யாருமிங்கு அனாதையில்லை - 2

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை”
(எழுதியவர் : பொன்.கௌசல்யா)

அத்தியாயம் – 2​

அடுத்த அரை மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரின் பைக், வாயிலில் பெரிய கேட் போடப்பட்டிருந்த ஒரு மாளிகை வீட்டினுள் நுழைந்து, போர்ட்டிகோவில் நின்றது.

பாழடைந்து போய்க் கிடந்த அந்த மாளிகை, சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது, என்பது அதைப் பார்த்ததுமே புரிந்தது ஜோதிக்கு.

‘இது...யாரோட வீடு?” தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

“என்னோட வீடுதான்....தைரியமா வரலாம்!” என்று சொல்லியபடியே படிகளில் தாவிக் குதித்து, வீட்டிற்குள் சென்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

ஒருவித பயம் கலந்த பார்வையுடனேயே அவரைப் பின் தொடர்ந்தாள் ஜோதி.

முன்புற ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த தேக்கு மர ஊஞ்சலில் அமர்ந்திருந்த
அந்தப் பெரியவர் திவாகரைப் பார்த்ததும், “வாப்பா...போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதா?” கேட்டவாறே ஊஞ்சலிலிருந்து இறங்கி, திவாகரிடம் வந்தார்.

வரும் போது அவருடைய பார்வை, திவாகரின் முதுகுக்குப் பின்னால் தெரிந்த ஜோதியின் மீது விழ, கேட்டார். “யாருப்பா இந்தப் பொண்ணு?”

உதட்டைப் பிதுக்கிய திவாகர், “தெரியாது!” என்றார்.

“கல..கல”வெனச் சிரித்த பெரியவர், “என்னப்பா இது கூத்தாயிருக்கு!.....நீதான் உன் கூடவே அழைச்சிட்டு வர்றே?...கேட்டா தெரியாதுங்கறே?...”

“ஆமாம்...உண்மையிலேயே தெரியாதுதான்!”

“ஆஹா....” என்று பெரியவர் வாய் மீது கையை வைத்துச் சொல்ல,

“அப்பா....ரயில் தண்டவாளத்துல தற்கொலை பண்ணிக்கறதுக்காக ஓடிட்டிருந்திச்சு...நாந்தான் காப்பாத்தி...இங்க கூட்டியாந்தேன்!...அது பேரு ஜோதி!...அவ்வளவுதான் தெரியும்!”

நல்லதொரு காரியத்தைச் செய்து விட்டு வந்திருக்கும் தன் மகனை பெருமிதம் பொங்கப் பார்த்த பெரியவர், “யாரும்மா நீ?...ஏம்மா அப்படியொரு பைத்தியக்காரத்தானமா வேலை செய்யத் துணிஞ்சே?”

ஜோதி அமைதியே உருவாய் நின்றாள்.

“ம்மா!... “மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!”ன்னு அப்பர் பெருமானும், “அரிது...அரிது...மானிடராய்ப் பிறப்பது அரிது!”ன்னு ஔவையாரும் பெருமைப் படுத்திப் பாடிய இந்த மானிடப் பிறவி ரொம்ப ரொம்ப மகத்துவமான...மாண்புடைய பிறவிம்மா!...அதை நீ அழிக்க நெனச்சதே பெரிய பாவம்மா!” தன் வயதிற்கேற்ற உபதேசத்தைச் செய்த பெரியவர், ஜோதியின் தோளைத் தொட்டுத் திருப்ப,

தன்னைப் பெற்ற தந்தையிடம் கூடக் கிடைக்கப் பெறாத தூய தந்தையன்பை அந்தப் பெரியவரிடம் கண்ட ஜோதி கண்களில் நீர் வழிய, நெகிழ்ந்து நின்றாள்.

அவள் விழிநீரைக் கண்ட பெரியவர், அனிச்சையாய்த் துடைக்க,

திவாகர் பக்கம் திரும்பிய ஜோதி, “இவர்...உங்க அப்பாவா?” கேட்டாள்.

மேலும், கீழும் தலையை ஆட்டி, “ஆமாம்!” என்றார் திவாகர்.

ஜோதிக்கு அது ஆச்சரியமாயிருந்தது. கிட்டத்தட்ட ஆறடிக்கு மேலான உயரத்தில், ஆஜானுபாகுவாய் “கிண்”ணென்று இருக்கும் இன்ஸ்பெக்டர் திவாகரைப் பெற்ற தந்தை இவரா?...நான்கடி உயரத்திற்கும் குறைவாக, நலிந்து போன தேகத்தோடு, நமீபியா பஞ்சத்தில் அடிபட்ட மனிதரைப் போல் இருக்கும் இவரா திவாகரின் தந்தை?

அப்போது, உள் அறையிலிருந்து வந்த வயதான பெண்மணி, வரும் போதே வாயெல்லாம் பல்லாக வந்தாள். “டேய்...திவா...யாருடா இவங்க?” பார்வையை ஜோதியின் மீது பதித்தபடியே கேட்டாள்.

திவாகர் பதில் சொல்லும் முன், பெரியவர் குறுக்கே புகுந்து, மொத்தத்தையும் “தட..தட”வென ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

கேட்டதும் அப்பெண், “அடிப்பாவி மகளே!...உசுர மாய்ச்சுக்க தண்டவாளத்துக்குப் போயிட்டியா கண்ணூ?...ஏஞ்சாமி...என்ன சாமி உனக்கு அந்த அளவுக்குக் கஷ்டம்?” அந்த யதார்த்தப் பேச்சு ஜோதி மீது பாசத்தையும், பரிவையும், அள்ளிக் கொட்டியது.

அவள் என்ன பேசுவதென்று புரியாதவளாய் திவாகரைப் பார்க்க,

“என்ன பார்க்கறே?...இவங்க யாருன்னுதானே பார்க்கறே?...இவங்கதான் என்னோட அம்மா!” என்றார் திவாகர்.

அதையும் ஜோதியால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “கரு...கரு”வென்ற மேனி நிறத்தில்...பாதி வெள்ளையும் மீதி செம்பட்டையுமாய் இருக்கும் தலை முடியுடன், சேரிப் பகுதியில் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரி போன்ற தோற்றமுடைய இவளா இந்த இன்ஸ்பெக்டரைப் பெற்ற தாய்?”

அப்போது, அந்தப் பெண்மணி ஜோதியை நெருங்கி வந்து, அவள் தோளைத் தொட்டு, “சாப்பிட்டியா கண்ணூ?” என்று அன்போடு கேட்க,

“குபுக்”கென்று அழுதே விட்டாள் ஜோதி.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, அவள் தாயார் உயிரோடு இருந்த காலத்தில், அவள் வாயால் கேட்ட அந்த வார்த்தைகளை...இப்போது...இத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் மறுபடியும் கேட்கிறாள் ஜோதி. “எங்கம்மா போன பிறகு, என்னைப் பார்த்து “சாப்பிட்டியா கண்ணூ?”ன்னு கேட்க எந்த ஜீவனுமே இல்லாம இருந்தேனே...இன்னிக்கு இந்தம்மா கேட்கறாங்களே!” நினக்கவே மனம் இனித்தது.

“ஏன் கண்ணூ...பசிக்குதா?...வாடா கண்ணு...எல்லாம் தயாரா இருக்கு...வந்து வயிறாற சாப்பிடு மொதல்ல!”

ஜோதி அந்த அன்பு அழைப்பை ஏற்று, உணவருந்தச் செல்ல,

“ஒரு நிமிஷம்மா...!” என்று சொல்லி அவளை நிறுத்திய திவாகர், “எங்க வீட்டோட இன்னொரு ஜீவனையும் உனக்கு அறிமுகப்படுத்திடறேன்!” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தந்தையிடம் கேட்டார், “எங்கப்பா கோபி?”

“இங்கதானே விளையாடிட்டிருந்தான்!” என்று அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்துத் தேட,

தன் சூம்பிப் போன கால்களைத் தரையில் மடக்கிக் கொண்டு, உட்கார்ந்த நிலையிலேயே, கைகளால் நடந்து வந்து, திவாகரின் காலடியில் அமர்ந்து, “அண்ணா...நான் இங்கிருக்கேன்!” என்றான் அந்தப் பத்து வயது சிறுவன்.

“அடேய்...இங்கிருக்கியாடா என் ராசுக்குட்டி?” என்றபடி குனிந்து அவனைத் தூக்கிய திவாகர், தன் தோளில் அவனைச் சாய்த்துக் கொண்டு, “இவந்தான் என் தம்பி...கோபி!” என்றார்.

ஜோதியால் இந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இந்த வயோதிகத் தம்பதிகளுக்கு இவ்வளவு சிறிய வயசுல ஒரு குழந்தையா?...நம்பவே முடியலையே!” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள், மெல்ல கோபியின் சூம்பிப் போன கால்களைத் தொட்டுப் பார்த்து விட்டு, “இவன்...இவன்...படிக்கறானா?...ஸ்கூலுக்குப் போறானா?” என்று கேட்டாள்.

திவாகரை முந்திக் கொண்டு பதில் சொன்னான் கோபி, “படிக்கறேன்!...ஆனா ஸ்கூலுக்குப் போறதில்லை!”

குழம்பிப் போன ஜோதி விழித்தாள்.

“ஆமாம்மா...ஸ்கூல்ல இவனைச் சேர்த்துப் பார்த்தோம்...அது ரொம்ப அசௌகரியமா இருந்திச்சு!...அதான் அதை நிறுத்திட்டு...இங்கியே...வீட்டுக்கே ஒரு வாத்தியாரை வரவழைச்சு...படிப்பு சொல்லிக் கொடுத்துட்டிருக்கோம்!” திவாகர் சொல்லச் சொல்ல,

அந்த கோபி தலையாட்டினான்.

“சரி...சரி...பேசியது போதும் மொதல்ல அந்தப் பொண்ணை சாப்பிட விடுடா!” என்று திவாகரின் தாயார் அவரைப் பார்த்துச் சொல்ல,

“ஓ.கே...ஓ.கே!” என்ற திவாகர், ஜோதியைப் பார்த்து, “போம்மா...போயி நல்ல சாப்பிடு!...”என்று சொல்லி விட்டு, தன் தாயார் பக்கம் திரும்பி, “அம்மா...அவளுக்கு முள்ளுல விழுந்து...அங்கங்க சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்கள் இருக்கும் போலிருக்கு!...அதைப் பார்த்து கொஞ்சம் மாருந்து போட்டு விட்டுடு..என்ன?” என்றார்.

“த்சொ!...த்சொ!...அப்படியாம்மா!” என்று அவள் கை, கால்களைப் பார்த்து அங்கலாய்த்த திவாகரின் தாயார், “சித்த நேரம் பொறுத்துக்கம்மா...சாப்பிட்டதும்...சுடு தண்ணி வெச்சு...ஒத்தடம் குடுக்கறேன்!” என்றாள்.

மனித வாழ்க்கையில், உறவுகளுக்குள் சகஜமாக இருக்க வேண்டிய, இது போன்ற உண்மையான அன்புப் பரிமாற்றங்களை இழந்தே வாழ்ந்து வந்து விட்ட ஜோதிக்கு அந்த வீடே ஒரு அன்பு இல்லமாய்ப் பட்டது. “உலகத்தில் உண்மையான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்!” என்கிற எண்ணம் அவள் உள்ளத்தில் துளிர் விட ஆரம்பித்தது.

உணவருந்திய பின், ஜோதியின் சிராய்ப்புக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தபடியே மெல்லக் கேட்டாள் திவாகரின் தாயார், “ஏம்மா...நான் கேட்கறேன்னு கோச்சுக்காதே?...தற்கொலைக்குப் போற அளவுக்கு உனக்கு இந்த வயசுல என்னம்மா பிரச்சினை?”

நிதானமாய்த் தன் தலையைத் தூக்கி, “ம்மா...இந்த வீட்டுக்குள்ளார நுழைஞ்சதிலிருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த சோகங்களையும், அந்த துரோகங்களையும் மரந்து ஒரு புதிய சந்தோஷத்துல கொஞ்சம் கொஞ்சமாய் தேறிட்டிருக்கேன்!...மறுபடியும் அந்த ரணங்களை கிளறி...என்னை அழ வைக்காதீங்கம்மா!” கெஞ்சலாய்ச் சொன்னாள்.

அப்போது, பாய்ந்து வந்த பெரியவர், திவாகரின் தாயாரைப் பார்த்து, “ஏய்...உனக்கு நான் என்ன சொன்னேன்?... “அந்தப் பொண்ணுகிட்ட நாமா எதையும் கேட்க வேண்டாம்..நம்ம மேல நம்பிக்கை வந்ததும்...அவளா சொல்லும் போது சொல்லட்டும்!”ன்னு சொன்னேனல்ல?”

“சரி..சரி...இனி கேட்கல!” என்றாள் திவாகரின் தாயார் சிரித்துக் கொண்டே.
 

Sainandhu

Well-Known Member
பதிவு ,சீரியல் எண்ணை....தலைப்போடு சேர்த்துக் கொடுங்க கௌசல்யா...
எங்களுக்கு படிக்க வசதியா இருக்கும....
 

தரணி

Well-Known Member
அருமை....தனியா தனியா இருக்குற எல்லாரும் சேர்ந்து ஒரு குடும்பமா இருக்காங்களா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top