தூரம் போகாதே என் மழை மேகமே !! - 84

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer




“ஓ. அப்படி பேசியதும் விஸ்வாவா? நம் திருமணம் முன்பாவது, நீ அவனை தவிர வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் செய்ய வேண்டுமென்று அப்படி பேசினான் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று அந்த hospital -ல் உன்னிடம் தப்பாக நடக்க முயன்றானே அன்றே அவனை விட்டது தப்பாகி போனது. அன்று என்னுடைய ரத்தமெல்லாம் கொதித்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் அவன் அப்படி நடந்துக் கொண்டிருப்பான். அதுவும் என் மனைவியென்றான பிறகும் எப்படி அவனுக்கு அப்படியொரு இச்சை. உன் மீது காதல் என்பதெல்லாம் பொய். இச்சை என்றுதான் சொல்ல வேண்டும். அவனை நான் கொல்லாமல் விட்டதே அதிகம்.” என்று கை முஷ்டி இறுக பற்களை நரனரவென்று கடித்தான்.


“விடுங்க அர்ஜூன். இதற்காக இப்போது ஏன் கோப படுறீங்க. என் உடலில் பலம் இருந்திருந்தால் நானே அன்று அவனை அடித்து தள்ளியிருப்பேன். ஆனால் அப்போது இருந்த என் உடல் நிலையில் இறுக பற்றிய அவன் கையிலிருந்து விலக முடியாமல் பயந்தே போனேன். நல்ல வேளை நீங்க சரியான நேரத்துக்கு வந்து என்னை காப்பாத்திட்டீங்க. “ என்று சலுகையாக அவனது மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.


“ஆமாம் இப்போது இப்படி பேசு. அன்று என்ன செய்தாய்.? “ என்று அவளை அணைத்திருந்த போதும் குறைபட்டவனாக அவளை கேட்டான்.


“என்ன செய்தேன். என் அர்ஜூனின் மார்பில் இதோ இதே போல்தான் சாய்ந்துக் கொண்டேன்" என்று சிரித்தாள்.


“அது சரி. இதை மறக்கவில்லைதான் " என்று புன்னகைத்த போதும் , " ஆனால் உடனே அவனுக்கு அடிப்பட்டு கீழே விழுந்துவிட்டான் என்று விஸ்வாவிடம் ஓடுகிறாய். அவன் மீது உனக்கும் காதல் இருந்திருக்குமோ என்று எனக்கு அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லாமல் அந்த தீவின் அருவிக்கருகில் என்னிடம் கதை அளந்தாய் என்று எண்ணினேன். அக்கா சொன்னாங்க என்று உன் மனம் புரியாமல் திருமணம் செய்துக் கொண்டுவிட்டேனே என்று எனக்கு என் மீதே கோபம் வந்தது. நீ உன் மனதில் இருப்பதை என்னிடம் தெளிவாக இன்று போல இதுவரை என்றுமே சொன்னதில்லையே. சொல்லியிருந்தால் எனக்கு வேறெதுவும் தோன்றியிராது" என்று மனம் நோக அவளை விடுத்து நடந்து சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டு தரையை பார்த்த வண்ணம் அமர்ந்தான்.


அவன் முகம் வாடி செல்வதை பார்த்த ஆதிரை அவன் அருகில் சென்று தரையில் முட்டி போட்டு அமர்ந்து அவன் மடியில் தலையினை வைத்து , “ அர்ஜூன் எப்படி நான் சொல்ல. எனக்கு உங்களை பிடித்திருந்த போதும் , என்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கவில்லை என்று நீங்க சொன்னதை கேட்ட பிறகும் எப்படி வெட்கமின்றி , நான் உங்களை தான் விரும்புகிறேன். உங்களை பிரிந்து என்னால் வாழ முடியாது என்று எப்படி சொல்வது. அன்று எனக்கு என் சுயமரியாதை பெரியது என்று தோன்றியது. அதனோடு நான் ஒரு மருத்துவர். என் எதிரியே என்ற போதும் ஒருவர் வலிக்க கிடக்கும் போது மனம் இளகி என்ன ஆனது என்று பார்க்க தோன்றாதா? அதுவும் விஸ்வாவை எனக்கு கிட்டதட்ட 6 வருடம் தெரியும். என்னிடம் நடித்திருந்தாலும் என்னுடைய கஷ்ட காலங்களில் என்னுடன் இருந்த ஒரே தோழன் அவன் விழுந்து கிடக்க எனக்கு துன்பம் விளைவிக்க வந்தவன் என்றாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “ என்று அன்றைய அவளது நிலைக்கான விளக்கம் தந்தாள்.


கண்கள் பளிச்சிட "ஆதிரை.. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்திருக்கும் . இப்படி தூய்மையான உன் மனம் புரிந்துக் கொள்ளாமல், தாத்தாவுடன் நீ கடற்கரை சென்றதை அந்த நர்ஸ் சொன்ன வார்த்தையை நம்பி தவறாக பேசிவிட்டேனே. உன் கையில் காயம் ஏற்பட காரணமாகியும் போனேன். சாரி ஆதிரை.” என்று மற்றொருமுறை மன்னிப்பு கேட்டு ஆதிரையின் கையினை உயர்த்தி காயம் பட்ட இடத்தில் தெரிந்த தழும்பின் மீது இதமாக இதழ்பதித்தான்.


“அர்ஜூன், இதற்காக வருந்த வேண்டியது இல்லை. என் மீது இருந்த அதீத அன்பில் என்னை இழந்துவிட கூடுமோ என்ற வருத்ததிலே நீங்க அப்படி நடந்திருக்க கூடுமென்று என்னால் இன்று புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அன்று நான் அப்படி எண்ணவில்லை. மாறாக என்னை பிடிக்காமலே என்னுடையை எந்த செயலுக்கும் குறை காண்கிறீர்கள் என்று எண்ணினேன். அதனாலே கடமை முடிந்ததும் உங்களை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறேன். என்று சொன்னேன். அப்படி சொல்வதும் எனக்கு எளிதாக இல்லை. பிரிந்து சென்று என்ன செய்வது ? செத்துதான் போயிருப்பேன் என்று இன்று தோன்றுகிறது" என்று அவனது கால்களை இறுக பற்றிக் கொண்டாள்.


“என் கண்மணி. எதற்கு உன்னை இப்படி வருத்திக் கொண்டாய். நீ பிரிந்து போகிறேன் என்றால் உன்னை போ என்று சும்மா விட்டுவிடுவேன் என்றா எண்ணினாய். உன் இடைக்கும் என் கைக்கும் இடையில் இடைவெளியில்லாமல் செய்திருப்பேன். எப்படி என் கைகளிலிருந்து நீ பிரிந்து போவாயாம்" என்று அவள் முகவாயை உயர்த்தி கேட்டான் அர்ஜூன்.


“நிஜமாகவா? “ என்று கருவிழிகளை பெரிதாக்கி கேட்டாள்.


இதமாக அவள் கண்கள் மீது இதழ்பதித்த அர்ஜூன், “ சத்தியமாக, அன்று உன் மீது கோபமாக பேசிய போதும், அந்த கோபம் எல்லாம் என் மீதே எனக்கு இருந்த கோபங்கள் என்று எனக்கு தோன்றுகிறது. முதல் முறை நீ என்னை பிரிந்து போவதாக சொன்னாய் பார். அப்போது என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதிர்ந்து திரும்பி உன் முகம் பார்த்தால் உன் பளிங்கு முகமும் அதையே சொல்கிறது. உன் வாய் பிரிந்துவிடுகிறேன் என்றாலும் உன் உடலின் ஒவ்வொரு அணுவும் அவனை பிரிந்து விடாதே என்று சொல்லுவது உன் விழி நீரில் அறிந்துக் கொண்டேன்.


அதனாலே உன் மனம் வருத்ததிலிருந்து இயல்பு நிலைக்கு மாறும் வரை காத்திருந்தேன். அதனாலே உன் அறை பக்கம் ஒரு வாரமாக வரவே இல்லை. நான் எதிர்பார்த்தபடி உன் முகத்தில் முன்பிருந்த வருத்தமில்லை. மாறாக புதுமலர் போல பிரகாஷமாக இருந்தாய். அதனோடு இன்னும் ஒருவருக்கொருவர் நெருங்க வசதியாக என் நண்பர்கள் லண்டனிலிருந்து வந்து சேர்ந்தனர். அதனை பயன் படுத்தி உன்னுடன் முதலில் நல்ல நண்பனாக முயற்சி செய்ய வேண்டுமென்று எண்ணினேன். அது ஓரளவு பலனும் தந்தது. ஆனால் அந்த சேலையில் உன்னை கண்ட போது மதுக் கொண்ட பூனையாக நான் மாறி போனேன். உன்னுள்ளும் அதே தாக்கம் தான் என்று உன் விழியினை பார்த்ததுமே தெரிந்தது. உன் செம்மையுற்ற கன்னம் எங்கே என் முத்தம் என்று என் இதழ்களிடம் கேட்பது போல் தோன்றியது. அன்று டாக்டர் சொன்னதையும் மறந்து எங்கு எல்லை மீறிவிடுவேனோ என்று அச்சம் வந்துவிட்டது. அவசரமாக நினைவு வந்து பால்கனி போய் வெளி காற்றை சுவாசிக்க முயன்றேன். ஆனால் உனக்கும் மனம் நிலைபட நான் அருகில் நின்றிருந்தால் சரியாகாது என்று நான் திரும்பி பார்த்த போது பார்த்த உன் பார்வையில் புரிந்துக் கொண்டேன். அந்த பார்வையில் எங்கு உன்னை மீண்டும் அணைத்துவிடுவேனோ என்று உடனே விழுந்து அடித்துக் கொண்டு அறையை விட்டு ஓடிச் சென்றுவிட்டேன்" என்று பரிதாபமாக முகம் வைத்துக் கொண்டு சொல்லி முடித்தான்.


ஆதிரைக்கும் அர்ஜூன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அன்று நடந்த நிகழ்வின் நினைவலைகள் தோன்றி அவளை செம்மையுற செய்தது. முகம் மறைக்கும் விதமாக அர்ஜூனின் மடியிலே மேலும் முகம் புதைத்தாள்.


அவள் செயல் காரணம் புரிந்த போதும் ஆதிரையின் தலையை லேசாக வருடிய வண்ணம் மேலும் பேசினான். “ அதன் பிறகு கடற்கரைக்குச் சென்று வெகு நேரம் நடந்து களைத்த பின் மீண்டும் உன் அறைக்கு வந்தேன். வந்து பார்த்தால் இரவு உடைக்கு மாறி சுருண்டு படுத்திருக்கிறாய். நீயும் வெகு நேரம் புரண்டு பின் தூங்கி இருப்பாய் போல உன் நெற்றி சுருக்கம் இன்னமும் கலையாமல் படுத்திருந்தாய். உனக்கு போர்வையை போர்த்திவிட்டு என்னை வெகுவாக கட்டுபடுத்திக் கொண்டு வந்து சோபாவில் வந்து படுத்துக் கொண்டேன்.” என்றான் அர்ஜூன்.


அவன் அருகில் எழுந்து வந்து கட்டிலில் அமர்ந்த ஆதிரை , “ஆனால் அர்ஜூன் நீங்க என்னிடம் டாக்டர் சொன்னதை சொல்லியிருக்கலாமே. என்னை விட்டு நெருங்கிய பின் ஏன் விலகினீர்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதனாலே அன்று வெகு நேரம் தூங்காமல் புரண்டேன். இருந்தும் காலையில் விடிந்ததும் நீங்க என் நெற்றியில் இதழ் பதித்தே நினைவாக வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அப்படி என் மனம் தவித்துக் கொண்டிருக்க காலையில் உங்களையும் என் அறையில் பார்த்ததும் எனக்கு வெட்கம் வந்துவிட்டது.ஆனால் என்னை நானே கட்டுபடுத்திக் கொண்டேன். என்னை விட்டு விலகி போக நினைப்பதால்தானே என்னை விலக்கியே வைத்திருக்கிறீர்கள் என்று டாக்டர் சொன்ன காரணம் தெரியாததால் எண்ணிக் கொண்டேன்.


நானும் இனி உங்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்று எண்ணியே அந்த காரில் கந்தனிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருந்திருக்கவில்லை என்று உணர்த்திட அப்படி சொன்னேன். ஆனால் அதற்கும் நீங்க கோபமுற்றது எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. அதன் காரணம் அன்று புரியாமல் கொஞ்சம் குழம்பினேன். இப்போது அது ஏன் என்று தெளிவாக புரிகிறது" என்றாள்.


“ மக்கு. நீ டாக்டர்தானே .. அதனோடு தலைமை டாக்டர் என்னிடம் சொன்னதை உன்னிடமும் சொல்லியிருப்பார் என்று எண்ணினேனே. அதனோடு உன்னுடையை medical reports பார்த்தால் உனக்கே தெரிந்திருக்குமே. இது குறித்து நானே எப்படி உன்னிடம் கேட்பது. பொறுமையுடன் உன் உடல் முழுதும் நலன் பெரும்வரை காத்திருப்பதுதானே நல்ல ஆண்மகனின் செயலாக இருக்கும். அதை விடுத்து உன் உடல் நலமுடன் இருக்கிறதா? வா கணவன் மனைவியாக வாழலாம் என்றா கேட்க சொல்கிறாய்? ஆனால் உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கிறது என்று எனக்கு இன்று வரை தெரியவில்லையே. என்னிடம் அப்போதே கேட்டிருக்கலாமே. இதற்காக உன்னையே இப்படி வருத்திக் கொண்டாயாக்கும்? “ என்று அவள்புரமாக திரும்பி ஆதிரையின் கன்னத்தில் இதமாக கில்லினான்.


“ஸ்.. ஆ.. " என்று பொய்யாக வலிப்பதுப்போல் நடித்த வண்ணம் கன்னத்தை தடவினள் ஆதிரை. பின் "அது அர்ஜூன் அப்படி எனக்கு உண்மையில் உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. என்னை பரிசோதிக்கும்போது நான் பார்த்த reports- ல் எந்த பாதிப்பும் இல்லை. இடையில் தலைமை டாக்டர் பார்ப்பதற்கு முன்பு அந்த விஸ்வா என்னுடைய medical reports -ஐ எல்லாம் மாற்றி வைத்திருக்கிறான். இதனை என்னை கடத்தி வைத்திருந்த போதுதான் என்னிடம் சொன்னான். எனக்கு ஏதேனும் உடலில் பிரட்சனை தெரிந்திருந்தால்தானே நான் reports எடுத்து மீண்டும் பார்த்திருக்க தோன்றும். இந்த காரணம் புரியாமல் என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை அதனால்தான் தவிக்கிறீர்கள் என்று எண்ணினேன். “ என்று தலை தாழ்த்தினாள்.


அதனை கேட்டதும் அதிர்ந்த அர்ஜூன் "என்ன? இதுவும் அவனது வேலையா? விஸ்வாவை பெரிய பிரட்சனையாக எண்ணாமல் அலட்சயமாக விட்டது எவ்வளவு தவறு. யோசித்து எவ்வளவு பெரிய தந்திரம் எல்லாம் செய்திருக்கிறான்.” என்று ஒரு நொடி எழுந்து அமர்ந்து குரூரமாக எங்கோ பார்த்த வண்ணம் சொன்னான் .


“அ.. அது பரவாயில்லை விடுங்க அர்ஜூன். எதனாலோ அவனுக்கு என் மீது ஈர்ப்பு . அவனை என் வாழ்வில் நான் இனி பார்க்காமல் இருந்தால் அதுவே போதும். இனி தனியே எங்கு செல்லவும் பயம் வரும் அளவு கடத்திக் கொண்டு போய் என்று பயமுறுத்திவிட்டான்" என்று அர்ஜூனின் அருகில் இன்னும் ஒட்டி அமர்ந்துக் கொண்டாள் ஆதிரை.


ஆதிரையின் செயலில் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு, “அவனுக்காக மட்டுமல்ல. இனி நீ யாருக்காகவும்பயப்பட வேண்டியது இல்லை ஆதிரை. நான் உனக்கு துப்பாக்கி சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்து license வாங்கியும் தருந்துவிடுகிறேன். எந்த சூழலுக்காகவும் பயபட கூடாது. அந்த சூழலை சமாளிக்கும் வழியை தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்றான் அர்ஜூன்.


அவனது பதிலில் கிலுக்கி சிரித்த ஆதிரை, “அர்ஜூன். துப்பாக்கிதான் அவனுக்கு சரியாக இருக்கும். காலில் சுட்டுவிட்டு ஓடி வந்துவிடலாம். “ என்றாள்.


“ஆமாம் ஆமாம். என் கண்மணி துப்பாக்கி சுடுவதை கற்றுக் கொண்டு எங்கெல்லாம் சுதந்திரமாக சுற்ற போகிறதோ. கணவனான நான் பாதுகாவலனாக உன் உடன் வர வேண்டிய அவசியமற்று என் வேலையை அந்த துப்பாக்கி செய்ய போகிறது. பாவம் நான் என் வேலை போன கவலையில் என் மனைவியை மனம் மகிழ்விக்கும் பொறுப்பில் மட்டும் அக்கறைகாட்ட வேண்டும்" என்று சோகம் காட்டி சொன்னான்.


என்னவென்று புரியாமல் விழித்த ஆதிரை, அர்ஜூனின் முடித்த சோகமான வார்த்தையில் இரு வேறு அர்த்தம் புரிய, முகம் சிவந்து அவனிலிருந்து விலகி செல்ல முயன்றாள். அவள் எண்ணம் படித்தவனாக அவளை தன் இடக்கையால் இழுத்து தன் கைகளுக்குள் நிறுத்தி மேலும் பேச ஆரம்பித்தான்.


“அந்த விஸ்வாவால், பார் பொன்னான இரு தருணங்களை வீணாக்கி போனேன். அந்த ஏலகிரி கிராம வீட்டிலும் மயில்பாறை சென்று திரும்பிய பின் தங்கிய குடிலிலும் என்னை கட்டுபடுத்திக் கொள்ள நான் எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா? " என்று வருத்தமாக சொன்னான்.


அர்ஜூனின் உண்மை காரணம் அறிந்த பின் ஆதிரைக்கு அந்த இரு தருணங்களில் அர்ஜூனின் தவிப்பே பெரிதாக தோன்றியது. ‘பாவம் அர்ஜூன். எனக்காக எவ்வளவு கஷ்ட பட்டிருக்கிறான்' என்று எண்ணி அவனது கன்னங்களில் எட்டி இதழ் பதித்து, “ எப்படி கஷ்டபட்டீர்கள்" என்று விளையாட்டாக கேட்டாள்.


“ஆஹம். இப்படி சோகமாக பேசினாள் இப்படி ஒரு ராஜ மரியாதை என் கன்னங்களுக்கு கிடைக்குமென்று இத்தனை நாள் தெரியாமல் போனதே. இனி தினம் ஒரு கஷ்ட கதையை அளந்துவிட வேண்டியதுதான்" என்று சப்தமாக சிரித்தான் அர்ஜூன்.


பதிலேதும் சொல்லாமல் முகம் திருப்பி அர்ஜூனின் மார்பில் முகம் புதைத்தாள்.


"அது சரி.” என்று மீண்டும் புன்னகைத்து மேலும் பேசினான், “அந்த ஏலகிரி கிராமத்தில் அந்த பட்டு சேலையில் வந்து நின்றாயே. இவ்வளவு நாள் நீ ஏன் இப்படி சேலைகளை கட்டவில்லை என்று எனக்கு குறையாகி போனது. முந்தையனாளும் இதே போல் சேலையில் வந்து என்னை மயங்க செய்தாய். இப்போதும் என்னை மயக்கிவிட்டாய். நான் எடுத்த குறிக்கோள் எல்லாம் எங்கோ போனது. மீண்டும் மதுக் கொண்ட பூனையாகி போனேன். அன்று இரவு வெகு சிரமபட்டு நான் உறங்க ஆரம்பிக்கும் போது நீ பூனைக்குட்டி போல வந்து என் முகம் முன் அமர்ந்துக் கொண்டு என்னிடம் கதை பேசுகிறாய். என் கன்னத்தில் இதழ் பதிக்க வேண்டுமெங்கிறாய். உன் குரலை கேட்டப்பின் எங்கு தூங்குவது. வந்த தூக்கம் ஓடி போனது. அதனோடு நீ பேசும் போது என் முகத்தில் விழுந்த உன் மூச்சுக் காற்று அதன் பிறகு என்னை படுத்து கிடக்க விடாமல் எழுப்பிவிட்டது. நீ தண்ணீர் அருந்திவிட்டு வந்ததும் இழுத்து இதழ்பதித்துவிட்டேன். வெகு சில வினாடிகளிலே என் நிலை அறிந்தேன். சட்டேன விலகி உறங்குவது போல் கண்களை மூடிக் கொண்டேன். உன்னிடம் விளக்கம் சொல்ல என்னால் அப்போது முடியவில்லை. அதனால் அப்படி ஒன்று நடந்தது போலவே நான் அடுத்த நாள் காட்டிக் கொள்ளவில்லை.” என்று பெருமூச்சுவிட்டான்.


“ஹப்பப்பா. மதுக்கொண்ட பூனையின் செயல் மிகவும் மோசம். எவ்வளவு எளிதாக என் முதல் முத்தத்தை பறித்துவிட்டது.” என்று பொய்யாக கோபம் காட்டினாள். பின், “ஆனால் அதை நான் உண்மையிலே கனவென்று எண்ணிவிட்டேன். ஆனால் அந்த குடிலில் எனக்கு நிச்சயமாக அது கனவில்லையென்று தெளிவாக தெரிந்துவிட்டது. அதனால் என்னை நீங்க வேண்டுமென்றே விலக்குகிறீர்கள் என்று எனக்கு அழுகை வந்துவிட்டது. அதனால் என்ன காரணம் கொண்டும் உங்கள் அருகில் நெருங்குவதை தவிர்க்க வேண்டுமென்று இரண்டாவது முறையாக உறுதிக் கொண்டேன். ஆனால் உங்கள் முன் விலகி இருக்க வேண்டுமென்று நினைக்கும் என் முடிவு அற்பாயுள் கொண்டு தவிடுபொடியாகிவிடுகிறது. நான் என்ன செய்ய? “ என்று சோகமாக சொன்னாள்.


“ம்ம். அப்படி இனி ஒரு நாளும் நீ உறுதி எடுக்கவும் வேண்டாம். அப்படி இருக்க நானும் விட போவதுமில்லை. “ என்று மேலும் அவளது அணைப்பை இறுக்கி தொடர்ந்து பேசினான்.


"அந்த மலை கோவிலிருந்து இறங்கி வரும் போது உன்னை தூக்கிக் கொண்டு வந்ததும் உன் சேலை விலகி என் கைப்பட்ட உன் வழுவழுப்பான இடைதழுவல் ஏற்கனவே என்னுள் முதல் எச்சரிக்கை மணி தோன்றிவிட்டிருந்தது. அப்படி இருக்க மகாராணி , முந்தைய நாள் பூனையை போல் சப்தமில்லாமல் என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய். அவ்வளவு அருகில் உன்னை பார்த்தபின் எப்படி என்னை கட்டுக்குள் கொள்வது. மீண்டும் என்னை கட்டுபடுத்துவது கிட்டத்தட்ட முடியாமல் போனது. நல்ல வேலை அந்த நேரத்தில் என் காலின் மீது விழுந்த மழை சாரல் நீர் என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்து. அவசரமாக உன்னை விடுத்து மீண்டும் முந்தைய நாள் போல உறங்கும் பாசாங்கு செய்தேன்.


ஆனால் அது உன் மனதை மிகவும் சஞ்சல படுத்தி கலங்க வைத்துவிட்டிருக்கிறது என்று அடுத்த நாள் உன் செயலிலே கண்டுக் கொண்டேன். அதனால்தான் என்னுடன் நெருங்கி அமர்தையும், தொட்டு பேசுவதையும் வெகுவாக தவிர்த்தாய். சிம்லா வரும் போது flight -லும் , குதிரையிலும் அமரும் போது உன்னை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. எல்லாம் இன்றோடுதானே நாளை உன்னை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் போது உன் ஒதுக்கத்தை சொல்லி சிரிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டு உன்னை நெருங்கி வந்தால் விருப்பமில்லாமல் நெருங்காதே என்கிறாய். எனக்கு அன்று எப்படி இருந்தது தெரியுமா? ஏன் ஆதிரை அப்படி சொன்னாய். நீ இப்போது சொன்னதை எல்லாம் கேட்கும் போது நீ விருப்பமில்லாமல் இருந்தது போல தெரியவில்லையே. நீ அப்படி சொன்னதில் எனக்கு கோபம் வந்து முரட்டுதனமாகவேனும் உன்னை என்னுடையவளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று மிருகம் போல அப்படி நடந்துக் கொண்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடு ஆதிரை. ஆனால் நீ மயங்கியதும் எனக்கு என் மீதே கோபம் வந்துவிட்டது.” என்று விளக்கம் சொன்னான்.


அவன் சொன்னதை கேட்டதும் ஆதிரைக்கு அர்ஜூன் ஏன் கோபம் கொண்டான் என்று தெரிந்தது, “ அச்சோ அர்ஜூன். நான் நீங்க என்னை நெருங்கி நெருங்கி வந்துவிட்டு எதையோ எண்ணி என்னை விலகுவதை பொறுக்காமல் அப்படி சொன்னேன். உங்களுக்குதான் என் மீது விருப்பமில்லாமல் நெருங்கிவிட்டு பின் விலகி தவிக்கிறீர்கள் என்று எண்ணி அப்படி சொன்னேன். என்னுடைய விருப்பம் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. நீங்க தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் போல தோன்றுகிறது" என்றாள்.


“ஓ.. அப்படியா? இப்போது புரிகிறது. டாக்டர் சொன்னது தெரியாமல் இருக்கும் நீ வேறெப்படி நினைத்திருக்க முடியும். அது புரியாமல் நான் வேறு உன்னை வதைத்துவிட்டேன். ஆனால் அதன் பிறகு அது என்ன சிறு பிள்ளை போல வேறு அறைக்கு போகிறேன் என்று அடம்பிடித்தாய். அப்படி போகிறேன் என்றால் நம் வீட்டிலிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள். வற்புறுத்தி திருமணம் செய்து வைத்த என் அக்காவும் மாமாவும் நொந்து போக மாட்டார்களா? நமக்குள் இருக்கும் பிரட்சனையை நாமே பேசி தீர்ப்பதுதானே சரியாகும்.” என்று குறைபட்டவனாக சொன்னான்.


