யாருடன்? யார் நீ?
-செசிலி வியாகப்பன்
-செசிலி வியாகப்பன்
தேடல் 22
நாளை தான் பணிக்கு செல்ல வேண்டும் என மேத்யூ கேட்டிருக்க, காலை 7 மணிக்கு திருமண திருப்பலி.. அது முடிந்ததும் திருமண விருந்து... பின் மணமக்கள் சென்னை பயணம் என திட்டமிடப்பட்டது.
பலபல கனவுகளுடன் உறக்கமும் விழிப்புமாக இரவை கழித்த இருமனங்களும் அதிகாலையிலே விழித்து விட, நண்பர்கள் உறவினர் கேலிகளுக் கிடையே தயாராகினர். கரு நீல சூட்டில் கம்பீரமாக தயாராகி நின்ற சௌரன் மேத்யூ கண்கள் மட்டும் நொடிக்கு ஒரு முறை தன் கையில் இருந்த போனையும் வாசலையும் பார்த்துக் கொண்டு இருந்தது. அவனை அழைத்து செல்ல வந்த ஔிர்மதியின் சகோதரர்களிடம் 'ஒரு நிமிஷம்' என அனுமதி வாங்கிக் கொண்டு சஜனியின் எண்ணிற்கு அழைக்க, அதுவோ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே சஜனி இல்லாமல் தனது நிச்சயம் நடந்ததிலே வருத்ததில் இருந்தவனுக்கு, இன்று தன் திருமணத்திற்கும் சஜனி இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. தன்னை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஔிர்மதியின் உறவுகள். தனக்கென தான் நினைக்கும் ஒரே உறவான சஜனி வராததில் எற்பட்ட கவலையை விழுங்கிக் கொண்டு ஆலயத்தை நோக்கி புறப்பட்டான்.
ஆலய வாசலுக்கு வந்த சேரும் போது சரியாக ஒரு கார் வந்து நிற்க, சஜனியை எதிர்பார்த்து ஆவலோடு பார்க்க வந்ததென்னவோ மானவ் தான். மேத்யூ அருகில் வந்து வாழ்த்தை தெரிவித்து விட்டு,
"ஐ எம் ஆல்சோ வெய்ட்டிங்..." என சஜனிக்காக தானும் காத்திருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்த மர நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்ள, மேத்யூவிற்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
இருவரும் உண்மையாக காதலித்தும் ஏன் இந்த பிரிவு என்பதற்கு மட்டும் அவனுக்கு புரியவில்லை. பிரிவிற்கான காரணம் தெரிந்த ஒருவன் கூற மறுக்க, மற்றவளோ பேச கூட விரும்பவில்லை. பிறகு எப்படி இருவரை சேர்ப்பது.
கண்ணாடி முன் நின்று கண்மை வரைந்து கொண்டிருந்த ஔிர்மதியை பார்த்துக் கொண்டிருந்த மணிபாரதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் மட்டும் மணப்பெண்ணாக இல்லாதிருந்தால் இரண்டு அடிகளையாவது கொடுத்திருப்பாள்.
தன் தோழியின் மனதை தெரிந்த கொள்ள முடியாத இயலாமை ஏற்படுத்திய கோபத்தில் கடுகடுவென அமர்ந்திருக்க, அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி தனது தலை மீது இருந்த கீரிடத்தை சரி செய்த மதி மணியின் முக பாவனையில் சிரித்து விட, அதில் பொங்கி எழுந்த மணி
"சிரி நல்ல சிரிடி... என்ன பாரத்த உனக்கு பைத்திய காரி மாதிரி தெரியுதா. ம்ம்ம் நான் பைத்தியகாரி தான்... கூடவே பழகுனவளுக்கு கல்யாணம் நடக்கலன்னு அவ அம்மா வந்து வருத்தப்பட்டதுல ஏதோ ரெண்டு வார்த்தை பேசிருப்பேன். அதுக்காக வருஷ கணக்காக என் கிட்ட பேசாம இருந்தவ தானா. நீ விலகி போனாலும் புத்தியில்லாம உன் பின்னாடியே வந்தேன் பாரு என்ன சொல்லனும். கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னது குத்தமா? காதலிக்கிறியான்னு கேட்டது பாவமா? இப்போ கூட இந்த கல்யாணம் உனக்கு பிடிச்சு நடக்குதா, இல்ல வேற வழியில்லா ஓகே சொன்னியான்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. ஆனா உனக்கு எல்லாம் சிரிப்பா இருக்குதா." என முகம் சிவந்து கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்க பேசும் மணிபாரதியை கட்டியணைத்த மதி
"சாரிடி தப்பு என் மேல தான்..." என்று மன்னிப்பு கேட்டு தனக்கு சௌரன் மீது இருக்கும் ஈர்ப்பு பற்றி கூறிவிட்டு
"காலேஜ் படிக்கும் போது ஈசியா எடுத்த முடிவில உறுதிய இருக்க முடியல. அதே சமயம் யாரு கிட்டயும் அவர பத்தி பேச முடியல. என் மேல எனக்கிருந்த கோபத்தை உன் மேல காட்டிடேன். எங்க உங்க எல்லார் கூடவும் இருந்தா வாய் விட்டு கதறி அழுதுடுவோமோன்னு பயம். அதான் இவ்வளவு நாள் பேசல. எனக்கு பிடிச்சிருக்கிறதால மட்டும் தான் இந்த கல்யாணம்." என மதியின் தெளிவாக கூறிய பின்னே மணி சமாதானமடைந்தாள்.
ஆலயத்திற்குள் மணமக்கள் பவனியாக வந்து சேர்ந்து சேர அனைவரின் கவனமும் அவர்கள் இருவரின் ஜோடி பொருத்ததின் மீது தான் இருந்தது. ஔிர்மதியும் தன் அருகில் நிற்பவனை ஓரக்கண்ணால் ரகசிய பார்வை பார்க்க, அவன் கவனமோ ஔிர்மதியின் மீது இல்லாமல் அவன் கையிலிருந்த அழைபேசியின் மீது இருந்தது. அதில் யோசனையான ஔிர்மதிக்கு மனது பிசைய ஆரம்பித்து.
திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கப்பட்டு திருத்தந்தை திருமாங்கல்யத்தை ஆசீர்வதிப்பதற்காக கேட்க, அனைவரும் மேத்யூ முகத்தை பார்த்தபடி இருந்தனர். அவனோ மிக பொறுமையாக
"என் சிஸ்டர் கிட்ட இருக்கு..." என்று கூறவும்... சஜனி மேத்யூ அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது. எப்போது வந்தாள்... இவ்வளவு நேரம் எங்கிருந்தாள் என கேள்விகள் கேட்க நினைத்தாலும், இருக்கும் இடம் கருதி தன் கேள்விகளை அடக்கி கொண்டு, தன் அருகில் இருந்த ஔிர்மதி புறம் தன் கவனத்தை திருப்பினான்.
ரோஜா வண்ண பட்டு புடவையில், தலையை அலங்கரித்திருக்கும் கீரிடம் வெள்ளை நிற நெட் என திருமணத்திற்கான பூரண அலங்காரத்துடன் இருப்பவளை இவ்வளவு நேரம் பார்க்காமல் இருந்த தன் கண்களை சபித்தபடி தன்னவளை கண்களால் களவாட முயற்சித்தான்.
இவ்வளவு நேரம் தன்னை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, சஜனி வந்த பிறகு தன்னை பார்ப்பவனின் தலையில் ஒரு கொட்டு வைக்க முடியாத வருத்தத்தில் தன் எதிரே இருந்த பீடத்தை நோக்கி ஔிர்மதி தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். மதியின் முக திருப்புதலில் தன தவறை உணர்ந்தவன்
"இன்னைக்கு கண்டிப்பா இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு அதிக போல." என எண்ணிக் கொண்டு அவள் கவனத்தை தன் புறம் திருப்ப செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தது.
பத்து வயதில் ரத்தினபுரியை விட்டு சென்றவளை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை. யார் இவள்? எப்படி மணமகனுக்கு தங்கை முறை? என ஒருவர் மற்றவரிடம் கேட்க, ஒருவழியாக அவள் திருசெல்வத்தின் மகள் சஜனி என்ற விஷயம் அனைவரையும் சென்றடைந்தது.
அதுவரை மணமக்கள் மீது மட்டும் இருந்த கவனம் சஜனியின் மீதும் திரும்பியது. நீல வண்ண பட்டு புடவையில் வைரங்கள் மின்ன நின்றவளை தங்கள் பார்வையால் ஆராய, அவளோ அதை கண்டு கொள்ளாமல் தன் கைப்பையில் இருந்த திருமாங்கல்யத்தை வெள்ளி தட்டு ஒன்றில் எடுத்து வைத்து திருத்தந்தையிடம் நீட்டினாள். அந்த திருமாங்கல்யத்தின் அழகில் மற்றவற்கள் மயங்காத குறை தான். அந்தளவிற்கு அது தனித்துவமாகவும் அழகாகவும் இருந்தது.
வழக்காக திருமணத்திற்கு அணியும் முறுக்கு சங்கிலியே சற்று புதுமையாக இருக்க, அதன் நடுவில் இருந்த இதய வடிவ மாங்கல்யத்தில் நுன்னிய வேலை பாடுகளுக்கு மத்தியில் பரிசுத்த ஆவியாரின் புறா வடிவம் பொறிக்கப்பட்டு, அதன் அடியில் சிலுவை ஒன்றும் இருந்தது. மாங்கல்யத்தின் இருபுறமும் முத்து மணி ஒன்றும் அதை அடுத்து குண்டு மணி அடுத்ததாக ஒருபுறம் இருந்த காசு போன்ற டாலரில் இரு இதயங்களுக்கு நடுவில் இருவர் பெயரின் முதல் எழுத்தும் மறுபுற டாலரின் நிச்சயத்தின் போது எடுத்த படமும் இருந்து.

அதுவரை மேத்யூ ஔிர்மதியையும், ஔிர்மதி பீடத்தையும் பார்த்துக் கொண்டிருக்க, சஜனி திருந்தந்தையிடம் கொடுத்த திருமாங்கல்யத்தை பார்த்த பின் இருவருக்கும் சஜனியின் தேர்வை பாரட்டாமல் இருக்க முடியவில்லை. இருவரும் நிறைவான புன்னகை ஒன்றை சஜனிக்கு அனுப்பிவிட்டு முகத்தை திருப்ப அதில் மணமக்கள் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று சிறை செய்து உலகத்தை மறக்க செய்தது.
இருவரின் பார்வை பரிமாற்றத்தை புகைப்பட கருவி அழகாக உள் வாங்க அதன் ப்ளாஷ் வெளிச்சத்திலே சுய உணர்வு பெற்றனர்.
இன்பத்திலும்... துன்பத்திலும்... உடல் நலத்திலும்... நோயிலும்... பிரமாணிக்கமாக (உண்மையாக) இருப்பேன் என்று ஒருவர் மற்றவருக்கு வாக்களித்து திருமண உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டனர். அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின் சாட்சியமாக சஜனி கொடுத்த திருமாங்கல்யத்தை மேத்யூ அணிவிக்க, ஔிர்மதி தலை நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த படியே ஏற்றுக் கொண்டாள்.
"எங்க அப்பா ஊருல எல்லாம் சிஸ்டர்ஸ் தான் மேரேஜ்க்கு வெட்டிங் டாலர் வாங்கி தருவாங்கலாம். சோ உன் மேரேஜ்க்கு நான் தான் வெட்டிங் செயின் அண்ட் டாலர் ஸ்பெஷல டிசைன் பண்ணி வாங்கிட்டு வருவேன்." என்று சிறு வயதில் மேத்யூவிடம் கூறியிருந்தாள்.
திருமண திருப்பலி முடியும் வரை சஜனி மணமக்கள் அருகிலிருந்து நகராமல் தான் மேத்யுவிற்கு அளித்த வாக்கினை சஜனி காப்பாற்றினாள். அதே சமயம் மேத்யூவும் சிறு வயதில் சஜனி தனக்களித்த வாக்கை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி என்றாலும், தன் அழைப்பை ஏற்காததில் கோபமும் இருந்தது.
ஆலயத்திற்குள் நுழைந்ததுமே மானவ் கண்கள் சஜனியை கண்டுபிடித்து விட்டது. அதே போன்று சஜனியும் மானவ் வரும் போதே பார்த்து விட்டாள். ஆனால் தங்கள் நிலையிலிருந்து இறங்கி சென்று பேச இருவரின் ஈகோவும் அனுமதிக்கவில்லை. அன்றய நாளின் தாக்கம் இருவரிடமும் இருந்தது. அதுவும் தனக்கு முன்பும் அமர்ந்திருந்த ஸ்மித்தை கண்டது மானவ்விற்கு தானாக சென்று சஜனியிடம் பேசும் எண்ணம் இல்லாமல் போனது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் ஜோடியாக வெளியே வர, வண்ணப்பூக்கள் ஒட்டப்பட்ட கார் காத்திருந்தது. ஔிர்மதி இளைய சகோதரன் ஜீவன் கார் கதவை திறந்த வைத்துக் கொண்டு நிற்க, மேத்யூ சஜனியை பார்த்தான். அதில் 'நீ எங்களுடன் வருகின்றாயா?' என்ற கேள்வி இருப்பதை புரிந்து கொண்டு
"ஸ்மித் வெய்டிங்... நான் அவன் கூட வரேன்." என்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் ஸ்மித்தையும் காட்ட, அதை ஏதிர்பார்க்காத மேத்யூ மானவ் முகத்தை பார்க்க அவன் முகமோ பாறை போல இறுகி இருந்தது, அதனால் அவன் தயங்கி நிற்க,
"திஸ் இஸ் யுவர் டே மேக்... எனக்காக யோசிக்காத, ஐ வில் டேக் கேர் ஆஃப் இட்... மானவ் கிட்ட நான் பேசாம போக மட்டேன்." என்று சஜனி கூறிய பின்பே மேத்யூ புறப்பட்டான்.
மணமக்கள் சுமந்து கொண்டு கார் மெதுவே ஊர்ந்து செல்ல, அதன் முன்பு மேள தாளங்களும், பின்பு உறவினர்கள் நடந்து வர மேத்யூ தன் மாமியார் வீட்டை நோக்கி பயணப்பட்டான்.
நடந்து செல்லும் அனைவரின் கவனமும் சஜனியிடமும், அவளுக்காக சினிமாக்களில் மட்டுமே வரும் உயர் ரக காரில் காத்திருக்கும் அயல் நாட்டவனிடம் சென்று மீண்டது. ஏறத்தாள பதினைந்து வருடங்களுக்கு பின் தந்தை ஊருக்குள் அந்நியன் ஒருவனுடன் திருசெல்வத்தின் மகள் வந்திருப்பதே அவர்களுக்கு திருமண விருந்தை விட ருசிகரமாக இருந்தது.
இரவு உணவவை வைத்து இன்றைய விருந்தை பற்றி மேத்யூ ஒரு யூகம் செய்திருக்க அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் அளவுக்கு திருமண விருந்து கோலாகலமாக நடைபெற்றது. இலையில் பறிமாறப்பட்ட அசைவத்தின் அளவிலே எத்தனை ஆடுகளும் கோழிகளும் உயிர் தியாகம் செய்திருக்கும் என புரிந்தது.

மேத்யூ இடதுபுறம் ஔிர்மதி, அவளருகில் சஜனி, அடுத்து ஸ்மித் அமர்ந்திருக்க, வலதுபுறம் மானவ், அடுத்து அவன் இரு நண்பர்கள் அமர்ந்திருந்தனர். விருந்து முடியும் வரை அனைத்தும் சிறப்பாக தான் சென்றது... வேலம்மாள் வருகைக்கு முன்பு வரை....
தேடல் தாெடரும்....
ஹாய் ப்ரென்ட்ஸ்
திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. சிரமம் பார்க்காம 7 மணிக்கு வந்துட்டிங்க.... கல்யாண வேலையில வந்தவங்கள சரியா கவனிக்காம விட்டுருந்தா சாரி. எதுக்கும் வந்தவங்க உங்க கருந்துக்கள் வழியேதெரியப்படுத்திட்டா மீ ஹேப்பி...... விருந்து சாப்பிடாமா பாேயிடாதீங்க.... உங்களுக்கான ஸ்பெஷல் இருக்கும்... அசைவம் பிடிக்காதவங்களுக்கு சைவமும் இருக்கு. சாப்பிட்டுடு தான் பாேகனும்......
Last edited: