மாந்த்ரீகன் - 21

Rhea Moorthy

Writers Team
Tamil Novel Writer
#1
உச்சி பொழுதையே ஊரடங்கும் பொழுதாக காட்டிடும் படி, பேரிடியுடன் கூடிய கார்கால அடைமழை தன் முழு பலத்தையும் வெளிப்படுத்த தொடங்கி இருந்தது. இந்த வருடம் வேட்டை விழா இரு தினங்களிலேயே முடிந்துவிட்டதால், வரும் நான்கு தினங்களும் மாந்தை குல மக்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. அடுத்த வாரம் ஆரம்பித்த பிறகுதான் பூச்சொரிதல் விழா துவங்கும். அதுவரையில் வேட்டையாடிய விலங்குகளை சுட்டுத் தின்பதும், பூச்சொரிதல் விழாவிற்காக கடும் மழையைத் தாங்கும் தோரணங்களை தயார் செய்வதுமே அவர்களின் வேலை.

மாந்தனும் நாவினியனும் குலத் தலைவியின் அனுமதிபெற்று, நாளை காலை பச்சைமலைக்கு பயணிக்க இருக்கின்றனர். பிரிவின் ஆற்றாமையால் பேதைப் பெண்கள் இருவரும் முகம் சுருங்கி வாடுவதைக் கண்ட வாலிபர்கள், இன்று இரவு முழுவதும் தத்தமது துணையை தேற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர்.

மாலையானதும் மழை கொஞ்சம் மட்டுப்பட யாளியும் மல்லியும் தங்களின் மனக்குறையினை கொற்றவை தேவியிடம் கொட்ட சென்றார்கள். அவர்களுக்கு வால் பிடித்தது போலவே, அந்த வாலிபக் காளைகளும் உடன் சென்றனர். அன்னைக்கு பிடித்த செவ்வண்ண மலர்ச்சரத்தை அவளுக்கு சூட்டி வணங்கி, அவளை கவனிக்கும் முது மகளிடமும் ஆசி பெற்று திரும்பினர் நால்வரும். வரும் வழியில் ஒரிடத்தில் பெண்கள் சிலர் ஒன்று கூடி பச்சை குத்திக் கொண்டிருப்பதைக் கண்டாள் யாளி.

யாளி, "இங்க என்ன செய்றாங்க மாந்தா? டாட்டூ போடுறாங்களா?"

"இல்லை பச்சை குத்திக் கொள்கிறார்கள்..."

"ரெண்டும் ஒண்ணுதான்பா, மெஷின் இல்லாம எப்டி டாட்டூ போட முடியும்? அழிஞ்சிடாது? இந்த பச்ச கலர் பேஸ்ட்ட எப்டி இவங்க செஞ்சாங்க?" என்று வழக்கம்போல் தன் கேள்விகளை அடுக்க தொடங்கினாள். இனி இங்கு நமக்கு வேலை இல்லை என்று உணர்ந்த நாவினியன், பிறர் அறியாதபடி தன் மனைவியை தனியாக தள்ளிக் கொண்டு சென்றான்.

மாந்தன், "அது மிகச் சுலபம் யாளி... மஞ்சளை அகத்திக் கீரையோடு சேர்த்து அரைத்து, அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்குவர். அக்கரியில் நீர் கலந்து அதனைப் பசையாக்கி கூர்மையான முள்ளினால் தொட்டுத் தோலில் குத்தி வரைவர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்தால் நாம் வரைந்த உருவம் வந்துவிடும்...."

"அவ்ளோதானா?..."

"அவ்வளவுதான்..."

"எனக்கும் ஆசையா இருக்கு, நானும் போட்டுக்கவா?"

"மணம் புரியும் முன் பச்சை குத்திக் கொள்ள கூடாது யாளி..."

"அப்போ கல்யாணம் முடிஞ்சதும் நாம முதல் வேலையா பச்ச குத்தனும் மாந்தா..."

"தங்கள் உத்தரவு, அப்படியே ஆகட்டும் மகாராணி..." என்றதும்,

அங்கிருந்த பெண்களில் ஒருத்தி, "பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட குலத்தலைவியின் சொல்லை கேட்டிராத தாங்கள், இன்று மனைவி சொல்லே மந்திரம் என மாறி விட்டீர்களே? எனில் நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள் இளவரசே..." என்று கேலி செய்ய மொத்த கூட்டமும் சிரித்தது.

அந்த சிரிப்பின் உள் அர்த்தம் புரிய யாளி வெட்கம் கொண்டு, வீட்டைத் தேடி நடக்க தொடங்கினாள். தன்னை கேலிசெய்து சிரிப்பவர்களை வக்கனைத்து விட்டு மாந்தன் யாளியைப் பின்தொடர்ந்தான். நாவினியனது வீட்டை நெருங்கியதும் உள் செல்ல நினைத்த யாளியின் கையினை மாந்தன் பிடித்துக்கொண்டான்.

"நில்... இப்போது நீ உள்ளே செல்ல கூடாது யாளி..."

"ஏன்?..."

"அங்கு பார், அவர்களின் வாயிலில் எருதின் கொம்பு ஒன்றை நட்டு வைத்து இருக்கிறார்கள்."

"ஆமா... அதுக்கென்ன?

"அதன் அர்த்தம்.... அர்த்தம் யாதெனில்... அங்கே... அவர்கள்..." என்று சொல்ல வேண்டியதை தவிர மற்ற எல்லாத்தையும் சொன்னான்.

அந்த தடுமாற்றத்திலேயே அதன் காரணத்தை புரிந்து கொண்ட யாளி, "சரி... நாம கொஞ்ச நேரம் அந்த ஆல மரத்தடியில இருக்கலாம்..." என்றாள்.

ஊருக்கு நடுவான அந்த பெரிய ஆலமரம், தன் விழுதுகளையும் வேர்களையும் பரத்தி விரித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றது. ஏற்கனவே அங்கு ஒரு சில குழந்தைகள் அமர்ந்து விளையாடுவதைக்கண்டு அவர்களுக்கு அருகில் அமர்ந்தனர் யாளியும் மாந்தனும்.

யாளி, "ஏன் மாந்தா, யாருக்கும் தெரியாம இருக்க வேண்டிய ஒரு விஷயத்தை, இப்டி ஊருக்கு தெரியிற மாதிரி ஏன் வெளிப்படையா கொம்பை நட்டு வச்சு காட்டிக்கிறீங்க?"

"உனக்கு வார்த்தையால் விளக்குவதை விட செய்கையால் விளக்குகிறேன் பெண்ணே..." என்ற மாந்தன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு சிறுவனை அழைத்தான்.

"உன் பெயரென்ன தம்பி?"

"நான் சீரிகைச்செல்வன்..."

"நல்ல பெயர், எனக்கு நீ ஒரு உதவி செய்கின்றாயா?"

"கூறுங்கள் அண்ணா..."

"அங்கு தெரிகின்றது பார் என் நண்பன் நாவினியன் குடில், அங்கு சென்று எங்களுக்காக ஒரு குவளைத் தண்ணீர் வாங்கி வருகிறாயா?"

"சரி அண்ணா..." என்றவன் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்து, "மன்னித்து விடுங்கள் அண்ணா, அந்த குடிலில் வாயிலில் எருதின் கொம்பை நட்டு வைக்கப்பட்டு இருக்கின்றது. இறை நிலையில் இருப்பவர்களை தொல்லை செய்ய கூடாது என்பதால் நான் அருகிலிருந்த மற்றொரு குடிலில் தண்ணீர் வாங்கி வந்து இருக்கின்றேன்."

"நல்ல காரியம் செய்தாய் தம்பி, மிக்க நன்றி, நீ சென்று உன் விளையாட்டை தொடரலாம்..." என்று குவளையை வாங்கிக்கொண்டான்.

"இவ்வளவுதான் யாளி காமம். நாங்கள் மற்ற உணர்வுகளை போல காமத்தையும் ஓர் உணர்வாகவே மதிக்கின்றோம். இறைவனால் உருவாக்கப்பட்ட, இரு உயிர்களின் மெய் ஈர்ப்பு உறவினை அவமானமாய் காண்பது தவறு யாளி. காமம் என்பது கண்களுக்கு புலப்படாத கற்பனைக் காவியம் போன்றது. அது இரவும் பகலும் இணையும் பொழுதைப் போல இனிமையானது. இமைகள் இரண்டும் தழுவும் நொடியை போல இதமானது. ஆசை கொண்ட இரு உள்ளங்கள் இல்லறம் எனும் இனிய தாம்பத்தியத்தில் இணைய உதவும் ஒரு கருவியாக காமம் உள்ளதேயன்றி, அருவறுக்கத்தக்க செயல் அல்ல பெண்ணே..."

"அப்டினா நீங்க என்ன அடிக்கடி சீண்டி விளையாடுறீங்களே அதுக்கு பேர் என்ன?"

"ஹா... ஹா... அதையும் நீ காமம் என்ற கண்ணுடனா பார்க்கின்றாய்? உன்னோடான என் சீண்டல்கள் எனக்குச் சொந்தமாகப் போகும் பெண்மை மீது நான் கொண்ட உரிமை, அதை நீ ஏற்றுக் கொள்ளும் அளவுகோல் என் ஆண்மை மீதான உன் நம்பிக்கை. மணம் முடித்தலின் மூலம் நாம் நமது உரிமையையும் நம்பிக்கையையும் ஊரறிய வெளிப்படுத்துகின்றோம். இன்னும் விளங்கச் சொல்ல வேண்டும் எனில், உரிமையும் நம்பிக்கையும் இந்த மழைத்துளிகள் போல பரிசுத்தமாக உருவான சிறிதளவு காதல். காமம் என்பது துளிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்த மாபெரும் சமுத்திரம் போல் அளவுடைய காதல். துளிகளை கடலாக ஊரறிய மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவமே மணம். இவை இரண்டிற்கும் அளவில் வித்யாசம் இருந்தாலும் இரண்டுமே இயற்கையின் வழித்தோன்றல், அதற்கான முன்னோர்களின் வழிநடத்தலே திருமணம்...."

அவன் சொற்பொழிவைக் கேட்டு உண்மையில் யாளி ஆச்சரியத்தோடு அமர்ந்திருந்தாள். 'இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் காமம் என்ற வார்த்தைக்கு பொருளாக அவள் கேட்டு வளர்ந்தது எல்லாமே அது அசிங்கம், அதைப் பற்றி பேசுவது மாபெரும் தவறு என்று மட்டும்தான். காமம் என்பது காதலின் வழித்தோன்றலாய் இயற்கை அன்னை உருவாக்கியது என்பதை முதல் முதலாக அவள் உணர்ந்தாள்.

பழந்தமிழனின் பழக்க வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளின் உறைவிடம் என்று தன் சிறுவயதில் பிதற்றியதெல்லாம் எவ்வளவு பெரிய தவறென இப்பொழுதுதான் யாளிக்கு புரிந்தது. ஒரு சிறு கொம்பு மூலம் எவ்வளவு அழகாக சிறுவர் சிறுமிகளுக்கு, காமத்தின் நிலையை இறைநிலை என்று உணர்த்தி இருக்கின்றார்கள். இங்கே ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு செயல் முறைகளும், ஒவ்வொரு பொருட்களும் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டவை. நாம் அந்த காரணத்தை கைவிடுத்து காரியங்களில் மட்டுமே கவனம் பதித்ததால் இப்போது எதுவும் தெரியாமல் தடுமாறுகின்றோம்.'

இதுவரை சாரலாக பொழிந்து கொண்டிருந்த தூறல் மீண்டும் மழையாக உருமாறத் துவங்கியது....
 
Rhea Moorthy

Writers Team
Tamil Novel Writer
#2
மாந்தன், "யாளி, மழை பெருக்கத் தொடங்கிவிட்டது. நாவினியன் இப்பொழுதிற்குள் வெளி வருவான் என்று எனக்கு தோன்றவில்லை, வா நாம் நமது குடிலுக்குச் செல்லலாம்..." என்று அழைத்துச்சென்றான்.

பாட்டியைக் கண்டதும் இதுவரை யாளியின் மனதில் உழன்று கொண்டிருந்த சிந்தனைகள் அனைத்தும் விடைபெற்று இன்ப ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது. பாட்டியும் பேத்தியும் அடுப்பங்கரையினுள் சமைக்கிறோம் என்ற பெயரில், அரட்டை அடித்தபடி எதை எதையோ உருட்டிக் கொண்டு இருந்தார்கள். யாளி இன்னமும் தன்னோடு சரிவர ஒன்றாத படியால், அவர்கள் இருவருக்கும் தனிமை தந்து காரொளி நாதன் தாத்தா வெளித் திண்ணையில் போய் அமர்ந்தார். மாந்தன் நாளை காலையில் துவங்க இருக்கும் பச்சை மலை பயணத்திற்காக தன் உடமைகளையும் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

யாளி, "கோவில்ல இருந்து வரும்போது பச்சை குத்துறத பார்த்தோம். நானும் போடணும்னு ஆசைப்பட்டேன், ஆனா மாந்தன் இப்போ வேணாம்னு சொல்லிட்டான். ஏன் பாட்டி... நீங்க பச்சை குத்தி இருக்கீங்களா?"

"ஆம் யாளி... திருமணமான புதிதில் என் வலது கரத்தில் வரைந்து கொண்டேன்...."

"எங்க காட்டுங்க..." என்றதும் தன் மணிக்கட்டின் வெளிப்பகுதியை அவளிடம் காட்டினார். அம்பு ஒன்று பாய்ந்து செல்லும் படியாகவும் அதன் நடுவில் ஒரு மலர் பூத்து நிற்பது போலவுமான சித்திரம் அது."

நெடுநேரம் பார்த்திருந்த யாளிக்கு அது சாதாரண படமாகவே தோன்ற, "ஏன் பாட்டி இந்த உருவத்தில பச்சை குத்திருக்கீங்க?...." என்று கேட்டாள்.

பாட்டி பதில் சொல்லாமல் மெல்லமாய் சிரிக்க யாளி, "நானே இதுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சு சொல்லுறேன் பாருங்க... இந்த அம்பு நம்ம தாத்தா, அதுக்கு நடுவுல விரிஞ்சிருக்குற அழகான பூ நீங்க, சுத்தி போற கயிறு காதல். சரியா?" என்றாள்.

"இல்லையம்மா, அம்பு எங்களின் மாந்தை குல குறியீடு, அதன் நடுவில் இருக்கும் மலர் எமது மண்ணின் பெருமைவாய்ந்த கொன்றை மலர். அம்புகளை சுற்றி பிணைந்து பாயும் நதி போன்ற உருவம் எங்களின் மாந்த்ரீக சக்தி. இப்போது தெளிவாய் விளங்கியதா?"

"ஓ... அப்டியா பாட்டி... நான் இதுல உள் அர்த்தங்கள் இன்னும் நிறையா இருக்கும்னு எதிர்பார்த்தேன்."

"அதனால் என்னம்மா, உனக்கு திருமணம் ஆகும் பொழுது, உன் விருப்பப்படி நுணுக்கங்கள் நிறைய இருக்கும் அம்பு உருவத்தை பச்சை குத்திடச் சொல்கின்றேன்..." என்றதும் அவள் வெட்கம் மேலிட தலை சாய்த்து ஓரக்கண்ணால் மாந்தனின் முகம் பார்த்தாள்.

அந்தக் கள்வன் அத்தனையையும் ஒட்டுக் கேட்டிருப்பான் போல, அவனது உதட்டிலும் சிறு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. 'சீ.... பேட் பாய் பாட்டி உங்க பேரன்...' என்று முனங்கிக்கொண்டே பாட்டியின் கைகளை சலுகையாய் கட்டிக்கொண்டாள். உணவு வேளை முடிந்ததும் யாளியை பாதுகாப்பாய் நாவினியன் வீட்டில் விட்டுவிட்டார் பாட்டி.

அதிகாலைவரை நிறுத்தாமல் பொழிந்த மழை, ஆதவன் எழும்பும் நேரத்தில் தன் ஆட்டத்தை சற்று குறைத்துக் கொண்டது. பச்சைமலை பற்றி ஊர்த்தலைவனாகிய காரொளிநாதன் தாத்தாவிடம் ஆயிரக்கணக்கான அறிவுரைகளை பெற்றுக்கொண்டு மாந்தனும், நாவினியனும் அங்கிருந்து கிளம்பினர்.

இருவரும் தமது கண்ணில் இருந்து மறையும் வரையில் அவர்களையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்த கயல்விழியாள்களை தேற்றும் பொறுப்பினை அனுபவசாலியான பாட்டி எடுத்துக்கொண்டார். அவரின் அனுசரணையான கவனிப்பாலும் குட்டி நேயனது குறும்பினாலும் நேரம் நகர தொடங்கியது.

மாந்தனும் நாவினியனும் அருவியைக் கடந்ததும் சரபன் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். அங்கிருந்து உச்சிமலை வரை நொடிப்பொழுதில் பறந்து வந்தவர்கள், அதன் பிறகு அம்மலையின் அடிவாரம் வரையில் கால்நடையாய் நடந்து சென்றனர். அந்த பகுதியில் வாழும் வேறு சில குடி மக்கள் சரபனைக் கண்டால், ஆபத்தான மிருகம் என்று அஞ்சி கண்டதும் கொல்லக் கூடும் என்பதாலேயே இந்த ஏற்பாடு. அடுத்து வந்த மூன்று மலைகளையும் அவர்கள் இதேபோன்று பறப்பதும் நடப்பதுமாக கடந்து பச்சை மலையை அடைகையில் இரு தினங்கள் கடந்திருந்தது.

பச்சைமலை மனிதர்கள் நடக்க முடியாத அளவிற்கு நிறைய வழுக்குப் பாறைகளையும், தீண்டியதும் உயிர் துறக்குமளவு விஷம் நிறைந்த சிவனின் அம்சமாகிய நாகங்களையும் அதிகம் கொண்டிருக்கும் மலை. அங்கு எந்தவித குடிகளும் இதுவரை குடியிருந்தது இல்லை, அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்தது. மாந்தனும் நாவினியனும் இதற்கு முன்பு பச்சை மலைக்கு சென்று வந்த, தங்களின் மூத்த குடிமக்கள் சொல்லிச் சென்ற வழித் தடங்களை தேடிக் கண்டுபிடித்து, சரபனோடு பயணித்துக் கொண்டிருந்தனர்.

வான் முட்டும் மேகங்களை தழுவிடும் அளவிற்கு உயர்ந்த அந்த மலைதனிலே, முடிந்த வரை பறப்பதும் பிறகு கால்நடையாய் நடப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது. ஆண்டவனது இருப்பிடம் ஆகையால் ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் விதி வேறு. பச்சைமலையினில் சிவனின் மாந்த்ரீக சக்தி உச்சமாய் இருப்பதனால், மாந்தை குலத்தினர் தங்களுடைய மாந்த்ரீகத்தை பயன்படுத்தி வழி அறியவும் இயலாது. முழுதாய் இரு தினங்கள் இருவரும் அந்த காடு முழுவதும், சிவனின் கோவிலை தேடியபடி சுற்றித் திரிந்தனர்.

மூன்றாம் நாள் மாலை ஒரு சில வில்வமரங்கள் அவர்களின் கண்களுக்குப் புலப்பட துவங்கியது. இருவரும் முழு உத்வேகம் கொண்டு அப்பாதையில் சரபனோடு விரைந்து நடந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அந்த பாதையில் கோவில் இருப்பதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கியது. அரை மணி நேர நடைப் பயணத்திற்கு பிறகு ஒரு அருவியின் முகட்டினில், மாலை வெயிலின் தாக்கத்தால் மங்கல ஒளியில் பொன் வண்ணமாய் மின்னும் பழங்காலத்து சிவன் கோவில் தென்பட்டது.

மாந்தனும் நாவினியனும் மேலே வரும் பாதையைக் கண்டுபிடித்து கோவிலை அடைவதற்குள் ஆதவன் மறைந்து இருள் வண்ணம் சூழ்ந்துவிட்டது. இனி துயிலும் சிவனை தொல்லை செய்யக்கூடாது என்பதால் விடியும் வரையில் காத்திருக்க முடிவு செய்தனர். கோவிலுக்கு வெளியே ஒரு மரத்தடியில் தற்காலிக குடில்களை அமைத்து தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டனர். சரபன் வழக்கம்போல மரக்கிளையின் மீது அமர்ந்து கொண்டான்.

நடந்து வந்த களைப்பும், இறைவன் இருக்கும் இடத்தை அடைந்துவிட்ட மகிழ்ச்சியும் அவர்களை விரைவாகவே துயிலச் செய்தது. அடுத்த நாள் பொழுது விடிந்ததும் வெளிச்சத்தில் அக்கோவிலைக் கண்ட நண்பர்கள் அதன் அழகினில் சொக்கித்தான் போயினர். இந்த ஆபத்தான காட்டிற்கு நடுவினில், இத்தனை உயரத்தில், ஆகம விதி பிரளாமல் இத்தகைய அழகு வாய்ந்த கோவிலினை கட்டியது யாராய் இருக்கும் என்று இருவரது மனமும், அக்கோவிலை கட்டியவனின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

வழிந்து ஓடும் நதியினில் குளித்து நீராடி ஈர உடையுடன் இருவரும் கோவிலுக்குள் சென்றனர். ஆள் அரவமில்லா அக்காட்டினுள், அகன்று உயர்ந்த அருவியின் முகட்டினில், அமர்ந்திருக்கும் அண்ட சராசரத்தின் அப்பனது இல்லம் சிறிதும் கரை படியாத இடமாக காட்சி தந்தது. உள்ளே சிவனின் முதன்மை பக்தனாகிய நந்தி தேவன், பன்னூறு வருடங்களாக தன் அழகு விழிகளால் இமையாது சிவனை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

நந்தியைத் தாண்டி உள்ளே நுழைந்தவர்களின் கண்களில் காலை வெயிலில் ஒளி பட்டு அக்னி பிழம்பான உருவத்தில் ஜொலிக்கும் சிவலிங்கம் தெரிந்தது. ஆதவனது ஒளியினையே விளக்காய், அசைந்தாடும் பனிப்புகையையே ஆராதனை புகையாய் அனுபவித்து அகமகிழ அங்கே அமர்ந்திருந்தார் சிவன். பார்த்தவுடனே பரவசம் மேலிட தன்னிச்சையாக கைகளை உயர்த்தி சிவனை வணங்க தொடங்கியிருந்தனர் நண்பர்கள் இருவரும்.

சிவனைக் கண்டதில் சித்தம் மயங்கி எத்தனை நேரம் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றிருந்தனரோ அவர்களுக்கே தெரியாது. நெடுநேரம் கழித்து தன் நிலை அடைந்த மாந்தன் நின்ற இடத்திலேயே அமர்ந்து தனது கொள்ளுப்பாட்டி சொல்லித்தந்த மந்திர உச்சாடனங்களை உச்சரிக்க துவங்கினான். அவனுக்குப் பிறகு தன்னிலை அடைந்த நாவினியனும் மாந்தனுக்கு அருகில் அமர்ந்த படி சிவனை தரிசித்து கொண்டிருந்தான்.

நேரம் உச்சிப் பொழுதை நெருங்கும் பொழுது சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து மிகச்சிறிய மரகதக் கல் ஒன்று தனியாக பிரிந்து விழுந்தது. அடுத்த நொடியே கண்விழித்த மாந்தன் சிவனை வணங்கிவிட்டு அக்கல்லினை தன் கையில் எடுத்தான். அதைத் தொட்ட நொடியே அவனது உடல் எரியும் தனல் போல நெருப்பின்றி தகதகவென்று எரியத் தொடங்கிற்று. மாந்தனால் அந்த சக்தியை தாக்கு பிடிக்க இயலாமல் மயக்கம் வருவதைப்போல் தள்ளாடிட, நாவினியன் அவனை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டான்.

முழுதாய் ஒரு நிமிடத்திற்கு அக்கினிப் பிழம்பாய் கொந்தளித்த மரகதக்கல், இறுதிவரை தன்னை கைவிடாமல் பற்றிக் கொண்டிருந்த மாந்தனின் மனவலிமை கண்டு, அவன் கைகளுக்குள் தானே விரும்பி தஞ்சம் அடைந்தது. இத்தனை ஆண்டு காலமாய் மாந்த குல மக்கள் இறைவனிடம் சமர்ப்பித்த மொத்த மாந்த்ரீக சக்தியும் அச்சிறு கல்லில் புதைந்து இருக்கின்றது.

மீண்டும் ஒருமுறை சிவனை நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கிவிட்டு மரகதக்கல்லோடு வெளியேறினர் இருவரும். இரண்டு நாள் பயணம் முடித்து மாந்த்ரீகபுரியின் உச்சிமலையை வந்து அடைகையில் அந்திமாலை தூரல் வலுத்து தூறிக்கொண்டு இருந்தது. உச்சி மலையில் இருந்து அருவிக்கு வந்ததும் மாந்தன் திடீரென அசையாமல் நின்றான்.

இறைவனை தரிசித்து விட்ட மகிழ்ச்சியில் இன்பமாய் எட்டி நடைபோட்ட நாவினியன் மாந்தனின் தடுமாற்றத்தை கண்டு, "என்ன ஆனது மாந்தா?..." என்றான்.

"ஒன்றுமில்லை..." என்று மாந்தனின் வாய் சொன்னாலும், அவனது விழிகள் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை வந்திருக்கின்றது எனும்படியான தகவலை நாவினியனுக்கு தந்தது. சில அடி தூரம் பேசாமல் நடந்தவன் திடீரென்று மீண்டும் நின்று கொண்டான்.

நாவினியன், "மாந்தா..."

"இனியா எனக்கொரு உபகாரம் செய்..."

"உயிரையே வேண்டுமானாலும் தருகின்றேன், சொல் மாந்தா..."

அவர்கள் இருவரது உரையாடலில் எவரும் கேட்க இயலாதபடி அங்கே பலத்த இடி சத்தத்தோடு பெரு மழை பொழியத் துவங்கியது.
 
Rhea Moorthy

Writers Team
Tamil Novel Writer
#3
தன் மனங்கவர் கள்வன் பச்சை மலை சென்றதிலிருந்தே பெண்ணவளுக்கு பசலை நோய் வந்துவிட்டது. முடிந்த மட்டில் விரைவாக வந்து விடுகின்றேன் என்று அவன் தந்து சென்ற வாக்குறுதியை அப்பேதைப் பெண்ணின் அறிவு ஏற்றாலும் அவளின் மனம் ஏற்க தயாராக இல்லை. மல்லியும் பாட்டியும் எவ்வளவுதான் முயன்றாலும் யாளி மாந்தனை நினைத்து மனம்வாடிக் கொண்டே இருந்தாள். இந்நிலையில் மாந்திரீக புரியில் பூச்சொரிதல் விழா துவங்கியது.

மாந்தை குலத்தின் ஆண் பிள்ளைகள் அனைவரும் காடு மலைகள் எல்லாம் அலைந்து திரிந்து கூடை கூடையாக வண்ண மலர்களைக் கொய்து வந்து கொட்டினர். பெண்கள் அனைவரும் விதவிதமான மலர்ச்சரங்கள் உருவாக்கி வீதிகளில் வீடுகளில் எல்லாம் தோரணமாய் தொங்க விட்டனர். குல தெய்வமாகிய கொற்றவை தேவியின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை, ஊர் மக்களின் அன்பால் அவள் தன் உடலின் பாதியளவிற்கு வண்ண மலர்களினால் மூடப்பட்டு இருந்தாள்.

முதல் தினம் அனைவரும் மலர் தொடுப்பதைக் கண்டு யாளி தானும் தொடுக்க ஆசை கொள்ள, இரண்டாவது நாள் பாட்டி அவளுக்கு எளிதாக பூக்கட்டும் முறையினை பயிற்றுவித்தார். அவள் பூ கட்டும் வேலையில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக் கொள்ள, சற்று நேரமாவது மாந்தனை மறந்து இருக்கின்றாளே என்று அவரின் மனம் ஆசுவாசம் அடைந்தது. ஆனால் அவள் தன் மன்னவனது தோள்களில் சூட்டுவதற்கென்றே மலர் தொடுக்க கற்றுக் கொள்கின்றாள் என்பது, பாவம் மாந்த்ரீகம் தெரிந்த பாட்டிக்கே தெரியவில்லை.

முழம் முழமாய் பூச்சரம் தொடுத்தவளின் முகத்தை பாசமாக தொட்டு வருடிய பாட்டி, "முதல் முதலாக பூத்தொடுத்து இருக்கின்றாய். ஆதலால் இதில் ஒரு பங்கை அன்னை கொற்றவைக்கு அணிவித்து விட்டு வா அம்மா என்று அனுப்பி வைத்தார்..."

அவள் திரும்பி வந்த நேரம் குடிலில் பாட்டி இல்லாத காரணத்தால் மீதி இருக்கும் மலர்ச் சரங்களை வீடு முழுவதும் கட்டி அலங்கரிக்க தொடங்கினாள். அங்கே ஓர் மூலையில்தான் அனழேந்தியின் வாளும் அதிகாரமாய் நின்றிருந்தது. அதைக் கண்டதும், தனக்கு இத்தனையும் கிடைக்க காரணமான அவ்வாளின் மீது அவளின் ஆசையும் பாசமும் அதிகமானது.

தன் மென் விரல்களால் அதன் பொன் வண்ண கைப்பிடியினை தொட்டு வருடினாள்... பிறர் அறியாது திருட்டுத்தனம் செய்யும் குழந்தையை போல தன் செவ்வண்ண அதரத்தை அவ்வாளின் கைப்பிடி மீது ஒற்றி எடுத்தாள்... கைகளில் இருந்த மலர் சாரத்தில் ஒரு பகுதியை வாளிற்கு சூட்டிவித்தாள்...

அதனை அவனாய் நினைத்த யாளி செல்லம் கொஞ்சி கொண்டிருக்கையில் அவளின் பின்னால் வந்து நின்ற பாட்டி, "அம்மாடி யாளி... என்ன காரியம் செய்து விட்டாய்..." என்றார் அதிர்ச்சியோடு.

பாட்டி பார்த்து விட்டாரே என்ற பயமும் அவர் முகத்தில் இருந்த அதிர்ச்சியும் யாளியின் உடலை அதிர்வடையச் செய்திற்று. பாட்டியின் சத்தம் கேட்டு திண்ணையிலிருந்து உள்ளே வந்த காரொளி நாதன் தாத்தாவோ, யாளியையும் வாளையும் பார்த்து சத்தமாய்ச் சிரித்தார்.

இரண்டிற்கும் காரணம் அறியாத பேதைப் பெண் மலங்க மலங்க விழித்துக் கொண்டு, "கத்தி மேல பூ வைக்க கூடாதா பாட்டி? எனக்கு தெரியாது, நான் பூவ திரும்ப எடுத்திடுறேன்..." என்று மலர்ச் சரத்தை எடுக்கப் போனாள்.

காரொளி நாதன் தாத்தா, "இருக்கட்டும் அம்மா... நீ செய்ததில் பிழை ஒன்றும் இல்லை. தேவி குழந்தையை மிரட்டாதே, இதுதான் இறைவனின் சித்தம் போலும்..." என்று விட்டு மீண்டும் தன் இடமாகிய வெளித் திண்ணைக்குச் சென்றார்.

யாளி, "பாட்டி கோச்சுக்கிட்டீங்களா? சாரி பாட்டி... மன்னிச்சிடுங்க... தெரியாம பண்ணிட்டேன்..." என்று ஏதேதோ பிதற்றியவளை பாட்டி ஆதரவாக அணைத்துக் கொண்டார்.

அந்த அணைப்பில் அவள் ஆறுதல் அடைந்ததும் பாட்டி அவளின் கூந்தலை வருடி, "அம்மாடி யாளி, ஒரு பெண் தன் மணவாளனுக்கு மலர் சூட்டுவதும், அவனது வீர வாளுக்கு மலர் சூட்டுவதும் ஒன்றுதானம்மா..." என்றார்.

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்ததும், யாளியின் முகத்தில் சிரிப்பும் அழுகையும் ஒரு சேர இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்ச்சிக்கலவை தோன்றிற்று.

பாட்டியின் மடியினை இறுக கட்டிக்கொண்டு, "நான் மாந்தன பாக்கனும்னு இருக்கு பாட்டி.. இப்பவே வேணும்... எனக்கு அவன் இப்பவே வேணும் பாட்டி..." என்று தன்னை மறந்து பிதற்ற தொடங்கி விட்டாள்.

அவள் தலையை வருடி அமைதிப்படுத்திய பாட்டி, "வருவானம்மா.. விரைவிலேயே வந்து விடுவான்... தன்னைத் தேடி வரும் பக்தர்களை அந்த பச்சை மலை சிவன் தானே முன்வந்து வழி நடத்துவார், அப்படி இருக்கையில் மாந்தனை மட்டும் கைவிடுவாரா... அவன் கூடிய விரைவில் வந்துவிடுவான், நீ கண் கலங்காமல் காத்திரம்மா..." என்று ஆறுதல் மொழிகளை கூறிவிட்டு வெளியே சென்றார்.

யாளி, 'என்னவனிடம் இதைச் சொன்னால் என்ன செய்வான்? என்னை அள்ளி கொஞ்சிடுவானா? இல்லை என்னை நீ முந்திக்கொண்டாயா பெண்ணே என்று என் முன் நின்று முறைப்பானா? அல்லது என்னை அவன்...' என அவளின் கற்பனைக் குதிரை கடிவாளம் இன்றி பறந்து செல்லத் துவங்கியது.

அப்போது குடிலினுள் நுழைந்த பாட்டி தன் கைகளில் எதையோ கொண்டு வந்து, "நீ விரும்பிக் கேட்டாயல்லவா, பச்சை குத்திக்கொள்ள வேண்டுமென...." என அவளின் வலது கரத்தை பற்றியவர், பாட்டு பாடியபடி பச்சை குத்தி விடத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் வலித்தாலும் சில நொடிகளிலேயே பாட்டியின் குரலில் அவள் சிந்தை மயங்க, கரம் கொண்ட வலியினை மறந்தனள். பாட்டு நின்றதும் கண் விழித்தவள் கேள்வியாய் பாட்டியின் முகத்தைப் பார்க்க அவர் விழிகள் உன் கையைப் பார் என்றன.

"வாவ்... ரொம்ப அழகா இருக்குது பாட்டி, எப்டி கலரோட வரைஞ்சீங்க?"

"இது மாந்த்ரீக குலத்தலைவியின் ரத்தத்துளியோட வரையப்பட்ட வண்ண ஓவியம்..."

யாளிக்கு அவரின் பதில் ஆச்சரியமாய் இருக்க, "இதுக்கு என்ன அர்த்தம் பாட்டி?" என்றாள்.

"முதல் அம்பு உன்னை குறிக்கும், இரண்டாவது மாந்தனை குறிக்கும். அம்பு மாந்த்ரீக குலத்திற்கான குறியீடு, இறகு வீரேந்திர புரியின் குறியீடு. இரண்டாவது அம்பில் பிணைந்திருக்கும் கயிறு அவனது மாய சக்தியை குறிக்கும். இவ்வம்பின் நடுவில் இரு இதயங்களும் இருக்கிறது, அது என் பேரன் உன்னருகில் இருக்கும்போது மட்டும் வண்ணம் ஒளிரும், ஏனைய நேரங்களில் வெறும் அம்புகளின் சித்திரம் மட்டும் தெரியும்..."

யாளியால் இவ்வளவு வேலைப்பாடும் பொருளும் நிறைந்த ஓவியம் தன் உடலில் இருப்பதனை நம்பவே முடியவில்லை. தன் மகிழ்ச்சியை உடனடியாக தன் தோழியிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி, அடை மழையையும் பொருட்படுத்தாமல் மல்லியின் குடிலைத் தேடி ஓடிச் சென்றாள். அவள் திரும்பி வருகையில் பாட்டியின் குடில் வாயிலில் பத்து பதினைந்து அரச குல வீரர்கள் நின்றிருந்தனர். ஏதோ விபரீதமென்று அவளின் உள்ளுணர்வு கூப்பாடிட, அவள் குடிலின் பின் வாயில் பக்கம் சென்றாள்.

பாட்டி, "மாந்தனுக்கு திருமணம் நிகழ இருக்கின்றது, இந்நேரத்தில் அவனை உங்களோடு போர்க்களத்திற்கு அனுப்ப இயலாது..." என்றார்.

கொற்கை வேங்கை, "முடி இளவரசனை படை நடத்த வரச்சொல்லி மன்னரே நேரடியாய் உத்தரவிட்டிருக்கின்றார். அவர் சொல்லை கடைபிடிப்பதும், கைவிடுவதும் அனழேந்தியின் சித்தம்..." என்றான் திமிராக.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அரண்டுபோய் குடிலினுள் நுழைய முயன்ற யாளியை பாட்டியின் மந்திரம் கட்டிப்போட, அவள் இருந்த இடத்திலேயே மண்புழுவென சுருண்டு விழுந்தாள்.

பாட்டி கோபமாய், "பதவியைத்தான் பறித்தாகிவிட்டதே... இனி எந்த உரிமையில் அவனை அங்கே அழைக்கின்றீர்கள்?" என்றார்.

"இளவளவனுக்கு இன்னும் இரு தினங்களில் இரும்பொறை தேசத்து இளவரசியுடன் மணம் நிகழ இருக்கின்றது. அது முடிந்த பிற்பாடு தான் இளவளவன் முடி இளவரசனாய் பதவி சூட்டுகிறான். அதுவரையில் அனழேந்தியே அப்பொறுப்பிற்கு உரியவன்."

"திருமணத்திற்கு என் பேரனை ஒரு வார்த்தை அழைக்க மனமில்லாதவர்கள் போருக்கு மட்டும் அழைக்க வந்ததேன்?"

"அவை ராஜ்ஜிய விஷயங்கள், எளியோருக்கு சொல்வதற்கில்லை. எங்களோடு அவனை அனுப்புவதற்கு இன்னும் ஒரு நாழிகை அவகாசம் தருகின்றேன். அதற்குள் அவன் வரவில்லையெனில் அரசரின் உத்தரவை மீறியதாய், படைத் தளபதியாகிய நான் அரசவையில் சொல்ல நேரிடும்."

அப்போது வெளியிலிருந்து ஒரு வீரன், "தளபதி அவர்களே, முடி இளவரசர் அனழேந்தி வந்து கொண்டிருக்கின்றார்..." என்றான்.

"வந்துவிட்டானா?..." என்று ஏளனச்சிரிப்புடன் கொற்கை வேங்கை வெளியே வந்து பார்த்தான்.

அடைமழைதனிலே எரிமலையென சிவந்த விழிகள் தனியாய்த் தெரிய, அண்ட சராசரமும் கிடுகிடுக்கும் படியான இடியும் மின்னலும் அவன் பின்னால் முழங்கிட, அசாதாரண கோபத்தோடு உடலை முறுக்கிக்கொண்டு, கொற்கை வேங்கையின் முன் வந்து நின்றான் அனழேந்தி.....
 
#6
ஒரு சாதாரண படைத் தளபதிக்கு
இவ்வளவு திமிரா?
ராஜா, இளவரசன்னு தெரிந்தும்
அனழேந்தியையும் அவன்
தம்பியையும் அவன் இவன்
என்று கொஞ்சம் கூட
மரியாதையில்லாமல் தளபதி
பேசுகிறானே, ரியா டியர்

தளபதியுடன் மாந்தன் போய்
விடுவானா?
இவ்வளவு மாந்த்ரீகம் தெரிந்த
சிவனார் கொடுத்த மரகதக்கல்
வைத்திருக்கும் மாந்தன் உயிர்
தப்புவானா?
இல்லை இறந்து விடுவானா,
ரியா டியர்?
 
Last edited:

JRJR

Active Member
#10

Mesmerizing... And couldn't come out. வெளியில் வர முயற்சிக்கிறேன்
 
Advertisement

New Episodes