மை டியர் டே(டெ)டி - 7

Kamali Ayappa

Well-Known Member
#1
அனைவரையும் பயமுறுத்த முடிவுசெய்த பின்னும் ஏதோ யோசனை அவளுக்கு. "பேய் படங்களில் எல்லாம் பேய்களுக்கு நீட்டு முடி தான இருக்கும். அச்சச்சோ. நம்ப முடி குட்டியா இருக்கே!" என்று யோசித்தவளுக்கு, "அதுக்குத்தான் விக் இருக்கே!" என்று பளிச்செனப் பதில் கிட்டியது. நீள முடிக்காக நீச்சல்குளக்கரையில் அவள் தொடங்கிய பயணம் முடிவுற்றது விக் பாட்டியின் ஃபிளாட் வாசலில் தான்.

"எப்படி உள்ளே போவது?" என்று நம் குட்டி இளா யோசிக்கக்கூடாத் தேவையில்லாத வண்ணம், அந்த ஃபிளாட்டின் கதவுகள் அகலதிறந்தே இருந்தது. மின்வெட்டுப் பொழுதின் புழுக்கம் தாளாமல் வாசல் கதவுகளைத் திறந்து வைத்தவாறே சோஃபாவில் அமர்ந்திருந்தார் விக் பாட்டி. கவனம் முழுதும் அலைபேசியில் இருக்க, இவள் பூனைநடைப் போட்டு உள்ளே நுழைந்தது அவர் நினைவில் தெளிவாகப் பதியவில்லை. ஆனால், "யாரோ போன மாதிரி இருக்கே" என்று யோசிக்கும் அளவிற்குப் பதியத்தான் செய்தது. "நம் மனப்பிரம்மையாக இருக்கும்" என்று ஆறுதல் சொல்லிக்கொண்டு மீண்டும் மூழ்கினார் அலைபேசிக்குள்.

அங்கு ஆணியில் மாட்டியிருந்த விக்கை எடுத்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே ஓடினாள் நிலா. இந்த முறையும் யாரோ அந்தப் பக்கம் ஓடியதுபோல் தான் இருந்தது விக் பாட்டிக்கு. ஆனால், அது நிலா தான் என்று கண்டுக்கொள்ள முடியவில்லை அவரால். அவள் தான் "வாம்மா மின்னல்" என்று யாரோ அழைத்தார் போல் ஓடிவிட்டாளே!

போன முறை மனப்பிரம்மை என்றுத் தன்னை சமாதானம் செய்துக்கொண்டவரால், மறுமுறை அதைச் செய்ய முடியாமல் போனது.

அதுவும் வெள்ளையாய் ஏதோ ஒன்று குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தால் யார் தான் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். இன்று நிலா எதேச்சையாக அணிந்த அந்த வெள்ளை கவுன் அவள் புனைந்த இவ்வேடத்திற்கு அருமையாய் பொருந்தியது. அதற்கு யாருக்கு நன்றி சொல்வது, அனபெல் முதல், காஞ்சூரிங் வரை, அனைத்துப் பேய்களுக்கு வெள்ளை உடை அணிவித்து அழகுப் பார்த்த ஆங்கிலேயர்களுக்கா?, இல்லை "தூரத்தில் புகைமூட்டமா கிளம்பும்" என்று பேய் வருவதற்கான அறிகுறிகளை வரைந்த சூப்பர் ஸ்டார்க்கா?

"ஐயோ! இங்க என்னமோ இருக்குதே! என்று பதறிய விக் பாட்டி, மெல்லமாய் எழுந்து செல்வதற்குள் ஓடியேவிட்டாள் நிலா. ஆனால், நம் பாட்டிக்குத்தான் திரைசீலையின் அசைவு கூட ஏதோ தீயசக்தி அலைவது போல இருந்தது.

"அடுத்து யாரை பயமுறுத்துவது?" யோசித்தவள் நினைவிற்கு வந்தது. எந்நேரமும் தூங்கி வழியும் வாட்ச்-மேன் அங்கிள் தான்.

நேராக அப்பார்ட்மெண்ட் வாயிலுக்குச் சென்றவள், அங்கு வாட்ச்மேன் அறைக்குள் நுழைந்தாள். எப்பொழுதும் உறங்கிக்கொண்டிருப்பவர், என்று அவள் எண்ணியவர், அவள் எண்ணம் பொய்க்க வாய்பளிக்காமல் இப்பொழுதும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார். அதுவும் நாற்காலியில் அமர்ந்தவண்ணமே.

அவர் கைகளுக்கு நடுவில் இருந்த 'டார்ச்'சை மெல்லமாக உருவியவள், அவர் மெலிதாய் தூக்கம் கலைந்து அசையும் வரை அமைதையாய் நின்றிருந்தாள். அவர் லேசாக அசைந்ததும், அந்த டார்ச்சை 'ஆன்' செய்து தாடை கீழ் வைத்துக்கொண்டு நாக்கை நீட்டிக்கொண்டு நின்றிருந்தாள். அவள் உயரத்தை தன் நீளமாகக் கொண்டிருந்த சவுரி முடி வேறு. அதில் கொஞ்சம் முடியை முன்னே எடுத்து விட்டு, அந்த முடியினூடே அந்த வாட்ச்-மேனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

அரை தூக்கத்தில் அவளைப் பார்த்ததும் பயந்து தான் விட்டார் அவர். அவர் பீதியில் அமர்ந்திருக்க, இவளோ, பேய் படங்களில் வருவது போலக் கரகரவென குரலை மாற்றிக்கொண்டு, "இனி வேலை நேரத்துல தூங்குவீங்களா?" என்று உறுமும் குரலில் கேட்க, "மாட்டேன். மாட்டேன்" என்று அலறிக்கொண்டே அந்த அறையை விட்டு, "செக்ரெட்டரி மேடம்" என்று அலறிக்கொண்டே ஓடினார்.

அவர் பின்னால் ஓட நினைத்தவளை யாரோ கை பிடித்துத் தடுக்க, யாரென திரும்பிப் பார்த்தாள் அவள்.

இதுவரை அவள் நேரில் பார்த்திராத முகம் அது. ஆனால், தன் தாய் தந்தையின் திருமண வரவேற்பு ஆல்பத்தில் அதிகம் பார்த்த முகம்போல இருந்தது.

யாரோ அப்பாவிற்கு தெரிந்தவர் தான் என்று தெரிந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால், இந்நேரம் அவரைப் பிடித்து யார் என்ன என்று கதை கேட்காமல் விட்டிருக்க மாட்டாள்.

ஆனால், இன்று அவள் கவனம் மொத்தமும் யாரை பயம்புறுத்தலாம் என்பதிலே இருக்க, அவன் நிறுத்தி வைத்துக் கடுப்பாக தான் இருந்தது.

"ஹேய். நீ இளநிலா குட்டி தான?" என்று அவர் கேட்க, "இல்ல. வெண்ணிலா கட்டி. அதான் தெரியுது ல. அப்புறம் என்ன கேள்வி" என்று அவள் முறைத்துக்கொண்டு கேட்க, "என்ன பாப்பா இது. முகம் முழுக்க மாவு", என்று தன் கைக்குட்டை கொண்டு, அந்தப் புது மனிதர் அவள் முகம் துடைக்க, "என்ன இவரு. நம்ப வேஷத்தை கலைக்கறாரு. இனி யாரும் பயப்படமாட்டாங்க" என்று எண்ணியவள், அவர் துடைக்கத் துடைக்க சிணுங்கிக்கொண்டிருந்தாள்.

"வேஷத்தை எல்லாம் கலைச்சிடீங்களே இப்படி! சரி விடுங்க. நீங்க யாரு? இளா கல்யாண ஆல்பம்ல உங்கள நான் பார்த்துருக்கேன்" என்று கேட்க, "நான்...." என்று அவர் சொல்லத் தொடங்கும் நேரம், "நிலா!" என்று கோவமாய் இளமாறன் அழைப்பது கேட்க, அரண்டுப்போய் திரும்பிப்பார்த்தாள் நிலா.

"இளா!" என்று நிலா விழிக்க, "மாறா. நான்" என்று அந்தப் புதியவர் மாறனிடம் ஏதோ சொல்ல வர, "உங்கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை" என்று ஒற்றை விரல் உயர்த்தி கூறிவிட்டு, நிலாவை இழுத்திகொண்டு அவன் ஃபிளாட்க்கு சென்றான்.

மாறன் இவ்வளவு கடுமையாய் பேசிப் பார்த்ததில்லை நிலா. அவளுக்கு அவனின் கோவமும், கடுமையான வார்த்தைகளும் அவளுக்குப் புதிது. அதிலே அரண்டுப் போனாள் இளநிலா. எப்பொழுதும், மென்மையாய் உள்ளங்கை பிடித்து அழைத்துச் செல்பவன். இல்லையேல் அவளை முன்னே நடக்கவிட்டு, பின்னால் இருந்து வழிகாட்டுபவன். ஆனால், இன்றோ. வழக்கத்திற்கு மாறாக, முழங்கைக்கு சற்று மேலே பிடித்து, அதுவும் அழுத்தமாய் பிடித்து, தரதரவென இழுத்துக்கொண்டு சென்றான். அவன் வேகத்திற்கு ஈடுகுடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக அவனுடனே ஓடினாள் அவள்.

அவர்கள் ஃபிளாட்க்குச் சென்றதும், வாசல் கதவை டாமாரென அறைந்தான். கோவத்தில் கதவை அடித்துச் சாத்துவதெல்லாம் வழக்கமாக நம் நிலா செய்வது தான். அவள் வழக்கங்கள் எல்லாம் இவன் பழக்கங்களாய் மாறிவிட்டதா என்ன? என்ன செய்வதென்று தெரியாமல், அவள் அப்படியே நிற்க, "போயி குளிச்சிட்டு வா" என்று அவள் அதே போல் அதட்டும் குரலில் கட்டளையிட, வேஷங்களை எல்லாம் கலைத்து, அவன் சொன்னது போலவே குளித்து, உடை மாற்றிவிட்டு, சோஃபாவில் அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.

இவள் செய்து வைத்த கலாட்டாவில் பயந்தவர்கள் அனைவரும் அந்த அப்பார்ட்மெண்ட் செகிரேட்டரியிடம் முறையிட, அவர் அவசர அவசரமா ஜெனெரேட்டர் சரி செய்யும் ஆட்களை வர வைத்துச் சரியும் செய்துவிட்டார். மின்சார பிரச்சனை தீர்ந்தவுடன், அதென்ன அனைவரும் பேய் குட்டியாக இருந்தது என்றே முறையிடுகின்றனர் என்ற யோசனை அவருக்கு. "நம் அப்பார்ட்மென்டில் இருக்கும் அந்தக் குட்டி சாத்தானின் வேலையாக இருக்கும்" என்று எண்ணியவர், நிலாவின் ஃபிளாட்க்குவந்து கதவைத் தட்ட, மாறன் சென்று கதவைத் திறந்தான்.

எப்பொழுதும் ஓடி வந்து கதவைத் திறப்பவள் நிலா தான். அந்த ஃபிளாட்க்குச் செல்ல நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், நினைவில் வருவது, "யார் வேணும்!" என்று குட்டி கண்கள் மின்னக் கேட்கும் நிலாவின் முகம் தான். ஆனால், இன்று மாறன் தான் கதவைத் திறந்தான். "நிலா எங்க?" என்று கேட்க விழைந்த அந்த செகிரேட்டரி கண்ணில், அமைதையாய் சோஃபாவில் படுத்திருந்த நிலா தென்பட்டாள்.

இப்படி பவ்யமாகப் படுத்திருக்கும் பிள்ளையைச் சந்தேகிக்க தோன்றுமா? "ஒன்றுமில்லை" என்று கூறி சென்றுவிட்டார் அந்த செகிரேட்டரி.

கதவை மீன்று சாத்திவிட்டு கிட்சேனுக்குள் சென்றான் மாறன். ஆனால், இந்த முறை முன்னர் கதைவை சாத்தும்போழுது வந்த சத்தம் இல்லை. அமைதியாய் மென்மையாய் தான் கையாளப்பட்டது அந்த கதவு.

"குட்டி இளா. சாப்பிட வா" என்று மாறன் அழைக்க, எப்பொழுதும் அழைப்பது போல அழைக்க, "ஹ்ம்ம்..." என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொள்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான். அமைதியாய் வந்து சாப்பிடவும் அமர்ந்து, சமத்து பிள்ளைபோல அமர்ந்து சாப்பிட தொடங்கிவிட்டாள்.

"அவன்மேல் இருந்த கோவத்தை தேவை இல்லாமல் குழந்தையிடம் கடுமையை காட்டிவிட்டோமோ!" என்று குற்றவுணர்ச்சி ஒட்டிக்கொண்டது. அவள் ஓயாமல் பேசும் நேரமெல்லாம் சலிக்காமல் ரசித்தவனுக்கு, அவள் சில நிமிட மௌனங்கள் ஏனோ வேப்பம்பூவாய் கசத்தது.

ஆனாலும் "அவளிடம் என்னென்று சொல்வது!" என்று புரியவில்லை அவனுக்கு. அவன் கோவத்துக்கான காரணத்தைப் புரிந்துக்கொள்ள முடியுமா அவளால்?

"குட்டி இளா. என் கோவம் உன் மேல இல்ல. ஒருத்தவன் வந்தானே. அவன் மேல தான் கோவம்" என்று மட்டும் அவன் சொல்ல, அவள் மௌனமே சாதித்தாள். சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதையாக இருந்தவள், எழுந்து செல்லும் நேரம். "கோவம் என் மேல இல்லைன்னா. அதை என்கிட்ட ஏன் காமிச்சா?" என்று கேட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

எழுந்து சென்றவள் பால்கனிக்குச் சென்று, அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டாள். அவள் பின்னாள் சென்றான் மாறன்.

அவர்கள் பால்கனியிலிருந்து பார்த்தாள் நீச்சல்குளம் அழகாகத் தெரியும். வானில் ஜொலித்த பிறைநிலா, கண்ணாடியாய் ஜொலித்த நீச்சல்குள நீரில் தன் பிம்பத்தை படரவிட்டிருந்தது.

அவன் நிலவவள், ஆகாய வெண்ணிலா நீரில் மிதப்பதை கண்டு ரசிக்க, அவனோ தன் நிலவைக் கண்ணெடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான்.

"நிலாவுக்கு என்ன ஆச்சு?" என்று அவன் கேட்க, "நிலா நீரில் மூழ்கிப்போச்சு" என்றாள் இளநிலா. அவளை மடியில் அமரவைத்துக்கொண்டவன் "அந்த நிலா வேணா மூழ்கலாம். இந்த நிலா என்னைக்கும் கண்ணீர்ல மூழ்காம நான் பாத்துக்குவேன்" என்று அவன் கூற, "ஹப்ப்பா. ரொம்பத்தான்" என்றாள் இளநிலா.

அவள் தாயின் சாயலை பலவாறு இளநிலாவிடம் கண்டாலும், ஏனோ இந்த "ஹப்ப்பா. ரொம்பத்தான்" என்னும் அந்த ஏளன சிணுங்கல், அவள் தாயை அப்படியே பிரதிபலித்தது.

இதே பால்கனி, இதே வான்நிலவு, இதே நீச்சல் குளம், இதே மாறன். இதேபோல் நீரில் மூழ்கிய நிலவுக்காகக் கரிசனம் காட்டும் நிலா. ஆனால் அன்று இருந்தது இதே நிலா அல்ல. அன்று இருந்தது இளநிலாவை சுமந்துக்கொண்டிருந்த நிலமதி. அன்று தாய்க்கு அளித்த அதே பதில், இன்று மகளுக்கும் அதே பதில் தான் அளிக்கிறான். அன்னை அளித்த அதே பதில், இன்று மகளிடம் இருந்தும் வந்துவிட்டது.

"தாயைப் போல பிள்ளை" என்று சொல்வதா?, இல்லை, மூன்று மாதம் ஆனதும், வயிற்றில் சுமக்கும் பிள்ளையும் சுற்றுப்புறம் உணரும், பேசுதல் புரியும்" என்று சொல்வார்களே! கருவாய் இருக்கும்போது, சக்ரவியூகம் உள்நுழையும் யுக்தியை தந்தை கற்பிக்க கேட்டறிந்த அபிமன்யு போல, இவள் கருவாய் இருக்கும் நேரம், தாய் பேசிய வசனங்கள் கேட்டு, இன்று அந்த வார்த்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறாள் என்று சொல்வதா?

என்ன தான் காரணம் சொல்லிக்கொண்டாலும், இளநிலாவின் பேச்சு, நிலமதியின் நினைவை, அவள் மொழியை, அவள் குரலை மீண்டும் ஒரு முறை அவனுள்ளே ஒலித்துப்பார்க்க வைத்துவிட்டது.
 
Last edited:
#4
ஹா ஹா ஹா
குட்டிப் பேயின் நோ நோ குட்டி இளாவின் அட்டகாசங்கள் நோ நோ குறும்புகள் சூப்பரா இருக்கு
 
Last edited:
#6
மாறனை கோபப்படுத்தி வந்தது யாரு?
இளமாறனின் கல்யாண ஆல்பத்தில் நிலா பார்த்த அந்த மனிதர் யாரு?
மாறனின் உறவா?
இல்லை நிலமதியின் உறவா?
மாறனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது?
நிலமதி எப்போ எப்படி இறந்தாள்?
நிலா பிறக்கும் பொழுது டெலிவரி டைமிலா?
 
தரணி

Well-Known Member
#7
மாறன் கொஞ்சம் வித்தியாசமா நடந்தா கூட நிலா குட்டி எப்படி வாடி போய்டுறா.... அம்மா போல பொண்ணு அது எப்பவும் பெருமை தான் போல.... நிலவை மனைவியாக மகளா பெற்ற மாறன் ...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement