மெய் தீண்டும் நேசம் - 16

#1

Screenshot_2020-03-08-21-07-25-266_vsin.t16_funny_photo.jpg


அத்தியாயம் 16::

கண்ணன் செல்வம் இருவருமே அந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்த தமிழ்மித்ரனை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தனர். கண்ணன் படபடப்பாக செல்வத்திடம் "மாப்பிள்ளை என்ன சின்ன மாப்பிள்ளை இங்க வந்திருக்கார். ஏதாவது தெரிஞ்சிருச்சா. இப்ப வந்து கேட்டா நம்ம என்ன சொல்வது" என்று கேட்க, செல்வம்" மாமா பொறுமையாய் இருங்க. நீங்களே போய் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டிக் கொடுத்திருவீங்க போலவே. அவர் எதுக்கு இங்கே வந்திருக்கிறார் என்று நமக்கு தெரியாது. கொஞ்சம் பொறுமையோடு இருங்க. எப்படியும் அவர் நம்மள பார்த்து இங்க வந்து கேட்டால் ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம்" என்று கூற கண்ணனுக்கோ பயத்தில் வியர்த்து வழிந்தது.

அப்பொழுது சரியாக தமிழ்மித்ரன் இவர்களை கவனித்து விட்டு அருகில் வந்தான். " என்ன மாமா இங்க. ஏதாவது பிரச்சனையா போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்கீங்க" என்று கேட்க முதலில் அவர்கள் திணறினாலும் பின் செல்வம் தான் சுதாரித்து "இல்ல தம்பி இந்த லேடி இன்ஸ்பெக்டர் என்னோட பிரண்டு மனைவி. அதுதான் கொஞ்சம் ஒரு வேலைய பாத்துட்டு போகலாம்னு வந்தேன்" என்று கூற அவனும் சரி என்றான்.
"ஆமா நீங்க என்ன மாப்பிள இங்க" என்று கேட்க "அது ஒண்ணும் இல்லை அண்ணா நம்ம கம்பெனியில வேலை செய்பவர் பொண்ணுகிட்ட யாரோ பசங்க பிரச்சனை பண்றாங்களாம். அந்த பொண்ணு வரும்போது கேட் பக்கத்திலேயே நின்று கிண்டல் செய்வதாக கேள்விப்பட்டேன். அதனாலதான் கொஞ்சம் போலீஸ் கிட்ட சொல்லி அவங்கள கொஞ்சம் தட்டி வைக்க சொல்லலாம் என்று கூற வந்தேன். நம்மனாள
எல்லா நேரமும் பாதுகாப்பு கொடுக்க முடியாது அல்லவா. அதனால்தான் இது போன்றவர்களுக்கு போலீஸ் தான் சரி" என்று கூறிய கூற, அவரும் சரி மாப்பிள்ளை என்றார்.
பின் "அவங்க இன்னும் வரலையா" என்று கேட்க, "இல்ல மாப்பிள எங்கேயோ வெளியில போயிருக்காங்களாம்" என்று கூறினார்.

"மாமா காலேஜிலே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அதனால நாங்க கிளம்புறேன். நீங்க அவங்கள பாத்துட்டு மெதுவா வாங்க" என்று கூறிவிட்டு நகர்ந்துவிட அப்பொழுதுதான் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பிறகு ஒரு பத்து நிமிடம் காத்திருப்புக்குப் பின் செல்வத்தின் நண்பரின் மனைவியான குழலி என்பவர் அங்கு வர "வணக்கம்" என்று கூறிய செல்வத்தை கண்டவர், "அட செல்வம் அண்ணா என்ன வந்து ரொம்ப நேரமாயிடுச்சா. கொஞ்சம் வேலை " என்று கூற, "அதெல்லாம் இல்லம்மா" என்று கூறியவர், "உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசனும்" என்றார்.

