நித்யா சிவா வின் அன்புடன் அப்பாவிற்கு!!!

mallika

Administratorஅன்புடன் அப்பா…!நெருஞ்சி புதருனுள் - நீ

நின்று கொண்டு…

குறிஞ்சிப்பூக்களை எனக்கு

காட்டியவன்…


உலகில் உள்ள அனைத்து - உயர்ந்த

நூல்களிலும் தேடுகின்றேன்… .

உனக்கு நிகரான பெயரொன்று

உன்னதமாய் உண்டா? என…

எதுவும் கிடைக்கவில்லை…

இன்னும் சொன்னால் - எதுவும்

பிடிக்கவில்லை…


என் சிறுமூளைக்குள்

சட்டென்று மின்னல் கீற்றாய்

"மெழுகுவர்த்தி" என - ஒரு

சிறியவார்த்தை தோன்றுகின்றது…

சாதாரணமாக இருக்கும்

இப்பொருளானது - எரிய

ஆரம்பித்தால் தன்னை அழிக்கும் வரை

ஓயாது… !

இதை விட தரமான ஒப்பீடு

அப்பாக்களிற்கு பொருந்தி விடுமா?

என்ன… .?


இவ்வளவு கனமான வார்த்தை

அருகிலிருக்க…

நான் தான் உன்னதம் - என்னும்

வார்த்தை உயரத்தில் இருக்கும் - என

நினைத்து விட்டேன்…

இதைப்போலவே அப்பாவின் அருமை

அருகிலிருந்தால் புரிவதில்லை பலருக்கு…


என் கால் அழுக்கு - உன் தோளில்

படும் என தெரிந்தும்…

உன் தோளில் தூக்கி வைத்து - என்னை

கோயிலுக்குள் தூக்கி வைத்திருக்கும்

நடமாடும் கடவுள் நீ…


காவியங்களால் கூட - உன்னை

பாடி நிறைவு செய்யமுடியாத

தலைப்பு நீ…


உன் உயிரில் இருந்து

உருவான என்னை - என் தாய்

பிரசவிக்க - நீ இருவரையும்

ஒன்றாய் பிரசவித்தவன்…

எல்லாமாய் தாங்கிய உனக்காய்

இதுவரை எதுவும் செய்ததில்லை…

ஆயினும் எனக்காய் இன்னும் - நீ

எரிவதேன்… ?


உன் முரட்டு கோபங்களும், பிடிவாதங்களும்

என்குள்ளும் அப்படியே பிரதியடிக்கப்பட்டதால்…

இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்…

ஆயினும்

அடுத்த நொடி உனக்குள்

அடங்கித்தானே போவேன்…


எத்தனை கட்டுப்பாடுகள்…

எத்தனை தடைகள்…

எத்தனை அறிவுரைகள்…

எல்லாவற்றையும் உடைத்து வெளியேற துடிக்கும் என் மனம் - மறு நொடி

தண்ணீர் பட்ட அணலாகும்…!


அப்பா… !

நீ என்னை பந்தங்கள் எனும்

தளைகளுக்குள் - கட்டுண்டு

போகும் விந்தையை ஆழமாக - ஏற்றி எனக்குள்ளே அது அணுக்களிலும்

ஊறிப்போய் கிடப்பதனால்

என் கோபம் தணித்து மற்றவரிடம்

பணிந்து நிற்கின்றேன்…

தவறாயினும் தணிந்து நிற்கின்றேன்…

இருந்தாலும் வலிகள் இல்லை எனின்

அதற்கு பெயர் வாழ்க்கை என்றாகாதே… !

அதனால் வரும் வலிகளை ஏற்கின்றேன்…

அதை கடந்து போவேன் - என்ற

நம்பிக்கையில்…


எனக்கு பிடித்த எதையும்

உனக்கு பிடிக்காது… .

உனக்கு பிடித்த அனைத்தையும்

எனக்குள்ளே வலிந்து நுழைப்பதில் உனக்கு நிகர் நீ தான்…

அதிலும் அத்தனை பெருமை…

அத்தனை திமிர்…

உன்காய் உயிரை என்ன?

இந்த உலகையே கொழுத்துவேன்…

இதை ஏற்க மாட்டேனா…?

நீ வலிந்து எனக்குள்ளே ஏதோ

ஒன்றை திணிக்கின்றாய் எனில் - அது

எனக்கு அத்தனை பொருத்தமானதாகவே

இருக்கும்…

என்றாலும் என் பிடிவாதங்கள்

அப்படியே தானிருக்கும்…


என் அப்பாவின்

அன்பு ஆதிக்கத்தை எல்லாம்

என்னை அறிந்தவர்களிடம்

சொல்லும்போது

ஆணாதிக்கமா? என

கேட்டவர்கள் என்அன்புக்குரியவர்கள்

என்றாலும் என்னை

புரிந்து கொள்ளாத

என் நண்பர்களே… !


அலைகடலினுள்ளும்

கண்மூடி நடந்து போவேன் - உன் பார்வை

என்னை தொடருமெனில்…

அத்தனை ஆளுமை…

அத்தனை அனுசரிப்பு…

அத்தனை ஆணவம்…

அத்தனை கோபம்…

அத்தனை பிடிவாதம்…

எல்லாம் உனைப்போலவே

எனக்கும் உண்டு

ஏனென்றால் நான் - என்

அப்பாவின் மகள்.


கனவு காண்பதற்கு

கற்றுக்கொடுத்தவன் - அந்த

கனவுகள் கலைந்தால்

மீண்டுவர மார்க்கம்

போதித்தவன்…

உன்னை சுற்றியுள்ளவர்கள்

மகிழ்ந்திருக்கின்றார்கள் - எனில்

அதில் நீ நிச்சயமாக நிறைந்திருப்பாய்…


நான் ஒன்றும் படிப்பில்

கெட்டிக்காரியில்லை தான்…

எப்போதும் கடைசி பெஞ்சில்

இருப்பதற்கு சண்டை போடும்

சாதாரண மாணவி…

அதில் உனக்கு வருத்தம்…

அதற்காக நீ ஒன்றும் சும்மா

இருப்பதில்லை…

எத்தனையடிகள்…

வாங்கியிப்பேன்…

அத்தனையையும் அசால்டாக

வாங்கிக்கொண்டு அழுதபடியே

அம்மாவிடம் சாப்பாட்டை வாங்கி

உண்ணும் போது உங்களுடன் - சேர்ந்து

என் கூடப்பிறந்துகள்

பார்வையை கூட என்றும்

நிமிர்ந்து பார்த்ததில்லை… இவ

"அடிவாங்கியும் அடங்கல்ல" என்ற

மைண்வாய்ஸ்சில் நீங்கள்

நினைப்பது எனக்கு தெரிந்ததே… !


படிப்பையே பிடிக்காத நான்

உன் ஒற்றை ஆசைக்காய்

வாங்கிய இரண்டு பட்டச்சான்றிதழ்கள்..

அவை அம்மாவின் புடவைக்குள்

சுற்றப்பட்டு மரஅலமாரிக்குள்

புகுத்தப்பட்டு இன்றோடு

ஐந்து வருடங்களாயிற்று…

இனி வரப்போகும் இரண்டு சான்றிதழ்களின் இருப்பிடமும்

அதுவாக தானிருக்கும்...

இது ஒன்று தான் உனக்காக என்னால்

செய்ய முடிந்தது.


இப்போதெல்லாம் நான்

உன்னிடம் அடி வாங்குவதில்லை - ஏன்?

திட்டு கூட இல்லை…

நான் எங்கே விழுந்தாலும் - அதே

இடத்தில் இருந்து அதே போல

நான் எழுந்துவருவேன் - என்று

உங்களுக்கு தெரியும்… !


நான்

உன்னைப்போல...

மனிதர்களை படிக்க வேண்டும்...

வாழ்க்கையை ரசிக்க வேண்டும்...

காதலை உணர வேண்டும்…

கர்வமாய் இருக்க வேண்டும்…

தனிமையை தவமாக்க வேண்டும்…

அழுதாலும் சிரிக்க வேண்டும்…

பக்தனாய் இருக்க வேண்டும்...

பண்புடன் இருக்க வேண்டும்…

சொந்தங்கள் எல்லாம் சூழ வேண்டும்…

சொப்பனங்கள் காண வேண்டும்…

சினங்கொள்ள வேண்டும்…

ரெளத்திரம் பழக வேண்டும்…

ஒழுக்கம் தவறாமை வேண்டும்…

பொறுமையாய் இருக்க வேண்டும்…

என் மனம் பேதலிக்க வேண்டும்…

அதிலிருந்து மீண்டு பறக்க வேண்டும்…

காதலொருவனை கைப்பிடிக்க வேண்டும்…

உன் இயல்புகளுடன் என் மகன்

வளர வேண்டும்…

என் மகனுக்கே மறுபடி நான்

மகளாய் பிறக்க வேண்டும்…

மறுபடி நாம் மீள்சுழற்சியாய்- நம்

ஜென்ம பரிந்தயம் தொடர வேண்டும்…!


என் வைராக்கியம் உடைத்து

ஒருநாள் உன் காலருகில் அமர்ந்து…

மடி மீது தலை சாய்த்து…

கதறி அழ வேண்டும்… அப்போது

என் தவறுகள் என்ன? என்று

கேட்காமலே வழங்கப்படும்

எனக்கு பாவமன்னிப்பு… அதற்கு

நான் வைராக்கியம் தளர்த்த

வேண்டும்.

அதிலும் நான் உன் மகளே… !


எனக்குள் பெருமை எனும் - ஒன்று

இருக்க வேண்டுமானால்

உன்னைத்தவிர வேறேதும் வேண்டாம்…!நித்யா சிவா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement