வளரும் நவீனம்

Advertisement

S.B.Nivetha

Well-Known Member
இனிய தோழமைகளே...

எனது சிறுகதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

வளரும் நவீனம்

வேலை முடிந்து வீட்டிற்கு வெகு வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் கமலா. இப்போதிருந்து சரியாக ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு தான் அவள் வீட்டை அடைய முடியும். அதற்கு அவள் இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். கூட்டநெரிசலில் அடித்து பிடித்து ஒருவழியாக அமர்ந்துவிட்டால் பெரும் சாதனை செய்துவிட்ட நிறைவைத் தந்திடும் பயணங்கள் அவை. காலை மாலை இருவேளைகளிலும் விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அனுபவித்தே தீரவேண்டிய அவசியமான அவஸ்தை.
அன்று கூடியிருந்த வேலைப் பளுவின் தாக்கத்தால் ஏற்கனவே சோர்ந்திருந்த கமலா நகரப்பேருந்தின் நெரிசலில் முழுசக்தியையும் வடியவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். இதே போல் அவள் திருமணத்திற்கு முன் வீடு வந்து சேர்கையில் அவள் அம்மா, அவளுக்கான காபி பலகாரத்தோடு காத்திருப்பார்.
“ஏன் கமலா இன்னிக்கு ரொம்ப சோர்து தெரியறையே வேலை ரொம்ப அதிகமா, பஸ்ஸில இடம் கிடைச்சுதா, கிடைக்கலியா, இதுக்குத் தான் சொன்னேன், வேலைக்கெலாம் போகவேணான்னு, அப்பா வருமானத்துல இத்தணை நாளா உன்னையும் தம்பியையும் படிக்க வைச்சு குடும்பத்தையும் நடத்தலையா, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்கு போயிட போற, கொஞ்சநாளைக்காவது ரெஸ்டா இருக்கலாமில்ல, படிக்கிறப்ப தா படிப்பு ப்ராஜெக்ட்ன்னு நிக்காம ஓடுன, இப்பயும் இப்படி ஓடுனுமா” என்று பதிலுக்கு காத்திராமல் தினமும் தன்னை நினைத்து கவலைப்படும் அம்மாவின் குரலுக்கு ஏங்கியது அவள் மனம்.
அதற்குள் வீடு வந்திருக்க அவளது நான்கு வயது மகன் ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான். அத்தனை அலுப்பும் சோர்வும் இடம் தெரியாமல் போனது போல் ஒரு பிரமை அவளுக்கு. வாஞ்சையோடு மகனை வாரிக் கொண்டு உள்ளே நடந்தாள். அவள் கணவன் இன்னும் வந்திருக்கவில்லை. மாமியார் டிவியின் சீரியலுக்குள் மூழ்கியிருந்தார்.
“வா மா கமலா, உனக்கு டீ போட்டு ப்ளாஸ்கில வைச்சிருக்கேன், மறக்காம குடிச்சிடு” என்றவர் மீண்டும் சீரியலுக்குள் மூழ்க போக அங்கே விளம்பரம் போடப்பட்டிருந்தது.
“எதுக்குத் தான் இவ்வளவு விளம்பரத்தை போடுவானோ கடன்காரன், கேபிளுக்கு கொடுக்குற காசுல முக்கால்வாசி விளம்பரத்துக்குத் தான் போகுது, கடன்காரன் கடன்காரன்” என்று வாய் மொழிந்தாலும் அவரின் கண்கள் டிவியை விட்டு அகலவில்லை.
மகனுடன் தங்கள் அறைக்குள் நுழைந்தவளுக்கு அப்படியே படுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. இரண்டு நிமிடம் உடலைக் கிடத்தியவள் சட்டென எழுந்து அமர்ந்தாள். “மாறா… இளமாறா… குட்டி… தம்பி எங்க இருக்கீங்க இங்க வாங்க” என்று தன் மகன் இளமாறனை அழைத்தாள்.
“ம்மா,.. என்னம்மா…. டிவி பாக்கும் போது கூப்பிடுற… “
“டிவியெல்லாம் அப்புறம் பாக்கலாம் ஹோம்வொர்க் பண்ணியா, டைரி எடு, மிஸ் என்ன சொன்னாங்க”
“போ மா, டெய்லி ஹோம் வொர்க் போர் அடிக்குது மா, நான் அப்புறமா எழுதுறேன்” என்றவன் நில்லாமல் ஓடியே விட்டான் அவன் பாட்டியிடம்.
எழுந்து உடை மாற்றி முகம் கழுவி வந்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள். ப்ளாஸ்கில் இருந்த டீயை டம்ளரில் ஊற்றி ஒரு மிடறு விழுங்கியிருப்பாள், “கமலா அங்க கிண்ணத்துல வெங்காய உரிச்சு வச்சிருக்கேன் சட்னி பண்ணிடு மா, ஃப்ரிட்ஜில மாவு இருக்கு எடுத்து வெளியில வை, அப்ப தா உங்க மாமா வந்ததும் தோசை ஊத்த முடியும்”
மணியைப் பார்த்தாள் 7.15 ஐக் காட்டியது கடிகாரம், டீயை கீழே வைத்துவிட்டு அடுத்து இரவு உணவுக்கான வேலையில் இறங்கினாள். அடுத்த பதினைந்து நிமிடங்கள் வெங்காயம் தக்காளியை வதக்கி சட்னி அரைத்து வைத்தாள் அதற்கு முன் தோசைக்கான மாவை வெளியே வைத்தாள். கணவனுக்கு மிகவும் பிடித்த தேங்காய் சட்னி நினைவில் வர அந்த வேலையும் நடந்து முடிகையில் மீண்டும் அவள் மாமியின் குரல்,
“கமலா,, மாமா வந்துட்டாங்க பாரு, தோசைக் கல்ல அடுப்பில போடு மா, இந்தா நான் வந்து தோசை ஊத்துறேன்”
”வேணா அத்தை நீங்க உக்காருங்க நான் ஊத்தி தரேன்” என்றவளைப் பார்த்து ஆறிபோன டீ பாவமாய் சிரித்தது. அதை ஒதுக்கியவள் மாமா அத்தை குட்டி பையன் கணவன் தனக்கு என அனைவருக்கும் தோசை வார்த்து முடித்து வெளிவர மணி 8.30 ஆகியிருந்தது.
அப்பாடா இன்னிக்கு நினைச்ச மாதிரி கொஞ்சம் சீக்கிரமா வேலைய முடிச்சிடலாம் என நினைத்தவள் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு கழுவி வைத்துவிட்டு அடுத்த நாளைக்கு தேவையான காய்கறிகளை சரிபார்த்து அனைவருக்கும் பால் ஆற்றிக் கொண்டு வருகையில் மணி ஒன்பதைத் தொட்டிருந்தது.
அப்பாடா என அமர்ந்தவள் கண்ணில் தூக்கத்தில் தள்ளாடும் மகன் கண்ணில் பட, அவன் கழட்டிப் போட்டிருந்த பையை எடுத்தாள். அதில் அவன் செய்யவென நீளமாய் ஒரு பட்டியலை எழுதியிருந்தார் அவன் ஆசிரியர்.
”அடேய் நீ என்ன கலெக்டருக்கா படிக்கிற உங்க மிஸ் எதுக்குடா இவ்வளவு ஹோம்வொர்க் எழுதியிருக்காங்க… இதுல பாதிய நான் தா எழுதுறேன் தினமும்”
“நீங்களே ஃபுல்லா எழுதுனா கூட எங்க மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்க மா,… ஹி ஹி “ என்ற மகனை இழுத்து உட்காரவைத்து எழுதவைத்தாள். அவனோ தூங்கிவிழுந்தபடியே எழுதுவதற்கு பதிலாய் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
“ஏங்க நான் வந்து எழுதவைக்குறதுகுள்ள தூங்கிவிழறானில்ல, நீங்க வந்ததும் அவன கொஞ்சம் ஹோம் வெர்க் செய்ய வைக்க கூடாதா”
“நீ பாத்திரம் கழுவ சொன்னாக்கூட செய்றேன் கமலா, ப்ளீஸ் என்னைய இவனுக்கு பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்க சொல்லாத அவனுக்கு சொல்லிக் கொடுத்து எழுத வைக்குறதுக்குள்ள எனக்கு மறந்திடும் போல”
“க்கூம், இப்படியே சொல்லுங்க, இத முன்னாடியே சொல்லவேண்டியது தான, எங்க சொன்னத செய்யனுமோன்னு, இப்ப சொல்றீங்க, அவன்கிட்ட எப்ப பார்த்தாலும் விளையாட வேண்டியது, ஒண்ணும் சொல்றது கிடையாது, தப்ப திருத்தி ஹோம்வொர்க் செய்ய வைச்சு அவனுக்கு நான் மட்டும் வில்லி மாதிரி தெரியுறேன், நீங்க எல்லா இடத்துலயும் நல்லவராயிடுங்க”
“ஏன் டி ஏன் சும்மா நொய்ய் நொய்ய்ங்குற, போய் அவன் ஹோம் வொர்க பண்ணு, ஆபீசுல தான் அந்த மேனேஜர் கொல்றான்னா, இங்க இவ, ஒரு மனுசன நிம்மதியாவே விடமாட்டீங்களா” என்ற அவள் கணவனோ ஹாலை எட்டிப் பார்க்க அவன் அம்மா இன்னும் சீரியலைவிட்டு வெளிவராதிருந்தார்.
போனை எடுத்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்துவிட்ட கணவனிடம் மீண்டும் பேசி தன் கோபத்தை கூட்டிக் கொள்வதைவிட நாமே செய்துவிடலாம் எனத் தோன்ற, அதை அமுல்படுத்தத் துவங்கினாள்.
மகனின் கன்னத்தில் தட்டி அவனை எழுப்பி அவன் கையை பிடித்து எழுத ஆரம்பித்தவள் அவன் தூங்கிவிழுவதை பொருட் படுத்தாமல் எழுதிமுடித்தாள்.
இன்னும் கொஞ்சம் பெரியவனா ஆனாலும் டியூசன் அனுப்பலாம், எல்.கே.ஜிக்கு என்னத்த டியூசன் அனுப்புறது என்ற எண்ணவோட்டத்திலேயே மகனை படுக்கையில் படுக்கவைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை அனைத்தையும் சரிபார்த்து, கதவைப் பூட்டிவிட்டு வந்து படுக்கையில் மணி பத்தைக் கடந்து அரைமணிநேரம் ஆகியிருந்தது.
இரவு விளக்கை போட்டு விட்டு படுத்தவளை மெல்ல அணைத்தான் அவள் கணவன், இவள் வேகமாய் தட்டி விட்டாள். மீண்டும் போட்டான் மீண்டும் தட்டிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். மகன் ஒரு புறமும் கணவன் ஒருபுறமுமாய் படுத்திருந்த அவளை தன் புறம் திருப்பிய கணவன்.
”என்ன மா” என்றான். ”இப்படி கொஞ்சமும் பொறுப்பில்லாம இருக்கீங்களே” என்று சொல்ல வாயெடுத்தவள். அதைவிடுத்து அதிலும் முக்கியமான பிரச்சனையை கையிலெடுத்தாள்.
“இன்னிக்கு காலையில நீங்க கிளம்பினதும் மாறன் என்கிட்ட வந்து அவன் பிரண்ட் கோபி வைச்சிருக்க மாதிரி ஏரோபிளேன் பொம்ம வேணுமின்னு கேட்டான், இவன் அவனோட விளையாடும் போது நான் அத பாத்திருக்கேன் ஆயிரத்து ஐநூறுக்கு குறையாது அது”
“ம்ம் நீ என்ன சொன்ன”
“இல்ல கண்ணு இப்ப முடியாது அம்மாகிட்ட காசில்ல இன்னொரு நாள் வாங்கிக்கலாம்னு சொன்னேன்”
“அதுக்கு அவன் சரி சொல்லீட்டானா, பிரச்சனை முடிஞ்சுதுல்ல, அதுக்கு ஏண்டி இப்ப மொரண்டு பண்ணுற “
“அவனா சரீன்னு சொல்லுவான் உங்க புள்ளையாச்சே ஒத்துக்கிட்டா மானம் பொத்துகிட்டு விழுந்திடாது, என்ன சொல்றான் தெரியுமா உன்கிட்ட தான் காசு இருக்கே ஏன் பொய் சொல்ற உடனே வாங்கிக் கொடுங்குறான்”
“என்கிட்ட ஏதுடா காசு உனக்கு எப்படித் தெரியும்னு கேட்டா, அதா காசு வர மிஷின் இருக்குல்ல கார்டு போட்டா காசுவரும் எடுத்துவாங்கிக் கொடுன்னு சொல்றான், அதுல நம்ம அக்கொண்ட் காசு இருந்தா தா எடுக்க முடியும்னு சொல்லி அவன்கிட்ட புரியவைக்க முடியில கைய கால உதறீட்டு அழுக ஆரம்பிச்சுட்டான், அவன சமாதானப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பீட்டு நான் கிளம்பறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு”
“இதெல்லாம் ஒருவிஷயமா சின்ன பசங்க பொம்மை கேட்டு அடம் பண்ண தா செய்வாங்க இதுக்கு என்கிட்ட கோச்சுக்கிட்டு என்ன ஆகப் போகுது”
“பொம்ம கேட்டு அழுகுறது சாதாரண விஷயம் தா ஆனா காசுங்குறது கார்டு போட்டா வரும்னு அவன் மனசுல பதிஞ்சிருக்கு, அதுக்கு பின்னாடி இருக்க உழைப்பு அவனுக்கு தெரியல, அந்த காசு வர நம்ம எவ்வளவு கஷ்டப்படுறோம்னு புரியல”
“ஏண்டி நாலு வயசு பையனுக்கு நீ எதிர்பாக்குற அளவுக்கு புரிதல் சாத்தியமே இல்லடி”
“சாத்தியமில்ல தான் ஆனா நாம எதிர்பாக்காத புரிதல் வந்திருக்கே, இந்த எண்ணம் அவன் மனசுல வர்ற அளவுக்கு நம்ம சூழல் சமூக சூழல் மாறியிருக்கு, இத மாத்தி நாம அவனுக்கு சரியான படி புரியவைக்கனும்”
”இப்ப என்ன பண்ணனும்ங்குற, தூங்குற அவன எழுப்பி இந்தியப் பொருளாதாரத்தை விளக்கனுமா”
“க்கும் அவனோட விசயங்களை நாம கண்கானிக்கனும் என்ன பாக்கறான் என்ன தெரிஞ்சுக்குறான் அவனோட புரிதல் என்ன, இதெல்லாம் நாம கவனிச்சு சரியான படி அவன வழிநடத்தனும், அதுக்கு நாம அவன்கிட்ட ஃப்ரண்ட்லியா பேசி அவனோட எண்ணங்களை தெரிஞ்சுகிட்டு அத சீர்படுத்தணும், நீங்க என்னடான்னா இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம விளையாட்டுக்கு மட்டும் அவன் கூட சேர்ந்துகிட்டு அவன் ஹோம்வொர்க் கூட கண்டுக்காம போன நோண்டிகிட்டு இருக்கீங்க”
“இதெல்லாம் என்ன விட நீ நல்லா பண்ணுவியே மா, நீயே பண்ணீடேன்”
“வேலைக்கு போகாம வீட்டிலயே இருந்திருந்தா இதெல்லாம் பேசவேண்டிய அவசியமே வந்திருக்காது” என்பதோடு முடித்தவளுக்கு மனதிற்குள் அந்த வாக்கியம் தொடர்ந்தது, ”என்ன பண்ண வேலைக்கும் போயி வீட்டையும் கவனிச்சு பிள்ளையும் வளர்க்கும் போது, எல்லா இடத்துல கண்டிப்பா இருக்கும் போது கிடைக்குறது என்னமோ எதிர்பாக்குறத விட வேறையாத் தான் இருக்கு, தன்னைவிட அதிகமாய் நண்பர்களுடன் கலகலக்கும் கணவனும், எனக்கு டாடி தா பிடிக்கும், நீ எப்ப பார்த்தாலும் எதாச்சும் சொல்லி திட்டிட்டே இருக்க எனக்கூறி தன்னை தன் தேவைக்களுக்கு மட்டும் நாடும் மகனும், அவள் மனதின் ஓரத்தில் ஒரு வெறுமையையே கொண்டு வந்திருந்தனர்.
“விடு இதெல்லாம் நான் பாத்துக்குறேன்” என்ற வார்த்தைகளை எதிர்பார்த்தவளுக்கு, ”அதெல்லாம் விடு” என்று தன்னை இறுக்கிய கணவனின் அணைப்பும் வெறுமையாகவே இருந்தது.
மறுநாள் காலை எப்போதும் போல் பரபரப்புடன் விடிய, தன் வேலைகளோடு வீட்டு வேலைகளை கவனித்து, கணவனையும் மகனையும் அனுப்பிவிட்டு மாமனார் , மாமியாருக்கு வேண்டியதை செய்து வைத்துவிட்டு வீதியில் கைப்பையுடன் இறங்கியவளை, எதிர்கொண்டாள் அட்சயா, கமலாவின் அடுத்தவீட்டுப் பெண்.
இவளைப் போலவே அவளும் ஆனால் இல்லத்தரசி, மகளை கணவனுடன் வழியனுப்பி விட்டு கையில் மதியத்திற்கான காய்கறிக்கூடையுடன் வந்து கொண்டிருந்தாள்.
”இவளைப் போல் நாமில்லையே வீட்டிலிருந்து குடும்பத்தை முழுநேரமாய் கவனிக்க முடியவில்லையே” என கமலாவும்
”இவளைப் போல் சொந்த காலில் சுதந்திரமாய் நிற்க முடியவில்லையே, எந்நேரமும் குடும்பம், குழந்தை, வீடு, இதைத் தாண்டி எனக்கான உலகத்தைக் காண இயலவில்லையே” என அட்சயாவும் ஒரு ஏக்க பெருமூச்சை வெளியிட்டபடி கடந்து போயிருந்தனர்.

கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தவள் நகரப் பேருந்தின் வருகையை எண்ணி நடையில் இன்னும் வேகத்தை கூட்டினாள், காலத்தோடு அவளும் ஓடத் துவங்கினாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வளரும்
நவீனம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சிறுகதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
S.B.நிவேதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வேலைக்கு செல்லும் பெண்ணும் வீட்டிலிருந்து ஹவுஸ் ஒய்ப்
வேலை பார்க்கும் பெண்ணும்
ஒருவரையொருவர் பார்த்து
அடுத்தவரின் நிலைக்கு ஏங்குவது
இயல்பான சூப்பரான விஷயம்,
S.B.நிவேதா டியர்
இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான்ப்பா
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இன்றைய வேலைக்கு செல்லும் பெண்களின் (அவல) நிலை... சிபி ஒரு முறை அப்படி தான் சொன்னான்... அதான் அந்த மெஷின்ல காசு வருதேன்னு... ஒரு நாள் உட்கார வைச்சு அவனுக்கு சொன்னேன்... அம்மாவோ அப்பாவோ வீட்டில இருந்தா இதெல்லாம் வராதுன்னு... வீட்டுக்கு வரும் போதே எப்போடா படுக்கலாம்... யாராச்சும் தோசை ஊத்தி தர மாட்டாங்களான்னு தான் இருக்கும் எப்பவும்... சூப்பர் கதைடா நிவி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top