தூரம் போகாதே என் மழை மேகமே!! - 70

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



சிம்லாவின் குளிருக்கு இதமாக ஏற்கனவே அணிந்திருந்த ஆதிரையின் ஸ்வட்டரையும் மீறி குதிரையின் வேகம் அவளுக்கு குளிரினை அதிக படுத்தியது. குதிரையின் வேகம் ஒருபுரம் இருக்க, குதிரைக்கான பாதையின் ஒரு பக்கத்திலே ஆழம் தெரியாத மலை சரிவுகள். மற்றொரு பக்கத்தில் தூரம் தெரியாத மலை மேடுகள். மழைக்காலத்தில் மண் சரிந்து விழுந்துவிடாதப்படி அந்த பாதையின் இருப்புரமும் வானுயரம் வளர்ந்தது போலதேவாதாரு மரங்களும், தைல மரங்களும் , சில இடங்களில் மூங்கில் மரங்களும் இருந்தன. இன்னும் பெயர் தெரியாத பல மரங்கள் அந்த பாதையை மூடி வானிலிருந்து பார்த்தால் அப்படி ஒரு பாதை இருக்கக் கூடுமென்பதை மறைக்கும் விதமாக இருந்தது. அந்த அழகினை ரசிக்கவும் நேரம் கொடுக்காமல் விரைந்துக் கொண்டிருந்த குதிரை ஆதிரையினுள் திக் திக் என்ற ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. கல்லும் மண்ணும் நிறைந்த இந்த ஒத்தயடிப்பாதையில் மனிதனால் நடக்க முடியுமா என்பதே ஆச்சரியம்தான். ஆனால் இந்த குதிரை விரைந்து ஓடிக் கொண்டிருந்தது.


இந்த பாதையை பார்த்து வந்த ஆதிரை, " ரேவதியும் கந்தர்வனும் முல்லை நிலம் அழைத்து செல்லப்பட்டதாகதானே தாத்தா சொன்னார். ஆனால் போகும் வழியை பார்க்கும் போது குறிஞ்சி நிலம் போலல்லவா இருக்கிறது.பள்ளத்திலும் மேட்டிலும் theme parkல் இருக்கும் ராட்சத விளையாட்டு எந்திரத்தில் மாட்டிக் கொண்டதுப் போலல்லவா இந்த குதிரை எங்களை இழுத்து செல்கிறது. இழுத்துச் செல்கிறதா இல்லை இந்த அர்ஜூன் அவ்வாறு செய்ய வைக்கிறானா? எது எப்படியோ. இப்படியே சென்றால் என் வயிற்றுக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சு போன்ற உணர்வு சிறிது நேரத்தில் வாந்தியை உண்டு பண்ணிவிடும். முதலில் அர்ஜூனை மெதுவாகவே குதிரையை செலுத்த சொல்ல வேண்டும்" என்று அர்ஜூனை அழைத்தாள். இல்லை இல்லை கத்தினாள். “அர்ஜூன்… அர்ஜூன்..”


அவள் குரலில் , “ என்ன ஆதிரை..” என்று கேட்டப்போதும் குதிரையின் வேகத்தை அர்ஜூன் குறைக்க வில்லை. கிட்டத்தட்ட அர்ஜூனை ஒட்டி இருவர் ஒரு உடையில் இருப்பதுப் போல் வந்துக் கொண்டிருந்த ஆதிரை, “குதிரையை மெதுவாக செலுத்துங்க. ,தாமதம் ஆனாலும் பரவாயில்லை. “ என்று அவன் காதினருகில் எட்டி அவனிடம் சொன்னாள் .


அதற்கு மன்மதனாக புன்னகித்த அர்ஜூன், குதிரையின் வேகத்தை மெதுவாக குறைத்தான். குதிரை கிட்டத்தட்ட நடந்து சென்றது என்பதுப் போல வேகத்தை குறைத்தான். பின், “ இப்போது பரவாயில்லையா ? “ என்று ஆதிரையின் காதருகில் கிசுகிசுத்தான்.


