வண்ணங்களின் வசந்தம் -10

Advertisement

சுதிஷா

Well-Known Member
IMG-20201024-WA0022.jpg

அத்தியாயம்- 10

இன்ஜினியரிங் காலேஜில் முதலாம் ஆண்டு வகுப்பு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் மூவரும் விழித்து கொண்டு நிற்க. பூஜாதான் முதலில் “நம்ம யார்கிட்டயாவது கேட்கலாமா” என்று கேட்டாள். ஆனால் ப்ரீத்தியோ “நோ… நோ…. அடுத்தவங்க கிட்ட போய் வழி கேட்டா நம்ம பிரஷ்டீஜ் என்ன ஆகறது, நம்மளா தேடி கண்டு பிடிக்கலாம்” என்று கூற அவளை முறைத்துப் பார்த்த பூஜா “ஏன்டா” என்று கேட்க அவளோ “வாடா” என்று கூறியபடி மதுவையும் பூஜாவையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.இவர்கள் மூவரும் ஒவ்வொரு ஃப்ளோராக அவர்கள் வகுப்பை தேட, கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று மாடி ஏறிய பிறகும் அவர்கள் வகுப்பு எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருக்க, பூஜாவிற்கு நா வறண்டு தாகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.இதற்கு மேல் தண்ணீர் குடிக்காமல் நடக்க முடியாது என்ற முடிவிற்கு வந்தவள் தோழிகளை பார்த்து “ரொம்ப தாகமா இருக்குடி” என்று கூற ப்ரீத்தியோ “இரு பார்க்கலாம்” என்று சுற்றி பார்க்க அங்கு ஒரு டேப் இருந்தது.அதை சுட்டிக் காட்டியவள் “வாங்க அங்க போலாம்” என்று கூறியபடி இருவரையும் அழைத்துச் செல்ல, அந்த டேப்பில் காற்றைத் தவிர தண்ணீர் ஒரு சொட்டுக் கூட வரவில்லை.

மூவரும் தலையில் கை வைத்தபடி நிற்க அங்கு வந்தார் ஒரு அட்டெண்டர். இவர்கள் மூவரையும் கண்டவர் “என்னமா என்ன வேணும்” என்று கேட்க, பூஜா “சார் குடிக்க தண்ணி வேணும் இந்த பைப்ல தண்ணி வரல” என்று கூற, அவரோ “தண்ணி இங்க வரலமா. பைப் ரிப்பேர் கீழே ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல வரும் அங்க போய் குடிங்க” என்று கூற, பூஜா “தேங்க்ஸ் சார்” என்றாள்.

மது அவரிடம் “சார் இங்க ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் எங்க இருக்கு” என்று கேட்க, மதுவை முறைத்த ப்ரீத்தி “நம்மலே பார்த்துக்கலாம்” என்று மெல்லிய குரலில் கூறினாள். ஆனால் பூஜாவோ “நீ கொஞ்சம் வாய மூடு” என்று முணுமுணுத்து விட்டு, அந்த அட்டெண்டர் முகத்தையே கேள்வியாக பார்த்து கொண்டிருக்க, அவரோ “அது கிரவுண்ட் ப்ளோரில் இருக்கு, நீங்க பாக்கலையா” என்று கேட்டார்.

அவர் கூறியதை கேட்டு இருவரும் அதிர்ந்து, அவருக்கு “நன்றி” கூறி விட்டு, அவர் அந்த பக்கம் சென்றதும், இருவரும் “ஏன்டி கீழயே கேட்கலாம்னு சொன்னதுக்கு, பிரெஸ்டிஜ் அது இதுனு சொல்லி வீணா மூணு ஃப்ளோர் ஏற விட்டுட்டியேடி கிராதகி,என்று ப்ரீத்தியை குனிய வைத்து குத்தினர். பின் கிரவுண்ட் ஃப்ளோருக்கு வரும் வழி முழுவதும் ப்ரீத்தியை வசை பாடிக் கொண்டே வந்தனர்.

ப்ரீத்தி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “நான் என்ன தெரிஞ்சா பண்ணுனேன்” என்றவள் அத்தோடு நில்லாமல் “மூணு மாடி தானேடி ஏறுனீங்க அதுக்கு இப்படி கோபப்பட்டா எப்படி” என்று வாய் விட்டாள்.

பூஜா கடுப்பான இருவரும் சேர்ந்தார் போல் “அடிங்க நாயே” என்று கூறியபடி ப்ரீத்தியை துரத்த அவளோ “ஐயோ காப்பாத்துங்க, காப்பாத்துங்க…” என்றபடி ஓட ஆரம்பித்தாள்.

இருவரும் துரத்திய படியே ஓடிக்கொண்டிருக்க அப்பொழுது எதிரே கூட்டமாக வந்தனர் அர்ஜுனும், அவனது நண்பர்கள்.அவர்களை கண்டு கொண்ட பூஜா “’ரகு அண்ணா அவளை புடிங்க” என்று கூற, அவர்களோ இவங்க மூணு பேரா என்று அதிர்ந்து போய் பார்த்தனர்.அவர்கள் திரு திருவென விழித்தபடி நிற்பதை கண்ட பூஜா “லவ் யூ சொல்ல சொன்ன அண்ணா சீக்கிரம் அவளை பிடிங்க” என்று கூற, அப்பொழுதும் அதிர்ச்சி மாறாமல் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவர்களை இடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் ப்ரீத்தி.

தோழி ஓடிவிட்டதை கண்ட பூஜா வேகமாக அவர்கள் அருகில் வந்து “ஐ லவ் யூ சொல்லுனு சொல்ல தெரியுது பிடிக்க சொன்னா பிடிக்க தெரியாதா” என்று கூறியவள் அர்ஜுனிடம் திரும்பி “நீ தான் வேலைக்கு ஆக மாட்டேன்னு பார்த்தா, உன் கூட இருக்கிறவங்களும் அப்படித்தான் இருக்காங்க” என்று கூறியபடி ப்ரீத்தியை துரத்திக் கொண்டு செல்ல அப்பொழுதுதான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட அர்ஜுனின் நண்பர்கள் அர்ஜுனை முறைத்துப் பார்க்க அவனோ “மீ எஸ்கேப்” என்று கூறியபடி அங்கிருந்து ஓடிவிட்டான்.

அர்ஜுனை ஓடிவந்து பிடித்த அவனது நண்பர்கள், அவனை சுற்றி நின்றபடி “உண்மைய சொல்லு, உனக்கு அந்த கும்பலை தெரியுமா? தெரியாதா?” என்று கேட்க அவனும் விஷமமாக சிரித்து “தெரியும்” என்று கூறினான்..
“அடப்பாவி அப்புறம் ஏண்டா, அதுங்ககிட்ட எங்கள மொக்கை வாங்க வச்ச” என்று கேட்க, அவனோ “சும்மா ஒரு என்டர்டைன்மென்ட்” என்று இழுக்க அவன் தோழர்களோ அவனை முறைத்து “ஏது அவங்க நமக்கு எண்டர்டைன்மெண்ட்டா அவங்களுக்குதான் நாம எண்டர்டைன்மெண்ட் ஆகிருக்கோம், சீனியர்ங்கர மரியாதை போச்சு அவங்களால நமக்கு” என்று புலம்பியவன் அர்ஜுனை பார்த்து “பிரெண்ட்ஸ்னு கூட பார்க்காம நீ இப்படி எங்களுக்கு துரோகம் பண்ணி இருக்க கூடாது” என்று வழக்கம்போல் ரகு கூற அர்ஜுனோ புன்னகைத்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

நண்பனின் சிரிப்பை யோசனையாக பார்த்த கோகுல் “ஆமா அவங்கள உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அர்ஜுனோ “அவங்க அஞ்சு பேரும் என்னுடைய ஸ்கூல் ஜூனியர்ஸ்” என்று கூற ரகுவோ சந்தேகமாக நண்பனை பார்த்து “ஜூனியர்ஸ் மட்டும்தானா” என்று கேட்க அர்ஜுன் புன்னகை முகம் மாறாமல் “ஜூனியர்ஸ் மட்டும்தான்” என்று கூறியபடி நகர்ந்தான்.

ரகுவோ நண்பர்களுடன் சேர்ந்து சிரித்தவன் “இவன் நம்ம காலேஜ்ல எந்த பொண்ணுங்க கூடவும் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டு போகும் போதே சந்தேகப்பட்டு இருக்கணும் மச்சான், ஸ்கூல்லையே ஒரு பொண்ண உஷார் பண்ணிட்டு தான் வந்து இருக்கான்” என்று சொல்ல, அவன் சொல்வது காதில் விழுந்தாலும் கேட்காத மாதிரி முன்னே நடந்து சென்றான்.

ப்ரீத்தியை துரத்திக்கொண்டு வந்தவர்களோ வகுப்பிற்கு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து அவளை முறைத்துக்கொண்டே “உன்ன அப்புறம் பார்த்துக்குறோம் முதல்ல கிளாசுக்கு போகலாம் வா” என்று கூறியபடி தங்களது வகுப்பை தேடி அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அவர்களின் பேராசிரியர் வந்துவிட, வந்த முதல் நாள் என்று கூட பாராமல் அவர் வகுப்பை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ப்ரீத்திக்கு அவர் ஏதோ புரியாத மொழி பேசுவது போலவே கண்ணை கட்ட இதற்கு மேல் முடியாது என்னும் பாவனையில் அருகில் இருந்த மதுவை திரும்பிப் பார்த்தாள்.அவளோ அவர்களது பேராசிரியர் சொல்வதை கேட்டு பொறுப்பாக எழுதி கொண்டு இருந்தாள். இவளை கண்டு கொள்ளாமல் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.

மது எழுதுவதை பார்த்த ப்ரீத்தி நல்லவேலை இவ எழுதறா நம்ம இவளைப் பார்த்து காப்பி அடிக்கலாம் என்று நினைத்து கொண்டு எழுதுவதை எட்டி பார்க்க, அவளோ வெறும் கையில் பேனா மூடியையே கழட்டாமல் எழுதுவது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தாள். அதைக் கண்ட ப்ரீத்தி “என்னடி இது பித்தலாட்டமா இருக்கு” என்று கேட்க அவளோ பின்ன என்னடி நம்ம எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதறோம் அதுக்காகவாது கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாம், அவர்பாட்டுக்கு ப்ரொஜெக்டர்ல ஸ்லைட மாத்தி போட்டுகிட்டே இருக்குறாரு, எழுதுறதா, வேண்டாமா என்று நொந்து கொள்ள ப்ரீத்தியும் “ஆமாண்டி இவங்களையும் ஸ்கூல்ல போர்ட்ல எழுதற மாதிரி, எழுத விட்டிருந்தா சரியா இருந்திருக்கும். சரி விடு அது தான் நம்ம பக்கத்துல ஒரு அடிமை இருக்குதே, அவ எழுதுவா நம்ம அப்புறமே அவளைப் பார்த்து காப்பி அடிக்கலாம்” என்று கூற பூஜா அவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தாள் மதுவோ “எங்களப் பார்த்தது போதும், அங்க யாரு பெத்த புள்ளையோ ரொம்ப நேரமா தனியா பேசுது அத நீயாவது கவனிச்சு சீக்கிரம் எழுது உன்ன பார்த்து எழுதலாம்னுதான் நாங்க வெயிட்டிங்ல இருக்கோம். வேடிக்கை பார்க்காம டக்கு டக்குனு எழுது”என்று திட்ட பூஜாவோ தலையில் அடித்துக்கொண்டு “உங்க கூட வந்ததற்கு அவங்க ரெண்டு பேர் கூடவாவது போயிருக்கலாம், எல்லாம் என் நேரம்” என்று கூறியபடியே தனது நோட்ஸ்ஸை எழுத ஆரம்பித்தாள். அப்படியே அவர்களின் அன்றைய நாள் நிறைவுபெற அனைவரும் தங்கள் வகுப்பை விட்டு வெளியில் வந்தனர்.
மூவரும் தாங்கள் வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வர அங்கே ஏற்கனவே அபி, சூர்யா இருவரும் அவர்களுக்காக காத்திருந்தனர்.

அபி முதல் முறை வகுப்பு நேரத்தில் பிரிந்து இருந்த தோழிகளை பார்த்தவள் “ஹாய் இன்னைக்கு கிளாஸ் எப்புடி போச்சு” என்று ஆர்வமாக கேட்க, ப்ரீத்தி மது இருவரும் “அந்த கொடுமைய ஏன் கேக்கற, ஏதோ போச்சு” என்று சுரத்தே இல்லாத குரலில் சொன்னவர்கள் பின் “ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட்டு போகலாம்” என்றனர் கோரசாக.
அபியோ தலையில் அடித்து கொண்டவள் “சரி அங்க எதுதாப்புல ஒரு பேக்கரி இருக்கு அங்க போகலாமா” என்று கேட்க, இருவரும் வேகமாக “சரி” என்று கூறி தலையாட்டி தங்களது வண்டியை எடுக்க சென்றனர். அப்போது மது “ஹேய் இருங்கடி நான் டிரைவர் அண்ணாக்கு போன் பண்ணி, வர பத்து நிமிஷம் லேட் ஆகும்னு, சொல்லிட்டு வறேன், இல்லனா என்ன காணம்னு பயப்படுவரு” என்று கூற மற்றவர்களும் சரி என்று கூறியபடி, கல்லூரியில் இருந்து வெளியில் வந்து ரோட்டை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்பொழுது அவர்கள் பின் பக்கம் இருந்து “ஹேய் இங்க வாங்க” என்ற குரல் வர, அனைவருமே ஒரு சேர “எவன்டா அவன்” என்பதுபோல் திரும்பிப் பார்க்க அங்கு அர்ஜுன் மற்றும் அவனது நண்பர்கள் குழு இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.

பூஜா அர்ஜுனை சைட் அடித்த படியே “இதோ வரேன்” என்று முன்னே செல்ல அவள் கையைப் பிடித்து தடுத்த சூர்யா “அடியே நீ கொஞ்சம் அடங்கு” என்று கூற, அபியோ அவளை முறைத்து கொண்டே “உனக்கு என்ன அவார்டா கொடுக்கறாங்க, வேகமா முன்னாடி போற காலையில் நம்ம பண்ணதுக்கு ஏதாவது செய்யப் போறாங்க” என்றாள், பூஜாவோ “அதெல்லாம் எதுவும் ஆகாது, பயப்படாம வாங்க நான் இருக்கேன்” என்றாள் கெத்தாக.

ப்ரீத்தி, மது இருவரும் அவளை முறைத்துப் பார்த்து “நீ இருப்ப நாங்க இருப்போமா” என்று அவர்களுக்குள் முணுமுணுத்து கொண்டு இருக்க அதற்குள் கோகுலோ “அங்க என்ன பேச்சு இங்க வாங்க” என்றான்.

“இவனுங்களுக்கு வேற வேலை இல்ல போல” என்று புலம்பி கொண்டே அவர்கள் அருகில் அனைவரும் செல்ல, சூர்யா, அபி இருவரும் பின்னாடி தனியாக ஒதுங்கி நின்று கொண்டனர். அவர்களை பார்த்த ரகு “உங்களுக்கு தனியா வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கனுமா” என்று கேட்க அவர்களோ “நாங்க மெடிசன்” என்றனர். “மெடிசனா இருந்தா என்ன? எல்லாம் ஒரே மேனேஜ்மெண்ட்தானே அப்போ தப்பு இல்ல இங்க வாங்க” என்று கூற அபி சூர்யா காதில் “ஹப்பாடா காலைல இருந்து எவனும் நம்ம ராகிங் பண்ணல, இந்த வெண்ணைங்களாவது கூப்டுதுங்களே வா சுருதி…. ச்சி… .ச்சி சூர்யா போலாம்” என்று சொல்ல, சூர்யாவோ “காலைல அசிங்கபட்டது பத்தலனு, இப்போ வான்டடா கூப்டு அசிங்க பட போறானுங்க போல இன்னைக்கு என்டெர்டைன்மெண்ட் இன்னும் இருக்கு வாடி” என்று தங்களுக்குள் பேசி கொண்டே தோழிகளுடன் நிற்க சென்றனர்.

அப்பொழுது அவர்கள் அருகில் “எனி ப்ராப்ளம்” என்று ஒரு குரல் கேட்க, அபியும், சூர்யாவும் எங்கேயோ கேட்ட குரல் என்று திரும்ப, அங்கே சந்தோஷ் மற்றும் ஆகாஷ் இருவரும் நின்று கொண்டு இருந்தனர். அதுவரை அர்ஜுனை பார்த்துகொண்டிருந்த பூஜா புதிதாக அங்கு வந்த இருவரையும் பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்தாள்.

சூர்யாவோ பூஜாவை கண்டு கொண்டவள் “அபி அங்க பாரு பூஜாவ இவங்க ரெண்டு பேரையும் பாத்து இவ விடற ஜொல்லுல டிரஸ் நெனைய போகுது மேல தூக்கிக்கோடி” என்று கிண்டலாக அவள் காதில் கூற, அபியோ நக்கலான குரலில் “பூஜாவ பாத்தியே அவளுக்கு பின்னாடி இருக்க அர்ஜுனை முகத்தில் பாப் கார்ன் வெடிக்கிதே அதை பார்த்தியா” என்று கேட்டபடி சிரிக்க சூர்யாவும் அப்போதுதான் அர்ஜுனை திரும்பி பார்த்தவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.அபி சொல்வது போல் அவன் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.
ஆம் பூஜா தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்து இருந்தவன், கண்டும் காணாமல் அவளின் பார்வையை மனதில் ரசித்து கொண்டு இருக்க, அவளோ புதிதாக இரண்டு பேர் வந்தவுடன் அவனை மறந்து விட்டு வந்த இருவரையும் சைட் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டு வந்தது.அவனது பொறாமை முகத்தில் அப்பட்டமாக தெரிய அதை பார்த்துவிட்டுதான் சூர்யா, அபி சிரித்தனர்.

பூஜா அர்ஜுனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், அவர்களையே சைட் அடித்து கொண்டிருப்பதை கண்ட அர்ஜுனுக்கு கோபம் எல்லையை கடக்க தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், அருகில் இருந்த ரகுவரன் கால்களை ஓங்கி மிதித்தான். அவனோ வலியில் “ஆ………டேய் அர்ஜூ ஏன்டா என் காலை மிதிச்ச” என்று கேட்க , இந்த கலவரம் எதையும் கண்டு கொள்ளாதவன் பூஜாவையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்.

அங்கு அவ்வளவு நடந்த பிறகும் சந்தோஷ் தனது பதிலுக்காக காத்துக் கொண்டிருப்பதை கண்ட அபி, “சீனியர்” என்று கூப்பிட அவனோ “சீனியர் வேண்டாம் சந்தோஷ் கூப்பிடு” என்று சொல்ல, அபியோ அவர்களை ஆராய்ச்சியாக பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்த சந்தோஷ் “பிரண்ட்ஸ்” என்று கையை நீட்ட அதற்குள் அங்கு வேகமாக ஓடி வந்த பூஜா அவன் கையை பிடித்து போர் அடிப்பது போல் ஆட்டி கொண்டே “ஹாய் ஐ அம் பூஜா” என்றாள்.

சந்தோஷோ பூஜாவை “யார்” என்பது போல் பார்த்து கொண்டிருக்க, அபி அவனிடம் “இவங்க எல்லாம் என்னோட பிரெண்ட்ஸ், நாங்க எல்லாம் ஒரே டீம்” என்றாள்.

அப்பொழுதும் சந்தோஷின் பார்வை பூஜாவை அளவிட, அவளும் அவனை பார்த்து சிரித்தபடியே “என்கிட்ட பிரண்டானாலே அவங்களும் உங்களுக்கு பிரண்டான மாதிரிதான்”என்று கூற, அபி மற்றும் சூர்யா இருவரும் “அட அல்ப” என்பது போல் பார்த்து வைத்தனர்.

சந்தோஷ் அருகில் நின்ற ஆகாஷோ சூர்யாவை தனது பார்வையால் விழுங்கி கொண்டிருக்க, ஆகாஷின் பார்வையை தூரத்தில் இருந்தே கண்டு கொண்ட ஒரு ஜோடி கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

சந்தோஷ் அபியிடம் திரும்பியவன் மீண்டும் “எனி ஹெல்ப்” என்று கேட்க, அவளோ “இல்ல சும்மாதான் பேசிட்டு இருந்தோம், எந்த ப்ராப்ளமும் இல்லை” என்று கூறினாள்.அவள் சொல்வதை தான் நம்பவில்லை என்பது போல் சந்தோஷ் பார்த்திருந்தான்.
ஆனால் அவ்வளவு நேரமும் பூஜா தன்னைக் கண்டு கொள்ளாத கோபத்தில் இருந்த அர்ஜுன் பார்க்கிங் ஏரியாவிற்கு வேகமாக போனவன், தனது பைக்கை உதைத்து இயக்கினான், அப்போதுகூட பூஜா அவன் பக்கம் திரும்பாமல் இருக்க,அவனோ தனது மொத்த கோபத்தையும் பைக்கில் காமித்து உறும விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பைக்கின் உறுமலில் யார் என்று பூஜா திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லாமல் காலி இடமாக இருந்தது.பின் என்ன நினைத்தாளோ அர்ஜுன் நின்ற இடத்தை பார்க்க அது காலியாக இருந்தது.”இவன் அதுக்குள்ள எங்க போனான்” என்று யோசித்தவள் பின் ஒரு தோள் குலுக்கலில் ஒதுக்கி மீண்டும் தன் ஜொள்ளு விடும் பணியை தொடர்ந்தாள்.

அர்ஜுன் கிளம்பவும் அவனது நண்பர்கள் இதுக்கு மேல இவங்க கூட பேசுனா ஏதும் பிரச்சனைதான் வரும், ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு தலையே கிளம்பிடுச்சு நமக்கு என்ன வேலை வாங்கடா நாமும் போகலாம் என்று தங்களுக்குள் பேசி கொண்டவர்கள் அங்கிருந்து சென்றனர் .
அதன்பின் மதுதான் பசி பசி என்று சொல்லி அனைவரையும் அங்கிருந்த பேக்கரிக்கு இழுத்து சென்றாள்.அங்கு ஏழு பேரும் பேசிக்கொண்டே மாலை சிற்றுண்டியை உண்டவர்கள், அந்த பில்லையும் சந்தோஷ் மற்றும் ஆகாஷ் தலையில் கட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

வீட்டிற்கு கோபமாக வந்த அர்ஜுன். வேக எட்டு வைத்து தன் அறைக்கு செல்ல போனவனை தடுத்தது, ஹாலில் அமர்ந்து இருந்த அவனது தாய் வசுந்தராவின் குரல் “என்ன அர்ஜுன் வீட்டுக்கு வர இவ்ளோ நேரமா, காலேஜ் விடற நேரத்த விட அரை மணி நேரம் லேட் ஆயிடுச்சு” என்று முறைத்தபடி கேட்க, அவனோ “அம்மா ஒரு அரை மணி நேரம்தானே லேட் ஆச்சு காலேஜ்ல கொஞ்சம் வேலை இருந்தது அதான் லேட்” என்றான்.”அப்படி என்ன வேலை” என்று மேலும் துருவியவரை பார்த்தவனுக்கு ஏனோ எரிச்சல் மேலோங்கியது.இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டு கண்ணை மூடி திறந்தவன், தாயை பார்த்து “ரகு பேப்பர் பிரசன் பண்ணப் போறான் அதுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன்” என்று கூற அவரோ அதை ஆட்சேபித்தவராக “எல்லாத்துக்கும் நீதான் போகணுமா அவன் பாத்துக்க மாட்டானா. ஏதோ ஊர்ல இல்லாத பிரண்ட்ஸ் மாதிரி, எப்ப பார்த்தாலும் அவங்களுக்கு ஏதாவது பண்ணிட்டே இருக்க, எல்லோரும் உன்னை நல்லா யூஸ் பண்ணிக்கறாங்கனு உனக்கு புரியுதா இல்லையா, அவனுங்க எல்லாம் உன்னோட தயவாள முன்னேறிட்டு இருக்காங்க நீதான் பின்னாடி போக போற, இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் பாத்துக்கோ” என்றார்.

தாயின் கூற்றில் கடுப்பான அர்ஜுன் “அம்மா அவங்க என் ஃப்ரெண்ட்ஸ் இந்த ஹெல்ப் கூட நான் செய்யக்கூடாதா அரை மணி நேரம் தானே லேட் ஆச்சு அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்கியூமெண்ட்ஸ்” என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே அங்கு வந்தனர் அவனது அக்காக்கள் அனிதா மற்றும் வைஜெயந்தி , தாய் மற்றும் தம்பியின் வாக்குவாதத்தை பார்த்துக்கொண்டே வந்தவர்கள் தம்பியிடம் “என்ன தம்பி அம்மாவை எதிர்த்து பேசிகிட்டு இருக்க. நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்னு தானே அவங்க சொல்றாங்க.இதுல என்ன தப்பு,அவன் வேலைய அவனுக்கு பார்த்துக்க தெரியாதா” என்று கேட்க அங்கு வந்த அக்காக்களின் கணவன்மார்களும் “ஆமா அர்ஜுன் அத்தை உன் நல்லதுக்காக தான சொல்றாங்க, ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற” என்று கேட்க அவனுக்கு எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது. பின் இவர்களிடம் பேச்சு கொடுத்து மீள முடியாது என்பதை உணர்ந்து கொண்டவனாக பேச்சை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு “சரி நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு வேகமாக தனது அறைக்குள் வந்தவனுக்கு ஏதோ ஜெயிலில் அடைபட்ட உணர்வு ஏற்பட்டது.

ஒரு பெரு மூச்சுடன் குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து படுக்கையில் படுத்தவனின் கண் முன் பூஜாவின் நினைவு வந்து செல்ல, அதுவரை முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிறு புன்னகை வந்து அமர்ந்தது அவன் இதழில்.


அர்ஜுனின் தந்தை வினாயக் தாய் வசுந்தரா இருவரும் சென்னையில் பிரபலமான வணிக வளாகத்தின் உரிமையாளர்கள். அது மட்டும் இல்லாமல், ஒரு நட்சத்திர விடுதியும் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது.இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் முதலில் அனிதா பின்பு வைஜெயந்தி கடைக்குட்டி அர்ஜுன்.

அர்ஜுனின் தந்தை தொழில்களை கவனித்துக்கொள்ள அவனது தாய் தான் வீட்டு நிர்வாகம், குழந்தைகள் வளர்ப்பு என அனைத்தையும் கவனித்துக்கொள்வார். வசுந்தரா மிகவும் கண்டிப்பானவர் அவரது சொல் பேச்சை தான் அனைவரும் கேட்க வேண்டும். தன்னை மீறி வீட்டில் எதுவும் நடக்கக் கூடாது என்ற அகங்கார எண்ணம் உடையவர். தன் வீட்டில் உள்ள அனைவரையும் அவர் பேச்சுக்கு ஆட்டிவைப்பார்.

அனிதா மற்றும் வைஜெயந்தி இருவரும் திருமணமான பின்பும் தனது தாயின் பேச்சை கேட்டு தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்வார்கள் ஏன் அவர்களது கணவன்மார்கள் கூட நன்றாக மாமியாருக்கு சின்-சக் அடிப்பார்கள். ஆனால் அவரது இந்த அடக்குமுறை பிடிக்காத ஒரே ஆள் அர்ஜுன் மட்டும் தான். அவனுக்கு அந்த வீட்டிற்குள் வந்தாலே மூச்சு முட்டுவது போல் இருக்கும். ஹிட்லர் போல் ரூல் பண்ணுவது அவனுக்கு பிடிக்காது.தாயின் பேச்சை மீறி அவன் ஏதாவது கேட்டாலும் அவனது தந்தை மட்டும் இல்லாமல் அக்காக்களும் அவனைத்தான் பணிந்து போக சொல்வார்களே தவிர அவர்களது தாயை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.

அர்ஜுனும் வேறு வழி இல்லாமல் சலிப்புடனே அங்கிருந்து நகர்ந்து விடுவான். வீட்டிற்கு வந்தால் ஏதோ சிறையில் இருப்பது போன்ற எண்ணம் அவனுக்கு வர பெரும்பாலும் நண்பர்கள் உடனேயே நேரத்தை செலவழிக்க விரும்புவான், ஆனால் அதுவும் அவனது தாய்க்கு பிடிக்காது நண்பர்கள் எல்லாம் வீட்டுக்கு வெளியில் தான் வீட்டிற்குள் நண்பர்கள் யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று அவர் கண்டிப்புடன் கூறியிருக்க, இங்கே நண்பர்களே உலகம் என்று இருக்கும் பூஜாவிற்கு அந்தக் குடும்பம் ஏற்றதாக இருக்குமா????............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top