அவரோ "என்ன அண்ணா உங்க கொழுந்தியா கிட்ட யாரோ பிரச்சனை பண்றதா சொன்னிங்களே. அந்த விஷயமா என் வீட்டுக்காரர் என்கிட்ட சொன்னார்" என்று கேட்க , "ஆமாம்மா அவன் தொல்லை ரொம்ப தாங்க முடியல, என் மனைவியும் கொழுந்தியாவும் தனியா வரும்போது போய் பேசி பிரச்சனை பண்ணியிருக்கான் மா. வீட்டுல எல்லாரும் ரொம்ப பயந்துட்டாங்க. இப்போ அவளுக்கு வேற கல்யாணம் முடிவாகி இருக்கு. அதனாலதான் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று பார்க்கிறோம்" என்று கூற "அப்படியா கல்யாணமா ரொம்ப சந்தோஷம். நான் இந்த பிரச்சனையை பார்த்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க" என்று கூற நன்றி மா என்று கூறியவர், பின் வேதாவை பற்றி அவரிடம் கூற அவர் அனைத்தையும் குறித்துக் கொண்டார்.

" கல்யாணத்துக்கு எங்களையெல்லாம் கூப்பிடுவீங்கல்ல" என்று அவர் கேட்க "என்னமா இப்படி சொல்லிட்ட கண்டிப்பா நீயும் உன் புருஷனும் கண்டிப்பா வந்தே ஆகணும்" என்று கண்ணன் கூற, அவரும் "கண்டிப்பா வருகிறோம்" என்று கூறினார்.

" ஆமா மாப்பிள்ளை யாரு எந்த ஊரு" என்று கேட்க, "எங்க கம்பெனி ஓனர் சிதம்பரம் ஐயாவோட சின்னப்பையன் தமிழ்மித்ரன் தான்" என்று கூற குழலிக்கை மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

"யாரு தமிழ் தம்பியா. ரொம்ப நல்ல பையன் ஆச்சே. உங்க பொண்ணுக்கு நல்ல பையனா தான் பார்த்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்" என்று கூறியவர், " இனிமேல் இந்த பிரச்சனையை பற்றி நீங்க கவலைப்படாதீங்க. அந்த பையன் கிட்ட நான் விசாரிக்கிறேன்" என்று கூறியவர், "ஆனால் ஒருவேளை நான் பொண்ணு கிட்ட ஒருமுறை தனியா விசாரிக்கிற மாதிரி வரலாம்" என்று கூற அவர்களுக்கு பயமாக இருந்தது.

" போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா" என்று கேட்க, " அதெல்லாம் வேண்டாம் வெளியில் எங்கேயாவது தனியாக இருக்க இடத்துல அந்த மாதிரி விசாரணை வச்சுக்கலாம். அதெல்லாம் பெரிய பிரச்சனை இல்ல. நீங்க அத நெனச்சு பயப்படாதீங்க" என்று கூற அவர்களுக்கு அப்போதுதான் நிம்மதி வந்தது.

அவரிடம் விடைபெற்று தங்களது வீட்டிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்த விஷயத்தை தெரிவிக்க அப்பொழுதுதான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதி மனதில் குடியேறியது. அபூர்வாவும் தன்னுடைய அறைக்கு அதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியாக வர அப்பொழுது தமிழின் எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.


தயங்கியபடியே அவனது அழைப்பை ஏற்றவள் "ஹலோ" என்று கூற அந்தப்பக்கம் தமிழும் "அபூர்வா நான் தமிழ் பேசுறேன்" என்று கூறினான். அவளும் "எனக்கு தெரியும் சொல்லுங்க" என்று தயக்கமாக கேட்க, "பால்கோவா கொடுத்துவிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான்.

அவளோ "நான் கொடுத்துவிடல சுதா அக்கா தான் கொடுத்து விட்டார்கள்" என்று கூற அவன் "பரவாயில்லை யாரு கொடுத்துவிட்டால் என்ன செஞ்சது நீதானே. அதுமட்டுமில்லாம உன் தட்டில் இருந்ததும் எனக்கு கொடுத்தாய் அல்லவா அதற்கும் சேர்த்துத்தான் இந்த தேங்க்ஸ்" என்று கூற அவளும் வெட்கப்பட்டுக் கொண்டே சரி என்று கூறினாள்.

