புள்ளினங்காதல் - 9

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
ஒரு வழியாய் அடுத்த கட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாகி விட்டது. ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.முதலில் கண்ணுக்கு ஏதும் புலப்பட்டால் தானே, என்ன செய்வது என்று அறிவுக்கு புலப்படும்.

அருகில் இருப்பவர் முகம் கூட தெரியாத அளவிற்கு இருட்டு. சுற்றி எங்கு என்ன உள்ளது என்று கூட தெரியவில்லை இவர்களுக்கு. மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. விட்டால் திரும்ப ஓடி விடலாம் என்ற மனநிலை தான் இருவருக்கும். ஆனால் என்ன செய்வது? அதற்கு தான் வழியே இல்லையே. இவர்கள் இந்த அறைக்குள் எவ்வழியாக வந்தனரோ, அவ்வழி தான் எப்பொழுதும் போல, இவர்கள் உள்ளே வந்ததும் அடைந்துவிட்டதே.

ஆரூரன் ஒரு அடி முன்னே எடுத்துவைக்க முற்பட்டாலும், அவன் கை பிடித்து தடுத்தாள் அவிரா. "என்ன இருக்குன்னே தெரியாம எப்படி போகமுடியும் ஆரூரன்? எனக்கு பயமா இருக்கு" என்று அவள் சொன்னபோது, அவள் இரு கைகளும் அவன் ஒற்றை கையை இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்தது.

அவள் வார்த்தைகளில் கெஞ்சல் இல்லை தான். ஆனால் அவள் கரங்கள், அவன் கரங்களிடம் கெஞ்சிக்கொண்டு தான் இருந்தது. "எப்பொழுதும் நான் ஆறுதலாய் பற்றிக்கொள்ள இந்த கரம் வேண்டுமே, இந்த கரத்துக்குரியவன் வேண்டுமே" என்று துடித்தது பெண் மனம். "அடுத்த அடி எடுத்துவைத்தால் ஆபத்து இருக்குமோ?" என்பது அவள் யூகம் தான். இருந்தாலும் அந்த யூகம் உண்மையா, பொய்யா என்று அவனை பணயம் வைத்து அறிய விரும்பவில்லை அவள்.

"என்ன தான் இருக்கிறது? பார்த்துவிடுவோம்" என்று ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலும், அவள் இவன் கரங்களை பற்றியதும், அனிச்சை செயலாக முன் வைத்த காலை பின் வைத்தான் அவன்.

"மோகம் கொண்ட பெண்ணின் வார்த்தையை மீறமாட்டாயோ?" என்று அவனை பார்த்து, அவன் சிந்தை சிரித்த நேரம், "அவள் மேல் முன்னர் கொண்டது மோகம் தான் என்றாலும், இப்பொழுது இருப்பது காதல்" என்று அவன் மனம் வாதிட விழைந்தது. இருந்தும், இந்நேரம் இது வீண் விவாதம் என்று கைவிட்டான் அதை.

முதன்முதலில் அவர்கள் இங்கு நுழைந்ததும், இதே போல இருட்டு தான். ஆனால், அப்பொழுது பதட்டத்தில் புத்திக்கு எட்டாத சிந்தனை இப்பொழுது எட்டியது.

"ஆரூரன். செல்போன் எடுங்க. டார்ச் ஆன் செய்ய முடியுதா பாருங்க" என்று இவனை பணித்தவள், அவளும் தன் கைப்பைக்குள் தேடினாள்.

போன் எடுத்தும் பயனில்லை. இந்த இடத்துக்குள் நுழைய, இவர்கள் புரண்டோடும் நதியில் உள்நீச்சல் போட்டு வந்தபோதே, மரணித்து போனது இவர்கள் அலைபேசி.

"ஐயோ...போன் தண்ணியில் நெனைஞ்சதுல வேலை செய்யல" என்று இவள் கூற, அவன் அலைபேசிக்கும் அதே நிலை தான்.

ஆரூரன் தன் கைகடிகாரத்தில் மணி பார்க்க, சின்ன முள் அது ஆறில் நிற்க, பெரிய முள்ளோ அதற்கு நேர்மாறாக பன்னிரெண்டில் இருந்தது. ஏதோ, அவன் லுமினஸ்(luminous) வாட்ச் கட்டியிருந்ததால், மணியாவது தெரிந்துகொள்ள முடிந்தது.

அவர்கள் இருந்த இடத்திலேயே அப்படியே அமர்ந்தனர் இருவரும். "இப்படியே உக்காந்துட்டு இருந்தா என்ன ஆகுறது அவிரா? எவ்ளோ நேரம் இங்கேயே உக்காந்துட்டு இருக்கறது?" என்று அவன் கேட்க, "வேற என்ன பண்ண சொல்ற? என்ன இருக்குன்னே தெரியாம என்ன செய்யுறது?" என்று இவர்களுக்குள் விவாதம் அரங்கேற, சட்டென்று ஒரு சிறு ஒளி படர்ந்தது. ஒளி வந்த இடத்தை இருவரும் சட்டென்று திரும்பி பார்க்க, ஒரு வைரம் அவர்கள் கண்ணில் பட்டது.

அந்த வைரத்தில் இருந்து தான் ஒளிவீசிக்கொண்டிருந்தது.அந்த அறையின் மேல்தளத்தில் இருந்த சிறு துளை. அந்த துளைக்கு நேரே, உயரமான ஒரு கம்பின் மீது இருந்தது அந்த வைரம்.

தளத்தில் இருக்கும் அந்த துளைக்கு நேரே, சந்திரன் வந்த நேரம், அந்த துளை வழியே நிலவொளி உள்ளே வந்து, நேராக அந்த வைரத்தில் பட்டு தெறித்தது.

அந்த வைரத்தின் அழகிலும், சற்று ஒளி படர்ந்த தைரியத்திலும் இவர்கள் சில அடிகள் எடுத்து வைத்து அந்த வைரத்திடம் சென்றனர்.

ஒரு வித ஆர்வத்தில், ஆரூரன் அந்த வைரத்தை கையில் எடுக்க, மொத்த ஒளியும் சட்டென மறைந்து போனது. அப்போது தான் இவர்களுக்கு புரிந்தது. அந்த வைரம் அதன் இடத்தில் இருந்து, நிலவின் கதிர் அதன் மீது படும் போது தான், அந்த அறையில் ஒளி படர்கிறது என்று.

எப்படியோ தடவி பார்த்து இருந்த இடத்திலேயே அந்த வைரத்தை வைத்துவிடவும், மீண்டும் ஒளி படர்ந்தது. ஆனால், மொத்தமாகவே ஐந்து, ஆறு நிமிடங்கள் தான் அந்த அறை ஒளிர்ந்தது. அதாவது, நிலவு அந்த துளைக்கு நேராக இருந்த நேரம் அவ்வளவே தான்.

அந்த ஐந்து நிமிடமும், இவர்கள் இதை புரிந்துகொள்ளவே சரியாக இருந்ததால், அந்த அறையில் இருந்த வேறு எதையும் கவனிக்கவில்லை.

ஒளி மறைந்ததும், "ஐயோ" என்று ஆரூரன் அலற, "பதறாத. இப்போ சந்திரன் இந்த துளைக்கு நேரா வந்தப்போ, எப்படி இந்த அறை ஒளிர்ந்துச்சோ. அதே மாதிரி, நாளைக்கு காலையில சூரியன் வரப்போவும் ஒளிரும். இதைவிட அதிகமாவே. அந்த நேரம், நம்ப செயல்படுறதில தான் இருக்கு ஆரூரன், நம்ப இங்க இருந்து தப்பிக்கறதும், இங்கயே மாட்டிட்டு இருக்கறதும்" என்று எப்பொழுதும் தெளிவாய் இருக்கும் அவள் அறிவு, இப்பொழுதும் தெளிவாய் வேலை செய்ததால், அவ அவனிடம் கூறலானாள்.

ஆனால், மீண்டும் ஒரு முறை கையில் வைரத்துடன் அவனை பார்த்ததும், இவள் மனமோ இவள் பேச்சை கேட்காமல் ஓடியது. முதல் முறையாய் இவன் அவனை பார்த்த அந்த நாளிற்கு.


எப்பொழுதும் இனிமையாய் இருக்கும் அதே நினைவுகள், இன்று இம்சித்தன. இத்தனை ஆண்டுகள் அவன் தொலைவில் இருந்தும், நித்தமும் அவன் நினைவில் சுகம் காண்பவள்,இன்றோ அவன் அருகில் இருந்தும் சிந்தையில் சுத்தமாய் நிம்மதி இல்லை.

"இங்கிருந்து வெளியே செல்வோமா?" என்ற கேள்வி அவள் மனதுடன் ஒட்டிக்கொண்டது. இவ்வளவு நேரம் இடர்களை கடந்து வந்திருந்தாலும், இதை பற்றி யோசிக்கவெல்லாம் அவர்களுக்கு அவகாசம் இல்லை. அனால், இப்பொழுதோ, சற்று நேரம் அமரவும், இல்லாத யோசனை எல்லாம் வந்து விட்டது.

ஒரு வேலை நாளைக்கு சூரியோதயம் வந்து, ஒளி இருக்கும் கொஞ்ச நேரத்தில், எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆவது? நீர் ஆகாரம் எதுவும் இல்லாமல், இங்கேயே செத்துவிடுவோமோ? என்ற எண்ணம் வேறு.

அதை விட, ஆரூரன் உடன் இருப்பது தான் அவளுக்கு இன்னும் துன்பமாய் போனது. இத்தனை வருடம் கழித்து அவனை ஓடிப்போய் அவள் பார்த்தது எல்லாம், இப்படி சாகத்தானா? ஒன்றாக வாழ முடியவில்லை என்றாலும், ஒன்றாக சாகலாம் என்று அமைதி கொள்வதா? அதுவும் முடியாமல் போனது அவளுக்கு.

அவள் காதலைத் தான் இது வரை, இவள் சொல்லவே இல்லையே. இப்படியே சொல்லா காதலாகவே தன் காதலும் இந்த குகைக்குள்ளேயே அகப்பட்டு இறந்துவிடுமோ?

அவனை முதல் முறை பார்த்தபோது, எப்படி கையில் ஒரு வைரத்துடன் பார்த்தாளோ, அப்படியே இன்றும் ஒரு வைரத்தை கையில் வைத்து காட்சியளிக்க, முதல் முறை பார்த்த நாளில் இருந்து, இன்று வரை நிகழ்த்த அனைத்து நிகழுவுகளும் நிழலாடியது அவள் கண்முன்னே.

அனைத்தையும் அவனிடம் கொட்டிவிட துடித்தது அவள் மனம். அவள் மரணித்தாலும், அவள் காதல் மௌனமாய் மரணிப்பதை விரும்பவில்லை அவள்.அனால் இவனிடம் கூறி, அது அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டால், இப்பொழுது இருக்கும் நட்பும் கெட்டுவிடுமே, என்ற அச்சம் வேறு ஒரு பக்கம்.

அவனுக்கும் அதே அச்சம் தான். அவனுக்கு அது காதல் தானா என்பதிலே சிறிது சந்தேகம் தான். இருந்தாலும் தன் எண்ணவோட்டங்களை, அவை பாயும் திசையை அவளிடம் மொழியை வேண்டும் என்று ஆசை தான். அவளிடம் கேட்டு தெளிவு பெற ஆசை தான். ஆனால், அவளுக்கு இருக்கும் அதே தயக்கம்.


தயக்கத்தை தகர்த்தெறிந்து, முதலில் மனதில் இருப்பதை கூற எத்தனித்தது அவிரா தான்.

"ஆரூரன். உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்" என்று அவிரா தொடங்க, இவள் என்ன கூறப்போகிறாள், என்ற கணிப்பு கொஞ்சமும் இல்லாமல், "சொல்லு அவிரா" என்றான் அவன்.

"எனக்கு இதை எங்க இருந்து ஆரமிக்கறதுன்னு தெரியல. இப்படி முன்ன பின்ன யார்கிட்டயும் பேசுனது இல்ல. எதுவா இருந்தாலும் நேரா பேசி தான் பழக்கம். ஆனா, முதல் முறையா நேரா பேச ததயங்குறேன். முதல் முறையா என் பெண்மை தடுக்குது. இதை எப்படி சொன்னா உனக்கு புரியும்னு எனக்கு தெரியல. ஆனா, இன்னைக்கு மொத்தத்தையும் கொட்டிடறேன். முதல் முறையா நான் உன்னை பார்த்தப்போ. நீ ஏழாம் வகுப்பு படிக்கற பையன். எங்க அப்பாவுக்கு சென்னைக்கு அப்போ தான் ட்ரான்ஸ்பெர் ஆச்சு. பழைய ஸ்கூல் விட்டு இங்க வரவே இஷ்டம் இல்லை. அப்பா புது நண்பர்கள் நெறையா கெடைப்பாங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க. அன்னைக்கு தான் அந்த பள்ளிக்கூடத்துக்கு வந்த முதல் நாள். நாங்க நேரா பிரின்சிபால் ரூம்க்கு போனதும், பிரின்சிபால் இங்க இல்லை,கிரௌண்ட்ல இருக்காங்கன்னு சொன்னாங்க. நானும் அப்பா கூட கிரௌண்ட் நோக்கி போனேன். அவ்வளவு பெரிய கிரௌண்ட். அந்த கிரௌண்ட்க்கு நடுல, ஒரு பெரிய மரம். அந்த மரத்துக்கு கீழ நெறைய பேர் கூட்டமா நின்னுட்டு மேல பார்த்துட்டு இருந்தாங்க. பிரின்சிபால் அங்க தான் இருக்கனும்ன்னு அப்பா கூட்டிட்டு போக, என்னோட கவனமோ அவங்க எல்லாரும் எங்க பாக்குறாங்களோ அங்க போச்சு.

அங்க நான் என்ன பார்த்தேன் தெரியுமா. அந்த மரத்தோட உச்சியில, ஒரு பறவை கூடு, அதுல ஒரு தாய் பறவையோட,ரெண்டு குஞ்சிகளும் இருந்துச்சு. ஒரு பையன். மீசை கூட முளைக்காத வயசு. ஆனா பெரிய மனுஷன் மாதிரி முழுக்கால் சட்டை போட்டிருந்தான். அதுக்கு அவனை குத்தம் சொல்லமுடியாது. ஏழாம் வகுப்பிலிருந்து, அதான அந்த பள்ளியின் சீருடை. அவனோட கை, ஒரு பறவை குஞ்சோட தலையை தடவி குடுத்திட்டு இருக்க, இன்னொரு கை மரத்தின் கிளையை இறுக்கமா புடிச்சிட்டு இருந்துச்சு.

மரக்கிளையை புடிச்சிட்டு இருந்த கையோட விரல் இடுக்குல ஏதோ பளபளன்னு மின்னுச்சு. அந்த பையன் மரத்திலிருந்து கீழ இறங்கி வரவும், நாங்க அந்த இடத்துக்கு வந்து சேரவும், சரியா இருந்துச்சு. அப்போ தான் பார்த்தேன், அந்த பையன் கையில் இருந்தது என்னனு தெரிஞ்சுது. ஒரு செயின். அந்த செயின் கூட ஒரு வைர டாலர். அளவில் பெரிய வைரம். அவ்வளோ பளபளப்பு. பாக்குற யாரா இருந்தாலும், ஆசை வரும்.

ஆனா, அந்த பையன் இருக்கானே. அவன் அதை ஒரு நிமிஷம் நின்னு கூட பார்க்காமல், அதை பிரின்சிபால் கையில் குடுத்துட்டு போய்கிட்டே இருந்தான்.

சுத்தி நின்றிருந்த எல்லாரோட கவனமும், அந்த வைரத்தின் மீது இருந்தது. ஆனா, என் கவனம், அந்த வைரத்தை குடுத்துட்டு திரும்பி கூட பார்க்காத அந்த பையன் மேல போய்டுச்சு. அந்த பையன் திரும்பி பார்க்க மாட்டானா? அவன் பார்வையில் நம்ப விழுந்துட மாட்டோமான்னு இருந்துச்சு. முதல் முறையா, ஒரு பையன் திரும்பி பாக்க ஏங்குனது அன்னைக்கு தான். அவன் திரும்பி பார்த்தான். ஆனா, என்னை இல்ல. அந்த பறவைங்க பத்திரமா இருக்கான்னு ஒரு முறை திரும்பி பார்த்தான்.

அங்க என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க ஆர்வம். அங்க இருக்கவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன். பிரின்சிபால் மேடமோட செயின் தொலஞ்சி போனதும், அது எப்டியோ அந்த குருவி கூட்டுக்குள்ள கிடைச்சதும், எல்லாரும் அதை எடுக்க முயற்சி பண்ண, அந்த தாய் பறவை கிட்ட விடாமல் கொத்துனதும், அந்த செயினை எடுக்க, அந்த பறவைகளை கொல்ல துணிஞ்சதும், அதை அந்த பையன் தடுத்து அந்த செயின் எடுக்க போனதும், தினமும் அந்த பறவைகளுக்கு தானியம் போடுறதால, அவனை பார்த்து பயப்படாம அந்த பறவைகள் அவனை நெருங்க விட்டதும், எல்லாம் தெரிஞ்சிகிட்டேன்” என்று அவிரா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த கதையை, நேற்று நடந்ததுபோல் கோர்வையாய் கூறிக்கொண்டிருக்க, "அவிரா..இந்த கதையெல்லாம்!..." என்று ஏதோ தொடங்க, அவள் கைகள் கொண்டு, அவன் வாய் அடைத்தாள்.

"இங்க பாரு. ஏதாவது பேசுன. பேக்ல ஒரு பேப்பர் கட்டிங் கத்தி இருக்கு. எடுத்து சொருகிடுவேன்" என்று அவள் மிரட்ட, "ஆத்தாடி. கொலைகாரியா இருப்பா போலயே" என்று விழிபிதுக்கினான் அவன்.

"இப்போ நான் எங்க விட்டேன். இதுக்கு தான் குறுக்க பேச கூடாது. ஆன். நெனப்பு வந்துடுச்சு. அந்த பையன் என்ன பாக்காம கூட போய்ட்டான்.

அப்புறம் கிளாஸ் க்கு வந்தப்போ தான் தெரிஞ்சுது. அந்த பையனும் என் கிளாஸ் தான்னு. இருந்து மட்டும் என்ன பிரயோஜனம். அந்த சட்டி, அது பாட்டுக்கு ஒரு ஓரமா உக்காந்துட்டு இருக்கும். யார் கிட்டயும் பேச கூட பேசாது. அதெல்லாம் மனுஷஜென்மம் தானா, இல்லை களிமண்ணுல சிலை செஞ்சி வச்சிட்டாங்களான்னு தோணும்.

அப்டியே அவன் மூஞ்சி முன்னாடி போயி, 'டேய். ஒருத்தி இவளோ நாளா பாத்துகிட்டே இருக்கேனே. திரும்பியாவது பாரேன்டா'ன்னு சொல்ல தோணும். ஆனா, அதுவும் முடியாது. மத்த எல்லார் கிட்டயும் சகஜமா பேசுற என்னால, அவன்கிட்ட பேசக்கூட முடியாது. ஊமையாகி போய்டுவேன். அதையும் மீறி இன்னைக்கு ஒரு ஹாய்'யாச்சும் சொல்லிடணும்னு வருவன். ஆனா முடியாது. அந்த சாம்பார் சாதம் கொஞ்சமாவது கோ-ஒப்பரேட் செஞ்சா தான? ஒரு பொண்ணு பக்கத்துல வந்து நின்னா கூட, திரும்பி பாக்காத சாம்பார் சாதம். அதை வச்சிக்கிட்டு என்ன செய்யுறது சொல்லு.

அவன் படிப்பு முடிச்சதுக்கு அப்புறம், அவனோட மேகசின்ல வந்த ஆர்டிகிள்ஸ், அவனோட வெப்சைட், அவனோட பேஸ்-புக் ஐடி, அவனை பத்தி என்னலாம் கிடைக்குதோ தேடி தேடி பார்த்தேன், படிச்சேன். ஆனா, என்னை நான் அவன்கிட்ட வெளிப்படுத்திக்கவே இல்ல.

அது ஏன்னு இப்போ வர தெரியல. அவன்கிட்ட பேச மட்டும் அவ்வளவு தயக்கம். ஒருவேளை, தன்னை அறியாமல் காதல் கொண்ட பேதை மனம் அப்படி தான் தயங்குமோ, என்னவோ!" என்று அவள் ஒரு நிமிடம் நிறுத்தி, அவன் முகம் நோக்க, அவன் முகமோ ஊரில் உள்ள மிரட்சி எல்லாம் குத்தகைக்கு எடுத்து குடிவைத்தது போல இருந்தது.

"கொஞ்சம் இரு. இன்னொரு உண்மையும் சொல்லிடறேன். மொத்தமா ரியாக்ட் பண்ணிக்கோ. ஒரு fake-id ரொம்ப தொல்லை பண்ணுதுன்னு புலம்புனல. அந்த fake-id நான் தான்.

நான் ஏன் அப்படி fakeid ல உன்கிட்ட பேசணும்ன்னு உனக்கு ஆச்சர்யமா இருக்கலாம். அதுக்கும் நானே காரணம் சொல்லிடறேன். என்கூட தங்கி இருக்காளே, என் ப்ரெண்ட் தேன்மொழி. அவகிட்ட உன்ன பத்தி சொல்லிக்கிட்டு இருக்கப்போ, அவ என்ன தெரியுமா சொன்னா, 'அந்த பையன் அப்போ அப்பாவியா இருந்தான் சரி. எந்த பொண்ணையும் திரும்பி பாக்கல, சரி. ஆனா, அவன் இப்போவும் அப்டியேவா இருப்பான்? பாத்து டி. இப்படி ஸ்கூல் டேஸ்ல, அமைதியா இருந்த பசங்க தான், பெருசானதும் பிலே-பாய் ஆகிடுவாங்கலாம். நெறையா மீம்ஸ்ல கூட பார்த்துருக்கேன்' அப்டின்னு சொன்னாளா, அதனால எனக்கு லைட்டா பயம் வந்துடுச்சு.

நான் அப்டியே பதறிப்போய், 'அதுக்கு என்ன டி பண்றது? எப்படி கண்டுபுடிக்கறது?'ன்னு கேட்டேன், அதுக்கு அவ, பேசி பாருன்னு சொன்னா. 'அப்போ ப்ரெண்ட் ரெகுவெஸ்ட் குடுத்துடட்டா?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவ, மண்டை மேலயே நாலு போட்டு, 'ஒரு வேலை அவன் தப்பானவனா இருந்து, உங்கிட்ட நல்லவன் மாதிரி நடிச்சி, உன்ன நேர்ல வர வச்சி ஏமாத்திட்டான்னா ? என்ன பண்றது'ன்னு இன்னும் பயம்புடுத்துனா. 'அதுக்கு என்ன பண்றது'ன்னு கேட்டேன். 'அவனை பத்தி நம்ப தெரிஞ்சிக்கணும். ஆனா நம்பள பத்தி அவனுக்கு தெரிய கூடாது. அதனால நீ என்ன பண்ற. ஒரு fakeid உருவாக்கி, அவன் கிட்ட பேசி பாரு'ன்னு சொன்னா.

அப்டி பண்றது தப்பு தான். ஆனா சேர்க்கை சரி இல்ல. ஒரு ஆர்வ கோளாறுல பண்ணிட்டேன். ஆனா, பேசி பாத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது. அந்த சாம்பார் சாதம் இன்னும் சாம்பார் சாதமாவே தான் இருக்குன்னு.

அப்புறம், எப்படி டா பாக்குறதுன்னு யோசிச்சிட்டே இருந்தன். கெட்-டுகெதர் பேர் ல இவங்களே அதுக்கு வழி அமைத்து கொடுத்துட்டாங்க. அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியும்.

இந்த இடை பட்ட காலத்தில, பிரைட் ரைஸ், நூடுல்ஸ், பிரியாணி, பீசான்னு விதவிதமா எத்தனையோ கிடைக்க வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, இந்த சாம்பார் சாதம் என் மனசை கவர்ந்த மாதிரி வேற எதுவும் கவரவில்லை". இத்தனை நேரம் பேசுகையில், அவள் முகம் பல உணர்ச்சிகளை படமிட்டு காட்டினாலும், கடைசி வரிகளில் தான் வெக்கத்தை தத்தெடுத்து.

அவள் வெக்கத்தை முதல் முறையாய் காண்பவன் அவனுக்கும் அவள் வெக்கம் தொற்றிக்கொண்டது.

அவள் காதல் தான் இவனுக்கும் தொற்றிக்கொண்டு, பற்றிக்கொண்டு எரிகிறது என்றால், இந்த வெட்கம் வேறு பாடாய் படுத்தியது.

எப்படியோ பெரும்பாடு பட்டு, வெக்கத்தை மறைத்துக்கொண்டு, "அப்போ. சாம்பார் சாதமே தான் வேணுமா?" என்று அவன் கேட்க, வெக்கத்தில் பூரித்திருக்கும் வஞ்சிக்கொடி அவள், தன் கைகளுக்குள் முகம் புதைத்துக்கொண்டாள்.

ஒரு வழியாய் வெக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, எப்பொழுதும் இருக்கும் அவிராவாக, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று பேச தொடங்கினாள்.

"இங்க பாரு. எனக்கு சாம்பார் சாதமே தான் வேணும். ஆனா, உனக்கு எப்படின்னு எனக்கு தெரியாது. அதனால, எனக்கு இப்போவே ஒரு பதில் சொல்லு. நீ வார்த்தையால சொல்லணும்ன்னு ஒன்னும் அவசியம் இல்லை" என்று கூறிவிட்டு, தன் மோதிரவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி அவன் அருகில் வைத்தாள்.

அவன் அந்த மோதிரத்தை எடுத்து இவள் கையில் அணிவிப்பானா? இல்லையா? என்று அவள் ஒரு வித தவிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் சாம்பார் சாதம், மீண்டும் ஒரு முறை நிரூபித்தான். தான் சாம்பார் சாதம் தான் என்று.

இவள் கையில் மோதிரத்தை அணிவித்து விடுவான் என்று இவள் எதிர்பார்க்க, அவனோ, அந்த மோதிரத்தை எடுத்து அவன் சுண்டுவிரலுக்கு அவனே அணிவித்துக்கொண்டான்.

"ஏய். என்ன பா. என் கைல தான் போட்டு விடணும்" என்று அவள் கூற, "நான் உன் மோதிரத்தை எடுத்து உன் கையில் போட்டு விட்டா? அதுக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டான் அவன்.

"அட பேக்கு மண்டையா" என மனதில் திட்டியவள், "அது எப்படி சொல்றது. எனக்கு நீ காலம் முழுக்க வேணும்ன்னு நான் கை நீட்டறேன். உனக்காக. நீ காலம் முழுக்க என்கூட இருப்பேன்னா, அதுக்கு சாட்சியா இப்போ இந்த மோதிரம் போட்டு விடணும்" என்று பதில் அளித்தாள் அவள்.

"உனக்கு நான் வேணுமா, வேணாமா...அதெல்லாம் எனக்கு அவசியம் இல்ல. எனக்கு நீ எப்போவும் என் கையோடவே வேணும். அதுக்காக தான் நானே உன்னோட மோதிரத்தை போட்டுகிட்டேன் என்றான் அவன்.

முதல் முறையாய் அவன் நிருபித்தான், சாம்பார் சாதத்திலும் உப்பு, காரம் சாரம் எல்லாம் இருக்கிறதென்று.

இவன் பதிலில், அவள் சற்று முன் வெக்கத்தை விரட்டி வைத்ததெல்லாம் பயனே இல்லாமல் போய்விட்டது. இந்த வெட்கத்துக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை போலும். விரட்டி விட்டவள் முகத்திலே, மீண்டும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துக்கொண்டது.


*****
வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம் நாள் இந்த காலேஜ் தொல்லை இல்லாம இருக்கலாம்ன்னு நினைத்தேன்.

ஆனால் எங்கள் காலேஜ் ரொம்ப பொறுப்பு பொரியலாக இருப்பதால், அன்லைனில் செமஸ்டர் தேர்வு வைக்க போகிறார்களாம்.

அடுத்த வாரத்துக்குள் internals finalize செய்தாக வேண்டிய கட்டாயம், லெட்சரர்களுக்கு இருப்பதால், எல்லாத்தையும் முடிக்க வேண்டிய கட்டாயம் மாணவர்களாகிய எங்களுக்கும் வந்துவிட்டது.

Assignments எல்லாமே டைப் செய்து தான் அனுப்ப வேண்டும். Record work கூட டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இன்றும் கூட ஒரு பக்கம் காலேஜ் வொர்க், ஒரு பக்கம் கதை என்று தான் டைப் செய்தான்.

இதனால் நான் கூற வருவது என்னவென்றால்! அடுத்த எபி வர சற்று தாமதம் ஆகலாம்.

முடிந்த வரை வியாழன்கிழமைக்குள் தந்துவிடுகிறேன்.
 

தரணி

Well-Known Member
சூப்பர் எபி.... 7th stdலேயே அவிராக்கு ஆரூரன் பிடிச்சிடுச்சு.... ஆன இப்படி டேமேஜ் பண்ணி இருக்க வேண்டாம்....

நீங்க college studentயா.... writing ல் அப்படி தெரியவே இல்ல மா.... உங்க ஒர்க் முடிச்சிட்டு பொறுமையா வாங்க
 

Kamali Ayappa

Well-Known Member
சூப்பர் எபி.... 7th stdலேயே அவிராக்கு ஆரூரன் பிடிச்சிடுச்சு.... ஆன இப்படி டேமேஜ் பண்ணி இருக்க வேண்டாம்....

நீங்க college studentயா.... writing ல் அப்படி தெரியவே இல்ல மா.... உங்க ஒர்க் முடிச்சிட்டு பொறுமையா வாங்க

Hero va nenachi unga manasu vedhanai paduvadhu theridhu...

Aama sis.. First year dhaan... Thanks sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top