மின்னல் 13

Advertisement

Rakshi

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 13

"யுவா" என்ற சாரதாவின் அழைப்பில் யுவரத்னா தயங்கி நின்றது ஒரு நொடி தான் சட்டென்று தலையைக் குலுக்கிக் கொண்டு "என்ன அத்தை" என்று கேட்டவாறே தட தடவென இறங்கி சென்று அவர் அருகில் நின்றாள். அவளை மேலும் கீழுமாக நோக்கிய சாரதா

"எதுக்கு இப்படி ஓடி வர்ற?"

"நீங்க தானே கூப்பிட்டீங்க?"

"கூப்பிட்டேன் தான். ஆனா இப்படி பதட்டமா ஓடி வர்ற அளவுக்கு தலை போற அவசரம் இங்க யாருக்கும் இல்லை. ஸோ இனி படியில இறங்குறப்போ பார்த்து வா யுவா" என்றவர் அவள் தனது அறையை நோக்கியவாறே மண்டையை ஆட்டவும் மண்டையிலேயே ஓங்கிக் குட்டினார்.

"ஸ்ஸ்..ஆஆ..அத்தை" என்று பாவமாகக் கேட்டவாறே மண்டையைத் தேய்த்தவள் "எதுக்கு அடிச்சீங்க?" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

"பின்ன என்ன டி. இப்போ தான் அந்த ரூம் ல இருந்து வந்த. இப்போ என்னவோ தாஜ்மஹாலைப் பார்க்கிற மாதிரி இப்படி வாயைப் பிளந்து கொண்டு பார்க்கிற?" என்று கேட்கவும்

"அது..அது." என்று கையைப் பிசைந்தவள் "அது கதவை லாக் பண்ணேனா என்று பார்த்தேன் அத்தை ஹி..ஹி" என்று சிரிக்கவும் மேலும் சந்தேகமாகப் பார்த்தவர்

"என்னமோ ஒரு மார்க்கமாத் தான்டி இருக்க" என்றுவிட்டு "சரி போ..குளிச்சுட்டு வந்து தோட்டத்தில கொஞ்சம் பூப்பறிச்சுட்டு சாமிப்படத்துக்கு வைச்சு விளக்கேத்திடு யுவா" என்றபடி அவர் சமையல் கட்டினுள் புகவும் விரலில் நகம் கடித்தபடி சோபாவில் அமர்ந்தாள்.

'எப்படி உள்ள அபி மாமா இருக்கிறப்போ போறது? இந்த அபி மாமாவும் இப்படி செய்யாட்டி தான் என்ன. இப்போ யாரு முழிச்சுட்டு இருக்கிறது. பொறுப்பே இல்ல மாமா உனக்கு" என்று அவன் முன்னாலே இருப்பது போல சலித்துக் கொண்டவள் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ முதுகில் ஓங்கி ஒரு அடி விழவும் திடுக்கிட்டவள் அங்கிருந்த அத்தையைக் கண்டு "ஹீ..ஹீ" என்று மீண்டும் இளித்து வைத்தாள்.

"ஒரு மணிநேரமா இப்படித்தான் இருக்கியா? கழுதை. என்ன யோசனை அப்படி உனக்கு?"

"அது இல்லை அத்தை. இன்றைக்கு ரிஷி சார் வர்ற என்றார். அது தான் யோசிச்சுட்டு இருக்கேன்"

"அவன் எதுக்கு திடீரென்று வர்றானாம்?" தோளைக் குலுக்கியவளின் காதில் இனிமையாக "அம்மா காபி ப்ளீஸ்" என்ற அபியின் குரல் விழுந்தது.

ஹப்பா என்றபடி சோபாவில் சாய்ந்தவளை விநோதமாகப் பார்த்தபடியே "இரு போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் சாரதா.

அவர் சென்றதும் பெருமூச்சை வெளியேற்றியவள் தன் முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த அபியை முறைத்தாள். அவள் முறைக்கவும் புருவம் உயர்த்தியவன்

"என்ன யுவா?" என்று எதுவுமே தெரியாதது போல கேட்கவும் தன்னருகில் இருந்த குஷனை எடுத்து அவன் மேலே வீசினாள். அதை இலாவகமாகப் பற்றி தன்னருகே போட்டவன்
"என்ன யுவா? எதுக்கு கோவம்?" என்று புருவ்ம் உயர்த்தி வினவவும்

"ஏன் உங்களுக்குத் தெரியாதா?" என்று புசுபுசு என்று மூச்சு விட்டவாறே வினவினாள்.

"தெரியல என்று தானே கேட்கிறேன். அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?" என்றவன் "அம்மா! அம்மா" என்று கூவத் தொடங்கவும் 'எதே அத்தையா!' என்று ஜெர்க் ஆனவள் பாய்ந்து வந்து அவனது வாயைத் தன் கையால் மூடி "சத்தம் போடாதீங்க மாமா! ஏற்கனவே அத்தை எனக்கு பேயோட்டனுமா என்று பார்த்துட்டு இருக்காங்க" என்று மெல்லிய குரலில் முணகியவள் தொப்பென அவனருகில் அமர்ந்தாள். அபிக்கு இப்படி காலையில் யுவாவைச் சீண்டி விளையாடுவது அவ்வளவு பிடித்தது. சிரிப்புடன் அவளை பார்த்தவன் மெல்லிய குரலில்

"என்னாச்சு?" என்று கேட்கவும்

"நீங்க பாட்டுக்கு என் ரூம் ல வந்து படுத்துட்டீங்க. யாரும் பார்த்துடுவாங்களோ.. ரூமுக்குள்ள போய்டுவாங்களோ. எப்படி நான் நீங்க இருக்கிற ரூம்குள்ள வந்து குளிக்கிற? என்று எவ்வளவு யோசிச்சிட்டு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?" என்று படபடத்தாள்.

அவள் பேசிய தினுசில் தலையில் அடித்துக் கொண்டவன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே
"ஹேய்! கத்தாத! கத்தாத டி. நீ சொல்றத யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க? தெரியாம அசதியில அங்க தூங்கிட்டேன். நான் ஒரு ஓரமாத் தூங்கிட்டு இருந்தேன் பாத்ரூம்ல போய் நீ குளிக்கிறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்கவும்

"எதே! என்ன பிரச்சனையா? நான் குளிச்சுட்டு இருக்கிறப்போ ரூம்க்குள்ள யாரும் வந்தா அந்த சிட்யூவேஷன் எப்படி இருக்கும்? அத விடுங்க நான் குளிச்சுட்டு வெளியில வர்றப்போ நீங்க முழிச்சு இருந்தீங்க என்றா" என்று ஏதோ கூற வந்தவள் தான் கூற வந்ததை உணர்ந்து பே என்று விழித்தாள்.

"ஹா!ஹா" அவளின் பாவனையில் சிரித்த அபி எட்டி அவளது தலையைத் தட்டிவிட்டு
"இப்போ உன் ரூம் ல யாரும் இல்ல. போய் குளி" என்று கிண்டலாகக் கூறவும் தலையைத் தேய்த்தபடி

"காலையில் இருந்தே அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என் மண்டையில தான் கண்ணா இருக்கு போல. தட்டிட்டே இருக்காங்க..க்ர்ர்ர்' என்றவள்
"என்ன முணுமுணுப்பு" என்ற அபியின் அதட்டலில் அறையை நோக்கி ஓடினாள்.
 

Rakshi

Writers Team
Tamil Novel Writer
அவள் போவதையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அபியின் முகம் யோசனையில் சுருங்கியது.

அப்போது அவன் அருகில் வந்து அமர்ந்த தயாபரன் "என்ன அபி! அப்படி ஒரு யோசனை ?" என்று கேட்கவும் அவர் புறம் திரும்பியவன்

"யுவாவைப் பற்றி தான் மாமா" என்று கூறியவன் அவரின் புறம் நன்கு திரும்பி அமர்ந்தான்.

அவனது பதிலில் புருவம் சுருக்கியவர் "யுவாவைப் பற்றியா?" என்றவர் அவனை கேள்வியாக நோக்கினார்.

"ம்ம்" எனபடி கையில் இருந்த காப்பை முறுக்கியவன்

"யுவா எப்படி மாமா? சின்ன வயசுல இருந்தே பயந்தவளா? இங்க இருகிறப்போ எனக்குத் தெரிஞ்ச வரையும் நார்மலாத்தான் இருந்தா. திரும்ப அவளை சந்திச்சப்போவும் தைரியமானவளாத்தானே இருந்தா. ஆனா விதுரனோட கொலைக் கேஸுக்கு பிறகு யுவா ரொம்ப பயப்பிடுறா. அன்றைக்கு அந்தத் திருடனைப் பிடிக்கப்போனப்போ உண்மையிலேயே நான் சந்தோஷப் பட்டேன். இப்போ பார்த்தா அகெய்ன் பயப்பிடுறா. உங்களுக்கு விளங்குதா? சில நேரம் தைரியமா இருக்கா. சில நேரம் பயப்பிடுறா" என்று கூறவும் தயாபரனும் ஒரு பெருமூச்சுடன் தலை அசைத்தார்.

"உனக்கு ஞாபகம் இருக்கா தெரியல அபி. உன்னோட அப்பா இறந்தப்போ உண்மையிலேயே உன்கூடவே இருந்து உன்னைப் பார்த்துக்கனும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். பட் கம்பனியில இடமாற்றம் வரவும் அதுவும் நல்ல சம்பளத்துக்கு வரவும் யுவாவோட எதிர்காலத்தை நினைச்சு தான் உங்களை விட்டுத்தள்ளிப் போனேன். உங்கப்பா பணக்காரன். சாரதாவை விரும்பித்தான் கல்யாணம் பண்ணான். பட் அவனோட சொத்துல இருந்து சாப்பிட எனக்குப் பிடிக்கல. அப்படி சில உறவுகள் பேசத்தொடங்கினதும் நான் வெளியூர் போக முடிவெடுத்ததுக்குக் காரணம். அதை சாரதாவும் அக்செப்ட் பண்ணா. நான் தூரப் போனாலும் என் தங்கையை அப்படியே விடல. அதை நீ நம்பனும்" என்ற அவரது விளக்கம் சிறுவன் அபிக்குப் விளங்காவிடினும் இப்பொழுது வளர்ந்து ஒரு ஆண்மகனாக இருக்கும் இந்த அபிக்கு நன்கு விளங்கியது.

அவரது கையைப் பற்றி அழுத்தியவன் எதுவும் பேசாமல் இருக்க தயாபரனே மேலே தொடங்கினார்.

"யுவா சின்ன வயசுல இருந்தே துரு துரு என்று தான் இருப்பாள். அவளுக்கு அவளோட அம்மா தான் எல்லாமே. நீ அப்போ ட்ரெய்னிங்க் ல இருந்த. உன்னோட அத்தை ஆக்ஸிடென்ட் ல இறந்தா என்று உனக்குத் தெரியும் தானே?" என்று கேட்கவும் தலையை அசைத்தவன்

"அப்போ என்னால வர முடியல. நான் உண்மையிலேயே ட்ரை பண்ணேன்.ம்ச்"

"தெரியும் அபி. யுவாவோட அம்மாவோட மரணம் தான் அவளோட இந்தப் பயம் வர்றதுக்கும் ஒரு ரீசன்"

"என்ன மாமா சொல்றீங்க?"

"யுவாவோட அம்மா யுவா கண்முன்னாடி தான் ஆக்சிடென்ட் ஆனா ஆக்சிடென்ட் ஆகி அங்கேயே" என்று அன்றைய நினைவில் விழிகள் கலங்க விழியை அழுந்தத் துடைத்தவர்

"யுவாவுக்கு அதுக்குப் பிறகு ரோட்ல போகவே பயம். இரத்தத்தைப் பார்த்தா பயம். ஹார்ன் சத்தம் வந்தாப் பயம். ஏன் அந்த ஆக்சிடென்ட் ஓட தொடர்பு பட்ட எதைப் பார்த்தாலும் பயம். இரவெல்லாம் கனவுல கத்திட்டே இருப்பா. அதோட அவளோட அம்மாவுக்கு நடந்த ஆக்சிடென்ட் ல தப்பு அவ அம்மா மேல தான் என்று கேஸை மூடுனாங்க. அதுல ஒரு கோவம்"
எவ்வளவும் நடந்து இருக்கின்றது தன் மாமன் மகள் வாழ்வில். ஒரு வித அதிர்ச்சியுடன் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தான் அபி.

"அவளோட பயத்துக்கு ஒரு சைக்யாட்ரிஸ்ட் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தோம். மெல்ல மெல்ல அவ குணமானா. தானே ஃபேஸ் பண்ணப் பழகிகிட்டா. அதை விட அவளை யோசிச்சு நான் கவலைப் படுறேன் என்றது இன்னும் அவளுக்கு கவலை. அதனாலேயே அவளா ட்ரை பண்ணி வெளியில வந்தா. அதோட கேஸை தவறாக் கொண்டு போன கோவமோ என்னவோ. லா தான் படிப்பேன் என்று நின்று லாயர் ஆனா." என்று நிறுத்தியவர்

"அதன் பிறகு விதுரன். உண்மையில் விதுரனை யுவா காதலிக்கவே இல்லை அபி" என்றதும் அவனது மனதில் ஏதோவொரு ஆசுவாசம். சொல்லத்தெரியவில்லை.

"பிறகு எப்படி மாமா விதுரன் கூட?"

"விதுரன் தான் அவளைச் சுத்தி சுத்தி வந்தது. என்ன பதில் சொல்ற என்று என் கிட்ட தான் வந்து நின்றாள்.விசாரிச்சதுல உன்னோட ஹையர் ஆபிஸரோட சன் என்று சொன்னாங்க. சாரதாகிட்டக் கேட்டேன். பட் ஏன் என்று சொல்லல. சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் என்று இப்போ தோணுது" என்று கூறி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார்.

அவர் கூறி முடிக்கவும் சிறிது நேரம் அமைதியாக இருந்த அபி "யுவாவோட பயம் பற்றி உங்களுக்குத் தெரியுமே மாமா. ஏன் அவளை தனியா வெளிநாடு அனுப்ப சம்மதிச்சீங்க?"

"அபி. யுவா அப்போ இருந்த மாதிரி இப்போ இருக்கல. கவலையா இருந்தாள் தான். பட் பயந்து நடுங்கிறது, யார் கூடயும் பேசாம ரூம்ல இருக்கிறது.. அப்பிடி எந்த ரியாக்ஷனும் காட்டல"

'அவள் உங்க முன்னால் மட்டும் தான் காட்டல' என்று மனதுக்குள் நினைத்தவன் அவரது பேச்சில் கவனம் வைத்தான்.

"அதோட இங்க இருந்தா எங்களையெல்லாம் பார்த்தால் இன்னும் அவளுக்கு நடந்தது எல்லாம் நியாபகம் வரும் என்று தான் அவளை அனுப்ப சம்மதிச்சேன். அனுப்பிட்டேனே ஒழிய எனக்கு இங்க நரகவேதனை தான் அபி. அவளோட அம்மா போன பிறகு எனக்கு எல்லாமே அவள் தானே" என்று கூறி தளர்ந்தவரின் தோளைப் பற்றி அழுத்தியவனுக்கு இப்பொழுது யுவாவின் நிலை தெள்ளத்தெளிவாக விளங்கியது.

இரு ஆண்களும் அமைதியாக இருக்க "உப்! என்ன காலையிலேயே இப்படி வியர்க்குது" என்றபடி ஹாலின் ஃபேனை ஆன் செய்து வந்து அமர்ந்த சாரதாவைப் பார்த்து பல்லைக் கடித்த அபி

"உன்கிட்ட காபி கேட்டு எவ்வளவு நேரம் அம்மா?" என்று முறைத்தான்.

'அடக்கடவுளே' காபி போட என்று உள்ளே சென்றவர் இட்லி மாவைக் கண்டதும் அது மறந்து போக காலை உணவைச் செய்யத் தொடங்கி இருந்தார். செல்வி வந்தால் சட்னி அரைக்கச் சொல்லலாம் என்று எண்ணியபடியே வந்தவருக்கு மகன் கேட்கும் மட்டும் அவனது காபி நினைவிலே இல்லை.

முறைத்துக்கொண்டு இருந்த அபியைப் பாவமாகம் பார்த்தவர்

"அது..அது.. இட்லி ..சட்னி.. இல்லை செல்வி" என்று உளறத்தொடங்க

"போதும் இந்த உளறலைக் கேட்கிறதுக்கு காபியே குடிக்காம இருக்கேன். கஷ்டப்படாத" என்றுவிட

"ஹப்பா!" அவ்வளவு தான் என்பது போல டீவியை ஆன் பண்ணி அதைப் பார்க்கத் தொடங்கியவரைப் பார்த்து சிரித்த ஆண்கள் இருவருக்கும் அந்நேர இறுக்கம் தளர்ந்து போனது.

சிறிது நேரத்தில் விக்ரம் வந்துவிட கீழே இருந்த அலுவலக அறைக்குள் அவனுடன் செல்லத் தொடங்கியவன்

"அம்மா! இப்போவாச்சும் ரெண்டு காபி குடுத்து விடு. நாங்க டிஸ்கஷன் முடிச்சிட்டுத்தான் சாப்பிடுவோம்" என்றபடி உள்ளே செல்லவும் யுவா கீழே வந்தாள்.

"ஒரு தலைக் காதலைத் தந்த இந்தத் தறுதல மனசுக்குள் வந்த" என்ற பாட்டைக் கேட்டபடி இருந்த சாரதா காலையில் இருந்து காபி காபி என்று கூவும் மகனை முறைத்துப் பார்த்தார்.

'ஒரு பாட்டுக் கேட்க விடுறானா?' என்று முணுமுணுத்தவாறே எழச்சென்றவர் யுவா வரவும் பொறுப்பை அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அமர அவரைக் கண்டு சிரித்த தயாபரன் பத்திரிகையினுள் தன்னைப் புதைத்துக் கொண்டார்.

"என்னாச்சு விக்ரம் ஃபைல்ஸ் கிடைச்சுதா?"

"அர்விந்த் சாரோட அனுமதி இல்லாம கேஸ் ஃபைல் ஷேர் பண்ண மாட்டேன் என்று ஷ்யாம் சார் சொல்லிட்டாராம் பாஸ். பட் எப்படியோ எங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் அந்த டீம்ல இருந்ததால ஃபைல் காப்பி ஒன்று எடுத்துட்டு வந்தேன். மற்ற ப்ராஞ்ச் கேஸ் ஃபைல்ஸ் அன்ட் புது கேஸ் ஃபைலும் எடுத்துட்டு வந்துட்டேன்"

"ம்ம்" என்ற படி வாங்கியவன்

"எக்ஸ்ப்ளெய்ன் இட்" என்று கூறவும் கட கடவென தனக்குத் தெரிந்த தகவலைக் கூறத்தொடங்கினான் விக்ரம்.

"சார்! மொத்தம் ஆறு கொலை. எல்லோருமே இன்டஸ்ரியலிஸ்ட், இல்லனா ஃபேமஸ் பீபிள் தான். விதுரனோட கொலைக்கு முதல் இதே போல இரண்டு கொலை. அதுல சஸ்பெக்ட் என்று அரெஸ்ட் பண்ண முதலே போலிஸ் ல ரெண்டு பேர் சரண்டர் ஆகி இருக்காங்க. விதுரனோட கொலையில தான் யுவா மேம் சிக்கிட்டாங்க. விதுரனோட கொலைக்குப் பிறகும் ரெண்டு கொலை. என்ன விஷயம் என்றால் இதுல விதுரனோடது மட்டும் தான் க்ரைம் பிராஞ்ச்கு பாஸ் பண்ணி இருக்காங்க. பிகாஸ் ஆஃப் அரவிந்தன் சார். மற்ற எல்லாக் கொலையும் பொலிஸ் லெவெல்லயே முடிச்சுட்டாங்க. ஆனா க்ரைம் பிராஞ்ச் ல ரெகோர்ட்ஸ் இருந்ததால எனக்கு டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண முடிஞ்சுது. இப்போ கொலை பண்ணப் பட்டு இருக்கிறது அமைச்சரோட மச்சானாம். ஸோ அகெய்ன் க்ரைம் பிராஞ்ச் கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. இதுல இன்ஸ்பெக்டர் ஆதிக்கு செம கடுப்பு போல"

"ஹ்ம்ம்" என்று விக்ரம் கூறியவற்றை உள்வாங்கியவன்

"ஆறு கொலைக்கும் ஏதாவது வேற கனெக்ஷன் இருக்கா விக்ரம்" என்று ஃபைல்களைப் பார்த்தபடியே வினவவும் "பாஸ் நான் விசாரிச்ச மட்டும் கத்திக்குத்து உடனே சரண்டர்" இந்த ரெண்டு விஷயமும் தான் ஒன்றாகிற மாதிரி இருக்கு.

"ம்ஹூம்! டேட்ஸ்! ஆறு கொலையும் ஆகஸ்ட் 8த் ல நடந்து இருக்கு.அது எப்படி விக்ரம் எல்லாக் கொலையும் ஒரே டேட்ல நடக்கும்? ம்ம்?" என்று தாடையைத் தடவியவனைப் பார்க்க விக்ரமிற்குத் தெரிந்தது ஒன்றே ஒன்று தான் இனி அபி இந்தக் கேஸை விடப் போவது இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top