மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 10

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்றோடு தேவியின் அன்னை இறந்து எட்டு நாட்கள்...... நோயால் அவதிப்பட்டவர் மூன்று நாட்கள் படுக்கையிலேயே இருந்து உயிர் நீத்தார்.. அவரது உயிர் போகும் தருவாயில் அருகில் இருந்த தேவியை அழைத்தவர்
“பாப்பா அம்மா உனக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன்ல... இந்த அம்மாவை மன்னிச்சிக்கோ... இனிமே உனக்கு இந்த அம்மாவால எந்த கஷ்டமும் இருக்காது..” என்று தேவியின் கைகளை பிடித்து கூற அவளது வார்த்தைகளில் பதறிய தேவி
“அப்படிலாம் ஒன்றும் இல்லை அம்மா.. நீங்க எப்பவும் எங்க கூட இருக்கனும்... இருப்பீங்க... உங்களுக்கு குணமானதும் நாம பழையபடி தாத்தா வீட்டுக்கு போயிருவோம்... அங்க போனதும் நீங்க எனக்கு கருவாட்டு குழம்பும் ரொட்டியும் செய்துத்தருவீங்கலாம்... நானும் தம்பாவும் சண்டை போட்டுக்கிட்டே அதை சாப்பிடுவோமாம்...”
“அந்த கொடுப்பினை எனக்கு இல்லை பாப்பா... அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா உன் ஆசையை நிறைவேத்துறேன்..”
“ஏன் மா.. இப்படியெல்லாம் பேசுறீங்க.... நான் சொல்வது கட்டாயம் நடக்கும்...”
“ம்... நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தரனும்...”
“எதுக்குமா சத்தியம் எல்லாம்??”
“கேள்வி கேக்காத பாப்பா...சத்தியம் பண்ணிக்குடு..”
“சொல்லுங்க அம்மா...”
“நீ எந்தவொரு சந்தர்ப்பதிலும் உன் அம்மாவுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்குற மாதிரி நடந்துக்க கூடாது... உன்னோட ஆசைகளுக்காக நீ யாரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது...... உன்னை அரவணைக்கின்ற கைகளுக்கு நீ எந்த தீங்கும் உருவாக்கிற கூடாது... உன் சித்தப்பா சித்தி என்ன சொல்லுறாங்களோ அது படி செய்... நான் சொல்லுறது புரியிதா??”
“புரியிது மா..”
“உங்க ஆறுமுகம் மாமா மற்றைய எல்லாவற்றையும் பார்த்துப்பாரு... நீ எதுவும் செய்யக்கூடாது.... உன்னோட ஆசாபாசங்கள் உன்னுடைய கட்டுப்பாட்டை மீறாமல் பார்த்துக்கோ.... உன்னுடைய ஒற்றை வார்த்தை கூட உன்னை கேவலப்படுத்தலாம்.... அதுனால உன் வாயிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் கவனிச்சு வெளிவிடு... நான் சொன்னது உனக்கு புரிஞ்சிதா தேவி...???”
“ஆமா அம்மா.... நீங்க சொன்ன எதையும் என்றும் மீற மாட்டேன்... இது உங்களுக்கு நான் பண்ணித் தருகின்ற சத்தியம்..” என்று தன் அன்னையின் கையில் சத்தியம் செய்தவள் கண்கள் ஏனோ கண்ணீர் வடித்தது...
அப்போது அவரது கண்களில் தோன்றிய ஒளி அணையப்போகும் சுடரின் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது..
அன்றிரவு தெய்வானை அம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார்....
எட்டாம் நாள் சடங்கினை முடித்துவிட்டு வீட்டுப்பெரியவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து தேவியினையும் வசந்தனையும் மீனாட்சியம்மாள் வீட்டில் இருக்க வைப்பது என்று முடிவு செய்தனர்.. இதனை கேட்டதும் தேவியின் சப்த நாடியும் நடுங்கியது...
சில நாட்கள் அவரது அரவணைப்பில் இருந்ததே அவளிற்கு இன்னொரு நரகத்தை காட்டிவிட்டது... இனி வாழ்க்கை முழுவதும் அவரின் நிழலின் கீழ் வாழ்வதா என்று எண்ணுகையிலே அவளுக்கு கதி கலங்கியது... ஆனால் மறுக்கும் வழியில்லாதவாறு அனைத்து வழிகளுமே முடங்கிவிட்டது...
