Azhagae Azhagae - Ep 12

Advertisement

Kalaarathi

Well-Known Member
அத்தியாயம் - 12

அபிராமியால் அதிகமாக நடமாட முடியவில்லை. ஜானகியை ஆன்மீக சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே¸ மகன் ஷோரூமிற்கும் பேரன் பள்ளிக்கும் சென்றபின் அவரைத் தனிமை வாட்டியது.

வார விடுமுறை நாட்களில் பேரனை கீதன் வெளியே கூட்டிச் செல்ல முயன்றால் தடுத்துவிடுவார். அன்று முழுவதும் தன்னுடனே வைத்திருப்பார்.

அபர்கீதனோ தூங்கும் நேரத்தைத் தவிர வீட்டில் அதிக நேரம் இருப்பதில்லை.

இப்போது சில மாதங்களாகதான் விமலின் குடும்பத்தோடு சற்று நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறான். அவர்கள் வீட்டிற்கு வாரம் ஒரு முறையாவது செல்வதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

அன்றும் அப்படிச் சென்றபோது¸ வெளியே குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த அபியும் தத்தக்கா பித்தக்கா என்று ஓடிக் கொண்டிருந்தான். காரை நிறுத்திக் கீழே இறங்கிய அபர்கீதனைக் கண்டதும் அவனிடம் ஓடிவந்து¸ தன்னைத் தூக்குமாறு சொல்லி கைகளை உயர்த்தினான்.

அபர்கீதன் அவனைத் தன் தோள்களில் எடுத்ததும் தன் பிஞ்சு இதழ்களால் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தான். மெய் சிலிர்த்த கீதனும் பதிலுக்கு ஒன்று கொடுத்தான்.

குழந்தை அவனிடமிருந்து இறங்கி விளையாடச் சென்றபின்னர்¸ காரில் சாய்ந்தவாறு நின்று குழந்தைகள் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். காரில் வந்தவன் இன்னும் வீட்டிற்குள் வரவில்லையே என்று பார்க்க வந்த விமல் “ஹேய் ப்ரோ… என்ன இங்கயே நின்னுட்டீங்க… உள்ள வாங்க” என்று அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்று அமர்ந்ததும் ரஞ்சனி வந்து அவனருகில் அமர்ந்தாள். தங்கையின் மனம் கீதனிடம் மயங்கியிருப்பது விமலுக்கும் தெரியும். கீதனிடம் கேட்டபோது தான் அவன் தனக்கு திருமணம் ஆன விஷயத்தைக் கூறினான்.

அப்போதும் “அதனால் என்ன அண்ணா? இப்போது அவள் கூட இல்லை என்றாயே… என்னை மணந்து கொள்ள என்னவாம்?” என்று ரஞ்சனி கேட்டதையும் கீதனிடம் சொன்னான். அதற்கு கீதன்¸ “நான் அங்கு வருவது பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு. இனிமேல் நான் அங்கு வரமாட்டேன்” என்று சொன்ன பின்னர்தான் அண்ணனும் தங்கையும் திருமணத்தைப் பற்றி அவனிடம் பேசுவதை விட்டனர்.

கீதன் இயல்பாக வருவான்¸ போவான். ஆனால்¸ அவனைப் பார்க்கும்போது சிறகடிக்கும் மனதை அடக்க முடியாமல் சிரமப்பட்டாள் ரஞ்சனி.

அந்த வாரத்தில் சூரஜின் பிறந்த நாள் இருந்தது. அதற்கு அவனை “இரவு விழா ஏற்பாடு செய்திருக்கோம் தம்பி¸ நீங்க அவசியம் வரணும்” என்று அழைத்தார் ரத்தினம்.

“ரஞ்சனி போய் தம்பிக்கு சாப்பாடு எடுத்துவாம்மா” என்று அவளை அனுப்பிவிட்டு¸ “தம்பி நீங்க மறுகல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாமே” என்றார் அவனிடம்.

“அங்கிள் ப்ளீஸ்… பார்த்த முதல் நாளே என் மனதில் விழுந்தவள் அவள். எங்களுக்குள் ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டான்டிங் அவ்வளவுதான். கண்டிப்பாக ஒருநாள் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு¸ நான் அவளுக்காக காத்துக் கொண்டிருப்பேன்” என்று பேச்சை முடித்துவிட்டான்.

“சூடான சூஜி ஹல்வா… சாப்பிடுங்க¸ டேஸ்ட்டா இருக்கும். அபியோட அம்மாதான் செய்தாங்க” என்று அவனிடம் சொன்ன ரஞ்சனி¸ வெளியே சென்று “குழந்தைங்களா உள்ளே வந்து சாப்பிட வாங்க” என்று அழைத்தாள்.

அவர்கள் உள்ளே வரும்போது சுப்ரியா அபியை இடுப்பில் வைத்திருந்தாள். கீதனைக் கண்டவன்¸ இறங்கி வந்து அவனருகில் நின்று கொண்டான். அபிக்கு ஹல்வா ஊட்டினான் கீதன். ஒரு வாய் வாங்கியவன்¸ “ம்மா…” என்றழைத்தவாறு கிச்சனுக்குள் போய்விட்டான்.

மீராவின் அருகில் சென்றவன் அவள் சேலையைப் பிடித்து இழுத்தான். “ம்மா… மம்மு தா…” என்று கன்னத்தைக் காட்டினான். அவள் கடிப்பது போல் பாசாங்கு செய்யவே “நான்” என்று பதிலுக்குக் கடித்துவிட்டான்.

“ஸ்ஸ்…ஆ…” என்று கன்னத்தைத் தடவியவள்¸ “அபிகிட்ட அம்மா டூ” என்று அவனை இறக்கிவிட்டாள்.

அவன் அழுதவாறே ஹாலுக்குள் வந்தான். அங்கிருந்த அனைவரும் “என்னடா கண்ணா¸ ஏன் அழுறே” என்று விசாரிக்கவே¸ “அபிக்கு ம்மா… டூ” என்றான் அந்த பெரிய மனிதன்.

“நீங்க என்ன செய்தீங்க?” என்று கேட்டார் ரத்தினம்.

“மம்மு தா” என்று கன்னத்தைக் காட்டினான். அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பதிலுக்கு அவன் முத்தம் தரப் போவதாக எண்ணி அவனிடம் தன் கன்னத்தைக் காட்டினார் ரத்தினம். “அப்பா அவன் கேட்கிறான் என்று முத்தம் கொடுக்க கன்னத்தைக் காட்டாதீர்கள்…” என்று ரஞ்சனி சொல்லி முடிக்கும் முன்¸ அவன் பதிலாகக் கொடுத்த கடியை வாங்கிக் கொண்டு கன்னத்தைத் தடவியவாறு “உன் அம்மா உன்கிட்ட சும்மா டூ விடலடா கண்ணா” என்று சிரித்தார்.

அவன் செய்வதைப் பார்த்த கீதன் “ஏய் விமல்! அவன் ஏதோ விளையாட்டு காட்டத்தான் இப்படி முயற்சி செய்கிறான்” என்று சொல்லிவிட்டு¸ தருணிடம் மீரா செய்வது போல் அபியைத் தூக்கி அவன் கன்னத்தில் “ப்ஊ…” என்று சத்தம் வருமாறு ஊதினான். அவனையும் அதுபோல் செய்ய வைத்து சிரித்தான்.

குழந்தை சிரிக்க ஆரம்பிக்கவே¸ “இதெல்லாம் கூட உங்களுக்கு தெரிந்திருக்கே” என்றாள் ரஞ்சனி.

“ஆமா¸ என் மனைவி என் தங்கை மகனை இப்படி கொஞ்சியிருக்கிறாள்” என்று சொல்லி அந்த நினைவில் சிரித்தான்.

சமையலறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மீரா ‘உண்மை தெரிந்தால் என்னவாகுமோ’ என்ற கவலையுடன் நின்றிருந்தாள்.

“அம்மா இன்றைக்கு விமலுடைய அண்ணன் பையனுக்கு பிறந்த நாள். நான் வர கொஞ்சம் லேட் ஆகும்” என்று தாயாரிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினான் அபர்கீதன்.

ரத்தினத்தின் வீட்டில் விழாவிற்கான சமையலில் உதவிக் கொண்டிருந்தால் மீரா. பகலில் குழந்தைகளுடன் விளையாடிய அபி¸ அந்த களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான். அவள் தான் செய்ய வேண்டிய வேலைகளை முடித்த சமயத்தில் அங்கு வந்த ராஜம் “விருந்தினர்கள் என்று நிறையபேர் வரமாட்டார்கள். இங்கே பக்கத்தில் சில வீடுகளுக்குத் தான் அழைப்பு. நீ போய் குளித்து வேற துணி மாத்திட்டு வாம்மா” என்று அவளை அனுப்பி வைத்தார்.

மீரா களைத்துத் தூங்கும் மகனைப் பார்த்துவிட்டு¸ அறையிலிருந்த லைட் மற்றும் ஃபேனை ஆன் செய்து கதவைத் தாழிட்டு வந்தாள்.

கேமராவில் குழந்தைகளை ரஞ்சனியுடன் சேர்த்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான் விமல்.

சுப்ரியாவும் சூரஜூம் மீராவைத் தங்களுடன் போட்டோ எடுக்க அழைத்த நேரத்தில் பவர் கட்டாகிப் போனது.

மொபைல் போனின் டார்ச்சை ஆன் செய்த விமல் “அப்பா கோதண்டத்திடம் போய் சரி பண்ணச் சொல்லுங்க” என்றான்.

“ஐயா வெளியே இடி இடிக்கிற சத்தம் கேட்குது¸ மழை வரும் போலவும் இருக்கிறது. இந்த நேரத்தில் மோட்டார் அறைக்குப் போய் சரிசெய்வது கஷ்டம்” என்றான் அந்த கோதண்டம்.

“சரி நீ போ…” என்று அவனை அனுப்பிவிட்டு¸ “எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ என்ன பண்றது?” என்று கைகளைப் பிசைந்த ராஜத்திடம்¸ “மெழுகுவர்த்திகள் நிறைய ஏற்றி வைக்கலாம்” என்றால் மீரா.

ரஞ்சனி “ஏற்கனவே வாங்கி வைத்தவை நிறைய இருக்கிறது. அதை எடுத்து வந்து ஏற்றலாம்” என்று போய் எடுத்து வந்தாள்.

மீராவும் அவளும் சேர்ந்து நிறைய மெழுகுவர்த்தியை ஏற்றி வீட்டினுள் வெளிச்சம் ஏற்படும்படி செய்தனர். அதுவும் பார்க்க அழகாகத்தான் இருந்தது. “இன்னும் ஒரு மணிநேரத்திற்கு இந்த வெளிச்சம் போதும்” என்று சொல்லி மீரா நிமிர்ந்த போது¸ பெரிய இடி சத்தம் கேட்டது.

சட்டென அவளுக்கு மகன் ஞாபகம் வந்தது. அவன் இடி சத்தத்திற்கு ரொம்பவே பயப்படுவான். தூக்கத்திலும் அவனருகில் தாய் இருக்க வேண்டும். இப்போது மின்சராம் வேறு இல்லை.வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு அவள் வெளியே சென்றபோது மழைத் தூரல் போட ஆரம்பித்திருந்தது.

வீட்டினுள் முழுவதுமாக பரவியிருந்த வெளிச்சம்¸ வீட்டிற்கு வெளியே கொஞ்சம்கூட இல்லை. ஒரு தூணில் சாய்ந்து நின்றாள்.

அந்த நேரத்தில் ஒரு கார் வந்தது. காரில் வந்த அபர்கீதன் அங்கு நின்ற பெண்ணைக் கவனித்துவிட்டான். அவள் அவனுக்கு முகம் காட்டாதவாறு திரும்பி நின்றிருந்தாள்.

காரிலிருந்து இறங்கியவன்¸ காரின் ஹெட்லைட்டை ஆன் செய்து வைத்துவிட்டு அவளருகில் சென்றான். “ஹலோ மேடம்! ஏன் இங்கு நிற்கறீங்க?” என்று கேட்டான்.

மீராவிற்கு கீதனின் குரலைக் கேட்டதும் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன் மழையில் நனைந்தவாறு வீட்டை நோக்கி ஓடினாள்.

“ஏய்…! ஹலோ…! மழைவிட்ட பிறகு…” ‘எங்கே அவள் நின்றால் தானே கேட்பதற்கு’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் வீட்டிற்குள் சென்றான்.

மீரா வீட்டை அடைந்தபோது அபி அழுது கொண்டிருந்தான். அவனை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டாள் அவள். “அழாதேடா செல்லம்…அம்மா வந்துட்டேன்…” என்று அவன் முகம் எங்கும் முத்தம் கொடுத்தவள்¸ அவன் கன்னத்தில் “ப்ஊ…” என்று ஊதவும் குழந்தை சிரித்து இயல்பாகிவிட்டான்.

அடுத்து ஒருநாள் மற்ற குழந்தைகளுடன் அபியையும் அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான் விமல்.

மீரா சென்று “வந்து… அவன் என்னைக் காணாமல் ரொம்ப நேரம் இருக்கமாட்டான். அத்தோடு உங்களுக்கு வீண் தொந்தரவு” என்றாள்.

“பரவாயில்லை மேடம்… நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு குழந்தையை அழைத்துச் சென்றான்.

விமல் குழந்தைகளை அழைத்துச் சென்ற இடம் அபர்கீதனின் வீடு.

வீடு முழுக்கக் கேட்ட குழந்தைகளின் சத்தத்தில் மனம் நிறைந்து காணப்பட்டார் அபிராமி. அபி ஒருவனே எல்லாரையும் ஓட வைத்துக் கொண்டிருந்தான். தருணுக்கும் அவனைப் பிடித்துவிட்டது.

வெளியே சென்றிருந்த அபர்கீதன் வீடு திரும்பியதும்¸ வாசலில் வைத்தே அவனிடம் தன்னைத் தூக்கச் சொல்லி கைகளை உயர்த்தியவாறு நின்றான் அபி.

வீட்டிற்குள் அபர்கீதன் தோளில் குழந்தையுடன் வருவதைக் கண்டதும்¸ அபிராமி அழுதுவிட்டார்.

அபர்கீதன் பதறிபோய் “ஏன்ம்மா அழறீங்க?” என்று கேட்கும்போதே¸ அபி அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“இல்லைப்பா… இவன் உன்னைப் பார்த்ததும் ஓடி வந்தது… நீயும் அவனைப் பார்த்ததும் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டது… இப்படி எல்லாமாக உனக்கு ஒரு குழந்தை இருந்தால் இப்படித்தானே இருப்பான் என்று நினைத்தேனா அழுகை வந்துவிட்டது” என்றார்.

“அம்மா… இவன் எப்போதும் இப்படித்தான். என்னைப் பார்த்ததும் ஓடிவந்துவிடுகிறான்” என்றான் கீதன்.

“அவனுக்கு உன்னைப் பிடித்திருக்கும்” என்றார் அபிராமி.

“ஆமாம்¸ அப்படித்தான் இருக்கும்மா” என்றான்.

அதன்பின் அபர்கீதன் தானாகவே வந்து அபியை அழைத்துச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டான்.

மீராவால் தடுக்க முடியவில்லை. அந்த வீட்டினரிடம் சொல்வதென்றால் அவர்கள் காரணம் கேட்பார்கள் என்பதால் அவர்களிடமும் சொல்ல முடியவில்லை. அபியிடம் சொன்னால் கேட்கும் வயதுமில்லை. எனவே¸ இனி வேறு வேலை பார்த்து இங்கிருந்து சென்று விடுவதுதான் நல்லது என்று நினைத்தாள்.

ஒருநாள் அபர்கீதன் அபியை வீட்டில் தன் அறையில் வைத்திருந்தபோது¸ அங்கிருந்த மாமரத்தில் தொங்கிய மாங்காய்களைக் கண்டவன் அதைப் பறித்துக் கேட்டான். பறித்துக் கொடுத்ததும் அதை வேகமாக வாங்கிக் கடித்தவன்¸ வாயிலிருந்ததைக் கீழே துப்பிவிட்டு நாக்கை வெளியே நீட்டினான்.

அபர்கீதனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘முன்னொரு நாள் இப்படித்தானே மீராவும் செய்தாள்’ என்று அந்த நினைவில் இருந்தவன்¸ அந்த அறையில் தொங்க விடப்பட்டிருந்த போட்டோவைக் காட்டி அபி அம்மா என்றதை கவனிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் அவன் அம்மா என்றதும் “ஓ… உனக்கு அம்மா நியாபகம் வந்துவிட்டதா? அம்மாக்கிட்ட இப்பவே போயிடலாம்” என்று அவனை தூக்கிக் கொண்டு நடந்தான்.

அந்த அறையின் வாசலை அடையும்போதும் அவன் போட்டோவைப் பார்த்து கைநீட்டி “ம்மா…” எனவும்¸ “சரிடா… இப்பவே போயிடலாம்” என்று துரிதமாக அழைத்துச் சென்று அவனை வீட்டில் விட்டான்.

அபி மீராவிடம் ஒப்படைக்கப்பட்டதும் கைகளை வெளிப்புறமாக நீட்டி “ம்மா… ம்மா…” என்று ஏதோ சொல்ல முயன்றான். ஆனால் அவளுக்கு எதுவும் புரியவில்லை.

சில நாட்களுக்குப்பின்¸ மீரா வீட்டினுள் ராஜத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தாள். குழைந்தைகள் வெளியே ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் சுப்பிரியாவும் சூரஜ்ம் வீட்டிற்குள் வந்து டி.வி. பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அபியும் அவர்களுடன் தான் இருப்பான் என நினைத்து “ஆன்ட்டி நான் போய் குளித்துவிட்டு வருகிறேன்” என்று கிளம்பினாள் மீரா.

தங்கள் வீட்டிற்கு சென்று குளித்து¸ மற்ற சிறுசிறு வேலைகளையும் முடித்துவிட்டுச் சென்று அவனைக் கூப்பிட்டால் அவன் வரவில்லை. சற்று நேரம் அழைத்துப் பார்த்தவள்¸ அவன் வராது போகவே மற்ற சிறுவர்களிடம் சென்று கேட்டாள். அவர்கள் அவன் தங்களுடன் இல்லை என்றனர்.

மீரா இடிந்து போய் அமர்ந்துவிட்டாள்.

“டேய் என்னடா சொல்றீங்க?” என்று வந்தாள் ரஞ்சனி.

“ஆமா அத்தை. நாங்க அபி¸ அப்புறம் துர்க்கா எல்லாரும் சேர்ந்துதான் விளையாடினோம். அதுக்குப் பிறகு நாங்க டி.வி. பார்க்க வந்தோமா¸ தம்பி வீட்டுக்குப் போயிருப்பான்னு நினைச்சோம்” என்றனர் இருவரும்.

விஷயம் கேள்விப்பட்டு விமலும்¸ அவனுடன் சேர்ந்து அபர்கீதனும் தேட ஆரம்பித்தனர்.

மீரா அங்கிருந்த திண்ணையில் தலைகவிழ அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகிலேயே அபர்கீதன் நின்றதை அவள் அறியவில்லை. அவளது எண்ணம் முழுவதிலும் அபியே நிறைந்திருந்தான்.

“டேய் நீங்க போய் வீட்டிற்குள் தேடுங்கள்” என்று பிள்ளைகளை விரட்டினான் விமல்.

அபர்கீதன் வாட்ச்மேனிடம் சென்று “குழந்தை வெளியே போனதை பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

அவர் “இவ்வளவு நேரமும் கேட் மூடியே தான் சார் இருந்தது” என்றார்.

அங்கிருந்த தண்ணீர் தொட்டிகளைப் பார்த்தனர். ஒருவேளை வீட்டிற்குப் போய் தூங்கியிருப்பானோ என்று வீட்டிற்குள்ளும் ரஞ்சனி நன்றாகத் தேடினாள்.

மறுபடியும் அபர்கீதன்தான் கேட்டான் “குழைந்தைகளா¸ நீங்க எங்கே எல்லாம் ஒளிந்து விளையாடுவீர்கள்?” என்று.

அவர்கள் ஒவ்வொரு இடமாக சொல்லிக் கொண்டு வரவும்¸ அவ்வளவு நேரமும் அழுது கொண்டிருந்த மீரா சட்டென எழுந்து அவனைக் கடந்து ஓடினாள். எதேச்சையாக அவளைப் பார்த்தவன் “மீரா!” என்றான்.

அவள் ஓடிச் சென்றடைந்த இடம் விமலின் வீட்டு முன்புறம். அங்கே வட்ட வடிவில் நெருக்கமாக குரோட்டன்ஸ் செடியை வளர்த்து¸ ஒரு ஆள் சென்று வரும்படியாக பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் நிறைய பச்சைப் புற்களும் வளர்ந்திருந்தன.

அந்த வட்ட வடிவ செடிகளுக்கு நடுவே அபி மயங்கிக் கிடந்தான்.

“அபி…” என கதறியவள்¸ அவனை மடியில் எடுத்துப் போட்டுக்கொண்டு “அபி¸ என் கண்ணா… உனக்கு என்னாச்சு?” என்று அவனை உலுக்கினாள்.

மீராவைத் தொடர்ந்து வந்த அபர்கீதனால் நம்பவே முடியவில்லை.

‘அபி என் மகனா…! இத்தனை நாட்களும் என்னைப் பார்க்கக் கூடாதென நான் வரும் நேரங்களில் வெளியே வராமலே இருந்தாளா?’ என்று நினைத்தவன்¸ “நகரு மீரா” என்று அவளை விலக்கிவிட்டு¸ குழந்தையை தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தான்.

கீதன் பின்னாலேயே வந்து கொண்டிருந்த மீராவிடம் விமல் பணம் கொடுப்பதைப் பார்த்தவன் “வேண்டாம் விமல்” என்றான் .

“ஏன் ப்ரோ…? அவங்களுக்குத் தேவைப்படுமே… வைத்துக் கொள்ளட்டும்” என்று மீண்டும் பணத்தை நீட்டவும்¸ “என் மகனைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும்” என்று அழுத்தமாக கூறிவிட்டு காரை கிளப்பிச் சென்றுவிட்டான்.

மீராவை அழைத்துச் செல்லவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top