"சரி நான் உன்கிட்ட ஒன்னு கேக்கட்டா போன் பண்ணுனேன். நீ ஜாப் ரிசைன் பண்ண எப்போ சென்னை போற. ஏதாவது செட்டில்மெண்ட் மணி கட்டணுமா" என்று கேட்க, அவளும் "ஆமாம் முதலில் ரெண்டு லட்சம் என்று சொல்லியிருந்தாங்க. ஆனா என் பிரென்ட் ஒருத்தி இந்த மாதிரி எல்லாம் ரிசைன் பண்ண பணம் கட்டத் தேவையில்லை என்று கூறியிருந்தா. நான் சேர்ந்து சில நாட்கள் தானே ஆகிறது, அதனால பிரச்சினை இருக்காது என்று தான் சொன்னாங்க. அதனால சீக்கிரம் வெளியில் வந்து விடலாம்" என்று கூற அவனும் சற்று யோசித்து "நீ இன்னும் ட்ரைனிங் எல்லாம் முடிக்கவில்லை அல்லவா" என்று கேட்க, அவள் "ஆமா இன்னும் முடிக்கவில்லை" என்றாள்.

"சரி அப்ப பெரிய பிரச்சனை எல்லாம் இருக்காது. உன்னோட ஹச் ஆர்க்கு 'மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. அதனால என்னால இதுக்கு மேல கண்டினியு பண்ண முடியாது' என்று ஒரு மெயில் அனுப்பு. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு அதுக்கு அப்புறம் இத பத்தி நம்ம டிசைட் பண்ணலாம்" என்று கூறினான்.

அவளோ "அவங்க முடியாது பணம் கட்டியே ஆகணும்னு சொன்னா என்ன பண்றது" என்று கேட்க, அவன் "அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னாலும் கட்டிவிடலாம் பயப்படாதே" என்றான்.

அவளோ "என்னது ரெண்டு லட்சம் பணம் கட்டணுமா அதெல்லாம் முடியவே முடியாது" என்று கூற, அவன் "சரி ஒன்னும் பண்ணலாம் நீயே அங்க போயி வேலைய கண்டினியூ பண்ணு மாசத்துக்கு ஒருமுறை வேணா வந்துட்டு வந்துட்டு போ" என்று கூற அவள் அதிர்ச்சியாக "அவ்வளவுதான் எங்க வீட்டில விளக்கமாத்த எடுத்து அடி பின்னிடுவாங்க . புருஷன விட்டுட்டு எங்க இருக்கேன்னு" என்று கூற அவனும் சிரித்துக் கொண்டே "அப்ப நீ பே பண்ணிதான் ஆகணும். வேற வழி இல்ல எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு டெசிஷன் எடுத்து தான் ஆகணும். அதனால இதுக்கு எல்லாம் கவலைப்படாத" என்று கூற அவளும் சரி என்றாள்.

"சரி நீ பாத்துக்கோ நான் வைக்கிறேன்" என்று கூறியவன், "மறக்காம இந்த வாரமே ரிசைன் பண்றதுக்கு ஸ்டெப் எடுத்திடு ஏன்னா அடுத்த வாரத்திலிருந்து கல்யாணத்துக்கு தேவையான டிரஸ் எடுக்க வேண்டியது இருக்கு. அதனால நீங்க இருக்கணும்னு எல்லாரும் எதிர்பார்ப்பார்கள்" என்று சொல்ல அவளும் சரி என்றாள்.

அப்பொழுது கல்யாண கனவில் மூழ்கி அப்படியே தன் கைப்பேசியை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அப்பொழுது வேதாவின் எண் அவளது கைப்பேசியில் மிளிர்ந்தது. அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அதைக் கண்டவுடன் துணி கொண்டு துடைத்தார் போல் போக, அவன் அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அந்த அழைப்பு துண்டிக்கப்பட மறுபடியும் அவனது எண்ணிலிருந்து அழைப்பு வர அவளோ தன் தந்தையிடம் கொண்டுபோய் "அப்பா அந்த வேதா எனக்கு போன் பண்றான்" என்று கூறினாள்.

அவரோ " நீ தைரியமாக போன அட்டென்ட் பண்ணு" என்ற கூறியவர், " நான் பார்த்துக்கிறேன்: என்று கூற அவள் போனை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள்.

அவள் வேதப் பேசுவான் என்று எதிர்பார்த்திருக்க அங்கு பேசியது என்னவோ அவன் என் தாய் தான். " நீ எங்கமா இருக்க சீக்கிரம் வந்து என் பையன காப்பாற்றுமா. நீ இல்லனா அவன் விசம் குடித்து விடுவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கான்" என்று சொல்லி, "தயவு செஞ்சு வாம்மா" என்று கதறினார். பின் அந்தப் பெண்ணே மறுபடியும் புலம்பலை நிறுத்தாமல் "அம்மா நீங்க ரெண்டு பேரும் தான காதலிச்சீங்க. இப்ப என் பையனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. எப்ப பார்த்தாலும் உன்னை பத்தி சொல்லிக்கிட்டே இருப்பான். இப்ப இப்படி பண்ணிட்டியே" என்று அவர் கூறிக் கொண்டே போக, அவரை இடைமறித்த கண்ணன் "இந்த பாருங்க என் பொண்ணு ஒன்னு உங்க பையனா காதலிக்கல. உங்க பையன் தான் என் பொண்ணு பின்னாடியே சுத்திகிட்டு பிளாக்மெயில் பண்ணி கிட்டு இருந்தான் காதலிக்கச் சொல்லி. இந்த மாதிரி எல்லாம் பேச்சு வெச்சுக்காதீங்க" என்று கத்தினார்.

அந்த பெண்மணியோ " உங்க பொண்ணு என் பையனும் ஒன்னா இருக்க போட்டோ எல்லாம் எங்ககிட்ட இருக்குது தெரியுமா" என்று கூற கண்ணனும் "அதெல்லாம் எங்களுக்கு நல்லா தெரியும். நீங்க எந்த மாதிரி போட்டோ எடுத்தீங்க என்றும் எனக்கு தெரியும். சும்மா இந்த மாதிரி நடிச்சுகிட்ட பிரச்சனை பண்ணனும்னு நீங்க பண்ணீங்களா, எங்களுக்கும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கத் தெரியும்" என்று எகிற "நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா" என்று அந்த அம்மா சாபம் கொடுக்க ஆரம்பித்தார்.

"ஒழுங்கா உங்க பொண்ணு வந்தானா என் பையன காப்பாற்றிவிடலாம்" என்று கூற அவரோ "எங்க வீட்டு பொண்ணு யாருக்காகவும் எங்கேயும் வரமாட்டா. உன்னால முடிஞ்சதா பார்த்துக்கோ. இதுக்கு மேல ஏதாவது பண்ண நாங்க போலீஸ் கிட்ட போய் சொல்ல வேண்டியதா இருக்கும் ஜாக்கிரதை" என்று கூற, அவன் தாயோ "இப்படி பட்டவளுக்காகவா நீ சாக நினைக்கிற. குடும்பமே உன்ன தப்பா பேசுதே" என்று கூறிக்கொண்டு கைபேசியை அணைத்து விட்டார்.

கண்ணனும் அச்சத்தில் "என்ன மாப்பிள இந்த பொம்பளை இப்படி எல்லாம் பேசுறா" என்று கேட்க, செல்வமும் "அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா சும்மா பயமுறுத்தி பாக்குறாங்க. இவள் மகன் எல்லாம் விஷம் குடிக்கும் ஆளே கிடையாது. நானும் அவன் போற வழி எல்லாம் அபூர்வா சொன்னதுக்கப்புறம் நோட்டம் விட்டு பார்த்தேன். அவனுக்கு இருக்கிற நண்பர்கள் எல்லாம் ரவுடி பசங்க. இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் அவர்களெல்லாம் அசரவே மாட்டார்கள். சரியா சிக்கட்டும் பாத்துக்குறேன் ஒருகை" என்று ஆத்திரத்துடன் கூற, " ஐயோ மாப்பிளை போலீஸ் அவரை பார்த்துக்குவாங்க. நீங்க தனியா எல்லாம் எதுவும் பண்ணிராதிங்க" என்று கூறினார்.

" கவலைப்படாதீங்க மாமா நான் எதுவும் பண்ண போறது கிடையாது. நம்ம குழலி தங்கச்சி கிட்ட இதைப் பற்றி சொல்கிறேன்" என்று இவர் கூறிக் கொண்டிருக்க, அதே நேரம் குழலியும் இதை பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

வேதாவின் வீட்டிற்கு அவனைத் தேடிச் செல்ல அங்கு தாய் மகன்கள் இருவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

வீட்டின் உள்ளே சென்றவர் "இங்கே யாரு வேதா" என்று கேட்க நான் தான் என்று ஒருவன் எழுந்து வந்தான். "சரி வந்து போலீஸ் ஜீப்பில் ஏறு" என்று அவர் கூற, அவனது தாய் "எதுக்கு என் பையன போலீஸ் ஜீப்புகள் ஏற சொல்றீங்க" என்று கேட்க, "கொஞ்சம் வாய மூடிட்டு இருந்தீங்கன்னா உங்கள விட்டுட்டு போவேன். இல்ல உங்களையும் கூட்டிட்டு போக வேண்டியதாக இருக்கும்" என்று கூற அவரும் பயந்து, " இல்ல எதுக்குன்னு தான் கேட்டேன் கோச்சுக்காதீங்க" என்று பம்மியபடி சொன்னார்.

"இந்த மாதிரி ஒரு பையனை பெத்து இருக்குற பொண்ணுங்கள லவ் டார்ச்சர் பண்ணி அனுப்பி வைத்திருப்பதற்காக உன்ன நான் கூட்டிட்டு போயி நாலு தட்டு தட்ட வேண்டும்" என்று குழலி கூற, அவரோ தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்.

பின் பல வித கெட்ட வார்த்தைகளால் அபூர்வாவை திட்ட "இப்போது நீங்கள் வாய மூட போறீங்களா இல்லையா. பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒரு அப்பாவிப் பொண்ணு மேல பழிய போடறீங்க. எத்தனை நாள் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கலாம் நெனச்சிட்டு இருந்தீங்க. இதுக்கு மேல அந்த பொண்ண அவமானப் படுத்துற மாதிரி பேசினா உங்களையும் சேர்த்து உள்ளே தூக்கிப் போட வேண்டியதா இருக்கும். நீங்க அவன் பண்ண காரியத்துக்கு உறுதுணையாய் ஆக இருந்ததாக உங்களையும் உள்ள தள்ளிடுவேன்" என்று அவரை மிரட்ட அவனது தாயும் வேறு வழியில்லாமல் அமைதியாகிவிட்டார்


வேதாவும் "என்னால எங்கேயும் வரமுடியாது. நான் எதுக்கு வரணும்" என்று கேட்க, "அந்த பொண்ண டார்ச்சர் பண்ணும் போது உனக்கு இனித்தது. போலீஸ் ஸ்டேஷன் வர்றதுன்னா கசக்குதா வாடா" என்று இழுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றார்.

போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்ற பின் அவனிடம் "சொல்லு இப்ப எதுக்கு அந்த பொண்ண நீ டார்ச்சர் பண்ணிட்டு இருந்த காதலிக்க சொல்லி" என்று கேட்க அவனோ "டார்ச்சர் எல்லாம் பண்ணல அந்த பொண்ணுகிட்ட போன்ல பேசினா கால் ஹிஸ்டரி வேணா எடுத்துப் பாருங்க. நாங்க எவ்வளவு நேரம் பேசணும்னு உங்களுக்கே புரியும்" என்று சொல்ல, அவரோ " இன்னும் பேசுங்கடா இன்னும் நீங்கள் மாட்டிக்குற அளவுக்கு எதுவும் கண்டுபிடிக்கல அதனால நீங்க பேசத்தானே செய்வீங்க" என்று கூறியவர், " சரி அந்த பொண்ணு கூட அவ்வளவு நேரம் பேசினியே கால் ஏதாவது ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கியா, அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறேன் என்று சொன்ன மாதிரி மெசேஜ் ஏதாவது வச்சிருக்கியா இருந்தா சொல்லு, இல்ல ரெண்டு பேரும் சிரிச்ச மாதிரியே வேற ஏதாவது படம் இது வச்சிருக்கியா வெச்சிருந்தா சொல்லுப்பா. அந்த பொண்ணு கிட்ட நானே சொல்லி உன்கூட சேர்த்து வைக்கிறேன்" என்று கூற அவனோ, "இல்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிற்கிற மாதிரி ஒரு போட்டோ வேண்டும் என்றால் இருக்குது" என்று அதை எடுத்து காட்டினான்.

குழலியோ "ரெண்டு பேரு உசுருக்கு உசுரா காதலிக்கிறோம் என்று சொல்ற. ஆனா ஒரே ஒரு போட்டோ தான் எடுத்தீங்களா" என்று கேட்க அவனோ, " இல்ல மேடம் பின்னாடி இந்த மாதிரி மாட்டிக்குவோம் என்று அவ முன்னாடியே ஜாக்கிரதையா போட்டோலா எடுக்க விடவில்லை" என்று கூறினான்.

அவரோ "அப்புறம் மகராசா வேற ஏதாவது கதை இருந்தாலும் சேர்த்து சொல்லுப்பா. நாங்க சும்மா தான் இருக்கிறோம். கதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கலாம்" என்று கூற, அவனும் "மேடம் நெஜமாத்தான் சொல்றேன்" என்று கூற அவனது கன்னத்தில் வேகமாக இறங்கியது அவரது கை.

" என்ன பார்த்தா என்ன காதுல பூ சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கா. அந்த பொண்ண பத்தி நான் விசாரிச்சுட்டேன் உன்ன பத்தியும் நான் விசாரித்தேன். ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணோட வழியிலிருந்து நீ விலகி போயிட்டானா உனக்கு நல்லது இல்ல காதலிக்கிறேன்னு இந்த மாதிரி தான் பண்ணிக்கிட்டு இருப்பேன் என்று சொன்னா உன்னை எல்லாம் சும்மாவே விட முடியாது" என்று சீற்றத்துடன் கூறினார்.

அவனோ விடாப்பிடியாக "இல்ல மேடம் நாங்கள் காதலிக்கிறோம்" என்று மறுபடியும் கூற, அவர் "நீ சொன்னா எல்லாம் கேட்க மாட்ட நாலு அடி வாங்கினால்தான் நீ கேட்பாய்" என்று கூறி அவனை நாலு தட்டு தட்ட, அவனோ பொறுக்க முடியாமல் "மேடம் நீங்க சொல்றத நான் ஒத்துக்குறேன். ஆனா அவளை வந்து நேரடியாக சொல்ல சொல்லுங்க அப்பதான் நான் ஒதுங்கிக் விடுகிறேன். இல்ல அவங்க வீட்ல இந்த மாதிரி பேச கூட வைத்திருக்கலாம் அல்லவா அதனால வந்து நேர்ல பேச சொல்லுங்க" என்று கூற அவரும் சரி இதுதான் கடைசி என்று நினைத்தவர், " என் கூட வா" என்று அவனை தனியாக விசாரிக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

பின் கண்ணன் மற்றும் செல்வம் ஆகியோருக்கு அழைத்தவர் " நீங்க அந்த பொண்ண கூட்டிட்டு வாங்க. அவ நேரடியாக சொன்னா இவன் விட்டுவிடுவதாக சொல்றான்" என்று கூற அவர்களும் வேறு வழி இல்லாததால் "சரி மா. நாங்க கூட்டிட்டு வருகிறோம்" என்று கூறினார்.

அபூர்வாவிடம் வந்தவர்கள் "அபூர்வா நீ வந்து நேரடியா அந்த பையன பிடிக்கல னு சொல்லிட்டா, அவன் உன்னை விட்டு விடுகிறேன் என்று சொல்லி இருக்கானாம். அதனால நீ ஒரு தடவை வந்து நேரடியா சொல்லி விடுகிறாயா" என்று கேட்க அவளோ பயந்தபடி "அங்கயா என்னால முடியாதுப்பா. எனக்கு பயமா இருக்குது அவனை பார்க்க" என்று கூற அவன் செல்வமும் "நாங்க எல்லாம் சுத்தி இருப்போம். உனக்கு என்ன பயம் நீ தைரியமா வா" என்று கூற அவளுக்கு வேறு வழி இல்லை என்ற ஒரே காரணத்தால் சரி என்றாள்.

பின்னர் குழலி சொன்ன இடத்திற்கு அபூர்வாவை அழைத்து வந்தனர். அவளை உள்ளே அழைத்துச் செல்ல, அவள் வருவதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட வேதா, அவன் கையை பிடித்திருந்த காவலர் கையை வேகமாக உதறியவன் அவள் அருகில் ஓடி அவள் கால்களைப் பிடித்துக் கொண்டு "நீ என்ன விட்டு போயிடாத. நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன் அபூர்வா" என்று கத்த ஆரம்பித்து விட்டான். அவள் அதிர்ச்சியில் நிற்க சுற்றியிருந்த அனைவருமே இதை எதிர்பார்க்கவில்லை என்பது போல் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டனர்.
 
Advertisement

Sponsored