ப்ரியசகியே 11

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-11




ஆறு வருடங்களுக்கு முன்…



அந்த அறை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது

கதவை அடைத்து திரைச்சீலைகளையெல்லாம் இழுத்து மூடப்பட்டிருந்தது. கட்டிலுக்கு அருகே தரையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்தபடி சீலிங்கையே வெறித்துக்கொண்டிருந்தாள் மாதுரி. இன்னுமும் அவளால் அவள் தந்தை இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை.

ஆம் அவர் இறந்து ஒரு வாரமாகிவிட்டது, அவளால்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏதோ எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்துவிட்டதுப்போல் இருந்தது. இனி என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை. கடன் சுமை வேறு. அவளால் எதுவும் யோசிக்கவே முடியவில்லை அழவும் இஷ்டமில்லை.


சீலிங்கையே வெறித்துக்கொண்டிருந்தவளுக்கு யாரோ அறைக்கதவை கொஞ்சம் வேகமாக தட்டவும் தான் சுயநினைவுக்கு வந்தாள்.

‘யாரு ?’

‘மாதும்மா நான்தான்’ என்க

‘எனக்கு பசிக்கல மா, நான் அப்புறமா சாப்பிடறேன்’ என

‘ மாதும்மா சுதாகரன் அண்ணா வந்திருக்காரு உன்கிட்ட பேசனுமாம்’

‘ரெண்டு நிமிஷம்மா நான் வந்திட்டேன்’ என்று முகம் துடைத்துக்கொண்டு கீழே சென்றாள்.

‘ ஹாய் அங்கிள், ஆன்டி எப்படியிருக்காங்க சத்யா எப்படியிருக்கா?’ என்று கேட்டுக்கொண்டே கீழிறங்கி வந்த மாதுரியை பார்க்க அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவருக்கு தெரியும் இதுதான் மாதுரி அவள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்தாலும் அது மற்றவர்களை பாதிக்காத அளவு பார்த்துக்கொள்வாள் எதையும் காட்டிக்கொள்ளாத ரகம்.

‘ எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே’ என்க

அவளும் ‘வாங்க அங்கிள்’ என்று ஆஃபிஸ் ரூமிற்கு அழைத்துச்சென்றுவிட்டாள்.



அவர் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவள்


‘என்னால முடியுமா அங்கிள்?’


‘ஏன் முடியாது மாது இது உன் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து உருவாக்கினது அதை நானும் மத்தவங்கள மாதிரி வித்துருன்னு சொல்லமாட்டேன் எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு உன்னால முடியும் மாது.’


அவர் மற்றவர்கள் என்று குறிப்பிட்டது தனது சித்தப்பா சந்திரசேகரை தான் என்று மாதுவிற்கு நன்றாகப்புரிந்தது. ஏனென்றால் அவர்தான் இவளிடம் எல்லாவற்றையும் விற்று கடனடைத்துவிடு என்றிருந்தார். அவரைச்சொல்லியும் குற்றமில்லை அவருக்கு இருக்கும் நெருக்கடிக்கு அவர் அவருடையதைத்தானே பார்க்கமுடியும் என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டதும் ஞாபகத்திற்கு வந்தது.


‘ஆனா அங்கிள் நான் இன்னும் டிகிரிக்கூட முடிக்கலயே’


‘அதனால என்னம்மா இன்னும் ஒரு வருஷம்தானே இருக்கு .பிஸ்னஸ் கொஞ்சம் ஸ்டேபில் ஆன உடனே கரஸ்பான்டன்ஸ்ல கன்டின்யூ பண்ணிக்கலாம். நீ படிச்சத படிக்கப்போறத இனி ப்ராக்டிகலா பண்ணப்போற’என்று அவளின் சம்மதத்தை பெற்றுக்கொண்டே அவர் சென்றார்.


அவள் அப்பாவின் இவ்வளவு வருட உழைப்பை அப்படியே விட்டுவிட அவளுக்கு மனமில்லை.ஏனோ அவளது சுதா அங்கிள் கேட்கும்பொழுது அவள் கண் முன் வந்ததெல்லாம் அவள் அப்பாவின் முகமே. என்ன செய்யவென்று தெரியாமலிருந்தவளுக்கு இப்படியொரு வழி கிடைக்கவும் முதலில் தயங்கியவள் பின் சரியென்றுவிட்டாள். அவரை அனுப்பிவிட்டு மறுபடியும் தன்னறைக்கு சென்றுவிடத்தான் நினைத்தாள் ஆனால் இப்படி அவள் அறைக்குள்ளேயே கிடந்தால் வள்ளியம்மா வருத்தப்படுவார் என்று தெரியும் அதனால் கொஞ்ச நேரம் அங்கிருந்துவிட்டு மாடிக்குச்சென்றாள்.


அவர் சொல்லிச்சென்றது போலவே அவள் பொறுப்பேற்க தேவையான வேலைகளையெல்லாம் செய்துவிட்டார்.


அவள் கம்பனியில் பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு வாரத்திலேயே சுதாகரனுக்கு வேறு வேலை வந்துவிட அவர் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம், தவிர்க்க முடியாத பயணமென்பதால் இவளுக்கு ஒரு சில அறிவுறைகளை வழங்கிவிட்டு எந்தவிதப்பிரச்சனை என்றாலும் அழைக்குமாறு சொல்லிவிட்டே கிளம்பினார்.


ஒரு ஞாயிறன்று மதிய வேலையில், ஆஃபிஸ் ரூமில் ஒரு ஃபைலை புரட்டிக்கொண்டிருந்தாள் மாதுரி ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது ஆனால் எங்கு தவறு நடந்திருக்கிறது என்பதுதான் அவளுக்குப்புரியவில்லை. மேலும் சில மணிநேரம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்ததில் அவளுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது ஏமாற்றுக்காரர்கள் வெளியில் மட்டுமில்லை உள்ளேயும் சில நம்பிக்கை துரோகிகள் இருக்கிறார்கள் என்பது. அவள் அடுத்து என்ன என்ற யோசனைக்கு சென்றுவிட்டாள் சுதாகரன் வேறு ஊரில் இல்லை, அவருக்கு அழைக்கலாம் என்றால் அவருக்கு க்ளையன்ட்ஸுடன் மீட்டிங் வேறு இருந்தது அவரை சிரமப்படுத்த மனம் வரவில்லை.

அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை தந்தையைப்போலொரு மணிதரை ஏமாற்ற எப்படி மனம் வந்தது இவர்களுக்கு என்ற கோபத்திலிருந்தாள்.


அந்நேரம் ஏதோ ஒரு கார் வேகமாக வந்து போர்ட்டிகோவில் நிற்கும் சத்தம் கேட்டது.

அது சந்திரசேகரின் கார்தான் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தவர் அன்று காலைதான் வீடு திரும்பியிருந்தார்.

அவர் கேள்விப்பட்ட செய்தியே அவரை இங்கு இழுத்து வந்திருந்தது.

வேகவேகமாக உள்ளே நுழைந்தவர் வள்ளியம்மாவை பார்த்ததும்.


‘இங்க என்ன நடக்குது வள்ளி? மாதுரி எங்க?’என அவர் கோபத்தை குரலிலேயே காட்ட.

அவர் போட்ட சத்ததுலேயே அறையை விட்டு வெளியே வந்திருந்த மாதுரி ‘நான் இங்க இருக்கிறேன் சித்தப்பா’ என்று அவள் கீழிறங்கிவர வள்ளியம்மாவோ

‘நான் காபி கொண்டுவரேன்’ என


‘நான் இங்க காபி குடிக்க வரல’ என்றுவிட்டு மாதுவின் புறம் திரும்பி


‘என்ன பண்ணி வச்சிருக்க மாது? நான் என்ன சொன்னேன் நீ என்ன பண்ணிருக்க?’


‘சாரி சித்தப்பா என்னால ஒரு நாளும் கம்பனிய விக்கமுடியாது. இது அம்மாவும் அப்பாவும் கஷ்டப்பட்டு உருவாக்குனது. என்னால அப்படி யோசிச்சுக்கூட பார்க்க முடியல’


‘ என்ன பேசற மாது அந்த சுதாகரன்தான் சொன்னான்னா நீ யோசிச்சு பார்க்க மாட்டீயா? உங்க அப்பாவாலயே நடத்த முடியாதத நீ நடத்தப்போறியா? உன்னால எப்படி முடியும் நீ சின்னப்பொண்ணு’


‘அப்பாவால நடத்த முடியாம இல்ல சித்தப்பா நம்பக்கூடாதவங்கள நம்பி ஏமாந்துட்டாங்க. என்னால முடியும் சித்தப்பா’


‘ நான் சொல்றத கேட்கக்கூடாதுனே முடிவு பண்ணிட்டியா ?’


‘சாரி சித்தப்பா நான் அப்படி சொல்லல. அப்பா கஷ்டப்பட்டு உருவாக்குனத என் கண்முன்னாடியே என்னால அழியவிடமுடியாது சித்தப்பா, இது அப்பாவோட கனவு சித்தப்பா...என்னோட கடமை…’


‘ஓஹோ…’ என்றவர் ‘நீ செய்றது பைத்தியக்காரத்தனம் மாதுரி’ என்றுவிட்டு கிளம்பிவிட்டார். அவருக்கென்னவோ அவள் அவர் சொல்படி நடக்க வில்லை என்ற கோபம்.


மாதுரிக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை இருக்கும் ஒரே உறவு சித்தப்பா அவரும் இப்பொழுது சென்றுவிட்டார் அவர் சென்றதைவிட அவர் பேசிச்சென்ற வார்த்தைகளே அவளை இன்னும் காயப்படுத்தின. வள்ளியம்மா அவள் முகத்தை முகத்தை பார்ப்பது இன்னும் கவலையை தந்தது. ஓ...என்று அழவேண்டும்போல் ஆனால் முடியவில்லை ஏனோ அந்த வீட்டில் அவளுக்கு மூச்சு முட்டுவதுப்போல் ஒரு உணர்வு கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.


எங்கே செல்கிறோமென்றே தெரியாமல் சென்றுக்கொண்டிருந்தாள். தனது கோபத்தை வண்டியில் காண்பித்தவள் கிட்டத்தட்ட ஒரு மரத்தின்மேல் மோதுவதுப்போல் கொண்டுச்சென்று நிறுத்திவிட்டாள். வண்டியிலிருந்து இறங்கியவள் கால்போனப்போக்கில் நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

கொஞ்ச தூரம் நடந்துச்சென்றவள் கண்ணிற்கு ஒரு குளம் தெரிய அதை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் அங்கேயே மன்டியிட்டமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

யாரோ பின்னிருந்து ஓய் என்று அழைத்துக்கொண்டே அவள் தோளை தொட திடுக்கிட்டு திரும்பினாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top