Engiruntho vanthaan-3

Advertisement


Kalpasubramanya

Writers Team
Tamil Novel Writer
'என்னை நம்பி எனக்கு உதவுவாயா?'என ஆதித்த சோழன் கேட்ட கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல்,

"நிச்சயமா! உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்... உங்களுக்கு என்ன உபகாரம் வேணாலும் செய்றேன்."

"நான் எப்படியாவது என் காலத்திற்கு திரும்பி போக வேண்டும்.. ஆனால் அது வரை எங்கே இருப்பது? என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.அதைப் பற்றி உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?"

"எனக்கும் அதுதான் புரியல! என்ன செய்றது?ம்.........ஆ....ஒரு யோசனை வந்துருக்கு... நீங்க இந்த ஒரு பொழுதுக்கு இங்கேயே இருங்க...நா போயி செல வேலை செஞ்சுட்டு வந்து உங்கள கூட்டிட்டு போறேன்.. அதுவர இத சாப்பிட்டு இங்கே படுத்துக்குங்க.. சரியா?.."என்றாள் கமலி.

"சரி... ஆனால் அதனால் உனக்கு ஏதாவது தொந்தரவு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... சரியா"

"எனக்கென்ன ஆயிடும்! ஒண்ணும் ஆகாது.நீங்க கவலப்படாம இருங்க.நா வரட்டுமா?"

"ம்..சரி போய் வா!"என்றான் ஆதித்த சோழன்.



மாலை நான்கு மணி அளவில் கமலியும் அவள் உயிர் தோழி சித்ராவும் நந்திபுரத்தின் பஸ் நிலையத்தில் நின்றிருந்தனர்.அந்த பஸ் நிலையம் ஊரிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இருந்தது.நூறாவது முறையாக கமலியிடம்,

"ஏய் கமலி!நாம இங்க எதுக்கு காத்துகிட்டு இருக்கோம்?இப்போ சொல்லப் போறியா? இல்லியா?"என்றவாறு கமலியின் முதுகில் ஒன்று வைத்தாள் சித்ரா.

"ஏய் அடிக்காதடி எரும! இன்னும் அஞ்சு நிமிசம் பொறு!உனக்கே தெரியும்!"

அப்படி எதற்காக அங்கே நிற்க வேண்டும் என மண்டை குழம்பிய சித்ரா மேலே எதுவும் பேசாமல் தலையை சொறிந்தபடி நின்றிருந்தாள்.

சில நிமிடங்களில் தஞ்சாவூரிலிருந்து வரும் பஸ் வந்து நிலையத்தில் நின்றது.அதிலிருந்து நான்கைந்து பயணிகள் இறங்கிய பின் இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இறங்கினான்.நெற்றியில் விழுந்த கிராப்பை பின்னுக்குத் தள்ளியபடி திரும்பிய அவன் அங்கே நின்றிருந்த கமலியையும் சித்ராவையும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி அவர்கள் அருகில் வந்தான்.

"இத்தென்ன!பிரண்டக்கா இரண்டு பேரும் பஸ் ஸ்டாண்டில நின்னுக்கிட்டு என்ன பண்றீங்க?இப்ப ஏதும் பஸ்ஸில்லயே!"என்றான் அவன்.

கமலி பதில் சொல்வதற்குள் அவள் காதருகில்,

"ஏண்டி குரங்கே!இந்த காட்டுப் பன்னியப் பாக்கவா இத்தன நேரமா நாம இங்க நின்னுக்கிட்டு இருந்தோம்?உன்னால வீட்டுல அம்மா செய்ய சொன்ன வேலையும் விட்டுட்டு வந்தது போயிம் போயிம் இந்த போக்கத்தவன பாக்கவா?"என்று பொறிந்தாள் சித்ரா.

அவள் எவ்வளவு மெல்லிய குரலில் பேசினாலும் அது அவன் காதில் தெளிவாக விழுந்தது.அவளை கோபத்தோடு முறைத்தான் சிவா என்ற சிவகுமார்.

சிவகுமார் கமலியின் தந்தை பொன்னய்யனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஞானசேகரனின் மகன்.பெரிய தந்தையின் மகனானலும் கமலியை விட ஒரு வயதே பெரியவனாதலால் அண்ணா என அழைக்காமல் சிவா என்றே அழைத்து அவனை நண்பனாக்கினாள் அவள்.கமலி சிவா சித்ரா மூவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியிலேயே படித்தனர்.பள்ளி இறுதிக்கு மேல் சிவா தஞ்சையில் பொறியியல் படிப்பில் சேர்ந்தான்.கமலியும் சித்ராவும் தபாலில் தமிழ் இலக்கியமும் சரித்திரமும் முறையே பயின்றனர்.படிப்பு வேறு வேறு ஆனாலும் நேரம் கிடைக்கும் போது சந்தித்தனர்.கமலி சித்ரா விற்கும் சிவாவிற்கும் உயிர் தோழியானாலும் அவர்கள் இருவருக்கும் ஒருவரை கண்டால் ஒருவருக்கு ஆவதில்லை.கமலிக்காக எதிரெதிர் சண்டையிடாவிட்டாலும் இப்படி கேட்கும் படி திட்டித் தீர்த்தனர்.

"அது கெடக்குது!நீ சொல்லு கமலி!இங்க எதுக்கு வந்தீங்க?"

"அது பெரிய கதை! பெரிய கோயிலுக்குப் போலாம்...அங்க போயி எல்லாத்தையும் விவரமா சொல்றேன்."என்றாள் கமலி.

அதன்படி அவர்கள் மூவரும் நந்திபுரத்தின் பிரசித்தியான சிவன் கோயிலுக்கு சென்றனர்.தரிசனம் முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு குளிமையான கோபுரக் காற்றடிக்கும் பிராகாரத்தில் வந்து அமர்ந்தனர்.

"இப்பவாவது என்ன விஷயமுன்னு சொல்றியா?"என்றான் சிவா.

சிறிது தயங்கிய கமலி பிறகு காலை நடந்ததை விவரித்தாள்.அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக கேட்ட சிவா அதன்பின் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

"சிவா!இப்ப எதுக்கு சிரிக்கிற!நா என்ன ஜோக்கா சொன்ன!"என்றாள் கோபத்தோடு.

"பின்ன என்ன?!யாரோ இளவரசராம்!செவுத்துக்குள்ள இருந்து குதிச்சாராம்!இத நம்ப என்னெய என்ன கேனைன்னு நெனைச்சியா?"என்றான் சிரித்தபடி.

"நினைக்கெறது என்ன! அதுதான் இந்த ஊருக்கே தெரியுமே!"என்றாள் சித்ரா வாய்க்குள்.

"டேய் சிவா!நா நெஜமாதான்டா சொல்றேன்.அவர பாத்தா உனக்கே தெரியும்! ப்ளீஸ்டா ஹெல்ப் பண்ணுடா!"

"கமலி!படிச்சிருந்தாலும் கிராமத்து அறியாம இன்னும் போகல உனக்கு!பசங்க பொண்ணுங்கள கவுக்கறத்துக்கு என்னெல்லா பண்றானுங்க தெரியுமா?!நா அவர பாத்து பேசினப்புறந்தான் எதுவும் சொல்ல முடியும்.அது வர எந்த கேரண்டியும் கொடுக்க முடியாது.என்ன சரியா?"

அவனை முறைத்தபடி,

"சரி"என்றாள் கமலி.

"அது சரி...அவர் நிஜமாவே நீ சொல்றது போல இளவரசருன்னே வைச்சுகோ...மேல என்ன ப்ளான் வச்சுருக்க?"

"அதுவா..."என விவரித்தாள் கமலி.அவள் சொன்ன ப்ளானைக் கேட்டு பயந்த சிவா,

"ஏய் கமலி!இது கொஞ்சம் கூட நல்லால்ல!என்னெ எதுக்கு இழுத்து விடுற இதுல... எங்க அப்பனுக்கு மட்டும் தெரிஞ்சிச்சு என்னெ ஐய்யனாருக்கு பொலி போட்ருவாறு தெரியும்ல?"என பதறினான் சிவா.

"ஒன்னும் ஆகாது...பயப்படாம செய்யி! இந்த தங்கைக்காக இது கூட செய்யக் கூடாதா?"

"ஆமா!ஆமா!உன் வேல ஆகனும்னா நா அண்ணே!அது ஆன பின்னால சிவா டேய்!இல்ல?!என்னால ஆகாது அவ்வளவுதான்!"

"பண்ண மாட்டியா!நீ மட்டும் பண்ணல நீ திங்ககிழமை காலேஜுக்கு கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போனத பெரியப்பா கிட்ட போட்டுக் குடுத்திடுவேன்."

'அடிப்பாவி! இவளுக்கு எப்படி அது தெரிஞ்சுது'என யோசித்தவாறு திரும்பிய சிவா சித்ராவின் நமுட்டுச் சிரிப்பில் அவள்தான் இதை செய்த உளவாளி என தெரிந்து அவளை அடித்து விடும் கோபத்தில் அவளை முறைத்தான்.ஆனால் அவனால் அப்படி செய்ய முடியாது.அப்படி செய்ய யோசித்தது தெரிந்தால் கூட கமலி அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்பதால் பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிய அவன்,

"சரி சரி செய்யறேன்...என்ன பண்றது உனக்கு அண்ணனா பொறந்த பாவத்துக்கு இன்னும் என்னலா செய்யனுமோ?"

அவன் சரி என்றதில் மகிழ்ந்த கமலி,

"சரி சரி அப்டின்னா இப்பவே சித்த மண்டபத்துக்கு போலாம்"என்றவளோடு இருவரும் சித்த மண்டபத்திற்கு சென்றனர்.

அங்கே சென்று அவர்கள் கண்டது சிவலிங்கத்தின் முன் தியானத்தில் அமர்ந்திருந்த ஆதித்த சோழன்.

அவன் அணிந்திருந்த பட்டு பிதாம்பரமும் வைர வைடூர்ய நகைகளும் மின்னும் கிரிடமும் யாரும் சொல்லாமலே அவன் சோழ இளவரசனே என கட்டியம் கூறியது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கல்பாசுப்ரமண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top