மனம் பொய்த்த பொழுதுகள் - முன்னோட்டம்

Advertisement

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
அனைவருக்கும் வணக்கம்.

இந்தக் கதை பற்றிய பொதுவான ஒரு முன்னோட்டம் இங்கு அளிக்காது இருந்து விட்டேன். என்னுடைய வேர்ட்ப்ரஸ் (இங்கு என்னுடைய பயனர் பக்கத்தில் முகவரி உண்டு) தளத்திலும், முகநூல் பக்கத்திலும் (பேஜ்) (arasilamparithi novels) இட்டதாக நினைவு.

யம்ப்பில் இட்டிருந்த பழைய பதிவுகளை நீக்கி விட்டேன். இனி, கூகுள் டிரைவில் அத்தியாயங்கள் இடம்பெறாது. இங்கு மட்டுமே அடுத்தடுத்த அத்தியாயங்கள் பதியப்படும். இங்கு பதியப்பட்ட பதிவுகளின் இணைப்புகள் மட்டுமே அரசிளம்பரிதி நாவல்ஸ் இலும், வேர்ட்ப்ரஸ் தளத்திலும் இடப்படும். என்னை நீங்கள் அங்கும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கருத்துக்களைப் பதியலாம்.

இந்தக் கதையில் வரும் குணா, ஆறு அடி உயர, தோள்கள் அகன்று விரிந்த, மிகவும் சிந்தித்து செயல்படுகிற, நிதானித்து, திட்டம் இட்டு செயல் ஆற்றுகிறவன் இல்லை. மீறிப் போனால், சற்றே கூடுதலான முக அழகு கொண்ட சராசரி உருவ அமைப்பு. இந்தக் கதையில் வரும் சங்கரனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “நீ ஆயிரம் உன்னைக் குறைவாக சொல்லிக் கொள். இங்கு நம்மில் எல்லோரிலும் முக வசீகரன் நீதான். உன்னளவு அழகு இருந்து காதலிக்காமல் இருப்பதா? நான் சொல்கிறேன், நீ காதலிக்க வேண்டுமென்று” :p;) ஆனாலும், இவன் கதாநாயகன் இல்லை; கதையின் நாயகன்.

குணா செய்யும் செயல்கள், ஏறத்தாழ செய்ய வேண்டாதவை எனச் சொல்லும் செயல்களை எல்லாம் செய்து விட்டு விழிக்கும் ‘வந்தியத்தேவனின்’ செயல்களை போன்றவை. அங்கு போலவே இங்கும் இவன் சுமக்க நேரிடும் பழிகள் அத்தனை கொடுமையானவை இல்லையென்ற போதும், விளைவுகள், இருபதாம் (21 அல்ல) நூற்றாண்டின் இறுதிக்கு, அந்த வயதுக்கு, கொடுமையானவைதான்.

செல்வியும் சற்று துறுதுறுப்பானவள். தனது துறையில் கல்லூரியில் முதலிடம் பிடிப்பவள். தானுண்டு, தன் படிப்பு உண்டு என்றிருப்பவளின் கவனத்தை, கல்லூரி விரிவுரையாளர்களும், சக மாணவர்களும், கல்லூரி நிர்வாகமுமே திசை திருப்புகின்றனர். அதன் விளைவுகளை செல்வி சமாளித்துக் கொண்டாளா? ஆனால், ஒரு பிரச்சனையில், ஒருவர் சமாளித்துக் கொண்டதாலேயே பிற விளைவுகள் இல்லாது போவதில்லை.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் மீது வைக்கும், வைக்க வேண்டிய நம்பிக்கை, அறிவுறுத்தல்கள், ஆதரவு காட்ட வேண்டிய நேரத்தில் காட்டத் தவறுவதால் ஏற்படும் விளைவுகள் என நிகழ்ந்த நிகழ்வுகளின் கனமான ஒரு தொகுப்பு.

குணா செய்தவைகள் எல்லாம் சரிதானா. எடுத்த முடிவுகள் சரியா என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, அவை எடுக்கப்பட்டுவிட்ட மாற்றுவதற்கில்லாத முடிவுகள் என்பதை மனதில் கொண்டே நாம் இந்தக் கதையை அணுக வேண்டும்.

அதுபோலவே குமுதவல்லியின் செயல்களும், முடிவுகளும். நம்மால் அவ்வளவு எளிதாக உடன்பாடு கொள்ள முடியாத செயல்கள். ஆனால், அவரவருக்கு ஒரு நியாயம் உண்டு. குமுதவல்லிக்கும் அவை உண்டு.

வீராச்சாமி போன்றவர்களை என்ன சொல்வது அல்லது செய்வது? வீராச்சாமிகளின் தவறுகளை நாம் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறோம். பணம் இருந்தால், பணத்தைக் கொண்டு அவர்களால் அனைத்தையும் சமாளிக்க முடிகிறது. இன்னும் கூட இது போன்ற நபர்களை எதிர்த்து நிற்க வேண்டியவர்களின் கரங்கள் விலங்கிட்டே இருக்கிறது. வீராச்சாமிகளுக்கு உதவியாய், இளவழகன்களும், சதுரகிரிகளும், வினயனும், கிருட்டினனும் நிறைந்த உலகு.

ஒரு பக்கம் வாழ்க்கையின் கடுமைக்குப் பின்பும், எதிர்நீச்சல் போடும் குமரன். மறுபக்கம், நிகழ்வுகளின் கடுமைகளில் அதிர்ந்து நின்று விடும் குணா. ஒரு பக்கம், தன்னில் பிழை இல்லை என்பதில் உறுதியாக நிமிர்வுடன் நிற்கும் மிருதுளா. மறுபக்கம், தன்னில் பிழை இல்லாது போயினும், வீடு அறிந்து கொண்டால் என்ன ஆகுமோ என்று தடுமாறும் செல்வி.

மனிதர்களில் விசித்திரங்கள் வெகு இயல்பு. அந்த விசித்திர இயல்புகள் ஓரிடத்தில் சந்திக்க நேர்கையில் அதன் விளைவுகள்?

இங்கே பலரின் “மனங்கள் பொய்த்துப் போகிறது”

அங்கே என்ன நடந்திருப்பினும், நம் மனதை இவை பொய்த்துப் போகச் செய்யாது இருந்தால் சரியே.

அடுத்த அத்தியாயம், அநேகமாக “புகழ் மயக்கம்” ஆக இருக்கக் கூடும். இங்கே ஒரு கடுமையான வேலைப்பளுவில். அதனால், புகழ் மயக்கம், சற்றே மயங்கி நிற்கிறது. தளர்வு நீங்கி, விரைந்து கொடுக்க முயற்சிக்கிறேன். (நாங்க கேட்டோமா? :p) நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top