'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 2 அத்தியாயம் 3

#1
அலர் - 3

nea 3rd epi.jpg

அவிரனுடன் பேசிக்கொண்டிருந்த வளர்மதி, அப்போது தான் சரண் காரிலிருந்து இறங்குவதை காணவும் ஒரு நொடி அவன் வரவை எதிர்பாராதவராய் திகைத்து நின்றவர் பின் 'சரண்' என்று ஓடி சென்று அணைத்துக்கொண்டு “எப்..படிடா இருக்க..?” என்று தழுதழுக்க 'ஏன்டா இன்னும்..' என்று தொடங்கியவரிடம்,

"ப்ச் என்னக்கா, எனக்கு ஒன்னுமில்லை நான் நல்லா தான் இருக்கேன் நீயே பாரு" என்று அவரை தள்ளி நிறுத்தி தன்னை காண்பிக்க..

சரணின் தோற்றத்தை கண்டவற்றின் கண்களில் மெல்ல நீர் ததும்பி ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாது போக பெருங்கேவலாய் வெடித்தது.

அவரின் அழுகையில் அருகே வந்த கதிர் 'ம்மா என்ன பண்றீங்க நீங்க கண்ணை துடைங்க' என்றவாறு அன்னையை தாங்கவும் அவன் கரத்தில் இருந்த அவி 'பாட்டி' என்றழைக்க நிமிர்ந்து அவிரனை பார்த்தவரிடம் 'பாட்டி அழாத' என்று அவள் கண்ணீரை பிஞ்சு கரம் கொண்டு துடைத்திட முனைய,

இவற்றை கண்ட சரணுக்கு ஒரு புறம் தமக்கையின் கண்ணீர் இதயத்தை வாள் கொண்டு அறுத்தாலும் மறுபுறம் இதற்கு காரணமானவர்களை வெட்டி கூறு போடும் எண்ணம் எழுவதையும் தடுக்க முடியாமல் போனது.

இதற்காக தான், இந்நிலையை ஏற்படுத்தி அனைவரையும் வதைத்திட கூடாது என்று தானே அவன் ஒதுங்கி போனது. ஆனால் இவ்வாறு எத்தனை நாட்களை கடத்த, இன்னும் வருடங்கள் பல கடந்தாலும் அனைருக்கும் வலியே மிஞ்சும் என்பதை நன்கு உணர்ந்தே எதிர்கொள்ள துணிந்து விட்டான்.

அவிரன் எதிரில் அவரின் அழுகையை எதிர்பாராதவன் கண்டிப்பான குரலில் வளரிடம் “என்னக்கா இது வெளிலே வச்சி இவ்ளோ ஆர்பாட்டம்... முதல்ல கண்ணை துடை இல்ல நான் இப்படியே கிளம்புறேன்" என்றவன் அவியை கதிரிடமிருந்து வாங்கி கொண்டு 'அவிகண்ணா ஒண்ணுமில்லை இங்க பாருங்க' என்று வளரிடம் பதிந்திருந்த அவன் பார்வையை திருப்பி தன்னை பார்க்க வைத்தவன்..

நீங்க பெரிய பாய்தானே, சோ என்ன பண்றீங்க மாமாகூட போய் எல்லா திங்க்சையும் வீட்டுல அடுக்குவீங்கலாம் நான் பாட்டிகிட்ட பேசிட்டு வருவேனாம் என்றிட அவனும் "சரி சிட்டா" என்றான்.

உடனே கதிரிடம் தன் கரத்தில் இருந்த கார் சாவியை அளித்து காரில் இருக்கும் பைகளை எடுக்குமாறு கூறியவன் அடுத்து வெளியே நிற்கும் வாகனத்தில் இருந்து பொருட்களை எடுத்து ஒழுங்கு படுத்துமாறு கூற கதிர் அவிரனுடன் சென்றான்.

அவர்கள் சென்றதும் வளர்மதியை பார்க்க அவரின் கேவல் நின்றிருந்தாலும் மெல்ல விசும்பிகொண்டிருக்க, "சரி சரி நான் எங்கயும் ஓடிட மாட்டேன்.. உள்ள வா” என்றான்.

வளர்மதியோ மறுமொழி கூறவும் இயலாதவராய் அவனையே பார்த்துகொண்டிருக்க அவர் செவிகளிலோ நாதனின் வார்த்தைகளே ஒலித்து கொண்டிருந்தது.

“உன் தம்பி என்ன அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டானா... இது என்ன யாரையும் மதிக்காத அவனா முடிவேடுக்கிறது, அப்போ நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்” என்ற நாதன் அவன் செயலில் கொதித்து போனவராய் பேச,

வளர்மதி "நீங்க தான் அவனுக்கு.." என்று ஏதோ கூற வரவும்,

"அப்படி அவன் நினைக்கணும்டி எங்க அவனுக்கு அப்படி எந்த நினைப்பும் இருக்கிறதா தெரிலையே என்றவர் மீண்டும் வளர்மதி சரணுக்கு பரிந்து கொண்டு வர "இனி அவன் இந்த வீட்டு வாசப்படி மிதிக்க கூடாது ஒருவேளை உனக்கு தம்பி தான் முக்கியம்னா அவன் கூடவே கிளம்பு" என்றிட.., சரணும் அன்று சென்றவன் தான் அதன் பின் இப்போது தான் ஊருக்கு வருகிறான்.

ஆனால் நாதனின் வார்த்தைகளை பொருட்படுத்தாத எழில் அவரின் வார்த்தைகள் நம்மை கட்டுபடுத்தாது என்று அலரிடம் கூறி சரணுக்கு உடன் பிறப்பாய் தோள் கொடுத்து அரவணைத்து நின்றான். மகளை காண்பதற்காக சென்னை சென்ற நாதன் அங்கு சரண் இருப்பதை கண்டு அலரை முறைக்க,

எழிலோ "என் தம்பி என் வீட்டுக்கு வருவதை யார் கேட்பது" என்ற தோரணையில் அமர்ந்திருக்க, அலரோ அவனிடம் 'ஏண்டா நீயும் சரிக்கு சரி நிற்கிற...?' என்று கேட்க,

எழில் 'அப்போ உங்கப்பா பண்ணினது சரின்னு சொல்ரியாடி' என்று கடிய,

அவன் கூற்றின் உண்மை புரிந்தாலும் இருவரையும் ஓரிடத்தில் நிறுத்தி பிரச்னையை பெரிது படுத்துவதை தடுக்க நாதன் கிளம்பும் வரை எழிலையும் சரணையும் மாடியில் அடைத்து விடுவாள்.

இதுவும் எழில் மீது நாதன் கொண்ட வெறுப்பின் அளவை கூட்டியது. வீடு திரும்புபவர் வளர்மதியிடம் "நான் எது பண்ணினாலும் என்னை எதிர்த்து பண்ணனும்ன்னு கச்சை கட்டிட்டு திரியிறான்டி" என்று பொரிந்து தள்ள,

வளர்மதியோ 'யாரை சொல்றிங்க..?" என்று தெரியாதது போல் கேட்பவர் நாதன் வாயிலிருந்து எழில் பெயரை வரவழைத்து, "எனக்கென்ன தெரியும் உங்க தங்கச்சி பையன் அதிலும் உங்க வளர்ப்பு உங்களை மாதிரி தானே இருப்பான்" என்பார்.

வளர்மதிக்குமே தம்பியின் முடிவில் உடன்பாடு இல்லையென்றாலும் உடன் பிறப்பாயிற்றே அவ்வளவு எளிதில் பிரித்து நிறுத்தி விட கூடிய சொந்தமா என்ன..? அவர் அறியாமல் சரணுடன் ஒன்றிரண்டு முறை அலைபேசியில் பேசினாலும், அவனை நேரில் சந்திக்க உணர்வுகளை கட்டுபடுத்த இயலாதவராகி போனார்.

சரணின் கரத்தை அழுத்தமாய் பற்றிக்கொண்டு அவர் உள்ளே வரவும் அவன் மீண்டும் "அக்கா நான் எங்கயும் ஓடிபோயிட மாட்டேன் கையை விடு" என்றிட,

"ஓடிபோகமாட்ட, ஆனா இப்ப விட்டா திரும்ப எப்ப வருவ... நாங்க எல்லாம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்ட இல்லை.. என்றவரின் குரலில் இருந்த ஆதங்கத்தை நன்கு உணர்ந்தவன்,

"அப்படி எல்லாம் இல்லக்கா இனிமேல் அடிக்கடி வரேன்... மாமா எப்படி இருக்கார்..?" என்று கேட்க,

அவருக்கென்ன எப்பவும் போல தான் என்று கூறிய வளரின் அழுகை முழுதாக கட்டுபட்டிருக்க, சரணிடம் பேசிகொண்டிருந்தார்.

இதை கண்ட அலர் வளர்மதியிடம் “உனக்கு உன் தம்பி தான் முக்கியம் இல்லைம்மா, என்னை ஒரு வார்த்தை விசாரிக்கலை” என்று உரிமையாய் கோபிக்க,

அதை கேட்டு பதறியவர் ‘அப்படி இல்லைடா அமுலு’ என்று அவள் அருகே வர,

“என்னமா நீ..!! நான் சும்மா சொன்னேன்.. நீ மாமா கூட பேசிட்டிரு” என்றவள் அப்பா எங்கே என்று கேட்க,

'வெளியே போயிருக்காருடா அப்புறம் வரேன்னு சொன்னார்' எனவும்..,

சரிம்மா நான் போய் சமையலை பார்க்கிறேன் என்றவளிடம் "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நானே கொண்டு வந்துட்டேன் எல்லாரும் வந்து உட்காருங்க பரிமாறுறேன்" என்று வளர்மதி அலரை அழைக்க,

"இல்லைம்மா வேதாவுக்கு கொண்டு போகணும் நான் அப்புறம் சாப்பிடுறேன், நீ அவருக்கும் மாமாக்கும் கொடு" என்றவள் கதிர் கொண்டு வந்த பையில் இருந்து தேவையான பொருட்களை எடுத்துகொண்டு சமையலறையில் நுழைந்தாள்.

ஏற்கனவே மனதினுள் பட்டியலிட்டவாறு அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்தவள் வேதாவிர்க்கு பிடித்த வெஜிடபிள் ரைஸ், ஸ்பைசி பன்னீர் கிரேவி, கோபி மஞ்சூரியன் என்று சமைக்க துவங்கினாள். அவள் அருகே எழிலின் அரவத்தை உணர்ந்தவள் பாத்திரத்தில் இருந்து பார்வையை திருப்பாமல் அவனிடம் "சாப்பிடாம இங்க என்ன பண்றீங்க?" என்றவாறு திரும்ப,

அப்போது தான் அவன் கரத்தில் இருந்த தட்டை கவனித்தவள் ,என்ன என்பதாய் அவனை பார்க்க, அவன் கரமோ உணவுகவளத்துடன் அவள் இதழ்களை நெருங்கியது.

உடனே வாய் திறந்து அவன் அளித்த உணவை வாங்கி கொண்டவள் 'உனக்கு' என்றிட, அவளுக்கு ஊட்டிக்கொண்டே தானும் உண்டான்.

அலரை சாப்பிட அழைக்கவென அங்கு வந்த வளர்மதி, எழிலின் செயலை கண்டு புன்னகைத்தவாறே வெளியே சென்றார்.

அவரை நெருங்கிய சரண் “கிளம்புறேன்க்கா” என்றான். தம்பியை விட மனமில்லாமல் “என்னடா அதுக்குள்ள கிளம்புற இன்னும் கொஞ்ச நேரம் இரேன்” என்று அவனை தேக்க முற்ப்பட.. அவனோ திடமாய் இல்ல அப்புறம் வரேன் அண்ணா கிட்ட சொல்லிடுங்க என்று கதிரோடு கிளம்பி சென்றான்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் எழிலோடு சேர்ந்து வடை பாயாசத்துடன் வியாசினிக்கு மிகவும் பிடித்த பாசந்தியும் சேர்த்து சமைத்து முடித்தாள்... ஆம் அவளை தனியாய் சமைக்க அனுமதிக்காதவன் வளர் உதவிக்கு வருவதையும் மறுத்து அவளுக்கு உதவினான்.

சமையல் விரைவாக முடிய எழில் அனைத்தையும் ஹாட் பாக்கில் நிரப்பி வாழை இலையும் எடுத்து பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

கூடத்திற்கு வந்தவர்கள் அவிரனை தேட அவன் கதிருடன் சென்றிருப்பதாக வளர்மதி கூற, அவனுக்காக காத்திருக்க நேரமில்லை அவன் வந்தவுடன் சுடரின் வீட்டிற்கு அழைத்து வர சொல்லி எழிலுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினாள்.

***********************************************************************

அய்யா அயவந்திநாதா என்ற குரல் கேட்டு தன் அறையில் இருந்து கூடத்திற்கு விரைந்தார் நாதன். அங்கே தன்னை அழைத்த தன் அன்னையின் முன் முழுக்கை சட்டையை மடித்துவிட்டாரே “என்னம்மா” என்றார்.

'அலரும் ராசாவும் இந்நேரம் வந்திருப்பாங்களே, என்னை அங்க கூட்டிட்டு போய்யா' என்று தாயம்மாள் கேட்க,

நான் அவசர வேலையா கிளம்பிட்டு இருக்கேன் அவங்களே வருவாங்க.. அதுவரை உன்னால பொறுமையா இருக்க முடியாதாம்மா..?’ என்று அவரை கடிய,

‘குட்டிபையன் கண்ணுகுல்லையே நிற்கிறான்யா’ என்றிட,

'ஒருமுறை சொன்னா உனக்கு புரியாதம்மா, அவ்ளோ அவசரம்ன்னா உன் பேரனை வந்து கூட்டிட்டு போக சொல்லு' என்றார் எரிச்சலாக.

தாயம்மாளும் மகனின் குணம் அறிந்தவராக அப்பேச்சை விடுத்து 'சரி சாயந்திரம் வரும் போது ஒரு கட்டு சீவல் வாங்கிட்டு வா தீர்ந்துடுச்சி' எனவும்..

என்னம்மா இது சனிக்கிழமை தானே வாங்கிட்டு வந்தேன் அதுக்குள்ள தீத்துட்டீங்களா, சொன்னா கேக்குறதே இல்ல.. வெற்றிலையும் டீயும் உங்க வயிற்றை நிரப்பிடுது போல ஒழுங்கா சாப்பிடுறது கூட இல்லை என்று தாயம்மாளை கடிந்து கொண்டு வெளியே வந்தவரின் கைபேசி ஒலிக்க எடுத்து பார்த்தவர் வளரின் எண்ணை கண்டு ஆன் செய்து காதில் வைக்க ‘ஏங்க இன்னுமா கிளம்பலை அமுலு வந்ததும் உங்களைதான் விசாரிச்சா’ என்றார்.

'ஒஹ்' என்றவர் வளர்மதியிடம் 'அவ்வளவு அக்கறை இருந்தா என்னை தேடி வரவேண்டியது தானே, என்றார், மறுநொடி எல்லாம் அவனால தான்.., எப்படி என் பொண்ணு மனசை கெடுத்து வைச்சிருக்கான் பாரு’ என்று பொரிந்து உடனே அழைப்பை துண்டித்து விட்டார்.

ஆம் இன்று வரை அலரின் தன்னுடனான தாமரை இலை தண்ணீர் உறவிற்கு எழிலையே காரணமாக்கி அவனை வசைபாடுபவர்... வளரிடம் அவருக்கு உண்டான உறவில் மாற்றம் இருந்தாலும் அவரின் முன்கோபம் சிறிதும் குறையாமல், இன்று வரையிலுமே, தன் தவறுகளை முழுதாய் உணர்ந்தாரில்லை.

அன்று அலர் தன்னைவிட எழில் மேல் என்று கூறியதை இன்று வரை மறக்காது உள்ளுக்குள் மருகிகொண்டிருப்பவரின், கோபம் முழுதாய் வழிந்தோடுவது எழிலிடமே.

தன்னையே சுற்றி சுற்றி.. நானே உலகம்ன்னு என் வார்த்தையே வேதம்ன்னு வாழ்ந்து வந்த தன் பெண்ணை தன்னிடம் இருந்து எழில் பிரித்துவிட்டதாகவே நம்புபவர். மகனும் தன்னிடம் இருந்து தள்ளி நிற்பதையே விரும்ப, அவர் மனமோ இப்போதெல்லாம் மகளின் அக்கறையான பேச்சையும் அன்றைய அனுசரணையான செயல்களையும் எதிர்பார்த்து காத்திருக்க துவங்கியது.

ஆனால் காலசக்கர சுழற்சியில் எங்கனம் கடந்து சென்றதை மீட்டெடுக்க, ஆனால் அவர் மனம் அதை ஏற்றுகொள்ள முடியாமல் இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையில் சிக்கி தவித்தது.

அலரோ மனதின் கசடு முழுதாக அகலாத நிலையில் வீடு, வேலை, குழந்தை என்று ஓடி கொண்டிருப்பவள் அவரிடம் பேசுவதே அரிதாகிவிட.. இதில் எங்கனம் அவர் மனதின் ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை தீர்க்க.. அவள் அனைத்தையும் நேர்படுத்த முற்பட்டாலும் தந்தை கணவன் மீது வீசும் தொடர் கனல் பார்வைகள் சுடு சொற்கள் பல நேரங்கள் அவளை அவரிடமிருந்து எட்ட நிறுத்திவிடும்.

அவரை மீண்டும் ஏதேனும் கேட்டு காயபடுத்திவிட கூடாது என்றே அத்தகைய நேரங்களில் மௌனத்தை கவசமாய் கொண்டு அங்கிருந்து அகன்றுவிடுவாள்.

இன்று மகள் பேரனுடன் வருவது தெரிந்தாலும் அவர்களை வரவேற்க செல்லாமல், என் மகளுக்கு நான் முக்கியம் என்றால் என்னை தேடி வரட்டும் என்று வீம்பாய் ஒரு வேலையை உருவாகிக்கொண்டு கிளம்பி செல்கிறார்.

*************************************************


வளர்மதியிடம் விடைபெற்ற அலரெழில் சுடரின் வீடு நோக்கி சென்றனர். வழியில் பூவும் பழமும் வாங்க வேண்டும் என்று அலர் கூற, அதை காதில் வாங்காதவனோ அருகே இருந்த மருந்தகத்திற்கு சென்று கையோடு வாங்கி வந்த களிம்பை அவள் வலக்கரம் பற்றி முழங்கையில் சூடு கண்டு சிவந்திருந்த இடத்தில் பூசியவாறு, “இந்நேரம் ஹோட்டல்ல வாங்கியிருந்தா எல்லாரும் சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க... உன்னை யாருடி சமைக்க சொன்னா..? இப்போ பாரு சமைக்கிறேன்னு கையை சுட்டுகிட்ட” என்று அவள் ‘ஸ்ஸ்ஸ்’ என் முகம் வலியில் சுனங்கியதையும் அலட்சியபடுத்தி அவளிடம் பொரிந்தவன் தொடர்ந்து,

“என்னவோ இவ சமையலுக்காக தான் எல்லாரும் காத்திருக்க மாதிரி, அவ்ளோ அலட்சியம்” என்று வடை போடும் மும்முரத்தில் அருகே இருந்த சூடான குக்கரில் கையை சுட்டுகொண்டதற்காக அவளை கடிய,

இருக்கும் இடம் கருதி அவன் வசவுகளை இதழ் கடித்து தாங்கி நின்றவள், அவன் மீண்டும் வண்டியை எடுத்ததும் ஏறி அமர்ந்து அவன் தோள் பற்றிக்கொண்டு அமைதியாய் வரவும், எதை கூறினாலும் தன்னிடம் வாதிடுபவளின் இன்றைய அமைதியில் வியந்தவன் கண்ணாடியினூடே அவளிடம் “என்னடி வாயே திறக்கமாட்டேன்கிற” என்றான்.

அலரோ மௌனமாய், அழுத்தமாய் மூடிய இதழ்கள் துடிக்க அமர்ந்திருக்க அவள் நிலை புரிந்து வண்டியை ஓரங்கட்ட, இறங்கியவளின் கண்கள் கலங்கியிருப்பதை கண்டு

“ஏய், என்னடி எதுக்கு கண்கலங்குது..?” என்று கேட்க,

அவளோ கரத்தில் இருந்த பையை அழுந்த பற்றியவாறு தன் உணர்வுகளை கட்டுபடுத்தி அவனை பார்க்க.. அவளின் பார்வையே அலரின் எண்ண அலைகளை அவனுக்கு கடத்த,

அப்போது தான் அவள் கண்ணீரின் காரணம் உணர்ந்து, ‘ப்ச்’ என்று ஒற்றை கரத்தால் நெற்றிபொட்டை அழுத்தியவனுக்கு தான் பேசியது அதிகமே என்று பட்டது.

இருவரும் சாலை ஓரத்தில் இருப்பது மற்றவரின் கருத்தை கவரும் என்பதால் அருகே இருந்த மரநிழலுக்கு அழைத்து சென்றான். அவள் காயத்தால் சினம் கொண்டு பேசினானே அன்றி அவனுமே அறிவான் கடந்த மூன்று வருடங்களாக அலருக்கும் வேதாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பந்தத்தை.

முதல் நாள் தான் சுடரின் வீட்டிற்கு சென்ற போது கூட வேதவியசினியின் முதல் கேள்வி “மாமி வரலையா..?” என்பதே. அதுமட்டுமா கிளம்பும்போது மாமியை சிக்கிரம் கூட்டிட்டு வாங்க என்றவளின் விழிகளே கலங்கி அலரின் வரவிற்கான அவள் ஏக்கத்தை பறை சாற்றியது.

இன்று அலரின் கண்ணீரை கண்டவனின் நினைவு அன்றைய நாட்களின் நினைவுகள் மனதில் நிழலாடியது.

அவிரன் பிறந்த ஆறு மாதத்திற்கு அலர் வளர்மதியின் கவனிப்பில் அவர்கள் வீட்டிலேயே இருந்தவள் அதன் பின் சென்னை சென்று சேர... முதல் இரு வாரங்களுக்கு எழில் விடுப்பு எடுத்து அவளுடன் இருந்தாலும், அவனும் வேலைக்கு செல்ல அவிரனை கவனிக்கும் முழு பொறுப்பும் அலருக்கு என்றானது.

ஆயினும் முதல் குழந்தை என்பதால் அவர்களை தனியே விடாமல் வளர்மதியும் நீலாவும் மாற்றி மாற்றி வந்து அவர்களை பார்த்துகொண்டனர். சுடர்கொடியும் தன் பங்கிற்கு வார இறுதிகளில் அலருக்கு துணை இருந்தாலும் அவர்களின் சூழல் முழுநேரமும் அங்கிருக்க முடியாமல் போக, பல நேரங்களில் மிகவும் திண்டாடி போவாள்.

தாயிடம் இருந்த வரை குழந்தையை கவனிப்பதில் பெரிதாய் எவ்வித சிக்கலும் சந்திக்காதவளுக்கு இங்கு வந்த பின்னர் அவிரனுக்கு சாப்பாடு கொடுப்பதும் தூங்க வைப்பதுமே மலையை புரட்டி போடும் செயலாகி போக, இதில் அவன் உடல் சுகம் இல்லாது போகும் நேரங்களில் துணைக்கு யாரும் இன்றி கடுமையான மனச்சோர்விர்க்கு ஆளானாள். அதிலும் பல நேரங்களில் அவன் தொடர் அழுகை எதனால் என்று கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவரை நாடி செல்வர்.

இந்நிலையில் ஒரு வயது முடிய ஓரிரு மாதங்களே இருக்க அவிரனுக்கு கடுமையான நீர் போக்கு ஏற்பட நீலா கூறிய எவ்வித கைவைத்தியமும் பலன் தராத நிலையில் இருவரும் அலமலந்து போயினர். இரவோடு இரவாக அவிரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவனை பரிசோதித்த மருத்துவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூற எவ்வித முன்னேற்பாடும் இன்றி வந்தவர்களுக்கு மருத்துவரின் வார்த்தை அதிர்வை உண்டாகி சில நொடிகள் தத்தளித்து போயினர்.

முதல் நாள் சுடருக்கு பேசிய அலர் அவிரனுக்கு இருமுறை வயிற்று போக்கு ஏற்பட்டதை கூறவும், இரவு சுடர் அவளுக்கு அழைத்து அவிரனின் நலன் விசாரிக்க மருத்துவமனையில் இருப்பதையும் இடைவிடாத நீர்போக்கு குறித்து கூறியவள் ஒரு கட்டத்தில் மகனின் நிலையை கண்கொண்டு காண முடியாமல் கதறிவிட்டாள்,.

அலரின் நிலை உணர்ந்த சுடர் மறுநாளே பாலனுடன் சென்னை விரைய... விடயம் கேள்விப்பட்ட அனைவரும் இருப்பு கொள்ளமுடியாமல் உடனடியாக சென்னை விரைந்தனர்.

எங்கும் எதிலும் எழிலிடம் குறையை கண்டு பிடிக்கும் நாதனோ தங்களிடம் இருந்த வரை குழந்தை நன்றாக இருந்தது என்றும், இருவரின் பொறுப்பற்ற தனமே பிள்ளையை இந்நிலைக்கு இட்டு சென்றுள்ளது என்று மருத்துவமனை என்றும் பாராமல் இருவரையும் காய்ச்சி கொண்டிருந்தார்.

நாதனின் அர்த்தமற்ற கோபத்தை கண்ட எழில் தன்னை கட்டுபடுத்தி கொண்டு நிற்க.. நீலா தான் நாதனை தடுத்து மருத்துவமனையில் வைத்து என்ன பேசணும் என்ற கூறு இல்லையா என்று கடிந்து, குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம் என்று அவரை அடக்கினார்.

அவிரனுக்கு கொடுத்த தாய் பாலில் தொடங்கி பழச்சாறு வரை எதுவுமே அவன் வயிற்றில் தங்காமல் தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்படவும் அனைவருமே உடைந்து போயினர்.

அலரின் கண்களில் இருந்த நீர் வடியாது வழிய மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களும் அவர்கள் வழிபடாத தெய்வம் இல்லை. உணவு உறக்கம் இன்றி அலர் அவிரன் அருகிலேயே அவனை அரவணைத்து கிடக்க வெளியில் எழில் குழந்தைக்கு தேவையான பொருட்களையும் மருந்துகளையும் வாங்கி வருபவன் ஜீவனற்ற விழிகளுடன் நித்திரை இன்றி போனான்.

ஹாய் ஹனிஸ் ...!!!

இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே!!!' பாகம் 2 மூன்றாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன். உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement