Aathiraiyan 28 b

#1
விஜயன் "அங்கேயே நிற்பதாக உத்தேசமா ? " என்று ஏளனம் கலந்த கடுமையில் வினவ வளவன் யோசனையோடே அவர்கள் இருவரையும் பார்த்தபடி வந்து விஜயன் அருகில் நின்றான்.

அருளாளர் "அதிகம் யோசிக்காதே விரைவில் முதுமை எய்துவிடுவாய் " என்று அவர் கூறியதற்கு அவரே சிரிக்க வளவன் ' இது ஒன்றும் அவ்வளவு பெரிய நகைச்சுவை இல்லையே ' என்று அதற்கும் யோசித்தான் ,அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விஜயன் இப்போது சிரிக்க துவங்கினான்.

வளவன் ,விஜயன் இடும்பன் மற்றும் அருளாளர் முகங்களை மாறி மாறி பார்த்து கொண்டிருக்க ,முதலில் சிரிப்பை நிறுத்தியது விஜயனே "போதும் அனைவரும் இப்போது திட்டத்தை பற்றி விவாதிக்கலாம் '' என்று கூற இடும்பன் இப்போதும் எதையும் பேசவில்லைஅமைதியாகவே இருந்தான்.

விஜயன் அந்த அறையின் கதவை நன்றாக உட்பக்கம் தாழ் போட்டுவிட்டு அருகில் இருந்த மேசையை இழுத்து போட்டு அதில் தான் வரைந்து வைத்திருக்கும் வரைபடங்களை வைத்தான்.

இடும்பனின் முகம் இறுகியது ,வளவன் புருவம் சுருக்கினான் ,அருளாளர் தனது சிரிப்பை நிறுத்திவிட்டு அதன் அருகில் சென்றார்.

விஜயன் "இது நானும் இடும்பனும் கலந்தாலோசித்து வரைந்த வரைபடம்" என்று ஒரு பெரிய வரைபடத்தில் தனது ஆட்காட்டி விரலால் அதனை சுட்டி "இது சமர் தீவை நாம் அணுக வரைய பட்டது ,யாழி தேசத்து அரசர் சமீப காலமாக சமர் தீவுகளை மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருப்பதாக கேள்வி , எனவே தான் நாம் தனி தனியாக பிரிந்து சென்று தாக்க விருக்கிறோம் " என்று அங்கே நிறுத்தி அருளாளரை பார்க்க அருளாளர் திட்டத்தை தொடர்ந்தார்.

அருளாளர் "முதலில் நாம் யாழி தேசத்தின் பாதுகாப்பு அமைப்பை நன்கு புரிந்துகொள்ளவேண்டும் அரசர் விஷ்ணுவர்தன் அங்கு சுழற்சி முறையில் பாதுகாப்பை அமைத்திருக்கிறார்" என்று கூறி அங்கு சுற்றி இருந்த அனைவரின் முகத்தையும் பார்த்தார் விஜயன் எதையும் காட்டவில்லை , இடும்பன் இறுகி போய் நின்றான் 'எது நடத்தாலும் நான் கவலைகொள்ள போவதில்லை ' என்று பாவம் இருந்தது, வளவன் 'தவறான அறைக்கு வந்துவிட்டோமோ ?' என்பது போல புரியாமல் நின்றிருந்தான்.

அருளாளர் "உங்களுக்கு புரியும் படி கூறவேண்டும் என்றால் காலை முதல் நாழிகையில் இருந்து ஐந்தாம் நாழிகைவரையில் ஓர் கப்பல் கிழக்கு எல்லையில் நகர்ந்து கொண்டே கண்காணித்து கொண்டிருக்கும் , பிறகு மெதுவாக அந்த கப்பல் மேற்கு நோக்கி நகர ஆரம்பிக்கும் சமர் தீவை சுற்றி கொண்டே அது மேற்கு பக்கம் நகர அந்த கப்பல் மேற்கு எல்லையை நெருங்கியதும் மேற்கு எல்லையில் காலை முதல் சாமத்தில் இருந்து காத்திருந்த கப்பல் கிழக்கிற்கு வந்துவிடும் ,பிறகு அங்கே கண்காணித்துவிட்டு மீண்டும் சமர் தீவை சுற்றிக்கொண்டு நகர துவங்கும் " என்று கூறி முடித்தார்.

விஜயன் சிறிது யோசனைக்கு சென்று பின் அனைவரையும் ஓர் முறை நோக்கி அருளாளரிடம் "தளபதியாரே !, நாம் இந்த கப்பலை வீழ்த்த எத்தனை நாழிகைகள் எடுக்கும் என்று வரைபடத்தில் ஒரு கப்பலை சுட்டிக்காட்டி அவன் கேட்க " விஜயன் தற்போது என்ன நினைக்கிறான் என்பதை அங்கு இருப்பவர்களால் யூகிக்க முடியவில்லை .

வளவன் "அது நிச்சயம் நான்கு நாழிகைகள் கடந்து விடும் விஜயா !, உண்மையில் நமது நாவாய் இந்த வகை கப்பலை நேரடி போரில் வீழ்த்த இயலாது " என்று சிறிது தயக்கத்துடன் கூற விஜயன் யோசிக்க துவங்கினான் .

சிறிது அமைதிக்கு பின் "ஆனால் மறைந்திருந்தது தாக்கலாம் அல்லவா !" என்று உறுதியோடு கூறினான்.

அதில் இடும்பனின் பார்வை ஒரு முறை விஜயனை சந்தித்துவிட்டு மீண்டும் கப்பல் வடிவம் போல செய்துவைத்திருந்த மாதிரிக்கு சென்றது .

வளவனுக்கு அந்த யோசனை சரி என்றே பட்டது காரணம் அவர்களது நாவாய் தாக்குதல் நடத்தும் ,ஆனால் அதனை வைத்து போர் செய்ய இயலாது.

அருளாளர் அந்த எண்ணத்தை ஆதரிக்கவில்லை ஆனால் மறுக்கவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை. எனவே அதனை ஆதரித்தார்.

வளவன் "சரி விஜயா உனது திட்டம் தான் என்ன ?" என்று வினவ விஜயன் தனது நீண்ட உரையாடலை துவங்கினான்,

"நமது இலக்கு சமர் தீவின் வடக்கு எல்லையில் அமைத்திருக்கும் விஷ்ணுவர்தனின் பாதாள செல்வ குவியல் நிலவறை. அங்கே செல்ல நாம் சமர் தீவுகளின் ஊடே செல்லவேண்டும் ,சமர் தீவுகளுக்கும் நம்மால் நமது கப்பலை கொண்டு செல்ல இயலாது " என்று கூறி நிறுத்த வளவன் "அங்கே நிலப்பரப்பு எவ்வாறு இருக்கும் " என்று விஜயனை நோக்கி கேட்டு பின் அனைவரையும் நோக்கினான், விஜயன் ஒன்றும் கூறாமல் இடும்பனை நோக்க 'நீ இப்போது பேசியே ஆகவேண்டும் ' என்ற பொருள் அந்த பார்வையில் இருந்தது ,அதை உணர்ந்த இடும்பனும் இப்போது பேச துவங்கினான்.

"சமர் தீவுகளில் நிலம் என்று கூற சிறிய அளவு மட்டுமே இருக்கும் அங்கே கடலரசன் தனது ஆதிக்கத்தை அதிகமாக செலுத்துவான் எனவே நீருக்குள் இருந்து நிலம் வந்ததுபோல பெரிய நீர்மட்டத்தில் சிறு சிறு தீவுகளைபோல தென்படும் சமர் தீவு. அந்த நீர் நிலைகளில் நமது நாவாயால் பிரவேசிக்க இயலாது, சிறு சிறு படகுகளை நாம் தயார்செய்ய வேண்டும், அதுவும் சமர் தீவின் வடக்கு எல்லையில் நமது படகுகளை நிறுத்திவிட்டு நடந்து சென்று இலக்கை அடைய நேரிடும் , அந்த வழியில் புதை மணல் அதிகமாக இருக்கும் ,அங்கே செல்பவர்களின் பாதி பேருக்கு மேல் திரும்பி வந்ததில்லை '' என்று கூறி மீண்டும் மௌன நிலைக்கு சென்றான்.

விஜயவர்மன் விஷ்ணுவர்தனை மனதில் மெச்சினான் 'எத்தனை நேர்த்தியான திட்டம் 'என்று , வளவன் "சமர் தீவுகளுக்குள் நுழைவதை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்று கூற விஜயன் அவனை பார்த்தான் ,விஜயனின் பார்வையை உணர்ந்து தனது பார்வையால் அவனுக்கு நம்பிக்கையூட்டினான் வளவன்.

சமர் தீவுக்குள் நுழையும் வேலை முடிந்தமையால் இப்போது மேற்கு எல்லையில் பிறை நிலவு வட்டதுக்கு அருகில் நிற்கும் கப்பலை வீழ்த்துவதை பற்றி விவாதிக்க துவங்கினர்.

விஜயன் "நான் முன்பே கூறியது போல மேற்கு எல்லையில் இருக்கும் கப்பலை நேரடியாக நாம் வீழ்த்தப்போவதில்லை மறைந்திருந்து தாக்க போகிறோம் " சிறு இடைவேளைக்கு பின் ,அருகில் இருந்த மணல் நாழிகை காட்டியை கையில் எடுத்து "இப்போது காலை இரண்டாம் நாழிகையின் துவக்கம் ,நாம் சமர் தீவின் மேற்கு எல்லையை நெருங்க நான்காம் நாழிகை ஆகிவிடும் ,நான்காம் நாழிகை தொடக்கத்தில் இருந்து ஐந்தாம் நாழிகைகுள் நாம் பிறை நிலவு வட்டத்திற்குள் சென்றுவிடவேண்டும். ஐந்தாம் நாழிகையில் கிழக்கு எல்லையில் இருக்கும் கப்பலும் ,மேற்கு எல்லையில் இருக்கும் கப்பலும் இடம் மாற துவங்கும், மேற்கு எல்லை கப்பலை நாம் தொட போவது இல்லை கிழக்கு எல்லை கப்பலை மட்டுமே தாக்க போகிறோம் ,அதுவும் அதை முற்றிலுமாக அழிக்க கூடாது ,அதை வைத்து கிழக்கு எல்லைக்கு செல்லும் கப்பலை ஏமாற்ற வேண்டும் " என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்த வளவனுக்கு அது சிறந்த திட்டமாக தோன்றியது ,இடும்பனுக்கும் ,அருளாளருக்கும் அது மிக பழைய திட்டம் போல தோன்றியது,இடும்பன் விஜயனை பார்க்க 'கொள்ளையனான என்னிடமே எனது திட்டத்தை மாற்றி கூறினால் அதை என்னால் கண்டறிய முடியாத என்ன ?' என்று பாவம் இருந்தது . விஜயன் அதை கண்டுகொண்டான் "எனவே தான் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை இடும்பனிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்தேன் " என்று கூறி இடும்பனை நோக்கி புன்னகை புரிந்தான்.

இதுவரை தன்னை இந்த உலகம் 'பாதகன் !, அயோக்கியன் !!, திருடன் !,வாழ தகுதியற்றவன் !!' என்றெல்லாம் தூற்ற மட்டுமே செய்தது முதல் முறை தன்னை நம்பி ஒருவன் ஒரு செயலை தான் நிச்சயம் செய்துவிடுவோம் என்று நம்பி புன்னகை புரிகிறான் என்றதும் இடும்பனுக்கு அது புதுவித அனுபவத்தை கொடுத்தது ,அந்த கொடூரமான முகத்தில் தற்போது புத்தொளி வந்தது ,எனோ அவன் மனதில் இந்த செயலை நிச்சயம் செய்து முடிக்கவேண்டும் என்ற வேகம் வந்தது .

பிறகு ஒரு நாழிகை அனைவரது சந்தேகங்களையும் , தனது திட்டத்தை விரிவு படுத்தியும் விஜயன் கூற அங்கிருந்தவர்களுக்கு தங்கள் பங்கிற்கு அதை கவனமாக கேட்டு கொண்டனர்.

நாழிகை நேரம் சென்றது அவர்களது நாவாய் விஜயன் கூறிய நேரத்திற்கு மேற்கு எல்லையை நெருங்கியது அங்கேயே சிறிது நேரம் நிற்க வளவன் பாய்மர கம்பின் மேல் கண்காணிப்பதற்காக வைத்திருக்கும் பகுதிக்கு சென்றான் ,தனது கையில் வைத்திருக்கும் தொலைநோக்கியை கொண்டு பார்க்க மேற்கு எல்லையில் இருந்த கப்பல் கிழக்கை நோக்கி நகர துவங்கி இருந்தது.

வளவன் மேல் இருந்தபடியே "கப்பல் வருகிறது !,மறுஎல்லையில் இருக்கும் கப்பலும் நகர துவங்கிவிட்டது." என்று சத்தமாக கத்த.

விஜயன் அங்கு நின்ற அனைவரையும் நோக்கி "விரைந்து செயல்படுங்கள் "என்று ஆணையிட்டு பின் வளவனை நோக்கி "கீழே இறங்கு வளவா !!" என்று கத்தினான் .

வளவனும் இறங்க அங்கே அரைநாழிகைக்கு பரபரப்பு ஏற்பட்டது , வீரர்கள் ஐம்பது பேரும் அடி தளத்தில் இருக்கும் சிறு சிறு கப்பல்களில் ஏற ,அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள், விஷ்ணுவர்தன் படைகளை சமாளிக்கும் அளவிற்கு பொறிகள் மறைந்திருந்து தாக்க பயன்படுத்தும் அம்புகள் என அனைத்தையும் தயார்செய்தனர், இந்த இடைப்பட்ட நேரத்தில் விஜயன் ஒரு தலைசிறந்த படை தளபதியாகவே மாறினான் .

அருளாளரும் ,இடும்பனும் இணைந்து கப்பல் முகப்பிற்கு சென்று பிறை நிலவு வளையத்திற்குள் கப்பலை எவரும் அறியாத வகையில் நுழைக்கும் பணியை பார்த்து கொண்டிருந்தனர் சரியாக இரண்டு நாழிகை முடிந்த நிலையில் இருக்க அவர்களது நாவாய் நிலவு வட்டத்தில் நுழைந்து அங்கு இருக்கும் மரங்களுக்கு இடையில் பிதுங்கியது ,சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் அங்கே ஒரு நாவாய் இருக்கிறது என்று கூறினால் எவருமே நம்பமாட்டார்கள்.

அப்படி மறைத்திருந்தான் இடும்பன், விஜயன் "அற்புதம் இடும்பா !"என்று அவனை பாராட்டிவிட்டு "புறப்படு வளவா வனத்தினுள் நாம் நுழையலாம் ,அருளாளரே நம்மிடம் அதிக நேரமில்லை !,விரைந்து வரும் அந்த கப்பலை கைப்பற்றுங்கள் "என்று கூறி அவனும் வீரர்கள் இருந்த ஒரு படகில் ஏறி செல்ல நாவாயின் பின்னால் ஒரு பெரிய துவாரம் போல உருவாகி அங்கே இருந்து சிறு படகுகள் வெளிய வந்தன.

விஜயன் ,வளவன் இருவரும் படைக்கு தலைமையேற்று வனத்தினுள் நுழைந்தார்கள், அங்கே பகலும் இரவாக தோன்றும் என்று கூறும் அளவுக்கு இருள் சூழ்ந்து இருந்தது, உண்மையில் மறைந்திருந்து தாக்க எண்ணியவர்களால் ,அங்கே என்ன இருக்கிறது என்பதனை கண்டறிய முடியவில்லை ,பகல் பொழுதிற்குகே அவர்களுக்கு தீப்பந்தங்கள் தேவைபட்டது .

அந்த மெல்லிய ஒளியில் அனைவரும் ஒன்றாக செல்லாமல் இடைவெளி விட்டு விட்டு எவருக்கும் சந்தேகம் வராதவாறு சென்றார்கள் ,அனைவரும் அங்கு முதல் கட்ட அரண் அமைத்திருக்கும் பகுதிக்கு வர அங்கே இருநூறு வீரர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர் ,வளவன் விஜயனை பார்க்க விஜயன் 'இவ்வளவு காவலா ?உண்மையில் இங்கே வேறு ஏதும் இருக்குமா 'என்று எண்ணி பின் அதை மாற்றிக்கொண்டான் 'ருத்ர பைரவ லிங்கத்தை தவிர உலகில் வேறு எது விலைமதிக்க முடியாததாக இருக்க முடியும் ' என்று நினைத்து கொண்டான்.

விஜயன் அந்த இருநூறு வீரர்கள் நின்றிருக்கும் அமைப்பை கவனிக்க அவர்கள் ஒரே இடத்தில நில்லாமல் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தார்கள், முதல் வரிசையில் ஐம்பது வீரர்கள் இருக்க அந்த கோட்டை ஏதோ சாதாரண மாளிகையை போன்றே தோற்றமளித்தது.

அந்த மேல்தளத்தில் ஐம்பது வீரர்கள் நிற்க பின்னால் நூறு வீரர்கள் இதே போன்று அடி தளத்திலும் மேல் தளத்திலும் நின்றிருந்தார்கள்.

வளவன் விஜயனை நோக்கி சைகை செய்ய விஜயனும் வளவனை நோக்கி சைகை செய்தான் அதில் "கீழே இருப்பவர்களை சத்தமில்லாமல் அழித்துவிட்டு நாம் மேல் தளம் செல்ல வேண்டும் " என்ற பொருள் இருந்தது.

வளவனும் அதுபடி தன்னுடன் இருபத்தி ஐந்து பேரை அழைத்துக்கொண்டு அவர்களுக்கு நேராக நின்று முதலில் குறு கத்திகள் எய்தனர் சத்தமே இல்லாமல் அங்கே இருபத்தி ஐந்து பேர் மரணமடைய மீதம் இருப்பவர்கள் சுதாரித்து எச்சரிக்கை செய்வதர்குள் வளவன் படையினர் உள்ளே நுழைந்து அவர்களை தொண்டையில் தங்களது வாளை இறக்கி இருந்தனர்.

கீழே ஏதோ சப்தம் கேட்க மேல் தளத்தில் இருந்தவர்களில் சிலர் கீழே பார்க்க அவர்கள் பின்னால் இருந்து தள்ள பட்டு கீழே விழுந்து செயலற்று போயினர் ,அங்கே தாக்கியது விஜயன் படையினர், அந்த வீரர்கள் கீழே விழும்போது எழுந்து சப்தத்தில் மற்ற வீரர்கள் அங்கே வர மேல் தளத்தில் போர் மூண்டது விஜயனும் ,அவன் படையினரும் திறம்பட போரிட்டனர் ,இருபத்தி ஐந்து வீரர்கள் நாற்பது வீரர்களை எதிர்த்து போரிட்டனர் ,இருந்தும் அந்த இருளில் மறைந்து மறைந்து தாக்கினர் நாற்பது என்பது குறைந்து குறைந்து இருபது ஆனது விஜயனின் படை முழு வேகத்தை எடுத்தது.

அப்போது தான் அந்த விபரீதம் நிகழ , யாழி தேசத்து போர் வீரர்கள் மிகுதியாக நின்றிருந்த பகுதியில் பழைய கோட்டை மேல் சுவர் இடிந்து விழுந்தது, அதில் சிம்ம படையினர் சிலர் இருந்தனர், எனினும் யாழி தேசத்து வீரர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது. தீமையிலும் நன்மை விளைந்ததை போல ஆனது .

சிம்ம தேசத்து வீரர்கள் பலர் உயிரிழக்க வில்லை எனினும் பலத்த காயம் ஏற்பட்டது சிலர் அந்த கற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டனர். இதை பார்த்த விஜயன் மிகுந்த கோபம் கொண்டான்.

தனது வீரர்கள் சிலரை காயம் பட்டவர்களுக்கு உதவ அனுப்பிவிட்டு மீதம் இருபவர்களோடு ,மற்ற யாழி தேசத்து படையினரோடு போர் புரிய துவங்கினான்.

