முரண்பாடே காதலாய் 5

Advertisement


Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
காதல் தான் என
உரிமையாய்
தோள்சாய்க்கவும் முடியாமல் ..
நட்புதான் என்னும்
உறுதியுடன்
கைகோர்க்கவும் முடியாமல்
எத்தனையோ மனங்கள் பொம்மலாட்டம் ஆடுகின்றன !!வாழ்க்கை என்னும் தங்கள் பொம்மலாட்டத்தில் ...!!!



அத்தியாயம் 5:


உறங்கும் அனைவரையும் தன் கதிர்கள் என்னும் கைகளால் தட்டி எழுப்பியபடி தன் அன்றாடப் பணியை செவ்வனே தொடங்கினான் சூரியன்.

இரவு முழுக்க பரம்பொருளான பரமேஸ்வரரிடம் தங்களை ஒப்புவித்து பூஜை , நடனம் எனக் களித்திருந்த சந்திரமதியினர், சூரியனின் வரவை உணர்ந்து தங்கள் இருப்பிடம் நோக்கி நகரத் துவங்கினர்.

ஈசனே தங்கள் துணை என எண்ணி இரவு முழுக்க அவர் புகழ் பாடியவர்கள் முகம் அனைத்தும் தேஜஸுடன் பிரகாசமாய் இருக்க, ஒரே ஒருவரின் முகம் மட்டும் பொலிவிழந்து இருந்தது.

அது வேறு யாருமல்ல, சந்திரமதியின் நாகராணி சந்திரையின் முகம் தான் அது.

நேற்றிரவு பௌர்ணமி பூஜையில் ￰இறுதிவரை சந்திராதித்யன் கலந்துகொள்ளவில்லை என்பதை மற்றவர் அறியவில்லை எனினும் அவனை மட்டுமே எதிர்பார்த்திருந்த சிந்திரை அறிந்திருந்தார்.

இதற்க்கு முன்னரே பலமுறை சந்திரமதியின் விதிகளை மீறி இருந்த மகனின் மேல் சினத்துடன் இருக்கும் நாகராஜ இவ்விடயத்தில் என் செய்வாரோ ??என ஒருபுறம் பயம் இருந்தாலும்,

இது சந்திராதித்யன் பௌர்ணமி பூஜையை தவிர்ப்பது இரண்டாம் முறையாகும் . இன்னும் இருமுறை இவ்வாறு நேர்ந்துவிட்டால் ????? என அவர் தாய் மனம் மகனை பற்றி அறிந்திருந்ததால் அவ்வாறு நேர்ந்துவிடுமோ என கலங்கி தவித்தது .

இவர்கள் செல்லும் பாதையில் இருந்து பல தூரம் தள்ளி அக்குகை வீடு இருந்தாலும், தாயின் பரிதவிப்பு சேயை சென்றடையாதா??

இவரின் பரிதவிப்பு, கலக்கம் எல்லாம் சந்திராத்தித்யனை தாக்கியதாலோ என்னவோ ? அவன் உறக்கம் கலைந்து எழுந்தான்.

சந்திராத்தியனுக்கு ஏனோ தன் மனம் சற்று வருத்தத்தில் ஆழ்ந்து கனமாய் இருப்பதாய் தோன்ற , அதில் தன் தாய் தன்னைத் தேடித் தவிக்கிறார்கள் என்பதை மிகச் சரியாய் உணர்ந்துக்கொண்டான்.

ஏனெனில் அவனின் சிறுவயது முதலே சிந்திரை கலக்கமுறும் பொழுதெல்லாம் அவனின் மனம் கனமாவதை உணர்ந்திருக்கிறான்.

இப்பொழுது தன் தாயின் மனதின் கலக்கத்திற்கு காரணம் தன்னை காணாமல் தவிப்பதே ஆகும் என மிகச்சரியாய் எண்ணியவன் விரைவாய் தாயிடம் செல்லவேண்டும் என எண்ணி எழுந்தான்.

எழுந்தவனின் பார்வையில் விழுந்தாள் எதிரில் உறங்கிக்கொண்டிருந்தவள் .