அதற்கு புன்னகைத்த ஆதிரை, “ அர்ஜூன். இப்போது நினைத்தால் என் செயல் சிறுபிள்ளை தனமாகதான் தோன்றுகிறது. ஆனால் நீங்களும் சும்மா இல்லையே. ஏதேதோ கதை சொல்லி என்னை உங்களுடனே இருக்க வைத்துவிட்டீர்கள். உங்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான சாதூரிய காரராக அல்லவா இருக்கீரீர்கள்.” என்றாள்.


“ஆமாம். இருந்தும் அன்று கூத்து பார்க்கும் போது என் சாதூர்யம் கைக்கொடுக்கவில்லையே. எதுக்கெடுத்தாலும் தொட்டால் சுருங்கி போல உன்னுள் ஒடுங்கிக் கொண்டால் எப்படி. என்ன செய்துவிட்டேனென்று உடனே பாதி கூத்து பார்த்திருக்கும் போது எழுந்து செல்ல துடித்தாய். அதன் பிறகு வேறு திருமணம் என்று சொல்லி உன்னுள் பொறாமை உண்டாக்கலாமென்றால் அம்மாயார் பெரிய தியாக சீலை போல விரைவில் பிரிந்து சென்று விடுகிறாயாமா? இந்த மண்டைக்குள் இருக்கும் மூளைக்கு கொஞ்சமும் புத்தியே இல்லை" என்று அவள் தலையை பிடித்து ஆட்டிவிட்டான்.


“அர்ஜூன்..” என்று சினுங்கிய வண்ணம் அவன் கையை தட்டிவிட்டாள். பின், “அப்போது உங்க இரண்டு வருட காதலி பொய் காதலியா?” என்று கண்கள் பளிச்சிட கேட்டாள்.


“இரண்டு வருட காதலி இல்லை. ஆனால் இரண்டு ஜன்மத்து காதலி இருக்கிறாள். அவள் என்னை படுத்திய பாடு இருக்கிறது பார் சொல்லி முடியாது. பிரிகிறேன் பிரிகிறேன் என்று ஜபம் பாடிவிட்டு எல்லோர் முன்னிலையிலும் வந்து என்னை அணைத்துக் கொள்வாள். என் உயிருக்கு ஆபத்து என்றால் அவள் உயிர் போவது போல் தவிப்பாள். ஆனால் கணவனாக நான் அணைத்தால் மட்டும் ஏற்க மாட்டாள்" என்று யாரையோ சொல்வது போல் சொல்லி அவளை விடுத்து எழுந்து நின்று சொன்னான் அர்ஜூன்.


“சாரி அர்ஜூன். அது.. “ என்று சொல்ல தொடங்கியவள், “ அவற்றையெல்லாம் மறந்துவிடுங்களேன். என் உயிர் உள்ள வரை உங்களை விட்டு பிரியவே மாட்டேன். போதுமா? முட்டாள் போல அப்படி நடந்துக் கொண்டேன். உங்களிடம் தெளிவாக பேசியிருந்தால் இந்த இரண்டு மாதமும் எவ்வள்வு இனிமையாக கழிந்திருக்கும். எல்லாம் என்னால்தான்" என்று தன் மீதே குற்றம் சுமத்திக் கொண்டு புலம்பிய வண்ணம் தலை தாழ்த்தினாள் ஆதிரை.


“மக்கு.. இங்கு வா" என்று அவளை அழைத்தான். ஆதிரை எழுந்து அருகில் வந்ததும் அவளை இழுத்து அணைத்து அவள் இதழ் மூடினான். அவன் அவளை விடுத்த போது மூச்சுவாங்க நிற்க முடியாமல் அவன் மார்பிலே சாய்ந்துக் கொண்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா ஒரு வழியா எல்லாப் பிரச்சனையும் முடிந்தது
ஹா ஹா ஹா
கணவன் மனைவிக்கிடையில் ரொமான்டிக் பேச்சு வார்த்தை சூப்பர்
சூப்பரோ சூப்பர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top