மை டியர் டே(டெ)டி - 2

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
"இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ!" என்று யோசித்துக்கொண்டு தான் போனை எடுத்தான். போனை எடுத்ததுமே, "சொல்லுங்க மேடம்" என்றான் மாறன்.

எதிர் முனையில் இருப்பவர்கள் ஏதோ சொல்ல, "இப்போவேவா? ஆஃபீஸ்ல இருக்கேனே. ஈவினிங் வரேன்" என்றான் மாறன். எதிர் முனையில் இருப்பவர்கள் மறுத்துவிட்டார்கள் போல. "சரி மேடம். எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் வரேன் மேடம்" என்று சொல்லிவிட்டு, அலைபேசியை அணைத்தான்.

"என்ன ஆச்சு சார்? யார் போன் ல?" என்று நிஷாந்த் கேட்க, "குட்டி இளாவோட பிரின்சிபால்" என்றான் மாறன்.அவன் அப்படி சொன்னனதுமே தண்ணீர் குடிப்பதையும் மறந்து சிரித்தான் கிருபா. வாயில் வைத்திருந்த பாதி நீர், இவன் சிரித்ததில் வெளியேறிவிட, மீதி நீர் மூக்குக்கு ஏறியது. இருந்தும் சிரிப்பதை நிறுத்தவில்லை அவன்.

"போதும் போதும் நிறுத்து. உனக்கும் குழந்தை பொறந்தா அப்போ தெரியும்" என்று மாறன் கூற, "எப்போவும் ஈவினிங் தான் வரச் சொல்லுவாங்க. இப்போ என்ன? மதியமே வந்தாகணும்ன்னு சொல்றாங்க போல. ஹீஹீஹீ அப்போ இன்னைக்கு 100 தடவையா?" என மீண்டும் சிரித்தான் அவன்."கிருபா சார். ஏன் சிரிக்கறீங்க? அது என்ன நூறு தடவையான்னு கேக்குறீங்க? மாறன் சார். நீங்க முதல்ல ஸ்கூலுக்கு போங்க. குழந்தைக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம இருக்க போகுது" என்று நம் நிலாவை பற்றித் தெரியாத நிஷாந்த் உண்மையான கவலையுடனே சொல்ல, இந்த முறை மாறனுக்கு சேர்த்தே சிரிப்பு வந்துவிட்டது.

"குட்டி இளாவால தான் யாருக்கும் உடம்பு சரி இல்லாம போகும்" என்று மாறன் கூற, "நீங்கச் சொல்லுறது ஒன்னுமே புரியலையே!" என்றான் நிஷாந்த் அப்பாவியாக. பாவம் அவன் நம்ப இளநிலாவை இதுவரை பார்த்ததில்லையே.

நிஷாந்த் ஒன்றும் புரியாமல் விழித்ததை பார்த்த கிருபா, "அது ஒன்னுமில்ல தம்பி. நம்ப நிலா பாப்பாக்கு வாய் கொஞ்சம் நீளம். ஆள் பாக்காம பேசிடும். அது பேச்சுக்குப் பதில் பேச்சு கூடப் பேச முடியாதுன்னா பாத்துக்கோயேன்! வீட்டுல இருந்த வரப் பரவால்ல. இப்போ ஸ்கூலுக்கு போயும் அப்டியே பண்ணா. அதான் நம்ப மாறன் சார், மாசமா இருக்கவங்க மாசா மாசம் ஆஸ்பத்திரி போற மாதிரி, இவரு மாசா மாசம் ஸ்கூலுக்கு போயி டோஸ் வாங்கிட்டு வருவாரு" என்று சிரிக்க, "இப்போ ஒழுங்கா சோத்த எடுத்து வாய அடை மேன். இல்லைன்னா உன் சோறு உனக்கில்லை" என்று மாறன் கூற, "கைய வச்சிடுவியா நீனு? என் சோறு எனதுரிமைன்னு புரட்சி போராட்டமே பண்ணுவோம் நாங்க" என்று கூறிவிட்டு, டிபன் டப்பாவை மாறன் எட்டாத தூரத்தில் எடுத்து வைத்து விட்டான்.

"சரி. அது என்ன 100 தடவை?" என்று நிஷாந்த் மீண்டும் கேட்க, அங்கு இருந்தவர்கள் அனைவர்க்கும் கேட்குமாறு சிரித்துவிட்டான் கிருபா. "ஐயோ. மானம் போகுதே!" என்று தலையில் வைத்துக்கொண்டான் மாறன்.

"நீ வாடி ராசாத்தி. இந்த கதையை 100 பேரு கேட்டாலும், 100 தடவை சொல்லுவன் நானு" என்றான் கிருபா. நிஷாந்தின் தாடையை பிடித்துக் கொஞ்சியவாரே. "சொல்லுவ டா சொல்லுவ. என் கதை தான. விட்டா அத கதையா எழுதி புக் போட்டாலும் போடுவ" மாறன் சலித்துக்கொள்ள, "இது நல்ல யோசனை. நம்ப தந்தி பேப்பர் ல, ஞாயிற்றுக்கிழமை குடும்ப மலர்ல, நெகிழவைத்த நிஜங்கள்ன்னு ஒரு ஒரு பக்க கதைகள் வரும். பேசாம அதுக்கு எழுதி அனுப்பிடலாமா? தலைப்பு கூட ரெடி. வாயாடிய மகள். இம்போசிஷன் எழுதிய தந்தை. எப்புடி" என்று கூறி வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான் கிருபா.

"தங்கமே. உனக்கு கதை சொல்லாம விட்டுட்டேன் பாரு. நம்ப நிலா பாப்பா கிளாஸ்ல. ஏதோ ரெண்டு புள்ளைங்களுக்கு சண்டைபோல. நம்ப பாப்பா போயி, என்ன டா உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைன்னு கேட்ருக்கு. அதுக்கு அடிச்ச பையன், அடி வாங்குன பையனைக் காமிச்சு, 'இவன் என் பென்சில் தொட்டுட்டான், அதான் அடிக்கறேன்'னு சொல்லிருக்கான். 'அதுனால என்ன? திருப்பி வச்சிட்டான்ல்ல'ன்னு நம்ப பாப்பா சொல்லிருக்கு. அதுக்கு அந்த அடிச்ச வெள்ளை உருண்ட, 'இவன் கருப்பா இருக்கான். இவன் என் பென்சிலை தொட்டுட்டான். இப்போ நான் அந்த பென்சிலை தொட்டா எனக்கும் இவன் கருப்பு ஒட்டிக்கும்ல'ன்னு சொல்லிருக்கான்.

நம்ப பாப்பா அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிப் பாத்துருக்கு, அந்த வெள்ளை உருண்டை கேக்கவே இல்ல. உடனே, நம்ப பாப்பா, ட்ராயிங் கிளாஸ்க்கு கொண்டு போன கருப்பு பெயிண்ட் எடுத்து அவன் மூஞ்சி முழுக்க பூசி விட்டுடுச்சு. அதுல டென்ஷன்னான அந்த வெள்ளை உருண்டை, நம்ப பாப்பா மேலயே கை வைக்க, நம்ப பாப்பா விட்டுடுமா அவனை. ஓங்குன கையைப் பிடிச்சி கடிச்சி வச்சிடுச்சு. அந்த பையனோட அப்பா அம்மா வந்து ஒரே சத்தம் ப்ரினிசிபால் கிட்ட. அந்த பிரின்சிபால் அம்மா, நம்ப மாறனை கூப்டு வச்சி கையா முய்யோன்னு ஒரே சத்தம்.

இவரைப் பேச கூட விடல. கடைசியா 'இனிமே யார் முகத்திலும் பெயிண்ட் பூச மாட்டேன். யாரையும் கடிக்க மாட்டேன்' அப்டின்னு நிலா பாப்பாவ 50 டைம் எழுதச் சொல்லிடுச்சு.நம்ப சார் என்ன பன்னாருன்னா. 'யாரையும் கடிக்கவோ, பெயிண்ட் பூசவோ மாட்டேன். நிற பாகுபாடு தவறென உணர்த்த வேறு வழி கண்டறிவேன்'னு எழுத வச்சி அனுப்பிட்டாரு.

இதைப் பாத்து அந்த பிரின்சிபால் அம்மா என்ன நெனைச்சுதோ தெரியல. நம்ப சாரை உக்கார வச்சி, 'இனி இதுபோல் நடக்காமல் பார்த்துகொள்வேன்'னு, இவரை 50 தடவை எழுத வச்சிடுச்சு. நம்ப சாரும் அழகா எழுதிக் குடுத்துட்டு, வரும்போது, 'தீண்டாமை மனிதநேயமற்ற செயல். தீண்டாமை பெரும்குற்றம்ன்னு புத்தகத்தோடு முதல் பக்கத்துலே இருக்கும். அதை முடிஞ்சா நீங்க 50 தடவை எழுதி, அதோட அர்த்தத்தையும் புரிஞ்சிக்க பாருங்க'ன்னு சொல்லிட்டு வந்துட்டாரு" என்று கூறி சிரிக்க, "போதும் மூடுங்க சார்" என்று அவன் வாயை அடைத்தான் மாறன்.

இப்பொழுது நிஷாந்த மாறனிடம் கேட்டான். "நம்ப பாப்பா பண்ணது தப்பு இல்லையே சார். அடிச்சது கூட அந்த பையன் தான் சார். இதுக்கு நம்ப பாப்பாவை இம்போசிஷன் எழுத வச்சு. உங்களையும் எழுத வச்சிருக்காங்க. நீங்க ஏன் சார் எழுதுனீங்க?" என்று நிஷாந்த் கேட்க, ஒரு புன்னகையை சிந்தினான் மாறன்.

"என் பொண்ணு பண்ணது தப்புன்னு அவ மனசுல பதிய வைப்பதற்காக அவளை எழுதச் சொன்னாங்க. ஆனா, என் பொண்ணு பண்ணது தப்பில்லை. அவ பண்ண விதம் கூட, என்னைப் பொறுத்த வரை தப்பில்ல. ஆனா, அவங்களுக்கு அந்த விதம் தப்பா தெரிஞ்சிருக்கும். என் பொண்ணு பண்ணது தப்பில்லை. அது தப்புன்னு அவ மனசுல பதிய கூடாதுன்னு தான் அப்படி மாத்தி எழுதச் சொன்னேன்.

அடிவாங்குனவனை பார்த்துப் பாவப்படுற உலகம், அடிச்சவன் பக்கத்துல இருக்கும் நியாயத்தைப் புரிஞ்சிக்க நினைக்கறது கூட இல்ல. அந்த பிரின்சிபால் எது சரி, எது தப்புன்னுலாம் யோசிக்கல, அந்த பையன பெத்தவங்க வந்து நின்னு சத்தம் போடவும், அவங்கள சமாதானம் பண்ணுறதுக்கு ஏதோ அவசரத்துல பண்ணிட்டாங்க. நான் குட்டி இளாவை அப்படி மாத்தி எழுதச் சொன்னதும், அதைப் பார்த்ததும் அவங்க மனசுக்கு புரிஞ்சிடுச்சு. அது தப்பில்லைன்னு. ஆனா, அதை ஒத்துக்க முடியல அவங்களால. ஒரு கொழந்தைக்கு புரிஞ்சது கூட, நமக்குப் புரியலையேன்னு அவங்க மேலயே அவங்களுக்கு கோவம் வந்துருக்கும். ஆனா, அதை வெளிய சொல்ல முடியல. அவங்க தன்மானம் தடுத்துடுச்சு. அதோட பயன் தான், அவங்க என்ன அப்டி எழுதச் சொன்னது. ஆனா, இந்த முறை, அவங்க எழுதச் சொன்னதுக்கு காரணம், நான் செஞ்சது தப்புனு நான் உணருவதற்கில்லை, அவன் செஞ்சது சரின்னு அவங்க மனசுல பதிவதற்கு.

அவங்க கிட்ட எதுக்கு மல்லு கட்டி நிக்கணும், 50 வரி தான எழுதுவோம்ன்னு எழுதிட்டேன். ஆனா, அதை அவங்க சரின்னு நெனச்சிட கூடாதுன்னு கடைசியா அப்டி சொல்லிட்டு வந்தேன்" என்றான் மாறன்."சார்..." என்று நிஷாந்த் தொடங்க, "என்ன மேன்! இன்னும் உன்னால நான் பண்ணதை ஏத்துக்கு முடியல. அதான? நான் எழுத முடியாதுன்னு சொல்லிட்டு, அவங்கள மொறச்சிகிட்டு வந்துருக்கணும் அதான மேன்" என்று மாறன் கேட்க, "அதே தான் சார்" என்றான் நிஷாந்த்."அப்டி மொறச்சிகிட்டு நம்ப வந்துடுவோம். ஆனா, குட்டி இளா டெய்லி போகணுமே. என்ன ஆகுமோ, ஏதாகுமோன்னு பயந்துட்டு இருக்க சொல்றியா? அப்டி எழுத முடியாதுன்னு சொல்லிட்டு வந்துருந்தா, நம்ப பாப்பா கிட்ட, எதனா பண்ணிகிட்டே இருப்பாங்க. அப்டி பண்ணா, நம்ப மேல தான் தப்புன்ற எண்ணம் அவளுக்குத் தானா வந்துடுமே. அது எனக்கு வேணாம். ஊருக்கெல்லாம் ஹீரோவா இருக்க அவசியம் இல்லை எனக்கு. என் பொண்ணுக்கு மட்டும் என்னைக்கும் ஹீரோவா இருக்கனும். அவ சரியான விஷயத்தைச் செய்யுறப்போ இது சரி தான்னு சொல்லுற ஹீரோவா. தப்பு பண்ணுறப்போ. இது தப்பு, இந்த வழி தான் சரின்னு சொல்ற ஹீரோவா இருக்கனும்" என்றான் மாறன்.

அவன் பேசுவதை எல்லாம் கேட்ட நிஷாந்திற்கு, இதுவரை ஒரு நல்ல கலகலப்பான மனிதராய் தெரிந்த மாறன், இப்பொழுது, ஒரு நல்ல, தெளிவான தந்தையாய் தெரிந்தார்.

"டைம் ஆச்சு. நான் பெர்மிஷன் வாங்கிட்டு கிளம்பறேன். போன தடவை பேசுனதுக்கே அந்த மிஸ் செம கடுப்புல இருக்கும். இந்த கிருபா கிறுக்கன் வேற வாய வச்சிட்டான். இன்னைக்கு என்ன 100 தடவ எழுத வச்சிட்டு தான் விடும் போல" என சொல்லிக்கொண்டே, சாதம் பல்லில் பட்டதா, என்று ஐயமுறும் வேகத்தில் சாப்பிட்டு முடித்து விட்டான்.

நம் ரைனோசரிடம், பெர்மிஷனுடன் சேர்த்து, பூசையும் வாங்கிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக ஓடினான். அந்த ஓட்டத்தின் வேகம் ஆயிரம் அர்த்தங்கள் கூறியது நிஷாந்திற்கு. தெளிவான தந்தையாய் தெரிந்த மாறன் இப்பொழுது, பாசமான தந்தையை, பொறுப்பான தந்தையாய் தெரிந்தான்.

அவன் அவசரமாய் ஓடும் அந்த திசையை தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்த நிஷாந்த், தன் தோளில் யாரோ தொடுவதை உணர்ந்து திரும்ப அங்கு நின்றிருந்தான் கிருபா. மௌனமாய் நிஷாந்த் கிருபாவை பார்க்க, "மதி இருந்திருந்தா கூட, நிலாவை இப்படி பாத்துகிட்டு இருப்பாளான்னு தெரியல" என்றான் கிருபா. "மதி யார் சார்? மாறன் சார் வைஃபா? அவங்க இப்போ இல்லையா?" என்று நிஷாந்த் கேட்க, "ஆமா. இப்போ இல்ல. நிலா பொறக்கும்போதே!" என்று கூறி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் கிருபா.பாசமான தந்தை, இப்பொழுது தாயுமான தந்தையாய் தெரிந்தார் நிஷாந்திற்கு.

பெரிய பெரிய கட்டிடங்கள், ஆங்காங்கு செக்யூரிட்டி, கிட்டத்தட்ட 50 பேருந்துகள் நிறுத்திவைக்கப் பட்டிருந்த பஸ் பே. விசாலமான விளையாட்டு மைதானம், ஆங்காங்கு அலங்கார செடிகள் என்று இருந்த பள்ளி அது.அங்கு பெற்றோர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில், தன் மகிழுந்தை நிறுத்தி விட்டு, பிரின்சிபால் அறை நோக்கி நடந்தான் மாறன்.வகுப்பு நேரம் என்பதால், வெளியில் மாணவர்கள் யாரையும் காணவில்லை. வகுப்புகளில் மாணவர்கள் பாடத்தை கோரஸாக பாடும் ஒலி மட்டுமே உறுதிப்படுத்தியது, அங்கு மாணவர்கள் இருப்பதை.

பிரின்சிபால் அரை கதவை திறந்தவன், "எக்ஸ்கியூஸ் மீ மேம்" என்று இவன் வாசலில் நிற்க, அந்த அறையில் இருந்தவர்கள் கவனம் மொத்தமும் அவன் பக்கம் திரும்பியது.அங்கு அமர்ந்திருந்த அந்த பள்ளியின் பிரின்சிபால், "வாங்க மிஸ்டர்.மாறன்" என்று கூற, உள்ளே சென்றான்.அங்கு, பிரின்சிபால் அருகில் நிலாவின் வகுப்பு ஆசிரியை, மற்ற இரண்டு ஆசிரியர்கள் நின்றிருக்க, அந்த அறையின் வாசல் அருகிலேயே, அந்த பள்ளியின் தூய்மை பணியாளர்கள் இருவர் நின்றிருந்தனர்.

"சொல்லுங்க மேடம். வர சொன்னீங்களே!" என்று மாறன் கேட்க, "இளா. நான் சொல்றேன்" என்று மழலை குரல் கேட்டு திரும்பினான் அவன்.அங்கு கை காட்டியவாறு, அவ்வப்போது பிரின்சிபாலை முறைத்தவாறு அமைர்ந்திருந்தாள், இந்த இளமாறனின் குட்டி இளா.அந்த அறையில் விருந்தினருக்காக போடப்பட்டிருந்த சோஃபா அது. புசு புசுவென்று, அமர்ந்தால் உள்வாங்கு அளவிற்கு, இருந்த சோஃபா அதில், அமர்ந்திருந்தாள் குட்டி இளா. அவ்வளவு பெரிய சோஃபா அதில், இவள் அமர்ந்திருப்பது தெரியக்கூட இல்லை.

அவள் குரல் வராவிடின், நம் மாறனும் கூட அவளை கவனித்திருக்கவே மாட்டான். இவனை பார்த்ததும் அவள் இறங்கி வர, "சொல்லு குட்டி இளா. என்ன ஆச்சு?" என்று கேட்க, அந்த ப்ரின்சிபாலை ஒரு முறை பார்த்து விட்டு, சொல்ல தொடங்கினாள், இன்றைய பஞ்சாயத்து கூட்டத்திற்கான காரணத்தை.
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
அச்சோ...சோ ஸ்வீட் இளா பேபி.....

மாறன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...என்ன ஒரு அழகான பாசமான அப்பா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top