தனக்கென்று யாருமில்லையே என்று அக்கணம் வருந்தினாள் தேவி.... ஆயினும் செய்ய ஏதுமில்லாததால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவது மட்டுமே அவளால் முடிந்தது...
மீனாட்சியம்மாவின் வீட்டில் குடியேறியதும் அவரது உண்மையான உருவம் தேவியிற்கு தெரியவந்தது... இவ்வளவு நாட்கள் அவர் தன்னிடம் மட்டுமே கடுமையாக நடப்பதாக எண்ணியிருந்த தேவி அங்கு சென்றதும் அது தவறென்று அறிந்து கொண்டாள்...
அவரது மூன்று புத்திரிகளுக்கும் அவளுக்கு கிடைத்த வசவுகள் அடி உதை என்பன பாராபட்சமின்றி கிடைப்பதை அறிந்து கொண்டாள்... ஆனால் அது அவர்களுக்கு இது பழகிவிட்டதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை.... ஆனால் தேவியிற்கு தான் அதைத்தாண்டி செல்ல திடம் இருக்கவில்லை....
தன் அன்னை மற்றும் தாத்தாவுடன் இருந்த காலத்தில் அடி மற்றும் திட்டு வாங்கித் திரிந்த காலங்கள் உண்டு... ஆனால் அது ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமே... ஆனால் இங்கு எழுந்ததில் இருந்து உறங்கும் மட்டும் அவை மட்டுமே இருக்க அதை கடந்து செல்ல அவளால் முடியவில்லை... இவ்வாறு மூன்று மாதங்கள் கடந்திருக்க மீனாட்சியம்மாவின் மூத்த மகள் கலா தன் கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அன்னையிடம் தஞ்சமடைய வந்தாள்... கலாவின் கணவரின் குடும்பத்தில் நடந்த கலவரத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை வர தன் மனைவி மக்களுடன் வெளியேறிய கலாவின் கணவர் போக்கிடம் இல்லாமல் இருக்க கலா தன் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்...
வந்தவர்களை மீனாட்சியம்மாள் ஏதாவது கூறுவார் என்று அனைவரும் எதிர்பார்க்க அவரோ அடைக்கலம் கொடுத்தார்... அடைக்கலம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கும் சேர்த்து அவரே உழைத்தார்... என்னதான் கடுமையாய் இருந்தாலும் அவருள்ளும் ஒரு ஈரம் இருப்பதை தேவி அச் சந்தர்ப்பத்தில் அறிந்து கொண்டாள்.... தன்னிடமும் கடுமையை காட்டுபவர் என்றும் உணவிற்கோ உடையிற்கோ ஏங்க அனுமதித்ததில்லை என்பதையும் அக்கணத்தில் உணர்ந்தாள் தேவி..
இவ்வாறு நாட்கள் தன் பாட்டில் நாட்கள் சென்று கொண்டிருக்க சந்திரன் தேவியோடு பேசி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டது.... பார்த்து பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த போதும் அதை பயன்படுத்திக்கொள்ள முயலவில்லை...
ஆனால் அதற்கும் விதி ஒரு சந்தர்ப்பம் அமைத்து தந்தது... தேவி வார இறுதியில் தன் தந்தையுடன் அம்மாயியை பார்க்க செல்வாள்... மற்றைய நாட்களில் மீனாட்சியம்மாளே வேலைக்கு செல்லும் வழியில் தன் அன்னைக்கு உணவு கொடுத்துவிட்டு செல்வார்... ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவியே உணவெடுத்துக்கொண்டு தன் தந்தையுடன் செல்வாள்... அன்றும் அவ்வாறு அம்மாயியை பார்க்க கிளம்பியவர்கள் பஸ்ஸிற்காக காத்திருக்க சந்திரனும் அங்கு வந்தான்... அவனை நெடுநாட்களுக்கு பிறகு பார்த்த பார்த்த தேவி வழமை போல் ஓடி ஒளிய முடியாத காரணத்தால் தலையை தாழ்த்திக்கொண்டாள்... ஆனால் சந்திரனோ நெடு நாட்களுக்கு பிறகு பார்த்த தன் காதலியை ரசித்து கொண்டே தன் மாமனோடு பேசிக்கொண்டிருந்தான்... அவருடனான பேச்சின் மூலம் அவர்கள் அம்மாயியை பார்க்கப்போவது தெரிந்து கொண்டவன் அவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்... பஸ் வந்ததும் அதில் ஏறியவர்களுக்கு அமர்வதற்கு இருக்கை கிடைக்கவில்லை... ஆனால் தேவிக்கு ஒரு தரிப்பிடம் கடந்ததும் இடம் கிடைத்துவிட அவள் அமர்ந்து கொண்டாள்... அமர்ந்தவள் தன் தந்தையை தேட அவரோ கூட்ட நெரிசலில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தார்... சந்திரனை தேட அவனோ அவளுக்கு பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தாள்.... அவர்களது இருப்பை உறுதிபடுத்திக்கொண்டவள் வெளியே வேடிக்கை பார்க்க சந்திரனோ வெளியே வேடிக்கை பார்ப்பது போல் அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்... சிறிது நேரத்தில் பேரூந்தில் கூட்டம் குறைந்துவிட தேவியிற்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் சந்திரன்....
முதலில் இதை கவனிக்காத தேவி யாரோ தன்னை கூப்பிடுவதை போல் உணர்ந்து திரும்பி பார்க்க அருகில் இருப்பது சந்திரன் என்று அறிந்தவளுக்கு உள்ளுக்குள் படபடப்பு... கண்களால் சுற்றி இருப்பவர்களை அலசியவள் கடைசி இருக்கையில் தன் தந்தை அமர்ந்திருப்பதை கண்டு அவரருகே செல்ல எழும்பியவளை கை பிடித்து தடுத்தான் சந்திரன்.. சட்டென்று அவன் கையை உதறியவள் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..... அவளது செயல் சந்திரனை பாதித்த போதும் அவன் அதை காட்டிக்கொள்ளவில்லை..... அவளை பார்ப்பதே அவனுக்கு வரமாக இருக்கும் பட்சத்தில் இப்போது கிடைத்திருக்கும் இந்த பயண நேரத்தை தன் கோபத்தால் கசப்பான நிகழ்வாக மாற்றிக்கொள்ள சந்திரன் விரும்பவில்லை... எனவே அதனை அனுபவிக்க தேவியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்...
“எப்படி இருக்க பாப்பா....??? வசந்தன் எப்படி இருக்கான்??? வீட்டுல மற்றைய எல்லோரும் எப்படி இருக்காங்க?? என்ற சந்திரனது நீண்ட கேள்விக்கு ம் என்ற ஒற்றை பதிலே கிடைத்தது...இதிலேயே அவள் பேசமாட்டாள் என்று புரிந்து கொண்டவன் அவளிடம் கேள்வியேதும் கேட்காமல் தன் பாட்டில் தன் கதைகளை சொல்லத்தொடங்கினான்....

தேவி எதையும் கேட்காதது போல் பாவனை செய்த போதிலும் சந்திரனது பேச்சினை ரசித்துக்கொண்டே இருந்தாள்... சந்திரன் எப்போதும் தேவையில்லாமல் அதிகம் பேச மாட்டான்.... அவனது பேச்சில் எப்போதும் ஒரு நிதானம் இருக்கும்...ஆனால் தேவியிடம் பேசும் போது மட்டும் அவனது பேச்சில் நகைச்சுவை சற்று அதிகமாக பாராபட்சமின்றி துள்ளி விளையாடும்.... அதனாலேயே தேவியிற்கு அவன் பேசுவது மிகவும் பிடிக்கும்... ஆனால் அவள் அதை எப்போதும் வெளிப்படுத்தியதும் இல்லை வெளிப்படுத்த முயன்றதும் இல்லை... ஆனால் அவளை பற்றி நன்கறிந்த சந்திரனோ அவள் அவனது பேச்சை ரசிப்பதை உணர்ந்து கொண்டான்... அதனாலேயே அவள் பதிலளிக்காவிடினும் அவன் பேசுவதை நிறுத்துவதில்லை... இன்றும் அதே தொடர ஒருவழியாய் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வரவும் மூவரும் இறங்கிக் கொண்டனர்.... அவர்களுடன் சுந்தரத்தின் தூரத்து உறவினர் ஒருவரும் இறங்க சுந்தரம் அவருடன் பேசிக்கொண்டு முன்னே நடக்க தேவி சந்திரனுடன் தனித்து விடப்பட்டாள்... தேவியின் கையிலிருந்த பையினை வலுக்கட்டாயமாக வாங்கியவன் அதை ஏந்தியவாறு அவளுடன் நடக்கத்தொடங்கினான்....