இவ்வளவு சப்தம் கேட்டிருக்க மீதம் இருந்த யாழி தேசத்து வீரர்கள் எங்கே சென்றார்கள் ,அவர்கள் ஏன் இன்னும் வரவில்லை?. என்று நாம் கண்டறிய வேண்டுமானால் வளவனை காண வேண்டும்.

பாதி சிம்ம வீரர்களுக்கு தலைமை ஏற்று வளவன் கோட்டைக்கு பின் புறம் சென்றான் அங்கே நின்றிருந்தவர்களை கோரை புதருக்குள் மறைந்து இருந்து விஷம் தோய்ந்த அம்புகள் கொண்டு தாக்கினர்.

வளவன் விட்ட அம்பு அந்த வீரர்களுக்கு தலைவன் போன்று இருந்தவனின் மார்பில் துளைத்தது, 'ஆஆ ' என்ற சப்தத்துடன் அவன் கீழே விழுந்துவிட வளவனின் அம்பை தொடர்ந்து பல அம்புகள் மாரியாக பொழிய யாழி தேசத்து வீரர்களால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியவில்லை,பிறகு வில் எய்தது சிம்ம தேசத்து சிறப்பு படையினராயிற்றே ,ஆதிரையானால் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்க பட்டவர்கள்.

யாழி வீரர்கள் தலைவன் போல நின்ற ஒருவன் "வெளியே வந்துவிடுங்கள் !,இல்லையேல் யாழி தேசத்து முழு படையும் தங்களை எதிர் கொள்ளும் " என்று சத்தமாக கூறினான்.

அப்போது ஓரளவு போர் மட்டுப்பட்டிருக்க வளவனும் ,விஜயனும் போர் செய்வதை நிறுத்தவில்லை, வாட்சத்தமும் ,வேல் சத்தமும் இரண்டு நாழிகை வரை நிற்கவில்லை.

இடி முழக்கம் போல விஜயனின் கட்டளைகள் வெளிப்பட வளவன் விஜயன் இவ்வாறு கட்டளையிட்டு முதல் முறை பார்க்கிறான்.

விஜயன் "விரைந்து அந்த கோட்டை மதிலை உடைத்து நொறுக்குங்கள் " என்று விஜயன் மதம் கொண்ட வேழம்போல சப்ததிக்க வளவனும் மற்ற வீரர்களும் தங்கள் முழுபலத்தை காண்பிக்க துவங்கினர்.

சிம்ம வீரர்கள் சிலர் கோட்டை மதில் மேல் கயிற்றை வீசி ஏற துவங்கினர்,அங்கே நின்றிருந்த யாழி தேசத்து வீரர்களும் அவர்கள் பங்கிற்கு ஏறி வரும் வீரர்களின் மீது அம்பு எய்த ,சிம்ம வீரர்கள் கேடையங்களை வைத்து தங்களை தற்காத்து கொண்டனர்.

பிறகு அந்த போர் முழு வேகத்தை எடுத்தது கூடிய விரைவிலேயே அதன் பலன் கிட்ட அந்த கோட்டை மதில் சரணடைந்தது .

யாழி வீரர்கள் சிலர் தங்கள் சகவீரர்களின் மரணத்தை கண்டு சிறிது தடுமாறினார்கள் வீரனின் வாழ்வு மிகவும் குறுகியது என்பதை அது பறைசாற்ற, தலைவன் இல்லாமல் அதற்கு மேல் போரிட திட்டம் தீட்ட முடியாமல் இருக்க போதா குறைக்கு அம்புகள் எந்த பக்கம் இருந்து வருகிறது என்பதை யூகிக்க முடியாத நிலையில் ,யாழி வீரர்கள் சிலர் சரணடைய துவங்கினர், விரைவிலேயே மற்ற வீரர்களையும் சங்கிலிகளால் பிணைத்து கைது செய்தனர் விஜயன் படையினர்.

அதே சமையம் அங்கே கடலில் பிறை நிலவு வட்டத்தில் இடும்பன் தனது வித்தைகள் அனைத்தையும் காண்பிக்க துவங்கினான்.

அருளாளர் இடும்பனை கண்காணிக்க இடும்பன் அதை சிறிதும் லட்சியம் செய்யவில்லை , இடும்பன் "அருளாளரே !நான் ஒன்றும் பருவ பெண்ணல்ல இப்படி பார்க்கவேண்டாம் "என்று ஏளனமாக கூறினான்.

அருளாளர் வெடுக்கென்று தனது பார்வையை மாற்றி கொண்டார், "நான் ஒன்றும் உன்னை கவனிக்கவில்லை அப்படியே அப்பக்கம் நோக்கினேன் நீ இருந்தாய் அவ்வளவே " என்று கூறி நிறுத்திவிட்டார்.

விஜயன் குறித்த நேரத்தில் சரியாக அந்த கப்பல் அங்கு வர இடும்பன் விஜயனை மனதில் மெச்சினான் 'இந்த சிறு வயதில் இப்பிள்ளைக்கு தான் எத்தனை அறிவு ' என்று.

வழமை போல கண்காணிப்பதற்காக வந்தது அந்த கப்பல் , கப்பலில் அனைவரும் வழமை போல சுறுசுறுப்பாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

மாலுமிகள் அனைவரும் கப்பல் செலுத்துவதில் கவனமாக இருக்க, வீரர்கள் சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள், அடிமைகள் அனைவரும் அடித்தளத்தில் கப்பலை செலுத்த உதவி கொண்டிருக்க, மொத்தத்தில் ஒரு போர் தாக்குதலை சற்றும் எதிர் பார்க்காதவாறு வந்தது அந்த கப்பல்.

அந்த கப்பலில் இருந்த தலைமை காவலன் ஒருமுறை சுற்றி கடலை கண்காணித்துவிட்டு அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையாக எதுவும் தென்படாததால் மீண்டும் கப்பலின் புறம் தனது பார்வையை செலுத்தினான்.

அமைதியாகவே சென்றது அந்த சூழல் ,ஆனால் தீடீரென்று வானத்தில் இருந்து இடி விழுந்ததை போல இரண்டு பெரிய நங்கூரம் போன்ற அமைப்பு அந்த கப்பலின் பக்கவாட்டு சுவரில் விழுந்ததில் அதில் அந்த கப்பலுக்கு தலைவன் சிறிது ஆடித்தான் போனான் .

தலைவன் "என்ன நடக்கிறது இங்கே !" என்று அதிகாரமாக அவன் கேட்க அங்கே அந்த கப்பலில் இருந்த படை அனைத்தும் ஒன்று திரண்டு விட்டது .

வீரர்கள் தங்கள் கைகளில் வாளும் வேலும் வைத்து கொண்டு நின்றிருக்க ,வானத்தில் இருந்து அம்பு மழை பொழிந்தது, யாழி தேசத்து வீரர்கள் சிறிது தடுமாறினாலும், விரைவிலேயே கேடையங்களை வைத்து சமாளித்ததனர்.

இப்போது மீண்டும் கற்கள் மழையாக மாறியது அது சரேல் சரேல் என்று அந்த தடையங்களை பலமாக தாக்க வீரர்களால் கேடையங்களை விட்டு வெளியே வரமுடியவில்லை ,தங்களது உயிரையும் தலையையும் பாதுகாத்து கொள்ள அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை .

முன்னால் நின்றிருந்த வீரர்கள் தங்கள் கப்பல் மாலுமிகளுக்கு ஆயுதங்களை எடுக்க கட்டளை இடுவதற்காக திரும்ப இப்போது கற்கள் பொழிவது சற்று நின்றிருந்தது, திரும்பியவர்களை தனது கொடூர புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்ததான் இடும்பன், கடற்கொள்ளையன் இடும்பன்.

தலைவன் "நீ எவ்வாறு இங்கே எங்கே எனது மாலுமிகள் '' என்று மிகுந்த பதற்றத்தோடு வினவ இடும்பன் எதையும் கூறாமல் "அங்கே உனக்கு என்ன தெரிகிறது என்று பார்த்து சொல் " என்று அவனையே மீண்டும் வினவ அவன் தனது பார்வையை திருப்பினான்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes