தூரம் போகாதே என் மழை மேகமே !! - 82

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer




சில வினாடி யோசித்தவன் , உடனே தெளிந்து, “ நீ என்னை குழப்ப பார்க்கிறாய் ஆதிரை. ஏமாந்து போக நான் ஆளில்லை” என்றான் விஸ்வா.


“விஸ்வா.. உனக்கு நான்தான் உலகிலே பெண் என்ற எண்ணமா. நீயே உன்னை நன்றாக பார். உனக்கு என்ன குறை. பெண்கள் திரும்பி பார்க்கும்படியான ஆண்மை இருக்கிறது. நண்பனாக பார்த்த உன்னை என்னால் வேறுபடி நினைக்க முடியவில்லை அவ்வளவே.அதனோடு என் அர்ஜூனை நான் விரும்பிவிட்டேன். அதனால் என் மனதில் வேறு யாரையும் நினைக்க முடியவில்லை" என்று பொறுமையாக சொன்னாள் ஆதிரை.


சில வினாடி அங்கு அமைதி நிழவியது. ஆனால் ஆதிரையின் வார்த்தை பலம் பெருமுன்னாலே, “ எனக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை. எனக்கு நீ தான் வேண்டும்" என்று பழையதிலே வந்து நின்றான்.


ஆதிரைக்கு இப்போது விஸ்வாவின் மனனிலையில்தான் சந்தேகம் வந்தது. இவனை நல்ல மனோ தத்துவ மருத்தவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இனி இவனிடம் பேசி பயனில்லை. என்பதை உணர்ந்து , எப்படி இங்கிருந்து தப்புவது என்பதை யோசித்த வண்ணம் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.


அவள் மனநிலையை அறியாமல் விஸ்வா தொடர்ந்து பேச ஆரம்பித்தான். "நான் இன்னும் 1 மணி நேரத்தில் இங்கு வருவேன். அதற்குள் எனக்கு பதில் வேண்டும். அதனோடு உன் கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிறும் கழற்றபட்டு இருக்க வேண்டும். அதிலேதும் மாற்றமென்றால் உன் அர்ஜுனின் உயிரற்ற உடலை பார்க்க நீ காத்திரு" என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியில் சென்றான் விஸ்வா.


அவன் செல்வதையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்த ஆதிரைக்கு ஏதோ பெரிய சுழலில் மாட்டிக் கொண்டது போல தோன்ற ஆரம்பித்தது. 'இது போலவேதான் போன ஜன்மத்திலும் நடந்தது. ஆனால் போன ஜன்மம் போல இப்போது நாம் இறந்து போய்விடக் கூடாது. எப்படி இங்கிருந்து யாருக்கும் பாதிப்பில்லாமல் தப்புவது. அர்ஜூனுக்கு நான் இப்படி மாட்டிக் கொண்டது தெரிய வாய்ப்பில்லாமல் செய்து வைத்திருக்கிறான் இந்த விஸ்வா. காராத்தே தெரியும்தான் என்றாலும் , இந்த வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒருவேளை விஸ்வாவை அடித்துவிட்டு கிளம்ப முயன்றாலும் வெளியிலிருப்பவர்களிடம் தப்ப முடியுமோ. அப்படியே தப்பினாலும் , இவனது ஆள் ஒருவன் அர்ஜூனுடன் போயிருக்கிறானே. நான் தப்பித்து அர்ஜூனுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்,’ என்று ஒரு கணம் உடல் சிலிர்க்க அப்படியே உறைந்தாள்.


'ம்ம்.. இங்கிருந்தேதான் ஏதேனும் செய்ய வேண்டும் . முதலில் யார் யார் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதன் பிறகு என்ன செய்யலாமென்று முடிவெடுக்க வேண்டும்.’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆதிரை இருக்கும் அறைக்கு ஒரு நடுதர வயது பெண் உள்ளே வந்து அவளுக்கு உணவு கொண்ர்ந்து உண்ணும்படி மேஜை மேல் வைத்தாள்.


“குளித்துவிட்டு , சாப்பாடு சாப்பிடு.. விஸ்வா தம்பி சொன்னார்" என்றாள் அந்த பெண்.


இவளிடம் பேச்சுக் கொடுத்தால் தப்பிக்க வழி கிடைக்குமென்று எண்ணி , “அக்கா. இந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள். “ என்று கேட்டாள் ஆதிரை.


ஆதிரையை மேலும் கீழுமாக பார்த்த அந்த பெண், “ ஏன் கேட்கிறாய்.? விஸ்வா தம்பியை திருமணம் செஞ்சி ஏமாத்திட்டு வேறு ஒருத்தனோட ஓடி போனவள், திரும்பவும் ஓடி போக திட்டமிட பார்க்கிறியா?” என்று சீரினாள் அந்த பெண்.


ஆதிரைக்கு நெருப்பை அள்ளி கொட்டியது போல உடலெல்லாம் எரிந்தது, “என்னது. விஸ்வாவை திருமணம் செய்தேனா?. எந்த புளுகுமூட்டை அப்படியொரு தரமற்ற பொய்யை சொன்னது? “ என்று ஆதிரை சீரினாள்.


ஆதிரையின் அமைதியான முகம் நொடியில் மாறிய விதத்தில் அந்த பெண் திகைத்து நிற்கும் நேரத்திலே, “ வேறு ஒருவரின் மனைவியான என்னை கடத்தி வந்து என் கணவனின் கழுத்தில் கத்தி வைத்து இவனை மறுமணம் செய்ய சொல்லும் இந்த விஸ்வாவின் கட்டு கதையை நம்பி உண்மை உணராமல் குற்றமற்ற பெண் மீது பலி சுமத்தும் நீங்களும் ஒரு பெண்ணா? சீ சீ.. விஸ்வாவின் மனைவியாம்.. மனைவி.. உடலெல்லாம் எரிகிறது. என் கணவனை காப்பாற்றும் வழிப்புரியாமல் திகைத்திருக்கும் என்னை பற்றி என்ன பேச்சு பேசுகிறீர்கள். விஸ்வாதான் திருமணமான என்னை கடத்தி வந்து அவனை மீண்டும் திருமணம் செய்ய வற்புருத்துகிறான். சந்தேகமிருந்தால், விஸ்வாவின் பெற்றொர்களுக்கு phone பண்ணி பேசி பாருங்க. அவனுக்கு திருமணமாகாத விசயம் தெரியும். அவனை நண்பன் என்று எண்ணியதற்கு எனக்கு இந்த தண்டனை மிக தகும்தான். முதலில் கண் முன் நில்லாமல் இங்கிருந்து போங்க. “ என்று முகம் திருப்பிக் கொண்டு அந்த அறையிலிருந்த குளியலறையில் போய் கதவை அடைத்தாள்.


ஆதிரை சொன்னதை கேட்ட அந்த பெண் ஒரு நொடி 'ஆதிரை சொன்னது உண்மையாக இருக்குமா? விஸ்வா தம்பியை பார்த்தால் அப்படி கெட்ட செயல் செய்யும் பிள்ளையாக தோன்றவில்லையே. அந்த தம்பிதான் என் குழந்தையின் உயிரையே காப்பாற்றியது. அதுவும் எந்த செலவுமில்லாமல் விபத்தில் மாட்டிக் கொண்ட என் குழந்தைக்கு அறிய வகை ரத்தம் கொடுத்தது மட்டுமல்லாமல் முழு செலவையும் செய்து காப்பாற்றியது. அன்று அந்த தம்பி மட்டுமில்லனா என் புள்ளை எப்போதோ இல்லாமல் போயிருக்கும். அப்படி பட்ட நல்ல தம்பி ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடுமா?’ என்று யோசித்தாள். பின் 'இருக்காது. இந்த பொண்ணு ஏதோ என்னை ஏமாத்தி மீண்டும் ஓடிவிட திட்டமிட்டிருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று தலையை சிலுப்பிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியில் சென்றுவிட்டாள்.


குளியலறை சென்ற ஆதிரை, 'விஸ்வாவின் கீழ்தரமான செயலை மறைத்து இப்படி வேடமிட்டு பொய்யுறைத்து வேலையாட்களை சேர்த்து வைத்திருக்கிறானே. ‘ என்று ஆதங்கபட்டாள்.


'தனக்கு கண்டிப்பாக இங்கிருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்காது. அதனால் விஸ்வாவின் போக்கில் சென்று முதலில் வீட்டிலிருப்பவர்கள் யார் யாரென்று நோட்டமிட வேண்டும். பின் என்ன செய்யலாமென்று முடிவெடுக்க வேண்டும். எதற்கும் சக்தி வேண்டும். இரவெல்லாம் உறங்காமலும் உண்ணாமலும் எதையும் செய்ய இயலாது. அதனால் வீம்பு செய்யாமல் குளித்து முடித்து , உண்டு உறங்குவோம். எப்படியும் நாளை வரை காலம் இருக்கிறதே. முக்கியமாக அந்த விஸ்வா 1 மணி நேரம் கழித்து வருவதற்கு முன் உறங்குவது போல பாசாங்கு செய்ய வேண்டும். அதனால் கொஞ்சம் அதிக நேரம் யோசிக்க கிடைக்கும்' என்று வேகமாக குளித்து முடித்து உண்டு இரவெல்லாம் அர்ஜூனை நினைத்து கண் விழித்ததில் , அவளையும் அறியாமல் நடிக்க அவசியமற்று உறங்கி போனாள்.


மாலை கண் விழித்த ஆதிரை, வேண்டுமென்றே அறை கதவை தட்டினாள். சப்தம் கேட்டு உள்ளே வந்த விஸ்வாவிடம் , “உன் விருப்பத்திற்கு சம்மதம். எனக்கு வேறு வழியும் இல்லை. ஆனால் என் கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிறை நாளைதான் கழட்டுவேன். இது தீவில் கட்டிய அதே கயிறு இல்லை. இது அர்ஜூனின் ஊர் மக்கள் முன் கட்டப்பட்டது. நீ நினைப்பது போல் யாருமறியாமல் நடந்தது அல்ல என் திருமணம்" என்றாள்.


“தெரியும். உனக்கும் அவனுக்கும் அவன் ஊரில் மீண்டும் திருமணம் நடந்தது. பாண்டே சொன்னான். அந்த பாண்டே அவனை கொன்றுவிடுவான் என்று நம்பி பத்தாயிரம் செலவு செய்தும் பயனில்லாமல் , அர்ஜுனை தப்பவிட்டது மட்டுமல்லாமல், மீண்டும் வந்து எனக்கே உபதேசம் வேறு. அர்ஜூனை பற்றி புகழாரம் வேறு. எரிச்சலுற்றுதான், நீங்க இருவரும் அந்த ஊரை விட்டு வெளியில் வருவதை கண்கானித்து சொல்ல ஆள் நியமித்துவிட்டு வந்தேன். நீ இருக்கும் ஊருக்கு வரதான் வழியில்லையே. ஆனால் எப்படியும் பௌர்ணமிக்கு வெளியில் வருவீர்கள் என்று எச்சரிக்கையாக கவனித்து காத்திருந்தேன்" என்றான் விஸ்வா..


“பாண்டேவை அனுப்பியதும் நீயா? ஆனால் அவன் வேறு சொன்னான்?” என்று ஆச்சரியமுற்று கேட்டாள். இன்னும் என்ன என்னவெல்லாம் செய்திருப்பான இந்த பாவி. என்னால் அர்ஜூனுக்கும் பாதிப்பாகி போனதே. என்று கலங்கினாள்.


“அப்படி முழுதும் சொல்ல முடியாது. டெல்லி conference க்கு போன இடத்தில் பாண்டேவின் தங்கையின் மனனிலை பற்றிய கருந்தரங்கு நடந்தது. வித்தியாசமான முறையில் பாதிக்கபட்டிருக்கும் அவளை பற்றிய மருத்துவ குறிப்புகளை பார்க்க தலைமை டாக்டருடன் போன போது அந்த பாண்டேவை பார்த்தேன். அவன் அர்ஜூன் என்றதும் அவனது கதையை கேட்டேன். அவனுக்கு இந்திரபிரதேஷின் மீதும் அர்ஜூனின் மீதும் இருக்கும் கோபத்தை ஊதிவிட்டு வந்தேன். அவனும் காது கொடுத்து கேட்டான்தான். ஆனால் சுவரில் பட்ட பந்தாக மீண்டும் வந்து எனக்கே அறிவுரை. அவனிடம் நீ சொல்வது சரிதான் என்று நல்லவன் வேஷம் போட வேண்டி இருந்தது. இல்லையென்றால் அர்ஜூனின் விசுவாசத்தில் என்னை காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது. ஏதோ கொடுத்த பத்தாயிரத்தில் வாயை மூடிக் கொண்டான்.” என்று பெருமூச்சுவிட்டான் விஸ்வா.


“சே...” என்ற ஆதிரை உடனே சுதாரித்து, “ அவ்வளவு பயம் அர்ஜூன் மீது இருக்கும் நீ, இப்போது என்னை மறுமணம் செய்தால் உன்னை சும்மா விடுவாரா. எதுவும் செய்ய மாட்டார் என்றா நினைக்கிறாய்? அந்த பயம் உனக்கில்லையே" என்றாள் .


“அதெல்லாம் மாட்டான். நீங்கள் இருவரும் உண்மையான கணவன் மனைவியாக வாழவில்லை என்பதே எனக்கு சாதகமாயிற்றே. அவன் உன்னை பற்றி அறிந்து வருமுன் நீ எனக்கு முழுதும் சொந்தமாகியிருப்பாய். உனக்காகவே வேறு வழியில்லாமல் அவன் என்னை எதுவும் செய்ய மாட்டான்.” என்று கெக்கலித்து சிரித்தான்.


'அவன் சொல்வதும் சரிதான் என்று அர்ஜூன் போன ஜன்மத்தில் எங்காவது விஸ்வாவுடன் உயிருடன் இருந்தாலாவது பரவாயில்லை என்ற எனக்கு நீ இறந்தது அதிர்ச்சி என்றானே' என்று நினைத்த ஆதிரை விஸ்வாவின் சிரிப்பு சகிக்காமல் முகம் திருப்பினாள்.


"முகம் திருப்பிக் கொண்டால் எப்படி, அந்த கயிற்றை கழற்றி என்னிடம் கொடு" என்றான் விஸ்வா.


உடனே திகைத்த ஆதிரை, இறுக்க அவள் தாலியை பற்ற, “ மஞ்சள் கயிறை கழற்ற எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும். நான் கொஞ்சம் மனதினை தயார் செய்துதான் கழற்ற வேண்டும். உன் திட்டம் நாளைதானே அதற்குள் நான் தயாராகிவிடுவேன். எனக்கு என் கணவனின் உயிர்தான் என்னைவிடவும் முக்கியம். அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் செய்ய மாட்டாயென்று எனக்கு வாக்கு கொடு" என்றாள் .


“அடேயெப்பா!! நாளை முதல் நான் தான் உன் கணவன். நினைவிருக்கட்டும். பரவாயில்லை. விரைவிலே முடிவெடுத்துவிட்டாய். இனி அந்த அர்ஜூனை உன் கணவன் என்றும் சொல்ல கூடாது. நீ உன் வாக்கை காப்பாற்றும் பட்சத்தில் அவனுக்கு எந்த பாதிப்பும் செய்ய மாட்டேன். ஆனால் நாளை ஏதேனும் தில்லு முல்லு செய்ய நினைத்தாய். அவ்வளவுதான். மீண்டும் செத்து போய்விடலாமென்று மட்டும் நினைக்காதே. அப்படி செய்தாலும் அர்ஜூனை உயிருடன் வைப்பேனேன்று நினைக்காதே" என்று அறையைவிட்டு சென்றுவிட்டான் விஸ்வா.


லேசாக உயிருள் குளிர் பிறந்தது. 'இதுதானா என் விதி. இதற்காகதான் இரண்டு ஜன்மம் கடந்து பிறந்து வந்தேனா. ஏன் எனக்கு இந்த தண்டனை. விஸ்வாவை நினைத்தாலே உடலெல்லாம் அருவருப்பால் சிலிர்கிறதே. நாளை என்ன செய்ய போகிறேன். இந்த அருவருப்பு தாங்காமல்தானோ என்னமோ போன ஜன்மங்களில் இறந்து போனேன். இப்போது அப்படி நிம்மதியாக இறக்கவும் உரிமையற்று போனேனே!. கடவுளே ஒளி ஏதும் தெரியாத காரிருளில் மாட்டிக் கொண்டேனே. ‘ என்று மனதுள் புலம்பிய வண்ணாம், பின் ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள்.


கண்ணில் இரு கம்பீரமான அடியாட்கள் போல வெளி கதவின் அருகிலிருந்த சிறு அறையிலிருந்து வெளியில் வந்து மீண்டும் உள்ளே சென்றனர். போதாத குறைக்கு வேட்டை நாய்கள் போல இரண்டு நாய்கள் 3 அடி உயரத்துக்கு அந்த வீட்டை சுற்றி தடுப்பாரற்று சுற்றிக் கொண்டிருந்தது. இவை வெளியில் இருக்கும் தடைகள். கொஞ்சம் பலமான தடைதான். தப்புவது கடினமே. இது இல்லாமல் இந்த வீட்டில் அந்த பெண். அவள் இல்லாமல் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே தப்பித்து எங்கு போவது' என்று குழம்பி போய் அவள் அமர்ந்திருக்கும் போதே மீண்டும் கதவை திறந்துக் கொண்டு மதியம் வந்த அந்த பெண் வந்தாள்.


“இந்தமா.. சீக்கிரமா யாருக்காவது phone பண்ணி உதவி கேளு. இந்தா இது உன்னோட phone தான். சீக்கிரமா செய். நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன். லேசாக விஸ்வா தம்பியின் நடவடிக்கையையும் கவனிச்சேன். அப்புறம் நீயும் விஸ்வா தம்பியும் பேசினத கதவிட்ட நின்னு கேட்டேன். எனக்கு எல்லாம் புரிஞ்சிது. ஆனால் police -க்கு phone போட்டுடதாமா. ஆயிரம்தான் வினையமா விஸ்வா தம்பி இப்படி நடந்துக்கிட்டாலும் , அது என் புள்ளைய காப்பதின புள்ளை. ஏதோ புத்திக்கெட்டு இப்படி செய்து. நீ நல்லவிதமா தப்பி போக மட்டும் ஏதாவது ஏற்பாடு பண்ணு.. சீக்கிரம் பேசு" என்று அவசர படுத்தினாள் அந்த பெண்.


அதிசயமாக அவளை பார்த்த ஆதிரை , அதிக நேரம் யோசிக்காமல் அந்த பெண்ணிடமிருந்து அவசரமாக phone -ஐ வாங்கி முதலில் லாவண்யாவுக்கு phone செய்து சூழலை விலக்கி சொல்லி விஸ்வாவின் பெற்றோரை இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்து காப்பாற்றும்படி கேட்டாள். அதனோடு இருக்கும் location -ஐ பகிர்ந்தாள். அவசரமாக வைத்துவிட்டு , ரிதிகாவிற்கு phone செய்தாள். “அண்ணி. இந்த விஸ்வா என்னை கடத்தி..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டும் சப்தம் கேட்டது. திகிலுடன் அந்த பெண்ணும் ஆதிரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் . அவசரமாக ஆதிரையின் கையிலிருந்த phone -ஐ வாங்கி switch off செய்து தன் ஆடையில் மறைத்துவிட்டு கதவை திறந்தாள் அந்த பெண்.


தலையை தடவிய வண்ணம் சிறுவன், “அம்மா.. விஸ்வா அண்ணா காபி கேட்டது.. இங்க என்ன செய்ற" என்றான்.


“ஹப்பா.. இவன்தானா. சரி சரி இதோ வருகிறேன் இரு" என்றுவிட்டு ஆதிரையிடம் கண் ஜாடை காட்டிவிட்டு, “உனக்கும் காபி தானேமா.. கொண்டாரேன்" என்றுவிட்டு விடுவிடுவென வெளியேறிவிட்டாள். இந்த அளவு இவள் உதவி செய்வதே அதிகம். என்பதை உணர்ந்து நாளைய பொழுதை எண்ணி பயந்த வண்ணம் அப்படியே அமர்ந்திருந்தாள். ஒருவேளை லாவண்யா வராமல் போனால், என்று அதற்கும் கலங்கி போனாள்.


உறக்கமில்லாமல் அறையின் குறுக்கே இப்படியும் அப்படியும் நடந்தவள் விடியும் பொழுதில் களைப்பில் அவளையும் அறியாமல் தரையிலே அமர்ந்த வண்ணம் மயங்கி போயிருந்தாள். வெகு நேரமாக யாரோ கதவை தட்டும் ஓசைக் கேட்டது. ஆனால் எழுந்து திறக்கும் எண்ணம்தான் இல்லாமல் போனது. இந்த பொழுது விடியாமல் இருந்தால் நல்லாயிருக்குமே என்று எண்ணிய வண்ணம், ஒருவழியாக கதவை திறந்த போது லாவண்யா தெய்வம் போல தெரிந்தாள்.


“நான் பயந்தே போய்விட்டேன் ஆதிரை. இவ்வளவு நேரம் கதவை திறக்காததை பார்த்ததும் ஏதேனும் செய்துக் கொண்டாயோ? என்று தவித்து போனேன்" என்றாள் லாவண்யா.


“லா.. லாவண்யா… இந்த விஸ்வா எந்த எல்லை வரை போயிருக்கிறான் பாரு" என்றுகண்ணீர் விட்டாள் ஆதிரை. ஆதரவாக லாவண்யா ஆதிரையை அணைத்துக் கொண்டு நின்றாள்.


லாவண்யாவின் பின்னே புதியதாக ஒருவர் நின்றிருந்தார். அவரை கேள்வியாய் பார்த்த வண்ணம் லாவண்யாவை விட்டு விலகி நின்றாள் ஆதிரை.


ஆதிரையை பார்த்து விவரம் புரிந்து, “ஆதிரை, நல்ல வேளையாக விஸ்வாவின் பெற்றோருக்கு தகவல் தர சொன்னாய். இவர் விஸ்வாவின் தந்தை. வந்து விஸ்வாவை நன்றாக அடித்துவிட்டார். விஸ்வாவை hospital-க்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவனுடன் அவன் அம்மாவும் சென்றிருக்கிறார். நானும் போக வேண்டும். உன்னை காணாமல் எனக்கு கலக்கமாக இருந்தது. நல்ல வேளையாக விரைவிலே கதவை திறந்தாய்.” என்று பெரு மூச்சுவிட்டாள்.


பதிலேதும் சொல்ல தோன்றாமல் தரையை தாழ்த்தி அமைதியாக நின்றாள் ஆதிரை. அவள் அருகில் வந்த அந்த பெரியவர் , ஆதிரையின் தலையை வருடி, “ என் மகனின் சார்பாக உன்னிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்மா. அவனை police -ல் பிடித்து கொடுக்காமல் எங்களுக்கு தகவல் கொடுத்தற்கு நன்றிமா. அவன் இனி உன் வழியில் வரவிடாதபடி நாங்க பார்த்துக் கொள்கிறோம். என் மகள் வீடு வெளினாட்டில் இருக்கிறது. அங்கு இவனையும் அழைத்து சென்று மேல் படிப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, மீண்டும் நாங்கள் இல்லாமல் இந்தியா வர முடியாத படி அவனுடைய passport-ஐ பூட்டி வைத்துவிடுகிறேன். நீ கவலையில்லாமல் இருமா. “ என்று தன் மகனின் கீழ்தரமான செயலால் இறுகிய முகத்துடன் சொல்லி ஆதிரையை ஆருதல் செய்ய முயன்றார்.


“அச்சோ பரவாயில்லை அங்கிள். எல்லாம் சரியானதே. ஒருவேளை நீங்க வரமுடியாத சூழல் என்றால் எப்படி தப்புவது என்பதை யோசித்து யோசித்து தவித்துக் கொண்டிருந்தேன். கடவுள் போல நீங்க வந்து என் மானத்தை காப்பாற்றி இருக்கிறீர்காள். அதற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். விஸ்வாவை மிகவும் அடித்துவிட்டீர்களா அங்கிள். எதுவும் பெரிய அடி இல்லையே" என்று பழைய சினேகிதனை பற்றி விசாரித்தாள் ஆதிரை..


அவளை இன்னும் பெருமிதமாய் பார்த்த அவர், “எவ்வளவு அருமையான பெண். உனக்கு போய் கஷ்டம் கொடுக்க துணிந்துவிட்டானே.” என்று வருந்தியவர் தொடர்ந்து , “ பெரிய அடி ஏதும் இல்லைமா. ஆனால் அவனது பூஞ்சை உடம்பு. கன்னத்தில் விழுந்த இரண்டு அரைக்கே சுருண்டு விழுந்துவிட்டான். அதனோடு அவனை நல்ல மனோ தத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல வேண்டுமென்று என் மருமகள் லாவண்யா சொன்னாள். முன்பு நடந்தவை பற்றியும் இவள் மூலம் நான் அறிந்தேன். அதனால் எந்தவித மாற்று கருத்தும் இல்லாமல் பெரிய hospital -ல் சேர்த்திருக்கிறேன்.” என்று தன் மருமகளான லாவண்யாவை ஒரு பார்வை பார்த்தார் அவர்.


லாவண்யாவின் கன்னங்கள் லேசாக செம்மையுற அவள் வெட்கம் படர, “ நான் விஸ்வாவின் பெற்றோரிடம் என் மனதில் இருப்பதை சொல்லிவிட்டேன் ஆதிரை. அதனோடு என் பெற்றோரும் இவர்களும் பால்ய சினேகிதர்கள் எதிர்ப்பு சொல்ல வாய்ப்பில்லாமல் எல்லாம் சிறப்பாகி போனது. இனி நீ விஸ்வாவை பற்றி கவலை படாதே. அவனை நான் பார்த்துக் கொள்வேன். அவனுடன் இருந்து அவன் மனதினை மாற்றுவது என் பொறுப்பு. நீ நிம்மதியாக உன் அர்ஜூனை பற்றி மட்டும் கவலை படலாம்.” என்றாள்.


அதற்கு பதிலாக புன்னகித்த ஆதிரை, உடனே, “அச்சோ அர்ஜூன். அர்ஜூனின் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பதிலாக காலியான சிலிண்டரை வைப்பதாக விஸ்வா சொன்னானே. அவன் நீங்க வருமுன் ஏதேனும் தவறாக தகவல் கொடுத்திருப்பானோ! “ என்று நொடியில் பதறிய வண்ணம் சேலை முந்தானையை கசக்கிய வண்ணம் கண் கலங்கி நின்றாள்.


அப்போது அங்கு வந்த அந்த வேலையாள் பெண் மணி, “ பயப்படாதேமா. விஸ்வா தம்பி அப்படி யாரிடமும் எதுவும் காலையில் சொன்னது போல இல்லை. நீயும் வேணும்னா யாரிடமாவது பேசி பார். இந்தா உன் phone “ என்று ஆதிரையிடம் அவள் phone ஐ கொடுத்தாள்.


அவசரமாக switch on செய்த உடனே ஆதிரைக்கு phone வந்தது. அரவிந்த் தான். ஆதிரையின் அரைகுறையான வார்த்தைகளில் கலங்கி கிளம்பிய ரிதிகா சூழ்னிலையை அரவிந்திடம் சொல்ல , அவசரமாக கிளம்பி சிம்லாவில் flight இல்லாததால் கார் மூலமாக டெல்லி வந்து சேர்ந்திருந்தனர். இப்போதுதான் டெல்லி airport -ல் சென்னை வர checkin செய்தனர்.


தொடர்ந்து ஆதிரையின் phone -க்கு தொடர்பு கொண்டதில் ஆதிரை phone on செய்ததும் இணைப்பு கிடைத்து, அரவிந்த் பேச ஆரம்பித்தான். "ஆதிமா எங்கு இருக்கிறாய்? பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாயா? காதம்பரன் அங்கிளிடம் சொல்லி சென்னையிளுள்ள ஒரு காவல்துறை நண்பரிடம் புகாரில்லாமல் உன்னை தேட முயற்சிக்க ஏற்பாடு செய்தோம். அவர்கள் வந்து உன்னை காப்பாறினார்களா? நடுகடலில் இருந்ததால் அர்ஜூனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. காதம்பரன் அங்கிள் அருகில் இருக்கிறாரா?” என்று அவர் தான் காப்பாற்றி யிருப்பார் என்று தோன்ற அவசரமாக கேள்வி கேட்டான் அரவிந்த்.


“அண்ணா. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். police -க்கு எல்லாம் போக வேண்டாம் அண்ணா சிறு கருத்துவேறுபாடு. எங்களுள் தீர்த்துக் கொண்டோம் என்று சொல்லிவிடுங்க.” என்று நடந்த கதையை சுருக்கமாக சொன்னாள் ஆதிரை.


police என்றதும் விழிகள் கூர்மை பட , விஸ்வாவின் தந்தையும் அந்த வேலை ஆள் பெண்மணியும் , லாவண்யாவும் பார்க்க , அவர்கள் கவலை தீர்க்கும்விதமாக ஆதிரை அவ்வாறு பேசினாள்.


ஆனால் அரவிந்த் ஒத்துக் கொள்ளாமல் , “ அதெப்படிமா. அவன் பெற்றோர் வரவில்லையென்றால் என்ன ஆகியிருக்கும் . சொல். அவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்க சிறை சென்றால்தான் சரிபடும் " என்றான் அரவிந்த்.


“அண்ணா கோபத்தில் பேசாதே . என்ன இருந்தாலும் அவன் என் நண்பம். நீங்க இல்லாதபோது ஆதரவாக நின்ற ஒரே மனிதன். அவனுள் ஏதோ மனசஞ்சலம், முறையாக மருத்துவம் பார்த்தால் சரியாகி போகிறான். அதற்காக காலத்தில் உதவிய என் நணபனை நான் கஷ்டபட விடமுடியாது" என்று முடித்துவிட்டாள்.


ஆதிரையின் தீர்க்கமான குரலில் வேறு வழியில்லாமல் அமைதியாக , "சரி சரி போ. உன் விருப்பம். ஆனால் நாங்க வரும் வரை பாதுகாப்பாக இரு. 3 மணி நேரத்தில் சென்னை வந்துவிடுவோம். நான் காதம்பரன் அங்கிளிடம் சொல்லிவிடுகிறேன். அவர் உனக்கு phone செய்வார். அவரிடம் நீ எங்கு இருக்கிறாய் என்று சரியாக சொல்லி அவருடனே இரு" என்று சொல்லிவிட்டு phone -ஐ துண்டித்தான்.


“ஹப்பா.. “ என்று பெருமூச்சுவிடும் முன்னரே, ஆதிரையின் phone -க்கு message வந்து. அர்ஜூனின் phone -ல் இருந்துதான். அதாவது விஸ்வா வைத்திருக்கும் அர்ஜூனின் phone -ல் இருந்துதான், “ என்னை ஏமாற்றி என் பெற்றோரை வரவைத்து என் திட்டத்தை தகர்த்தவளுக்கு ஒரு செய்தி. நான் தொடர்பு கொல்லாததால் என் வேலையாள் எங்கள் திட்டப்படி, அர்ஜூனுக்கு ஆக்ஸிஜனற்ற குடுவையை கட்டிவிட்டுவிடுவான் . வழக்கமாக கடலில் 11 மணி அளவில் முத்து குளிக்க குதிக்கும் அனைவருடனும் உன் கணவனும் இறங்க போகிறான். இறக்க போகிறான். உன்னை பற்றி தெரிந்தே நான் இப்படி திட்டமிட்டிருந்தேன். எனக்கல்லாமல் ஆதிரை நீ யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. நான் மீண்டும் வருவேன் உனக்காக.. “ என்று விகாரமான smile ஒன்றை போட்டு message அனுப்பியிருந்தான்.


அதனை பார்த்ததும் , அப்படியே தோய்ந்து தரையில் சரிந்தாள் ஆதிரை. அவள் நிலையை பார்த்த லாவண்யா அவசரமாக அவள் அருகில் ஓடி வந்து , “ என்னவாயிற்று ஆதிரை.. “ என்று கேட்டாள்.


பேசும் சக்தியற்று திக்பிரமை பிடித்தவள் போல , லாவண்யாவிடம் phone -ஐ கொடுத்தாள் ஆதிரை. அதனை படித்த லாவண்யா, “ என்ன ஆதிரை இது. இப்படி செய்துவிட்டான்" என்று சொல்லும் போதே ஆதிரைக்கு மீண்டும் phone வந்தது. காதம்பரன் phone செய்தார்.


அவரின் குரல் கேட்டதும் , குரலில் பதற்றத்துடன், “அங்கிள் அங்கிள்.. “ என்று வார்த்தைகள் வாராமல் கதறி அழுதாள். வார்த்தை புரியாமல் தவித்த அவர், “ என்னமா ஆனது. உனக்கு எதுவுமில்லையே. நீ பாதுகாப்பாக இருப்பதாக அரவிந்த் சொன்னானே" என்று பதட்டத்துடன் கேட்டார்.


ஆதிரையின் குரல் எழாமல் குழறுவதை பார்த்த லாவாண்யா, ஆதிரையிடமிருந்து phone -ஐ வாங்கி அவசரமாக சூழலை எடுத்து சொன்னாள். அதனோடு இருக்கும் இடம் பற்றியும் தகவல் கொடுத்தாள். சொன்ன 30 நிமிடத்தில் வந்த காதம்பரன்,ஆதிரைக்கு ஆருதல் சொன்னார். “ பயப்படாதேமா. கப்பல் பாதுகாப்புதுரை மூலமாக அர்ஜூன் சென்ற கப்பலுக்கு signal அனுப்ப சொல்லியிருக்கிறேன். வழக்கமாக முத்து குளிக்க கடலில் இறங்கும் நேரம் இன்னும் ஆகவில்லை. அதற்குள் தகவல் சேர்ந்துவிடும். அதனால் கவலை படாதேமா. நல்லதே நடக்குமென்று நினைப்போம்.” என்றார் .


அவரை ஆவலுடன் பார்த்து ,” உண்மையாகவா அங்கிள்" என்று கேட்டவளை பார்த்து, “நிஜமா.” என்று சொன்னாலும் அவருக்கும் லேசான உதைப்புதான். வெகு நேரமாக கப்பலுக்கு signal கிடைக்காமல்தான் அவர்களும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நேற்றே ஆதிரை பற்றி தகவல் சொல்லவும் முடியாமல் எவ்வளவு முயன்றும் பயனில்லாமல் ஒரு ஆளை அனுப்பினார் காதம்பரன். இப்போது மீண்டும் மற்றொரு ஆளை வேகமாக சொல்லும் படகு மூலமாக தகவல் சொல்ல அனுப்பியிருக்கிறார்.


அவர் முகத்தை படித்தவள் பிராசையற்று, "அங்கிள் நானே என் அர்ஜூனுக்கு எமனாகி போனேனே. நான் இப்போதே அவரிடம் போக வேண்டும் அங்கிள். அவரிடம். இங்கிருந்து படகு போகும்தானே அங்கிள். இதுவும் கடற்கரைதான். நேற்று பார்த்தேனே. ஜன்னல் வழி பார்க்கும் போதே கடல் தெரிந்ததே. என்னை என்னை படகில் கூட்டி செல்ல ஏற்பாடு செய்யுங்களேன்.” என்று பிடிவாதமாக அந்த வீட்டை விட்டு எழுந்து நடந்து கடற்கரை நோக்கி சென்றாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ அந்த வேலைக்காரி ஹெல்ப் செஞ்சு லாவண்யா வந்து ஆதிரையைக் காப்பாற்றி விட்டாள்
ஆனால் அர்ஜுன்?
அவன் எப்படி தப்பிக்கப் போறான்?
படுபாவி விஸ்வா என்ன வேலை செஞ்சு வைச்சிருக்கான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top