தூரம் போகாதே என் மழை மேகமே !! - 74

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1சுமித்ரையும் , கஜேந்திரனும் கூட அர்ஜூன் ஆதிரையை கண்டு ஒரு நொடி கலங்கி ஓடி வந்து , அவர்களுக்கு எதுவுமில்லையென்றதும் பெருமூச்சுவிட்டு நின்றனர்.


அப்போது அங்கே வந்த சிவசக்தி, " கண்ணா.. உங்களுக்கு ஒன்றுமில்லையே. “ என்று ஆதிரையையும் அர்ஜூனையும் தலை முதல் கால்வரை ஆராய்ந்து பார்த்தார்.


“ஒன்றுமில்லை பாட்டி.” ஆதிரை அழுதுக்கொண்டிருப்பதை காட்டி, “ ஆதிரைதான் தேவையில்லாமல் அழுது ஆர்பாட்டம் செய்து அலட்டிக் கொள்கிறாள்.” என்று விட்டேற்றியாக பதிலளித்துவிட்டு முன்னேறி நடக்க பார்த்தான்.


ரிதிகாவினை அணைத்த வண்ணம் இருந்த ஆதிரை , அர்ஜூனை விருட்டென பார்த்து முறைத்தாள். தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறேனாம். எவ்வளவு திமிர். அவன் உயிருக்கு ஆபத்து என்றதும் என் அணுவெல்லாம் துடியோ துடி என்று துடித்தது இவனுக்கு அலட்டலாகதான் தெரியும். இவனுக்காக நான் ஏன் கவலை பட வேண்டும். என்று அவசரமாக கண்ணை துடைத்துக் கொண்டாள்.


ஆதிரை எதுவும் பேசுவதற்குள், ஆதிரையின் தலையை வருடி, “அவளை ஏனடா அப்படி சொல்கிறாய். நேற்றே மிகவும் பயந்து தெரிந்தாள். சும்மாயிரு கண்ணா..” என்று தன் பேரனை அடக்கினார் சிவசக்தி. அதற்கு பதிலேதும் சொல்லாமல் அக்கறையில்லை என்பதுப் போல தோளை குலுக்கினான் அர்ஜூன்.


அவனது செய்கையில் இன்னும் கோபமுற்ற ஆதிரை அவனை முறைத்த வண்ணமே, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பாட்டி. தூப்பாக்கி சத்ததில் கொஞ்சம் அதிர்ந்துவிட்டேன். மற்றபடி ஒன்றுமில்லை. நான் நன்றாகதான் இருக்கிறேன். மற்றவர்களுக்கு என் சைகை அலட்டலாக தெரிவதுதான் ஆச்சரியம்." என்று முயன்று கொண்டு வந்த இயல்பான குரலில் சொல்லிவிட்டு , நிமிர்வுடன் நின்றாள்.


ஆதிரையின் செயலை சட்டை செய்யாமல் "நாம் கிளம்பலாமா பாட்டி" என்று தொடர்பற்று சொன்னான் அர்ஜூன்.


அதற்கு புன்னகித்து ," நல்ல பிள்ளைகள். சரி வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று அவர்களை அழைத்தார் சிவசக்தி. ஆனால் ஆதிரை மற்றும் அர்ஜுனின் செயலில் கேள்வியாய் அவர்கள் இருவரையும் ரிதிகா பார்த்துக் கொண்டிருப்பதை அங்கிருந்த அரவிந்த் தவிர யாரும் அறியவில்லை. நெற்றி பொட்டில் முடிச்சுவிழ அவள் பார்த்திருப்பதை கவனித்து அரவிந்த் ரிதிகாவின் தோளை தட்டி நினைவுக்கு கொண்டு வந்தான்.


உடன் நடந்த வண்ணம் தற்போது நிகழ்ந்த நிகழ்வுக்கு காரணம் அறியும் பொருட்டு , " யார் பாட்டி இப்படி செய்தது. இந்த இடத்துக்கு வேற்று ஆட்கள் வர வாய்ப்பில்லையே. யாராக இருக்கும் அதுவும் என்னை கொன்றே விடும் அளவுக்கு வெறி இருக்கும் போல் அல்லவா தெரிகிறது.? “ என்று ஓரக்கண்ணால் ஆதிரையை பார்த்தான் அர்ஜூன். அவன் சொன்னதை கேட்ட ஆதிரையின் உடலெல்லாம் ஒருமுறை அதிர்ந்து நடுங்குவதை கண்டு எதையோ அறிந்துக் கொண்டவனாக பெருமூச்சுவிட்டான் .


அதற்கு பதிலாக, “எனக்கும் அதே குழப்பம் தான் கண்ணா. யார் இவ்வாறு செய்தது சென்று அறிய நம் ஆட்கள் அந்த ஆளின் பின்னே துரத்தி சென்றிருக்கிறார்கள். நல்ல வேளை ஆதிரை அந்த சிவப்பு புள்ளியை பார்த்து தாமதமில்லாமல் எச்சரித்தாள். எப்படியோ யாருக்கும் எதுவும் ஆபத்தில்லை. ஆனால் அது யாரென்று கண்டுபிடித்தே ஆக வேண்டும். நீ சொல்வது போல நம் ஆட்களுள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. யாரோ புதிய ஆட்களாகதான் இருக்க வேண்டும். நம்மை கவனித்து வந்திருப்பதாக தெரிகிறது. துப்பாக்கியெல்லாம் இருப்பதை பார்க்கும் போது ஏதோ பெரிய திட்டமுடன் வந்திருப்பதுப் போல தெரிகிறது. நான் நம் ஊர் சுவரை சுற்றி பாதுகாப்பை அதிக படுத்த ஏற்பாடு செய்கிறேன். யாரென்று கண்டுபிடிக்கும் வரை நீயும் ஆதிரையும் எச்சரிக்கையாக இருங்க. இப்போது இன்னும் பொழுது புலர்வதற்குள் நாம் நம் வீடு செல்ல வேண்டும். அதனால் மற்றவற்றை பிறகு பேசலாம். இப்படி கடைசியில் வராமல் ஊர் மக்களுக்கு நடுவில் நீங்கள் இருவரும் வாருங்கள்" என்று அவர்களை அழைத்துச் சென்றார்.


"ம்ம்.. சரிங்க பாட்டி.” என்று சொல்லிய வண்ணம் அர்ஜூனும் ஆதிரையும் சிவசக்தியின் சொல்படி செய்தனர்.


ஆனால் ஆதிரையின் உள்ளம் அர்ஜூனின் வார்த்தைகளால் சுக்கு நூறாய் போயிருந்தது. உள்ள துகள்களை எடுத்து ஒட்ட முடியுமா என்று அவளது புத்தி ஒவ்வொரு துண்டுகளையும் எடுத்து பார்த்து அய்யோ முடியவில்லையே என்று ஓவென்று அழுக ஆரம்பித்திருந்தது. அவளது அழுகை நின்ற போதும் கண்ணீலிருந்து ஓரிரு கண்ணீர் துளிகள் முழுதும் நின்றபாடில்லை.


அர்ஜூனும் பதிலேதும் சொல்லாமல் நெற்றியில் யோசனை முடிச்சு விழ பேசாமல் அமைதியாக உடன் வந்தான். ஆதிரை மறந்தும் அவன்புறம் திரும்பவில்லை. வீடு சென்றதும் கூட ஆதிரை , கெஞ்சி கேட்டதிற்கு இணங்க ரிதிகா ஆதிரையுடனே அவள் அறை வந்தாள். அர்ஜூன் அவர்களுடன் வராமல் பாட்டியுடன் பேச வேண்டுமென்று சென்றது கூட ஆதிரையின் கருத்தையோ கவனத்தையோ ஈர்க்கவில்லை. இனி வாழ்வே இல்லை என்பது போன்ற வெறுமையே அவளுள் இருந்தது.


அருகமர்ந்த ரிதிகாவிடம் , "அண்ணி. உங்க மடியில் கொஞ்சம் நேரம் படுத்திருக்கட்டுமா அண்ணி. ப்ளீஸ்..” என்றாள் ஆதிரை.


ஆதிரையை பார்த்து பரிதாபமாக உணர்ந்த ரிதிகா, “படுத்துக்கொள் ஆதிமா.” என்று கட்டிலில் இடைவெளிவிட்டு அமர்ந்து ஆதிரை அவள் மடியில் தலை வைக்கவென்று வாகாக அமர்ந்தாள். அவளது மடியில் தலை வைத்து படுத்திருந்த போதும் , விட்டுவிட்டு ஆதிரையின் உடல் தூக்கி போடுவதை பார்த்து ஒரு கையால் அவளது கையை பற்றியும், மறுக்கையால் ஆதிரையின் தலையை வருடிகொடுத்தும் படுத்திருந்தாள் ரிதிகா.


அப்போதுதான் அர்ஜூன் அங்கு வந்தான். அர்ஜூனை நிமிர்ந்து பார்த்த ரிதிகா, “தம்பி… என்ன நடக்கிறது இங்கு..?” என்று நேரிடையாக கேட்டாள். தம்பி என்ற அழைப்பில் கண் விழித்த ஆதிரை , ரிதிகாவின் மடியிலிருந்து விலகி குத்துகாலிட்டு அமர்ந்துக் கொண்டாள். அர்ஜூனை பார்க்கும் எண்ணமற்று முட்டிகாலில் முகம் பதித்து அமர்ந்துக் கொண்டாள். அவளை ரிதிகாவும் தடுக்காமல் அவள் தம்பியை கேள்வியாய் நோக்கி நின்றாள்.


ரிதிகா என்ன கேட்கிறாள் என்பதை உணர்ந்த போதும் அதற்கான பதில் சொல்லும் எண்ணமற்று, “என்னக்கா நடக்கிறது. ஆடு நடக்கிறது. மாடு நடக்கிறது. நம்ம குதிரைகள் ஓடவே செய்கிறதே.. நீ எதை கேட்கிறாய்.” என்று வேடிக்கையாய் சிரித்த வண்ணம் கேட்டான் அர்ஜூன். அவனை முறைத்த ரிதிகா. ஆதிரையை ஒரு பார்வை பார்த்துவிட்டு , “ஆதிமா. நான் இளகுவான ஆடைக்கு மாறிவிட்டு வருகிறேன். நீயும் இளகுவான உடை மாற்றிக் கொள் , பின் காலை உணவுக்கு போவோம். “ என்றாள் ரிதிகா.


உணவா..? அது ஒன்றுதான் எனக்கு குறையா? வயிறு வரை அடைத்துக் கொண்டு தான் இருக்கிறதே துக்கம். என்று எண்ணிய வண்ணம், "அ.. அண்ணி.. எ.. எனக்கு பசியில்லை… லேசாக தலை வலிப்பதுப் போல் இருக்கு . நா.. நான் ஓய்வெடுத்துவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து பிறகு வருகிறேன்.” என்று சொன்னாள் ஆதிரை.


அவளை வருத்தமுடன் பார்த்த ரிதிகா , “சரி அப்படியே செய்.” என்றுவிட்டு , “தம்பி என்னுடன் வா" என்று கையோடு அர்ஜூனின் கையை பற்றி அந்த அறையை விட்டு இழுத்து சென்றாள் ரிதிகா.


அவர்கள் வெளியில் செல்வதை கூட பார்க்க பிடிக்காமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டு அமர்ந்துக் கொண்டு கால்களில் முகம் புதைக்கு அமர்ந்திருந்தாள். ஆடைகளை மாற்றும் சிந்தனையும் வரவில்லை அதற்கான சக்தியும் அவளிடமில்லை.


சிறிது நேரத்தில் மீண்டும் அந்த அறைக்கு வந்த அர்ஜூன் , அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆடை மாற்றுவதற்காக அவனது மரப்பீரோவிலிருந்து டீ-shirtஐயும் tracksஐயும் எடுத்துக் கொண்டு கட்டிலின் மீது போட்டுவிட்டு அவனது மேல் சட்டையின் பொத்தானை கழற்றினான். அறையில் அரவம் கேட்டு நிமிர்ந்த ஆதிரை, அர்ஜூனின் செயல் கண்டு அறையைவிட்டு வெளியில் செல்ல எத்தனித்தாள்.


“ என்ன ஆதிரை.. ஏன் வெளியில் செல்கிறாய். அதற்கும் என் அக்காவிடம் மண்டகபடி வாங்கி கொடுக்க எண்ணமா? எதற்காக இந்த வேஷம்" என்று கேட்டுக் கொண்டே தன் வேலையில் இருந்தான் அர்ஜூன்.


அவனை திரும்பி முறைத்த ஆதிரை, சட்டென தலை தாழ்த்தி முகம் சிவந்தாள், “ நா .. ன் எங்கு சென்றால்தான் உ...ங்களுக்கு என்ன? உன் அக்கா எதுவும் சொன்னாங்க என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்" என்று இயல்பாக பேசிய வண்ணம் சொன்னாள் ஆதிரை.


ஏளனமாக புன்னகித்த அர்ஜூன், “ஓ.. அதுவும் சரிதான். என்னிடம் அவசரபட்டு விலகுவதாக சொல்லிவிட்டோமே . என்று வருத்தபடுகிறாயோ? திருமணம் முடிந்த கையோடு அத்தனைபேர் மத்தியில் என் கைகளுக்குள் எவ்வளவு அழகாய் பொருந்தினாய். தனிமையில் என்னை தவிர்க்கும் நீ அத்தனை பேரின் மத்தியில் என்னை கட்டிக்கொண்டு நின்ற போதே இதை நினைத்தேன். என்னையும் என்னுடனான இந்த செல்வாக்கையும் உன்னால் விட்டு போக முடியுமா. அதுவும் இன்று பார்க்க ராஜாகுமாரியின் கவனிப்புதானே உனக்கு. இதனை விட்டு போக முடியுமா என்ன? அதனால்தானோ என்னமோ எல்லோர் முன்னிலையிலும் அச்சாரம் போட்டுவிட்டால் பிரிய வேண்டிய அவசியம் உண்டாகாதபடி?” என்று அவளை குத்தி கிலறும் எண்ணம் கொண்டே சொன்னான் அர்ஜூன்.


அவனது குரலில் மீண்டும் அவனை திரும்பி முறைத்திட நினைத்து முகம் உயர்த்த எண்ணி அந்த எண்ணத்தை கைவிட்டு கோப பெருமூச்சுடன் ,” எனக்கு அப்படி எதிலும் ஈடுபாடில்லை. இது போன்ற அற்ப சந்தோஷத்தில் மயங்க வேறு ஆளை பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று, மறைந்திருந்து மீண்டும் யாரேனும் ஏதேனும் உங்களை உங்களுக்கு ...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் குரல் நடுங்கியது, பின் தொடர்ந்து, “ அதிலிருந்து உங்களை மறைக்க எண்ணியும்தான்..” என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.


அதற்கு பலமாக கைதட்டி, “ஹப்பப்பா பிரமாதம். என் மனைவிக்கு என் மீது எவ்வளவு அக்கறை. ஆனால் எத்தனை நாட்களுக்கு" என்றான் அர்ஜூன்.


அவன் அவளை எளிதில் விட போவதில்லையென்பதை உணர்ந்து , “ என்னால் முடியும் வரை. இதற்கு மேல் இது பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. நா… நான் ராஜாவை பார்க்க போகிறேன்" என்று அவசர அவசரமாக அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள். அதற்கு மேல் அர்ஜூன் அவளை அழைத்தது போல இருந்ததும் நின்று பதிலளிக்க தைரியமற்று குழந்தைகள் இருக்கும் அறைக்கு வந்து நின்றாள்.


அவளை அந்த நேரத்திலும் இன்னும் மணகோலத்திலும் எதிர் பார்க்காத ராதை,” என்ன அண்ணி. என்ன ஆச்சு… இன்னும் ஆடையையும் மாற்றவில்லையா?” என்று கேட்டாள்.


அப்போதுதான் தன்னுடைய நிலை கண்டு ஆதிரைக்கே நினைவு வந்தது.”அ.. அது ஒன்றுமில்லை ராதை.. ராஜாவை பார்க்க வேண்டும் என்று காலையிலிருந்து மனதிலே உருவேற்றிக் கொண்டிருந்தேனா. அதே நினைவில் அப்படியே வந்துவிட்டேன்." என்றவள் அறையை பார்த்துவிட்டு அங்கு அனாமிகாவை தவிர வேறு யாருமில்லையென்பதை உணர்ந்து , "என்ன அனாமிகாவை தவிர வேறு யாருமில்லை" என்றுவிட்டு ராதையின் கையிலிருந்த குழந்தையை அழகாக கையில் வாங்கி தன் மடிமீது போட்டுக் கொண்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள் ஆதிரை.


ஆதிரையின் நிலை கண்டு சிறிய பெண் என்ற போதும் , மனதில் ஏதோ உறுத்த அதை மறைத்து , “ராஜாவையும் அஸ்மியையும் குளிக்க என் அம்மா அழைத்து போயிருக்கிறார்கள் அண்ணி. வருகிற நேரம்தான். நீங்க அனாமியை பார்த்துக் கொள்கிறீர்களா? நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று கேட்டாள் ராதை.


“சரி ராதை… பொறுமையாகவே வா. நான் இந்த குட்டியையும் கொஞ்சம் வேண்டுமே. ராஜா வந்தால் என்னை யாரிடமும் விட மாட்டான். அங்கு ஊரில் இருக்கும் போது மருத்துவமனைக்கு வரும் வேறு குழந்தைகளை கொஞ்சுவது கூட அவனுக்கு பிடிக்காது.” என்று புன்னகையுடனே சொல்லிக் கொண்டு , “என்ன தங்கம். உன் அண்ணன் ராஜாகுட்டி .. அப்படிதானே?” என்று அவள் மடியிலிருந்த 2 மாத குழந்தையிடம் பேசினாள் ஆதிரை.


அவளையே ஒரு நொடி பார்த்த ராதை , “ சரிங்க அண்ணி. இதோ வருகிறேன்.” என்றுவிட்டு சென்றாள்.


குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்ததில் மன இறுக்கம் தளர ஆதிரைக்கும் மனம் மிகவும் நெகிழ்ந்து போனாள். அறையின் வாயில் வரை வந்த சுமித்ரை அவளையே பார்த்த வண்ணம் நின்றாள். யாரோ தன்னை பார்ப்பதுப் போல் உணர்ந்து திரும்பிய ஆதிரை, தன் அப்பாவின் தங்கையான சுமித்ரையை பார்த்ததும் , எழுந்திட முயன்று , “அ.. அத்தை… எப்போது வந்தீங்க… .. வாங்க..” என்று சொல்லிய வண்ணம் எழ முயன்றாள்.


“இல்ல இருக்கட்டுமா. உட்கார். இந்த நேரத்தில் நான் எப்போதும் குழந்தைகளை பார்க்க வருவேன். இப்போதுதான் வந்தேன். ராஜாவும் அஸ்மியும் இன்னும் குளித்துவிட்டு வரவில்லையா?” என்று கேட்ட வண்ணம், “ என்ன செல்லம். அத்தை உன்னிடம் என்ன சொல்கிறாள்" என்று குழந்தையிடம் பேசினாள் ஆதிரையின் அத்தை.


“இன்னும் வரவில்லை அத்தை. ராதை போய் பார்த்து வர சென்றிருக்கிறாள். “ என்று சொல்லிவிட்டு , “ அனாமி குட்டியை உங்கள் மடியில் படுக்க வைக்கட்டுமா?” என்று கேட்டாள்.


“ம்ம்.. செய்யேன்.” என்ற சுமித்ரை, “ எனக்கு ஒன்று தான் புரியவில்லை ஆதிரை. உன்னை போல ஒரு அழகிய நாத்தனார் இருப்பதையும் , ராஜா இருப்பதையும் எப்படிதான் அம்மு எங்களிடமிருந்து மறைத்தாளோ. “ என்று சொல்லிய வண்ணம் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு ஆதிரையின் முகவாயை தடவினாள் சுமித்ரை.


அதற்கு என்ன பதில் சொல்வது , அண்ணன் இது பற்றி பேச வேண்டாம் தேவையில்லாமல் தாத்தா இறந்தது பற்றியும் அர்ஜூன் பற்றியும் மனகசப்பு வரக்கூடாது என்றுதானே இன்னும் மறைத்தே வைத்திருக்கிறார்கள். இதை இந்த அத்தையிடம் எப்படி சொல்வது. உண்மையை மறைத்து, “எல்லாம் என் கஷ்ட காலமென்று தான் சொல்ல வேண்டும் அத்தை. சில நேரங்களில் நம்மையும் மீறி விதி விளையாடி விடுகிறது. இது பற்றி அண்ணியிடமே கேளுங்கலேன். ஆனால் அந்த நேரத்தில் எப்படியோ எனக்கு ராஜாவும் அவனுக்கு நானும் துணையாக நின்று போனோம்" என்று புன்னகித்தாள்.


“ம்ம்.. அதுவும் சரிதான். ஆனால் அவர்கள் இருக்கட்டும் , நீயும் எங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லையே. ராஜா எங்கள் வீட்டு வாரிசும்தானே. ஒரு தகவலும் நீ தராமல் இருந்ததுதான் ஆச்சரியம்.” என்று குரலில் குற்றம் சாட்டும் விதம் இல்லாமல் இருந்தாலும் வருத்தமுடன் சொன்னாள் சுமித்ரை.


அதனை அறிந்த ஆதிரை, திகைத்து அவள் அத்தையின் முகம் பார்த்துவிட்டு , இந்த விஷயம் இவர்களிடம் சொல்லலாம். விஸ்வாதானே இதில் குற்றவாளி அதனால் என்னையும் இவர்கள் புரிந்துக் கொள்ளலாம். என்று எண்ணியே ஆதிரை நடந்ததை சொன்னாள். “அத்தை.. முதலிலிருந்தே , என் அண்ணாக்கும் அண்ணிக்கும் திருமணம் நடந்த போதிருந்தே, என் அண்ணியின் தம்பி மீது எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. அதனால்தான் அப்போது அர்ஜூனை போல வேறு ஒருவர் குரல் மாற்றி பேசிய போதும் அப்படியே நம்பி அவரை தவறாக எண்ணி அப்படி நடந்துக் கொண்டுவிட்டேன். யார் அப்படி குரல் மாற்றி பேசினார்கள் என்று விவரம் அறியும் முன்பே எல்லாம் கிட்டதட்ட சரியாகி ராஜாவும் இங்கு வந்து சேர்ந்துவிட்டான். அதனால் இது பற்றி நான் யாரிடமும் சொல்ல தோன்றியதில்லை. அதனோடு அவசியமில்லையென்று தோன்றியது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். "என்று விஸ்வா அர்ஜூனை போல ஆதிரையை தவறாக பேசியது வரையும் தனது நிலைக்கான காரணத்தையும் அவளது அருமை அத்தைக்கு புரிய வைத்திட முயன்றாள் ஆதிரை.


“ஓ… அதுவும் அப்படியே. சரிதான் போ. இனி அதை பற்றி பேச என்ன இருக்கு எல்லாம் நல்லவிதமாக முடிந்ததே. ஆனால் உனக்கு இன்னமும் அர்ஜூனின் மீது வேறு எதுவும் வருத்தம் இருக்கிறதா?. “ என்று கேட்டு ஊடுருவும் பார்வை பார்த்தாள் சுமித்ரை.


இதற்கு என்ன பதில் சொல்வது. அதிர்ந்துவிட்டு அதனை மறைக்கும் விதமாக முகம் திருப்பி, “சே சே.. அப்படி எதுவும் இ.. இல்லையே அத்தை. என் உயிரே அவர்தானே. ஏதோ சிறு பிள்ளைப் போல அப்போது அவரை பார்க்காமல் அண்ணி சொன்னதை வைத்து நான் கற்பனை செய்தது. இப்போது எல்லாம் எனக்கு அது நினைவில் கூட இல்லை அத்தை. அதுவும் அவருக்கும் எனக்கும் மணம் ஆன பிறகு அப்படி நினைக்க கூட என்னால் முடியவில்லை.” என்று மென்று விழுங்கி சொன்னாள் ஆதிரை.


அவளை கூர்ந்து கவனித்திருந்த சுமித்ரை, “நீ சொன்னால் நம்புகிறேன். முன் எப்படி இருந்தானோ. ஆனால் அவன் அக்காவை பிரிந்த பின் அவனது அசட்டு தனம் விலகி பொறுப்புள்ளவனாக மாறியது எனக்கு தெரியும். உனக்கு அதிலேதும் சந்தேகமென்றால் என்னிடம் எப்போதும் கேட்கலாம். அவனை மறந்தும் வெறுத்துவிடாதே ஆதிரை. “ என்று புன்னகை மாறாமலே சொன்னாள் சுமித்ரை.


சுமித்ரையின் வார்த்தைகளில் என்ன இருந்ததோ , ஆதிரையால் அறியமுடியவில்லை. தன் மகனை உத்தமனாக எண்ணிக் கொண்டிருக்கும் இந்த தாயிடம் தான் மறுமணம் செய்ய வேண்டும் விலகிவிடு கேட்ட அர்ஜூனை தெரியவில்லை பாவம்.’ என்று விரக்தி புன்னகையிட்டாள் ஆதிரை. உடனே சுதாரித்துக் கொண்டு , “அதற்கு அவசியமே இல்லை அத்தை. அவர் மீது ஒரு இம்மியளவு கூட வருத்தமில்லை" என்று வாய் கூசாமல் பொய் சொல்லிவிட்டு தன் ஜிமிக்கி கம்மல் ஆட தலை அசைத்தாள் ஆதிரை.


அதற்கு சிரித்த சுமித்ரை, “ சரி. அது இருக்கட்டும். இயல்பு ஆடைக்கு மாறிக் கொண்டு வந்திருக்கலாமே. காலை உணவுக்கு போகும் நேரம் ஆகிவிட்டதே. அதற்குள் குழந்தை காணவென்று இது என்ன சின்னபிள்ளைதனமான ஓட்டம்" என்று வேறு பேசினாள் .


சுமித்ரையின் குரலில் தன்னையே பார்த்துக் கொண்ட ஆதிரை ‘,இதையேதான் ராதையும் கேட்டாள். இன்னும் அவளை பார்க்கும் எல்லோரும் இதையேதான் கேட்பார்கள். தன் அறையிலிருந்து ஓடி வந்ததை அத்தை பார்த்திருக்கிறார் அதனால்தான் இப்படி கேட்டிருக்கிறார் ‘ என்பதை உணர்ந்து , “ ராஜாவை பார்க்கவென்று அப்படியே ஓடி வந்துவிட்டேன். இதோ மாற்றிக் கொண்டு வருகிறேன். எனக்கும் கொஞ்சம் அசௌகரியமாகதான் இருக்கிறது" என்று சிரித்த வண்ணமே எழுந்தாள் ஆதிரை..


“போய் வாமா" என்று அனுமதித்தாள் ஆதிரையின் ஆசை அத்தை.


எழுந்து வெளியில் செல்ல நினைத்தவள், ஒரு நொடி தாமதித்து, “அ.. அத்தை.. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.. நீங்க தவறாக நினைக்கவில்லையென்றால் இப்போது கேட்கலாமா? “ என்று சுமித்ரையை பார்த்து கேட்டாள்.


குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரை ஆதிரையை பார்த்து , “என்னமா.. ஏதோ பெரிய பீடிகையாய் இருக்கும் போல. என்னவென்று சொல். உன்னை தவறாக நினைக்க என்ன இருக்கிறது " என்றாள் .


பெரிதாக ஆரம்பித்த போதும் சிறிது தயக்கம் தோன்றிவிட , தயக்கத்துடனே கேட்டாள், "அ.. அது. என்னையோ. என் அண்ணாவையோ பார்க்கும் போது உங்களுக்கு ஏதும் , யாரும் நினைவு வருகிறார்களா அத்தை?” ஆதிரை அவள் அப்பாவை பார்த்திராத போது தன் அண்ணனோ , தானோ அப்பாவின் சாயலிலோ அல்லது பாட்டியின் முக சாயலிலோ இருக்க கூடும் என்று யோசித்துதான் அப்படி கேட்டாள்.


அவளை உற்று நோக்கிய சுமித்ரை, “ இங்க வாமா. இப்படி என் முன் உட்காரு.” என்று ஆதிரையின் கைப்பற்றி அருகமர்த்தியவள், ஆதிரையின் முகத்தை ஆராய்ந்தாள் அவள் கண்ணில் ஏதோ மின்னல் தோன்ற, “ஏன் இதனை கேட்கிறாய் ஆதிரை… நீ… நீ...” என்று லேசாக குரலில் உணர்ச்சி வச பட பாதியிலே கேட்டுவிட்டு நின்றாள் சுமித்ரை.


தன் அத்தை தன்னை கண்டுக் கொண்டாளோ என்று எண்ணும் போதே குதுகலமாக நினைத்த ஆதிரை, “ நான். உங்கள் அண்ணன் மகள்தான் அத்தை. “ என்று சொல்லிக் கொண்டு தலை தாழ்த்தினாள்.


“என்ன… எ.. என் அண்ணணா?” என்று ஆச்சரியமுடன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ராஜா அஸ்மியுடன் ராதை நடந்து வந்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் பெரிய டவலை உடலோடு சுற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்தாள்.


மூன்று மாதங்களாக காணாமல் போன தன் அம்மாவை கண்டதும் , “அ.. அம்மா.. அம்மா.” என்று ஓடிச் சென்று ஆதிரையை இறுக அணைத்துக் கொண்டான்.


ராஜாவின் உயரத்திற்கு ஏற்ப தரையில் முட்டிகாலிட்டு அமர்ந்துக் கொண்டு "என் கண்ணா… " என்று அவனை வாரி அணைத்துக் கொண்டாள் ஆதிரை. இருவரின் கண்களிலும் கண்ணீர் இருந்தது. காடு மேடெல்லாம் அலைந்தது , இவனை காண இருக்கும் இந்த நொடிக்குதானோ என்பதுப் போல தன் பெறாத மகனான ராஜாவின் அரவணைப்பிலே மற்ற எதுவும் நினைவில்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தாள். இவனை விட்டு எப்படி போவது. என்று ஆதிரை பெருமூச்சுவிட்டாள்.


அவர்களின் நிலைக் கண்டு சில நிமிடம் அங்கு நிசப்தம் நிலவியது. ராஜா யாரோ புதிதாக இருந்த பெண்ணிடம் போய் ஒட்டிக் கொண்டதை பார்த்த அஸ்மிதா தயங்கி தயங்கி ராதையின் கால் மறைவில் மறைந்துக் கொண்டு அவர்களை பார்த்தாள். அப்போது அங்கு வந்த ரிதிகாவிற்கும் மனம் நெகிழ்ந்து போனது. உடன் வந்த அரவிந்தை காரண பார்வை பார்த்தாள் ரிதிகா.


பெரியவளான ஆதிரை, தன் நிலையை சமாளித்து, “என்ன கண்ணா. என் ராஜாகுட்டி .. எதுக்கு அழுகிறீங்க… அம்மாதான் உன்னோடவே இருக்கிறேனே. . நீங்க சமத்துதானே. “ என்று அவனை சமதானம் செய்ய முயன்றாள். அவளே தோற்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கையில் அவள் எப்படி ராஜாவை தேற்றமுடியும்.


ஆதிரையின் முகத்தை பார்த்த ராஜா, “அம்மா. டாஜா. அழுகல.. நீங்க.. கூட. அழுக கூடா… நா.. அழுகல..” என்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டதோடு ஆதிரையின் கண்ணீரையும் துடைத்துவிட்டான் ராஜா. அதற்கும் உணர்ச்சிவச பட்ட ஆதிரை, “என் கண்ணா..” என்று அவனை மேலும் அணைத்துக் கொண்டாள்.


ஒருவாறு நிலை சரியானதும் ராஜா ஆதிரையிடம், “அம்மா… னெண்டு பாப்பா. எனக்கு நெண்டு பாப்பா..” என்று குழந்தையிடம் சென்று , “இது அனாமி பாப்பா.. அது அஸ்மி பாப்பா..”என்று ஆதிரைக்கு அவனது புது சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தான் ராஜா.


“ஓ.. அப்படியா.. எங்க உன்னொடு அஸ்மி பாப்பாவ கூப்பிடு.. “ என்று கேட்க ராஜா விரைவாக ஓடிச் சென்று அஸ்மிதாவை கையோடு பற்றி அழைத்துக் கொண்டு வர ஆதிரை அஸ்மிதாவிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தாள். ராதை உடன் வந்து , “ அஸ்மி.. அத்தையடி. Phone -ல் பேசுவாகளே .. அந்த அத்தையடி..” என்று விளக்கம் சொல்ல அவளும் ஆதிரையிடம் ஒட்டிக் கொண்டாள். ஆசை தீர ராஜாவையும் அஸ்மிதாவையும் ஒன்றாக அணைத்துக் கொண்டாள் ஆதிரை. அவளையும் குழந்தைகளையும் எல்லோரும் பெருமிதமாக பார்த்தனர். சுமித்ரையின் பார்வையில் பெருமிதத்துடன் கேள்வியும் தென்பட்டது.


எல்லோரும் குழந்தைகளின் அறை முன்னே நின்றிருப்பதை பார்த்து அங்கு அர்ஜூனும் வந்து சேர்ந்தான். அவனும் ஆதிரை குழந்தைகளை அணைத்திருக்கும் விதத்தை பார்த்து திகைத்து நின்றான். கண்மூடி அணைத்திருந்த ஆதிரை கண் திறந்தப் போது தெரிந்தது அர்ஜூனின் அந்த திகைத்த முகம்தான். உடனே முகத்தை சரி செய்த அர்ஜூன் , “ இங்கு என்ன ஒரு பெரிய திரை படமே ஓடும் போலல்லவா இருக்கிறது. “ என்று சொல்லிக் கொண்டு அந்த அறைக்குள் வந்தான்.


அவனை கண்டதும் ,”மாமா…" என்று சொல்லிக் கொண்டு அவளை தூக்குமாறு அஸ்மிதா கைகளை நீட்டிய வண்ணம் அர்ஜூனிடம் சென்றாள். அர்ஜூனை பார்த்த ராஜா, “அம்மா. தூக்கி அங்கிள்...” என்று கத்தவும் அங்கிருந்த யாருக்கும் ஒன்றும் புரியாமல் இருக்க ஆதிரை , முகம் சிவந்தாள். “ஷ்…. ராஜா. அமைதியாய் இரு" என்று தன் அண்ணன் மகனை அடக்கினாள் ஆதிரை.


எல்லோரும் கேள்வியாய் பார்க்க , அர்ஜூனே, அந்த கடற்கரையிலிருந்து காப்பாற்றியதிலிருந்து ராஜா தன்னை அழைக்கும் விதம் பற்றி அங்கு சொல்ல அங்கு சிரிப்பலை பரவியது. ஆதிரைக்கு மனம் லேசானது போல வெட்கமாகி போனது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு அர்ஜூனிடம் சண்டையிட்டுக்கொண்டு வந்தது எல்லாம் ஆதிரைக்கு மறந்தே போனது.


தரையில் முட்டிப் போட்டு குழந்தைகளை அணைப்பதர்கு வசதியாக அமர்ந்திருந்த ஆதிரையின் அருகிலே அர்ஜூனும் அமர்ந்துக் கொண்டு , ராஜாவை திருப்பி, “ராஜா.. நான் அம்மா தூக்கி அங்கிள் இல்லை. நான் உன்னுடைய மாமா… .. அஸ்மிக்கு போலவே உனக்கும் நான் மாமா.. எங்கு சொல் பார்ப்போம்… அப்படி சொன்னாயானால் உனக்கு பெரிய கார் வாங்கி தருவேன்" என்று கண்ணடித்தான் அர்ஜூன்.


கார் என்றதும்தான் ராஜாவிற்கு எல்லாம் மறந்துவிடுமே அவனும் தலையை ஆட்டி, ஐ… "காரு.. மா… மா… கார் வாங்கி...” என்று அவனது வேலையில் கண்ணாக மழலை மொழியில் கேட்க அங்கு மீண்டு சிரிபலை பரவியது.