தூரம் போகாதே என் மழை மேகமே !! - 76

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1


ஆதிரை வெளியில் வருவதை பார்த்த சிவசக்தி, "வாமா ஆதிரை. என்ன இந்த நேரத்தில் இந்த பக்கம். வந்ததிலிருந்து குழந்தைகளுடனே இருந்துவிட்டு இப்போதுதான் வெளியிலே வருகிறாய் போல. என்னமா குழந்தைகள் தூங்கிவிட்டார்களா? " என்று முகமன்னாக அழைத்தார்.
அவர் பேசிக் கொண்டிருப்பதில் இடையூறாக வந்துவிட்டோமோ என்று நினைத்த ஆதிரை ,”ஆன்.. ஆமாம் பாட்டி. சும்மாதான் பாட்டி. உங்களை தொந்தரவு செய்துவிட்டேனா. மன்னித்துவிடுங்க தாத்தா" என்று இருவரிடமும் பேசினாள் ஆதிரை.
அதற்கு பலமாக சிரித்த சிவராமன், “அது சரி. மன்னித்தாகிவிட்டது. வா இப்படி வந்து உட்கார். அர்ஜூனிடம் இன்னமும் பயம்தானா. இங்கு அவனில்லாமல் வருவதற்கு அவனிடம் அனுமதி வாங்கினாயா? இல்லை நான் எதுவும் அவனிடம் சொல்ல வேண்டுமா? “ என்று வேடிக்கையாக கேட்டார் சிவராமன்.
அன்று பீச் வர மறுத்ததை தாத்தா சொல்கிறார் என்று உணர்ந்த போதும், அர்ஜூனின் பாட்டிமுன் இதை சொல்லி இப்படி என்னை சங்கட படவைக்கிறாரே இந்த தாத்தா, என்று தன் கைகளை பிசைந்து வண்ணம்"அவரிடம் பயமெல்லாம் இல்லை தாத்தா. அவர் எதுவும் சொல்ல மாட்டார்" என்று போலி புன்னகையுடன் சிவராமன் சொன்ன இடத்தில் அமர்ந்தாள். சில்லிட்டிருந்த அந்த கல் இருக்கை ஆதிரையின் தேகத்திலும் படர்ந்து அவள் உடலிலும் குளிர் பரப்பியது.
“அப்படியா.. அப்போ சரிதான். என்னமா தனியாக வந்திருக்கிறாய் . என்ன விசயம். எங்களிடம் எதுவும் கேட்க வேண்டுமா.” என்று கேட்டார் சிவராமன்.
இங்கு யாரும் வருவார்கள் என்று எதிர்பார்க்காமல் ஏதேனும் ரகசியம் பேசிக் கொண்டிருந்திருப்பார்களோ என்று எண்ணி, எண்ணியதை விடுத்து, “அப்படி எதுவும் இல்லை தாத்தா. அறையில் பொழுது போகவில்லை. குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த மலைகளின் உச்சிகள் எல்லாம் நன்றாக இருந்ததாக நினைவு . குழந்தைகளுடன் வரும்போது ஒழுங்காக ரசிக்க முடியவில்லை. அதுதான் இப்போது பார்த்துவிட்டு போகலாம் என்று எண்ணி இப்படி வந்தேன். நீங்க எதுவும் முக்கியமாக பேச வேண்டுமானால், நான் உள்ளே செல்கிறேன். நீங்க பேசிவிட்டு வருகிறீர்களா தாத்தா" என்று அழையா விருந்தாளியாக இருக்க விரும்பாமல் எழுந்தாள் ஆதிரை.
“அட.. உட்காருமா. பொழுது போகவில்லையென்றுதானே வந்தாய். நாமும் கொஞ்ச நேரம் பேசலாம். எங்களுள் மட்டுமேயான ரகசியம் எதுவும் இல்லை. “ என்று சிவசக்தி சொன்னார்.
பாட்டியை மறுத்து பேசும் எண்ணமற்று , “சரிங்க பாட்டி.” என்று அமர்ந்தாள். என்ன பேசுவதென்று தெரியாமல் தலை தாழ்த்தி தரையை பார்த்த வண்ணம் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தாள் ஆதிரை.
அந்த அமைதியை மாற்றி , " நான் கொடுத்த ஓலைசுவடியை படிக்க ஆரம்பித்துவிட்டாயா தங்கமே? “ என்று கேட்டார் சிவராமன்.
அப்போதுதான் நினைவு வந்தவளாக , " அச்சோ இல்லையே தாத்தா.. அது மறந்தே போனேனே. என் பையில்தான் இருக்கும். திகேந்திர சித்தரின் கதை அதிலிருக்குமென்றீர்கள் இல்லை?” என்று கேள்வியும் பதிலுமாக கேட்டாள் ஆதிரை. எப்படி மறந்தேன். அதில் அர்ஜுனின் , என் இரண்டாம் ஜன்ம கதையை ஓலை சுவடி மூலமே அறிந்திருக்க முடியுமே. இது ஏன் எனக்கு மறந்து போனது என்று தாமதமாக என்றாலும் சரியாக நினைவு வந்தது.
அதற்கு புன்னகித்த சிவராமன், “ஆமாம் ஆதிமா. போய் படித்து பார். நீதான் இந்திரபிரதேஷிக்குள் வந்துவிட்டாயே!. “ என்றார்.
“சரிங்க தாத்தா.” என்று துள்ளி குதித்துக் கொண்டு உடனே எழுந்தாள் ஆதிரை.
அவள் துள்ளலை பார்த்த பெரியவர் இருவருக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்ட போதும் , இங்கு வந்த பிள்ளையை உடனே அனுப்புவதுப் போல தோன்ற, “அதற்குள் என்னமா ஓட்டம். இவ்வளவு நாள் காத்திருந்தது ஒரு சில மணி நேரம் இருக்காதா. அப்பறமாக படிப்பாய். கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு போ." என்றார் சிவசக்தி.
போவதற்காக எழுந்த ஆதிரை அப்படியே அமர்ந்தாள். இருந்தும் என்ன பேசுவதென்று அவளுக்கு தெரியவில்லை. அவளுள் அந்த ஓலை சுவடியை இன்றே படித்திட வேண்டும் என்று அந்த எண்ணமே துருதுருத்தது. ஆனால் அந்த சுவடியை அவளது பையில் எடுத்து வைத்த நினைவு வரவே இல்லையே. ஒருவேளை சென்னையிலே விட்டுவிட்டு வந்துவிட்டேனா? என்று யோசனையோட அமர்ந்திருந்தாள் ஆதிரை.
ஆதிரை பேசாமல் அமர்ந்திருப்பதை பார்த்த சிவராமன் மனதில் ஒரு சந்தேகம் தோன்ற, “ஆதிமா.. உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்.” என்றார்.
நிமிர்ந்து சிவராமனை பார்த்த ஆதிரை ,"என்ன தாத்தா?” என்றாள் புன்னகை தோன்ற.
“உன் தோழனென்று சொன்னாயே. விஸ்வா.. அவன் அதன் பிறகு உனக்கு தொந்தரவு ஏதுவும் செய்யவில்லையே. “ என்று சிந்தனை முடிச்சுவிழ கேட்டார் சிவராமன்.
மனதில் அந்த ஓலைச் சுவடியின் கவனம் மாறி, “ இல்லையே தாத்தா. ஏன் கேட்கிறீர்கள்" என்றாள் ஆதிரை.
எதையோ மறைப்பவர் போல, “ஒன்றுமில்லைமா. தெரிந்துக் கொள்ளதான் கேட்டேன். நீ இங்கிருக்கும் வரை எந்த பிரட்சனையும் இல்லை. அதனால் அவனை பற்றி கவலை படவும் தேவையில்லை" என்றார் சிவராமன்.
யோசனையாக சில நொடி தவித்த போதும் , பெரியவர்களும் இவ்வளவு ஊர் மக்களுக்கும் நடுவில் இருக்கும் தனக்கு அந்த விஸ்வாவால் என்ன நிகழ்ந்துவிட போகிறது. அதனோடு லாவண்யாதான் விஸ்வாவிடம் நல்லவிதமாக பேசுவதாக சொன்னாளே" என்று தன் மனதை சமாதனம் செய்துக் கொள்ள முயன்று தோற்றாள். ஒரு வேளை அன்று அர்ஜூனை சுடுவதற்கும் விஸ்வாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் வர, அதை தெளிவு படுத்தி கொள்ள எண்ணி "சரிங்க தாத்தா. பாட்டி உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.” என்று கேள்வியாய் பார்த்த சிவசக்தியிடம், "வந்து, அன்று .. அன்று அர்ஜூனை சுட முயன்றவர்கள் கிடைத்தார்களா?” என்று கேட்டாள்.
அதற்கு விசித்திரமாக அவளை பார்த்த சக்தி, “ இவ்வளவு நாள் கழித்து இப்போது கேட்கிறாயே ஆதிரை. அர்ஜூன் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா?” என்று பதில் கேள்வியும் கேட்டார்.
அர்ஜூன் என்றதும் தடுமாறிய ஆதிரை, “ அ.. அது பாட்டி அர்ஜூனுடன் பேச அந்த நிகழ்வுக்கு பின் நேரமிருந்ததே இல்லையே,” என்று ஓரளவு உண்மையே என்பது போல சொன்னாள் ஆதிரை. தொடர்ந்து, “ அர்ஜூனை சுட முயன்றது விஸ்வாவாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது பாட்டி. அன்று அந்த பாட்டு நடனம் நடந்த சத்திரத்தில் யாரோ என்னையே பார்பது போல குறுகுறுவென்று இருந்தது. இருட்டில் எனக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் அதனை பெரிதாக நான் நினைக்கவில்லை. அப்பறம் நாங்க சென்னையிலிருந்து இங்கு வரும் போது air port லயும் யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தேன். தாத்தா விஸ்வாவை பற்றி கேட்டதும் அவனாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது பாட்டி" என்று காரணத்துடன் கேட்டாள் ஆதிரை.
அதற்கு ஒரு நொடி சிந்திப்பதுப் போல் இருந்த சிவசக்தியின் முகம் உடனே சாந்தமாகி , “ம்ம்.. அப்படியா. இதை பற்றி நீ அர்ஜூனிடம் சொல்லவில்லையா?” என்று மீண்டும் அர்ஜூனை பேச்சில் நுழைத்தார்.
எங்கு சொல்வது, அர்ஜூனுடந்தான் தொடர்ந்து சுமூகமாக சேர்ந்தது போல நான்கு நாள் இருந்தது இல்லையே எந்த நேரத்தில் எப்படி அவனிடம் இதை சொல்வது என்று யோசனையிலிருந்த ஆதிரை, “அப்படி சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை பாட்டி. அதை விடுங்க. இப்போது அது யாரென்று தெரிந்ததா? அவர்களுக்கு ஏன் என் அர்ஜூன் மீது அப்படி ஒரு வெறி" என்று உடல் சிலிர்க்க கேட்டாள். இப்படி மனம் சஞ்சல படுவதால்தானோ இது பற்றி யாரிடமும் ஆதிரை கேட்கவில்லை. என்று நினைத்தாள்.
குழப்பமாக ஆதிரையை பார்த்த சிவசக்தி சிவராமனிடம் ஏதோ கண்ணாலே செய்தி சொன்னார். அறியா பிள்ளையாக ஆதிரைக்கு அதை எதுவும் கண்டுகொள்ள முடியவில்லை. தவிப்புடன் சிவசக்தியினை பார்த்தாள் ஆதிரை. “அது சரி வா இங்கு . என் அருகில் உட்கார்மா. சொல்கிறேன்" என்று தன் அருகிலே அமர்த்திக்கொண்டு சொல்லலானார்.
"இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்த சமயத்தில் அர்ஜூனும் லண்டன் சென்றிருந்த சமயத்தில் புதிதாக ஒருவன் காட்டுக்குள் தேன் எடுக்க போவதாக சொல்லிக் கொண்டு நம்மை சுற்றியிருக்கும் காட்டுக்குள் வந்ததாக தகவல் வந்தது. அவனை கண்கானிக்கவும் நம் ஊரில் நான் ஆட்களை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அப்போது கண்கானித்து வந்தவர்கள் அவன் ஏதோ குகையை தேடி வந்திருபதாக சொன்னார்கள். அதிலே நான் யூகித்தித்துவிட்டேன். அவன் தேடுவது சந்திரகுளிர் குகைதான். கூடவே சந்தேகம், நம் பார்வதியின் சிலை பற்றி அறிந்து அதனைதிருட வந்திருக்கிறான் என்று. அதனோடு நம் ஊரை சுற்றி இருக்கும் காட்டில் ஆங்காங்க புதையல்கள் போல நம் பரம்பரை நகைகளும் கலசங்களும் , மணி மகுடங்களும் புதைக்கப்பட்டிருக்கிறது. அதனை கொள்ளை கொள்ளவும் வந்திருக்கலாம் போல என்று நான் நினைத்தேன்.
அந்த சமயம்தான் ரிதிகாவும் அரவிந்தும் இங்கிருந்து கிளம்பி செல்ல , அவர்கள் விமான விபத்தில் இறந்ததாக எங்களுக்கு மற்றொரு இடியாக தகவல் வந்து விழுந்தது. அந்த நேரம் இங்கு புதிதாக வந்திருக்கும் இவனால் வேறெதுவும் ஊர் மக்களுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று பரிதவித்தேன். அதனை தடுக்க ஏற்பாடுகள் செய்ய காதம்பரனிடம் சொன்னேன். ஏற்கனவெ தொடர்ந்து எங்க குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளாலும் , தன் அக்காவை இழந்ததாக இருந்த மன நிலையிலும் மிகவும் நிலை குழைந்திருந்த அர்ஜூனுக்கு காதம்பரன் தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அர்ஜூன் அவசரமாக கிளம்பி இந்திரபிரதேஷ்க்கு வந்தான். ஆனால் அர்ஜூன் வரவும் இரவோடு இரவாக அவர்கள் என்னை கடத்தி செல்லவும் சரியாக இருந்தது. என்னையும் இழந்துவிடுவோமோ என்று பயந்து வன பாதுகாப்புதுறைக்கு தகவல் கொடுத்துவிட்டான் அர்ஜூன்.
என்னை கடத்தி சென்றது அந்த ஆள் பாண்டே. என்னிடமிருந்து சந்திரகுளிர் குகை பற்றியே அறிய முயன்றான். மற்றபடி என்னை மரியாதையாகவே நடத்தினான். ஆனால் அர்ஜூன் அவனுடைய விளக்கம் எதுவும் கேடுகும் நிலையில் இல்லை. அவனை விசாரிக்காமலே போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டான். அவன் பதினெட்டு மாதம் ஜெயிலிலிருந்து போன மாதம்தான் விடுதலை ஆகி அர்ஜூனை பலிவாங்க தேடிக் கொண்டிருந்திருக்கிறான். அன்று முன் தினம் நீயும் அர்ஜூனும் குதிரையில் ஏறி வருவதை பார்த்துவிட்டு பின்னோடு வந்திருக்கிறான். அன்று நடனம் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்த சத்திரத்திலே அர்ஜூனை சுட்டுவிட்டிருப்பான். என்று அவன் சொன்னான். அந்த நேரம் நீ உள்ளே சென்றாயமே, அதனால் அர்ஜூன் உன் உடன் வந்ததால் அப்போதும் தப்பினான். நீ உன்னை யாரோ கவனிப்பதாக தோன்றியது உண்மைதான். அது அந்த ஆள்தான். ஆனால் சென்னையில் பார்த்தது யாரென்று தெரியவில்லை. “ என்று பெருமூச்சுவிட்டார்.
இரண்டு வருடத்திற்கு முன் ஆதிரைக்கு மட்டுமல்லாமல் அர்ஜூனும் எப்படியெல்லாம் மனவேதனை பட்டிருக்கிறான் என்பதை சிவசக்தியின் வார்த்தைகளில் ஆதிரை உணர்ந்தாள். இதை உணராமல் நாமும் என்னவெல்லாம் அவன் முகம் பார்க்காமலே திட்டி தீர்த்தோம் என்று ஆதிரைக்கு குற்ற உணர்வு வந்தது. எனக்காவது அண்ணா அண்ணி எங்கோ இருக்கிறார்கள் என்று நிம்மதி இருந்தது. ஆனால் அவனுக்கு. இறந்தே போனதாக அல்லவா மன நிலை ?!போதாத குறைக்கு எங்கிருந்தோ வந்த அந்த துப்பாக்கி ஆள் பாட்டியை கடத்தியிருக்கிறான். என்று கோபம் தோன்ற, “பாட்டி அந்த ஆளை மீண்டும் போலீஸில் பிடித்து கொடுத்துவிட்டீர்களா? “ என்று அதே கோப குரலில் கேட்டாள்.
அதற்கு சிரித்த சிவசக்தி, “என்னமா இப்படி சொல்கிறாய். அன்றுதான் ஏதோ மனவேதனையில் தீர விசாரிக்காமல் என் பேரன் அவனை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டான். ஆனால் இப்போது அப்படியில்லையே. நீதான் அவனை சுற்றியே இருக்கிறாயே. அவனுள் எந்த வேதனையும் வரவிடாமல் நீ பார்த்துக் கொள்கிறாய் போல. உன்னால்தானே அவன் அக்காவும் இங்கு இருப்பது. அதனால்தான் என்னமோ அவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்த போதும் அந்த பாண்டே அதுதான்மா அந்த துப்பாக்கி ஆளின் பெயர் , அவனை நேரிலே பார்த்து அர்ஜூன் தீர விசாரித்தான்.” என்றார்.
“என்ன பாட்டி சொல்றீங்க. அவன் மீண்டும் என் அர்ஜூனை எதுவும்செய்திருந்தால் ஏன் அவனை போய் அவர் நேரில் பார்த்தார்’" என்று குரல் நடுங்க கேட்டாள்.
“ஏன் இவ்வளவு கவலை ஆதிரை. அர்ஜூன் அவனை பாதுகாத்துக் கொள்ள தெரியாதவனா? அவன் உடல் வலிமையை திடத்தை அறிந்துமா நீ இப்படி பயபடுகிறாய்" என்று அவள் பயம் புரியாதவராய் சிவராமன் கேட்டார்.
அவன் உடல் திடத்தை ஆதிரை அறியாமல் என்ன? அவ்வளவு நீள படிகளில் மயில்பாறை கோவிலிருந்து தன்னை தூக்கி வந்தவந்தானே. அவன் கைகளுக்குள் இருக்கும்போது உணரும் பாதுகாப்பு உணர்வு , அவனது திடமான மார்பில் தலை சாய்த்துக் கொள்ளும் போது தோன்றும் பாதுகாப்பு அரண் தாண்டி யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்ற நிம்மதியும் வேறெப்படி வரமுடியும் என்று யோசித்தவள், ஆனால் அந்த ஆளின் கையில் துப்பாக்கியல்லவா இருந்தது. என்று அதை எண்ணி, “தாத்தா அந்த ஆளின் கையில் துப்பாக்கி" என்று கேட்டாள்.
அதற்கு ஆதிரையின் தலையை வருடிய சிவசக்தி, “ம்ம் உண்மைதான் அவன் கையில் துப்பாக்கி இருந்தது. ஆனால் ஏதோ ஒரு வேகத்தில் கொல்லவென்று வந்தவன், மனம் மாறிதான் இருக்கிறது. அர்ஜூனை சுட வென்று குறியெல்லாம் வைத்த பின் நியான உதயம் போல ,நம் கஷ்டத்துக்கு ஒரு தவறை செய்துவிட்டு , அதற்காக ஒரு உயிரை எடுப்பது சரியாகாது என்று திரும்பி போகவும் முயன்றிருக்கிறான். ஆனால் அப்போது தீடீரென்று அவன் மீது விழுந்த பாம்பு அவனை நிலை குலைய செய்து தவறுதலாக துப்பாக்கியை அழுத்தி இருக்கிறான். இப்படி விளக்கம் சொல்ல அர்ஜூனும் அதனால் அவனை விட்டுவிட்டான்" என்றார்.
ஆதிரையால் சமாதனம் அடையமுடியவில்லை. “அதெப்படி பாட்டி நம்புவது. அந்த ஆள் மீண்டும் ஏதேனும் செய்தால்" என்றாள் கலக்கம் மறையாமல் .
பெருமிதமாக பார்த்த சிவசக்தி , “ என் பேரன் கொடுத்து வைத்தவந்தான். அவன் மீது உனக்கு இவ்வளவு பாசம். ஏதோ ஜன்மஜன்மமான காதல் என்று சொல்லி சிரித்தான் அர்ஜூன். அதன் அர்த்தமும், அவன் உன்னிடம் கிறங்கி இருப்பதன் அர்த்தமும் இப்போதல்லவா தெரிகிறது. “ என்று சிரித்தார்.
சிவசக்தி சொன்னதின் அர்த்தம் உணர்ந்த ஆதிரையின் முகம் நாணத்தினால் சிவந்து போனது. ஆனால் அர்ஜூன் அவளிடம் கிறங்கி இருப்பதலெல்லாம் பொய் என்பது ஆதிரை உணர்ந்து , "அ.. அப்படியெல்லாம் இல்...” என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.
அதற்கும் சிரித்த பெரியவர்கள் இருவர் முன்னிலையிலும் ஆதிரைக்கு சங்கடமாகி போனது. அவளை மேலும் சங்கடம் செய்யாமல் , “ அவன் அந்த ஆள் பற்றி எனக்கும் உன்னை போலவே தான் கருத்து ஆதிரை. ஆனால் அவன் சந்திரகுளிர் குகையை தேடி வந்தது அந்த குகையிலிருந்த பால் அருவி நீரை எடுத்து செல்லவே. ஏதோ விபத்தில் புத்தி சுவாதினம் போன தன் தங்கைக்கு குணமடைய இந்த நீரை அருந்த செய்தால் போதும் என்று யாரோ சித்தர் மூலம் அறிந்து இங்கு வந்திருக்கிறான். அதனை அப்போது தீர விசாரிக்காமல் நாங்க போலீஸில் பிடித்து கொடுத்துவிட்டோம். இயல்பிலே கெட்டவன் இல்லையென்பதால்தான் அவனும் குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்க்கும் போதும் மீண்டும் அவனுக்கு தண்டனை தருவது சரியில்லையென்று என் பேரன் சொல்லிவிட்டான். இதை இவ்வளவு தெளிவாக இரண்டு வருடத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் இவ்வளவு பிரட்சனையும் இருந்திராது" என்றார் சிவசக்தி.
காரணம் அறிந்ததும் ஆதிரைக்குமே பெருமூச்சுவிட்டான். அவளுக்கும் கொஞ்சம் வருத்தமாகி போனது. “ அப்படியா பாட்டி. அர்ஜூன் இவ்வளவு உணர்ந்திருக்கும் போது பயம் தேவையில்லைதான் " என்றாள் . பின், " இப்போது அந்த ஆளின் தங்கை எப்படி இருக்கிறாங்க? எதுவும் விவரம் தெரிந்ததா?” என்று கேட்டாள்.
“பாண்டேவின் தங்கை இவன் காவலில் இருந்த நாள் வரை பைத்திய கார மருத்துவ மனையில்தான் இருந்திருக்கிறாள். அவர்களின் பெற்றோர்கள் என்று இல்லாததால் பாண்டேவும் சிந்தனையில்லாமல் இப்படி நடந்திருக்கிறான். அர்ஜூன் அந்த சந்திரகுளிர் நீரை அந்த பாண்டேவிடம் கொடுத்து தங்கைக்கென்று எந்த உதவியென்றாலும் கேட்கும்படி சொல்லி அனுப்பினான். அதனோடு பாண்டேவின் தங்கைக்கு மருத்துவ செலவுக்கென்று 1 லட்சமாக பணமும் கொடுத்து அனுப்பினான். பாண்டேவும் வாயெல்லாம் பல்லாக மகிழ்வுடன் வணங்கி சென்றான். அதனால் அவனால் இனி எந்த பிரட்சனையும் வராது. நீ நிம்மதியாக இருக்கலாம்" என்று ஆதிரையை தெளிவு படுத்தினார்.
"ஓ".. என்று நிம்மதியானாள் ஆதிரை. "இப்போது புரிகிறது பாட்டி. இதை தெரிந்துக் கொண்ட பிறகு மிகவும் நிம்மதியா இருக்கு. சரி நான் போய் அந்த ஓலை சுவடியை படிக்கிறேன். “ என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள் ஆதிரை.
“ம்ம் சரிமா. அர்ஜூனிடம் பேசியிருந்தால் இவையெல்லாம் நீ முன்பே அறிந்திருப்பாயேமா. உன்னிடம் பேசாமல் கூட அவன் அந்த சந்திரகுளிர் குகை கோவிலுக்கு போகும் பாதையை எல்லோரும் வந்து போகுமாறு மேம்படுத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கட்டட கலைனர்களை வரவழைத்து பேசி சுற்றிக் கொண்டிருக்கிறான். எண்ணமென்னமோ நல்லதுதான். எத்தனை பேரின் உடல் நோயை குணபடுத்துமென்று யோசித்து செய்வதை பார்க்க பெருமையாகவும் இருக்கிறது. அதற்கு மனைவியை கண்டுகொள்ளவில்லையென்றால் எப்படி. “ என்று வாய்விட்டே புலம்பிய சிவசக்தியின் வார்த்தையிலே அர்ஜூன் தாமதமாக உறங்க வருவதன் காரணம் அறிந்தாள் ஆதிரை.
அர்ஜூனை நினைத்து பெருமையாகவும் இருந்தது. அதற்காக பாட்டி சொன்னதற்கு ஆமாம் போடுவது போல் அர்ஜூன் தன்னிடம் பேசிக் கொள்ளவில்லையென்று தான் குறைபடுவது போல் தோன்றாமல்,” அப்படியெல்லாம் இல்லை பாட்டி. நான் தான் அவருடன் பேச கூட இல்லாமல் குழந்தைகளுட்ன பொழுது போக்கிக் கொண்டிருக்கிறேன். அவரை எதுவும் சொல்லாதீர்கள் பாட்டி" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அர்ஜூன் அவளது பின்னோடு வந்து நின்றிருந்தான்.
அதற்கு சப்தமிட்டு சிரித்த பெரியவர்கள் ஆதிரையின் பின்னோடு வந்து நின்றிருந்த தன் பேரனை நோக்கி, “பார் கண்ணா. உன்னை ஒன்று சொன்னால் உன் மனைவிக்கு தாங்க மாட்டேன் எங்கிறது. எப்படி உன்னை தாங்கி பேசுகிறாள் பார்" என்று மீண்டும் சிரித்தார் சிவசக்தி.
அப்போதுதான் அர்ஜூன் அங்கு வந்திருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த ஆதிரை திகைத்து போனாள். அர்ஜூனும் ஆதிரையை அங்கு எதிர்பார்க்கவில்லை போலும் ஒரு நொடி திகைத்து உடனே முகம் மாற்றி, “ நான்தான் சொன்னேனே பாட்டி. எங்களது ஜன்மஜன்மங்களாக தொடர்ந்த காதல் என்று" என்று சொல்லி சிரித்தான்.
“ பிணைப்போடு இருந்தால் நல்லதுதான். அப்பறம் இன்று வேலை முடிந்ததா?” என்று கேட்டார் சிவசக்தி.
“ம்ம் முடிந்தது பாட்டி. அப்பறம் .. ஆதிரை நீ இங்கு என்ன செய்கிறாய். எப்போதும் அறையிலே தானே இருப்பாய்? “ என்று கேள்வியாய் அவளை நோக்கி கேட்டான்.
அதுவரை உயரற்ற பொம்மை போல நின்றுக் கொண்டு உள்ளே செல்லலாமா? அல்லது இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் நகரிகமாகாது என்று இங்கேயே நிற்கலாமா என்று தவித்துக் கொண்டிருந்த ஆதிரைக்கு அவனது கேள்வி அவள் அங்கு இருப்பதை மறக்கவில்லை என்பதை உணர்த்தியது. அதே நினைவில், “ வேடிக்கை பார்க்க வந்தேன். அப்படியே தாத்தா பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.” என்றாள்
“ஓ.. சரி சரி.. “ என்று அதன் பிறகு அவளை ஒதுக்கி முன்னோக்கி சென்று சிவசக்தி முன் இருந்த கல் இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டு மேலும் பேசினான்.
எதுவும் செல்லாமல் போய் அமர்ந்த அர்ஜூனை பார்த்து கோபமாக வந்தது ஆதிரைக்கு, அந்த கோபத்தை மறைத்து, “சரி பாட்டி நானும் உள்ளே செல்கிறேன். நீங்க பேசிவிட்டு வாங்க" என்று கிளம்ப முயன்றாள்.
“இரு ஆதிரை , உனக்கு தெரியாமல் நாங்க பேசுவதற்கு ஒன்றுமில்லை. நீயும் அர்ஜூன் அருகிலே வந்து உட்கார் போ" என்று ஆதிரையை பணித்தார். வேறு வழியில்லாமல் ஆதிரையும் அர்ஜூனின் அருகில் சென்று அமர்ந்தாள்.
அர்ஜூன் அவள் அருகில் இருப்பது போன்ற எண்ணமே இல்லாமல் தன் பாட்டியிடம் திரும்பி, “பாட்டி plan எல்லாம் முடிந்தது. அந்த architech எல்லாம் பார்த்துக்குவாங்க. குதிரை ஓடும் பாதையை கொஞ்சம் விரிவாக்கம் செய்ய ஒரு சில மரங்களை வெட்ட வேண்டும் என்று சொன்னார். அதற்கு வனதுறையிடமும் இன்று அனுமதி வாங்கி வந்திருக்கேன். ஆனால் வண்டியெல்லாம் கொண்டு வருமளவு ஏற்பாடு பண்ணுவது வனபகுதியின் அமைதியையும் சுகாதாரத்தையும் கெடுத்துவிடும் என்பதால் நடைபாதையாக சிமிண்டினாலோ அல்லது கல்லாலோ ஆன பாதையும், படிகளும் குதிரை போக வசதியாக போதுமான அளவு பாதையை கொஞ்சம் நேர் கோடாக்கவும் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். அதனோடு கைப்பிடி சுவர் போல சரிவுகளில் அமைக்க திட்டமிட்டிருகிறார்கள் " என்று சிவசக்தியிடம் முழு விவரம் சொன்னான் அர்ஜூன்.
“நல்லது கண்ணா.. ஏதோ அந்த பாண்டேவால் இந்த சந்திரகுளிர் குகையின் நன்மை உலகம் செல்ல காரணமானது. “ என்றார் சிவசக்தி.
“உண்மைதான் பாட்டி.” என்று ஆதிரையை பார்த்து அது ஒரு நன்மை மட்டுமா என்று நினைத்தான் அர்ஜூன்.
ஆனால் ஆதிரையுள் ஒரு கேள்வி ஓடியது, அதை கேட்டிட அர்ஜூனை நிமிர்ந்து பார்த்தவள் , அவளையே அவன் பார்த்திருப்பதில் பேச்சுவராமல் நிறுத்தினாள்.
“என்ன ஆதிரை,. ஏதேனும் கேட்க வேண்டுமா" என்று அவள் எண்ணத்தை யூகித்தவனா கேட்டான் அர்ஜூன்.
எவ்வளவு இயல்பாக பேசுகிறான். நமக்கு மட்டும் ஏந்தான் இந்த பிரமிப்பு திகைப்பெல்லாம். அவன் கேட்டதில் அப்படியே உட்கார்ந்திராமல் அவனிடம் கேட்டாள் " அது.. இல்லை அர்ஜூன். இன்னும் 3 மாதத்தில் இந்திரபிரதேஷிலிருந்து பார்வதி சிலையை அந்த தீவுக்கு கொண்டு சென்றுவிடுவோம். அப்படி இருக்க இந்த செலவுகள் பயன் தருமா? பார்வதி சிலை இல்லாமலும் அந்த பால் அருவி பயன் தருமா? பார்வதியில்லாமல் நானுமே அந்த தீவில் குணமடையவில்லை என்றீர்களே. அதுதான் கேட்டேன். " என்று கேட்டாள்.
“எனக்கும் அந்த சந்தேக்ம இருக்கிறதப்பா. நீ அன்று முழுவிவரம் சொன்னபோது பார்வதி சிவனை அடைய வழிவகை செய்யவே ஆதிரை இங்கு வந்திருக்கிறாள் என்றாய். அது எனக்கு தெளிவாக புரியவில்லையே" என்றார் சிவராமன்.
“சொல்கிறேன் தாத்தா.. முதலில் நானும் பார்வதி சிலையை எடுத்து சென்று தீவில் சேர்த்துவிடுவதுதான் சரி என்று நினைத்தேன். ஆனால் இந்த பாண்டேவின் செயல் எனக்கும் கண் திறப்பு. அந்த தீவு நிலையற்றது. அங்கு பார்வதியை சேர்த்தால் மனித உயிர்களுக்கு பயனற்று போகலாம். அதனால் இந்த பௌர்ணமியில் அந்த தீவு சென்று ஆராய்ந்துவிட்டு, அடுத்த பௌர்ணமியில் நானும் ஆதிரையும் சென்று சிவனையும் அதனோடான விளக்கையும் எடுத்து வந்துவிடுவது என்று யோசித்திருக்கிறேன். இந்த திட்டம் நாளை மறுனாள் பௌர்ணமியில் அந்த தீவினை நான் ஆராய்ந்து வந்த பிறகுதான் இங்கு சந்திரகுளிர் குகை பாதைக்கான வேலை ஆரம்பிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று அவன் மனதில் யோசித்ததையும் அதன் செயல்முறையினையும் எடுத்து சொன்னான் அர்ஜூன்.
“ஓ புரிகிறது.. அந்த தீவுக்கு எப்படி போக போகிறாய்? அந்த தீவில் மீண்டும் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லையே. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது இல்லையா?” என்று கேட்டார் சிவராமன்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையும் அதே தவிப்பில் இருந்தாள் அர்ஜூன் அங்கு போய் தனியாக மாட்டிக் கொண்டாள். இன்னமும் அந்த தீவின் புதிர் கதைகளாக கேட்ட போதும் அந்த தீவை பற்றி முழு நம்பிக்கை ஆதிரைக்கு வரவில்லை. அவள் அப்பா அம்மாவை முழுதாக பிரித்த அந்த தீவு, தன் அண்ணா அண்ணியையும் தற்காலிகமாக என்றாலும் முக்கியமான தருணத்தில் பிரித்த தீவு, அர்ஜூனையும் பிரிக்க ஏதேனும் விதியின் சதியாக இருக்குமோ என்று அச்சமுற்றாள். அந்த மனனிலையில் சற்றும் தாமதிக்காமல், “ நா.. நானும் இந்த பௌர்ணமியில் உங்களுடன் வருகிறேன் அர்ஜூன். அந்த தீவுக்கு" என்று சொல்லிவிட்டு என்ன சொல்ல போகிறானோ என்று பரிட்சையின் முடிவுக்கு காத்திருக்கும் பள்ளி பிள்ளை போல அவனை பார்த்தாள்.
அவள் அவ்வாறு கேட்க கூடுமென்று அங்கிருந்த மூவருமே எதிர் பார்க்கவில்லை போலும். முவருமே திகைப்பாக ஆதிரையை பார்த்தனர். ஆனால் ஆதிரை கலக்கத்துடன் அர்ஜூனின் முகத்தையே பார்த்திருந்தாள்.
 
Last edited:

periyauma

Well-Known Member
#10
அப்பாடா ஆதிரைக்கு தாத்தா ஓலைசுவடி பற்றி நியாபகப்படுத்தீடர் . அர்ஜுன் சிவன் சிலையை பார்வதி சிலையுடன் இனைக்கும் முடிவு சூப்பர். ஆதிரை சீக்கிரமா சுவடி இருக்கனு பாரு .யோகிவேவ் மேம் செம்ம எபி
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement