ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7

#1
அத்தியாயம் 7

தனது புல்லட்டில் சென்றுகொண்டிருந்த கார்த்திக் அவர்கள் நின்ற திசையை திரும்பி பார்க்க.... அங்கு அழகேசன் மட்டுமே மொபைலில் யாருடனோ பேசுவது போல் நின்று கொண்டிருந்தான்.

அழகேசனை பார்த்ததும் பழசெல்லாம் நினைவு வர....
அவனை எரிப்பது போல் பார்த்தவன் தனது பைக்கின் வேகத்தை அதிகரித்து கோவிலை கடந்து சென்றுவிட்டான்....

அவ்வளவு நேரம் இழுத்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியிட்டான் அழகேசன்.

அதே நேரம் அங்கிருந்த மரத்திற்குப் பின்னால் ஹர்ஷினியின் வாயை தன் கைகளால் இறுக மூடியபடி நின்றுகொண்டிருந்த ஹர்ஷா கார்த்திக் கடந்து சென்றதும் நிம்மதிப் பெருமூச்சுடன் ஹர்ஷினியை பார்க்க.... அவளோ குழந்தைபோல் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்.


ஆனால் ஒரு ஆண்மகன் தன் வாயை மூடி இவ்வளவு அருகில் நிற்கிறான் என்ற பயம் அவளது கண்ணில் துளியும் இல்லை...

அதை கவனித்த ஹர்ஷா அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்....

விளையாட்டினால் கலைந்துபோன முடிக்கற்றைகள் அவளது ஆப்பிள் கன்னத்தில் படிந்திருக்க... அவன் வாயை மூடியதால் பேசமுடியாமல்.... தன் கருவண்டு விழிகளால்....'ஏண்டா இப்படி?' என்பது போல் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்...

அவள் அழகிய விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை ஈர்க்க.....அவளிடமிருந்து தன் கண்களை பிரித்து எடுக்க முடியாமல் தடுமாறி போனான் ஹர்ஷா.

அவளின் விழிகளில் தெரிந்த மாய வலையில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவித்தவனின் தோள்பட்டையை தட்டி கூப்பிட்ட ஹர்ஷினி ......தன் வாயில் இருந்த அவனின் கையை சுட்டிக்காட்டி அதை எடுக்குமாறு சைகை செய்தாள்.

சட்டென்று தன் கையை எடுத்து ஹர்ஷா அவளின் முகத்தை பார்க்க முடியாமல் திரும்பி நின்று கொண்டு தன் தலைமுடியை அழுத்த கோதி தன்னைச் சமன்படுத்தி கொண்டான்.

'ச்சே.... என்ன பண்ற ஹர்ஷா' என்று தன்னையே கடிந்து கொண்டவன் அவளை திரும்பிப் பார்க்க....

அதற்குள் அழகேசன் அவர்கள் அருகில் வந்து விட.....


இருவரையும் முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் ஹர்ஷினி...

"பாப்பு...." என்று அழகேசன் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க....

ஹர்ஷினியோ....
"உங்க ரெண்டு பேரு மேலயும் செம காண்ட்ல இருக்கேன்.... என்கிட்ட பேசாதீங்க...." என்று கடுப்பாக சொன்னவள்....
அழகேசன் ஹர்ஷா இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்கவும்....

"ஐஸ் பாய் விளையாட்டு விளையாடினா சொல்லிட்டு விளையாட மாட்டீங்களா? சட்டுனு புடிச்சு ஒழிய வைக்கிறீங்க ... பச்சப்புள்ள பயந்துடாது.... இர்ரெஸ்பான்ஸ்பில் இடியட்ஸ்...." என்றாள் பாருங்களேன் இருவரும் 'இது தேறாத கேஸ்' என்று ஒன்றுபோல் நினைத்துக் கொண்டனர்.....

அதற்குள் மைதானத்திற்கு அவளைத் தேடி வந்த சுகன்யா குழந்தைகள் ஹர்ஷினி கோவில் அருகே சென்றதாக சொல்லவும் அங்கு வந்து சேர்ந்தாள்....

ஹர்ஷா அழகேசன் இருவரின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தவளை பார்த்ததும்.....
'இவங்கள எப்படி இவளுக்கு தெரியும்' என்று குழம்பியபடி அவர்கள் அருகில் வந்தாள்.

அங்கு அதற்குள் ஹர்ஷினி.... "யாரு பாக்கக் கூடாதுன்னு என்ன ஒழிய வச்சீங்க?" என்று நோண்டிக் கொண்டிருந்தாள்....

"அடியே இங்க என்ன பண்ற நீ ?" என்று சுகன்யா கூப்பிட...

மூவரும் ஒருசேர திரும்பி பார்த்தனர்.....

"கனி நல்லா இருக்கியா மா..." என்று ஹர்ஷா கனிவுடன் அவளிடம் நலம் விசாரித்தான்.

"நல்லா இருக்கேன் அண்ணா ....நீங்க எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?" என்று கேட்டவள் என்றவள் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டிக் யாராவது பார்க்கிறார்களா? என்று கவனித்துக் கொண்டாள்....

பின் யாராவது போட்டுக் கொடுத்தால் அவளது அண்ணனிடம் யார் மண்டகப்படி வாங்குவது?

ஹர்ஷா நேற்று தான் தான் வந்ததாக சொல்லி விட்டு வீட்டில் உள்ள அனைவரையும் நலம் விசாரித்தான்.

அடுத்து இவர்கள் பேச்சுக்கும் எனக்கும் சம்மதம் இல்லை என்பதுபோல் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றுகொண்டிருந்த அழகேசனிடம்
"மச்சான் நல்லா இருக்கீங்களா?"என்று சுகன்யா விசாரிக்க.... அழகேசன் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அதை கவனித்த ஹர்ஷினி, "யோவ் அண்ணா என் ஃப்ரெண்ட் கேட்டா பதில் சொல்ல மாட்டியா ? அம்புட்டு திமிரா உனக்கு பிச்சுபுடுவேன் பிச்சு" என்று அதட்டிவிட்டு.....


தோழியின் புறம் திரும்பி....
"ஆமா சுகா அழகு அண்ணாவ எதுக்கு நீ மச்சான் பிச்சாண்னு கூப்பிடுற?" என்று கேள்வி கேட்டாள்....

"அழகு மச்சான் எங்க சொந்தக்காரங்க தான் .... ஆனால் அண்ணாவுக்கு இவங்களுக்கும் ஆகாது ஹர்ஷி" என்றாள் சுகன்யா சோகமாக...

அழகேசன் இவர்கள் பேசுவதில் எதிலும் தலையிடாமல் இறுகிய முகத்துடன் நிற்க....

ஹர்ஷா தோழனின் வேதனை புரிந்து அவனது தோளை ஆதரவாக பற்றிக்கொண்டான்.

நின்று கொண்டிருந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்த ஹர்ஷினி....

"இப்படி ஆளாளுக்கு மூஞ்சை தூக்கி வச்சி இருந்தா என்ன அர்த்தம்? என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்கப்பா.... ரொம்ப ஃபிலிம் காட்டாதீங்க" என்று அலுத்துக் கொள்ள.....

அவளை லேசாக முறைத்தாலும்...
சுகன்யா "அது ஒரு பெரிய கதை ஹர்ஷி........." என்று சொல்ல தொடங்கினாள்...

அதற்குள் இடையில் புகுந்த ஹர்ஷினி, "ஸ்டாப்.... ஸ்டாப் ....ஸ்டாப் ஏதோ பழைய பாழடைஞ்ச பிளாஷ்பேக் ஆரம்பிக்க போகுது போல எனக்கு கபடி விளையாடினது ரொம்ப டயர்டா இருக்கு.... ஏதாவது கூலா குடிச்சுட்டு புஷ்டியா ப்ளாஷ்பேக் பத்தி பேசுவோமா?" என்று கேட்க .....

மூவரும் அவளை கொலைவெறியுடன் பார்த்தனர்..... அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், "ப்ளீஸ்ங்கோ" என்று அவள் முகத்தை சுருக்கி பாவமாக கேட்கவும்.... மூவரின் தலையும் தானாகவே சரி என்பது போல் ஆடியது.

இங்கு தனது புல்லட்டை ஏரிக்கரையில் நிறுத்திவிட்டு அதன் கரையில் அமர்ந்தான் கார்த்திக்.....


அவனது கண்களில் சோகம் வழிந்தோடியது. எதையோ இழந்தது போல் முகம் சுருங்கி இருந்தது. தனது வாலட்டில் இருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவன் பூவை விட மிருதுவாக அதை வருடினான் ...

அவனையும் மீறி அவன் இதழ்கள்
"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... என்கிட்டேயே வந்துடு செல்லம்மா.... நீ இல்லாம நான் இல்ல" என்று முணுமுணுத்தது.


இங்கு தென்னை மரங்கள் நிறைந்திருந்த தோப்பில் அமர்ந்திருந்த நால்வரின் கைகளிலும் இளநீர் இருந்தது....

மணி நாலரை ஆகியிருக்க சூரியன் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்....

இளநீரை குடிக்க முடித்துவிட்டு "யப்பா இப்போதான் ஃப்ரெஷ்ஷா இருக்கு...ஹான் இப்ப சொல்லுங்க ஃபிளாஷ்பேக்.."
என்று ஹர்ஷினி கேட்க ....

அவர்களும் சொன்னார்கள்....

கார்த்திக் ஹர்ஷா இருவருக்கும் சிறுவயதிலிருந்தே ஆகாது.எதிலும் போட்டி எல்லாவற்றிலும் போட்டிதான் பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து காலேஜ் வரை அது தொடர்ந்தது பெற்றவர்கள் வளர வளர சரியாகிவிடும் என்று நினைக்க ....அதுவோ சிறு விதையிலிருந்து முளைத்த மரம் போல் வேர்விட்டு பகையாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது.ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் பாலமாக இருந்தது அழகேசன்.

கார்த்திக் அழகேசன் இருவரும் உறவுக்காரர்கள் ஆக இருந்ததால் ஹர்ஷா நண்பன் என்பதையும் மீறி இருவரும் நன்றாகவே பேசிக்கொள்வார்கள்.

ஹர்ஷா வீட்டிலும் சரி.... கார்த்திக் வீட்டிலும் சரி இருவரின் பகையும் எவ்விதத்திலும் பாதித்தது இல்லை.

சிறு சிறு சண்டைகள் வந்தாலும்
வாழ்க்கை முட்டிமோதி அது பாட்டிற்கு சென்று கொண்டிருக்க.... அதற்கு ஆப்பு வைப்பது போல் கார்த்திக்கின் இரண்டாவது தங்கை சுவாதி ஒரு காரியத்தை செய்து வைத்தாள்....

அப்பொழுதுதான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்ந்து இருந்தான் அழகேசன்....

சுகன்யா பள்ளி இறுதி ஆண்டு தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்க .... அவளின் தங்கை சுவாதி பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த சமயம் அது.... 16 வயதிற்கு உரிய குறும்புகளும் சேட்டைகளும் அவளுக்கு ரொம்பவே அதிகம்... அதுவும் தன் அக்கா சுகன்யாவிடம் அப்படி போட்டி போட்டுக் கொண்டு நிற்பாள். சுகன்யாவிற்கு புதிதாக ஒரு காலணி வாங்கினால் கூட......நன்றாக இருக்கும் தன் காலணியை வேண்டுமென்றே அறுத்துவிட்டு அவளின் அப்பாவிடம் எனக்கும் புதிதாக வேண்டும் என்று வந்து நிற்பாள்.... அப்படிப்பட்டவள் ....... விசேஷ வீட்டில் ஒரு பெரியவர் சுகன்யா அழகேசன் இருவரையும் ஜோடியாக இணைத்து வைத்து பேச.......
பதின்பருவ வயதில் அக்காவின் மீது கொண்ட சிறு பொறாமை உணர்வால் தவறான காரியம் செய்தாள் அவள்....
சிறுகுழந்தை பொருளுக்கு போட்டி போடுவது போல் அழகேசன் அக்காவிற்கு இல்லை தனக்கு மட்டுமே உரிமை ஆனவன் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

தன் மனதில் உள்ளதை அழகேசன் இடம் எப்படி சொல்வது என்று யோசிக்கும் பொழுது தான்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு கதாநாயகி கடிதம் எழுதுவது போல் காட்சி வர அதை பார்த்தவள் .... அதுபோலவே அழகேசனுக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினாள்.

அதை அவனிடம் கொடுக்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்....

அதற்கேற்ற சந்தர்ப்பமும் சரியாக அமைந்தது

கோயில் விசேஷம் ஒன்றில் சிறுவன் ஒருவனிடம் கொடுக்க சொல்லி எப்படியோ அவனிடம் கொடுத்து விட்டாள்.....

அதைப் படித்து பார்த்த அழகேசன் தலையில் கை வைக்காத குறையாக வந்து நின்றது தன் நண்பனான ஹர்ஷாவிடம்தான்...

எந்த இடத்தில் அவன் தவறாக நடந்து கொண்டான் என்று அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.... இதுவரை சுவாதியை அவன் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை. சுகன்யாவிடம் கூட ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவான். அதுவும் படிப்பு பற்றியே இருக்கும் இப்பொழுது இதையெல்லாம் கார்த்திக் வீட்டிற்கு தெரிந்தால் நம்பி வீட்டிற்குள் விட்டதற்கு இப்படியெல்லாம் செய்து விட்டாயே? என்று கேட்க மாட்டார்களா?

விடாமல் புலம்பும் நண்பனை அணைத்து ஆறுதல் சொல்லிய ஹர்ஷா..... தானே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக நண்பனுக்கு வாக்களித்தான்.

அதற்காக தன் தங்கை மூலமாக சுவாதியை தோப்பிற்கு வரச் சொன்னான்.....

சிறு பெண் அறியாமல் செய்து விட்டால் சொல்லி புரிய வைத்துவிடலாம் என்று தான் அவன் நினைத்தது....

ஹர்ஷவர்தினி சொல்லி சுவாதியும் அங்கு வந்தாள்....

வந்தவளிடம் அவன் காதல் என்றால் இதோடு முடிவதில்லை என்றும் ....அதன் பிறகான வாழ்க்கை பற்றியும்.... எதிர்காலம் பற்றியும்... படிப்பு பற்றியும் எடுத்துச் சொல்ல ....அவளோ தான் கடிதம் கொடுத்தது ஹர்ஷாவிற்கு தெரிந்துவிட்டது என்ற புரிந்தவுடன் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்....

அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் அழுது கொண்டே இருக்க ...

தங்கை தானே என்று அவன் ஆறுதலாக கையை பிடித்து சமாதனம் செய்ய.... அதன் பிறகு நடந்தது அவன் எதிர்பார்க்காதது.... எங்கிருந்துதான் வந்தானோ கார்த்திக்.... ஹர்ஷாவை என்ன ஏது என்று கேட்காமல் சரமாரியாக அடிக்க தொடங்கி விட்டான்....

ஹர்ஷாவும் திரும்பி அடிக்க .... பிரச்சனை பெரிதானது...

விளைவு அக்கம்பக்கத்தினர் அனைவரும் கூடிவிட்டனர் ....

பெரியவர்கள் என்ன பிரச்சனை என்று கேட்க ....மறந்தும் ஹர்ஷா சுவாதியின் பெயரை இழுக்கவே இல்லை....

கார்த்திக்கும் தங்கையை பற்றி ஒன்றும் சொல்லாமல் அமைதி காக்க
இது எப்பொழுதும் போல் அவர்களுக்குள் நடக்கும் சாதாரண சண்டை என்று நினைத்து கூட்டம் அவர்களை திட்டி விட்டு கலைந்தது....

ஆனால் இரு குடும்பத்து நபர்களுக்கும் தனித்தனியாக ஊர் பெரியவர்கள் மூலம் விஷயம் தெரிவிக்கப்பட...
கார்த்திக் வீட்டிற்கு தங்கள் மகனை அடித்து விட்டானே என்று ஹர்ஷா மீது கோபம்... அதேபோல் ஹர்ஷா வீட்டினருக்கு கார்த்திக்கின் மீது கோபம்.... இரு குடும்பத்து நபர்களும் முறைத்துக்கொண்டு திரிந்தனர்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஹர்ஷா கார்த்திக் இருவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருந்தனர். அது என்னவென்றால் இந்த பிரச்சனை எதிலும் சுவாதியை நடுவில் இழுத்து விடவில்லை.....

மறுநாள் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த அழகேசன் வந்திருக்க.... அவனிடமும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. பதறியடித்து நண்பனின் வீட்டிற்கு சென்று அவனை பார்த்தான் அழகேசன்.

அங்கு ஹர்ஷாவின் நெற்றியில் இருந்த கட்டும் சிவந்திருந்த கன்னத்தையும் பார்த்த அதிர்ந்துபோன அழகேசன் நேரே சென்று நின்றது கார்த்திக்கிடம் தான்....

தனிமை விரும்பியான கார்த்திக் பெரும்பாலும் இருப்பது ஏரிக்கரையில் தான்....

அங்கு அமர்ந்து இலக்கில்லாமல் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவன் முன்னால் வந்து நின்ற அழகேசன்...

"எதுக்கு தேவை இல்லாம என்னோட ஃப்ரண்ட நீ அடிச்ச ? உனக்கு என்ன பிரச்சனைன்னு முதல்ல தெரியுமா ? ஹர்ஷா எனக்காக தான் சுவாதி கிட்ட பேச போனான் " என்றான் எடுத்த எடுப்பிலேயே.....

அழகேசனை பார்த்ததும் ஏதோ சொல்ல வாயை எடுத்த கார்த்திக் ....அவனின் வாக்கியத்தில் உச்சக்கட்ட கோபத்தை அடைந்து மூர்க்கமாய் மாறினான்.

அழகேசனின் சட்டை காலரை பிடித்து அருகில் இழுத்த கார்த்திக்.... "சொந்தக்காரன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா கண்டவனையும் தூதுவிட்டு சின்ன குழந்தை மனச களைக்கிறியா? வெட்கமா இல்ல உனக்கு.... அதான் உன் ஆருயிர் நண்பன் வீட்டிலேயே ஒரு தங்கச்சி இருக்காளே அவ மனச கலைக்க வேண்டியதுதானே ...ஓஓஓ அவ நொண்டியா இருக்கிறதால விட்டு வச்சிருக்கியா?" என்று வார்த்தையை விட.....

ஒரு நிமிடம் துடித்து தான் போனான் அழகேசன்.

என்ன மாதிரியான கேவலமான வார்த்தை இது.... அது தான் தங்கையாக நினைக்கும் ஒரு பெண்ணுடன் சேர்த்து.....

கார்த்திகை உச்சக்கட்ட வெறுப்புடன் பார்த்த அழகேசன் .... அவனது கையை தட்டிவிட்டான். மீண்டும் கோபத்துடன் அவனை அடிக்க வந்த கார்த்திக்கின் கன்னத்தில் தன் பலம் கொண்டு மட்டும் வேகமாக அறைந்தவன்.... தன் சட்டைப் பையில் இருந்த சுவாதி எழுதிய கடிதத்தை எடுத்து எறிந்துவிட்டு பேசாமல் திரும்பி நடந்தான். இதற்கு மேல் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச அவன் தயாராக இல்லை....

அன்று நடந்ததை இன்று சொல்லும் பொழுது கூட கண்கள் கலங்கி சிவந்தது அழகேசனுக்கு......

ஹர்ஷா சுகன்யா ஹர்ஷினி மூவருக்குமே அவனை பார்க்கவே பரிதாபமாகத்தான் இருந்தது.

ஹர்ஷா இதற்கு முன் எவ்வளவோ தடவை அவனிடம் அதை மறக்க சொல்லியும் இன்றுவரை அவனால் கார்த்திக்கின் வார்த்தையில் இருந்து வெளிவர முடியவில்லை.

சுகன்யாவிற்கும் இதில் பாதிக்கு பாதி தான் தெரியும். அதாவது அழகேசன் அந்த கடிதத்தை கார்த்திக்கின் முகத்தில் எறிந்து விட்டு சென்றதும் அதை பிரித்துப் படித்த கார்த்திக் தங்கை சுவாதியை வீட்டிற்கு சென்று அடித்தே விட்டான். அதன் பின் தான் அவளின் பெற்றோருக்கும் அவளுக்குமே விஷயம் தெரியும் ஆனால் இன்று அழகேசன் சொல்லும்பொழுது தன் அண்ணனின் வார்த்தைகள் எவ்வளவு கேவலமானது என்பதை நெஞ்சம் உணர்ந்து மிகவும் வருந்தினாள்.
எல்லாரும் அவரவர் வருத்தத்தில் இருக்க.....


அப்பொழுதுதான் ஹர்ஷினி ஒரு அதிமுக்கியமான கேள்வியை கேட்டாள்......

"சீரியஸா பேசுற அழகு அண்ணாவ்வ்வ் நான் ஒன்னு கேட்பேன் கூச்சப்படாம பதில் சொல்லணும் உங்களுக்கும் சுவாதி மேல லவ்ஸ் இருக்கா?" என்று கேட்க....

ஹர்ஷா சுகன்யா இருவரும் ஒன்று போல்.... "ஹேய் நீ என்ன பேசுற ?" என்று கத்த.... அழகேசன் பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக இருந்தான்.

ஹர்ஷினி மட்டும் அவர்களை கண்டுகொள்ளாமல் ...."சொல்லுங்கண்ணே சொல்லுங்க...." என்று அண்ணாச்சி போல் ராகம் இழுக்க. ...
எங்கோ பார்த்துக் கொண்டு.....
"லவ் எல்லாம் இல்ல ஆனாலும் அவளை பிடிச்சிருக்கு.... அவளைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியும்னு தோணல என்றான் அழகேசன் ....

இப்பொழுது அதிர்வது ஹர்ஷா சுகன்யா இருவரின் முறை ஆயிற்று....

இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டு...." ஹர்ஷி கெஸ் மிஸ் ஆகாதுடா ஹர்ஷிடா கெத்துடா..."
என்று பீற்றிக் கொள்ள

"நீ தயவுசெஞ்சு வாய மூடுடா" என்று அவளுக்கு கவுண்டர் கொடுத்த அழகேசன்.... இவன எப்படி சமாளிப்பது என்பதுபோல் ஹர்ஷாவை பார்த்தான்.

"என்கிட்டயே மறைச்சிட்ட பாத்தியா....." என்று ஹர்ஷா வருத்தப்பட....

"நீ ஊர விட்டு போன அப்புறம் மாப்புள...." என்று இழுத்தான் அழகேசன்....

"அட விடாதீங்க ஹர்ஷா சார்..... சொல்லலைன்னா இரண்டு அடிய போட்டு கேளுங்க ....தன்னால சொல்வான் பயபுள்ள...." என்று ஹர்ஷினி உசுப்பிவிட....


"நீ எல்லாம் ஒரு தங்கச்சியா ...."என்பது போல் முறைத்து பார்த்தான் அழகேசன்.

"அவளை எதுக்குடா பாவமா பாக்குற ....உண்மைய சொல்லு எப்ப இருந்து இது நடக்குது.... "என்று ஹர்ஷா கேட்க சுகன்யாவோ அழகேசன் முகத்தையே....
"இது பொய்தானே"என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு இப்பொழுதே தன் அண்ணன் கார்த்திக் அந்நியன் போல் உக்கிரமாக தன்னை பார்த்து முறைப்பது போல் மனக்கண்ணில் தோன்றி பயமுறுத்தியது.

தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து மெதுவாக எழுந்து நின்ற அழகேசன் பின்னால் திரும்பி போஸ் கொடுத்தவாறு சொல்ல ஆரம்பித்தான்...

"அந்தப் பிரச்சினைக்கு அப்புறம் அவங்க வீட்டு பக்கமே நான் தல வச்சு கூட படுக்கல ....
சுவாதி அப்பா மட்டும் என்ன தனியா பார்த்து வேற யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் தம்பி பொம்பள புள்ள விஷயம்னு.... சொல்லி மன்னிப்பு கேட்டார்...

அவ்வளவுதான் பிரச்சனைன்னு அமைதியாத்தான் இருந்தேன்... ஆனா அவ சும்மா இருக்கல... உனக்குதான் தெரியுமே ஹர்ஷா என்னோட அம்மா.... அப்பா இறந்ததுக்கு அப்புறம் கோவில் குளம்ன்னு சுத்துவாங்க.... அவங்க மூலமா அடிக்கடி சுவாதி நான் இல்லாதப்போ வீட்டுக்கு வந்து இருக்கா.... என்ன பத்தி அக்குவேறு ஆணிவேராக எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டா... "என்றவன்.....
திரும்பி ஹர்ஷா முகத்தை பாவமாக பார்த்து.... "அவ பிளான் பண்ணி என் அம்மாவையே கரெக்ட் பண்ணி டாடா மாப்புள ... அம்மாவுக்கு அவதான் மருமகளா வரணும்னு ஆசையே வந்துட்டு அம்மாவுக்காகதான் நானும்.........."என்று இழுத்தான் அழகேசன்.... விட்டால் அழுது விடுவது போல் பாவனை வேறு....

அவ்வளவு நேரம் வாய் பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷினி.....

"ஐயோடா மொத்த பழியையும் அம்மா மேல போட்டா எப்படி ......சுவாதி அண்ணி உங்க அம்மாவுக்கு போட்ட தூண்டில் ல தாங்களும் அல்லவா மாட்டிக் கொண்டீர்கள் அண்ணாத்த?" என்று கூறி கண்ணடிக்க... ஹர்ஷா சிரித்துவிட்டான்.

அவனது சிரிப்பை ஒரு நொடி ஆர்வமாக பார்த்த ஹர்ஷினி தலையை உலுக்கிக் கொண்டாள்.

அவ்வளவு நேரம் அழகேசன் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த சுகன்யா ...."இதெல்லாம் எப்ப நடந்துச்சு ?மச்சான்" என்று பாவமாக கேட்க.... "நீ மெட்ராசுக்கு படிக்க போயிட்டியே அப்ப நடந்துச்சு" என்றான் அழகேசன்....

அப்பொழுதுதான் ஹர்ஷாவிற்கு ட்ரெயினில் ஹர்ஷினி சுகன்யா அவளது மாமன் மகன் கதிர் என்பவனை விரும்புவதாக சொன்னது நினைவு வர.... அதை அவளிடம் கேட்க வாயெடுத்தவன் ....இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இதைக் கேட்பது சரியாக வராது என்று தனக்குத் தானே அமைதியாகி விட்டான் ...

"சரி இப்ப முடிவா உனக்கு சுவாதிய பிடிச்சிருக்கு ....அப்படி தானே?" என்று ஹர்ஷா கேட்க....

"பிடிச்சிருக்கு ஆனா இதெல்லாம் சரிவராது சரி வராது மாப்ள விட்ருவோம் .... எனக்கு அவளைப் பிடிச்சிருக்குன்னு இதுவர அவகிட்ட சொன்னது கிடையாது..... எனக்கு கார்த்திக் பேசுனத இப்ப வர மறக்க முடியல ....அவனும் என்ன மொறச்சு கிட்டுதான் திரியுறான் ....கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்க வழியே இல்ல மாப்ள ....அதான் என்ன சுத்தி சுத்தி வந்தாலும் அவ மனசுல ஆசைய வழக்க கூடாதுனு அமைதியா இருக்கேன் .... அவ வேற யாரையாவது கல்யாணம் பண்ணி நல்லா இருக்கணும் டா.... இப்போ ஆசைகாட்டி பிறகு நடக்காம போயிட்டா ரொம்ப கஷ்டம்.... தாங்க முடியாதுல்ல "என்றான் அழகேசன் வலி நிறைந்த குரலில்....

"டேய் மாப்ள ஏன்டா இப்படி பேசற அதான் நாங்களெல்லாம் இருக்கோம்ல கவலப்படாத எல்லாம் சரியாகிடும்...." என்று ஹர்ஷா அவனை ஆறுதல் படுத்த சுகன்யா ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.....

அப்பொழுது ஹர்ஷினி திடீரென எழுந்து.... "ஏய் அது என்னோடது நில்லு நில்லு நில்லு ...."என்று ஓட ஆரம்பிக்க .....அவளை பார்த்த மூவரும் என்ன ஏது என்று யோசிக்காமல், "ஏய் எங்க போற?"என்றவாறு அவளை பின்தொடர்ந்தனர்....

குரங்காட்டி ஒருவர் தனது இரண்டு குரங்குகளையும் அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்க ... அவரை வழிமறித்து நிறுத்திய ஹர்ஷினி மூச்சு வாங்க ....."ஹேய் மேன் திஸ் இஸ் மை ட்ரஸ் ....இது எப்படி உன்கிட்ட?" என்று அவனது குரங்குகள் போட்டிருந்த ஆடைகளை சுட்டிக்காட்ட ...

"என்ன தாயே சொல்லுற இது ஒரு மகாராசா தந்துட்டு போனது..... மேல் உடுப்ப மட்டும் என் சாமிகளுக்கு போட்டு அழகு பார்த்துட்டு போனாரே கருணை வள்ளல்.... "
என்று பெருமையாக சொல்ல....

ஹர்ஷினிக்கு இது யார் வேலை என்று புரிந்து போனது.... "டேய் தண்டபாணி உன்ன...." என்று பல்லை கடித்தாள்

அதற்குள் அவளின் பின்னால் வந்த மூவரும் ..."என்னாச்சு?" என்று கேட்க .....அவள் வந்ததிலிருந்து நடந்ததை கூறி "நான் கூட அவன் சும்மா விளையாட்டுக்கு பண்றான்னு தான்யா நெனச்சேன்..... டிரஸ் எல்லாத்தையும் மறைச்சு வச்சி ட்ரிக் பண்றான் திரும்ப தந்திடுவான்னு நெனச்சு அதை சீரியஸா எடுத்துக்கல..... ஆனா அந்த தண்டபாணிக்கு ரொம்பத்தான் குசும்பு .... என்னோட டிரெஸ்ஸை வேற யாருக்காவது கொடுத்தா கூட பரவாயில்லை.... போயும் போயும் ஒரு மங்கிக்கு போய் மாட்டி விட்டு இருக்கே அந்த சொங்கி.... இப்ப என் டிரஸ் எல்லாம் போச்சே" என்று உதட்டைப் பிதுக்கி பாவமாக சொல்ல....

ஹர்ஷா அழகேசன் இருவரும் ஹர்ஷினி சொன்ன விதத்தில் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றிருக்க....

சுகன்யா அவளைக் கவனிக்காமல் தூரத்தில் வந்து கொண்டிருந்த எதையோ கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்....

ஹர்ஷினியும் அவளை தொடர்ந்து பார்க்க .....கார்த்திக் மேல் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் மேலும் கொலைவெறி ஆகி போனாள். தூரத்தில் ஒரு எருமை மாடு ஒன்று அவளது விலை உயர்ந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து ஸ்டைலாக நடந்து வந்துகொண்டிருந்தது .....

"டேய் ரொம்ப ஓவரா தாண்டா போயிருக்க மல மாடு தண்டபாணி உன் மண்டையிலேயே கல்லத் தூக்கி போடல என் பேரு ஹர்ஷி இல்லடா...." என்று வெளிப்படையாக வீர சபதம் எடுக்க.....

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை மேலும் அடக்க முடியாமல் வெடித்து சிரித்தனர் நண்பர்கள் இருவரும்....
எலி மாதிரி இருந்து கொண்டு இவள் செய்யும் அலம்பு அவர்களை மேலும் சிரிக்கத்தான் வைத்தது.....

சுகன்யா கூட சேர்ந்து சிரிக்க ..... "எம்மா கனி அவ கல்ல தூக்கி போடப் போறது உங்க அண்ண மண்டையில...." என்று அழகேசன் சொல்ல..... சுகன்யா அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவான குரலில் "அவ அப்படியெல்லாம் பண்ண மாட்டா மச்சான் ஒன்லி பில்டப்பு தான்....." என்று சொல்ல அழகேசன் இன்னும் சிரித்தான்.

"நல்லா சிரிங்க போனது என்னோட டிரஸ் தானே..... இன்னும் எந்தெந்த அனிமல்ஸ் எல்லாம் என்னோட டிரெஸ்ஸை போட்டுட்டு ஸ்டைல் பண்ணுதோ?" என்று ஹர்ஷினி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல .....
எல்லாருக்கும் மீண்டும் சிரிப்பு அதிகமாகியது....

சற்று முன் இருந்த கனமான சோகமான சூழ்நிலை மாறி சிலபல நிமிடங்களிலேயே அவர்களின் மனதில் மகிழ்ச்சி நிலவியது....

ஹர்ஷா ஆச்சரியமாக ஹர்ஷினியை பார்த்தான்....

இவளிடம் ஏதோ மந்திரம் இருக்கிறது என்று அவன் மனம் கூறியது.....


அங்கு அதேநேரம் ஹர்ஷாவின் மாமன் மகள் அஞ்சலி தன் தாய் தந்தையரிடம் எனக்கு திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்து கொண்டிருந்தாள்.


தொடரும்.....
 
#4
இந்த சுவாதிப் பொண்ணு செஞ்ச வேலையினாலே எல்லோருக்கும் எத்தனை மனக்கஷ்டம்?
ஹா ஹா ஹா
இந்த தண்டபாணி ச்சே கார்த்திக் எப்போ ஹர்ஷினியின் டிரஸ்களை அனிமல்ஸுக்கு தாரை வார்த்தான்?
எனக்கு தெரியவேயில்லையே
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes