புள்ளினங்காதல் - 11

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
தன்னை அறியாமல் அவிரா, அந்த, ஓவியத்தில் இருந்த சிலையை தொட, இவள் கை பட்ட அடுத்த நொடி, பின்னால் ஒரு பெரும் சத்தம் கேட்டது.

சட்டென திரும்பி பார்க்க, இவ்வளவு நேரம் அங்கிருந்த சிலைகளுக்கு மத்தியில், ஒரு புது சிலை, மண்ணுக்கு அடியில் இருந்து மேலே வந்தது.

அங்கு இருந்த மத்த சிலைகள் அனைத்தும் பறவைகளில் சிலைகளாக இருக்க, இது ஒரு பெண்ணின் சிலை.

நூற்றுக்கணக்கான பறவை சிலைகளுக்கு நடுவில், ஒரு பெண்ணின் சிலை. அதுவும், அந்த ஓவியத்தில் இருக்கும் அதே பெண், அதே போல் நின்றிருந்தாள். அதே போல், ஒரு கையில் 'மயூரமுத்திரை' வைத்து, மற்றொரு கையை இவர்களை நோக்கி நீட்டியவாறு.

அந்த ஓவியத்திற்கு சிலைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். அந்த ஓவியத்தில் பெண்ணின் கையில் இருந்த அந்த நவரத்தினங்கள் பொதிந்த, அந்த குட்டிசிலை, இந்த சிலைமங்கையின் கைகளில் இல்லை. அதுதான் அவிராவின் கைப்பைக்குள் இருக்கிறதே!

முதலில் தன்னைப்போல் ஒரு ஓவியம். இப்பொழுது தன்னை போலவே ஒரு சிலை. அதுவும், அந்த ஓவியமோ, இவர்கள் குடும்ப சொத்தாக பாதுகாத்த அந்த நவரத்தினம் பொதிந்த தங்க சிலையை கையில் வைத்திருக்க, இந்த கருங்கல் பெண் சிலையோ, கை நீட்டி அதை கேட்பது போல் இருக்கிறதே. "இந்த இடத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம் குடும்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்திகொண்டிருந்தாள் அவிரா.

ஆனால், ஆரூரனுக்கோ அந்த கவலை எல்லாம் எதுவும் இல்லை. அவனுக்கு அவன் காதலியை போலவே, ஒரு ஓவியத்தை பார்த்ததும் சந்தோஷம் தான். தன் காதலியை போலவே ஒரு ஓவியம், அதுவும் அலங்காரத்துடன் அழகாய் இருக்கவும் ரசிக்கத்தான் செய்தது அவன் மனம். அந்த சிலையை பார்த்தும் அதே நிலை தான்.
இந்த புதையலை பற்றிய மர்மங்கள், இதில் இருக்கும் ஆபத்து, இதெல்லாம் நன்கு உணர்ந்தவள் என்பதாலும், தன் குடும்பம் நேரடியாய் சம்பந்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததாலும், அவிராவுக்கு இருந்த திகில், ஆரூரனுக்கு இல்லாமல் போனது. அந்த சிலையின் தோளில் கை போட்டு, "உன்னை விட இந்த சிலை நல்லா இருக்கே" என்று சிலையையும் சைட் அடிக்கும் நிலையில் தான் இருந்தான் அவன்.

அதுவரை விளையாட்டாய் பார்த்துக்கொண்டிருந்தவன், நொடிக்கு நொடி மாறும், அவளின் முகம் கண்டதும், அதில் இருக்கும் திகில் கண்டதும், கண்ணெடுக்காமல் அந்த சிலையை பார்க்கும், அவன் காதலியை கண்டதும், இவனுடைய மனநிலையும் மாறியது.

"என்ன ஆச்சு அவிரா?" என்றான், அவள் யோசனையை கலைப்பதுபோல்.

"ஒண்ணுமில்லை" என்றாள் அவள். மனதுக்குள் ஓடிக்கொண்டிதான் இருந்தது, ஆயிரக்கணக்கான யோசனைகளும், நூற்றுக்கணக்கான கேள்விகளும். ஆனால், இவனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எண்ணங்களை, வார்த்தைகளாக மாற்றும் செயல்திறனை தற்சமயம் இழந்திருந்தது அவள் மூளை.

இவள் செய்ய முனையவில்லை என்றாலும், அவள் கைகள் தானாய் தொட்டுப்பார்த்துக்கொண்டன, அவள் கைப்பைக்குள் இருந்த அந்த நவரத்தின சிலையை. தொட்டுப்பார்த்ததோடு நில்லாமல், வெளியில் எடுத்தும் பார்த்தாள்.


"இப்போ என்ன செய்ய வேண்டும்?" என்று அவளுக்குள் எழுந்த கேள்விக்கு, அவள் மூளை பதிலளிக்கும் முன்பு, அவள் கைகள் தானாய் அந்த நவரத்தின சிலையை, அந்த பெண் சிலையின் கையில் வைத்தது.

அந்த பெண் சிலையின் கையில், அந்த குட்டி நவரத்தின சிலையை வைக்க, அதில் இருக்கும், தங்கம் மட்டும் உருகி, ஒரு தங்கதகடாய் மாறியது. செப்பு பட்டயத்தில் பொதிந்திருப்பது போல் எழுத்துக்கள் பொதிக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த, நவரத்தினங்கள் தனியாய் இருந்தது, அந்த சிலையின் கையில். அந்த நவரத்தினங்களை எடுத்து தன் கைப்பைக்குள் பாத்திரப்படுத்தியவள், அந்த தங்க தகடில் இருந்த எழுத்துக்களை படிக்க தொடங்கினாள்.

“வானசாஸ்திரம் அதன் தேவன்...
அவன் பெயர் கொண்டு வாராகரம் அதுவும்,
மங்கை அவள் இடையாய் வளைந்து,
அண்டம் அதன் நாலுமா படர்ந்திருக்க...
அவள் தேகத்தின் வடக்கில்,
கரையில் ஊர்ந்தது..
புள் அதுவும்...

நிலைநீர் ஆளும் வல்லவன் அவன்,
நிலம் ஆள பழகவில்லை...
நீலவான் அதன் உயரம் அளக்கவில்லை...
இயற்கையில் பகைவன் அவன் கொண்டதில்லை..
அதனாலோ?
மானுடன் அவன் உறு கண்டும் நடுக்கமில்லை...
மானுடன் குரூரன் அதையும் அவன் அறிந்ததில்லை...

உயிருடன் அவனை வைத்து,
இறகுகள் அதை பிய்த்து,
பஞ்சணை அதில் அமைத்து,
அதில் சுகம் கொண்டு...

உயிருடன் அவனை பிடித்து,
அவன் உடல் உயிருடன் எரித்து,
அதில் எழும் அவன் தணல் அதையே வைத்து,
அவன் ஊன் அதை சமைத்து,
அதில் சுவை கொண்டு...

கடைசி உயிர் அதையும்,
காலணி அதன் கீழே,
கருணை ஏதும் இன்றி,
கரு அதையும்,
மண் வாசம் காணும் முன்,
விண்ணுலகம் காண்பித்த பின்னே,
ஓய்ந்தது மானுட இனம்...
கடவுளின் இடம் அதில் தன்னை நிறுத்தி,
கருணை இல்லா அரக்க குணம் கொண்டு,
உலகாள நினைக்கும் அம்மானுட இனம்...

.

கருமை அதை பின்புறம் ஒளித்து,
வெண்மை அதை முன்னாள் அவன் படரவிட்டு,
சிரம் அதன் மேல்,
வெள்ளை வளையம் அதனுள்,
நேத்திரம் இரண்டும் கொண்டு,
அதன் அழகால் பெயர் கொண்டு,
பெயர் மட்டும் நிலைக்க வைத்து,
உயிர் அதை துறந்தது,
மனிதன் அவன் கொரூரத்தில் சிக்குண்டு
அதன் உருவம் கண்டறிந்து, வழி அதை காண்பாய்”

அது என்ன பறவை என்று முதலில் கண்டுபுடிக்க முடியவில்லை என்றாலும், "நிலைநீர் ஆளும் வல்லவன் அவன், நிலம் ஆள பழகவில்லை... நீலவான் அதன் உயரம் அளக்கவில்லை..." இந்த வரிகளில் புரிந்தது அவிராவுக்கு, அது நன்கு நீந்தக்கூடிய பறவை என்று. அதே நேரம், பறக்க முடியா, ஓட முடியா பறவை என்றும் புரிந்தது. அதை ஆருரனிடமும் சொல்ல, அவனும் கேட்டுக்கொண்டான்.


"கருமை அதை பின்புறம் ஒளித்து, வெண்மை அதை முன்னாள் அவன் படரவிட்டு" என்ற வரிகளில் யோசித்தாள் அவள். "முன் பக்கம் வெள்ளை நிறத்திலும், பின் பக்கம் கருப்பு நிறமும் இருக்கும் போலயே! நீந்தும் பறவைன்னு வேற இருக்கே. ஒருவேளை பென்குயினா இருக்குமோ?" என்று அவளே கேள்வி கேட்டு, "இதுல அழிந்து போன பறவைன்னு தான சொல்லிருக்காங்க. பென்குயின் தான் இன்னமும் இருக்கே" என்று அவளே பதிலும் அளித்துவிட்டு, மேலும் படிக்க தொடர, "பெயர் மட்டும் நிலைக்க வைத்து, உயிர் அதை துறந்தது" என்ற வரிகளில் பிடித்துவிட்டான் ஆரூரன்.

"எனக்கு தெரிஞ்சி இது பெரிய ஓக் ஆகத்தான் இருக்கனும்" என்று அவன் கூற, "அப்டி ஒரு பறவை நான் கேள்வி பட்டதே இல்லையே!" என்றாள் அவிரா.

"அது பாக்க பென்குயின் மாதிரி தான் இருக்கும். பென்குயின்க்கு இந்த பெயர் வர காரணமே இந்த ஓக் தான். இந்த ஓக் எங்க இருந்துச்சுன்னா, அட்லாண்டிக் பெருங்கடலின் வடக்கு கரைகளில். நீருக்கடியில் நன்றாக நீந்தக்கூடிய பறவை இது. இந்த பறவையின் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள். வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடும். குட்டி கால்கள் கொண்ட பறவை இது. அதனால அசைந்து அசைந்து தான் நடக்க முடியும். பறக்க முடியாத பறவை இது. எட்டாம் நூற்றாண்டில் இருந்தே, இந்த பறவைகளை மனிதர்கள், உணவுக்காகவும், மெத்தை செய்வதற்கும் வேட்டையாடிட்டு தான் இருக்காங்க. இந்த பறவையின் கடைசி ஜோடியும் 1840's ல ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் கொள்ளப்பட்டன.

இந்த ஓக்'க்கு வெல்ஷ் மொழியில் வைத்த பெயர் தான் பென்குயின். அதுக்கு அர்த்தம், "வெண்தலை". இந்த பறவையின் தலையில் உள்ள வெள்ளை நிறத்தின் அழகால் வந்தது இந்த பெயர்.

இந்த பறவையின் அழிவுக்கு பின்னர், கடல்பயணிகள், உருவத்தில் அதை ஒத்த, பறவை ஒன்றை பார்த்த போது, அதையும் அதே பெயரில் அழைத்தனர். அந்த பறவை தான் இப்போ நம்ப பாக்குற பென்குயின்" என்று அவன் சுருக்கமாய் கூற, "சரி. இப்போ நான் மறுபடி படிக்கிறேன். எல்லா வரிகளும் பொருந்துதான்னு பாப்போம்" என்றாள் அவிரா.

"வானசாஸ்திரம் அதன் தேவன்...அவன் பெயர் கொண்டு வாராகரம் அதுவும், மங்கை அவள் இடையாய் வளைந்து, அண்டம் அதன் நாலுமா படர்ந்திருக்க... அவள் தேகத்தின் வடக்கில், கரையில் ஊர்ந்தது..புள் அதுவும்...' இந்த வரிகள் அந்த பறவையின் இருப்பிடத்தை குறிப்பது. "அட்லாண்டிக் பெருங்கடல், என்னும் பெயர், கிரீக் கடவுள் அட்லாண்டிஸின் நினைவாக வைக்க பட்டது தான். அந்த அட்லாண்டிஸ், வானசாத்திரத்தின் தேவனாக தான் அறியப்படுகிறார். வாராகரம்க்கு அர்த்தம் கடல் தான். இடையாய் வளைந்துன்னா, அது அந்த கடலோட ஷேப்பை குறிக்குது. 1/5 தான் தமிழில் நாலுமா. இந்த கடல் மொத்த புவிபரப்பில் 20 சதவீதம். அதாவது 1/5 பரப்பை ஆக்ரமித்திருக்கு. அந்த கடலின் வடக்கு கரைகளில் தான் இந்த பறவை இருக்குன்னு சொல்றாங்க." என்று அழகாய் விளக்கினாள் அவள்.

"நிலைநீர் ஆளும் வல்லவன் அவன், நிலம் ஆள பழகவில்லை... நீலவான் அதன் உயரம் அளக்கவில்லை... இயற்கையில் பகைவன் அவன் கொண்டதில்லை..அதனாலோ? மானுடன் அவன் உறு கண்டும் நடுக்கமில்லை...மானுடன் குரூரன் அதையும் அவன் அறிந்ததில்லை..."என்று படித்தவள், "முதல் மூன்று வரிகள் புரியுது. அந்த பறவையால பறக்க முடியாது, ஓட முடியாது, நல்லா நீந்த முடியும்ன்னு சொல்றாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் இருக்கும் வரிகள்?" என்று அவள் விழிக்க, "அந்த பறவைகளுக்கு இயற்கை எதிரிகள் எதுவும் இல்லை அவிரா. யாரை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்த பறவைகள் அவை. அதனால தான், மனிதர்கள் அதை வேட்டையாட போறப்போ கூட, தன்னை கொல்ல தான் வராங்கன்னு தெரியாம, அதே இடத்துல அசையாம இருக்கும். அதனால, ரொம்ப சுலபமா வேட்டையாடிடுவாங்க. அதை தான் சொல்றாங்க" என்றான் ஆரூரன்.


"உயிருடன் அவனை வைத்து, இறகுகள் அதை பிய்த்து, பஞ்சணை அதில் அமைத்து, அதில் சுகம் கொண்டு..." என்று வரிகளை படித்தவள், "அந்த பறவைகளோட இறகுகளை வைத்து, படுக்கை அமைத்து சுகம் கண்டதை சொல்றாங்க" என்றாள் அவள்.

"உயிருடன் அவனை பிடித்து, அவன் உடல் உயிருடன் எரித்து, அதில் எழும் அவன் தணல் அதையே வைத்து, அவன் ஊன் அதை சமைத்து, அதில் சுவை கொண்டு..." என்ற வரிகளை படித்தவள் இவனை நோக்க, "அந்த பறவைகளின் உடலில் கொழுப்பு அதிகம். அதன் உடலில் நெருப்பு மூட்ட எளிதாக இருக்கும். அதனால கடல் பயணிகள், ஒரு பறவையின் மாமிசத்தை சமைக்க, இன்னொரு பறவையின் உடலை எரித்து நெருப்பு மூட்டுவார்கள். அதான் சொல்றாங்க" என்று அவன் கூற, எண்ணி பார்க்கவே வருத்தமாய் இருந்தது அவளுக்கு.



"கடைசி உயிர் அதையும், காலணி அதன் கீழே, கருணை ஏதும் இன்றி, கரு அதையும், மண் வாசம் காணும் முன், விண்ணுலகம் காண்பித்த பின்னே, ஓய்ந்தது மானுட இனம்..." என்று அவள் படிக்க, "அது வந்து. இந்த இனத்தோட கடைசி பறவையை கொல்ல போகும் போது, அந்த பறவை முட்டையை அடைகாத்துக்கிட்டு இருந்துச்சு. இவங்க அந்த பறவையை பிடிக்க போறப்போ, அந்த முட்டையை செருப்பு காலால மிதிச்சி கொன்னுட்டாங்க. நிலத்தில் கால் வைக்கும் முன்னரே, அந்த இனத்தின் கடைசி உயிரையும் கொன்னுட்டாங்க" என்று அவன் கூற, அதை நினைத்து கூட பார்க்க முடியாமல், கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவிரா.

"பெயர் மட்டும் நிலைக்க வைத்து, உயிர் அதை துறந்தது' இந்த வரிகள், அதோட பெயர், அதாவது பென்குயின். அந்த பறவை இல்லைனாலும், அதோட பெயர் இன்னும் இருக்குள்ள, அதை தான் சொல்லிருக்காங்க" என்றாள் அவள்.


"அதன் உருவம் கண்டறிந்து, வழி அதை காண்பாய்'ன்னு இருக்கு கடைசிய இருக்கு. அப்போ இங்க இருக்க பறவைகளின் சிலையில், அந்த பறவையின் சிலை இருக்கான்னு பாக்கலாம்" என்று தேட தொடங்கி, அதில் வெற்றியும் அடைந்தனர்.

அந்த சிலையை இருக்கும் இடத்தை விட்டு சற்று நகர்த்த, மீண்டும் கேட்டது ஒரு பெரும் சத்தம்.

இதுவரை இல்லாமல், புதியதாய் ஒரு வழி தோன்றியது. மேல் நோக்கி போகும் படிகள் அது.








இன்னும் ஒரு பகுதி.. அதாவது புதையல் கிடைக்கும் பகுதி. முடிந்த வரை, இன்று இரவுக்குள் தந்துவிடுவேன்.
அதன் பின்னர் ஒரு epilogue. நாளை அல்லது, அடுத்த வாரத்தில் தந்துவிடுவேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
குறிப்புக்கள் எல்லாம் அருமை, அதற்கான விளக்கங்களும் அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top