வண்ணங்களின் வசந்தம் - 2

Advertisement

PAPPU PAPPU

Well-Known Member
eiVTWF358323.jpg

வண்ணம் 2 :

மது மட்டும் முகம் வாடி நின்று இருந்தாள் என்றால்,சூர்யாவோ யோசனையாக நின்று இருந்தாள்.

இருவரின் அமைதியை பார்த்த பூஜா மற்றவர்களிடம் கண்ணை காட்ட அவர்களும் இருவரையும் பார்த்து தலையை இட வலமாக ஆட்டினர். பின் அபி மதுவின் அருகில் சென்று அவளின் கையை பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஏன்டி இப்படி இருக்க டெய்லி சொல்லி சொல்லி எங்களுக்கே போர் அடிச்சுடுச்சு பிரீயா இரு.நீ மூஞ்ச ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி வச்சி இருந்தா உங்க அப்பா என்ன ஆச்சு ஏதாச்சு என்று எங்களை படுத்தி எடுத்துடுவார்.உனக்கு எங்ககூட சைக்கிள்ள வரதுதான் புடிச்சுருக்கு, நாங்களும் நெறைய தடவ உங்க வீட்ல பேசிட்டோம் ஆனா பதில் என்னமோ ", தனது கட்டை விரலை கீழ் நோக்கி காட்டி உதட்டை சுளித்தாள். மதுவிற்குமே இது தெரிந்த விஷயம் என்பதால் தன் மனதை தேற்றி கொண்டு “சரி லைட்டா பசிக்கற மாதிரி இருக்கு ஏதாவது சாப்பிடலாமா” என்று கேட்டாள்.

நீ சாப்பிடறதுலயே இரு.அது எல்லாம் வீட்ல போய் பாத்துக்கலாம் இப்போ கிளம்பற வேலைய பாக்கலாம் என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்க ஏதேற்சியாக சூர்யாவை பார்த்த பூஜா. “உனக்கு என்னடா ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டாள்.

சூர்யாவோ “இன்னைக்கு மேம்கிட்ட பசங்களை பத்தி நாம பேசிகிட்டு இருந்தோம்னு மாட்டி விட்டது யாருனு நான் கண்டு பிடிச்சுட்டேன் , ஆனால் நம்மல போட்டு குடுக்கறதுல அவளுக்கு என்ன யூஸ் அதுதான் எனக்கு புரியல " என்று அப்போதும் குழம்பிய குரலில் கூறினாள்.

சூர்யா சொல்லி முடித்த அடுத்த நிமிடம் மற்ற நால்வரும் " யார் அது " என்று கோபமாக கேட்டனர். உடனே சூர்யா பூஜாவை நோக்கி கையை காட்டி "இதோ இவளோட நாத்தனார். அந்த ஓவர் ஆக்ட்டிங் யமுனாதான் " என்றாள்.

மற்ற நால்வரும் சூர்யா சொல்வதை கேட்டு அதிர்ந்து "அவளா" என்று பல்லைக் கடிக்க, அபி "அவளை பழி வாங்க ஏதாவது செஞ்சே ஆகனும்.என்ன செய்யலாம்" என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். பூஜாவோ கோபமாக "அவளை முதல் நாள் கிளாசில விட வரும்போதுதான் அவ அண்ணனை நான் பார்த்தேன். அந்த ஒரு காரணத்துக்காக தான் இவ்வளவு நாள் அவ போடற சீன் எல்லாம் பொறுத்துட்டு இருந்தேன். கடைசியில் அவ நம்மளையே போட்டு கொடுத்துட்டா. இனி அவள சும்மா விடக்கூடாது.நாளைக்கு அவளோட அண்ணாகிட்ட நான் மட்டும் போய் இந்த விஷயத்தைபற்றி பேசிவிட்டு வரேன் " என்று சொல்ல மற்ற நால்வரும் அவளை முறைத்துப் பார்த்தனர்.

தோழிகளின் முறைப்பை கண்ட பூஜா 'கண்டுபிடிச்சுட்டாங்களோ' என்று திருதிருவென விழித்தபடி நிற்க அபியோ" எதுக்கு நீ மட்டும் போறேன்னு சொல்றனு எங்களுக்கு தெரியும்.நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் " என்று அவளை அடக்கினாள்.

அவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்ட, பூஜா " வேணாம்டி. ஆயிரம் தான் இருந்தாலும் அவ எனக்கு வருங்கால நாத்தனார் " என்று அரண்ட குரலில் கூறினாள். அவளை பார்த்து மற்றவர்கள் முறைக்க அவள் வாய் தானாக மூடி கொண்டாள்.

வெகு நேர யோசனைக்கு பிறகு மது “நான் வேணும்னா அவ டிபன் பாக்ஸ காலி பண்ணிடவா” என்றாள். மற்ற நால்வரும் அவளை கேவலமாக பார்க்க, அவளோ “அவ ஒரு நேரம் சாப்பிடாம பட்டினி கிடப்பால்ல அதான் சொன்னேன்” என்றாள். அவள் சொல்வது ஒருவகையில் சரியாக பட சரி என்று தலையாட்டியவர்கள் அடுத்தடுத்து யார் என்ன செய்வது என்று தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர்.

அபி எல்லோரையும் பார்த்து “சரி பிளான் பண்ணிட்டோம், நாளைக்கு அவளை வச்சு செய்யறோம்” என்று கண்ணடித்து கூறிவிட்டு, “சரி, சரி பிரச்சனை ஓவர் வாங்க போலாம் இன்னைக்கு சூர்யா அம்மா நமக்காக கேக் செய்யறேன்னு சொல்லிருக்காங்க” என்று கூறினாள். மற்ற நால்வரும் கூட ஆர்வமாக தலையாட்டி அபியின் கூற்றை ஆமோதித்து தங்களுடைய சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினர். அவர்கள் பள்ளியை விட்டு வெளி வருவதற்கும் ஒரு விலையுயர்ந்த லம்போகினி கார் அவர்கள் அருகில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது .
காரை பார்த்தவுடனே அவர்களுக்கு புரிந்தது அது மது வீட்டு கார் என்றும், அவளது தந்தை தான் அழைத்து செல்ல வந்து இருக்கிறார் என்றும். உடனே பவ்யமாக முகத்தை மாற்றிக் கொண்டு ஐவரும் காரை பார்த்தனர். ஆனால் அதில் இருந்து இறங்கியது என்னவோ மதுவின் அண்ணன் தான்.


மதுவின் தந்தையை எதிர் பார்த்தவர்கள் அவள் அண்ணனை கண்டு சற்று திகைத்தாலும் தங்களை உடனே சரி செய்து கொண்டு முகத்தை அப்பாவிகள் போல் வைத்துக் கொண்டு நின்றனர். அபியோ அப்போதும் வாயை வைத்து கொண்டு சும்மா இராமல் " வந்துட்டாரு மூத்த சின்னத்தம்பி பிரதர் " என்று மற்ற நால்வரின் காதில் கேட்கும் வண்ணம் முணுமுணுக்க, அவளின் முணகலை கேட்ட நால்வரும் பக்கென்று சிரித்துவிட்டனர்..

ஐவரின் சேட்டைகளைப் பற்றி மதுவின் அண்ணனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவர்களை முறைத்துவிட்டு தன் தங்கையின் புறம் பார்வையை திருப்பினார். அண்ணனின் பார்வையிலேயே அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட மதுவும் நல்ல பிள்ளையாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மதுவின் அண்ணனும் அவள் பின்னோடு சென்று காரை ஸ்டார்ட் பண்ணும் சமயம் மது வேகமாக “அண்ணா ஒரு நிமிஷம்” என்று அவனிடம் அனுமதி வேண்டியவள் காரின் கண்ணாடியை கீழே இறக்கி தனது தோழிகளை எட்டிப் பார்த்து “நாளைக்கு மேக்ஸ் டெஸ்டுக்கு படிக்க சூர்யா வீட்டுக்கு போகலாம்னு சொன்னிங்களே போகும்போது என்னையும் கூட்டி போங்க. எனக்கு அந்த பார்ட்ல நிறைய டவுட் இருக்கு” என்று கூறிவிட்டு தனது தோழிகளை பார்த்து கண்ணடித்து தலையை ஆட்டினாள்.

அவளது கூற்று முதலில் புரியாமல் முழித்தவர்கள் பின் தோழியின் கண்ணடிப்பில் புரிந்து கொண்டு “சரி” என்னும் விதமாக தலையை ஆட்டி அவளுக்கு விடை கொடுத்தனர்.

மதுவின் வீட்டு கார் கண்ணில் இருந்து மறையும் வரை அமைதியாக இருந்த ப்ரீத்தி குழப்பமான முகத்துடன் “நாம எப்போ மேக்ஸ் படிக்கப் போறோம்னு சொன்னோம், இவ என்ன உளறிட்டு போறா” என்று புரியாமல் கேட்டாள் . அவள் தலையில் தட்டி பூஜா “லூசு இன்னைக்கு ஈவ்னிங் நாம எல்லோரும் சூர்யா வீட்டிற்கு போறோம்ல, அத தான் சொல்றா., மது அவ வீட்ல போய் கேக் சாப்பிட பிரண்டு வீட்டுக்கு போறேன்னு சொன்னா விடுவாங்களா. அதனால மேக்ஸ் டெஸ்ட்னு பொய் சொல்லிட்டு நம்மகூட வரப்போறா. அதைதான் அண்ணா இருக்கவும் சிம்பாலிக்கா சொல்லிட்டு போறா. போதுமா.. இவளுக்கு விளக்கம் சொல்லியே ஒரு வழி ஆயிடுவேன் போல” என்று மற்ற இருவரையும் பார்த்து சலித்து கொண்டாள்.

பூஜா சொல்வதை கேட்ட ப்ரீத்தி அவளை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்து “நான் மறந்துட்டேன்” என்றாள். அவளை சந்தேகமாக பார்த்த சூர்யா " நீசொல்றது நம்பற மாதிரி இல்லையே. சாப்பிடற விஷயத்தை நீ மறந்துட்ட.. அதை நாங்க நம்பனும் " என்று கிண்டலாக கேட்டாள். அதற்கு ப்ரீத்தியோ "ச்சி..ச்சி …….. நான் சாப்பிட போறதை மறப்பேனா ஆண்ட்டி எனக்கு புடிச்ச பிளேவர் கேக் செய்யறேன்னு சொல்லி இருக்காங்க," என்று சொன்னவள் " நான் மறந்தது மதுவை கூட்டி போகணுங்கறதை " என்று சொன்னாள்.

ப்ரீத்தி சொல்வதை கேட்ட மற்றவர்கள் அவளை முறைத்துவிட்டு பின் இவளை திருத்த முடியாது என்னும் வகையில் தலையை ஆட்டி பெருமூச்சுடன் " இவளைபற்றிதான் தெரியுமே சரி விடுங்க. நல்லவேளை அந்த மூத்த சின்ன தம்பி பிரதர் போன அப்புறம் கேட்டா. இல்லை நாளைக்கு மது வந்து உன்னை வச்சு செஞ்சுருப்பா " என்று கூறினாள். பின் "வாங்க கிளம்பலாம்" என்று சொல்ல, பூஜாவும் " ஆமாம் கிளம்பலாம். எங்க வீட்ல இருக்கற கிழவியை சமாளிச்சுட்டு வர நேரம் ஆகும். அதனால கிளம்பலாம் " என்று சொல்ல மற்றவர்களும் தங்களது வீடுகளை நோக்கி சென்றனர்.

தன் அண்ணனுடன் வீட்டிற்கு வந்த மது நேராக சென்றது டைனிங் அறைக்குதான்.அங்கு மாலை உணவாக அவளது பெரியம்மா செய்து வைத்திருந்த டிபனை சாப்பிட்ட பிறகே தனது அறையை நோக்கி சென்றாள்.

மது தனது அறைக்கு செல்ல அவளின் எதிரில் வந்து நின்றான் அவளின் சின்ன அண்ணன் ஆதர்ஷ். அவனை என்ன என்பது போல் பார்த்த மதுவிடம் “அது எப்புடி ஆண்டாளு வந்த உடனே கிட்சனிற்குதான் போற, இந்த மூஞ்சு கழுவறது, கை, கால் அலம்பரது இது மாதிரி பழக்கம் எல்லாம் உனக்கு இருக்காதா " என்று சலித்தவன் " அந்த ஸ்கூல் பேகையாவது உன்னோட ரூம்ல வச்சுட்டு வந்தியா அதுவும் இல்லை,இதை எல்லாம் செஞ்சிட்டு வர்றதுக்குள்ள யாரும் டேபிள் மேல் இருக்கும் டிபனை எடுத்து போயிடுவாங்களா என்ன " என்று சலிப்பது போல் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

அண்ணனின் பேச்சை கேட்ட மதுவோ “டேய் என்னை கெட்ட வார்த்தை சொல்லி கூட கூப்பிடு. ஆனா ஆண்டாளுனு இன்னொரு தடவை கூப்பிட்ட நீ சட்னிதான்” என்று முகம் சிவக்க பல்லை கடித்து கொண்டு சொல்ல அவளை கண்டு கொள்ளாத அவளது அண்ணன் அவளை வெறுப்பேற்றும் பொருட்டு “உன் பேர் அதுதானே ஆண்டாளு…. ஆண்டாளு… ஆண்டாளு” என்று சொல்லி கொண்டே அவளது ஜடையை பிடித்து இழுத்துவிட்டு ஓட அவனை துரத்தி கொண்டு ஓடினாள் மது.

“டேய் அண்ணா ஒழுங்கா நில்லுடா இல்லை நாளைக்கு உன்னோட சாப்பாட்டை நான் சாப்பிட்டுடுவேன்” என்று கத்தி கொண்டே வீட்டை சுற்றி ஓடும் அண்ணனை துரத்த ஆரம்பித்தாள்.

மது ஓடுவதை பார்த்த அவளது அம்மாவும், பெரியம்மாவும் " ஆண்டாளு பார்த்து மெதுவா போமா, டேய் ஏன்டா குழந்தைய ஓட விடற " என்று சொல்ல வாயில் கை வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான் ஆதர்ஷ்.

“எது அவ குழந்தையா குரங்கு குட்டிய போய் குழந்தைனு சொல்றீங்க. அவ பண்ற சேட்டை எல்லாம் ஸ்கூல்ல போய் கேளுங்க வண்டி வண்டியா சொல்லுவாங்க. இதுதான் இப்புடி இருக்குன்னா இது கூட சேர்ந்த அரை டிக்கெட்டுங்க அதுக்கு மேல. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டிசைன். எப்புடிதான் இப்புடி கும்பல் சேர்ந்ததுங்களோ தெரியல” என்று சொல்ல அவனது அம்மாவோ “போடா அரட்டை உனக்கு வேற வேலை இல்லை, எப்போ பாரு அவகிட்ட வம்பிழுத்துக்கிட்டே இருக்க, பாவம் தங்கமே களைச்சு போய் வந்துருக்கு. இதுல அவள நீ வேற ஓட விடுற. புள்ள சாப்பிட்டதெல்லாம் இதுலையே செரிச்சுருக்கும் " என்று அங்கலாய்த்தவர் மதுவை பார்த்து "ஆண்டாளு நீ உன்னோட ரூம்க்கு போமா " என்றார்.

பெரியன்னையின் பேச்சை கேட்ட மது முகத்தை சோகமாக மாற்றி கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

என்னடா ஆளாளுக்கு ஆண்டாளுனு சொல்றாங்கனு பாக்குறீங்களா அம்மணி பேரு ஆண்டாள் அழகு நாச்சியார். அவங்க பாட்டியோட பேரு. எல்லோரும் வீட்ல ஆண்டாளுன்னு தான் கூப்பிடுவாங்க. ஆனா மேடம்க்கு அந்த பேர் பிடிக்காது. அதனாலேயே ஸ்கூல் சேர்க்கும்போதே மதுவந்தினுதான் பேர் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அதனாலேயே ஸ்கூலில் அந்த பேர்.பேரை மாற்றினாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண்டாளு என்று கூப்பிடுவதை மட்டும் நிறுத்த முடியவில்லை. இவளும் சொல்லி சொல்லி பார்த்து சலித்து போய்விட்டாள். அதுவும் அவளது கடைசி அண்ணன் ஆதர்ஷ் அவளை வம்பிழுக்க என்றே ஆண்டாள் என்று கூப்பிடுவான். இதுதான் மது கன்னத்தில் கை வைத்து அமர்வதற்கான காரணம்.

" மதுவந்தினு கூப்பிடுங்க பெரியம்மா இல்லனா மதுனாவது கூப்பிடுங்க. ஆண்டாளுன்னு கூப்பிடாதிங்க " என்று பாவமாக கூற, அங்கு சரியாக ஆஜர் ஆனான் அவளது அண்ணன் ஆதர்ஷ். " ஆமாம் அம்மா மந்தினு கூப்பிடுங்க " என்று சொல்ல மது பல்லை கடித்து கொண்டு " டேய் அண்ணா " என்று கத்த, " மீ எஸ்கேப் " என்று ஓடி இருந்தான் அவன். இவர்களின் வம்பிழுக்கும் படலம் தினமும் நடக்கும் ஒன்று என்பதால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் மதுவை பார்த்து " போடா உன்னோட ரூம்க்கு போ " என்று அவளது அறைக்கு போக சொல்லிவிட்டு அவர் கிச்சனை நோக்கி சென்றுவிட்டார்.

மதுவும் தனது அண்ணனை பழிவாங்க தனக்குள் ஒரு திட்டம் தீட்டி கொண்டே அறைக்கு சென்று ரெப்ரெஷ் செய்து விட்டு தனது அப்பத்தாவை பார்க்க சென்றாள்.

மதுவை கண்டவுடன் அவளது அப்பத்தவோ " வா ராசாத்தி ரொம்பக் களைச்சு போய் தெரிகிற ஏதாவது சாப்பிட்டாயா " என்று வாஞ்சையாக கேட்டார். இருக்காதா பின்னே மூன்று தலைமுறைக்கு பின் அவர்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் வாரிசு அல்லவா அதனால் கவனிப்பும் அதிகம்தான்.

மதுவும் தன் அப்பத்தாவின் பாசத்தை புரிந்து கொண்டவள் அவர் மடியில் படுத்து கொண்டு " ஆமாம் அப்பத்தா ரொம்ப பசிச்சுது அதான் கொஞ்சமா சாப்பிட்டேன் " என்று செல்லம் கொஞ்சி கொண்டே சொன்னாள்.

பேத்தியின் தலையை மென்மையாக தடவி கொடுத்தவாரே “ஆமா உன்னோட பிரண்ட் வீட்டுக்கு போகவில்லையா.இன்னைக்கு என்ன கதை சொல்லி விட்டுப் போகப் போற” என்று கேட்க அவளோ "அட ஆமாயில்ல இந்த ஆதர்ஷ் அண்ணா பண்ண வேலையால அதை மறந்துட்டேனே" என்று தன் தலையில் தட்டி கொண்டவள், “அப்பத்தா இன்னைக்கு நம்ம சூர்யா அம்மா கேக் செஞ்சுதரேன் வாங்கணு சொல்லியிருக்காங்க. எல்லோரும் போகலாம்னு பிளான் பண்ணினோம்.நானும் போகணும் எப்படியாவது வீட்டில சமாளிச்சுகோ” என்று அவர் தாடையை பிடித்து ஆட்டி கொண்டே முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டாள்.

அப்பத்தாவோ “இது என்ன எனக்கு புதுசா எப்பவும் பண்றது தானே நான் பார்த்துகிறேன் நீ கவலைப்படாம போ” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அங்கு பிரசன்னமானார் மதுவின் பெரியம்மா வள்ளி.

மதுவின் பேச்சை கேட்டு கொண்டே வந்தவர் “எங்க போறதுக்கு பத்தி இப்ப பேசிக்கிட்டு இருக்கிங்க" என்று கேட்க, அவளோ “அது பெரியம்மா" என்று இழுத்தவள் " இன்னைக்கு மேக்ஸ் ரிவிஷன் பண்ண நம்ம கேகே" என்று சொன்னவள், பின் தன் நாக்கை கடித்துக்கொண்டு "நம்ம சூர்யா வீட்டுக்கு போலாம்னு இருக்கேன் பெரியம்மா” என்று கூற அவரோ “ஏன் நம்ம வீட்ல இருந்து படிச்சா ஆகாதா” என்று கேட்டார்.

அவரை இடையிட்ட அவளது அப்பத்தா “அப்படியே இங்க எல்லாம் கலெக்டருக்கு படிச்சுட்டிங்க உங்ககிட்ட சந்தேகம் வந்தா கேட்டு படிக்கறதுக்கு. நம்ம வீட்டு பொம்பளைங்க யாரும் பத்தாங்கிளாஸ் கூட தாண்டல. அந்த புள்ளையோட அம்மா நல்லா படிச்சவங்க. அங்க போய் தான் படிச்சுட்டு வரட்டுமே. தெரிஞ்ச வீடு நல்ல குடும்பம் உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று தனது மருமகளை பார்த்து கேட்க அவரும் மாமியாருக்கு அடங்கிய மருமகளாக " சரிமா பார்த்து போயிட்டு வா " என்று கூறி அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார்.

வள்ளி அந்த பக்கம் சென்றதும் மது தனது அப்பத்தாவை கட்டிப் பிடித்து முத்தமிட்டவள் “தேங்க்ஸ் அப்பத்தா” என்று கூறிவிட்டு தனது தோழியின் இல்லம் நோக்கி சென்றாள்.

அங்கு பள்ளியில் இருந்து கிளம்பிய நால்வரில் முதலில் இருப்பது பூஜா வீடுதான்.அவள் தெருவிலேயே கடைசியில் தான் சூர்யா வீடும் இருக்கிறது. இவர்கள் இருக்கும் தெருவின் அடுத்த தெருவில்தான் அபி, ப்ரீத்தி வீடு.
ஒவ்வொருவராய் பிரிந்து அவர்கள் இல்லத்திற்கு செல்வர்.இன்றும் அதுபோல் முதலில் பூஜா மற்றவர்களிடம் விடை பெற்றுக்கொள்ள மற்றவர்களும் அவரவர் இல்லம் நோக்கி சென்றனர்.


தனது வீட்டிற்குள் நுழைந்த பூஜா முன்னே அமர்ந்திருந்த தனது அப்பத்தாவை கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கி செல்ல முனைய அவரோ பேத்தி தன்னை கண்டு கொள்ளாமல் செல்லும் கடுப்பில் திட்ட ஆரம்பித்து விட்டார். “அடியே இதுதான் நீ ஸ்கூல் விட்டு வர நேரமா” என்று கேட்க அவளோ “இங்க பாரு கிழவி ஏதோ எங்க அப்பாவ பெத்த ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன நா சும்மா விடறேன் இல்லை அவ்ளோதான் சொல்லிட்டேன்.என்கிட்ட சும்மா வம்பு இழுத்துக்கிட்டு இருக்காத” என்று அவரிடம் கோபமாக கத்தினாள். அவளை ஒரு பொருட்டாக கூட மதியாத அவளது அப்பத்தவோ “ உன் னஅப்பனை நான்தான் பெத்தேன்னு தெரியுதில்ல அதுக்கான மரியாதையை என்னைக்காவது நீ கொடுத்திருக்கியா” என்று திரும்ப கேட்டார். அதற்கு அவளோ “நீ மரியாதை கொடுக்கிற மாதிரி என்னைக்காவது நடந்து இருக்கியா” என்று அவரையே திரும்பக் கேட்டாள்.

பேத்தியின் பேச்சை கேட்டு முகவாயை தோள்பட்டையில் இடித்து கொண்டவர் "அம்மணிக்கு மரியாதையா நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்கன்னா பெரிய மனுஷி சொல்றத கேட்டு நானும் அப்படியே நடந்துப்பேன்” என்று நக்கலாக கூறினார்.

அப்பத்தாவின் நக்கலில் கடுப்பான பூஜாவும் “எங்க அப்பா எவ்வளவு பெரிய கம்பெனியோட எம்டி. அவரோட அம்மா மாதிரியா நீ நடந்துக்கிற. ஊர்வம்பு பேசுறது, வீட்டிற்கு வந்தவங்க கிட்ட வம்பிழுக்குறது, போன கதை வந்த கதைன்னு எல்லா கதையும் பேசறது. இப்படித்தான் நீ இருக்க. அது மட்டும் இல்லாம அப்பாவ மத்தவங்ககிட்ட மரியாதை இல்லாம அவன் இவன்னு சொல்லி வேற பேசுற” என்று பொறிந்து தள்ளிவிட்டாள் பூஜா.

பேத்தியின் புலம்பலை எல்லாம் அசால்ட்டாக ஊதி தள்ளிவரோ அவளை ஏற இறங்க பார்த்து “ஊருக்கு ராஜாவானாலும் பெத்தவளுக்கு பிள்ளைதான்டி. அது மாதிரி அவன் எவ்ளோ ஒசரத்துக்கு போனாலும் எனக்கு மகன்தான். அப்புடி இருக்கும்போது நான் எதுக்கு அவனுக்கு மரியாதை கொடுக்கணும். நாலு பேருக்கிட்ட பேசுனாதான் நாலு நல்ல விஷயம் தெரிஞ்சுக்க முடியும். உன்னை மாதிரி அந்த சின்ன செல்லு போனு டப்பாகுள்ள தலைய விட்டுட்டு இருக்க சொல்றியா. ஒன்னோட வயசுல நானு எங்க குடும்பத்துல இருக்க எல்லோருக்கும் சமைச்சு போட்டுட்டு வயலுக்கு வேலைக்கு போவேன். பெரியவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசுனது இல்லை. ஆனா நீ இருக்கியே நீயி.. என்னைக்காவது ஒழுங்கா நடந்திருக்கியா இல்ல பாட்டினு மரியாதை கொடுத்திருக்கிறியா.ஒரு காப்பி தண்ணி போட தெரியுதா உனக்கு. நீயும் உன் கூட சேர்ந்து அந்த நாலு உருப்படாததுகளும் போடுற ஆட்டம் இருக்கே அப்பப்பா” என்று அங்கலாய்க்க பூஜாவோ “இந்த பாரு கிழவி என்னோட பிரெண்ட்ஸ் பத்தி ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பாத்துக்க” என்று கோபமாகக் கூறினாள். அவரோ “ஆமா பிரண்ட்ஸ் ஊரில் இல்லாத பிரண்ட்ஸ்.எப்ப பாரு எல்லாம் சேர்ந்து ஊர் சுத்திக்கிட்டே இருக்கறது. இரு உன் அப்பன்ட்ட இன்னைக்கு நீ பண்றதெல்லாம் சொல்றேன். ஊர்சுத்தி கழுத” என்று கோபமாகக் கூறினார்.

அவளோ “எனக்கு புடிச்சிருக்கு நான் சுத்துறேன் உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு.உன்னை சொல்லி தப்பு இல்லை என் தாத்தாவ சொல்லணும் ஊர்ல கிடைக்காத பொண்ணுனு உன்ன போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாரு பார்த்தியா.அவர சொல்லணும். சரி கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் வந்தாரு அவர் போகும்போது உன்னையும் மேல கூட்டிட்டு போய் இருக்க கூடாது இப்படி என்னை படுத்தி எடுக்கவே உன்னை விட்டுட்டு போய் என்ன கஷ்டப்பட வச்சுட்டாரு” என்று தலையில் அடித்துக் கொள்ள அவரும் “அப்ப நீ என்னை மேல போக சொல்லி மறைமுகமா சொல்றியா” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

பூஜாவோ அவளது அப்பத்தாவை நக்கலாக பார்த்து கொண்டு “இதுக்கு மேல நேரடியா சொல்லவே முடியாது உன்னை சீக்கிரம் மேல தான் போக சொல்றேன் சீக்கிரம் போ” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.

வண்ணங்கள் தொடரும்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top