ஒன்றும் தெரியாத சிறு குழந்தை போல் உறங்குபவளை கண்டவனுக்கு, நேற்று நடந்தவைகளை எண்ணி " இப்பெண்ணா அவ்வளவு பேசியது?" எனச் சந்தேகம் தோன்றியது.

"நேற்று அவள் செய்த சேட்டைகளையும் , பேசிய பேச்சையும் கேட்டவர்கள் இப்பொழுது அவளை பார்த்தார்களானால் ஒருவேளை இப்பெண்ணிற்கு சகோதரி எவரேனும் இருக்கிறார்களா என்று தான் வினவியிருப்பார்கள்" என எண்ணியவன் அவளை கண்ட நொடிமுதல் அவள் செய்த அட்டகாசம் அனைத்தும் நினைவு வர தானாய் இதழ்களில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

அவள் ஆழ்ந்து உறங்குவதை கண்டவன் , அவள் எழும்முன் வந்துவிடலாம் என தன் தாயை தேடிச் சென்றான்.

"நம்மை முழுதாய் நம்புவர்களை, எக்காரணம் கொண்டும் அந்த நம்பிக்கை பொய்த்துவிடாமல் காப்பது நமது கடமை என்று தாங்கள் தானே அம்மா எனக்கு சிறுவயது முதல் கூறிவந்துள்ளீர்கள் "

-என கேட்டபடி தன் முன் அமர்ந்திருந்த மகனை கண்ட சிந்திரையின் தலை , "ஆமாம் " என்று ஆட ,

" அதைத்தானே நானும் செய்தேன் அம்மா .ஒருவர் நேற்றிரவு நான் உடனிருப்பேன் என நம்பிக்கை கொண்டார் அம்மா. இத்தனைக்கும் அவருக்கு நான் யாரென்ற விடயம் தெரியாது , ஆயினும் அவரை தனியே விட்டு செல்லமாட்டேன் என என்மேல் நம்பிக்கை கொண்டார் . என்னால் அவரின் அந்நம்பிக்கையை எவ்வாறு உடைக்கமுடியும் அம்மா?? "

- என வாதிட்டவனை பார்த்தவரின் முகம் யோசனையில் ஆழ, யோசனையின் முடிவில் அது கசங்க தொடங்கியது.

அதில் அத்தனை நேரம் அவரின் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்திராதித்யனின் மனம் துணுக்குற்றது .

அப்படியே அவரின் காலின் அருகில் மண்டியிட்டவாறு அமர்ந்தவன்," அம்மா ! எனக்கு தெரியும் என்னால் நேற்று இரவு பௌர்ணமி பூஜையில் கலந்துகொள்ளமுடியவில்லை என்று தானே துயரம் கொல்கீறீர்கள்.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, எனது அச்செயல் தங்களை மிகவும் வருத்திவிட்டதல்லவா " என வருந்தி தாயிடம் மன்னிப்பை வேண்டினான் .

அவனை கண்ட சிந்திரைக்கு சிறுவயதில் ஏதேனும் தவறு செய்தால் தன் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டபடி
தன் முகத்தை முகத்தை பார்க்கும் சிறுவயது சந்திராத்தியன் நினைவு வர , தன் துயரத்தால் கலங்கியிருக்கும் அவன் கலக்கம் தீர்க்க புன்னகையுடன் அவனின் தலை கோதினார்.

"அதில்லை மகனே! நீ கூறும்பொழுது 'ஒருவர்' என்றாயே அது நிச்சயம் நம் குலத்தவர் அல்ல என்பதை நான் அறிவேன் . அதேபோல் அவர் மனித குலத்தவர் என்பதையும் நான் அறிவேன் " எனச் சொல்லி மகனின் முகத்தில் தோன்றும் பாவங்களை பார்ப்பதற்காக இடையில் நிறுத்தினார் .

சிந்திரையின் எண்ணத்தை பொய்யாக்குவது போல் சந்திராத்தியன் எவ்வித உணர்வையும் முகத்தில் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருக்க , அதை பார்த்த சிந்திரைக்கு தான் தன் அனுமானம் தவறோ என்ற சந்தேகம் தோன்றியது .

தனையனது முகம் போல் அல்லாமல் தாயின் முகம் தன் மன உணர்வுகளை காட்டியதில் சிரித்த சந்திராதித்யன் ,

"அம்மா! தாங்கள் சந்தேகம் கொள்ள தேவை இல்லை . தாங்கள் சொன்னது போல் அவர் மனித குலத்தவர் தான் " என்றான்.

அவனின் பேச்சில் அதிர்ந்தாலும் ஏற்கனவே தான் இதை எதிர்பார்த்திருந்ததால் நொடியில் தன்னை சமாளித்து கொண்டவர்,

" ஏன் மகனே ? உனக்கு மனிதர்களின் மேல் இத்தனை சிநேகம்? இந்த சிநேகம் இப்பொழுது அல்ல உனது சிறுவயது முதலே உன்னிடம் உள்ளது என்பதும் , அதற்க்கு காரணம் உன்னை ஓர் முறை ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஒரு சிறுமி என்றும் நான் அறிவேன் மகனே! "

" ஆனால் என் கேள்வி எல்லாம் அன்று ஒருநாள் மட்டுமே நீ மனிதர்களை கண்டாய் , பிறகு எவ்வாறு அவர்கள் மேல் உனக்கு இத்தனை சிநேகம் .அதன் காரணமாய் நேற்று நீ செய்த செயலின் தவறு நீ அறிவாய் தானே ?? ,

பல வருடங்கள் முன் இச்சாதாரிகளால் சிலபல காரணங்களால் பௌர்ணமி பூஜையில் தொடர்ந்து கலந்துகொள்ளா முடியாமல்போக, அவர்களில் அதிக நாகங்கள் தண்டனை பெறுவது தொடர்ந்தது .அதன் காரணமாய் நம்மவர்கள் ஈசனிடம் முறையிட்டு தவம் புரிய,அவரிடம் பெற்ற அருளினால் மூன்று முறை மட்டும் பூஜையை தவிர்க்க அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து நான்காம் முறை நம்மில் எவர் பௌர்ணமி பூஜையில் பரம்பொருளிடம் தங்களை சமர்பிக்க முடியாமல் போகிறதோ அவர் அந்நாளில் எவ்வுருவில் இருக்கிறாரோ அதே உருவில் , சக்திகள் அற்று தொடர்ந்து முப்பது நாட்கள் இருக்க வேண்டும் என்பது நம்மவர்களுக்கான விதி. இதை ஈசனே எண்ணினாலும் மாற்றமுடியாது . தற்பொழுது உனது இரண்டாம் முறை முடிந்துவிட்டது இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே உள்ளது . உன்னைப்பற்றி நான் அறிவேன் அதுவே என் கலக்கத்தின் காரணம் மகனே! "

-என்று நீளமாய் தங்கள் குலத்தின் விதியை அக்குலத்தின் நாகராணியாகவும் ,அதை மீறினால் மகனின் நிலை என்னாகுமோ என ஒரு தாயாகவும் தன் பயத்தை விளக்கினார் .

அவர் சொல்லியது அனைத்தையும் சிரத்தையுடன் கேட்டவன் அவரின் இருகைகளையும் தன் கைகளுக்குள் வைத்து, "அம்மா! உங்களுக்கு நினைவிருக்கிறதா ... அது ...எனது சிறுவயதில் என்னை காப்பாற்றிய அச்சிறுமியை தங்களுக்கு நினைவிருக்கிறதா " என முகம் பூரிக்க கேட்டவனின் கண்கள் சில நினைவுகளில் கலங்க தொடங்கியது.

மகனின் சந்தோஷக் குரலில் தன் கவலை மறந்தவர் , " ஆம் மகனே ! அதை நான் எவ்வாறு மறப்பேன் ?? நீ எங்களுக்கு கிடைத்த வரம் ஆவாய் , நானும் உன் தந்தையும் பலநாட்களாய் கடும் விரதங்கள் இருந்து ஈசனை மகிழ்வித்ததின் பலனாய் எங்களுக்கு அவர் அருளிய வரமடா நீ . பிறக்கும்பொழுதே நாகராஜாவிற்கான சக்திகளுடன் பிறந்த உனக்கு அன்று நேர இருந்த ஆபத்தை நினைத்தால் இன்றும் ஓர்நொடி என் மனம் தன் துடிப்பை நிறுத்திவிடுகிறது " என்றவரின் கைகளின் நடுக்கத்தை தன் கைகளிள் மூலம் அறிந்து மெதுவாய் வருடினான் சந்திராதித்யன் .


--------------------------------------------------------------------------------

￰சின்னம்பாளையம்:

"என்னடி அதிசயமா வண்டில வரும் போது முழிச்சிட்டு வர ? எப்பவும் ஏறுன பத்து நிமிஷத்துல தூங்க ஆரம்பிச்சிடுவியே! அதும் அந்த ஒரே காரணத்துக்காக தான பின்னாடி நான் மட்டும் தான் உட்காருவனு அடம்பிடிச்சி இடத்த பிடிக்கிற "- என முன்புறம் அமர்ந்தவாறு நக்கலாய் கேட்ட மித்ரனின் தலையில் சற்று எக்கிக் கொட்டினாள் யஷி.

"ஏன்டா என்கிட்ட அடிவாங்கலனா உனக்கு தூக்கம் வராதா ? வான்டெட் ஆ வந்து சிக்குற " என்ற யஷி அவனின் அடக்கிய சிரிப்பில் மீண்டுமாய் அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.

காலையில் அவளை அவன் அழைத்த விதத்தில் கனவில் வந்தவன் நினைவில் வந்து தொலைக்க அது வெறும் கனவு என விட முடியாமல் ஏதோ ஒன்று அவளை தடுமாற வைத்தது .

ஏனோ முதலில் அக்கனவு அவளை பயம்கொள்ள செய்திருந்தாலும் , அதை நினைக்க நினைக்க அவளின் மனம் அதை ரசிக்கவே தொடங்க தன் மனம் செல்லும் பாதையில் யஷி பயந்திருந்தாள்.

தன்னை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவளிடம் மித்ரன்,
"நாம் நமது நிகழ்ச்சிக்கான முதல் அடியாய் ஓர் இடம் செல்ல போகிறோம். நீ ஏற்கனவே தயாராய் தானே இருக்குற, வா போகலாம் . போகும் வழியில் சாப்டுக்கலாம் " என்று அழைத்த பொழுது எப்பொழுதும் போல் பின்புறம் ஏறியவள் தன் சிந்தனையிலே உளவியபடி இருந்ததில் இன்று உறங்கவில்லை .அதற்கானதே மேற்கூறிய மித்ரனின் நக்கல் .

அவள் கொட்டியதில், "ஏய்ய்ய் ....பாப்பா ! வலிக்குதுடி " என தன் தலையை அழுத்தி தேய்த்தவாரே திரும்பிய மித்ரன் , அங்கு யஷி மீண்டுமாய் யோசனைக்கு செல்வதை கண்டு ,

"இவ ஏன் இப்போ இருக்குற கொஞ்ச மூளையை தேவை இல்லாமல் கசக்குறா ? இவ யோசிச்சாலே அது ஆபத்தா தான முடியும் " என அவனின் மனதில் அபாய சங்கடித்தது .

அவளின் யோசனையை கலைக்க தன்னிடமிருந்த ஐ-பேடை எடுத்தவன் அவளை அழைத்து சில படங்களை காட்டினான் .

அதை கண்ட யஷி தன் யோசனை கலைந்து , " வாவ் ! இந்த வீடுலாம் செம்மையா இருக்குடா...ஒவ்வொரு வீடும் எவ்வளவு பெருசா அழகா இருக்கு . ஆனா டேய் ! ஏதோ ஒண்ணு இடிக்கல?" என்று யோசித்தவளின் கண்கள் அப்படங்களை ஆராய்வதை சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.

யஷி, "ஆங்.. கண்டுபிடிச்சிட்டேன்டா ...நான் கண்டுபிடிச்சிட்டேன்" என போட்டோ பார்க்கும் ஆர்வத்தில் சற்று முன் வந்திருந்தவள் தன் அருகிலிருந்த அவனின் தோளில் பலமாய் தட்டினாள்.

"ஆத்தாடி! ஆஆ" என தன் தோளை தேய்த்து விட்டுக்கொண்ட மித்ரன் ,

"ஏண்டி பாப்பா! உனக்கு என்னைய அடிக்காம எதையுமே சொல்ல தெரியாதா " என்று அவள் அடித்ததில் வலித்தது போல் பொய்யாய் முகத்தை பாவமாக்கி கேட்க,

"ஹாஹா! இதுலாம் நமக்குள்ள புதுசா என்னடா ?? " என கேட்டு மீண்டுமாய் அவனின் தோளில் குத்தி , அவன் முன் செய்தது போலவே நக்கலாய் ,

"அரசியல்ல இதெல்லாம் சகஜ......மப்பா " என்று இழுத்து கண்சிமிட்டியவள் அவனின் முறைப்பில் இம்முறை சிரித்துகொண்டே எக்கி அவனின் தோளில் கைபோட்டாள்.

இப்பொழுது அவளை கண்ட அவனுக்குமே சிரிப்புவர அடுத்து அங்கு இருவரின் இணைந்த சிரிப்பே அக்காரினுள் ஒலித்தது .

அவர்கள் இருவரும் பேசிகொண்டே வந்தாலும் இருவரின் கண்களுமே அடிக்கடி வெளியே பார்த்துக்கொண்டு வர , அதில் சிறிது நேரத்திலே ஓர் சந்தேகம் இருவரின் மனதிலுமே தோன்றியது.

"மித்ரா"

"பாப்பா"

-இருவரும் ஒரே நேரத்தில் மற்றவரை அழைக்க , யஷி-யிடம் நீயே முதலில் சொல் என்பதுபோல் பார்த்தான் மித்ரன்.

அதை புரிந்துகொண்ட யஷி , " மித்ரா! நீ கவனிச்சியா அத ? இங்க நிறைய வாகனத்துல ஒரே மாதிரி பெயர் எழுதிற்காங்கடா . இது ஏதோ வித்தியாசமா இல்லை ?" என சந்தேகமாய் கேட்டாள்.

" ஆமாடி ! இது ஏதோ கோட் வர்ட் மாதிரி தான் இருக்கு .... சரி விடு முதல்ல நம்ப வந்த வேலையை நான் பார்ப்போம் " என அத்தோடு அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் மித்ரன்.

அவன் சொல்லிய அடுத்த நொடி அவர்களின் கார் பெரும் சத்தத்துடன் நின்றுவிட்டது .

கார் ஏன் நின்றது என்ற குழப்பத்துடன் கதிரேசன் இறங்கி சென்றிருக்க அவரை தொடர்ந்து மித்ரனும் இறங்கினான்.

இறங்கி முன்னாள் வந்து நின்றவனுக்கோ தன் அருகில் எவரோ நின்றிருப்பதுபோல் தோன்ற , சுற்றும் முற்றும் பார்த்தவன் எவரும் இல்லாததில் தோள்களை குலுக்கிக் கொண்டான்.

அப்பொழுது ஓர் ஒருசக்கர வாகனம் அவனை கடந்து செல்ல அதிலும் அவர்கள் மற்ற வண்டிகளில் கண்டது போல் அதே பெயர் இருந்தது.

அந்த வண்டி கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்த மித்ரனின் காதில் , " தேடிச் செல் மித்ரா ! உனது உயிரானவளுக்கான ஆபத்தை தேடிச்செல் ! அதிலிருந்து அவளை காக்க உன்னால் முடியும் " என அழுத்தமாய் உரைத்து விட்டு நொடியில் மறைந்திருந்தது .


அதில் ஒருநிமிடம் திகைத்து நின்றுவிட்ட மித்ரன் , " தான் கேட்டது என்ன? யார் இப்பொழுது பேசியது ? அது...அது என்ன சொல்லியது உயிரானவளுக்கு ஆபத்தா எனது உயிர் என்றால் யஷி.....யஷியின் உயிருக்கு ஆபத்தா ???"" என குழம்பியவனின் மனம் யஷிக்கு ஆபத்து என்றதில் ஓர் நிமிடம் தடுமாறி வேகமாய் துடிக்கஆரம்பித்தது .

அவன் முற்றுப்புள்ளி வைத்து கடந்துவிடலாம் என நினைத்த ஓர் விஷயத்துக்கு , கமா போட்டு தொடர செய்துவிட்டு மறைந்திருந்தது அம்மாயக் குரல் .




-காதலாகும்...
Nice EP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top