முள்ளும் மலராய் தோன்றும் 3

Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
முமதோ 3

தந்தை இறந்த செய்தி கேட்டு துடித்துப் போய் ஓடி வந்தனர் சுந்தரியும், தேவனும்..

அரசாங்கம் இரண்டு நாள் துக்கம் அனுசரித்தது.. குண்டுகள் முழங்க அரசாங்க மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார் தந்தையானவர்....

அதன்பின் அவர்களை கண்டுகொள்வார் யாருமில்லை... வயது வந்த வாரிசென யாரேனும் இருந்திருந்தால்.. ஒரு வேளை இடைத்தேர்தலில் நிற்கவைக்கவாவது அவர்களை கண்டுகொள்ளும் அரசு..

எல்லாம் குழந்தைகள்.. இதற்கு மேல் அவர்களை பாதுகாக்க எந்த காரணமும் இல்லை கட்சிக்கு... வேண்டுமானால்.. சில வருடங்கள் கழித்து இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என விட்டுவிட்டது கட்சி..!!

சூழ இருந்த உற்றார் உறவினர்.. அவரவர் குடும்பம் பார்க்கச் சென்றுவிட்டனர்... ஒட்டிக் கொள்ள நினைத்த சிலரையும் சுந்தரியே பார்த்து விலக்கிவிட்டாள் எனலாம்...

நோக்கம் பாசமாய் இல்லாமல், பணமாய் இருப்பதை உணர்ந்திருந்தாள்.. எனவே அவர்களை எட்டவே நிறுத்தினாள்..!!

பதினாராம் நாள் காரியமும் முடிந்து எல்லாம் முடிந்ததென உணரும் தருணமும் வந்து தனித்துவிடப்பட்டனர் அனைவரும்...

அதன்பின்பே.. அவள் நினைத்தும் பார்க்காத, கனவிலும் எண்ணாத துன்பங்கள் அவளை அணுகின...

அவளுக்கு ஏற்கனவே அந்த நச்சுப்பாம்பின் மேல் இருந்த சந்தேகத்தால் அவனை எப்போதும் விலக்கியே வைத்திருந்தாள்... அவள் தந்தைக்கு பயந்து இவளை விட்டு விலகி நின்றவன்.. அவர் இல்லாத தைரியத்தில் இவளை நெருங்கினான்...

வீட்டின் ஹாலை தாண்டியறியாதவன் நள்ளிரவில் மாடி ஏறி, அவள் மஞ்சம் நாடி வந்தான்.. சித்தப்பன் முறை கொண்ட எட்டப்பன் சின்னஞ்சிறு கிளியை சிதறடிக்க வந்தான்...

முதலில் அவனை தனதறையில் எதிர்பாராதவள்.., அந்த திகைப்பில் இருந்து மீண்டு "ஏய் இங்க ஏன் வந்த? இன்னேரம் என் ரூம்ல என்ன செய்யற?" என கேட்க..

"உங்கப்பா செத்ததுக்கப்புறம் கூட உனக்கு கொஞ்சம் கூட திமிரு குறையல பேபி... இப்போ உனக்கு யாருமில்லை.. என் ஆதரவில்லாம உங்களால வாழக்கூட முடியாது.. இன்னும் உனக்கு கொழுப்பு குறையல.. சித்தப்பன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஏய்னு சொல்ற?" என்றபடி அவளை நெருங்கினான்...

ஏன் அருகில் வருகினான் என தெரியாவிட்டாலும் அவளது பெண்மை அவளை எச்சரிக்க..., மெதுவாய் நகர்ந்தவள்.. "இப்போ ஏன் இங்க வந்த" என்றாள் மீண்டும்..

"உனக்கு நான் யார்? என்ன உறவுமுறைன்னே மனசுல ஏறலல்ல? ரொம்ப நல்லது... ஏன்னா எனக்கு இப்போ இந்த வடிவான உடம்பு தான் வேணும்" என்றபடி அவளை இன்னும் நெருங்கினான்.

நெஞ்சம் திக்கென்று அடிக்க பயப்பந்து வயிற்றில் உருண்டாலும்.. "ஏய் என்ன, என்ன நினச்சி பேசிக்கிட்டு இருக்க? என் வீட்ல நின்னுகிட்டு? ஒரு சத்தம் குடுத்தா எல்லாரும் ஓடி வந்துடுவாங்க தெரியும்ல" என்றாள் தைரியமாகவே காட்டியபடி..

"இந்த வீட்டு விசுவாசமான நாய்களையெல்லாம் லீவு குடுத்து அனுப்பிட்டேன்.. உங்க அப்பா எல்லாத்தயும் என் பொறுப்பில விட்டாரு.. இங்க இருக்க வேலையாட்கள் நான் சொல்றத தான் செய்வாங்க.. புரியுதா? உன்னால என்ன மீறி எதுவும் செய்ய முடியாது.. உன் தம்பி, தங்கச்சிக எல்லாருக்கும் பால்ல மயக்க மருந்து கலந்து குடுத்தாச்சு..இனி நாளைக்கு மதியம் தான் எழுந்திருப்பாங்க... பெரியவன் எவனோ ப்ரண்ட்டோட ஊர் சுத்தப்போய்டான்... " என்றபடி மேலும் அவளை நெருங்கி அணைத்தான்..

அவன் ஒன்றை அறியவில்லை.. அது அவள் எப்போதும் இவனிடமிருந்து ஒரு தாக்குதலை எதிர்பார்த்தாள்.. அதற்காக தன்னை எப்போதும் தயாராகவே வைத்திருந்தாள்..

இப்போது கூட அவளது இரவு உடைக்குள் சிறிய பொட்டலத்தில் மிளகாய் பொடி இருந்தது.. அதோ அந்த டீபாய் மேல் பெப்பர் ஸ்ப்ரே இருந்தது... அதற்கடியில் கப்போர்டில் விசம் தடவிய கத்தி உரைக்குள் உறங்கிக்கொண்டிருந்தது..

பெண் பித்தம் பிடித்த சித்தப்பனவன் சித்தம் கலங்கடிப்பாளா? இல்லை தன் சித்தம் மொத்தம் தொலைத்து அவன் பிடியில் சிக்கிக் கொள்வாளா?

பெண்ணவள் ஏதுமறியா பேதையாய் இருந்தால்.., சித்தம் சிதறித்தான் போயிருப்பாள்.. அவள் எத்தனுக்கும் எத்தனாய் இருந்தாள்..

அவன் இளக்காரமாய் இவள் இடை பற்ற.., அவன் முகத்தில் மிளகாய் பொடி அபிஷேகம் அழகாய் நடந்தது.. அடுத்த நொடி சிறிதும் தாமதிக்காது ஓடிச்சென்று கத்தியை எடுத்து அவன் கழுத்தை சீவினாள்..!!

மானம் பறிக்க வரும் கயவர் உயிர் குடிப்பதொன்றும் தவறில்லையே!!

அவன் சங்கை சல்லடையாக்கிவிட்டு தனதறையில் இருந்த அலாரத்தை ஒளிக்க விட்டாள்..

அது அந்த வீட்டின் குழந்தைகள் அனைவர் அறையிலும் இருந்தது.. மொட்டை மாடியில் சில நேரம் விளையாடச்சென்றால்.. இவர்களை அறைக்குத் தேடிவரும் அன்னையவள் அந்த அலாரத்தை அடிப்பார்...

அது கேட்டு மாடியில் இருப்பவர்கள் தாயிடம் வந்து விடுவார்கள்.. அவ்வளவு பெரிய வீட்டில் மேலும் கீலும் ஏறி இறங்க ப்ரயத்தனப்பட்டு அவள் தாயார் கண்டறிந்த சிறிய யோசனை இது..

அதை சுந்தரி அழகாய் பயன்படுத்திக் கொண்டாள் .. இல்லையேல் தந்தை இறந்த தினம் முதல் தனது மூத்த தம்பியை நம்பகமான விசுவாசி ஒருவனுடன்.. வீட்டை விட்டு வெளியே செல்வதாய் போக்குக்காட்டி வீட்டின் மொட்டை மாடியிலேயே தங்க வைத்திருக்க மாட்டாள்..

ஆம், எப்போதும் தம்மை ஆபத்து சூழ்ந்துள்ளதை அறிந்திருந்தாள்.., தமது குடும்பத்தின் மூத்த வாரிசாவது தப்ப வேண்டுமென்றோ, அல்லது ஆபத்துக்காலத்தில் அவன் உதவி தேவைப்படுமென்றோ அவனை தினமும் இரவு வெளியேற்றினாள்.. ஆனால் தூரச்சென்றால் எங்கே விரைந்து செயல்பட இயலாதோவென்று சொந்த வீட்டிலேயே ரகசியமாய் மாடியில் தங்கச் செய்தாள்..!!

இப்போது இவள் அலாரத்தை ஒளிக்கவிட்டதும் அவளது அலைபேசிக்கு அறையின் இண்டர்காமிற்கு அழைத்தவன் அவள் மொழி கேட்டு விரைந்தான் அவளதறைக்கு!!
 
Advertisement

Sponsored