அவனது மாறுப்பட்ட குரலில் அப்போதுதான் அர்ஜூன் அவளை ஒருகையால் வயிற்றோடு அணைத்த வண்ணமும் மற்றொரு கையால் குதிரையின் கடிவாள கயிற்றையும் பிடித்திருப்பதை ஆதிரை உணர்ந்தாள்.


சட்டென அவனது கையினை அவளிலிருந்து பிரித்துவிட்டாள். பின், “எ.. என்ன பரவாயில்லை" என்று புரியாததுப் போல சொன்னாள். இருந்தும் நேற்று மனதில் கொண்ட உறுதி மறந்து குதிரையில் செல்லும் ஆசையிலும் இந்திரபிரதேஷை பார்க்கும் ஆர்வத்திலும் அவனுடன் ஒன்றாக குதிரையில் வர முடிவெடுத்தோமே! என்று காலம் மீறி உணர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தால் மீண்டும் அதே அவனுடன் தனிமையான சூழல். பழக்கமற்ற இடம். ஆதிரையின் உள்ளம் வெளியில் ஓடும் நிஜ குதிரையை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதன் விளைவு இதயம் படப்படக்க தன் நெஞ்சின் மீது கையை வைத்து, ‘சும்மா இரு’ என்பதுப் போல் அவள் மனதை தடவிக் கொடுத்தாள்.


அர்ஜூன் அவளது சைகையிலும் , முக சிவப்பிலும், அவளை ஏற்கனவே படித்தவன் போல், பேச்சையும் குரலையும் மாற்றி, “குதிரையின் வேகம் பரவாயில்லையா என்று கேட்டேன். நீ என்ன நினைத்தாய்?” என்று சொல்லி அவளை விடுத்து குதிரையின் கையிற்றை பிடித்துக் கொண்டான்.


அவனது இந்த மாற்றம் ஆதிரையிலும் தொற்றிக் கொள்ள, “ம்ம் பரவாயில்லை. தாங்க்ஸ். “ என்றாள். அதற்கு பதிலேதும் சொல்லாமல் பாதையிலே கண்ணாக சென்றுக் கொண்டிருந்தான் அர்ஜூன். அதிலே மன நிம்மதிக் கொண்ட ஆதிரை அவளும் வாளாவிருந்தாள். ஆனால் வழியில் சேகர் அங்கிள் எங்கும் தென் படாததை உணர்ந்து, "அவர் வேகமாக செல்லும் குதிரையில் சென்றிருப்பாரோ வரும் வழியில் எங்கும் தென்படவில்லை "என்று தோன்ற அதையே அர்ஜூனிடம் கேட்டாள்.


அதற்கு புன்னகைத்த அர்ஜூன், " மெதுவாகதான் சென்றார். மெதுவாக செல்லும் குதிரைகள் வேறு பாதையில் செலுத்தப்படும் . அவர் வேறு பாதையில் வந்துக் கொண்டிருப்பார். அதனால்தான் நாம் அவரை பார்க்கவில்லை. நாம் கிட்டத்தட்ட இந்திரபிரதேஷ் வந்துவிட்டோம். இனி மெதுவாக சென்றாலும் இன்னும் 15 நிமிடத்தில் சேர்ந்துவிடலாம். அவர் வர இன்னும் 40 நிமிடமாவது ஆகுமென்பது என்னுடைய கணிப்பு.” என்று அவள் கேள்விக் கேட்குமுன்னரே அர்ஜூன் அனைத்தையும் சொன்னான்.


“ஓ… அப்படியே. “ என்றவள், அந்த புது ஊரில் அவளுக்கு எப்படி வரவேற்பு இருக்குமென்று புரியாத ஒரு பரவசமும் பயமும் ஒரு சேர உணர்ந்தாள். சேகர் அங்கிள் உடன் இருந்தாள் நன்றாக இருக்குமென்று எண்ணினாள். இருந்தும் ஆர்வமுடன் புது அனுபத்தை உணர தயாரானாள் ஆதிரை.


அவள் மீது ஒரு கண்ணும் பாதை மீது ஒரு கண்ணுமாக இருந்த அர்ஜூன் அவள் மனம் அறிந்து, “அங்கு எல்லாருக்கும் உன்னை தெரியும். என் ஊர் மக்களுக்கு எந்த தீய எண்ணங்களும் கிடையாது. அதனால் உன்னிடம் தேவையில்லாமல் கேள்விகள் கேட்க மாட்டார்கள். என் வீட்டில் இருப்பவர்களை பற்றி சிவராமன் தாத்தா ஏற்கனவே சொல்லியிருப்பார். அதனோடு நான் உன்னுடனே இருப்பேன். எதுவென்றாலும் என்னிடம் நீ தயங்காமல் கேட்கலாம். அதனால் நீ எதை எண்ணியும் பயப்பட வேண்டியில்லை" என்று பொறுமையாக சொன்னான்.


அதை கேட்டதும், ‘தயங்காமல் இவனிடம் கேட்க வேண்டுமாம். அங்குதான் என் அண்ணனும் அண்ணியும் இருக்கிறார்களே. நான் ஏன் இவனிடம் கேட்க போகிறேன். அவர்களிடம் கேட்க போகிறேன்’ என்று எண்ணியவள், எண்ணியதை மறைத்து ,"ம்ம்… " என்றாள்.


அவளை உணர்ந்து, "என்னிடம் எதுவும் கேட்டுவிடக் கூடாதென்று தீவிரமாக சிந்திகிறாய் போல" என்று புன்னகை மாறாமல் சொன்னான்.


அவளை அறிந்துவிட்டானே என்ற போதும் அவனை மறுத்து பேசும் விதமாக வேறு பேச எண்ணி , "சே சே.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அர்ஜூன்.. எனக்கு ஒன்று தெரிய வேண்டும். போன ஜன்மத்தில் ரேவதியையும் , கந்தர்வனையும் நீங்கதானே இந்திரபிரதேஷுக்கு அழைத்து வந்தீர்கள்.” என்றாள் ஆதிரை.


“ஆமாம். ஏன் இப்போது திடீரென்று அதை பற்றி கேட்கிறாய். " தொடர்பில்லாத கேள்வியாக உணர்ந்து கேட்டான்.


அதற்கு "இல்லை அவர்களை முல்லை நிலத்திற்கு நீங்க அழைத்துச் சென்றதாக சிவராமன் தாத்தா சொன்னார் முல்லையென்றால் காடுதானே. ஆனால் இது குறிஞ்சி நிலம் , வெறும் மலை பகுதிப் போல் அல்லவா இருக்கிறது. அதனால் குழப்பமடைந்துவிட்டது. .” என்று தன் முகவாயில் தன் ஆட்காட்டி விரல் வைத்து யோசிப்பதுப் போல கேட்டாள் ஆதிரை.


“ஓ… அதுவா.. நாம் போகும் வழி குறிஞ்சி என்றாலும் நம் ஊர் இருக்குமிடம் சமதளமான காடு. அதனால் முல்லை நிலம் என்றிருப்பார். 1000 வருடம் இருந்த நம் மக்களால் சில காட்டுப் பகுதி பக்குவப்பட்டு மருத நிலம் போல விவசாயமும் இப்போது அங்கு நடக்கிறது. போதுமா விளக்கம்" என்றான் அர்ஜூன்.


வியப்பாக உணர்ந்த ஆதிரைக்கு இன்னும் அந்த ஊரை பார்க்க அதிகமாக ஆர்வம் கூடியது. “ம்ம் புரிகிறது அர்ஜூன்.” என்றவள் அதற்கு மேல் பேசினாள் இல்லை.


புது மணப்பெண் மண மகனுக்காக இந்திரபிரதேஷின் மதில் சுவர் வாயிலிலே காத்திருந்த ஊர் மக்களும் வீட்டின் பெரியவர்களும் அவர்களை கண்டதும் ஆர்பரித்தனர். மூங்கிளினால் செய்யப்பட்ட புல்லாங்குழல் போன்ற காற்றினால் இசைக்க கூடிய இசைகருவி ஒன்றினால் இசை எழுப்பபட்டது. அதன் ராகம் இது வரை அனுபவத்திராத தேவராகம் போல ஆதிரையின் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் பாய்ந்து மீண்டது. அதனை தொடர்ந்து அதே ராகம் மேளம் போன்ற ஒரு இசைகருவியால் ஒலியெழுப்பப்பட்டது. இவை இரண்டும் ஒன்றை மாற்றி ஒன்று இசைக்கப்பட்டது.


குதிரையிலிருந்து முதலில் இறங்கிய அர்ஜூன், ஆதிரையையும் குழந்தையைப் போல தூக்கி கீழே இறக்கிவிட்டான். அர்ஜூனின் கைகளில் பறந்து வந்து தரையில் இறங்கியது போன்ற ஒரு பிரம்மை ஆதிரைக்கு ஏற்பட்டது. அர்ஜூனிடமிருந்து குதிரையை அங்கிருந்த ஒருவர் வாங்கிச் சென்றான். அதிசயம் போல ஆதிரையின் கால் வலி இந்திரபிரதேஷில் கால்பதித்த அந்த நொடி இருக்கும் இடம் தெரியாமல் போனது.


யாரென்றே தெரியாத தன் மீது அந்த ஊர் மக்கள் காட்டிய அன்பினை உணர்ந்த போது ஆதிரைக்கு தான் கடந்து வந்த எந்த கஷ்டங்களும் பெரியதாக தெரியவில்லை. இருந்தும் , அவ்வளவு ஊர் மக்களின் நடுவிலும் ஆதிரையின் கண்கள் தன் அண்ணன் அண்ணியை நோக்கி தேடி விழி கூர்மை பெற்று நின்றது. அவர்களை பார்த்தும் ஓடி அணைத்துக் கொள்ள முடியாத அளவு தூரமும் இடையே மக்களும் இருந்தனர். இருந்தும் அவர்களின் கண்கள் ஆதிரையின் நிலைக்கண்டு மகிழ்ச்சியில் குளிர்ந்திருந்தது தூரத்திலிருந்தும் தெரிந்தது. அவர்களுக்கு முகமனாக புன்னகித்தாள் ஆதிரை.


ஊர் வலம் போல ஆதிரையை அர்ஜூன் தன் வலக்கையில் அவளது இடக்கையினை அணைத்து அவள் தன்னுடையவள் என்ற பெருமிதத்துடன் முன்னேறி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவர்களை தொடர்ந்து ஊர் மக்களும் அவர்கள் பின்னோடு நடந்தனர். இடைவேளியில்லாமல் தமிழ் நாட்டின் திருமண மேளதாளம் போல் அல்லாமல் புதுவிதமான அந்த ராகமும், புதுவிதமான இசை கருவிகளும் , அர்ஜூனின் கையணைப்பும் ஆதிரையினுள் பரவசத்தை ஏற்படுத்தியது. ஆதிரையும் அர்ஜூனும் முன்னேறி நடக்க , மக்கள் எல்லோரும் ஒவ்வொருவராக ஆதிரையையும் அர்ஜூனையும் ஒரு சேர முகம் தடவி திருஷ்டி கழித்து வரவேற்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் காத்திருந்து அவர்கள் இருவருக்கும் ஆலம் கரைத்து நெற்றி திலகமிட்டனர். நிமிர்ந்து இந்திரபிரதேசின் அழகை காண முடியாமல், அவர்கள் முன்னிலையில் ஆதிரைக்கு என்ன செய்தும் நாணத்தை கட்டுக் கொள்ள முடியவில்லை. இருந்தும் அர்ஜூனுடனான இந்த நடைப்பயணம் நீளாதா என்பதுப் போன்ற ஒரு மாயையை உணர்ந்தாள் ஆதிரை.


அதோ இதோ என்று பல வீடுகள் கடந்து அர்ஜூனின் அரண்மனை வீட்டினை அடைந்தனர் மணமக்கள் இருவரும். ஆரத்தியுடன் நின்றிருந்த தன் தந்தையின் உடன் பிறந்தவரும் தன் கணவனின் அம்மாவுமான சுமித்ரையை முதல் முறையாக பார்த்தாள் ஆதிரை. நேச புன்னகையிட்டாள். ஆலமிட்டு பின் உள்ளே நுழைந்த ஆதிரை அங்கே உஞ்சளில் அமர்ந்திருந்த சிவசக்தி பாட்டியும் சிவராமன் தாத்தாவும் ஏதோ முக்கியம் போல எதையோ பேசிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். இவர்களை பார்த்ததும் எழுந்து அருகில் வந்த சிவசக்தி, இருவரின் தலையையும் தடவி ஆசி வழங்கினார். சிவராமனும் அவர்களை பார்த்து புன்னகித்தார். பின் சிவசக்தி ஆதிரையை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லி வீட்டிலிருக்கும் அனைவரையும் அவளுக்கு மீண்டும் முறைப்படி அறிமுகபடுத்தி வைத்தார். அதற்குள் சேகரும் அங்கு வந்துவிட அந்த வீடே நிறைந்திருந்திருந்தது.


பின் பெரியவர்கள் எல்லோரும் மணமக்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு களைந்துச் சென்றனர். தன் அத்தையையும் சிவராமன் தாத்தாவையும் ஒரு சேர ஆதிரை பார்த்தாள். இயல்பாக பேசியப் போதும் சுமித்ரா சிவராமனை அப்பா என்று அழைத்து பேசவில்லை. ஐயா என்றே பேசியது இன்னும் தன் அத்தைக்கு தான் உண்மையில் யாரென்று தெரியவில்லையென்பதை ஆதிரை அறிந்தாள். சிவராமன் தாத்தாவிடம் உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்துக் கொண்டு அவர்கள் ஒன்று சேர உதவ வேண்டும். என்று எண்ணிக் கொண்டிருந்தாள் ஆதிரை. உடன் அர்ஜூன் இருப்பதும் யார் யார் அவளை கவனிக்கிறார்கள் என்பதுமே மறந்து போனது.


அவளையே பார்த்திருந்த ரிதிகா "என்ன ஆதிமா.. அவ்வளவு பலமான சிந்தனை.” என்று அவளருகில் வந்து நின்றாள்.


“அ.. அது ஒன்றுமில்லை அண்ணி. என் அத்தையை பார்த்தேன். அழகாக இருக்கிறார்கள்.” என்று சொல்லிய வண்ணம். அத்தையென்ற அழைப்பிலே ஆனந்தம் கொண்டாள் ஆதிரை.


“அது சரி. என் அம்மா அழகுதான். அதனால் தானே நானும் அர்ஜூனும் அழகு" என்று புன்னகைத்தாள் ரிதிகா.


உடனே சிரித்த ஆதிரை , "அண்ணி. இப்படி சொன்னால் நான் எதுவும் சொல்வதற்கில்லை. “ என்றவளின் விழிகள் வேண்டுமென்றே அர்ஜூனை விலக்கியதோ என்பதுப் போல் எதையோ தேடியது.


“நான் ஆணழகன் தான் இல்லையென்றால் ஆதிரை , இரு ஜன்மங்காள் கடந்து என்னை இந்த ஜென்மதில் திருமணம் செய்திருப்பாளா?” என்று கேட்க அங்கிருந்த ரிதிகாவும் , அரவிந்தும் கொள்ளேன சிரிந்தனர்.


இதை எதையும் உணராமல் ஆதிரையின் விழிகள் எதையோ தேடி தேடி மீண்டது. அதை உணர்ந்தவன் போல அரவிந்த் , " குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆதிரை. எழுந்ததும் ராதை உன்னிடம் அவர்களை அழைத்து வருவாள். இப்போது போய் நீயும் அர்ஜூனும் ஓய்வெடுங்க. அர்ஜூன் இவளை உன் அறைக்கு அழைத்துச் செல். என்று ஆதிரையின் தலையினை வருடிய வண்ணம் கண்ணில் சிரிப்புடன் சொன்னான்.


“சரி அண்ணா..” என்று உதட்டளவில் சொன்னப் போதும் போக மனமில்லாமல் நின்றாள் ஆதிரை. மனமெங்கும் அருகிலே இருக்கும் தன் ராஜாவை இன்னும் பார்க்கமல் இருக்க பாரமேறியது.


ஆனால் அரவிந்தின் பதிலுக்கு பதிலாக, “சரிங்க மாமா. எனக்கும் கொஞ்சம் களைப்பாக இருக்கு . உங்களை பார்க்கும் ஆர்வத்தில் குதிரையை வேகமாக செலுத்தி கொண்டு வந்தேனா, என் கைகளும் வலிக்கிறது. வா ஆதிரை ஒரு குளியலிட்டு குட்டி தூக்கம் போட்டல்தான் சரியாக இருக்கும்" என்று கைகளை நெட்டி முறித்து ஆதிரையின் கையினை பற்றி கிளம்ப நின்றான்..


ஆனால் நகராமல் சிலையாக நின்ற ஆதிரை அதற்கு மேல் காக்க முடியாமல், “அ.. அர்ஜூன்.. ஒரு நிமிடம் எனக்கு என் ராஜாவை பார்க்க வேண்டும். அண்ணி.. ராஜா எங்கே! உறங்கிக் கொண்டிருந்தாலும் அவனை ஓசை படாமல் பார்த்துவிட்டு பிறகு ஓய்வெடுக்க செல்கிறேனே!” என்று சொல்லிக் கொண்டு நின்றாள். அவளிலே தன்னை உணர்ந்த ரிதிகா, அவளை அணைத்துக் கொண்டு, “அரவிந்த், ஆதிரை தவிப்பது புரியவில்லையா? ராஜாவிடம் அவளை அழைத்து செல்லுங்க. என் அம்மா என்னை அழைத்தார்கள். நான் செல்ல வேண்டும். பிறகும் பார்க்கட்டும். இப்போது பார்க்கட்டும் என்று அவளை வருத்தாதீங்க" என்று கண்டிப்பான பார்வையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றஆள் ரிதிகா.


ஆதிரையின் இந்த தோற்றம், அர்ஜூனுள்ளும் பலவித தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் முறை கடலிலிருந்து அவளை காப்பாற்றியப் போது என் ராஜா எங்கே என்று அவள் தவித்த அதே தவிப்பு, இன்னும் மாறாமல் அப்படியே அவளுள் தெரிந்தது. அவளுடன் இணைந்து, “நானே அவளை அழைத்து செல்கிறேன் மாமா. நீங்க இங்கே இருங்க " என்று சொல்லி ஆதிரையின் கைப்பற்றி அவளை அழைத்துச் சென்றான் அர்ஜூன்.


குழந்தைகளுக்கான அறையில் ராதை அமர்ந்துக் கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அறையில் நுழைந்த அர்ஜூனை கண்டதும், "அண்ணா.. " என்று எழுந்து நின்றாள். பின் "குழந்தைகள் இப்போதுதான் தூங்கினர். எழுந்ததும் அழைத்து வர சொல்லி அம்மு அக்கா ஏற்கனவே சொன்னார்கள் அண்ணா." என்று தன்னிலை விளக்கமாக சொன்னாள் ராதை.


அவர்கள் இருவரையும் காணாததுப் போல் ஆதிரை அங்கு உறங்கிக் கொண்டிருந்த ராஜாவின் சிகையினை தடவி அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனை இமைக்க மறந்து பல நொடிகள் என்று தொடர்ந்து சில நிமிடங்கள் நின்றாள். அவனருகில் கைகளை பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த அஸ்மிதாவையும் பார்த்து ,”நன்றாக வளர்ந்துவிட்டாள்" என்றாள் அதிரை. அருகிலே தொட்டிலில் இன்னும் கைக்குழந்தையாக தெரிந்த அனாமிகாவையும் பார்த்தாள். அஸ்மிதாவை சிறுவயதில் பார்த்ததுப் போல் இருந்த அனாமிகாவை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலை கஷ்டப்பட்டு காத்தாள். பொதுவான தேக வருடலோடு குழந்தைகளை எழுப்பிவிட போகிறோமென்ற தன் உந்துதலை கட்டுக்கொள்ள முடியாமல் ஆதிரை அந்த அறையை விட்டு சென்று வெளியில் நின்றாள். அவளையே பார்த்துக் கொண்டு நின்ற ராதைக்கும் அர்ஜூனுக்கும் ஆதிரையின் செயல் மெய் சிலிர்க்க வைத்தது.


ஆதிரையை தொடர்ந்து ராதையிடம் சொல்லிக் கொண்டு பின்னோடு சென்ற அர்ஜூன், அவள் கைப்பற்றி தன் அறை அழைத்துச் சென்றான்.


ராஜாவை கண்ட பூரிப்பிலே அர்ஜூனுடன் இருந்த ஆதிரை, அவனுடன் அவன் அறைக்கு தனியாக செல்கிறோம் என்பதை மறக்க செய்தது. அவனுடன் தனியாக இருக்க கூடாது என்று என்ன முயன்றும் இருக்கும் சூழலும் இடமும் ,பாவம் ஆதிரைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. ஆனால் அர்ஜூனே அவளுக்கு உதவினான் போலும். ஆதிரைக்கு குளியலறையை காட்டிவிட்டு துடைக்கும் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த அறையைவிட்டு அவன் வெளியேசென்றுவிட்டான் . அவனுடன் எதுவும் பேசாமல் நின்றிருந்த ஆதிரை, அவன் சென்ற திசையை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள் ஆதிரை.


பிறகு குளித்துவிட்டு அந்த அறையிலிருந்த கட்டிலில் நிம்மதியாக படுத்து ஒரு குட்டி உறக்கமும் போட்டாள் ஆதிரை. பாதி உறக்கத்திலே யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கண் விழித்த ஆதிரை, சிம்லாவின் குளிருக்கு இதமாக தன் மீது மூடப்பட்டிருந்த வலுவலுப்பான போர்வையை உணர்ந்தாள். உடன் தன்னை படுக்கையிலிருந்து எழ முடியாமல் யாரோ வளைத்து பிடித்திருப்பதுப் போல உணர்ந்த ஆதிரை அவசரமாக கண் விழித்து பார்க்க அர்ஜூனின் முகத்திற்கு அருகில் அவள் முகம் இருந்தது. நேற்றுமுன் தினம் போல அவளை அணைத்தவிதமாக அர்ஜூன் அவளுடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். திடுக்கிட்டு அவசரமாக அவனிலிருந்து விலக எண்ணியவள் அவன் எழுந்துவிட்டால் என்ன செய்வது என யோசித்து மெதுவாக அவன் கைகளை அவளின் இடையிலிருந்து பிரித்து எடுத்தாள். படபடத்த தன் இதய துடிப்பை மீண்டும் தன் நெஞ்சை தடவி சமன் செய்ய முயன்றாள்.


“அர்ஜூன் ஏன் இப்படி என்னை தவிக்க செய்கிறான். நான் விலகி நிற்பது புரியாமல் என் பெண்மையை இப்படி சோதிக்கிறானே. இதிலிருந்து இங்கு இருக்கும் வரை எப்படி தப்பிப்பது. பேசாமல் அவனிடமே நேரிடையாக விலகி இருக்க சொல்வதுதான் சரி. “ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு ஒருவாறு சமாளித்து பெருமூச்சுவிட்டாள் ஆதிரை. அவள் எழுந்து செல்வதற்குள், கதவு தட்டும் சப்தம் நின்றே போயிருந்தது. அவசரமாக முகத்தினை சரி செய்துக் கொண்டு கதவினை திறந்தாள் ஆதிரை.


வெளியில் ஒரு பெண் அறை கதவிலிருந்து திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தாள். அவளை பின் தொடர்ந்து ஆதிரையும் ஓசைப்படாமல் அறைகதவை மூடிவிட்டு "ஒரு நிமிடம் நில்லுங்க. கதவை தட்டியது நீங்கதானா…" என்று அழைத்த விதமாக அவளிடம் சென்றாள்.


அவள் குரலில் திரும்பிய ராதை, "ஆமாம் அண்ணி, நான் ராதை. அனாமிகா மட்டும் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடன் அம்மு அக்கா இருக்கிறார்கள். மற்ற குழந்தைகள் இருவரும் விழித்துவிட்டனர். வீட்டின் பின்புறத்தில் அவர்கள் சில சிறுவர்களுடன் ஊஞ்சள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். உங்களிடம் சொல்லிவிட்டு போகலாமென்று வந்தேன் . நீங்களும் வருகிறீர்களா அண்ணி" என்று உரிமையாக அழைத்தாள்.


“இதோ வருகிறேன் ராதை.” என்றவள் மற்ற எதை மற்றுயும் யோசிக்காமல் ராதையுடன் இணைந்து நடந்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top