முன்னே செல்லும் தந்தையுடன் சேர்ந்து செல்லவும் முடியாமல் சந்திரனுடன் சேர்ந்து செல்லவும் முடியாமல் தடுமாறிப்போனாள் தேவி... அவளது தாயின் அறிவுறுத்தல்கள் அவளது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்து அவளுள் ஒருவித பயத்தை கிளப்பியது..... அந்த பயத்திற்கு காரணம் அவளுள் மறைந்திருந்த காதல்.... ஆனால் அவள் கற்பித்துக்கொண்ட காரணம் சமூகத்தின் பேச்சு.... ஆனால் அவள் அறியாத விடயம் சந்திரன் தன் காதலை உறவினர் சுற்றத்தினர் சூழ்ந்திருந்த இடத்தில் அறிவித்துவிட்டான் என்பது...
தேவியின் அன்னையின் பிரதத்தை சிதையூட்ட எடுத்து செல்லும் போது கதறிய தேவியை சுற்றத்தார் முன்னிலையில் அணைத்து உனக்கு எல்லாமாய் நான் இருப்பேன் என்று சத்தியம் செய்திருந்தான்.... இதனை யாரும் அந்த நேரத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..... ஆனால் அன்னையை இழந்த சோகத்தில் இருந்த தேவிக்கு இவை எதுவும் மனதில் பதியவில்லை.... அதனால் அவளுக்கு அந்த நிகழ்வு மனதில் பதியவில்லை.... ஆனால் சந்திரனோ எப்பாடு பட்டேனும் தன் சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னிலையை உயர்த்திக்கொள்ள பாடுபட்டுக்கொண்டிருந்தான்...
இவ்வாறு தன்னை சுற்றி நடக்கும் எதை பற்றியும் அறியாத தேவி வழமைபோல் இருந்தாள்....
ஒருவழியாக அம்மாயியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் மூவரும்....
அப்போது சிவாவும் அங்கு வந்து சேர ஆண்கள் அனைவரும் வெளியே இருந்து பேசிக்கொண்டிருந்தனர்...
அம்மாயியிற்கு தான் கொண்டிருந்த உணவை பகிர்ந்து கொடுத்தவள் அங்கிருந்த மற்றவர்களுக்கும் வீட்டில் இருந்த உணவை பகிர அவர்கள் மறுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டனர்...
மாலை நான்கு மணியளவில் அம்மாயியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பத்தயாரான தேவி தன் தந்தையை தேட அவர் அங்கிருந்த அவரது நண்பர் வீட்டில் இருக்க அவரைத்தேடி சென்றாள் தேவி...
அங்கு அவர் சந்திரன் மற்றும் சிவா துணையுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்...
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தேவி அழைக்க அவரோ இந்நிலையில் தன்னால் பயணிக்க முடியாது. ஆகையால் இன்று அம்மாயியுடன் தங்கிக்கொள்ளுமாறு கூறினார்....
ஆனால் மீனாட்சியம்மாள் பற்றி நன்கறிந்த தேவி செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க தேவியின் தந்தையோ சந்திரனை துணைக்கழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறிவிட்டார். அதனை தேவி மறுக்கும் முன் அவளை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டான் சந்திரன்...
மீனாட்சியம்மாள் மீதிருந்த பயத்தாலும் வேறு வழியேதும் இல்லாத காரணத்தாலும் தேவி சந்திரனுடன் கிளம்பினாள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top