புள்ளினங்காதல் - 8

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
கதவை திறந்து இந்த அறையில் இருந்து, அடுத்த அறையில் கால் வைத்தனர். முழு வெளிச்சம் இல்லாவிடினும் கண்களுக்கு அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் தெள்ளந்தெளிவாக தெரியும் அளவுக்கு வெளிச்சம் படர்ந்திருந்தது.



அங்கு இருந்து சுவர் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அங்கு இருந்த சுவர் சின்ன சின்ன சதுரங்களாக வெட்ட பட்டதுபோல இருந்தது. அந்த சதுரங்களில் சில வெளியே நீட்டியவாறும், சில உள்ளடங்கியும் இருந்தது. அந்த சதுரங்களை வெளியே தனியாக எடுக்க முடிந்தது. அதை எடுத்து பார்த்தால், உள்ளே இன்னொரு அடுக்கு சுவர் இருந்தது தெரிந்தது. இந்த சதுரங்கள் அனைத்துமே அந்த சுவரில் பொருத்தி மட்டுமே வைக்க பட்டிருந்தது. மேலோட்டமாக பார்த்தால் சுவற்றில் ஏதோ கிறுக்கி வைத்தது போல் தான் இருந்தது. ஆனால் உன்னிப்பாக கவனித்தால், சில சதுக்கங்களில் எழுத்துக்களும், சில சதுக்கங்களில் பறவைகளின் ஓவியங்களும் இருந்தன.



இரண்டு பக்க சுவர்களும் அப்படியே தான் இருந்தன. மூன்றாம் பக்கம், அதாவது இவர்கள் தகர்க்க வேண்டிய அடுத்த இடர், அதுவும் பார்க்க அப்படியே தான் இருந்தது. சின்ன சின்ன சதுரங்களாக வெட்ட பட்டு இருந்தது. ஆனால் அதில் எதுவும் கிறுக்கியோ, எழுதியோ, வரைந்தோ இல்லை. வெற்று சுவராகவே இருந்தது. ஆனால் அந்த சுவற்றில் இரண்டு சதுரங்கள் பொருத்தும் அளவிற்கு வெற்றிடம் இருந்தது. அதுவும் அந்த சுவற்றின் மையத்தில், கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருந்தது. கண்டவுடன் முடிவுக்கு வந்தனர் இருவரும், அந்த இடத்தில் எதையோ பொறுத்தி தான் அந்த கதவை திறக்கவேண்டும் என்று. ஆனால் என்ன பொருத்துவது? சுற்றி இருந்த சுவரில் இருக்கும் ஏதோ இரண்டு சதுரங்கள் தான். ஆனால் அங்கு நூற்றுகணக்கில் இருக்கிறதே. அதில் அந்த இரண்டை எப்படி எடுப்பது? அதற்கும் ஏதாவது வழி இருக்கும் என்று நம்பினர்.



பளிங்கு கல்லில் செய்த சிலை நான்கு அந்த அறையில் இருந்தது. வரிசையாய் நிற்க வைத்திருந்த அந்த நான்கு சிலையும் தாண்டி தான் அந்த மூணாம் பக்க சுவரிடம் வந்திருந்தனர் இருவரும். இது அழகுக்கு வைத்த சிலைகளாக இருக்குமென்று அலட்சியமாய் தாண்டி வந்த இருவரும், இப்பொழுது செய்வதறியாது அந்த சிலைகளிடமே வந்துநின்றனர்.



அந்த நான்கு சிலைகளை தவிர வேறு எதுவும் தான் இல்லையே. அந்த சிலைகளிடம் வந்து நின்றவர்கள் அதை உற்று கவனித்தனர். அது தோளில் இருந்து உள்ளங்கை, நகங்கள் வரை அழகாக செதுக்கப்பட்டிருந்த கைகள். கைகளுடன் செதுக்கப்படறிந்த அழகு வளையல், மற்றும் அந்த கைகளின் மென்மை என்று பார்க்க பெண்களின் கை போல் தான் இருந்தது. இரு கைகளையும் மேலே உயர்த்தி, இரு உள்ளங்கைகளையும் இணைத்து, கைகளை ஏந்தி இருப்பது போல் இருந்தது. இது என்ன? கைகள் மட்டும் சிலையாக வடித்துள்ளனர் என்று உற்று பார்த்தாள் அவிரா.



அந்த சிலையில் தான் ஏதோ துப்பு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவள், அந்த சிலையில் ஒவ்வொரு பகுதியையும் பார்த்தாள். அந்த சிலையின் உள்ளங்கையில் ஏதோ செதுக்கி இருப்பதுபோல் இருக்க, அதை உற்றுப்பார்த்தாள் அவள். எழுதி இருப்பதை படிக்க முற்பட்டாள்.



முதல் சிலையின் உள்ளங்கையில் "விகடம் புரியும் வித்தகன்" என்று எழுதி இருக்க, அதை அவனிடமும் கூறினாள் அவிரா. "விகடன் அப்டினா? வேடிக்கை பேச்சு பேசுறது தான?" என்று ஆரூரன் கேட்க, "ஆமாம் என்று தலை அசைத்தவள், "அது மட்டும் இல்ல. மிமிக்ரி யை கூட விகடம்ன்னு சொல்லுவாங்க" என்றாள் அவிரா.



"மிமிக்ரி யா? இங்க இருக்க துப்பு எல்லாமே பறவைகள் சம்பந்தப்பட்டு தான் இருக்கு. சோ இந்த விடகம் புரிவது கூட ஒரு பறவையா தான் இருக்கனும்" என்றான் ஆரூரன். "பறவை மிமிக்ரி பண்ணுமா?" என்று அவள் கேட்க, "லயர் பைர்ட் (lyrebird ) கேள்வி பட்டுயிருக்கியா? மற்ற விலங்குகளோடு சத்தம், மனுஷங்க பேசுறது, கார் ஹார்ன் சவுண்ட், கன் சத்தம்ன்னு எல்லா விதமான சத்தத்தையும் அந்த பறவையால் உருவாக்க முடியும்" என்றான் ஆரூரன்.



"அப்போ அந்த பறவை தான் விடைன்னா? அதை எப்படி சொல்றது?" என்று ஆரூரன் யோசித்து கொண்டிருக்க, "இந்த சுவரில் இருக்கும் ஒவ்வொரு சதுரத்திலயும் ஒரு ஓவியமோஅது, அல்லது எழுத்தோ இருக்கு. அது மட்டும் இல்லாமல், அந்த ஒவ்வொரு சதுரத்தையும் வெளிய எடுக்க முடியுதுன்னா, அதுக்கு காரணம் இல்லாமல் இருக்காது" என்று அவிரா கூற, "அப்போ இங்க இருக்க பறவை ஓவியங்களில் அந்த பறவை இருக்குதான்னு பாக்குறேன். நீயும் பாரு அவிரா. அந்த பறவையோட வால் பகுதி பார்க்க யாழ் மாதிரி இருக்கும். அதனால தான் அதை தமிழ் ல யாழ்ப்பறவைன்னு சொல்லுவாங்க. அதை வச்சி கண்டுபிடிக்க பாரு" என்று அவளிடம் கூறிவிட்டு, அவன் கண்களையும் அலையவிட்டான்.



சிறிது நேரத்தில் அவிரா, "இதுவா பாரு?" என்று அவனை அழைக்க, அவன் கவனம் அங்கு சென்றது. அவள் ஒரு பறவை ஓவியத்தை காமிக்க, "ஆமாம் அவிரா. இதான் நான் சொன்ன யாழ்ப்பறவை" என்று ஆரூரன் உறுதிப்படுத்த, அதில் ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று ஆராய்ந்தாள் அவள். கையில் இருந்த அந்த சதுரத்தில், ஒரு பக்கம் யாழ்ப்பறவையின் உரு வரையப்பட்டிருக்க, மறு பக்கம் ஏதோ வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதை படித்து பார்த்த அவிரா, "எல்லாமே அரைகுறையா இருக்கு. முழு வரிகள் இல்லை இது" என்று அவள் கூற, "இன்னும் மூணு சிலை இருக்குல்ல. அதுல பார்க்கலாம் வா" என்றான் ஆரூரன்.



அடுத்த சிலையிடம் இருவரும் செல்ல, அந்த சிலையில் உள்ளகையில் இருந்த எழுத்துக்களை படிக்கலானாள் அவிரா. "அடை காக்கும் பெண் அதை, சிறை வைக்கும் ஆண்" என்று எழுதி இருக்க, அதை கண்டு பிடிப்பது ஆரூரனுக்கு சிரிமமாக இல்லை. "இருவாச்சி பறவை(hornbill) அவிரா. அடைகாக்கும் காலத்துல, பெண் பறவையை மரபொந்து குள்ள அடைத்து வச்சிட்டு, ஒரு சின்ன ஓட்டை வழியா அந்த பெண் பறவைக்கு சாப்பாடு மட்டும் தரும். அதனால இந்த கேள்விக்கு பதில் இருவாச்சி பறவையா தான் இருக்கனும்" என்று சொன்னது மட்டுமில்லாமல், அந்த பறவையின் உருவம் வரைந்த அந்த சதுரத்தையும் எடுத்து வந்து அவிராவிடம் குடுக்க, அதன் பின்னாலும் சில வரிகள் எழுதி இருந்தன.





மூன்றாம் சிலையில் உள்ளங்கையில் "குடை விரித்து கயல் பிடிப்பவன்" என்று இருக்க, "இதுவும் பறவையா?"என்று கேட்டாள் அவிரா. "ஆமாம் அவிரா. பிளாக் ஹெரான்(Black heron) . தன்னோட ரெக்கைகளை குடை மாதிரி விரிச்சி அதிக ஆழம் இல்லாத நீர் பகுதியில் நிக்கும். அந்த குடை வடிவத்தை பார்த்து ஈர்க்கப்பட்டு வரும் மீன்களை உண்ணும்" என்று கூறிவிட்டு தேட, பிளாக் ஹெரான் தன் இறைக்கைகளை குடை வடிவில் விரித்து வைத்திருந்த வடிவத்திலே அந்த வரைபடமும் இருக்க, அதிக சிரமம் இல்லாமல் கண்டுபிடித்துவிட்டான்.



கடைசி சிலையின் கைகளில், "பின்னோக்கி பறக்கும் அவனை அடைக்க, உள்ளங்கை அதுவும் அதிகமே", என்று அவிரா படித்த மறுவினாடி, "ஹம்மிங் பர்ட்" என்றான் ஆரூரன். "பின்னோக்கி பறக்க கூடியே ஒரே பறவை அதுதான். அது மட்டும் இல்லாமல், அந்த பறவையால் தன்னோட ஒவ்வொரு ரக்கையையும் வட்டத்தில் சுழற்ற முடியும். சிறகை அடிச்சிட்டே ஒரே எடத்துல நிக்க முடியும். ஆனா இந்த பறவை நம்ப விரல் இடுக்குகளுக்கு நடுவில் பொருந்த கூடிய அளவுக்கு சிறியது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டுன்னு தமிழில் பெயர் வந்தது" என்று அந்த பறவையை பற்றி கூறிக்கொண்டே தேடினான் அவன். பூவில் இருந்து சிறகடித்துக்கொண்டே மகரந்தம் உண்ணும் ஒரு ஹம்மிங் பர்டின் உருவம் வரைந்திருக்க அதை எடுத்துக்கொண்டு வந்தான் அவன்.



தாங்கள் எடுத்து வந்த நான்கு சதுரங்களையும் அப்படியும் இப்படியும் திருப்பி, இடம் மாற்றி மாற்றி வைத்து, அதில் இருக்கும் வரிகள் நிறைவு பெறுமாறு அடுக்கி வைத்து, அதில் இருக்கும் வரிகளை படித்தாள் அவள்.



"குமரி அதன் தெற்கில்,

மனிதன் அவனின் 'தாய் கண்டமாம்' அதன் கிழக்கில்,

எழுநூறு மைல் பரப்பாம் !

அதன் ஒற்றை போர்புரியா ராஜன் இவனாம்.



அற்பஇனத்தவர், அவர்களிடம் 'அற்பம்' என பெயர் பெற்றினும்,

என் எச்சம் அதுவும் துச்சமில்லை,

என புத்துயிர் படைத்தவன் அவன்.



பலம் இல்லா புஜம் அதுவும்,

உயரம் கம்மிய கால் அதுவும்,

அவன் பெற்ற சாபமோ!



அண்டம் ஆள பிறந்தவன் என,

தற்பெருமை நிலை நாட்ட,

சொற்ப ராஜ்ஜியம் அதிலும்..

சிறை அமைத்த அற்பர்களால் நிகழ்ந்த கோரமோ?



தன் இடம் அழிந்து, உயிர் பிரிந்து,

இனம் அழிந்து, அடையாளம் கரைந்து,

எலும்பின் மிச்சம் அதுவும் முழுமையின்றி...

கற்பனையோ, கட்டுக்கதையோ?

என அவன் பிறப்பும் சந்தேகமாகிப்போன,

சாபம் பெற்ற ராஜன் அவன்

பெயர் உதவும்...

இடர் அதை இடித்தெறிய”



என்று அதில் இருந்த வரிகளை படித்தாள் அவிரா. ஆரூரன் ஏதாவது சொல்லுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.அவன் அவன் இடமும் வலமுமாக தலை அசைக்க, தன்னால் ஏதும் தெரிந்துகொள்ள முடிகிறதா என்று மீண்டும் ஒருமுறை படிக்கத்தொடங்கினாள்.



"மனிதனின் தாய் கண்டம்ன்னு சொல்ல படுவது ஆப்பிரிக்கா தான். குமரி அதன் தெற்கில், ஆப்பிரிக்காவுக்கு கிழக்குலன்னா..." என்று யோசித்தவள் சட்டென "மடகாஸ்கர்" என்றாள். ஆனால் "எழுநூறு மைல் பரப்பு" என்ற வரியை படித்ததும், இரண்டு வினாடிகளுக்கு முன்பு தொளசண்ட் வாட் பல்பாய் எரிந்த முகம் பியூஸ் போன பல்பாய் மாறிப்போனது.



"என்ன ஆச்சு அவிரா?" என்று ஆரூரன் கேட்க, "மடகாஸ்கர் குட்டி இடம் தான். ஆனா எழுநூறு மைல் பரப்பு அளவுக்கு சின்னது கிடையாதே. அதுக்குபக்கத்துல வேற என்ன....?" என்று அவள் அவனிடம் கேட்டுக்கொண்டே யோசிக்க, சட்டென பதிலும் கிடைத்தது மொரீஷியஸ் என்று. "மொரீஷியஸ். கரெக்ட். இதுல குறிப்பிட்டிருக்கும் இடம் மொரீஷியஸ் தான். அப்போ இந்த பறவை மொரீஷியஸ்ல இருக்க பறவையா தான் இருக்கனும்ல?" என்று அவிரா கேட்க, "இருக்க பறவை இல்ல. இருந்த பறவை" என்றான் ஆரூரன்.



"அப்டி ஒரு பறவை இருந்தது கூட பல பேரோட நினைவுல இல்லை அவிரா. ஏன், எனக்கே கூட, நீ மொரீஷியஸ்ன்னு சொன்னதும் தான் நெனப்பு வருது" என்று ஆரூரன் சொல்ல, "அது என்ன பறவை ஆரூரன். அதை பத்தி சொல்லு. இங்க குடுத்துருக்க வரிகளோடு இணைக்க முடியுதான்னு பார்ப்போம்" என்றாள் அவிரா.



"பதினைந்தாம் நூற்றாண்டு. அப்போ நீ மொரீஷியஸ் தீவுல அலைந்து திரிந்திருந்தாலும், உன்னால ஒரு பாலூட்டி கூட பார்த்திருக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த தீவு முழுவதும் நீ என்ன பார்த்திருப்ப தெரியுமா? பறக்கவும் முடியாம, ஓடவும் முடியாம, பொறுமையா, எந்த எதிரிகளுமே இல்லாம நிம்மதியா நடந்து போய்ட்டு இருந்த டோடோ பறவைகளையும், தரையிலே அவர்கள் இட்டு வைத்த முட்டைகளும் தான். ஆனா நீ கடந்த 400 ஆண்டுகளில் போக நேர்ந்திருந்தால், அந்த பறவையில் ஒன்றை கூட பாத்திருக்க முடியாது. அப்டி ஒரு தீவு முழுக்க செழித்திருந்த அந்த பறவை இனத்தை மொத்தமா அழித்த பெருமை கூட நம்மை தான் சேரும் அவிரா.



பதினைந்தாம் நூற்றாண்டில் தான் அந்த தீவுல மனிதனின் கால் தடம் முதன் முதலில் பதிந்தது. அந்த வழியாக சென்ற போர்த்துக்கீசிய கடல் மாலுமிகளும், தொழிலாளர்களும் அந்த பறவைகளை பிடிச்சிட்டு போயி தங்களோட கடல் பயணத்தின் போது உணவா பயன்படுத்திக்கிட்டாங்க. பறக்கவும் தெரியாம, ஓடவும் முடியாம இருந்த அந்த பறவைகளை புடிச்சிட்டு போவது ரொம்ப சுலபமா இருந்தது அவங்களுக்கு.



அதுக்கு அப்புறம், நாடு பிடிக்கும் போட்டியில் டச்சுக்காரர்கள் மொரிஷியஸைக் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள் இந்தத் தீவை தண்டனை வழங்கும் தீவாக மாற்றினர். தங்களது கப்பல்களில் குற்றவாளிகளுடன் பன்றிகள், குரங்குகள் போன்ற விலங்குகளும் கொண்டு வரப்பட்டன.வேறு எந்த பாலூட்டிகளும் அங்கு இல்லாத காரணத்தால், உணவு கிடைக்காத அந்த குரங்கு, பன்றிகள் தரையில் இடப்பட்டிருந்த அந்த டோடோவின் முட்டைகளை சாப்பிட ஆரமிச்சுது. மனுஷங்க அந்த டோடோவையே அடிச்சி சாப்பிட ஆரமிச்சாங்க.



மனிதன் இப்படி ஒரு பறவை இனம் இருக்குன்னு கண்டுபிடித்த ஒரு நூறு வருடத்திலேயே அந்த இனம் முழுவதுமாக அழிக்கப்பட்டது. அந்த பறவையோட எலும்பு கூட முழு உருவமா கிடைக்கல அவிரா. அங்கும் இங்குமா கிடைச்ச எலும்புகளை சேர்த்து வச்சு, நம்மளே யூகித்து வரைந்த உருவம் தான் இப்போ நம்ப ஓவியங்களில் பார்ப்பது கூட. இன்னும் சிலர், அப்டி ஒரு உயிரினம் வாழ்ந்ததையே, போதிய ஆதாரம் இல்லாதலால் நம்ப மறுக்குறாங்க. அப்டி ஒரு இனத்தை அடையாளமே இல்லாம அழிச்சிட்டோம்.



இன்னொன்னு தெரியுமா அவிரா. கல்வாரியான்னு ஒரு மரம். கடந்த 400 வருஷத்துல ஒரு புதிய மரம் கூட துளிர் விடல தெரியுமா? ஏன் தெரியுமா? அந்த மரத்தின் பழங்களில் இருக்கும் கொட்டைகள் ரொம்ப கடினமானவை. அதனால அப்படியே முளைத்து வர முடியாது. அந்த மரம் புதுசா முளைக்க ஒரே வழி, அந்த பழத்தை டோடோ சாப்பிட்டு, விதைகளை கழிவு வழியா வெளியேற்றும். அப்படி நடந்தா மட்டும் தான் புதிய மரம் ஒன்று முளைக்கும். தெரிஞ்சே டோடோவை அழிச்சி, தெரியாம இந்த மரத்தையும் அழிச்சிட்டோம்.



ஆமா. அந்த பறவைக்கு போர் குணம் இல்லை தான். பறக்க முடியாது. ஓட முடியாது தான். அப்படி அதை படைச்சது கடவுள் உடைய தப்பா? இல்லையே, ஏன்னா, அந்த பறவைக்கு இயற்கை எதிரிகள் எதுவும் இல்லை. அந்த பறவை வாழ்ந்த சுற்றுப்புறத்துக்கு, அதுக்கு போர் குணம் தேவையே இல்லை. கடவுள் எல்லா உயிரினத்துக்கும், காலத்துக்கு ஏற்ற மாதிரி பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் நிகழுற மாதிரி தான வச்சிருந்தாரு. அப்டி மாறாதது அந்த பறவையோட தப்புன்னு சொல்லமுடியுமா? சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்டு'ன்னு (survival of the fittest) ன்னு டார்வின் ஓட தியரியை சொல்லி பழியை போட முடியுமா? முடியாது. ஏன்னா? பரிணாம வளர்ச்சி அடைய அவகாசமே குடுக்களையே.



கடவுள் மனிதனுக்கு அளித்த ஒரு வரம். ஆறாவது அறிவு. ஆனா அதுவே இன்னைக்கு மற்ற உயிரினங்கள் எல்லாத்துக்கும் சாபமா மாறிடுச்சு. ஒரு மனுஷனால ஒரு சிம்பன்சியை, எதிர்த்து சண்டை போட முடியாது. நார் நாரா கிழிச்சிடும். ஆனா, மனிதம் அவன் கண்டுபிடித்த துப்பாக்கியை வைத்து தூரத்தில் இருந்தே எத்தனை சிம்பன்சியை வேணாலும் கொன்னுடலாம். மனுஷனோட ஆறாவது அறிவுக்கு முன்னாடி, புலியே பாதுகாக்கபடவேண்டிய உயிரினமா மாறியபோது, இந்த டோடோவெல்லாம் எந்த மூலைக்கு."



என்று ஆரூரன் உணர்ச்சிவசப்பட்டு பேச, அதற்கு என்ன பதில் அளிப்பது என்று கூட தெரியவில்லை நம் அவிராவுக்கு. இவன் கூறுவதெல்லாம் சரி தான். ஆனா இதை யோசிப்பதை விட, அந்த டோடோ பறவையின் வரலாறோடு, இந்த வரிகளை இணைத்து பார்ப்பதே இப்போதைக்கு முக்கியமானதாக தெரிந்தது.



அவிரா அமைதியாகவே இருக்க, அவள் அமைதிக்கு காரணமும் தெரிந்தவனாய், இவனே மீண்டும் பேசினான். "எனக்கு தெரிந்து இந்த பறவையா தான் இருக்கனும். நீ சரியா இருக்கானு பாரு" என்று அவன் கூற, "ம்ம்" என்றாள் அவிரா.



"முதல் மூன்று வரிகள், மொரீஷியஸை தான் குறிக்குது. நான்காம் வரியில், 'போர் புரியா ராஜன் இவனாம்'ன்னு இருக்கு. அதுவும் டோடோவுக்கு சரியா தான் இருக்கு. டோடோ போர் குணம் இல்லாத பறவை. அதுமட்டும் இல்லாமல் மனுஷங்க அந்த இடத்துக்கு போற வரைக்கும், அந்த இடத்தை மொத்தமா ஆண்டது டோடோ தான். அதனால அதை ராஜான்னு குறிப்பிட்டுருக்கலாம்.



அடுத்த வரி, 'அற்பஇனத்தவர், அவர்களிடம் 'அற்பம்' என பெயர் பெற்றினும்" என்ற வரிகளை படித்த அவிரா, ஆரூரன் முகம் நோக்க, "என்ன விழிக்கிற அவிரா. இதுவும் சரியா தான் இருக்கு. இதுல அற்பஇனம்ன்னு சொல்லி இருப்பது, மனித இனத்தை தான். டோடோ'ன்னு பெயர் வைத்தது, போர்த்துக்கீசியர்கள் தான். அந்த பெயர்க்கு அவர்கள் மொழியில் அற்பம்'ன்னு அர்த்தம்" என்று கூறினான் ஆரூரன்.



"என் எச்சம் அதுவும் தூக்கமில்லை, என புத்துயிர் படைத்தவன் அவன்...இந்த வரிகள், அந்த பறவையின் எச்சத்தில் இருக்கும் கல்வாரியா விதைகளில் இருந்து தான் புது மரம் முளைக்கும். அதை குறிப்பிடுவதா இருக்கும்.





பலம் இல்லா புஜம் அதுவும், உயரம் கம்மிய கால் அதுவும், அவன் பெற்ற சாபமோ!...மனிதர்களோட புஜம் எப்படி பலமா இருக்குமோ, அப்டி தான் பறவைகளுக்கு பலமான இறக்கைகள் இருக்கனும்..ஒரு வேல அப்படி பலமான இறைக்கைகளோ, இல்லன்னா கொஞ்சம் உயரம் அதிகம் இருக்கும் கால்களோ இருந்திருந்தா, பறந்தோ, இல்லை வேகமா ஓடியோ, தாக்குதலில் இருந்து தப்பித்திருக்க முடியும். ஆனா அப்டி இல்லையே இந்த பறவைகளுக்கு. அதை தான் இவங்களோட சாபம்'ன்னு சொல்லிருக்காங்க.



அண்டம் ஆள பிறந்தவன் என, தற்பெருமை நிலை நாட்ட, சொற்ப ராஜ்ஜியம் அதிலும்..சிறை அமைத்த அற்பர்களால் நிகழ்ந்த கோரமோ?.......இந்த வரிகள், டச்சுக்காரர்கள் இந்தத் தீவை தண்டனை வழங்கும் தீவாக மாற்றியது குறித்தது. அதாவது, மனிதன் தன்னையே, உலகத்தை ஆள பிறந்தவன்ன்னு நினைத்து தான், நாடுகளை பிடிக்க முற்பட்டான். அப்படிதான டச்சுக்காரர்கள் கிட்ட மொரீஷியஸ் மாட்டுச்சு. அந்த சின்ன இடத்தை கூட விட்டு வைக்காமல், அதையும் கைப்பற்றி, அந்த இடத்துல சிறை அமைச்சிருக்காங்க. அப்டி சிறை அமைச்சதால தான் இந்த பறவைகளுக்கு இப்படி ஒரு கோரமான அழிவோ..இதை தான் இந்த வரிகள் குறிப்பிடுது.



"தன் இடம் அழிந்து, உயிர் பிரிந்து, இனம் அழிந்து, அடையாளம் கரைந்து,எலும்பின் மிச்சம் அதுவும் முழுமையின்றி...கற்பனையோ, கட்டுக்கதையோ? என அவன் பிறப்பும் சந்தேகமாகிப்போன,

சாபம் பெற்ற ராஜன் அவன்..... இந்த வரிகளை குறிப்பிடுவதை தான் நீ முன்னாடியே சொன்னியே ஆரூரன். இந்த பறவையோட எலும்புகள் கூட முழுசா கிடைக்கல, நம்பலா யூகிச்சிக்கிட்ட உருவம் தான்னு. போதிய ஆதாரம் இல்லாததால் சிலர் இந்த பறவை வாழந்ததையே நம்ப மறுக்கறாங்கன்னு சொன்னியே. அதை தான் சொல்றாங்க. இவன் பிறப்பும் சந்தேகமாகி போய்டுச்சுன்னு சொல்றாங்க...



இதுல இருக்க எல்லா வரிகளும் டோடோவுக்கு பொருந்துது. இந்த பெயர் தான் இந்த இடரை விளக்க உதவும்ன்னு போட்ருக்காங்க.



அந்த மூன்றாம் பக்கம் சுவரிலும் இரண்டு சதுரங்கள் வைக்கும் அளவிற்கு தான் இடம் இருக்கு. மற்ற இரண்டு பக்க சுவர்களிலும், எழுத்துக்களும், பறவை உருவங்களும் இருக்கும் சதுரங்கள் இருக்கு. அப்போ..டோடோ பெயர் இருக்க, இரண்டு சதுரங்களை அங்க பொருத்தணும்"



அந்த அறை முழுதும் பார்வையை படர விட்டு, 'டோ' எழுத்து பொறிக்கப்பட்டிருந்த ஒரு சதுரத்தை சுவரில் இருந்து வெளியே எடுத்தாள் .



"ஆரூரன், இங்க பாரு. டோ எழுத்து இப்டி தான் இருக்கும். இது மாதிரி இன்னொன்னு தேடணும்" என்று அவன் கையில் கொடுத்து விட்டு, அவளும் தேட, மற்றொரு டோ எழுத்து பொறிக்கப்பட்ட சதுரத்தையும் கண்டுபிடித்து விட்டனர்.





அவிரா, அந்த மூன்றாம் பக்கம் சுவரிடம் சென்று,தன் கையில் இருந்த ஒரு சதுரத்தை பொறுத்த, அது பொருந்தவில்லை. மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது அவிராவுக்கு. பதட்டத்தில் யோசிக்கவும் முடியவில்லை.



"இது ஏன் பொருந்த மாட்டுது" என்று அவள் பதட்டமாய் கேட்க, "பொறுமையா இரு அவிரா" என்று அவன் கையில் இருந்த சதுரத்தை உருட்டி பார்க்க, அதன் பின்புறத்தில், டோடோவின் தலைப்பாகம் வரைந்திருந்தது. "இதுல தலை பாகம் இருக்கு. அப்போ இது தான் முதலில் வரணும்" என்று நினைத்தவன், அவிராவின் கையில் இருந்த மற்றோரு சதுரத்தை வாங்கி பார்க்க, அதன் பின்புறம் டோடோவின் பின் பகுதி வரைய பட்டிருந்தது. "அப்போ இதை தான் ரெண்டாவதாக பொருத்தணும் போல" என்று முடிவு செய்தவன், அதை செயல்படுத்தவும் செய்தான்.



அந்த இரண்டு டோ எழுத்து பொறிக்கப்பட்ட சதுரங்களும் கச்சிதமாய் பொருந்தி, "டோடோ" என அந்த கேள்விக்கு விடையாக மாறி, அந்த சுவர் இரண்டாய் உடைந்தது.
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
Wow very interesting sis... Idhula sila birds pathi kelvi patiruken... And dodo extinction pathiyum padichuruken... Aana adhuku pinnadi ipdi oru history irukum nu therila... Unmai dhan ellathaiyum azhichutu manushan matum irundhu ena panna porano... Waiting for next epi sis:love::love::love:
 

தரணி

Well-Known Member
வாவ்..
ரொம்ப அருமை.... ஒரு ஒரு பறவை பத்தி நீங்க சொல்லுறதுக்கு அதுக்கு கூட விளக்கம் எல்லாமே அருமை.... அதை விட அதை ஒரு புதிர் யா கேட்டு விடை சொல்லுவது ரொம்ப சூப்பர்....

அந்த பறவையோட pic fb யில் நீங்க போஸ்ட் பண்ணி இருதீங்க .... எல்லாரும் fb யில் இல்ல பா so அதை இங்கud post பண்ணும் போது அந்த pic யையும் paste பண்ண ரொம்ப நல்ல இருக்கும்.... இது என்னோட ஒரு சின்ன sugestion ...
 

Kamali Ayappa

Well-Known Member
Wow very interesting sis... Idhula sila birds pathi kelvi patiruken... And dodo extinction pathiyum padichuruken... Aana adhuku pinnadi ipdi oru history irukum nu therila... Unmai dhan ellathaiyum azhichutu manushan matum irundhu ena panna porano... Waiting for next epi sis:love::love::love:
thanks a lot for your comments sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top