என்ற மருத்துவரிடம் அடுத்து கேட்கும் கேள்வி என்னவாக இருக்க முடியும்? ‘அவனை சென்று பார்க்கலாமா?’ என்றார் உஷா.

எப்போதும் சொல்லும், ‘டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க மேடம்!’ என்ற வாக்கியமே அவரிடம் இருந்து வர, விரைந்து சென்றனர் மிதுன் சக்கரவர்த்தியை காண!!
தீபன் சற்று தயங்கியே நிற்க, அவன் மனநிலையை உணர்ந்துக்கொண்ட ராகா, அவன் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

என்னதான் கண்ணுக்குள் வைத்து சகல வசதிகளோடு மிதுனை கவனித்துக்கொண்டு இருந்தாலும், மருந்துகளும் கோமாவும் அவன் மெருகை உருக்குலைத்திருந்தன. பழைய திடமும் பிரகாசமும் அவனிடம் இல்லை. ஓய்ந்த உருவில், மெத்தையில் பல ட்யூப்களின் நடுவே கிடக்கும் மூத்தவனை காண, நெஞ்சம் கனத்து தான் போனது சக்கரவர்த்திக்கு.

கண்ணீரை அடக்கிக்கொண்டு மிதுனை நெருங்கினார் உஷா. நடுங்கும் விரல்களோடு மெல்ல அவன் சிகை கோத, கண் மூடியிருந்தவனிடம் அசைவு தென்ப்பட்டது. என்ன தவறு செய்தாலும் ‘மகன்’ என்ற உணர்வு அற்று போய்விடுமா என்ன? தன் பாட்டியின் அருகே நின்று மிதுனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தீரா. தீபனுக்கு இதயம் தாறுமாறாய் துடித்தது. இதோ இன்னும் சில நொடிகளே! மிதுன் கண் திறந்துவிடுவான்! அதன் பின் என்ன நடக்கும்? அதுவே அவனை சுற்றி சுழற்றியது.

அவன் எதிர்ப்பார்த்த நொடியும் வந்தது. மிக பிரயத்தனப்பட்டு கண் விழித்தான் மிதுன் சக்கரவர்த்தி. “கண்ணு முழிச்சுட்டான், ஏங்க.... பாருங்க...!! மிதுன் முழிச்சுட்டான்!!” உஷா சந்தோச பெருக்கில் சக்கரவர்த்தியை அழைக்க, அவருக்கும் தொண்டை அடைத்தது. ஆசையாசையாய் பெற்ற முதல் பிள்ளை. அரசியலில் எத்தனை பெரும் பதவி சென்றிருந்தாலும் ‘தந்தை’ என்ற பெரும் பதவி கொடுத்தவனல்லவா?!

கண் திறந்த மிதுனுக்கு கண்ணீர் முகத்தோடு அன்னையை கண்டதும், ‘தொலைந்து போன சிறுவன், தாயை கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொள்வானே!?’ அப்படியோர் உணர்வு. அவரை அணைத்துக்கொள்ள உள்ளம் வேகம் காட்ட, அவன் உடல் அதற்கு கொஞ்சமும் ஒத்துழைக்கவில்லை. வாய் திறந்து, “ம்மா!!” என அழைக்க, எச்சில் கூட்டி முயற்சித்தான்.

அவன் அடுத்தடுத்து முயற்சிக்க, அவன் முயற்சியை சட்டென நிறுத்தும்படி அமைந்தது, தீரா அவன் கன்னத்தில் கொடுத்த ஈர முத்தம். திகைத்து தான் போனான் மிதுன்! அப்போது தான் அவன் அருகே நிற்கும் பூங்கொத்தை காண்கிறான். அவன் கலங்கியிருந்த விழிகளோடு தீராவை நோக்க, “ஹாய்! நான் தீரா! ஹேப்பி டு சீ யூ பெரிப்பா! அம்மா சொன்னாங்க, யூ ஆர் நாட் வெல்! இப்போ எப்படி இருக்கீங்க?” மூன்றடியில் தீபனை பார்ப்பது போல இருந்தது, தீரா நின்ற மிடுக்கும், பேசிய தோரணையும்!
இமைக்க மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான் மிதுன் சக்கரவர்த்தி.

உஷா அவனை மெல்ல உலுக்கி, “என்னடா பார்க்குற? உன் தம்பி பொண்ணு தீரா!” என்றார் அவனுக்கு புரியும்படி. அவர் அறிமுகம் செய்ததும், தன் பால்பற்கள் தெரிய புன்னகித்த தீரா அவனை நோக்கி கரம் நீட்ட, இப்போது அவன் கரம் தன்னால் எழுந்து அந்த பிஞ்சுக்கரத்தை பற்றிக்கொண்டது.

“தாத்தா பேசுங்க” அவளே சக்கரவர்த்தியை மிதுன் முன் கொண்டு வர, தந்தையை கண்டவனின் கண்கள் குற்றவுணர்ச்சியில் தாழ்ந்தது. அவரும் ஒன்றும் பேசவில்லை, பேசும் நிலையிலுமில்லை. அனுராகா தீபனை பேச சொல்லி முன்தள்ள, மறுப்பாய் தலையசைத்துக்கொண்டே தேங்கி நின்றுவிட்டான்.

மிதுனின் கண்கள் அரைவட்டத்தில் அந்த அறையில் சுழல, “தீப்ஸ், ஹீ இஸ் சர்ச்சிங் யூ! போய் பேசு!!” என்றாள் ராகா. அப்போதும் அவன் நகரவில்லை.

மிதுன் முயன்று, ஈனக்குரலில், “தீ...ப...ன்...” என உச்சரிக்க, தீபனுக்குள் பலவித மாற்றங்கள். “டேடி, பெரிப்பா காலிங் யூ” என்ற அறிவிப்போடு அவனிடம் ஓடிவந்தவள், இழுத்துக்கொண்டு தான் போனாள் தீபனை.

கண் முன் நிற்கும் தீபனை நேர்க்கொண்டு பார்க்க குற்றம் கொண்ட நெஞ்சமது தயங்கியது. விழிக்கடையில் கண்ணீர் வழிந்தோட, பல நாள் வேலை நிறுத்ததில் இருந்த தொண்டையை கமறிக்கொண்டு பேச முயற்சித்தான் மிதுன் சக்கரவர்த்தி.

அவனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், “உன்மேல வெறுப்பு வர அளவுக்கு நடந்துக்கிட்ட மிதுன்! ரத்த சொந்தத்தை விட, தூக்கி வளர்த்த அப்பாவை விட உனக்கு பதவி ஆசை முக்கியமா போய்டுச்சு! நான் உன்னை சரியா வளர்க்கலைன்னு சொல்றதுக்கு இது ஒன்னு போதாதா மிதுன்?” உஷா ஆவேசமாய் பேசத்தொடங்க, “ஆன்ட்டி, நோ! யூ ஆர் நாட் சப்போஸ்டு டு டாக் லைக் திஸ் நவ்! இப்போதான் மிதுன் ரெக்கவர் ஆகிருக்காரு! சோ ப்ளீஸ்!!” என்று மிதுன் நிலையை ராகா நினைவுப்படுத்த, “இல்ல அனு, இன்னொரு முறை குடும்பம் உடையுறதை பார்க்குற தெம்பு எனக்கில்லை!” என்றவர் அடக்கமுடியாது கேவலை வெளியிட, சமைந்து நின்றனர்.

“வீட்டுக்குள்ள அரசியல் புகுந்தா நிம்மதி போய்டும்ன்னு எத்தனை முறை சொல்லிருப்பேன்!? இவன் எழுந்துரிக்காத வரை ‘எப்போடா சரியாவான்?’ன்னு கவலை; இப்போ கண்ணு முழிச்சதும், ‘எங்க மறுபடியும் எல்லோரும் திக்குக்கு ஒண்ணா சிதறிடுவோம்ன்னு’ பதறுது!” என்றார் உள்ளத்தை மறைக்காது.

உஷா மேலும் மேலும் அலட்றிக்கொண்டே போக, அவரை தேற்றுவாறில்லை. தீபன் மிதுனின் முகத்தை விட்டு மறுப்பார்வை திருப்பாது சிலையென நிற்க, ராகா சக்கரவர்த்தியை தான் அணுகினாள்.

“அங்கிள்! நீங்களாவது சொல்லுங்க, ஆன்ட்டி ரொம்ப எமோஷனல் ஆகுறாங்க?” என்றிட, “அவ அழுதுட்டா, நான் அழுகலை அவ்வளோதான்” என்ற சக்கரவர்த்தி, ‘நானும் உணர்சிகளின் பிடியில் தான் சிக்கி நிற்கிறேன்’ என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

முகத்தை வேகமாய் அழுந்த துடைந்த உஷா, “இவனுக்கு குடும்பம் வேணும்ன்னா எல்லாத்தையும் மறந்துட்டு நம்மளோட வரட்டும், சந்தோசமா ஏத்துக்குவோம்! இல்ல, எனக்கு அரசியலும் பதவியும் தான் முக்கியமுன்னா தயவுசெஞ்சு அவனை எங்கயாவது போய்ட சொல்லுங்க! என் முதல் புள்ள கோமோல இருந்து அப்படியே செத்துட்டான்னு நினைச்சுக்குறேன்!!” என்று சொல்ல, ஒரே நேரத்தில்,
“உஷா.....!!!”
“அம்மா.....”
“ஆன்ட்டி....” என்ற அதட்டல்கள் மூவரிடம் இருந்தும் வந்தன. ஒரு தாயாய் இதை சொல்ல அவரால் முடிகின்றதென்றால் எந்த அளவுக்கு அவர் மனம் வேதனையை சுமந்துக்கொண்டிருக்கும் என்பதை சொல்லித்தெரிய தேவையில்லை.

“சும்மா என்னை அதட்டாதீங்க! இத்தனை வருஷமும் இவன் பொழப்பானா மாட்டானான்னு தெரியாம, நம்ம எல்லோரும் தினம் தினம் இவங்ககிட்ட எவ்வளவு பேசிருப்போம்? நம்மளை விட தீபன், இவன்கூடவே தானே இருப்பான்? அதெப்படி நான் பெத்ததுல ஒன்னு அப்படியும் ஒன்னு இப்படியும் இருக்கு? ரெண்டு பேரையும் ஒண்ணாத்தானே வளர்த்தேன்? தீபனை விட மிதுனை தான் ரொம்ப நம்புனேன்!” என்றவர் அழுகையை அடக்கிக்கொண்டு,

“இவனுக்கு முடியாதப்போ கட்சியும் பதவியுமா கூட நின்னுச்சு? நம்ம தானே டா நின்னோம்? அதுக்கூட புரியாதா இவனுக்கு? நம்ம பேசுன பேச்செல்லாம் இவனுக்கு கேட்டுருந்தா கூட இந்நேரம் அவன் மனசுல இருந்த குப்பையெல்லாம் ஒழிஞ்சுருக்கும்!” ஆதங்கத்தை கொட்டிவிட,

“கே....ட்...டு...ச்..சு...” மிக மெல்லிய குரலில் வந்த மிதுனின் வார்த்தைகள் செவியை அடையவில்லை. மேலும் உஷா பேசிக்கொண்டே போக, “ஷ்.... பாட்டி, பெரிப்பா டெல்லிங் சம்திங்” என பெரிய மனுஷியாய் அதட்டினாள் தீரா.

மிதுன் மீண்டும், “கே..ட்..டுச்...சு” என அழுத்தி சொல்ல, அசைவில்லை ஒருவரிடமும்.

கடந்த நாட்களில், ஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விடாது பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவன் அறையில் அமர்ந்திருப்பர். அனுராகா கூட பலநேரம் அவனோடு கதை பேசுவாள். தீரா வந்தபின்னோ, தினமும் காலை வணக்கத்தோடு ஒரு முத்தத்தையும் மிதுனுக்கு அவள் வழங்குவது வாடிக்கையாய் போனது. எல்லாம் தீபனின் பழக்கம்.

தீபனோ இரவு உணவுக்கு பின் மிதுன் அறைக்கு சென்றானென்றால், ராகா அதட்டி அழைக்கும் வரை அவனோடு தான் இருப்பான்!

மிதுன் சுயநினைவை இழந்து வெகுநாட்கள் வரை அவன் மீதான கோவமும் வெறுப்பும் இருந்தது. ஆனால் காலம் ஒரு பொன்னான மருந்தல்லவா? அது காயங்கள், தழும்புகள் அத்தனையையும் சரி செய்துவிட்டிருந்தது.

மிதுன் ‘கேட்டுச்சு’ என சொன்னதும் ஸ்தம்பித்து போயிருந்தவர்கள், “கொஞ்ச நாளா கேட்டுச்சு!” என அவன் மீண்டும் சொல்ல, நெகிழ்ந்து போயினர். அவர்கள் முயற்சிக்கு பிரதிபலன் கிடைந்த நிறைவு.

மிதுனின் கண்கள் எதிரே நின்ற தீபனை ஆழ்ந்து நோக்க, கலங்கிய அவன் கண்களில் எதையோ பேசத்துடிக்கும் அவன் உதடுகளும் தீபனை உலுக்க, மெல்ல பிரிந்தது மிதுனின் இதழ்கள்.
“சாரி..டா...”

அந்த ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை!! ஆயிரம் தழுவல்கள், லட்சம் ஆறுதல்கள், கோடி விசாரிப்புகள் கொடுக்காத நிம்மதியை இதத்தை மகிழ்வை நிறைவை அள்ளி கொடுத்தது மிதுனின் உதடுகள் வெளியிட்ட, “சாரிடா” என்ற வார்த்தை.

கண்ணீரும் புன்னகையும் நேர்க்கோட்டில் சந்திக்க, “டேய் அண்ணா....” என்ற தீபனுக்கு அதற்குமேல் வார்த்தை எழவில்லை. ஆனால் மிதுனுக்கு தீபனின் இயல்பான அந்த அழைப்பே நிம்மதியை கொடுக்க, புன்னகையில் விரியும் இதழ்களோடு கண் மூடிக்கொண்டான்.

அனுராகா தீபனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். இத்தனை ஆண்டுகளில் அவன் என்னதான் மகிழ்ச்சியாய் இருப்பதாய் காட்டிக்கொண்டாலும் கரையான் போல அவன் மனதை மெல்ல அரித்துக்கொண்டிருந்த ஒரு விடயம் தெளிந்து அவன் முகத்தோடு உளமும் சேர புன்னகிததில் அவனிடம் இருந்து கண்ணெடுக்க இயலவில்லை அவளால்.

உஷாவுக்கு பலநாள் வேண்டுதல் பலித்த உணர்வு. மிதுன் மாறிவிட்டானா? அவனுக்கு இருந்த கோவமெல்லாம் போய்விட்டதா? என பிரம்பித்து போய் நிற்க, சக்கரவர்த்தி முதன் முதலாய் அவனிடம் பேசினார்.

“தீபன் கட்சி ஆபிஸ் பக்கம் கூட வரதில்லை! மொத்தமா விலகிட்டான்! இப்போவும் உனக்கு விருப்பம் இருந்தா, என்னோட அரசியல் வாரிசு நீதான்னு எல்லோருக்கும் சொல்றதுக்கு நான் தயாரா இருக்கேன்! குறுக்கு வழில போகாத! உனக்காக இங்க யாரும் விட்டுக்கொடுத்ததாகவும் நினைக்காத! தீபனுக்கு பிடிச்சதை அவன் செய்யுறான், உனக்கு என்ன இஷ்டம்ன்னு சொல்லு!!” என்றார் இப்போதே முடிவு தெரிந்துக்கொள்ளும் பொருட்டு!

‘இந்நேரம் அவர் இதையெல்லாம் கேட்க வேண்டுமா? என தோன்றினாலும், அடிப்பட்ட ஒருவருக்கும் மீண்டும் ஒருமுறை அடிவாங்க தெம்பில்லை’

மிதுன் உதடுகள் கசப்பான முறுவலை வெளியிட, “ப்பா...! எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா!” என்றான் கண்ணீர் வழிய.
“அப்போ நான் என்ன சொன்னாலும் கேட்குறியா?” என்று சக்கரவர்த்தி கேட்க, “ம்ம்ம்” என்றான் மிதுன் திடமாய்.

“அவன்தான் சொல்றான்ல, இனி இதைப்பத்தி நம்ம யாருமே பேசக்கூடாது, சரியா?” உஷா அவசரப்பட்டார். இறங்கி வரும் மகனை பேசி பேசியே மீண்டும் மரமேற விட்டுவிடுவாரோ என்ற ஐயம் அவருக்கு!
அவருக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை, இறங்கி வந்துள்ள மகன், இனி ஒருநாளும் மரமேற மாட்டான் என்று!!! பல வருட ஆழ்ந்த தியானம் பல நூறு பாடங்களை அவனுக்குள் விதைத்திருக்கிறது.

என்னதான் மிதுன் எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும், சக்கரவர்த்தி மனதில், இன்னும் சில மாதங்களில் வரப்போகும் தேர்தலில் மிதுனை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உருப்பெற்றுவிட்டது. நடத்திக்காட்டாமல் அவர் ஓயப்போவதில்லை. தீபனும் தமையனுக்கு உதவாமல் தள்ளி நின்றுவிடுவானா என்ன? இன்னும் சிறிது நாட்களில் பழையை தீபனை புல் பார்மில் பார்க்கலாம்!

நேரம் அதன்பின் எப்படி சென்றதென்றே தெரியாது ஓடியது. மிதுன் தவறவிட்ட முக்கிய நிகழ்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அவனுக்கு பகிரப்பட, பேச்சு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவன் எழுந்து அமர வைக்கப்பட்டான். தீரா அவன் மடியில் சென்று அமர்ந்துக்கொள்ள, மிதுனுக்கு பேச்சு தடையின்றி தயக்கமின்றி வந்தது. அதன்பின் பேச்சும் சிரிப்புமாய் இருக்க, அவர்களை வெளியேற சொல்ல முடியாமல் செவிலியர்களும் மருத்துவர்களும் தான் திண்டாடிப்போயினர்.

“தீப்ஸ், இப்போ கிளம்புனா தானே பங்ஷனுக்கு போக சரியா இருக்கும்?” ராகா நினைவுப்படுத்தும் வரை அவன் வேலைகள் அவனுக்கு கிஞ்சித்தும் நினைவிலில்லை.

“போயே ஆகணுமா?” தீபன் மிதுனை கண்டு தயங்க,
சக்கரவர்த்தியோ, “டேய், இன்டஸ்ட்ரீயல் மின்ஸ்டர வேற இன்வைட் பண்ணிருக்கடா! நீ இல்லாம எப்படி?” என்றார்.

மிதுனுக்கு என்ன விழா பற்றி பேசிக்கொள்கிறார்கள் என புரியாது போக, “D-பாரடைஸ்” பற்றி அவனுக்கு சொல்லப்பட்டதும், “நீ முதல்ல கிளம்பு தீபன், எவ்வளோ பெரிய விஷயம் இது?” என்றான் நிஜமான பிரம்மிப்புடன்.

“இல்லடா, உன்னைவிட்டு...” தீபனை இழுக்க, “ஹாஹா... டேய்.. நான் எங்கயும் ஓடிட மாட்டேன்! நீ கிளம்பு!” என்றான் அவன் தோள் தட்டி. வெகு நாட்களுக்கு பின் நடந்த இயல்பான உரிமையான தீண்டல்.

சில நிமிடங்கள் யோசித்தவன், பின்னே நாகாவிற்க்கு அழைத்து அடுத்த விமானத்தில் டிக்கெட் புக் செய்ய சொன்னான்.
“ம்மா! நீங்களும் அப்பாவும் இங்கயே இருங்க, நான் ராகா, தீராவோட போயிட்டு வரேன்” என சொல்ல, மறுபேச்சின்றி ஒப்புக்கொண்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் விமான நிலையம் சென்றடைய, அதிகாலை இரண்டு மணி விமானம் அவர்களை தன்னுள் அமர்த்திக்கொண்டது.

தீரா விமானம் ஏறிய சிறிது நேரத்திலேயே அயர்ந்து தூங்கிவிட, புன்னகை மறையாது அமர்ந்திருந்த தீபனை கண்ட ராகா, “யூ ஆர் டூ பேட் தீப்ஸ்! அண்ணன் வந்ததும் நான் உனக்கு நியாபகமே வரல” என்றாள் போலியான குற்றச்சாட்டுடன்.

விமானத்தின் ஒளி விளக்குகள் அணைந்து, மெல்லிய ஊடுருவும் ஒளி மட்டுமே இருக்க, மங்கிய ஒளியிலும் பளிச்சென மின்னும் ராகாவை தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டான் தீபன்.

“ஐயம் சோ ஹேப்பி நவ்...” என அழுத்தி அவன் சொல்ல, “ஐ க்நொவ் இட்” என சிரித்தாள் ராகா.
‘பார்ரா....’ என அவன் சிரிக்க, “என் தீப்ஸ் எப்போ ஹேப்பியா இருப்பான், எவ்வளோ ஹேப்பியா இருப்பான்னு எனக்குதானே தெரியும்!” என்றாள் ராகா.

‘ஆஹான்...’ என சிரித்தவனுக்கு ராகாவை கண்டு பெருமிதமே! இருவருக்கும் புரிதல் இல்லை, செட் ஆகாது என சொன்னவர்கள் முன்னே, ‘இவர்களை விட புரிதலோடு யாராலும் இருக்க முடியாது’ என பொறாமைப்படும்படி வாழ்ந்துக்கொண்டிருப்பது பெருமிதம் தானே!!

தோளோடு இறுக்கி அணைத்திருந்தவன், இப்போதும் இன்னமும் அவளை தன்னோடு நெருக்கிக்கொள்ள, வாகாய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள் ராகா.
“பாட்டு கேட்கலாமா?” என்ற தீபன், மொபைலில் ஹெட் போனை சொருகி தனக்கொன்றும் அவளுக்கொன்றும் கொடுத்துவிட்டு, உலவவிட்டான் இசைராஜனின் இன்னிசையை.

“ஹே... வாட்இஸ் திஸ்?” ராகா வியப்பில் புருவம் உயர்த்த, “அமைதியான இடம், பக்கத்துல காதலி, இரவோட ஏகாந்தம்... இதுக்கு நடுவுல இளையராஜா தவிர வேற யாராலும் வர முடியுமா?” என்றான் சரசமாய்.
ராகா வாய்விட்டு சிரிக்க, “சிரிக்காதடி, கடிச்சுடுவேன்!!” என்றான் தீபன். அவள் சிரிப்பு இன்னமும் தான் விரிந்தது.

காதிற்குள் ‘நிலவு தூங்கும் நேரம்....” என ஜானகி பாட, தீபனின் தோளில் தலை சாய்த்து கண் மூடியிருந்தாள் அனுராகா. பாடலுக்குள் இருவரும் மூழ்கிப்போக,
‘நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்! நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...’ தீபனும் ராகாவும் ஒருவரை வரை பார்த்துக்கொள்ள, ராகா சற்றும் எதிர்ப்பார்க்காத தருணம், அடுத்த வரிகளை சத்தமாய் கத்தி பாடத் தொடங்கியிருந்தான் தீபன் சக்கரவர்த்தி.

“நான்..இனி..நீ...! நீ...இனி..நான்...!!” என அவன் பாட, பாய்ந்து வந்து அவன் வாயை மூடினாள் அனுராகா. விமானத்தில் சக பயணிகளை எழுப்பிவிடும்படி அவன் கத்தினால் வாயை மூடாமல் என்ன செய்வது?!

அவள் கையையும் தள்ளிவிட்டு அவன் மேலும் மேலும் கத்த, “ஹோ!! ஷட் அப் தீப்ஸ்” என்றாள் ராகா.
“ஹாஹா... தென் ஷட் மி அப்...” தீபன் உல்லாசமாய் சொல்ல, “யூ... ராஸ்கல்” என்றாள் ராகா ரசனையாய்.


“திஸ் இஸ் வாட் ராஸ்கல் டூ” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்ன தீபன், அவள் முகத்தை தன்னருகே இழுத்து, “வேம்பயர் கிஸ் இந்த முறை வேற இடத்துல....!!” என்று சொல்லி வேகத்துடன் அள்ளிக்கொண்டான் ராகாவின் இதழ்களை.

‘நான் இனி நீ’ இனியென்றும் ‘நாம்’ என்பதாக!!!

அவள்: ஷட் அப்...!
அவன்: தென், ஷட் மீ அப்...!
காதல்: ஷப்பா...! கடையை சாத்திட்டு கிளம்புங்கடா, நேரமாச்சு!!

----முற்றிற்று----
 

chitra ganesan

Well-Known Member
Nice. மிதுன் கண்முழித்தவுடனே உஷா பேசுவது,சக்ரவர்த்தி முடிவு கேட்பது மட்டும் அதிகப்படியாய் இருக்கு.அவன் கண்விழித்து ஒரு வாரம் or 10 நாள் கழித்து இதை பேசுவது போல இருந்து இருக்கலாம்.ஏன் என்றால் 5 வருடம் கோமா வில் இருந்தவனை அதிக டிஸ்டர்ப் பன்னினால்அவன் எப்படி உடனே தெளிவாக பதில் கொடுப்பான்.nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top